Tuesday, September 8, 2020

 ஹேண்டல் என்னும் ஐரோப்பிய இசை அரசன்

ஈ.வி. சிங்காரவேலு முதலியார்

மக்கள் உற்பத்திக்காலந் தொடங்கி இசையில் - சங்கீதத்தில் இன்பத்தைப் பெற்று வந்தனர். இது இலக்கியம், பாட்டு, சித்திரம், சிற்பம், இசை என்ற ஐம் பெரும் லளித வித்தைகளிலொன்று. இனிய குரல் கொண்டு பாடப்படும் இசைகளைக் கேட்டு மகிழாதவர் யார்? அனுபவத்தில் நோக்கின் உலகில் பகலெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கூலி ஆட்களுங்கூட இரவில் அம்மானையோ அல்லது தெருப்பாட்டுக்களோ பாடி யின்புறுதல் சதா பார்க்கப்படும் விஷயம். தெய்வ பக்தர்களும், சீமான் சீமாட்டிகளும், சிறுவர் சிறுமியரும், தீவினை இயற்று வோரும், கள்வரும், பித்தரும், காமியரும் மற்றெவரும் பொதுவில் இசையில் இன்பமுடையவர்களே. வேலையின் கஷ்டத்தைப் போக்க ஏற்றமிறைப்போர் ஏற்றப்பாட்டுப் பாடுவதும், தெருக்களில் பாரமுள்ள சாமான்களை கைவண்டிகளி லிழுத்துச் செல்லுவோர் ஒத்துப் பாட்டுப் பாடுவதும், காமிகள் காமச்சுவை ததும்பிய தெம்பாங்குகளைப் பாடுவதும், பரமாத்மாவின் அநந்த கல்யாண குணங்களிலீடுபட்டோர் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் முதலிய பக்தி ரசம் செறிந்த பாடல்களை இசையுடன் படிப்பதும் சாதாரணம்.

 

இவற்றைக் கவனிக்கின் நம்மிடை இசை பெரிய ஸ்தானம் வகித்திருக்கின்றது என்பது வெள்ளிடைமலை. இசையின் சுவையிலீடுபட்டு ஆநந்தத்தை அடையாதார் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அச்சொற்பமும், ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவிஞர் கூறியவாறு பெரும்பாலும் கொடிய கொலைபாதகரும், உணர்ச்சியற்ற தந்திர சூழ்ச்சிக்காரருமாயிருப்பர். சங்கீதத்தின் உபயோகத்தையும், பெருமையையும் கூறின் விரியும். சுருங்கச்சொல்லின் மனிதனது ஆத்மார்த்த விஷயங்களில் மேன்மையடைவதற்கும், தளர்ந்து சோர்வுற்றிருக்குங் காலத்து அதை அகற்றிப் புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும், தீவீரத்தையும் அளித்தற்கும், தன்னினைவற்று உலகியல் மறந்து தெவிட்டாத ஆநந்தத்தை உண்டு பண்ணுதற்கும் சாதகம் சங்கீதமே. இசை அல்லது கீதம் மிருகங்களையும் பரவசப்படுத்தும் தன்மையது. "கல்லும் கனிந்துருகிக் கரையச் செய்யும் காந்தாரம்" என்பர் நம்முனோர்.

 

எந்நாடும் முன்னேற்ற மடைந்திருக்கின்றது எனக் கூறுமிடத்து அந்நாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், வியாபாரம், சமூகதிருத்தங்கள் முதலிய சாதனங்களில் அபிவிருத்தி அடைந்திருத்தல் வேண்டும். இவை எப்படி ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதனவோ அம்மாதிரியே அந்நாட்டின் மேன்மைக்கும், நாட்டுப் பாஷையின் பெருமைக்கும், சிறப்பிற்கும் கீதம் அல்லது இசை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாட்டிலும் அவ்வப்போது பல பெரிய இசை அரசர்கள் தோன்றி மக்களின் உள்ளத்தில் ஆத்மஞானத்தைப் புகுத்தி வரம்பிலின்பம் தந்து மனிதரைப் புனிதராக்கி வந்தனர். இசைவலலோர் மூலமாகவே கடவுளர் தம் படைப்புத் திறத்தையும், தத்துவத்தையும் மற்ற யாவருக்கும் விளக்குகின்றார் ஆதலின் பாடகர்களே கடவுளின் தூதர்கள் என்று கவி பிரௌனிங் கூறுவர். தெலுங்கு இசை அரசன் தியாகராஜப் பெருமானைப் பற்றிக் கேள்விப்படாதார் இருப்பார் என்பது துர்லபம். அவரது அழகிய, இனிய கீர்த்தனைகளை (கீதங்களை)க் கேட்டுப் புகழாதாரில்லை. இவ்வாறே ஐரோப்பாவில் இசை அல்லது சங்கீதத்தில் வல்லாரைக் குறிப்பிடுங்காலத்து ஹேண்டலின் நாமமே முன்னிற்கின்றது. என்று மழியாது தம்பெயரை உலகில் நிலைநாட்டிய அந்நல்லாரின் சரித்திரத்தை ஈண்டுச் சுருக்கிக் கூழவாம்

:
ஹேண்டலின் பிறப்பு வளர்ப்பு.

 

ஓர் ஏழை நாவிதன், அரசனுடைய அரண்மனை வைத்தியனாயின் அவன் தன்னைப் பற்றிப் பெருமையாய் நினைத்துக கொள்வது ஒரு விந்தையல்ல. ஜார்ஜ் ஹேண்டல் என்பவர் ஜெர்மனி தேசத்தில் ஹாலி என்னும் நகரத்தில் ஒரு முக்கிய மனிதரே. முதலில் சாதாரண நாவித வைத்தியராக விருந்து பின்னர் பல பிரபுக்களுக்கும் அரசர்களுக்கும் நண்பராகவும் குடும்ப வைத்தியராகவும் பிரபலம் பெற்றிருந்தார். அவருக்கு 1635 - ம் வருஷம் பிப்ரவரி23 - ந் தேதி ஓர் மகவு பிறந்தது. அக்குழந்தைக்குப் பெரியதோர் வாழ்க்கைக் குரிய வசதிகளைச் செய்ய முற்படுவாராயினர். தனக்குத் தன் மூதாதைகள் செல்வமும் சிறப்பும், பேரும் புகழும் தேடிலைக்காததற்கு வருந்தாது தனக்குப் பின் வரும் சந்ததியாருக்கு அவற்றைக் கொடுக்கும் வழிதேடும் அரியோரில் இவர் ஒருவர். செந்நாப்புலகரின் தந்தை'' தந்தை மகற்காற்று முதலியவையத்து முந்தியிருப்பச் செயல்'' என்னும் கூற்றிற் கேற்ப ஒருநாள் அவர் தன்னருமை மனைவியிடம் ''நாம் நம் குழநதையை ஒரு கலாவல்லவனாக்கல் வேண்டும். அவனைச் சர்வகலாசாலைக்கு அனுப்பிச் சட்டங்களை ஐயந்திரிபறக் கற்கச் செய்து நான் இறக்கு முன் அயனை நம் தேச ராஜதந்திர நிபுணனாகவும், சட்ட மந்திரியாகவும் சானு கேன் " என்று ஆர்வமுடன் புகன்றார். குழந்தை இவர்களின் அன்பான பாதுகாப்பில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பூர்ணச்சந்திரன போன்று பிரகாசித்து, மழலையாடிப் பெற்றோர்களுக்கு இன்பத்தைக் கொடுத்து வந்தது. ஆனால் ஜாஜ் பிரடரிக் ஹேண்டல் என்னும் பெயரினைக் கொண்ட அந்தப் பையனுக்குப் புத்தகங்களின் மீது கிஞ்சித்தேனும் பிரியமில்லை. ஒருநாள் தந்தைதனது குழந்தையினது அறையில் இடைவிடாது உண்டாகும் சத்தத்தின் காரணம் என்னவென்று போய்ப்பார்த்தார். அந்த அறையில் எங்கும் பல வாத்தியக் கருவிகளும் கீதவிளையாட்டுப் பொம்மைகளும் பரவிக் கிடந்ததைக் கண்ணுற்றார். ஒரு புத்தகங் கூடக் காணப் படவில்லை. பிரடரிக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணமும் வாத்தியக் கருவிகள் வாங்கச் செலவிடப்பட்டிருப்பதை அறிந்தார். பையன் பிறந்த போதே அவர் கொண்ட எண்ணங்களுக்கும் கனவிற்கும் இது சற்றேனும் ஒத்திருக்காததைக் கண்டு மனம்கொதித்து வெகுண்டனர். 'வாத்தியம்! கீதத்தால் மனிதன் என்ன நன்மையை அடையக் கூடும்? இது அவன் முன்னேற்றத்திற்கும் கீர்த்திக்கும் எப்படிப் பயன்படும்? " என்று கோபத்தோடு தன் மனைவியை உசாவி, " குழந்தையை இந்தப் பயனற்ற வீணான குப்பையான காலத்தை விருதாவாகக் கழிக்கும் பயிற்சியிலிருந்து தடுத்துப் பிரயோஜனத்தை உடைய கல்வியைப் போதிக்க உனக்குத் தெரியவில்லை இனி ஒருகணமும் இம்மாதிரி விடேன். அவனிப்போதே பள்ளிக் கூடத்திற்குச் சென்று பயனுடையவற்றைக் கற்றுக் கொண்டிருத்தல் நல்லது'' என்று கூறி அங்குக் கிடந்த வாத்தியக் கருவிகளை ஒன்று விடாமல் நெருப்பில் போட்டு அவை எரிந்து, பொடிந்து சாம்பலாகும் வரை அங்கேயே நின்று பார்த்திருந்து பின்னர் வெளிச் சென்றார். இப்போது அந்த வாத்தியக் கருவிகளைக் காணுவதற்கே உலகம் பெருந் திரவியக்குவியலைக் கொடுக்கத் தயாராயிருக்கின்றது! இனி பிரடரிக் விளையாட, இன்பமுற என்ன செய்வான்! அவனுடைய அருமை வாத்தியக் கருவிகள் தீக்கிரையாயின. ஐந்து வயதான அவன் தந்தைக்குக் கீழ்படிந்து பள்ளிக் கூடத்திற்கு நடந்து சென்று கஷ்டத்துடன் பாடங்களைப் படித்து வந்தான்.

 

படிப்பு அவனுக்குச் சிறிதேனும் சந்தோஷத்தைக் கொடுக்க வில்லை. வாத்தியக் கருவிகள் அழிக்கப்பட்ட பின்னர் அவனுக்கு எதன் பேரிலும் இச்சையில்லை. அவன் மனம் தளர்ந்தது. உற்சாக மொழிந்தது. இன்பமும் சமாதானமும் துறந்தன. வருத்தமும் கலக்கமும் குடி கொண்டன். அகத்திலுள்ளது முகத்தில் தெரியும்; இவன் முகம் வாடிக் கருத்தது. உடல் இளைத்தது. இதை நோக்கினவர் எவர்? தந்தை தன்னுடைய வைத்திய அலுவல்களால் அடிக்கடி வெளிச் செல்ல நோந்ததால் இதனைக் கவனிக்கக்கூட வில்லை. ஆனால் அவனுடைய தேகமே தன்னுடையது, அவனது சுகமே தன்சுகம், அவனுடைய சந்தோஷமே தன்னுடைய சந்தோஷம் என்று அல்லும் பகலும் அற்பது நாழியும் கவலையுற்றிருக்கும் தாய் இதனைக் கண்டு எவ்வாறு சகிப்பாள்? இந்த மாறுபாட்டைக் கண்ட அவன் அன்னை மனம் வாடினாள். வாரங்கள் பல கழியப் பையன் மனச்சோர்வுற்றுச் சமாதான மழிந்தான். உற்சாகத்தையும், பிரகாசத்தையும் காட்டும் அவன் முகம் வாட்டத்தைப் புலப்படுத்திற்று. கடைசியாக அவன் தாய் பையன் படுந்துயரத்தைக் காணச் சகியாளாய்த் தன் கணவனில்லாத சமயத்தில் அவனைத் தனித்து அழைத்து அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மாறுதலுக்கு என்ன காரணம் என்று வினயமாகவும் பரிவுடனும் கேட்டாள். அதற்கு அவன் ''என் வாத்தியம்! அம்மா! அதில்லாமல் நான் உயிருடனிருப்ப தரிது'' என்று கதறிக் கூறினான். தன் கணவனின் கட்டளைக்கு மீறி எப்படி நடப்பது? என்று யோசித்து அவனுக்கு வெகுநேரம் பயனில்லாத பல சமாதானங்களைச் சொல்லித் தேற்ற முயன்றாள்.

 

இதற்கு எப்படியாவது பரிகாரம் தேடவேண்டு மெனச் சிந்தித்துக் கொண்டிருந்த அவ்வம்மையாருக்கு பிரடரிக்கின் அத்தை அன்னாவின் ஞாபகம் வந்தது. அன்னாவுக்கு அக்குழந்தையின் பேரில் அபாரமான பிரியமுண்டு. அவளிடம் சென்று பிரடரிக்கின குறையைக் கூறினாள். அன்னா உடனே தன் தமையன் மனைவியை நோக்கி "அண்ணீ! இன்று சாயங்காலம் எங்கள் அண்ணா வீட்டில் தானிருப்பாரோ'' என்று வினவினாள்.'' இல்லை அவர் இன்று ஒரு பிரபுவைக் காணச் செல்லுவார் " என்று மறுமொழி புகன்றாள். இதைக் கேட்ட அன்னா புன்முறுவல் செய்து அவளை வீட்டிற்கு மனச் சமாதானத்துடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள். அன்று சாயங்காலம் மணி ஐந்திருக்கும். அரண்மனை வைத்தியர் ஹேண்டலின் வீட்டின் முன்பு ஒரு பெட்டி வண்டி வந்து நின்றது. அவ்வண்டியினின்றும் ஒரு பெரிய வாத்தியப் பெட்டி ஒன்று இறக்கப்பட்டு வீட்டின் மேன்மாடி அறைகளிலொன்றில் கொண்டு போய் வைக்கப்பட்டது. அது யாருடையது என்று நினைக்கின்றீர்கள்? அன்னா அத்தையினுடைய பழைய பியானோவே இப்போது இங்கு அனுப்பப்பட்டது. டாக்டர் ஹேண்டல் களைத்து வீடு வந்து சேர்ந்தார்.

 

நல்ல உண்டி அருந்தினர். களைப்பும் நல்ல உண்டியும் அவரை நித்திரா தேவியின் வசமாக்கின. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் அரண்மனை வைத்தியர். அவரது மனைவி தன் தனயனைக் கையில் பிடித்துக் கொண்டு மாடிக்கோபுரத்தை அடைந்தனர். அன்று வெகுகேரம் வரையில் அவன் படுக்கைக்குச் செல்லவில்லை. மறுநாட் காலையில் பையன் வதனத்தில் என்று மில்லாத பொலிவு காணப்பட்டது. சந்தோஷத்தோடு பள்ளியை நோக்கி நடந்தான். இதனைக் கண்ட தந்தையார் பூரிப்புடன் தன் பிரிய நாயகியை நோக்கி" பார்த்தாயல்லவோ நம்மகனை! நான் முன்னரே தெரிவிக்க வில்லையா? இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை; அதற்குள் பையன் விவேகமற்ற அசங்கிய விளையாட்டுச் சாமான்களை விட்டுப் படிப்பின் பேரில் உண்மையான அவாக்கொண்டு சந்தோஷத்தோடு பள்ளிக்கூடம் செல்லுவதை! அவன் எப்படியும் அரசனுடைய முக்கிய மந்திரியாகும்படி செய்வேன்'' என்று கொஞ்சிக்கொண்டு சொன்னார். இதனைக் கேட்ட அவ்வம்மை புன்னகை செய்தாள்.

 

முற்பத்திச் சுருக்கம்: - ஹேண்டல் ஒரு ஜெர்மன் நாவித வைத்தியனின் குமாரர். 1685 வருஷம் ஹாலி நகரத்தில் பிறந்தார். டாக்டர் ஹேண்டல்அவனைச் சிறந்த நியாய வாதியாகவும் மந்திரியாகவும் செய்யத் தீர்மானித்தார். பையனுக்கு வாத்தியத்தில் அதிக பிரேமை உண்டு. அதை வெறுத்த தந்தைஅவனை ஐந்து வயதிலேயே பள்ளிக்கு அனுப்பினார். சிறு ஹேண்டலின் மனமாறுதல் அவன் தாய்க்கு அதிக சஞ்சலத்தைக் கொடுக்க அருள் அவனுக்குபுருஷனுக்குத் தெரியாமலே வாத்தியம் வாசிக்கும் தந்திரம் செய்தாள்.)
 

உலகம் உறங்கும் போது பையனின் கீதமுழக்கம்.

 

ஹாலி நகரத்தில் ஓர் நடு நிசி. ஊர் அடங்கி எந்த விதமான அரவமும் இல்லாக ஓர் இரவு. வீதிகள், வீடுகள் எங்கும் ஒரே இருள் பரந்திருந்தது. சகல ஜீவராசிகளும் உயிர் நீத்த பிரேதங்கள் போல் அசைவற்று உறங்கியிருந்தன. ஒரு வீட்டிலாயினும் தீபம் சுடர்விட் டெரிந்ததாகத் தோன்றவில்லை. இப்படி நிசப்தம் குடி கொண்டிருக்கும் நள்ளிரவில் இரண்டடுக்குள்ளமெத்தை வீட்டின் ஓர் அறையில் மட்டும் ஏதோ வெளிச்சமும் ஓசையும் கிளம்பியதாகத் தென்பட்டது. அங்கு ஓர் உயிர் மட்டும் உறக்கங் கொள்ளாது வீணை போன்ற ஓர் இன்னிசைக் கருவியை மீட்டிக் கொண்டு, அதனால் எழும் நாதத்தில் உற்சாகமும் பரவசமடைந்திருந்தது. இவ்வுயிர் தான் சிறுஹேண்டல் என்று நண்பர்கள் அறிவார்கள். இச்சிறுவன் ஒருவரும் அறியாமல் எல்லோரும் அயர்ந்து நித்திரா தேவியின் வசமாயிருக்கும் சமயம் மேன்மாடிக் கோபுரத்தை அடைந்து தினந்தோறும் தனது கை சோர்ந்து மனம் திருப்தியும் சமாதானமும் பெறும் வரை வீணை பழகி வருவான். அந்தப் பழைய பியானோவைக் காட்டிலும் வேறு சிறந்த வாத்தியக் கருவி அவனுக்கு அச்சமயத்தில் கொடுத்திருக்க முடியாது. அப்பியானோ இனிமையான நாதத்தைக் கிளப்பி இன்பம் கொடுக்கும். அதே சமயத்தில் அதன் சப்தம் அந்த அறையிலேயே அடங்கிவிடும். இதனால் அவனுடைய தந்தையாவது பிறராவது இதை அறிந்து கொள்ள ஏதுவில்லை. ஆனால் அவனது சுகத்தைத் தனது உயிராகக் கொண்ட அன்னையும், அவன் மேல் அளவிலாப் பிரேமையுள்ள அத்தையாகிய அன்னாவும் இதை அறிவர்.

 

இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஹேண்டலுக்கு இப்போது வயது ஏழு. ஒ ருநாள் டாக்டர் ஹேண்டல், ஹாலி நகரின் அருகில் நாற்பது மைல் தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஜான் அடால்ப் என்னும் வாலிபப் பிரபுவையும், அவருடைய காரியதரிசியான தன் உறவினர் ஒருவரையும் காணச் செல்ல ஆயத்தமானார். யாராவது வீட்டில் நன்கு பழகினவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியூருக்குப் புறப்படும் போது தாமும் உடன் செல்ல ஆசைப்படுவது குழைந்தைகளின் இயற்கை. ஆகவே பிரடரிக்கும் தன் தகப்பனாரிடம் தன்னை அழைத்துச் செல்ல வேண்டினான். அதற்கவர் மறுத்து தாம் மட்டும் செல்ல வண்டியில் ஏறி உட்கார்ந்தனர். வண்டி சுமார் இரண்டு மைல் தூரம் சென்றிருக்கும்; அப்போது சிறு ஹேண்டல் தந்தைக்கு முன்னின்றான். அவருக்குத் தெரியாமலே வண்டியைப் பிடித்துக் கொண்டு அவ்வளவு தூரம் ஓடி வந்திருந்ததற்காக அவர் அவனைத் திட்டி, வண்டியை நிறுத்தச் சொல்லி ஏற்றிக் கொண்டார். அவனை வீட்டிற்குத் தனியே அனுப்ப அவர் மனம் ஒவ்வவில்லை. ஆதலின் அவனைச் சமஸ்தானத்திற்கு இட்டுச் சென்றார். சமஸ்தானப் பிரபு ஓர் சிற்றரசர். அங்கே பல மேதாவிகள் குழுமி யிருந்தனர். அவ்விடமிருந்த கவிஞர்களும், சங்கீத சாஸ்திர நிபுணர்களும், வாத்தியம் வாசிப்பதில் சிறந்தோரும், மற்றுமுள்ள மேதாவிகளும் பையனுடைய சங்கீதஞானத்தையும், இயற்கையாய் அமைந்துள்ள மேம்பாட்டையும், அவன் பார்லையிலிருந்தும், செய்கைகளிலிருந்தும் கண்டு ஆச்சரிய மடைந்து அவன்பேரில் அபாரமான பிரியம் கொண்டனர்.

 

அன்று ஆதிவாரம். யாவரும் வேத் கீதம் பாடுவது வழக்கம். டாக்டர் தன் குமாரனுடன் அங்கு வந்திருந்தார். கீதக் கோஷ்டி கலைந்தவுடன் அவரவர் தத்தமது காரியங்களைக் கவனிக்க சென்றனர். ஆனால் தன் தந்தைக்குத் தெரியாமல் அவரிடமிருந்து மெதுவாக நழுவிப் பெரிய வாத்யக் கருவி யிருக்கும் கீதசாலையை அடைந்தான் ஹேண்டல். அங்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னர் பெரியவ ரொருவர் அதை வாசிக்கும் போதே இவன் எண்ணம் பூராவும் எப்படியாவது அதைத் தானும் வாசிக்க வேண்டு மென்று அதன் பேரிலிருந்தது. இப்போது அவன் அந்தக் கருவியை நெருங்கி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் தாவி ஏறி உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தான். நாதம் வெகு இனிமையாய் கிளம்பிற்று. அவனது இன்பம் அவனை மறக்கச் செய்தது. மென்மேலும் இயக்க ஆரம்பித்தான். அப்போது அவ்வழி வந்த சங்கீதப்பிரிய இளவரசர் அதைக் கேட்டுப் பிரமிப்பு அடைந்தார். அச்சிறுவனது ஞானத்திற்கு வியந்து அவர் டாக்டர் ஹேண்டலிடம் சென்று "இக்குழந்தைக்கு இசையில் அபாரமான இயற்கை ஞான மிருக்கிறது. நான் இதுவரையில் இவ்வளவு இளவயதில் இவ்வளவு சங்கீத ஞான முடையவரைக் கண்டதே இல்லை. நீர் அவசியம் இக்குழந்தைக்கு அதில் பயிற்சி மிகும்படி செய்விக்க வேண்டும்'' என்று கூறினார். முதலில் ஜார்ஜ் பிரடரிக் ஹேண்டலின் தந்தை அதற்கிசையவில்லை. ஆனால் அப்பிரபு "பையனைச் சங்கீத வித்வானிடம் அனுப்புவதாக வாக்குறுதி தந்தா லொழிய உம்மைப் போகவிடேன்'' என்றார். கடைசியாக அரை மனதுடன் " ஆகட்டும், நீங்கள் சொல்லியவாறே செய்கிறேன்; ஆனால் அவனது பள்ளிக்கூடப் பாடங்களுக்கு எந்தவிதத்திலும் கெடுதி விளைக்காமல் இருந்தால் தான் உத்திரவு தருவேன்'' என நவின்று குமாரனையும் உடன் கொண்டு தமது இல்லமேகினார் பண்டிதர்.

 

 

 

 

அரசன் சந்தோஷிக்கவும், பேராசரியர்கள் பிரமிக்கவும் செய்த பையன்.

 

தந்தை சொற்றுறவாது கஷ்டப்பட்டுத் தன் பாடங்களைக் கற்று வந்தான் பையன். அவனை அவர் கீதம் கற்றுக் கொள்ள ஓர் ஆர்கன் வாத்தியப் பண்டித்ரிடம் அனுப்பினார். அதி விரைவில் அவரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டியவை யாவற்றிலும் அவரதிசயிக்கும் வண்ணம் பையன் தேர்ந்து வந்தான். வாத்தியம் வாசித்தல் மட்டும் அவனை அவ்வளவு பெருமைப்படுத்தி யிருக்காது. அத்துடன் அவன் ஓசைக்குத் தகுந்த பாக்களியற்றும் சக்தியையும் சிறுபோழ்திலேயே பெற்றிருந்தான். நாதன் கோயிலில் பாடவேண்டிய வேதகீதம் வெகு அழகுபட எழுதித் தன் ஆசிரியரிடம் கொடுத்தான். பத்து வயதாயிருக்கும் போதே பையன் உயர்ந்த இசை நிறைந்த சாரம் கொண்ட இன்பம் பயக்கும் பாடல்கள் பல எழுதினை. அவை அவனுடைய கல்தன்மையையும், சந்து சாமர்த்தியத்தையும் விளக்னெ. இவ்ளவு அளவயதில், மொசாரட்டும், பிதோவனும், தியாகராஜரும் அவ்வளவு பூரண அழகுடன் கீதங்களியற்றவில்லை. மூன்று ஆண்டுகள் அவ்வூர் உபாத்தியாயரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய யாவற்றையும் சிறுவன் அறிந்தால், பின்னும் அதிகபாண்டித்யம் பெறப் போவாக் கொண்டான்.

 

ஜெர்மனி தேசத்தின் பிரதான அல்லது தலைமையான நகரம் பெர்லின். அது சகல கலாவல்லகர்களுள்ள கழகங்கள் பலவற்றைக் கொண்டது. வெகு அழகான பட்டணம். நுணுக்கமானவற்றை விளக்கமாகக் கற்பதற்கும், பட்டங்களைப் பெறுதற்கும் ஜனங்கள் அங்கு செல்வது வழக்கம். 1696 வருஷம் அவ்விளைஞன் தன்னை அங்கு இட்டுச் செல்லுமாறு தன் தந்தையை வேண்டினான். அவர் அதற்கொருவாறு இசைந்தார். ஹேண்டல் அங்குற்று அடைந்தது என்ன? வெற்றியன்றிப் பிறிதொன்றில்லை. கீதத்தில் அபூர்வசக்தியைக் கொண்ட பையனைக் கண்ட ஜெர்மனி மகாராஜாவும் மாகாராணியும் அளவுகடந்த அன்பு காட்டி அவனைத் தங்கள் அரண்மனைக்கு வரவேற்று உபசரித்தனர். அங்கு பரிசு பெற்றுப் பெயருடன் விளங்கிய சமஸ்தான புலவர் சிகாமணிகள் இவனது சங்கீத நிபுணத்துவத்தைக் கண்டு ஒருங்கே வெட்கத்தையும் பேராச்சரியத்தையும் அடைந்தனர். ஹேண்டலின் பேரில் அதிகப் பிரியம் கொண்ட மகாராஜா அவனை இட்டாலி தேசத்திற்கு அனுப்பி அவனது சங்கீதக் கல்வியைப் பூர்த்தி பெறச் செய்யவும் திரும்பி வந்தவுடன் தனது அரண்மனை (சமஸ்தான வித்வானாக வைத்துக்கொள்ளவும் அனுமதிதருதல் வேண்டுமெனவும் செப்பினார். அரசியும் அதுவே சரியென்று ஆமோதித்தாள்.

 

ஆனால் அந்த ஹாலி சர்ஜன் அதற்குச் சுலபத்தில் ஒத்துக் கொள்ளுகிறவரா? அவர் வெகு பிடிவாதக்காரர். உலகானுபவத்தில் முதிர்ச்சி பெற்றவர். சமஸ்தான சங்கீத விதவானைக் காட்டலும் மந்திரி பன் மடங்கு அதிக செல்வாக்கு (அதாவது மதிப்பு அதிகாரம்) உடைத்தவன் பெதை அவர் நன்குணர்ந்திருக்கிறார். புலவர் வறுமையும், பணத்தின் பெருமையும் அறிந்தஅவர் அதற்கு ஒத்துக் கொள்வாரா? இந்த சடலக செல்லாக கைக் கருதினவரல்லர் என்று வைத்துக் கொண்ட போதிலும் அவர் மூப்படைந்துகாடு வா வா வீடு போ போ எனவிருக்கும் காலத்தில் தன் அருமந்த புதல்வனை எவ்வாறு பிரித்துத் தூரதேசத்திலிருக்க அனுப்புவார்? அதுவுமன்றி அவன் தாய் எப்படி அச்சிறுவயதுப் பையனைப் பிரிந்திருக்க ஒப்புவாள்? அப்படியிருந்தும் மந்திரியாகவாவது சட்ட நிபுணனாகவாவது பையனைச் செய்ய வேண்டும் என்ற கனவு அவரை விட்டு நீங்க வில்லை. ஆதலின் அவர் அரசரது வேண்டுகோளுக் கிசையாது தன் மகனைக் கூட்டிக்கொண்டு ஹாலி நகரம் வந்தார். ஒரு வருஷம் எவ்விதமான பெரும் சம்பவமு மில்லாமல் ஒழிந்தது. டாக்டர் ஹேண்டல் அவ்வாண்டி னிறுதியில் மண்ணுலகை நீத்துவிண்ணுல கேகினர்.


ஹேண்டலின் தீர்மானம்.

 

ஒருவனுடைய குண அமைப்பிற்கு முக்ய சாதனங்கள் அவன் தாய் தந்தையர் சிநேகர் கல்வி கேள்வி முதலியன. நற்குணம் உடையவனாதற்கு அவன் சிறு போழ்திலேயே தாயினிடத்திலும் வீட்டிலுள்ளவரிடமு மிருந்து கற்றுக் கொள்கிறான். பெரும்பாலும் தாய்மார்களே குழந்தை மேம்பாடுடையவனாதற்குக் காரணம். சரித்திரத்தில் சிவாஜி அவ்வளவு உன்னத நிலைக்கு வந்தது அவனது தாயின் உபதேசமும் நல்வளர்ப்பும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலின் தாய்மார்களின் உதவி ஒரு குடும்பமாவது அல்லது நாடாவது முன்னேற்ற மடைதற்கு இன்றியமையாதது. நல குணவதுகளே, கல்வி ஞான முடையவர்களே, உலக அநுபவமுதிர்ச்சி உடையவர்களே நல்ல சற்புத்திரர்களைத் தேசத் தொண்டர்களாகப் பெறுவார்கள். நமது ஹேண்டலின் குணமாண்பிற்கு அவருடைய தாய்தான் காரணம் என்பதிலையமில்லை. அவ்வம்மையார் கணவன் துஞ்சினதும், குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவளுக்கு முன்னிலும் அதிகமாயிற்று, ஹேண்டலும் அவரிரு சகோதரிகளும் அவளது ஜாக்கிரதையான பாதுகாப்பில் வளர்ந்து வருவாராயினர். பிற்காலத்தில் மேன்மை தரும் பல நற் குணங்களும் ஸ்திரபுத்தியும் இக்காலத்தில் தான் தாயிடத்திலிருந்து ஹேண்டல் பெற்றார்.

 

தனது பிரியப்படி செய்யாது தந்தையின் இஷ்டம் போல் சிறுவன் சர்வகலாசாலையில் சட்டக்கல்வி கற்க ஆரம்பித்தான். இருந்த போதிலும் இவனது இயற்கை நாட்டம் கீதத்தில் தானிருந்தது. சட்டம் பயிலும் காலத்திலும் அதிகநேரம் கீர்த்தனைகள் எழுதுவதில் போக்குவது வழக்கம். இவனுடைய கீர்த்தனைகள் இவனுக்குப் பெரும் பிரக்யாதியை அளித்தன. சீக்கிரத்தில் ஹாலி கோயிலில் ஆர்கன் வாசிப் போராக ஹேண்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது இவர் சட்டக்கல்வி இசைபாடுதல் என்ற இருதொழிலையும் மேற்கொண்டார். இக்காலத்தில் இவரது கவிவன்மையைக் கேள்வியுற்ற சர்வகலாசாலை மாணவர் பலர் இவரை அண்டி சங்கீதம் பயின்று வந்தனர் அவர்களுக்கு ஹேண்டல் பல இனிய கீதங்கள் பாடித்தந்தனர். இரண்டு காரியங்கள் ஒரே சமயத்தில் செய்வது அவருக்கு கஷ்டமாயிருந்தது. வேனிற் காலத்தில் ஒருநாள் காலையில் வீட்டில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையுடனிருந்தார். அப்போது அவர் மனதில் பல எண்ணங்கள் தோன்றி சஞ்சலத்தைக் கொடுத்து மறைந்தன. கடைசியாகத் தாம் சட்டக் கல்வியை விட்டு சங்கீதம் பயின்று அதில் பெயரெடுக்க வேண்டும்; அஃகல்லாவிடின் சும்மா அடங்கியிருப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தனர். அந்தச் சிறு பட்டணம் அதற்குத் தகுதியானதல்ல ஆகலின் சங்கீதம் அதிகம் பயிலப்படும் ஹேம்பர்க்கிற்குச் சென்று அங்குள்ள இசை நாடக சபா ஒன்றில் இரண்டாவது வீணை வாசிப்போராக அமர்ந்தனர். இதுதான் அவர் ஜீவிய வேலைக்கும் பின் வரும் பிரக்யாதிக்கும் ஆரம்பம் என்று கூறலாம்.

 

 

வீணை வாசிப்போராக அமர்ந்த ஹேண்டல் தமது சாமர்த்தியத்தாலும் விடா முயற்சியாலும் வெகு சீக்கிரத்தில் வாத்திய சாலையை (Orchestra) நடத்திவைக்கும் தலைவர் பதவி பெற்றார். அப்பதவி பெற்றமையால் சுயமாக நாடகங்களை இயற்றும் ஆற்றலையும் பெற்றார். இயற்கையாக அமைந்துள்ள இசையோடு நாடகவியலைச் சேர்த்தார். 1705 வருஷம் முதன் முதலாக ஒரு இசை நாடகத்தை (Opera) எழுதி முடித்தார். அக்காலத்து அதுமிகுந்த கீர்த்தியடையச் செய்தது. பின்னர் இரண்டாவதாக ஒரு இசை நாடகம் வரைந்தார். அதனையும் எல்லோரும் பெரிதும் மதித்தனர். (அது இப்போது காணப்படவில்லை.) ஹேண்டலுக்கு வருமானம் அதிகரித் திருந்தமையால் பிரஷிய அரசன் குறிப்பிட்ட இசைப் பயிற்சிக்காகத் தமது சொந்தச் செலவில் இட்டாலிக்குச் சென்று இரண்டு வருடங்கள் தங்கியிருந்து பூரணபாண்டித்தியம் பெற்றுத் திரும்பினார்.

 

டஸ்கன் இளவரசர் ஹேண்டலின் கவிவன்மையைக் கேட்டு அவரைப் பிளாரென்சிலுள்ள தமதரண்மனைக்கு வருமாறு வேண்டினர். அவ்வாறே சென்று அவருடன் சின்னாள் இனிது இருந்தார். அந்நகரத்து சிரேட்ட குருவான கார்டினல் தேவ ஆலயத்திற்கு இசைப்பாட்டுப் பாடித் தருமாறு கேட்டனர். இட்டாலி தேசத்து பெரிய கிரந்தகர்த்தாக்களுள் பலர் அவருடைய நட்பைப் பெற ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர். அவரது புதிய இசைநாடகங்களைக் கண்டு களித்து எல்லோரும் அவரைப் ''பிரியமுள்ள ஹேண்டல்'' என்றழைக்கத் தொடங்கினர். எங்கும் அவருடைய புகழ் பரவிற்று. வரவேற்புகளும், உபசாரங்களும் விமரிசையாக அவருக்குச் சென்றவிட மெல்லாம் கொடுக்கப்பட்டன.

 

ஹனவர் என்னும் அரசன் அவருடைய சாமர்த்தியத்தைப் பாராட்டி விசேஷ வெகுமதிகள் கொடுத்துத் தன் சமஸ்தானத்தில் வைத்துக் கொண்டான். 1710 இந்த அரசன் தன்காரியஸ்தராக ஹேண்டலை இங்கிலாந்திற்கனுப்பினார். பல பெரியோர்களின் வேண்டுகோளின் மேல் அங்கு ஹேமார்க்கட்டிலிருக்கும் இராணியின் நாடக சபாவிற்குப் பல நாடகங்களை இயற்றித் தந்தனர். அவை எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்டன. ஆனால் அக்காலத்தில் பெயர் பெற்ற அடிசன் என்னும் ஆங்கில வியாசகர்த்தா இவருடைய பேரையும் புகழையும் பார்த்து அதிகப் பொறாமை கொண்டு இவரைப் பற்றிக் கேவலமாக வரையத் தொடங்கினர். இது ஹேண்டலுக்கு முதலில் கொஞ்சம் விசனத்தையும் மனச்சோர்வையும் கொடுத்தது.

 

ஹேண்டல் 'ரினால்டோ' (Rinaldo) என்றொரு நாடகத்தை எழுதிமுடித்தார். அதை எல்லோரும் அதிக விருப்பத்தோடும் மகிழ்வோடும் வாவேற்றனர். அதனைக்கண்டு ஆனந்திக்காதவர் இல்லை என்றே கூறலாம். லண்டனில் அந்நாடகம் பன்முறை நடத்தப்பட்டும் அதனைத் திரும்பவும் நடத்துமாறு ஜனங்கள் வேண்டிக் கொண்டார்கள். அந்நகரில் ஹேண்டலின் பெயரை அறியாதாரில்லை. அவர் லண்டன் நகரிலேயே வாழ்க்கை நடத்தஎண்ணினார். அப்போது இவரது திறமையைக் கண்டு வியந்த இங்கிலாந்து மன்னன் இவரைச் சமஸ்தான கவண்ட் கார்டன் நாடக சபைக்குத் தலைவராக்கினார்.

 

அந்தக் காலத்தில் இடாலி தேசத்து பானான் சினி (Bononcini) என்னும் பெயர் பெற்ற ஓர் இசை வீரர் இங்கிலாந்தி லிருந்தார். ஹேண்டலுக்கும் அவருக்கும் போட்டி ஏற்பட்டது. நகரம் இரண்டு பட்டது. சிலர் பானான்சினியையும் சிலர் ஹேண்டலையும் ஆதரித்தனர். ஹேண்டலின் கீர்த்தி சிறிது மழுங்கியதாகக் காணப்பட்டது. அவர் இங்கிலாந்தை விட்டுச் சென்று விடலாமென்றும் நினைத்தார். அவ்வாறு செய்திருப்பின் அவருடைய பேரும்புகழும் அழிந்திருக்கும். அச்சமயத்தில் அவருடைய சீடர்களி லொருவர் இட்டாலிக்குச் சென்று குரலினிமையில் உலகில் யாவரையும் விஞ்சிய சீமாட்டி ஒருத்தியை மணந்து இங்கிலாந்திற்கே கூட்டி கொண்டு வந்தனர். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அச்சீமாட்டி தனது குயிலினுமினிய குரலில் அவருடைய கீதங்களை அரங்கில் பாடினாள். இதனைக் கேட்ட அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர். அச்சீமாட்டியையும் கவியையும் போற்றாதவரில்லை. ஹேண்டலின் எதிராளி பானான் சினியின் பிரதாபம் ஒடுங்கிற்று. நமது இசை அரசன் இங்கிலாந்தில் - என் ஐரோப்பாவிலேயே தனக்கு ஒப்புவமையற்றுச் சிறந்து விளங்கினார்.

 

ஹேண்டலின் துன்பங்களும் மீட்சியும்.

 

பொதுவாக இசைநாடக உற்சாகம் ஜனங்களுக்குக் குறைந்து வந்தது. இசை நிபுணர் புதிதாக பலரைச் சேர்த்துக்கொண்டு தாமே ஒரு நாடக சபா ஒன்றை ஆரம்பித்து அப்போது நடத்த முயன்றார். அதில் அதிக நஷ்டத்தை அடைந்தார். இதனால் பெரும் கடனாளியுமானார். அது மனச் சஞ்சலத்தைக் கொடுத்தது. துன்பத்தின் மேல் துன்பம் ஏற்பட்டது. அவருடைய தேகஸ்திதி சீர்கேடடைந்தது. அப்போது அவருக்கு ஒருவகையான இழுப்பு ஜன்னிகண்டது. அந்நோய் அவரை முடமாக்கி, மூளையைக் கரைத்து அதிக துன்பத்தைக் கொடுத்தது. அவர் உதவியற்ற, செயலற்ற பிரேதம் போல் கிடந்தார். அப்போது அவருடைய வயது 52. தமது வாழ்நாளில் சேகரித்த பத்தாயிரம் பவுன்களை இழந்து கடன்காரரின் கொடுமைகளுக்கும் ஆளானார்.

 

அனைவரும் அத்துடன் அவருடைய பெயரும், பெருமையும் அழிந்தன வெனக் கருதினர். ஆனால் உண்மையில் அவருடைய ஜீவியத்தின் முக்கியமான வேலையைச் செய்ய அப்போது தான் ஆரம்பித்தார். அபஜெயத்திலும், தேக அசௌக்யத்திலும், புத்திபேதிப்பிலும் வருந்திக் கொண்டிருந்த அச்சமயத்தில் தான் அவருடைய முழுக் கவிவன்மையும் வெளிப்பட்டது. இட்டாலியில் கற்றுக் கொண்டு வந்த இன்னிசை நாடகப் பாக்களை விட்டுப் புதிதான - உள்ளத்தைக் கவரும் - உருக்கமான பக்தி ரசம் ததும்பிய பஜனை கானங்களைப் பாடி ஆங்கிலேயருடைய ஆழ்ந்த அன்பைக் கொள்ளை கொண்டார். அப்போது ஆங்கிலேய சீமான்கள், சீமாட்டிகள், சிறியர், பெரியோர்யாவரும் சிற்றின்பரசம் செறிந்த இசைப்பாட்டுகளை விட்டு தத்துவ ஞானத்தையும் பேரானந்தத்தையும், உள்ளக் கவர்ச்சியையும் கொடுக்கும் வேத ஆலய பஜனைப் பாக்களைக் கேட்டு மகிழ்ந்தனர். அவரது வேதாந்த கருத்துக்கள் தங்கிய கீர்த்தனைகள் எங்கும் பரவின. இத்துறையில் தான் அவர் என்றும் அழியாது தம் பெயரை நிலைநாட்டினார்.

 

பக்திரசப் பாக்களைத் தீவிரமாய் அவர் எழுதத் துணிந்ததற்கு அயர்லந்து மாந்தரே காரணமெனக் கூறலாம். டிவான்ஷயர் பிரபு அவரை அயர்லந்திலுள்ள தன் கோட்டைக்கு அழைத்துச் சென்றார். அங்கே " தேவதூதன்'' (Messiah) என்னும் பக்திரசம் ததும்பிய பாடலை எழுதி முடித்தனர். அதைப்பாடக் கேட்ட அயிரிஷ் மாந்தர் பரவசமடைந்தனர். ஹேண்டலின் இசையிலீடுபட்ட அவர்கள் அவரது ஒவ்வொரு பாட்டுக் கச்சேரிக்கும் 400 பவுனுக்குக் குறையாமல் கொடுத்து வந்தார்கள். இவ்வாறு ஹேண்டலுக்குத் திரண்ட பொருள் சேர்ந்தது. அவர் மிகவும் தயாள சிந்தையுடையவர். தமக்குக் கிடைத்ததைத் தாமே டாம்பீகமாகச் செலவழியாமலும், செல்லுக்கிரையாகச் சேர்த்து வையாமலும் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயில் கைதிகள் உபயோகத்திற்கும், நல்ல ஆஸ்பத்திரிகளுக்கும் பொருள் கொடுத்துதவினார். தவிர இலண்டன் மாநகரில் 'மெசையா வைத்தியசாலை' ஒன்றைஸ்தாபித்து அதற்காக ஏராளமான பொருளைச் செலவு செய்தார்.

 

ஹேண்டலினிடம் கொஞ்சம் முன்கோபம் உண்டு. ஆனால் அவருடைய அருளுடைமை அதை மறைத்தது. ஹாஸ்ய ரசிகர். கவிவன்மையில் அவர் சிறந்தவரல்லர் எனினும் ஐரோப்பாவில் கீர்த்தனைகள் எழுதுவதில் அவருக்கு விஞ்சியவர் இருப்பதாகக் கூறமுடியாது. அவரது குணமாண்பு அவருடைய பாடல்களுக்குப் பிரகாசத்தையும், இன்பத்தையும் கொடுத்தது. இணையற்று உலவிவரும் அவருடைய முத்திரைப் பல்லவிகளையுடைய பாட்டுகளைப் போல் மற்ற ஐரோப்பிய இசை வல்லாரான பிதோவனும், வேகனும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய வியாதி மேன்மேலும் துன்புறுத்த ஆரம்பித்தது. அவர் கண்கள் ஒளியை இழந்தன. அவரும் மில்டனைப் போலவே தமது கண்களிருண்ட காலத்தில் பல அருமையான பாக்களிசைத்தார். இப்பெரும்பிணி அவரது மனோதிடத்தையும் சாந்தியையும் கலைக்கவில்லை. இவ்வளவு துன்பங்களுக் கிடையிலும் அவர் நண்பர் ஒருவருடைய உதவியால் கீதமிசைப்பதைப் பின்னும் மேற் கொண்டனர். பாடும் சமயங்களில் யூதத்தலைவரான சேம்சனுடைய கதை ஞாபகத்திற்கு வராமற் போகாது. சிலசமயங்களில் சேம்சன் கூறிய பாடலைச் சோகம் ததும்பிய குரலில் பாடிக் கேட்போர் மனதைக் கரைப்பார். இவ்வந்திய காலத்தில் அவருடைய நிபுணத்துவத்தைப் போற்றும் பலரும் அவரது நண்பர்களும் கூடவேயிருந்து பணிவிடைகள் செய்து வந்தனர். இதுதான் அவர் வாழ்வின் கடைசி அத்தியாயம்.

 

வாழ்வு முடிவடையும் சமயம் நெருங்கியபோது அவர் எனது தேவன்' (Messiah) என்னும் பாடலை வெகு ரசத்துடன் பாடினார். பாடிக்கொண்டிருந்த உருக்கத்திலேயே மயக்கத்தை அடைந்தார். அதுதான் முடிவென்று அவருடைய நண்பர்கள் படுக்கையில் அவரைப் படுக்கவைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்தனர். 1759 ஏப்ரல் 14. காலை எட்டு மணிக்கு புலாலுடம்பை நீத்து என்று மழியாத புகழுடம்பைப் பெற்றார். அவருடைய சவத்தை பாடகர் மூலையில் வெஸ்ட் மின்ஸ்டர் ஏபியில் பெரிய புலவர்களின் வரிசையில் அடக்கம் செய்தார்கள்.

 

ஹேண்டல் ஓர் மகாகவி. மனோ எழுச்சியிலும், கற்பனாசக்தியிலும் ஷேக்ஸ்பியருக்கும், மில்டனுக்கும் சமமானவர். ஆனால் இசையில் அவருக்கொப்பாகயாரையும் கூற முடியாது. ஜெர்மனி தேசத்தில் பிறந்து, இட்டாலியில் சங்கீதம் பயின்று, பெரும்புகழை எங்கணும் பெற்று, இங்கிலாந்து சென்று அங்குள்ளவர்கட்கு இசையில் சுவையைப் பெறச் செய்து அழகான கீர்த்தனைகளியற்றி என்று மழியாது தம் பெயரை நிலைநாட்டினார் ஹேண்டல். இங்கிலாந்து இசைச் சுவையில் தாழ்ந்திருந்த காலத்தில் அது எல்லா நாடுகளைக் காட்டிலும் அதிகமாக இன்பமும் ஊக்கமும் எடுத்துக் கொள்ளுமாறு செய்தது அவர்தான். அதனால் அவர் தேசபக்தர்கள், தேசநலந் தேடியோர் உறங்கும் வெஸ்ட்மின்ஸ்டர் ஏபியில் உறங்குவது மிகவும் தகுதியானதே. அப்பேர்பட்ட பெரியாரைத் தம்மிடை பெற்றது ஆங்கிலேயருடைய பெரும் பாக்கியமே.

 

E. V. சிங்காரவேலு முதலியார், பி. ஏ.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜனவரி ௴

 

 

 

 

 

ஹிந்துக்கள் (மிக முக்கியமாய் சைவசமயிகள்) கவனிக்க வேண்டியவை

 

1. உலகத்திலே பற்பல சமயங்களுண்டு. அவ்வெல்லாமதங்களிலும், ஒரேகடவுள் நானாவிதமான ரூபங்களோடும் பெயரோடும். அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாரென்பது அறிஞர்களெல்லாரும் ஒத்துக்கொண்ட விஷயம். இவ்வாறிருக்கையில், ''உன் சமயத்திலே, கூறப்பட்ட கடவுள் பொய். எங்கள் மதத்தில் தான் மெய்யான கடவுளிருக்கிறார். அவரால் தான் மோட்சமடைய எலும்'' என்று கூறுபவர் எவ்வளவு பெரிய தவறுடையவராயிருக்க வேணும். ஒரு சமயத்தவர், மறு சமயத்திலிருக்கும் பேதையரையே மாற்றி அச்சமயத்திலு முண்மை யிருக்கிறதென்பதை யறிந்தும், வீண் பொய்க்கூற்றுக்களைக்கூறி, ஏய்த்துத் தம்மதத்திற்குத் திருப்புவது, எவ்வளவு அசூசியான செயலாயும் முழுமுதற் கடவுளுக்கே யொப்பாததாகவுமிருக்கும். பிறமதத்தவர்கள் எளிதில் தங்கள் வலைக்குள் அகப்படக்கூடிய இரை எவ்விடத்திற் கிடைக்குமென்று தேடுகின்றார்களென்றாலோ, தங்கள் சமயத்தின், உண்மையறியாத பாமர இந்துக்கள் மீதே, இவர்கள் தங்கள் மாய வலையை வீசி யவர்களை மயக்கிவிடுகின்றார்கள். இதற்குக் காரணம் யாது? என்று விசாரிக்கப்புகில், நம் நாட்டிலிருக்கும் படிப்பு வாசனைக்குறைவும், தாய்ப்பாஷைத் தேர்ச்சிக்குறைவும், சொந்த சமயத்தின் ஆராய்ச்சியின்மையும், அதனறியாமையும், ஏழ்மைத் தனமும், இன்னோரன்ன பல காரணங்களே யாகும்.

 

2. இவ்வித கேவலமான செயல்கள், இந்தியா இலங்கைப் பகுதிகளில், ஏராளமாய் நடைபெறுகின்றன. பெரும்பாலான சனங்கள், தக்க கல்வி கற்கக்கூடிய நிலைமையிலில்லை. அன்னோர் பெரும் வறுமையினால் வருந்துகின்றனர். அவர்களுக்குச் சீவனத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லி, தங்கள் மதத்திற்கு அழைக்க, பிறமதத்தவர்கள் கூச்சப்படுகிறார்களில்லை. இவ்விடங்களிலிருக்கும் வித்வான்களான சைவசமயிகள் தங்களுக்குக் கடவுளாற் கொடுக்கப்பட்ட கல்வித்திறமையை, அவர் ஊழியத்திற்காகப் பிரயோசனப்படும்படி செய்யக்கருதுவதில்லை. இவர்களிடம் சமயாபிமானமில்லாமையின் பொருட்டு, எவ்வளவு துக்கப்பட வேண்டியிருக்கின்றது. மற்ற மதங்களில் தமது மதத்தின் மகிமையையும், சாரத்தையும் விளங்கப்பண்ணிப் பிரசாரம் செய்யச் சம்பளம் பெறும் போதகர்களுளர். அவர்கள் கடவுள் ஊழியத்திற்காகத் தங்கள் சீவனத்தை யர்ப்பணஞ் செய்கின்றார்கள் இவர்களின் தொழில்கள் முற்றாக இவ்விஷயங்களிலே செல்கின்றன.

 

3. சைவசமயிகளிலும் மதாபிமானத்தால் ஏவப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக உழைப்போரில்லை யென்று சொல்ல ஏலாது. ஆனால் அவ்வகையானோரை மற்ற மதத்தவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, மிகக்கொஞ்சம் பேரேயுளரென அறியலாம். சைவசமயிகளில், இப்போதிருப்பதிலும் பார்க்க இன்னும் அனேகம்பேர், தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்க்கையையும், தங்கள் கல்வியையும், நமது மதத்தின் மேம்பாட்டிற்காகவும், அதைப் பழைய உன்னத நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், அர்ப்பணஞ் செய்து, தங்கள் வாழ்நாளை யதற்கே செலவழிப்பார்களானால், நமது சமயம், மேன்மேலும் பெருகித் தழைத்தோங்கும் என்பதில் ஐயமின்றாம்.

 

4. இவ்வாழ்க்கையிலிருப்போனுக்கு சமயத்தொண்டு புரிய விருப்பமிருந்தாலும் அவகாச மதிகமேற்படாது. அவனுடைய மனமானது பெண்டு, பிள்ளைகளுக்காக வேண்டிய பொருள் தேடுதலில் அதிகமாக ஏவப்பட்டு ஈசனுடைய காரியங்களின் தொழிலில் மிக்க குறைவு பெறும். ஆயினும் அவனும் தன் வாழ்நாளின் ஓர் பாகத்தை இத்தகைய ஈசுவரத் தொண்டில் செலவிட வேண்டியது அவன் கடமையேயாகும். அதோடு வேறு வழிகளிலும் இதற்கு உதவி புரிய வேண்டும்.

 

5. "கற்றதனாலாய பயனென்கொல், வாலறிவனற்றாள் தொழாஅ ரெனின்'' என்பதற்கிணங்க, தன் சொந்தமதத்தைப்பற்றி நன்றாக வாசித்து, ஆராய்ச்சி செய்து, அதனுண்மையைத் தெரிந்து, அதனாலடையும் பெரும் பேற்றைப் பெற்று மகிழ்வதல்லவோ, இம்மானிடச் சென்ம மெடுத்ததின் பயன்! இஃதல்லாமல், கற்கத் தகுதியற்றவர்களாயும், பாமரர்களாயுமிருக்கும், சகோதர சகோதரிகளுக்குத் தானுணர்ந்த உண்மையை, விளக்கிக் காட்டி, அறிவூட்டி, அவர்களையும் மேம்பாடான பதவிக் குக்கொண்டு வருவதல்லவோ, ஒரு சீவனின்னொரு சீவனுக்குச் செய்யமான வேண்டிய பெரும் உதவி! இப்பேர்ப்பட்டவர்கள், இதர சமயங்களை ஆராய்ச்சி செய்து, அம்மதங்களிலிருப்போர் பாமர சனங்களுக்குப் போதிக்கும் பொய்க் கூற்றுகளினர்த்தத்தை யறியப்பண்ணி, நமது சமயத்தின் உண்மையைப் பிரசுரிக்கப் பண்ணுவார்களானால், மறு மதத்தவர்கள், தாங்களாகவே யடங்கி, தங்கள் ஏமாற்றுதல் பலிக்காதென்றறிந்து, இவ் விழிவான செயலிலிருந்தும் நழுவுவார்கள்.

 

6. மேலே யெடுத்துக்காட்டிய விதமாய் நம் தமிழ்மக்கள், எம்பெருமானின் தொண்டு செய்தலையே பெரிதாகக்கருதி, பாமர சனங்களுக்கு மதபோதனை செய்து அனாதியாகிய நமது சமயம் தழைத்தோங்க, இறைவன் திருவருள் புரிவாராக.

 

வ. முத்துச்சாமி.

 

குறிப்பு: - ஜீவகாருண்யம், ஈசுரபக்தி, தருமம், ஞானம் இவற்றால் பிரசித்திபெற்றது நமது புண்ணிய பூமியாகிய பாரதநாடு ஒன்றே. முற் காலத்திலிருந்ததைவிட அவை யிப்போது குறைந்திருந்தாலும் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கின்றன. என்றும் இருந்து கொண்டுதானிருக்கும்.

 

ஆனால் இக்காலத்தில் தருமத்தைச் செய்பவர்கள் பாத்திரமறிந்து செய்ய வேண்டுமென்பதையும், காலத்திற்கு அவசியமான வழியில் செய்ய வேண்டு மென்பதையும் சற்றும் கவனிக்கிறார்களில்லை. ஈசுவரனுக்கு வேண்டியது ஒன்றுமேயில்லை. மற்றபடி அவரை யொரு சொரூபமாகப் பாவித்து நாம் அவருக்குச் செய்யும் சோடசோபசாரப் பூசையும், உத்ஸவாதிகளும், அவரிடம் பூரண அன்பாகிய அநந்நியபக்தி வைக்க முடியாததால், ஒருவிதமாய் நமது பக்தியை வெளியிடும் செய்கைகளேயன்றி வேறில்லை. நம் முன்னோர்களாகிய சமயாசாரிகள்,


 "ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
 ஆல வாயி லுறையுமெம் மாதியே''

என்ற நோக்கங்கொண்டே நாடெங்கும் சென்று நமது வேதாகமங்களைப் போதித்து நித்தியத்வமுடைய நமது அனாதிமதத்தைப் பரவச்செய்தார்கள்.

 

புறச்சமயத்தவர்கள் பலவித வஞ்சத் தந்திரங்களால் நம்மவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுத்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் நம்மவர்க்கு நமது மதத்தின் பூரணத்தன்மையையும் அழியா உண்மையையும் எடுத்துக் காட்டி, அவர்கள் புறச்சமயத்தவருடைய மாயத்தில் சிக்காதபடி காப்பாற்ற வேண்டியது நமது மதம் குன்றாதிருக்கக் கருதுவோர் செய்ய வேண்டிய அவசியமான வேலை. அதைக் கவனிப்போர் ஒருவருமில்லை. இக் காலத்திற்கு அதுவே சிறந்த ஈசுவர கைங்கரியம் என்பது கவனிக்கப்பட வில்லை.

 

இக்காரியத்தைச் செய்யவேண்டியவர்கள் முதலாவதாக, மடாதிபதிகள், மதத்தலைவர்கள், சந்நியாசிகள் இவர்களே. இவர்களோ இதைப் பற்றி கனவிலும் நினைப்பதில்லை. இவர்கள் இலௌகீக காரியங்களிலேயே தங்கள் கவனம் முழுமையும் பெரும்பாலும் செலுத்துகிறார்கள். கவர்னர் முதலிய பெரிய அதிகாரிகளுக்கு விருந்து முதலிய உபசாரங்களைச் செய்வதில் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்கிறார்கள்: "நாம் இப்படிச் செய்வதால் தான் தருமஸ்தாபன மசோதா முளைத்து நம்மதத்தை விழுங் கப்பார்க்கிறது'' என்ற பயங்கரமான உண்மையைக் கூட இவர்கள் கருதாதிருப்பது மிக்க விசனிக்கத்தக்கதே.

 

சந்நியாசிகளில் கல்வியறிவுடையோரும் கூட இதைக்கவனிப்பதில்லை. அவர்கள் புதிதாய் மடங்கள் தாபிக்கவும், பல விடங்களுக்குச் சென்று மடத்திற்குப் பொருள் சேகரிக்கவும், புகழ்பெறவும் ஆவலுள்ளவர்களாக விருக்கிறார்கள்.

 

இல்லற வாசிகளாயுள்ளவர்களில் கல்வி கற்றோரோ - அவர்களில் பெரும்பாலோர் மதசம்பந்தமான விஷயங்களை நினைப்பதேயில்லை. ஏனெனில் அவர்கள் இலக்கண இலக்கியத்தாலாய பாஷைக்கல்வியில் பிரசித்தி பெறுவதையும், அதனால் பொருள் சம்பாதிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பதால் மறுமைப்பயனை யடையும் முயற்சி எடுத்துக்கொள் வதேயில்லை. ஆன்மார்த்தக் கல்வியேனும் ஈசுரபக்தியேனும் அவர்களிடம் காண்பதரிதே யெனலாம்.

 

நமது மதத்தைவிட்டு அன்னியமதம் புகுந்தோர், புகுவோர் இவர்
 களில் மிகப் பெரும்பாலர் கீழ்ச்சாதியென்றும் தீண்டப்படாதவர்களென்றும் நாம் ஒதுக்கிவைத்திருக்கும் தாழ்ந்த வகுப்பினரே. நாம் அவர்களையவ்வாறு நடத்துவதே அன்னிய மதத்தினர் அவர்களை இழுத்துக் கொள்வதற்குப் பெரிய உதவியாயிருக்கிறது. அன்னிய மதப்பிரசாரகர் நம்மவர்களாகிய கறுப்பு மனிதரை உள்ளத்தில் மிக்க தாழ்ந்தவர்களாகவும், அநாகரீகர்களாகவும், ஒருபோதும் சமமாய் நடத்தற்குரியவர்களல்ல வென்றுமே கருதுகிறார்கள். ஆனால் தந்திரமாய் வெளிக்குச் சமமாய் நடத்துவதாகக்கூறி அபிநயிக்கிறார்கள். நாம் நம்மவர்களுக்குக் கல்வியும் மதபோதனையுமளித்து சுத்தமாயிருக்கக் கற்பித்து அவர்களைச் சகோதர பாவமாய் நடத்தினால் பிறகு ஒருவர் கூட அன்னியமதம் புகார்களென்பது திண்ணம்.

 

மடாதிபதிகள் மடங்களில் சந்நியாசிகளைப் பயிற்சி செய்து அவர்களைக் கொண்டு நம் தேசக்ஷேமத்திற்கும், மதத்தின் க்ஷேமத்திற்கும் அவசியமான இப்பெரும் புண்ணியச்செயலைச் செய்விக்கலாகாதா! சம்பளம் கொடுத்தால் இல்லறவாசிகளும் இத்தொழிலுக்கு வருவார்கள். மடாதிபதிகள் கொஞ்சம் சிரத்தை யெடுத்துக்கொண்டால், சிவதருமத்திற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் வருமானத்தை யதிகமாய் இதற்குச் செலவு செய்ய விரும்பாவிடினும், சுலபமாகவே ஒரு புதுநிதியே சேகரிக்கக் கூடுமன்றோ. அவர்கள் அத்தகைய வேலையைச் செய்விக்கத் தொடங்குகிறார்களென்று தெரிந்தால் தரும் சிந்தனை நிறைந்த நாட்டுக்கோட்டை செட்டிமார்களும், தென்னாட்டிலுள்ள பக்திமான்களான ஜமீன்தார்களும், மற்ற விடங்களிலுள்ள செல்வவந்தர்களும் பொருள் உதவி செய்வார்கள் ளென்பதில் சற்றும் ஐயமின்றாம்.

 

எல்லாம் வல்லகருணா நிதியாகிய பொன்னம்பலக் கூத்தனே அவர்கள் மனம் இவ்வழியில் திரும்பச் செய்து அருள்புரிய வேண்டுமாய் அனைவரும் பிரார்த்திப்போமாக.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - பிப்ரவரி ௴

 

 

ஹிந்து ஸ்திரீகளின் நிர்ப்பாக்கியம்

(ஸ்ரீமதி ஜி. சுமதி பாய், B. A., LT., எழுதியது.)

 

பாரத மாதாவின் ஸ்துதி எங்கும் சப்திக்கும் நம் இந்திய தேசத்தில் அம்மாதின் மகளிர்களான பெண்கள் மாத்திரம் கைதிகளெனக் கட்டுண் இழலுவது வியப்பன்றோ! ஹிந்து மாதா அன்னியரின் கையினின்று விடுதலைப்பட வேண்டின், ஸ்திரீகள் பழையரீதியின் அநியாயத்தின்றும், பழக்க வழக்கங்களின் கட்டுக்காவலினின்றும் தப்ப வேண்டாமா? 'நம் தேசத்துப் பெயர்களுக்குக் குறையொன்றும் இல்லை' என அனேகர் பெருமை பாராட்டுவது முண்டு. அத்தகையரின் அபிப்பிராயப்படி, ஸ்திரீகளுக்கு ஆகாரம் ஆடை ஆபரணம் தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை போலும்! நம் இந்திய மகளிரின் நிஜமான நிலைமையை இங்குச் சற்றுக் கவனிப்போம்.

 

குழந்தைப் பருவம் தொட்டே பெண்கள் உபேக்ஷிக்கப்படுகின்றனர். அனேக குடும்பங்களில் ஆண் குழந்தை பிறந்ததென்றால் வெகு ஆடம்பரம் செய்வதுண்டு; பெண் பிறந்தாலோ அதை அலக்ஷியம் செய்வது மன்றி, ''ஐயோ, நம் அதிர்ஷ்டம் பெண்ணாச்சே' என மனம் வருந்துவது முண்டு. மற்றும் ஆணுக்கு ஐந்து வயதானால் அக்ஷராப்பியாசம் செய்வதுண்டு. பெண்ணுக்கோ கல்வி அவசியமில்லை! ''அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பென்னத்திற்கு?'' என்பர் பலர். சிலர் தம் பெண்களை பள்ளிக்கு அனுப்பினும் அவர்களின் வித்தியாப்பியாசம் அற்பகாலமே நீடிப்பது. பத்துபன்னிரண்டு வயது ஆகுமுன் அப்பெண்களின் கல்விப் பயிற்சி நிறுத்தப்படுகின்றது. இரண்டு மூன்று வருஷங்களில் அவர்கள் என்னதான் கற்கக்கூடும்? கல்வியின் களஞ்சியத்தினின்றும் பரிகரிக்கப்பட்ட பெண்களுக்கு வேறென்ன சம்பத்து இருப்பினும் யாது பயன்? கல்வி அறிவு இல்லாத ஆண்மகன் ஒருவனை அனைவரும் மூட னென ஏளனம் செய்வரன்றோ? பெண்கள் மாத்திரம் வித்தையின்றி அஞ்ஞானத்தி லிருப்பது தகுமோ? அன்றி பெண்கள் அனைவரும் சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவரோ?

 

ஹிந்துக்களில், அதிலும் மேல் ஜாதியரில், ஒரு பெண்ணுக்குப் பத்துவயதாகு முன்பே அவள் பெற்றோர் அவளுக்கு வரன் தேட ஆரம்பிக்கின்றனர். அந்தோ, அப்பெண்ணுக்கு அவ்வயதில் லௌகீக விஷயமொன்றும் தெரியாது. அத்தகைய பேதையைப் பசுக்களைத் தானம் செய்வது போல் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பதே நம் தற்கால ஹிந்து தர்மமாகும்! அப்பெண்ணுக்குப் பகுத்தறிவு வயது வந்தபின், தனக்கு வாய்ந்த கணவன் தன் மனதிற்குச் சம்மதம் இருப்பினும் இல்லாவிடினும், அவள் தன் மனோபாவத்தை வெளி யிடுவதற்கில்லை. அவள் எண்ணத்தை யார்தான் கண்ணியம் செய்வர்? தன் புருவன் கூனனோ, குருடனோ, கிழவனோ, முடவனோ, மூர்க்கனோ, அவனுக்கே அவள் தன் வாழ்நாள் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும். அவன் என்ன கொடுமை செய்யினும் அவள் எதிர்த்து ஏனென்று கேட்கலாகாது. அவள் துக்கிக்குங்கால் அவள் பெற்றோர் பெரியோர், "எல்லாம் அப்பெண்ணின் அதிர்ஷ்டம், நாம் என்ன செய்யலாம்! '' என்பர். நம் தேசத்தில் புருஷர்களுக்கு இத்தகைய கஷ்ட முண்டோ? ஆண்மகன் தன் சுயேச்சையாக மணம் செய்து கொள்ளலாம். மற்றும் தன் மனைவி தனக்குச் சம்மதமில்லாவிடில், அவன் அவளை நீக்கி விடுவதுமன்றி, வேறுகல்யாணமும் செய்து கொள்ளலாம். ஆண்களுக்கோ ஹிந்து சட்டமும் சமாஜமும் அனுகூலமாகவே இருக்கின்றதன்றோ! பெண்கள் கதியே அதோகதி! புண்ணிய பூமியெனும் நம் தேசத்திற்கு இத்தகைய அநியாயம் தகுமோ?

 

நம் ஹிந்து சமாஜத்தில் பெண்களுக்கு வித்தைக்குத்தான் அருகத்துவம் இல்லை, ஐசுவரியத்திற்காவது சுதந்தரம் உண்டோ? அதுவுமில்லை. பெண்ணுக்குப் பிதுர் ஆஸ்தியில் யாதொரு உரிமையும் கிடையாது. எந்தநாள் அவள் மணம் முடி இன்றதோ, அந்த நாளே அவள் தன்தாய் வீட்டுக்குஹக்கை இழந்து, வேறு ஒரு குடும்பத்தவளாகின்றனள் புருஷன் ஆஸ்திக்கும் அவளுக்குச் சுதந்தரமில்லை கணவன் தனக்கு அனுகூலமாயிருந்தால் அவன் சொத்தை அவன் அனுபவிக்கலாம்; இல்லையாயின், அவள் பாடு திண்டாட்டம் தான். புருஷன் இறந்து விட்டாலோ, துக்கத்துக்கு பாத்தியம் மனைவி; சொத்துக்கு பாத்தியஸ்தர் பின்ளை பங்காளிகள்! கைம்பெண்ணின் கொடுமையைக் கூற வேண்டியதே இல்லை. பந்து மித்திரரும் அவளை அகிட்ட மென, அவன் முகத்தில் விழிக்கவும் அஞ்சுவர். பேழைக்குள் இருக்கும் பாம்பென அவள் அஞ்சி பதுங்கி, யாதொரு நிருவாகமுமின்றி, தவிக்க வேண்டியதாகின்றது. சுய சம்ரக்ஷனைக்கோ, அவளுக்கு வித்தையுமில்லை, சக்தி சாமர்த்தியமுமில்லை. அவள் வாழ்நாளே வீண் நாளாகின்றதன்றோ! வித்தை, தானம், சக்தி இவைகளுக்கு முதன்மையாக சரஸ்வதி, லக்ஷபமி, துர்க்கா பூஜிக்கப்படும் நம்பாத நாட்டில், அக்தேவதைகளின் அம்சங்களான பெண்கள் கல்வி ஆதாரமோ பொருள் ஆதாரமோவின்றி, திடமின்றித் திராணி குன்றி, அசக்தராய், நிர்ப்பாக்கிய ஸ்திதியிலிருப்பது பரிதமிக்கத்தக்கதன்றோ? இதுவோ நம் ஹிந்து சனாதன தர்மம்!


ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 

 

 

ஹிந்து வான சாஸ்திரம்

 

அன்புமிக்க ஆனந்தபோதினி பத்திரிகாசிரியர் அவர்களுக்கு


      ஐயா,

 

எனக்கு வான சாஸ்திரத்தில் மிக்க பிரியம் உண்டு; அதைப் பற்றிய புத்ததம் எது அகப்பட்டாலும் அதை உடனே வாசித்துப் பார்த்து அதன் விஷபங்களை கிரகித்துக் கொள்ள முயற்சிப்பது என் வழக்கம். இவ்வாறிருந்து வரும் நாளில், ஹிந்து வான சாஸ்திரத்தைப் பற்றிய பற்பல விஷயங்களையும், ஆங்காங்கு பற்பல புத்தகங்களில் யான் கண்ணுறும்படி நேரிட்டது.
 

அவைகளில் ஆரிய சித்தாந்தப்படி, பூமியானது துருவ சூத்திரம் என்இற அச்சில் புரளுவதால் தினந்தோறும் இரவு பகல் உண்டாவதாகவும், இன்னும் சில புத்தகங்களில் (உதாரணமாக வராஹமிரர் இயற்றிய பஞ்ச சித் -தந்திகாவில்) ககோளச்சுழற்சியினால் தான் இரவு பகல் உண்டாகின்றனவென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

 

மற்றபடி எல்லா இந்து வான சாஸ்திரங்களிலும் கிரகங்களெல்லாம் பூமியைச் சுற்றி வருவதாகவே சொல்லப்பட் டிருக்கின்றன.

 

அதற்கு வேண்டிய கணக்கு முதலியவைகளையும் அநேக நூற்றாண்டுகலுக்கு முன்னரே நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்களாதலால், அதற்குரியகணித சாஸ்திரங்களையும் அவர்கள் அக்காலத்திலேயே ஏற்படுத்தி யிருக்கிறார்கள்

 

இவைகளை யெல்லாம் ஊன்றி நோக்குங்கால், ஒருவிதத் துணைக்கருவியின் உதவியுமின்றி நம் முன்னோர்கள் இத்துணைக் கணக்குகளையும் எவ்வாறுதான் கணக்கிட்டனரோ என்ற ஐயமும், தற்காலத்தில் மேனாட்டார் தற்போது தான் கண்டுபிடித்ததாகக்கூறும் வானசாஸ்திர விஷயங்களில் அநேகவிஷயங்கள் அவர்களுக்குத் தெரியாமலிருர் திருக்கவில்லை யென்பதும் நன்கு புலப்படுகின்றன.

 

தவிர கிரகசாரம், கிரகஸ்புடம் முதலியவற்றிற் கென்று அவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள கணக்குகளை உற்றுநோக்குங்கால், சந்திரன் ஒன்று தவிர புதன், சுக்கிரன், பூமி முதலிய கிரகங்களெல்லாம் சூரியனைச் சுற்றி வருவதாக ஏற்படுகின்றதே யொழிய பூமியைச் சுற்றிவருவதாக ஏற்படக்காணோம். அவ்வாறிருக்க சூரியன் முதலிய கிரகங்களெல்லாம் பூமியைச் சுற்றி வருவதாக ஏன் சொல்லப்பட்டிருக்கிறது என்று யான் நினைத்து, அதற்கு மாறாகவுள்ள சூரியனை ஸ்திரமாக வைத்து அதன் ஆகர்ஷ்ண வசத்தால் மற்றைய கிரகங்களெல்லாம் அதைச்சுற்றி வருகின்றன என்ற விஷயத்தை அவர்கள் பழைய கிரந்தங்களில் எங்காவது சொல்லாமலிரார்கள் என்றும், நம் கண்ணுக்கு சூரியன் பூமியை வருடமொருமுறை சுற்றிவருதாகத் தோற்றுகிற தோற்றத்தையே அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும், ஆகையால் இப்போது தான் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் விஷயங்களெல்லாம் அவர்கள் அக்காலத்திலேயே நன்கறிந்திருக்க வேண்டும் எனவும் யான் கருதி, அதைப் பற்றிபற்பல பெரியோர்களிடம் கேட்டும், புத்தகங்களில் பார்த்தும் இன்றளவும் அதன் விஷயம் ஒன்றும் புலப்படாமலேயே இருந்தது.

 

இப்படியிருக்க இன்றைய தினம் தற்செயலாய் தங்கள் பழைய ஆனந்தபோதினி சஞ்சிகைகளில் ஒன்றாகிய தொகுதி 6 - பகுதி 4 க்குச் சரியான சென்ற இரௌத்திரி வருஷத்திய ஐப்பசி சஞ்சிகையில் பிரம்மஸ்ரீ சிவானந்த சாகர யோகீஸ்வரர் அவர்களால் எழுதப்பெற்றுள்ள "இல்லறம் - கிரகண காலபலன்'' என்ற மகுடம் பூண்ட வியாச மொன்றை யான் கண்ணுறும்படி நேரிட்டது.

 

அச் சஞ்சிகையில் 142 வது பக்கத்தில் 2 - வது பாராவின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் பின்வருமாறு.

 

"இது நூதன வான சாஸ்திரிகளின் கொள்கையென்று சிலர் கருதக்கூடும். அங்ஙனமன்று; சில தேசத்து வானசாஸ்திரிகள் சூரியன் தந்நிலையில் தானே சுற்றிக்கொண்டே நிற்கிற தென்றும் மற்றைய கிரகங்களெல்லாம் அதைச்சுற்றி ஓடுகின்றன என்றும் கூறுவார்கள். சிலர் பூமி நிலையாக நிற்கச் சூரிய சந்திராதிகள் அதைச்சுற்றி ஓடுகின்றன வென்றும் கூறுவார்கள். நமது தேசத்தில் இவ்விருவகைக் கொள்கைகளும் உண்டு. முக்கியமாகச் சூரியன் தன்னிலையிற் பிரியாது சுழன்று கொண்டே நிற்கின்ற தென்றும், மற்றைய கிரகங்கள் அதன் வேகத்தால் சுழற்றப்பட்டு அதைச் சூழ்ந்து செல்கின்றன வென்பதுமே கொள்ளப்படும். இது வேத சம்மதமாம்.''

 

இதனைக் கண்ணுற்ற எந்தனுக் குண்டான மட்டற்ற மகிழ்ச்சியை யார்தான் அளவிட்டுக் கூறவியலும். மேற்படி வாக்கியங்களினின்றும் தற்போது மேனாட்டார் கூறும் விஷயங்களனைத்தும் அநாதியான நம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிற தென்பது வெள்ளிடைமலை போல் விளங்குகின்ற தன்றோ.

 

ஆனால் இவ்விஷயங்களை யெல்லாம் நன்குணராமல் நம் நாட்டார் பலர் பிடிவாதத்தையே மேற்கொண்டு பூமி ஸ்திரமாக ஆசையாம லிருக்கிறதென்றும் இரவு பகல் கூடக் கோளச் சுழற்சியினால்தா னுற்பவிக்கின்றன வென்றும் வருஷத்திற் கொருமுறை சூரியனே பூமியைச் சுற்றிவருகிற தென்றும், பூமி சூரியனைச் சுற்றுவதாகச் சொல்வது எந்த சாஸ்திரத்திலும் சொல்ல வில்லை யாகையால் அது மேனாட்டார் சொல்லும் புதுமையான கற்பனை யென்றும் சொல்லித் திரிகின்றார்கள்.

 

இஃதிங்ஙனமாக மேற்படி வியாசத்தை வெளியிட்ட பிரம்மஸ்ரீ சிவானந்த சாக யோகீஸ்வரர் அவர்கள் தயவு கூர்ந்து சிரமத்தைப் பாராட்டாமல் மேற்படி விஷயம் வேதசம்மதம் என்பதற் காதாரமாகவுள்ள அவ்விஷயம் எந்த வேதத்தில் எவ்விடத்தில் கூறப்பட்டிருக்கிற தென்பதையும் இன்னும் இந்து வான சாஸ்திரத்தைப் பற்றிய பெருமைகளையும் விவரமாக வெளியிடுவாரேல் என் போன்ற அநேகர் அவருக்கு மிக்க நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருப்பது மன்றி மேற்படி பிடிவாதக்காரர்களின் வாயையடக்க அஃதோர் தகுந்த மருந்துமாகு மெனவும் யான் கருதுகின்றேன்.

ஆகையால் இவ்விஷயத்தைக் குறித்து பிரம்மஸ்ரீ சிவானந்த சாகரயோகீஸ்வரர் அவர்கள் கூடிய சீக்கிரத்தில் தங்கள் ஆனந்தபோதினி பத்திரிகை மூலமாய் ஒருவியாசம் வெளியிடுவாரென் றெண்ணி இவ்வியாசத்தையான் வரைந்துள்ளேன்.

 

இதில் ஏதேனும் குற்றமிருப்பினும் அதைக்கருதாது நீக்கிக் குணத்தையே கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
 

இங்ஙனம், தங்கள் உண்மையுள்ள

கோ. ஸ்ரீனிவாஸய்யங்கார்

புத்தா நத்தம், 3-11-1928

 

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴