Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ கோபால கிருஷ்ண கோகலே

 

 குவலயத்தில் எத்தனையோ கோடி சீவராசிகள் தோன்றுகின்றன. ஆயினும் அவற்றுள் மானிடப்பிறவியே சாலச் சிறந்ததாகின்றது. இப்பிறவிக்கு அவ்வுயர்வு வருவது உருவத்தாலல்ல; வேறு எக்காரணத்தாலுமன்று. அதுபகுத்தறிவுடன் பொருந்திய மனவலிமையைக் கொண்டே கருதப்படுகின்றது. உலகிற் பிறந்த மனிதன் மானத்துடன், ஈனத்திற் கிடங்கொடாது, செய்வன செய்து, சீருஞ்சிறப்பு மெய்தி, நாடாகிய வீட்டில் நம்முடன் வாழ்வார்க்கு நன்மையே புரிந்து, மறந்தேய மகேசனடிச் சுவடுகளையடைய வேண்டுமென்பதே பெரியோர் துணிவு; அதுவே இப்பிறப்பெடுத்தலின் பயனுமாம். இவ்வுண்மையை நாம் எத்தனையோ இடங்களில் பெரியோர் வாய்க் கேட்டிருக்கிறோம்; பனுவல் பலவற்றிலும் படித்திருக்கிறோம். ஆனால் இதைநாம் உணர்ந்தும் அலட்சிய மேலீட்டினாலோ, அஞ்சாமையின்மையாலோ, மாக்கள் போலாயினோம். தம் கடமையை யுணர்ந்து தேசத்தொண்டியற்றிய பெரியாரின் சரிதங்களை யித்தலையங்கத்தின் வாயிலாக வரைவதால், நம்மிடத்திலிருந்தும் இறந்தது போன்றுள்ள தேசாபிமானம் சிறிதளவாகிலும் பயனுட னெழுமென்பதே எமது கருத்து.

 

1. பிறப்பும் கல்வியும்.

 

ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலே பல விஷயங்களில் ஏனைய தலைவர்களைக் காட்டிலும் சிறந்த தொண்டியற்றியவர்; தேசத் தொண்டே தெய்வத் தொண்டென்றியம்பியவர். இப்பெரியார் 1866 - ம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தைச் சார்ந்த கோலாப்பூரை யொட்டிய ஓர் குக்கிராமத்தி லவதரித்தார். இவர் மகாராஷ்டிர பிராம்மண மரபில் கௌணிய கோத்திரத்தவர். புகை வண்டிப் பிரயாணத்திற்கு ஆயத்தமாகு மொருவனைப் போல இவர் பிறந்தது முதல், தாம் ஏதோ இந்த உலகத்தில் அவசரமாகச் செய்யவேண்டிய அறத்தொண்டு பல உண்டென மதித்து அதிக சுருசுருப்புடன் கல்வி பயின்றார்; கோலாப்பூரிலேயே படித்துச் சிறு கலா குமாரப் பரீக்ஷையில் 1882 – ல் தேர்ந்தபிறகு, பம்பாய் நகர எலியின்ஸ்டன் கலாசாலையிற் சேர்ந்து, 1886 - ல் கலாகுமாரப் பரீக்ஷையில் (பி. ஏ) விசேஷ அம்சம் பெற்றுத் தேர்ந்தார். அறியாமையைப் போக்க வந்தவரிவரென்னு மறிகுறிகள் பல இவரிடம் இளமையிலேயே காணப்பட்டன. முறைக்கல்வி யொருவாறு முடிவடைந்த பின்னர் கோகலே குற்றமற்ற, அறிவூட்டும் ஆசிரிய வேலையே பெரிதென்றெண்ணினார். அக்காலத்தில், தியாகமூர்த்திகளான பல தெய்வீகப் புருடர்களால் நிறுவப் பெற்றிருந்த டெக்கான் கழகம் இவரை அன்புடன் வர வேற்றது. பின்பு  பூனா பர்கூஸன் கலாசாலைச் சரித்திர ராஜீய ஞான பாட ஆசிரியராக எழுபது ரூபாய்ச் சம்பளத்தில் இருந்து இருபதாண்டுகள் வரை அக்கலாசாலையின் நன்மைப் பெருக்கைப் பல துறைகளிலும் பெருக்கித் திரிகரணசுத்தியுடன் உழைத்து வந்தார்.

 

 

 

2. உழைப்புக்குத்தக்க ஊதியம்.

 

நிஷ்களங்கராய் உண்மையாக உழைத்து வந்த கோகலே சில ஆண்டுகளுக்குப் பிறகு புனா பர்கூஸன் கலாசாலை நிர்வாகியாகவும், தலைமை உபந்நியாசகராகவும் நியமிக்கப்பட்டார். அவாடியில் வாசித்த மாணவரெல்லாம் சுயமரியாதை, தம் நாட்டபிமானம், அஞ்சாமை முதலியவை பெற்று ஆற்றலுட னெழுந்தனர். கேவலம் ஜீவனார்த்தமாக உத்தியோக வேட்டையை ஓம்பும் கல்வி, அக்கலாசாலை வீரனுக்கு முன்னின்று தோல்வியுற்று, புனாகல்வியிலாகாவிற்கே கப்பங்கட்டி வந்தது. ஒழுக்கத்தையும், விசால ஹிருதயத்தையும் கோகலே அக்கலாசாலை மாணவரிடத்தில் பருவத்தே பயிர் செய்து வந்தார். அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களில் பெரும்பான்மையோர் அவரைப் போன்றே தாய் நாட்டுத் தொண்டில் தலை சிறந்தனரென்னில், அக்கழகத்தின் பெருமையை நாம் எவ்வாறு புகழுவோம்? கோகலே கழகக் காரியங்களுடன் தேச கைங்கரியத் துறையில் அடுத்தடுத்துத் தமது கவனத்தைச் செலுத்தினார். இவர் பூனாவிலிருந்தமையால் ஸ்ரீ மகாதேவகோவிந்த ரானடேயின் நட்பு கற்றாரைக் கற்றாரே காமுறு'வது போல் இவருக் கேற்பட்டது. அவருடைய பேருதவியால் கோகலே ராஜீய ஞானநூலாராய்ச்சிகள் பல செய்து வந்தார். இந்நூல்களின் உயர்வைப் போம்றிப் பல அறிவாளிகள் தாமதியாது கோகலேயவர்களைப் பம்பாய் மாகாணத்திலிருந்த பெரியார் கூட்டத்துக் கூட்டி வைத்தனர். 1887 - ம் வருடத்தில் ஸ்ரீரானடேயவர்களின் விருப்பத்திற்கிசைந்து கோகலே சர்வஜன சபை பிரசுரித்து வந்த புனா வருட நான்முறை வெளியீட்டின் ஆசிரிய பதவியை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் தக்ஷிணதேச சபையார் கோகலேயவர்களை அச்சபையின் கௌரவக் காரியதரிசியாயிருந்து நிர்வாகத்தை நடத்திவர வேண்ட, அவரும் பாக்கியமென ஏற்றுக்கொண்டார்.


3. உண்மைத் தொண்டிற்குரிய கௌரவம்.

 

தலைவரென உள்நோக்க மொன்றாகவும், வெளி நோக்கம் வேறொன்றாகவும் கொண்டு எழுந்த பல இக்காலத்தவர்கள் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்துடன் கிளம்பி, சிறிது பொய்ப்புகழெய்தி, மனத்தினிடை கொண்டுள்ளதங்கருத்தாகிய சுயநலம், தலைவர் சமூகத்திற்றழைக்காமையால் மங்கிப், பொது ஜனங்களால் வெறுக்கப்பட்டு நிற்றல், எந்த நாட்டுச் சரித்திரத்திலும் எத்தனை யெத்தனையோ உண்டு; ஆனால் உண்மைத் தொண்டர் ஒரே நிலையாக வாழ்வின் மாலைக்காலம் வரையில் வளரும் புகழெய்துகின்றனர். அவ்விதம் கோகலேயின் தனக்கென வாழாத்தன்மையால் அவர் பம்பாய் மாகாண அரசாங்க ஆலோசனைச்சபையின் ஓர் உருப்பினரானார்; புனாவில் 1895 - ல் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸின் காரியதரிசிப் பதவிக்கும் இவரே தகுந்தவரெனத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தக்ஷிணதேசத்தின் 'கைங்கரிய பிரகாச சந்திரிகா' என்று தக்ஷிண வானத்தி லுதித்தெழும் வான்மீனெனக் கொண்டாடப் பெற்றார். நாளுக்கு நாள் அவருக்கு தெக்ஷிணத்தில் (டெக்கான்) செல்வாக் கதிகரித்து வந்தது.



 

 

4. நாட்டின் நன்மைக்கு நவின்ற நல்லுரை.

 

நாடு நல்லாரையே நாடி நிற்கின்றதாதலால் இங்கிலாந்தில் இந்திய ஆட்சி முறையின் நிர்வாக விஷயங்களைக் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப் பெற்ற 'வெல்கமிஷ' னில் நல்லுரை கூறக் கோபாலகிருஷ்ணர் வாச்சா (Wacha) முதலான பெரியார்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோகலே 1897 - ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அரிய சாக்ஷியங் கொடுத்த பலருள்ளும் கோகலே கணக்குப்படித் திட்டங்களை எடுத்துக் காட்டி, தமது அரசியல் ஞானத்தை அதில் நாட்டி, அத்தருணமே இந்தியா ஏற்ற சௌகரியமடைய வேண்டுவதைச் சுட்டி, இந்திய அரசியல் ஞானத்தை அவர்களுக்கூட்டி, பெரும்புகழீட்டி வந்தார். இக்கமிஷனில் பிரதமரான தாதாபாய் நௌரோஜியே இவரைக் கட்டித் தழுவி, தங்களைப் படைத்த தாயின் குறை அரிதினீங்கும்' என்றியம்பினாரென்னின் இவர் பெருமையை என்னென்போம்!

 

5. எங்கும் சொன் மாரி.

 

ங்கில நாட்டில் ஸ்ரீ கோகலே சாக்ஷியஞ் கூறிய பின்னர் பல இடங்களிலும் உள்ளவர் இவரை வரவேற்று உபந்நியாசிக்க வேண்டினர். ஒவ்வொரு நகரத்தாரும் இவரை வரவேற்று உபசரித்து விருந்தளித்தனர். அவர்ஆங்காங்கு இந்திய விஷயமாகப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தனர். அவற்றில், இந்திய அறிவாளிகள் பல வழிகளிலும் தலையெடாதபடி அடக்கப்படுதலையும், கைத்தொழி லபிவிருத்தியில் மக்களை அரசாங்கத்தார் ஊக்காதிருந்த குறையையும், 'பிளேக்' என்ற 'எலி விழுநோய்' பம்பாய் மாகாணங்களிற் பரவுங்கால் இந்தியப் போர்வீரர்கள் மக்களுக்கு உதவி செய்வதாக நடித்து, அவர்களைத் துன்புறுத்தி அவர்களுடைய பொருளைக் கொள்ளை கொண்ட அநீதியையும், அவர் சிறிதும் அச்சமின்றிப் பகிரங்கமாக எடுத்துணர்த்தினார். இதனால் இவர் கூறுவது மெய்யென்றுணராத சிலர் இவரை நிந்திக்க நேர்ந்தது. ஆனாலும் உண்மையை உள்ளவாறெடுத்துக் கூறுவதில் ஸ்ரீ கோகலே சிறிதும் அஞ்சினாரில்லை.

 

இவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும், இவருடைய சொற்பொழிவுகள் குற்றமுள்ளவையெனப் பம்பாய் மாகாண அரசாங்கத்தார் இவரை வாதுக்கிழுத்தனர். பயந்த சுபாவமுள்ள அக்காலத்தலைவரிற் சிலர் அதற்கு உட்கையாயிருந்தும், சிலர் இவரைச் சார்ந்து தர்க்கிப்பதற்கு அஞ்சியும் வாளாவிருந்தமையால் ஸ்ரீ கோகலே துரைத்தனத்தாரை மன்னிப்புக் கேட்டலைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமற் போயிற்று.

 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் பம்பாய் சட்டசபைக்கு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1902 -ம் ஆண்டில் இவர் புனா பர்கூஸன் கலாசாலைத் தலைமையாசிரியர் (Principal) பதவியினின்றும் மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளத்துடன் நீங்கி, பம்பாய் உயர்தர சட்டசபை (Superior Legislative Council) க்கு பிரோஷிஷா மேதா என்பவரின் ஸ்தானத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.



 

6. விவேக போதம்.

 

இந்நிலையே இவருடைய பேராற்றலை விளக்கும் பெருமைக் காதாரமாயுள்ளது. 'அரசாங்க வரவு செலவு திட்டம்' என்ற விஷயத்தைப் பொது ஜனங்களுக்கு, மூடனும் உணரும் வகையில் எடுத்துக்காட்டி உணர்ச்சியளித்தவர் இவரே. இவர் பேசு மிடங்களிலெல்லாம் செலவு திட்ட விஷயமே சிறந்து நின்றது. வாய்க்கணக்கால் இவர் வரவு செலவின் விஷயங்களை வாய்ப்பக் கூறி அவற்றிற்குச் சீர்திருத்தம் வேண்டியது அவசியமெனச் சித்தாந்தப்படுத்துவார். இதனால் தேசத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. இராஜீய நடவடிக்கைகளைத் தக்க முறையில் மாற்ற வேண்டு மென்று இவர் கூறியதைப் புகழாதார் இலர். வருஷா வருஷம் வரியதிகரிப்பதையும், அதனால் தேசநலஞ் சிறிதும் பெருகாதிருப்பதையும் இவர் கண்டித்துப் பேசினார். இந்தியர்களுக்கே உத்தியோகங்கள் கொடுக்க வேண்டு மென்றும், படைச் செலவு, ஆங்கிலேய அதிகாரிகளின் அதிகச் சம்பளம், லாகிரி வரிகள் ஆகிய இவற்றைக் குனறத்து, விவசாய அபிவிருத்தி, கைத்தொழிற் கல்விப் பெருக்கு, கட்டாய இலவச ஆரம்பப் படிப்பு முதலியவற்றிற்காக அப்பணத்தைச் செலவிட வேண்டுமென்றுங் கூறினார். செலவு திட்டத்தைக் கணக்குப்படி செய்ய ஏற்றவகையில் பொருத்திக் காட்டினார். அதனால் இவரது புகழ் ஓங்கிற்று. ஆனாலும், இவருடைய சீர்திருத்தங்களெல்லாம் அக்காலத்திய அரசாங்க நிர்வாகிகளால் ஏற்கப்படவில்லை. கனந்தங்கிய இராஜப் பிரதிநிதி கர்சன் அவர்கள் பல தடவை தர்க்கித்தும் கோகலேயின் நோக்கங்களே தலை சிறந்து நின்றன. சர்வகலாசாலை வித்யாபிவிருத்தி விஷயமாய் சில சீர்திருத்தங்களைக் கோகலே நிறை வேற்றிக் கலைமகளுக்குத் தமது தொண்டையியற்றினார். அரசாங்க அந்தரங்க திட்டத்தை (Official Secrets Bill) யும் இவர் எதிர்த்தார்.


7. உண்மைக்கே ஓயாத புகழ்.

 

ஸ்ரீ கோகலே, சட்டசபையில் நிறைவேறியும், நிறைவேறவு மிருக்கும் ஒவ்வொரு சட்ட திட்டத்தையும் ஊடுருவிப் பார்த்து அவற்றிலுள்ள பதார்த்தங்களைப் பக்குவமாக மாற்ற மனங்கொள்வார். அச்சட்டம் நிறைவேறுவதால் நேரவிருக்கும் சாதக பாதகங்களைச் சரியாகத், தர்க்க முறையில் நிர்ணயித்துப் பேசுவார். இராஜப்பிரதிநிதி இவருடைய புத்தி நுட்பத்தையுந் திட்பத்தையுங் கண்டு வியந்து "இவரிடத்தில் தெய்வீகத் தன்மை தோன்றுகிறது" என்று வாய்விட்டுப் புகழ்வார். ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுங்கூட கோகலேயை மட்டும் புகழ்ந்து அவரைச் சாத்தியசந்தன் என்றும் போற்றுவர். 'கோகலேயுடன் பேசுவதற்கே நான் இச்சைகொள்ளுகிறேன். இத்துணைச் சிறந்த அறிவாளியை நான் எங்கணுங் கண்டதில்லை' என்று கூறி, இவர் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வந்ததையும் பொருட் படுத்தாது அரசப்பிரதிநிதி இவருக்கு இந்திய நாட்டியல் வீரர் [C. I. E] என்ற பட்டமளித்தனரென்னில் இவருடைய உண்மைக்கேயுள்ள ஓயாத புகழை உரைக்க வல்லார் யாரே.

 

 

 

 

8. காங்கிரஸ் தொண்டே காட்டுநல் வீடு.

 

‘காங்கிரஸ் எழுவாயே காட்டுந் தேசப்பயனிலையை' என்பது ஸ்ரீ கோகலேயின் சித்தாந்தம். இவர் காங்கிரஸில் சேர்ந்து அதன் வளர்ச்சிக்குப் பெரிய காரண பூதராயிலங்கினார். 1904 -ல் பம்பாயில் நடந்த காங்கிரஸில் அமிதச் செலவு என்பது பொருளாக கோகலே ஓர் சொற் பொழிவு நிகழ்த்தினார். இதைக் கேட்ட பல ஐரோப்பியர் இவரைச் சீமைப்பாராளுமன்றச் சொற்பொழிவாளரெனப் போற்றாநின்றனர். 1905 -ல் பம்பாய் மாகாணப்பொது ஜனங்கள் 'இந்தியாவின் ராஜீய நிலையை' எடுத்துக்கூற இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துச் சீமைக் கனுப்பினர். இவர் அங்கு
ஐம்பது நாட்கள் தங்கி அரிய அநேக பிரசங்கங்கள் செய்து திரும்பினார். இந்தியாவின் இராஜரீக நிலையை இப்பொழுது தான் நாங்கள் உண்மையாக அறிந்தோம். இதுவரையில் இத்துணை விளக்கமாக எங்களுக்கு எவரும் எடுத்தோதியதில்லை. 'என்றனர் ஐரோப்பிய இராஜதந்திரிகள் பலர். ஸ்ரீ கோகலே மேல் நாட்டிலிருந்து திரும்பியதும், 1905 - ல் காசிமா க்ஷேத்திரத்தில் நடந்த21 - ம் அகில இந்திய காங்கிரசுக்கு அக்கிராசனம் வகித்தார். சீமையில் அதிக தீவிரமாகப் பேசியதால் ஸ்ரீ கோபால கிருஷ்ணருக்குத் தொண்டையில் ஓர்புண்தோன்றி அவரைப் புண்படுத்தியது. ஆயினும், தாயன்பு ஆற்றலருள, இனியவை மிகப்பேசி, அச்சபையை அலங்கரித்தார் கோகலே.


9. காங்கிரஸ் தலைமை.

 

வாரணாசி நகரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் 21 - வதுமகாநாடு 1905- ம் ஆண்டு டிசம்பரில் கூடிற்று. அதற்கு கோகலே தலைமை வகித்தார். ஸ்ரீ கோகலே அக்கிராசனர் விரிவுரையில் தாமிதுவரை செய்துவந்த ஊழியத்தையும், இனிச் செய்தற்குரிய சிறந்த கைங்கரியத்தையும் விளக்கிக்கூறி, அரசாங்கத்தாரிடத்தில் அடிக்கடி தமது தாய் நாட்டின் குறைகளை எடுத்துரைத்து, அவற்றிற்கு விமோசனம் தேடுதல் அவசியமென்பதைச் சிறு குழந்தையும் இது கானமோ வென்று இன்புற்றுக் கேட்கும் வகையில், எளிய நடையில், இனிய குரலிலெடுத்துப் புகன்றார். நம்மில் பலர் நம்முடைய தேசத்தொண்டிற்கே தமது உடல் பொருளாவி மூன்றையும் தியாகம் செய்து, தேசத்தொண்டே சிறந்ததென வெளி வரவேண்டுமென்று கூறினர்; கொள்கை பேதத்திற்காகவும், போலிப் புகழுக்காகவும், காங்கிரனின்று பலர் விலகிக் கொள்வதை இவர் கண்டித்தும், காங்கிரசுக்குள்ளேயே, பெரும்பான்மையோரின் அபிப்பிராயத்தைத் தழுவிச் செல்ல வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.

 

10. சில அரிய தோற்றங்கள்.

 

இவர் முடுக்காகப் பேசின காலங்களெல்லாம் அந்தோ! விரைந் தேகின. வந்தது! வந்தது! மூப்பு. கோபாலக் கண்ணர் கோற் கண்ண ராயினார். ஆடிப்பாடித் தாயின் பெருமைக் குழைத்தகாலம் போய் அவர் தெருத் திண்ணையிலுட்கார்ந்து வேதாந்தம் பேசும் அந்திய (வயோதிக காலம் ஆதிக்கம் பெறுவதாயிற்று. புனாவிலிருந்து கொண்டு 'தயன் பிரகாஸம்' என்ற ஓர் வாரமராத்திய மலரை விரித்தார். அதன் மணம் மகராட்டிரதேசத்தின் மான்மி யத்தைப் பெருக்கிற்று.

கோகலே அலறிப் பேச அறியாதவர். அவருடைய சொற்பெருக்குகள் யாழிடைப் பிறவா இசையே போன்று இன்பம் பயந்தவை. அவர் மனமே அவருக்கொரு கோயிலா யிருந்தது. அவர் மனமென்ற பதியில் இந்தியக் கோயிலைக்கட்டி, தாயென்ற தெய்வத்துக்குத் தண் பணியாற்றி, தேவர்களிடத்தில் தம் பெருங் குறையை யெடுத்துரைப்பவர் போல் வானுலகம் புக்கு வள்ளலாயினார். அன்புடன் தாய் பணியாற்றின் அத்தாயின் மேன்மை தழைக்குமன்றோ!

ஸ்ரீ லக்ஷ்மீ காந்தன்.

 

ஆனந்த போதினி – 1927, 1928 ௵ -

டிசம்பர், ஜனவரி ௴

 


 

 

 

 

No comments:

Post a Comment