Monday, September 7, 2020

 

வேதாந்த சாரங்கிரக வசனம்

தொகுப்பு

பூ. ஶ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

 

மாத இதழ்

1926 செப்டம்பர் முதல் 1929 அக்டோபர் வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

முன்னுரை, 7

மங்கலம். 7

நூல். 8

நுபந்த சதுஷ்டயம். 8

அதிகாரி. 8

விஷயம்.. 9

சம்பந்தம்.. 9

பிரயோஜனம்.. 9

சாதன சதுஷ்டயம். 9

நால்வகைச் சாதனங்களாவன.. 10

கர்ப்பவாசம்.. 12

பால்யம்.. 12

குமாரப்பருவம்.. 12

யௌவனம்.. 12

விருத்தாப்பியம்.. 12

மரணகாலம்.. 13

மரணாந்தரம்.. 13

(கிருகஸ்தனுக்குப் பட்டுப்பூச்சி உவமை) 15

தனத்தா லுண்டாந் தீமைகள். 20

பிரம்மசரியம்.. 26

அஹிம்சை...... 26

கபடமின்மை....... 26

வைராக்கியம்.. 26

பரிசுத்தம்.. 26

இடம்பமின்மை....... 27

சத்தியம்.. 27

மமகாரமின்மை....... 27

நிச்சலத்தன்மை () உறுதி.. 27

அபிமான மின்மை....... 27

ஈசுவாதியானம்: 27

ஞானிகளின் கூட்டுறவு: 27

ஞான நிஷ்டை....... 27

சமபுத்தி.. 28

கௌரவம் விரும்பாமை....... 28

ஏகாந்த வாசம்.. 28

மோக்ஷ வாஞ்சை...... 28

(2) தமம்: 28

'சமம் அகக்கரண தண்டம் தமம் புறக்காண தண்டம்' 28

(3) தீதிக்ஷை: 30

சந்நியாச லக்ஷணம்.. 31

பிரம்மம் உற்பத்தியில்லாதது.. 31

பிரம்மம் அடையப்படுவதன்று.. 32

பிரம்மம் செவ்வை செய்யப்படத் தக்கதன்று.. 32

சமுச்சயவாத கண்டனம். 34

சங்கை 1 34

கர்மம் ஞானத்திற்கு உதவியாகாது. 34

சங்கை 2 35

சங்கை 3 38

சங்கை 4 39

சிரத்தை. 39

முமுக்ஷத்துவம். 41

தீவிரம்.. 41

மத்திமம்.. 41

மந்தம்.. 42

மந்ததாம்.. 42

குருவினிலக்கணம். 44

மித்தியாத்துவ நிருபணம். 48

ஆத்மானாத்ம விவேகம். 49

அத்தியாரோபம்.. 50

ஜீவசொருபம். 53

உலக சிருஷ்டி. 55

விஞ்ஞானமய கோசம். 57

மனோமய கோசம். 58

பிராணமய கோசம். 60

சூக்ஷ்ம பிரபஞ்சம். 60

பஞ்சீகரணம். 62

பஞ்சீகரண சக்கரம். 63

பூதகுணங்கள். 64

இந்திரிய சாமர்த்தியம். 64

இந்திரிய அதி தேவதைகள். 64

பிரம்மாண்ட சிருஷ்டி. 66

விராட்டு விசுவர்கள். 66

அன்னமய கோசம். 67

ஆத்ம நிருபணம். 68

அஞ்ஞான நிவிர்த்தி, 75

புத்திராத்ம வாதம். 76

தேகாத்ம வாதம். 76

இந்திரியாத்ம வாதம். 77

மன ஆத்ம வாதம். 78

புத்தி யாத்ம வாதம்.. 78

அஞ்ஞானாத்ம வாதம். 79

ஞானாஞ்ஞானாத்ம வாதம். 79

சூனியாத்ம வாதம். 79

சூனியவாத நிராகரணம். 81

ஆத்ம சொருபம். 82

ஆத்மா சத்து. 83

ஆத்மா சித்து. 83

ஆத்மா ஆனந்த வடிவினன். 84

ஆத்மாவின் அத்துவிதத் தன்மை. 88

அபவாதம். 90

'தத்துவம்' பத அர்த்தம். 93

வாச்சியார்த்தம். 94

லட்சியார்த்த நிருபணம். 95

அகண்டார்த்தம். 97

அதிகார நிருபணம்.. 100

சமாதி லட்சணம். 102

ஞான நிஷ்டையிற் கர்மாவினுபயோக மின்மை....... 105

நிர்விகற்ப சமாதி. 106

பாகிய சமாதி. 107

பிரமாதத் தியாகம். 109

யோகம். 110

அஷ்டாங்கம். 110

சமாதி விக்கினங்கள். 111

சீடன் சுவானுபவம். 111

ஞான பூமிகா லட்சணம். 112

சாக்கிர சாக்கிரம்.. 113

சாக்கிர சொப்பனம்.. 113

சொப்பன சாக்கிரம்.. 113

சொப்பன சொப்பனம்.. 113

சொப்பன சுழுப்தி.. 113

சுழுப்தி சாக்கிரம்.. 113

சுழுப்தி சொப்பனம்.. 113

சுழுப்தி சுழுப்தி.. 114

விதேக முக்தி. 114

பின்னுரை..... 116

 


 

வேதாந்த சாரங்கிரக வசனம்

முன்னுரை,

புருஷர்களால் விரும்பப்படுங் காரணத்தால் புருஷார்த்த மெனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் முக்கிய புருஷார்த்தமாயிருப்பது சர்வதுக்க நிவிர்த்தி பரமாநந்தப் பிராப்திவடிவ வீடேயாகும்; அதாவது மோக்ஷமே. மோக்ஷமானது ஆத்மஞான மொன்றானே அடையப்படுவ தன்றிப் பிறவற்றானெய்தப் படுவதன்றாம். இது பற்றியே தாயுமானவரும், 'ஞானமலது கதிகூடுமோ' என்றார். சரியை, கிரியை, யோகம் என்னும் இம்மூன்றும் முறையே அரும்பு, மலர், காய் போல ஞானமாகிய கனியை அடைதற்குரிய சாதனங்களேயாம். அத்தகைய ஆத்மஞானத்தையடையும் நெறிகளையுணர்த்தும் நூல்கள் பல. அவற்றுள் ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் வட மொழியில் அருளிச்செய்த பல கிரந்தங்களுள் ஒன்றாகிய சர்வவேதாந்த சித்தாந்த சாரசங்கிரக மென்னும், இக்கிரந்தமானது மந்தாதிகாரிகளும் எளிதில் உணர்ந்து நற்பயனடையுமாறு, வேதாந்த சித்தாந்தத்தின் சாரங்களை யெல்லாம் திரட்டிச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் புகட்டுவதா யிருத்தலின் தமிழுலகிற்குப் பெரிதும் பயன்படுமெனக் கருதி எளியவசன நடையில் இதை எழுதத் துணிந்தேன். இதனை ஊக்கத்துடன் வாசிக்கும் அன்பர்கள், வேதாந்த சம்பந்தமான முக்கியாமிசங்களை யெல்லாம் எளிதில் உணர்ந்து கொள்வதோடு, இதைவிடப் பெரியவையாகவுள்ள வேதாந்த நூல்களை வாசித்துப் பொருளறியும் ஆற்றலையும் அடைவரென்பது திண்ணம். மூல கிரந்தத்தில் இதற்கு 'சர்வவேதாந்த சித்தாந்த சாரசங்கிரக 'மெனப் பெயரிடப்பட்டிருப்பினும், நீட்சி நோக்கி ‘வேதாந்த சாரசங்கிரக’ மெனப் பெயரிட்டுள்ளேன். நூலில் கூறப்படாத சில விஷயங்கள் அவசியத்தை நோக்கி () இவ்வித பிறைக் குறிக்குள் மேற்கோள்களோடு காட்டப்பட்டிருக்கின்றன.

 

இராணிப்பேட்டை ஸ்ரீ அச்சுதாநந்த ஆச்சிரமத்தில் பிரம்ம நிஷ்டராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமத் சின்மயானந்த சுவாமிகளாகிய எனது ஞானாசிரியரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு இதனையியற்றலாயினேன். இத்தொழிலில் என்னை ஊக்கிய எங்கும் நின்று எவற்றையும் இயக்கும் சர்வசக்தி, இஃது இனிது முடியுமாறும் அருள்புரிவதாக. பிழையுளதேல் உலகம் பொறுக்க.

 

மங்கலம்.

சீரார் கயமுகத்துச் செம்மலைநற் செவ்வேளைத்
தாராருஞ் சங்கரனைச் சக்கிரியைக் - காரார்
மலைமான் கலைமான் மலர்மா னிவரைப்
புலையார் பிறப்பொழியப் போற்று.                                  
(1)

 

அயனரி யானென வாம்பரம் பொருளே

பயனிது வெனவெனைப் பண்புடன் றாச்சின்

மயனென மானிட வடிவுட னாண்டான்

தயவுள வவனடி தலைமிசை யணிவாம்.                             (2)

சங்கரனே சங்கரனா யவத ரித்துச்
            சதுமறையின் முடிப்பொருளைச் சகத்தோர்க்காகப்
      பங்கமறப் பல நூலாப் பகர்ந்திட் டானால்
            பகரவற்றுள் சர்வவேதாந் தச்சித் தாந்தச்
      சங்கிரக மென்னுமொரு நூலியாவும்
            சங்கையற விளக்குமது தான்கண் டன்னான்
      பங்கயத்தா ணினைந்ததனைக் கத்தி யத்தாற்
            பகர்கின்றேன் றமிழதினாம் பரிசி னானே.                      
(3)

 

நூல்.

 

[மங்களாசரணமாக சங்கராசாரிய சுவாமிகளால் இயற்றப்பட்ட சுலோகங்களின் பொருளை மொழிபெயர்ப்பது அவசியமாகத் தோன்றவில்லையாகலின் அவைவிடப்பட்டன.]


 நுபந்த சதுஷ்டயம்.

 

(ஒவ்வொரு நூலிலும் ஆரம்பத்தில் அநுபந்த மிருத்தல் அத்தியாவசிய மாகும் வீடு நாலுகால்களின்றி நில்லாதது போல, சகல கிரந்தங்களும் நான்கு அநுபந்தங்களின்றி இரா'. ஏனெனில் நூலிற்கும் அதை வாசிப்போருக்கும் சம்பந்தத்தை யுண்டாக்குவது அநுபந்தமேயாகும். நூலை முற்றிலும் வாசிக்க வேண்டு மென்னும் விருப்பம் அநுபந்தத்தை வாசிப்பவர்களுக்கு உண்டாகும். இக்காரணத்தால் அது அநுபந்தம் என்னப்படுகிறது. அது நான்கு பிரிவாயிருத்தலால் அநுபந்த சதுஷ்டயம் என்பர்.) இது நூலோடு சேர்ந்த தல்ல. ஆயினும் நூலைத்தொடங்குவதற்குக் காரணமா யிருத்தலால் நூலோடு சேர்ந்ததாகவே கருதப்படும். [ விசாரசாகர டிப்பணி.]

 

(இந்நூலை வாசிக்கத்தகுந்த அதிகாரி யார்? இதில் கூறியுள்ள விஷயம் யாது? அந்த விஷயத்திற்கும் நூலிற்குமுள்ள சம்பந்தம் யாது? அந்த விஷயத்தை அறிவதால் அதிகாரிக்கு உண்டாம் பயன் என்ன? என்னும் சங்கை கிரந்தாரம்பத்தில் உண்டாகும். ஆதலால் இந்நான்கையும் முதலில் நிரூபித்தல் அத்தியாவசியமாம். இவற்றை நிரூபித்துக் காட்டாவிட்டால் கிரந்தாரம்பமே யுண்டாகாது.) ஆகையால் சாஸ்திராரம்பத்தைப் பயனாகவுடைய அநு பந்தசதுஷ்டயம் அறியத்தக்கதாம்.

 

(அதிகாரி, விஷயம், சம்பந்தம், பிரயோசனம் என்னும் நான்கு அநு பந்தங்களும் இங்கு நிரூபிக்கப்படுகின்றன.)

 

அதிகாரி: - நித்தியா நித்திய வஸ்து விவேகம், இகமுத்திரார்த்த பலபோக விராகம், சமாதிஷட்க சம்பத்தி, முமூக்ஷத்துவம் என்னும் நான்கு வகைப்பட்ட சாதனங்களையும் நன்கடைந்துள்ளவனாயும், புத்திசாலியாயும், யுக்தியுள்ளவனாயும், கல்வியறி வுள்ளவனாயுமுள்ள புருஷனே இந்த வேதாந்த கிரந்தத்தை வாசிக்கத் தகுந்த அதிகாரியாவான்.

 

(நான்கு சாதனங்களை யடையாமல் புத்தியுக்தி கல்விகளை மட்டும் உடையவர் வேதாந்த கிரந்தத்தை வாசித்தால் அதில் கூறப்படும் விஷயங்களை நன்ஞணரவும் பிறர்க்கெடுத்துக் கூறவும் வல்லமை பெறுவார்களாயினும், முக்கிய பயனாகிய முத்தியை யடையாராதலின், முத்தியையடைய விரும்புவோர் மேற்கூறிய நித்தியா நித்திய வஸ்து விவேகம் முதலாகிய நால்வகைச் சாதனங்களையும் (சாதனசதுஷ்டயம்) அடைந்தே தீரவேண்டும். இச்சாதன சதுஷ்டயங்களின் அத்தியாவசியம் மேலே கூறப்படும். ஆதலின் ஈண்டு விரிக்கப் படவில்லை.)

 

விஷயம்: - நூலில் சொல்லப்படுவது எதுவோ அது விஷயம் எனப்படும். எல்லா வேதவாக்கியங்களும் எந்த ஜீவப்பிரஹ்மங்களின் ஐக்கியத்தைக் கூறுகின்றனவோ, அந்த ஜீவப்பிரஹ்மங்களின் ஐக்கியமே இந்நூலிலும் கூறப்படுகின்றது. ஆதலால் ஜீவப்பிரஹ்ம ஐக்கிய ரூபமான நிர்க்குணப் பிரம்மமே இந்நூலிற்கு விஷயமாம்.

 

சம்பந்தம்: - ஜீவப்பிரஹ்மைக்கிய மென்னும் விஷயத்திற்கும் அந்த விஷயத்தைக் கூறும் வேதாந்த ரூபமான பிரமாணத்திற்கும் (போத்ய போதக பாவசம்பந்த முள்ளதெனப் பெரியோர் கூறுவர்.

 

(நூலில் கூறப்படும் விஷயம் போத்யம்; அவ்விஷயத்தைக் கூறும் நூல் போதகம். அதாவது இந்நூலால் அறிந்து கொள்ளக் கிடக்கும் விஷயம் ஜீவப் பிரம்மைக்கியம்; இது போத்யம். அந்த விஷயத்தை அநேக பிரமாணங்களுடன் போதிப்பது இந்த நூல்; இது போதகம். ஆதலால் விஷயத்திற்கும் நூலிற்குமுள்ள சம்பந்தம் போத்யபோதக பாவசம்பந்தம். இது பிரதிபாத்தியப் பிரதிபாதக பாவசம்பந்த மெனவும்படும். நூல் பிரதிபாதகம். அது போதிக்கும் விஷயம் பிரதிபாத்தியம். அதாவது விஷயத்தைச் சொல்வது எதுவோ அது (நூல்) பிரதிபாதகம். நூலில் சொல்லப்படுவது எதுவோ அது (விஷயம்) பிரதிபாத்தியம்.)

 

பிரயோஜனம்: - எந்த ஜீவப்பிரம்ம ஐக்கிய ஞானத்தினால் ஜீவன் துக்க வடிவ சம்சார பந்தத்தினின்றும் அப்பொழுதே விடுதலையடைகின்றானோ அந்த ஜீவனும் பிரம்மமும் ஒன்றே என்னும் ஞானமே இந்த நூலின் பிரயோசனமாம். மந்தபுத்தி யுள்ளவனும் பலனை விரும்பாமல் ஒரு காரியத்தில் பிரவேசிப்பதில்லை. ஆதலால் நூலில் பிரவிருத்தியுண்டா வதற்கு அதன் பிரயோசனத்தை யறிதலே காரணமா யிருத்தலின் பிரயோசனம் அவசியம் அறியத்தக்கதாம்.

 

சாதன சதுஷ்டயம்.

 

(அநுபந்த சதுஷ்டயத்தில் முதலாவதாகிய அதிகாரியின் க்ஷணங்களு ளொன்றாகிய சாதன சதுஷ்டயத்தைக் கூறத் தொடங்கி அதன் அத்தியாவசியத்தை முதலிற் கூறுகிறார்.)

 

சாதன சதுஷ்டயத்தை அடைந்துள்ளவனே பந்த நிவர்த்தி வடிவமோக்ஷமாகிய பரமப்பிரயோசனத்தை யடைவன். அவற்றுள் சிறிதேனும் குறைந்திருப்பினும் அந்தப்பிரயோசனத்தை அடையவியலாது. (சாதனங்கள் நான் கையும் அடைந்திராதவன் வேதாந்த விசாரத்திற்கு அதிகாரியாகான். சாதன மில்லாமல் எக்காரியமும் சாத்தியமாகாது. "சாதனமின்றி யொன்றைச் சாதிப் பாருலகில் இல்லை. ஆதலால் இந்த நான்கும் அடைர்தவர்க் கறிவுண்டாகும்'' என்று கைவல்லிய நவநீதமும்,


 ''மேலாஞ் சதுட்ட சாதனங்கள் மேவி நிறைந்த பேர்க குரைக்கின்
 மேலா மதுநா மெனத்திடமாய் விளங்கு மவையில் லாதவர்க்கு
 மேலாம் பரமன் மான்மழுவாய் விளங்கி யுரைத்தும் விளங்காது''


என்று அத்துவித வுண்மையும் கூறுகின்றன.)

 

எந்தச் சாதனங்களை யடைவதால் மோக்ஷம் சித்திக்குமோ, எந்தச் சாதனங்களில்லா விட்டால் முத்தி சித்திக்கமாட்டாதோ அந்த மோக்ஷசாதனங்கள் நான்கென்று பெரியோர் கூறுவர்.

 

நால்வகைச் சாதனங்களாவன: - இது நித்தியவஸ்து, இது அநித்திய வஸ்து என்று பகுத்தறியும் விவேகமே முதற் சாதனமாம்; இகலோநத்திலும் பரலோகத்திலுமுள்ள பதார்த்தங்களை அனுபவித்தல் வேண்டு மென்னும் எண்ணம் இல்லாதிருத்தலே இரண்டாஞ் சாதனம்; சமம், தமம், திதிக்ஷை, உபரதி, சிரத்தை, சமாதானம் என்னும் இவ்வாறையும் அடைந்திருத்தல் மூன்றாஞ்சாதனம்; மோக்ஷத்தை யடைதல் வேண்டும் என்னும் இச்சை நான்காவது சாதனம்.

 

(சாதன சதுஷ்டயங்கள் இவை எனவகுத்துக் கூறியவற்றைப் பின்விரித்துக் கூறுகின்றார்.)

 

(1) நித்தியா நித்தியவஸ்து விவேகம்: - (நித்தியX அநித்திய Xவஸ்து X விவேகம்) 'பரப்பிரம்ம மொன்றே நித்தியமானது; அதற் கன்னியமானவையாவும் அநித்தியம்'' எனத் தெரிந்து கொள்ளுதல் நித்தியா நித்திய வஸ்து விவேகம் எனப்படும்.

 

(பிரம்மம் ஒன்றே நித்தியம்; மற்றையவை அநித்தியம் என்பதை நிரூபிக்கும் பொருட்டு நித்திய அநித்தியங்களின் லக்ஷணம் கூறப்படுகிறது) (எங்கும் எப்பொழுதும் காரணமின்றிக் காரிய முண்டாகாது என்பது நியதி. காரணம் காரியம் என்னும் இவ்விரண்டில் காரணமே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலம் என்னும் முக்காலத்து முள்ளது; காரியம் இறந்த காலத்தும் எதிர்காலத்தும் இல்லாமல் நிகழ்காலத்து மட்டு மிருப்பது. நிகழ்காலத்திலும் வெறும் பெயரும் தோற்றமு மாத்திரமாகவே யிருப்பதன்றிப் பொருளாக இராதது. எனவே காரியமானது அழியுந்தன்மை யுடையது.) திருஷ்டாந்தமாக:

 

குடம் காரியம்; மண் காரணம். குடத்திற்குக் காரணமான மண்ணானது குடம் வனையப் படாததற்கு முன்னும் குடம் உடைந்த பின்னும் உள்ளது. குடமாகவுள்ளது நிகழ்காலத்தும் குடம் என்னும் பெயரும் தோற்றமு மாத்திர மாகவுள்ளதே யன்றி, அந்த நாமரூபங்களைத் தள்ளிப் பார்க்குமிடத்து நிகழ் காலத்திலும் கூட குடம் என்னும் பொருள் காணப்படுவதின்று. ஆகையால் காரணமே முக்காலத்து முள்ளதென்றும், காரியம் முக்காலத்து மில்லாத தென்றும் விளங்குகின்றது. அதுபோலவே, தாஷ்டாந்தத்தில்:

சராசரவடிவப் பிரபஞ்சம் காரிய வடிவாயுள்ளது; இதற்குக் காரணமாயுள்ளது பரப்பிரம்மம். ஆகையால் உலகம் (காரியமாகிய குடம் முதலியவற்றைப் போல்) அநித்தியம். உலகத்திற்குக் காரணமான பரப்பிரம்மம் மண்முதலியவற்றைப் போல நித்தியமானதாகும்.

 

(உலகம் காரியம், பிரம்மம் காரணம். ஆகையால் பிரம்மம் ஒன்றே நித்திய மானது; உலகம் அநித்தியமானது என்பதை வேதப்பிரமாணத்தாலும் அது மானப் பிரமாணத்தாலும் நிரூபிக்கிறார்.)

 

சுருதியானது பரப்பிரம்மத்தினால் உலகம் உண்டாயிற்றெனக் கூறுகின்றது. இப்படிப் பிரம்மத்தின் காரியமாயிருத்தலால் உலகம் அநித்திய மென்பதில் சந்தேகமில்லை. மேலும், சர்வ சகத்துக்களும் அவயவங்களோடு கூடிய வையாயிருத்தலாலும் அநித்திய மென்பது விளங்குகின்றது. அங்ஙனமாக, சிலர் வைகுண்டம் முதலாகிய உலகங்கள் நித்தியமானவை என்றெண்ணுவது மயக்க புத்தியேயாகும். (எது எது அவயவமுடையதோ, அது அது காரிய மாகும் என்னும் அனுமானத்தினால், எல்லாமும் அவயவத்தோடு கூடியவை யாகையால் அனைத்தும் அநித்தியமென்பது பெறப்படுகின்றது. வைகுண்டம் முதலிய உலகங்களும் அநித்தியமே. அவை நித்தியமானவை என்றெண்ணுவது பிராந்தியே யாகும்.)

 

இப்படிச் சுருதியுக்திகளால் நித்தியவஸ்து இது, அநித்திய வஸ்து இது என்று நித்திய வநித்தியங்களை வேறுபிரித்தறிதலே நித்தியாநித்திய வஸ்து விவேகம் என்னப்படும்.

 

(2) இகழத்திரார்த்த பலபோகவிராகம்: - இகலோக பரலோகங்களிலுள்ள பொருள்களினிடத்து இவற்றை யனுபவிக்கவேண்டுமென்னும் விருப்ப மற்றிருத்தல்.

 

முதற்சாதனமாகிய நித்தியாநித்தியவஸ்து விவேகத்தால் பிரமம் ஒன்றே நித்தியப்பொருள்; மற்றவை அநித்தியம் என்று நிச்சயிக்கப்படுவதால் அத்தகைய அநித்தியமாகிய இகலோக பரலோகங்களிலுள்ள பொருள்களினிடத்து இவற்றில் சுகமுளது; இவற்றை அனுபவிக்க வேண்டு மெனக்கருதி வாஞ்சை கொள்ளாமல், அவற்றை வெறுக்கத்தக்க இழிவான பொருள்களாகப் பார்த்து ஆசை கொள்ளாமலிருத்தல் இகமுத்திரார்த்த பலபோக விராக மெனப்படும்.

 

(இது விராகம் என்றும் வைராக்கிய மென்றும் சொல்லப்படுவதுமுண்டு) ஒருவனுக்கு நித்தியாநித்திய வஸ்து விவேகம் உண்டான அக்கணமே புஷ்பம் சந்தனம் ஸ்திரீ முதலான அநித்தியப் பொருள்களெல்லாவற்றினிடத்தும் வைராக்கியம் உண்டாகின்றது. காக்கையின் மலத்தைக்கண்டு அதனிடத்து வெறுப்புக் கொள்வதுபோல, இகலோக பரலோகப் பொருள்களினிடத்தும் வெறுப்புக் கொள்ளல் உத்தமமாகும். இத்தகைய வைராக்கியத்திற்குத் தீவிர வைராக்கிய மென்று பெயர். நாம் அனுபவிக்கும் சகல பொருள்களும் தோஷமுள்ளவை யென்று அவற்றைத் தோஷதிருஷ்டியோடு பார்ப்பதால் தீவிரவைராக்கிய முண்டாகும். ஒரு வேசியானவள், அதிரூபலாவண்ணிய முடையவளாகக் காணப்பட்டாலும், அவளைக்கண்ட ஒருவன் அவள் உள்ளே அதிபயங்கரமான வியாதிகளையுடையவள் என்று அறிவானானால், அவளுடைய வெளி அழகைக்கண்டும் ஆசைகொள்வானோ? கொள்ளமாட்டான். அது போல, ஒருவன் ஒரு பொருளில் தோஷமிருப்பதாக அறிந்தால், மறுபடியும் அவனுக்கு அப்பொருளினிடத்து விருப்பமுண்டாகாது. ஆகையால் போக வஸ்துக்களிலுள்ள குணதோஷங்களை யறிய வேண்டுமானால் அவற்றின் உண்மையான ஸ்திதியை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவ்வாறு பார்த்தால் அவற்றினிடத்துள்ள தோஷங்கள் வெளியாகும். அவ்வாறு பார்க்காவிடத்து வெளியாவதில்லை.

 

இனி, ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் நிஜ நிலையை விவரிக்கிறார்: -

 

கர்ப்பவாசம்: - (தாயின் கர்ப்பத்தில் தங்கியிருக்குங் காலத்திலுண்டாகும் துன்பங்களும், ஜனன காலத்திலுண்டாகும் துன்பங்களும் பல. அதன் பிறகும் எய்தும் இன்னல்களும் எண்ணற்றன. சுருங்கக் கூறுமிடத்து தோன்றி நின்றழியப்படும் கொடும் பிறப்பில் துன்பமேயன்றி எட்டுணையும், ஊன்றி நெஞ்சகத்தோர்ந்திடிற் பிறிதிலை' என்னும் பெரியார் வாக்கின்படி பிறவியானது துக்க வடிவானது. அவற்றிற் சில இங்குச் சுருக்கமாகக் கூறப்படுகின்றன.)

 

தன் தாயின் கர்ப்பத்தில் மலமூத்திரங்களுக் கிடையில் அகப்பட்டும், அம் மலத்தில் வசிக்கும் புழுக்களால் கடியுண்டும், தாயின் வயிற்றிலுள்ள சடராக்கி னியால் தகிக்கப்பட்டும் கிடக்கும் கர்ப்பவாச நிலைமையை விசாரித்தறிந்தால் எவன்தான் அதை வெறுக்காமலிருப்பான்?

 

பால்யம்: - தன் மலமூத்திரங்களில் புரண்டு கொண்டிருப்பதும், எப்பொழுதும் மல்லாக்கப் படுத்துக் கிடப்பதும், பாலக் கிருகாதி தோஷங்களால் பீடிக்கப்படுவதுமாகிய பால்யாவஸ்தையின் நிலையை விசாரித்துப் பார்க்கு மிடத்து எவன் அதில் விரக்தியடையாமலிருப்பான்?

 

குமாரப்பருவம்: - பெற்றோரும் சகோதரருமாகிய தம்மைச் சேர்ந்தவர்களும், அன்னியரும் அடிப்பதனால் உண்டாகும் துன்பமும், அதனால் மிகுந்த சஞ்சலமும், அறியாமையால் அயாக்கியமான காரியங்களைச் செய்தலும், வெறுக்கத்தக்க வாழ்க்கையை அடைதலுமாகிய குமாரப்பருவத்தின் ஸ்திதியை ஊன்றிப்பார்த்தவன் அதனிடத்து வெறுப்புக் கொள்ளாமலிருப்பானோ?

 

யௌவனம்: - தனக்குச் சமானமானவரில்லை யென்னும் மதம் மிகுந்து பெரியோர்களை அலட்சியஞ் செய்தலும், மிகுந்த காமுகனாய்த திரிதலும், காலநியமம் தவறியிருத்தலும், பெண்களின் மேல் கொண்டுள்ள காதலால் அவர்கள் வார்த்தையை மீறமுடியாமல் தீய காரியங்களிற் பிரவேசித்தலுமாகவுள்ள இதன் நிலைமையை ஆராய்ந்தறிந்தால் எவன்தான் இப்பருவத்தினிடத்து வைராக்கியம் கொள்ளாமலிருப்பான்.

 

விருத்தாப்பியம்: - இப்பருவத்தில் தன் சரீர நிலைமை மாறி நரைதிரைகள் தோன்றி அழகு குன்றும். 'கிடக்கின்றான் கிழவன்' என்று எல்லாரும் அசட்டை செய்வார்கள். எந்தக் காரியத்தையும் செய்யவும் முடியாமல் தைரியக் குறைவு உண்டாகும். அறிவும் மழுங்கும். பித்தசுரம், மூலவியாதி, க்ஷய ரோகம், குன்மநோய், சூலை, கபம் முதலான கொடிய பயங்கரமான வியாதிகள் வந்து குடிகொள்ளும். அதனால் துக்கமும், துர்க்கந்தமும், அனாரோக்கியமும், வியாகூலமும் மிகும். இத்தகையதாகிய விருத்தாப்பியத்தின் நிலைமையை யறிந்தால் எவன் தான் இதில் விரக்தியடையான்.

 

மரணகாலம்: - உயிர் உடலை விட்டு நீங்குவதாகிய மரணத்தறுவாயில் எம தரிசனத்தால் உண்டாகும் பயம், உடல் நடுக்கம், பூட்டுகள் தோறும் குத்தலெடுத்தல், மேல் சுவாசம் விடுதல் முதலாகிய பயங்கரமான துன்பங்கள் நேரிடும். இவற்றை விசாரித்தறிந்தவனுக்கு விராகம் உண்டாகத் தடையுண்டோ?

 

மரணாந்தரம்: - ஜீவனைகால தூதர் அக்கினியாற்றிலும், கும்பீபாகம், பூதி, அசிபத்ரவனம் முதலான நரகங்களிலும் தள்ளிக் கொடுமையாகத் துன்புறுத்துவர். (பாவிகளைத்தான் யமதூதர் தண்டிப்பர் புண்ணியஞ் செய்தவர்களுக்கு நரகவேதனை யுண்டாகாதன்றோவெனின்) இவ்வுலகில் புண்ணியஞ் செய்தவர்கள் அப்புண்ணியத்தின் பலனாக சுவர்க்கலோகத்தையடைந்து சுகங்களை யனுபவித்து, அந்தப் புண்ணியப்பலன் தீர்ந்தவுடன் தேவர்களால் தள்ளப்பட்டவர்களாய்ச் சரீரம் பொடிப்பொடியாய்ப் போகும்படி நக்ஷத்திரவடிவமாய்ச் சொர்க்கத்தினின்று கீழேவிழுவார்கள்.

 

இந்திராதி தேவர்களாய்ப் பிறந்தாலோவெனின், அவர்களும் கடவுளுக்குப் பயந்து தங்கள் காரியங்களைச் செவ்வையாய்ச் செய்ய வேண்டியவர்களாயிருக்கின்றனர். தவிர அசுரர்களாலும், இராக்கதர்களாலும் மகா கொடிய துன்பத்தையனுபவிக்கின்றனர். (மேலும் அவர்களுக்கும் பசி, தாகம், நோய், மரணம் முதலியன உண்டு. ஆகையால் இந்திரன், வருணன், வாயு, குபேரன் முதலான திக்குப் பாலகர்களும் பலவகையிலும் துன்பத்தை யடைபவரா யிருக்கின்றனர்.)

 

சக்கரவர்த்தி முதல் பிரமன் ஈறாகவுள்ள யாவர்க்கும் உண்டாகும் சுகானுபவங்களில் ஏற்றத்தாழ்வுகளிருப்பதாகக் காணப்பட்டாலும் அத்தாரதம்மியம் உணமையில் இல்லை. எல்லோருடைய சுகானுபவங்களும் ஒன்றே. சாலோகம், சாமீபம், சாரூபம் முதலான பதவிகளும் நற்கருமங்களாலுண்டாகின்றவை. கர்மத்தாலுண்டாவது நித்தியமானதாகாது. அநித்தியமே யாகும் என்பது நியதி. ஆதலின் சாலோகாதி பதவிகளும் கருமத்தாலுண்டாகின்றவையா யிருத்தலின் அநித்தியமானவையேயாகும்.

 

[இராஜா முதல் பிரஹ்மாபரியந்தமாகவுள்ளவர்களின் சுகங்களின் பேதம் இவ்வாறு கூறப்படுகின்றது: - பூமிக்கு இறைவனாய், ரோகமின்மை, யௌவனம், திடகாத்திரம், வில்வித்தை என்பவற்றையுடைய அரசனிடத்தில் தான் மனித சுகத்திற்கு முடிவுண்டாயது. மானுட கந்தர்வனென்று சொல்லப்படுபவன் அந்த அரசனிலும் நூறுமடங்கு சுகத்தை யடைகிறான். தேவகந்தர்வன் என்பவன் அவனைக் காட்டிலும் நூறு மடங்கு சுகமுள்ளவன். பிதிரர் என்பவர் அவனினும் நூறு மடங்கு சுகமனுபவிப்பவராவர். பிதிரரைப் பார்க்கிலும் அஜான தேவர்கள் நூறு மடங்கு சுகிகள். கர்ம தேவர்கள் அவர்களை விட நூறு மடங்கு சுகிகள் முக்கிய தேவர்களுடைய சுகம் அவர்களினும் நூறு மடங்கதிகம். இந்திரன் சுகம் அவர்களினும் நூறு மடங்கதிகம். சகல தேவர்களுக்கும் குருவான பிரகஸ்பதியின் சுகம் இந்திரனினும் நூறுமடங்கதிகம். பிரஹ்மாவின் சுகம் அவரினும் நூறு மடங்கு அதிகமானது. (விசாரசாகரம்.)]

இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளாகக் காணப்படும் பதவிகள் யாவும் துக்கத்தையே யுண்டாக்கும். இவ்வுலகத்தில் தாழ்ந்த பதவியிலிருப்போர் தம்மினும் உயர்பதவியிலிருப் போரைப் பார்த்துத் துக்கப்படுகின்றனர். இது பிரத்தியக்ஷம். இதைப் போலவே இதர வுலகங்களிலிருப் போரும் தம்மினும் மேலான பதவிகளிலிருப் போரைப் பார்த்துத் துக்கிப்பார்கள் என்பது அநுமானத்தால் அறியக்கிடக்கின்றது. (இவ்வுலகத்திலிருப்பதைப் போலவே அவ்விடத்திலும் பதவிகளின் ஏற்றத்தாழ்வுகளுண்டென்று முன்னே சொல்லப்பட்டது.) இவற்றையெல்லாம் விசாரித்தறிபவன் இவற்றினிடத்து வெறுப்புக்கொள்ளா திருப்பனோ? இரான்.

 

(இனி இவ்வுலகத்திலுள்ள மனை முதலியவற்றின் நிலைமையை விவரிக்கிறார்.)

 

உலகத்தில் சனங்கள் வெறுக்கத்தக்கவை யாயும், அழிந்து போகக்
 கூடியவையாயுமுள்ள மனை, மனையாள் முதலான பொருள்களினிடத்து அபிமானமுடையவர்களாய்ப் பரமபுருஷார்த்தமாகிய முத்தியை யடைய முயலாமல் வீணாக மரணத்தையடைகிறார்கள். இவ்வாறு உலகர் தங்கள் அறியாமையால் அநித்தியமானவற்றை நித்தியமெனவும், துக்கவடிவமானவைகளைச் சுகமெனவும் கருதி முடிவில் தங்கள் சன்மத்தை வீணாக்கி மாண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அறிவுள்ளவன் அவற்றினிடத்து ஆசைகொள் வானோ?

 

இந்த விஷயங்களை யெல்லாம் விசாரித்துப் பார்க்குங்கால் ஸ்திரீ, மனை முதலிய வஸ்துக்களினிடத்து யாது சுகமுளது? அஞ்ஞானத்தால் அகக் கண் குருடாயிருக்கும் அவிவேகிகளே சுகமுளதென்று மயங்குவார்கள். விவேகிகள் மோகமடையமாட்டார்கள்.


 ("ஆலையிற் கரும்பும் செக்கி லாட்டிய வெள்ளும் போலச்
 சாலவே நெரிந்து கோதாய்ச் சனிக்குங்கா லந்தோ துன்பம்
 பாலனி லறிவொன் றில்லாப் பண்பினால் மிகவுந் துன்பம்
 கோலியே யமுக்கிக் காது குத்தலா திகளால் துன்பம்.''
 " குழவியி லறியாத் துன்பம் குரவரால் குமாரம் துன்பம்
 கழிதரு காம நோயால் காளையாம் பருவம் துன்பம்.''
 " ஆனமுற் பயனு கர்ந்தா லசங்கித மாக வேரற்
 றீனமாய் விழும ரம்போ லிமையவர் விழலால் துன்பம்.''
 " தீய வசுரர் பகையுண்டு செற்ற மார்வ மிகவுண்டு
 நோயுண் டனங்க னாருண்டு நோய்கட் கெல்லாந் தாயான
 காய முண்டு கைதொழவேண் டினரு முண்டு கற்பத்தே
 மாயுந் தன்மை யுண்டானால் வானோர்க் கென்னை வளனுண்டே? ")

 

அனுபவிக்கத்தக்கவையாயுள்ள மனை மனைவி மக்கள் முதலான பொருள்களினிடத்தில் சுகமில்லை. அதற்கு மாறாகத் துக்கமே யுண்டாகும். ஆகையால் கர்ப்பவாசம் முதல் இந்திரபதவி பிர்மபதவி யீறாகவுள்ள எல்லாப் பதவிகளும் வெறுக்கத்தக்கனவே. யோசித்துப் பார்க்குமிடத்து எல்லாவற்றிலும் துன்பமே மிகுந்திருக்கின்றது என்பது இதுகாறும் கூறப்பட்டது. அங்ஙனமாயின், மனிதர் அவற்றினிடத்து வெறுப்புக்கொள்ளாமல் மேலும் மேலும் அவற்றை யடைய வேண்டு மென்று விருப்பங்கொள்ளுவதற்குக் காரணம் யாது? எனின்: - கூறுகின்றார். போக்கியப் பொருள்களினிடத்துள்ள இன்பதுன்பங்களின் பாகுபாடுகளை நன்கு விசாரித்தறிய வேண்டும். இன்றேல் புலப்படாது. அது புலப்படாவிடத்து அவற்றினிடத்து உவர்ப்புத் தோன்றாது. ஆகையால் இரண்டாஞ்சாதனமாகிய இகமுத்திரார்த்த பல போக விராகம் உண்டாவதற்கு அவற்றை நன்கு ஆராய்ந்தறிதல் அத்தியாவசியமாகலின், அவற்றை விவரிக்கிறார்.

 

அத்திப்பழமானது மேற்பார்வைக்கு வெகு அழகுள்ளதாகவும் தின்ன வேண்டுமென்னும் ஆசையைத் தரத்தக்கதாகவுமிருக்கிறது. ஒருவன் அதைப் பிட்டு உள்பாகத்தைப் பாராமல் வாயிலிட்டுத் தின்பானானால் அது அவனுக்கு நன்றாக இருப்பதாகவே தோன்றும். அப்படிச் செய்யாமல் பிட்டு அதனுள் பாகத்தைப் பார்ப்பானானால் அதனுள் புழுக்கள் நிறைந்திருப்பதைக் காண்பான். பிறகு அவன் அதைக் கையாலும் தொடச் சகியான். அதுபோல, எல்லா அனுபவிக்கப்படும் பதார்த்தங்களும் விசாரித்துப் பார்க்காதவர்களுக்கு ரம்மியமானவைகளாகக் காணப்படும். உண்மையை ஆராய்ந்தறியும் ஞானிகளுக்கு ஸ்திரீகளினிடத்திலும் மற்றப் பதார்த்தங்களினிடத்திலும் இவை யோக்கியமானவையென்னும் பாவ முண்டாவதில்லை.

 

(இவ்வாறு பொதுப்படக்கூறி, மேல் சில முக்கிய பதார்த்தங்களின் அசுதத்தன்மையை விவரிக்கத் தொடங்கி, முதலில் கிருகாபிமானத்தின் தன்மையைக் கூறுகிறார்.)

 

நண்டானது ஓர் பிலத்தினிடத்தில் நீரில் வாசஞ் செய்து கொண்டிருக்கின்றது. அந்தக் கிணற்றிலுள்ள தண்ணீர் முழுவதும் உலர்ந்து போனாலும், அக்கிணற்றின் மேல் கொண்டிருக்கும் அபிமானத்தால் அதைவிட்டு வெளி யேற முடியாமல் அங்கே தானே மரணமடைகின்றது. அதுபோலவே, மனிதன் பிராந்தியினால் கிருகஸ்த சுகத்தினிடத்து ஆசக்தியுடையவனாய் அதினின்றும் மீள முடியாமல் அதனிடத்தேதானே யிருந்து வீணாக நாசத்தையடைகின்றான்.

 

(கிருகஸ்தனுக்குப் பட்டுப்பூச்சி உவமை)

 

பட்டுப்பூச்சியானது தான் ஒருவர் கண்ணிலும் தென்படாமல் மறைந்து கொண்டால் சுகமாக இருக்கலாம் என்று நினைத்துத் தன் சரீரத்தினின்று முண்டாகும் ஓர் வகை நூலினால் தன் உடலைப் பலமுறை சுற்றிக் கொண்டு பின்பு அதினின்றும் வெளியேறச் சக்தியற்று அதனுள் அகப்பட்டுக்கொண்டு மரணமடைகின்றது. அது போல, கிருகஸ்தாச்சிரமத்திலிருப்பவனும் புத்திரரிடத்திலும், மனைவியிடத்திலும், நண்பரிடத்திலுமுள்ள நட்பு அல்லது ஆசை அல்லது பிரேமை அல்லது பாசம் என்று சொல்லப்படுகின்ற பந்தத்தினால் - கயிற்றினால் - கட்டப்பட்டவனாய், எப்பொழுதும் அந்தப் பிரேமை என்னும் பாசத்தை நீக்கிக்கொண்டு கிருகத்திலிருந்து வெளிப்படுவதற்குச் சக்தியில்லாதவனாய் வீணாக மரணமடைகின்றான்.

 

(கிருகம் காராக்கிருகத்தைப் போன்றது என்று சிறைச்சாலையை அதற்கு ஒப்பிடுகிறார்.) இந்தக் கிருகத்தினிடத்தும் புருஷனுக்கு ஸ்திரீ சுகத்திற்காக ஏற்பட்ட கர்மபந்தங்களினால் விடுதலை யுண்டாவதில்லையாகலின், நன்கு விசாரிக்குமிடத்து காராக்கிருகத்திற்கும் இந்தக் கிருகத்திற்கும் என்ன பேதம் காணப்படுகின்றது? (ஒரு பேதமுமில்லை. இன்னும் ஒருவகையில் பார்க்குமிடத்துச் சிறையே விசேஷமானது.) இந்த கிருகமாகிய சிறைச் சாலையில், கிருகத்தினிடத்திற் கொண்டுள்ள அபிமானமே காலில் கட்டப்பட்ட சங்கிலியாகும். மனைவி மக்களிடத்துக் கொண்டுள்ள ஆசையே உறுதியான கழுத்துக் கயிறாகும். தனத்தின் மேலுள்ள மிகுந்த ஆசையே தலையில் விழுகின்ற பேரிடியாகும்; பிரத்தியட்சமாய்ப் பிராணனைப் போக்குவதற்குக் காரணமானதாயிருக்கின்றது. அநேகமான ஆசைகளென்னும் சங்கிலிகள் கால்களில் சுற்றிக்கொண்டு எழுந்திருக்கவொட்டாமற் செய்கின்றன. காமம் குரோதம் மதம் முதலான காவலர் எப்பொழுதும் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். புத்ரவாசை மண்ணாசை பெண்ணாசை யென்னும் மூவாசைகளும் அவனைத் தம் வசமாக்கிக் கொண்டமையால் கிருகஸ்தன் எப்பொழுதும் பராதீனனாய் விடுகிறான். மோகமென்னும் மதில் சூழ்ந்திருக்கின்றது. இவ் வாறு சம்சார மென்னும் சிறையிற் சிக்குண்டு மனிதன் அதினின்றும் நீங்குவ தற்குச் சாமர்த்தியமில்லாதவனா யிருக்கிறான்.

 

(இனி ஸ்திரீ சொரூபத்தி னிழிவைக் கூறுகிறார்.) மனிதன் தான் விரும்பும் ஸ்திரீயின் சொரூபம் எவ்வளவு விகார சொரூபமுடையதாயிருந்தாலும் காமமென்னும் அந்தகாரத்தால் மறைக்கப் பட்ட பார்வையுடையவனாய் மோகமடைகிறான். இது யுக்தந்தான். கண்பார்வை யிழந்தவனாகிய குருடனுக்கு "இது நல்லவஸ்து; இதனால் சுகமுண்டாகும்; இது கெட்ட வஸ்து; இதனால் துன்பமுண்டாகும்" என்னும் விசாரணையில்லை யன்றோ?

 

சரீரத்தின் தன்மையை ஆராய்ந்தறியாமல் அது அழகாயிருக்கின்றது என்றெண்ணுவது பெரும் பேதைமையாகும். சரீரம், இரதம் இரத்தம் தோல் மாமிசம் சுக்கிலம் எலும்பு மூளை என்னும் எழுதாதுக்களினால் ஆக்கப்பட்டது. மலபாண்டமாகவுள்ளது. எங்கும் துர்க்கந்தம் வீசுவது.


 ''ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
 பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
 காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
 ஏற்றுத் திரிந்துவிட் டேனிதனாலென்ன பேறெனக்கே''


என்று பெரியோர்களால் இகழப்படுவது.

 

சரீரத்தின் இழிவைப் பட்டினத்தடிகள் தாயுமானவர் போன்ற பெரிய மகான்கள் பலர் தம் பாடல்களின் மூலமாக நன்கு விளக்கி யிருக்கின்றனர். எனினும் ஓர் சிறு கதையின் வாயிலாக அதை நிரூபிப்பாம்:

 

ஒருவன் ஒரு சற்குருவைத் தேடியடைந்து தனக்குத் தத்துவோபதேசம் செய்யுமாறு வேண்டிக்கொண்டான். அப்பொழுது அக்குருவானவர் அவனைப் பார்த்து "அப்பா! குருவினிடம் உபதேசம் பெறச் செல்பவன் வெறுங்கையோடு செல்லலாகாது, குரு தக்ஷிணையாக எதேனுமொன்றைக் கொண்டு போகவேண்டும். ஆகையால் நீயும் அப்படிச்செய்'' என்றனர். என்னலும், அவன் "சுவாமி! எனது உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் உமக்குச் சமர்ப்பிக்கின்றேன்'' என, குரு " அவை எனக்கு வேண்டாம். நான் கேட்கும் பொருளை எனக்குக் கொண்டுவந்து தந்தால் போதும். அது என்னவென்றால், இவ்வுலகத்தில் எல்லாப் பொருள்களினும் இழிவாகவுள்ள பொருள் எதுவோ அதை யறிந்து கொண்டுவா" என்று கூறினார். அவனும் அதற்குச் சம்மதித்துச் சென்று பலவிடங்களிலும் தேடியும் கிடையாமல் வருந்திக் கடைசியாக மலமே எல்லாவற்றினும் இழிவானதெனக்கருதி அதை யெடுத்துச் செல்கையில், அம்மலமானது அவனைப்பார்த்து "ஐயா! என்னை எங்கே கொண்டு போகிறாய்? " என்ன, அவன் '' என் குருவின் கட்டளைப்படி எல்லாவற்றினும் இழிவாகிய உன்னைக் கொண்டு போகிறேன்'' என்றான்.

 

அப்பொழுது அது அவனைப்பார்த்துக் கலகலவெனச் சிரித்து "ஐயா! உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதோ! நானா இழிந்த பொருள்? என்னை இன்னானென் றறிந்தீரா? சொல்கிறேன், கேளும். நேற்றைய தினம் நான் எவ்வளவோ மேலாக யாவராலும் விரும்பப்படும் நிலைமையில் போளி, பூந்தி, அல்வா, பாயசம் முதலிய அருமையான பொருள்களாக விருந்தேன். என்னை ஒருவன் தன் வாயிலிட்டு வயிற்றிற்குள் தள்ளினான். ஓரிரவு முழுதும் அவன் வயிற்றிலிருந்தேன். அப்பாழான மனிதனுடைய சேர்க்கையால் எனக்கு இக்கதி வாய்த்தது. இப்பொழுது நான் இழிந்தவனா! அந்த மனிதன் இழிந்தவனா? என்பதை நீரே யோசித்துக் கொள்ளும் " என்றது. உடனே அச்சீடன் தன் உடலின் இழிவை நினைத்து அவ்வுடலையே குருவிற்குச் சமர்ப்பித்தான் என ஓர் கதை சொல்லப்படுவதுண்டு. ஆகையால் உடல் மிக்க வெறுக்கத் தக்கதாகும். மூக்கு சளியைப் பெருகச்செய்யும். கண்களில் தண்ணீரும் பீளையும் பெருகும். காதிற் குறும்பி. உடலில் வியர்வை. இவ்வாறு அது மலத்தால் நிறைந்ததும் எல்லாவற்றிலும் கெட்ட நாற்றத்தால் தோஷ யுக்தமானதுமாகும். இவற்றையன்றி மற்றை யங்கங்கள் சொல்வதற்கு மாத்திரமல்ல, மனத்தால் நினைப்பதற்கும் யோக்கியமற்றவையாகும். இப்படிப்பட்டதான பெண்ணின் உருவம் ஞானிகள் கண்ணிற்கு எப்படி விஷயமாகும்.

 

விட்டிற் பறவையானது தூரத்திலிருந்து தீப வொளியைக் கண்டு ரமணீயமா யிருக்கின்றதென்றெண்ணி அதில் விழுந்து எரிந்து போவது போலவே, பார்வையில்லாத இந்த மனிதனும் சூக்ஷ்மமான மோக்ஷமார்க்கத்தைப் பார்க்க முடியாதவனாய், மாமிசம், எலும்பு, மஜ்ஜை, மலம், மூத்திரம் இவைகளுக் கிருப்பிடமான ஸ்திரீவடிவை, ரமணீயமா யிருக்கிறதென்னும் எண்ணத்தோடே பார்க்கிறான். காமத்தால் ஸ்திரீயை விரும்பி விட்டிலைப் போல நசிக்கிறான்.


(
வீட்டை எமலோகத்திற்கு ஒப்பான தென்கின்றார்.)

 

மோட்சத்தை விரும்பும் விவேகிகளுக்குக் காமமே பிரத்தியக்ஷ எமனாயிருக்கின்றது. மனைவியே வைதரணியென்னும் நதியாம். வீடே எமலோக மாகும். மனிதனுக்கு எமலோகத்திலாகிலும் கிருகத்திலாகிலும் தாபத்திரயத்தாலுண்டாகும் கஷ்டங்கள் நீக்கப்படுவதில்லை. (வீட்டிலும் தாபத்திரயங்களுண்டு. எமலோகத்திலும் தாபத்திரயங்களுண்டு.) ஆனால், மூடசனங்கள் வீட்டில் அத்தாபத்திரயங்கள், சில சமயங்களில் சிறிது அத்தாபத்திரய துக்கமில்லாதிருத்தலைக் கண்டு அவற்றைச் சுகரூபமாகக் கருதுகின்றனர். மேலும், விசாரித்தால் உலகத்தில் காமனுக்கும் எமனுக்கும் மிக்க ஏற்றத் தாழ்வுக்ளுண்டு. எமன் சத்துருவாகவிருந்து இம் மனிதனுக்குப் பிரியத்தைச் செய்கிறான். காமனோ பிரியனாயிருந்து அப்பிரியத்தைச் செய்கிறான். எமன் துஷ்டருக்கே துக்கத்தை யுண்டாக்குகின்றான். சாத்புருஷருக்கோ இதமானவனாய்ச் சௌக்கியத்தைச் செய்கிறான். காமன் சத்புருஷருக்கே மோக்ஷமார்க்கத்தை நிரோதிக்கின்றவனாய் அனிஷ்டத்தைச் செய்கிறான் என்றால் துஷ்டர்களைப்பற்றி என்ன சொல்வது?

 

பகவானளவர், தாமே பிரபஞ்சத்தின் அபிவிருத்தியின் பொருட்டுச் சிருஷ்டியை யுண்டாக்கும் காமுகராயுள்ள ஜனங்களைப் படைத்தார். அந்தக் காமிகளாலே உலகமானது, மோகமடைந்து, சந்திரனால் சமுத்திரம் விருத்தியாவது போல் விருத்தியடைந்து கொண்டிருக்கின்றது. இந்தக் காமத்தை யுண்டாக்குபவன் காமன்; அவனே ஜகத்தைப் பிரமிக்கச் செய்கிறான்; ஸ்திரீ புருஷர்களின் சித்தத்திலிருந்து கொண்டு அவர்களைத் தன் தமோகுணத்தினாலும், ஆசையென்னும் கயிற்றாலும் கட்டிப் பிரபஞ்ச சிருஷ்டியை விருத்தி செய்கிறான்; பிரம்மஞானத்தை நசியச்செய்து ஸ்திரீ புருஷர்களுக்குப் பிரமையை யுண்டாக்குகின்றான். இவற்றை அடியிற்கண்ட அவனுடைய பெயர்கள் விளக்குவனவாம்: (சித்தஜன் = சித்தத்தில் தோன்று பவன்; சித்தம் = மனம், ஜம் = தோன்றுதல்; காமன் = ஆசையை யுண்டாக்கு பவன்; காமம் = ஆசை, அதை யுண்டாக்குபவன் காமன்; மன்மதன் என்பதற்கும் மனதைக் கலங்கச் செய்பவன் என்னும் பொருளாதல் காண்க.)

 

எல்லாப் பிராணிகளுக்கும் தம் சித்தத்தில் தோன்றும் காமமிகுதியால் போக்யவஸ்துக்களினிடத்தில் "இவற்றை யனுபவிக்கவேண்டும்; இது அனுபவ யோக்கியமானது; இது இன்பமாயிருக்கும்'' என்னும் ஆசையுண்டாகின்றது. இது உண்மையே. இவ்வாறில்லாவிடின் அறியப்படாத வஸ்துக்களினிடத்தும் வாஞ்சை எவ்வாறுண்டாகும்? உண்டாகாதல்லவா! இதனால் ஸ்திரீ புருஷர்களின் சித்தத்திலிருக்கும் காமனே அவர்களை ஆசையென்னும் கயிற்றால் கட்டி ஆட்டுகிறானென்பது உண்மையேயாகும். இது பற்றியே இக்காமமானது எல்லாப் பிராணிகளிடத்தும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகின்றது. இவ்வுடல் முதுமையையடைந்தாலும் காமமானது முதுமையடைவதில்லை. யௌவனமாகவே யிருக்கும். ஆகையால் புத்திசாலியாயுள்ளவன் இந்திரிய விஷயங்களினிடத்தில் துன்பமுள்ளதென்றெண்ணிக் காமமாகிய பாசத்தால் கட்டப்படாமலிருக்க வேண்டும். அப்படி யிருப்பவனே வீட்டு நெறியை யறிந்தவனாவான்.


 [இனி, இக்
காமத்தை ஜெயிக்கத்தக்க உபாயம் யாதெனின் கூறுகிறார்.]

 

நான் காமத்தை ஜெயிக்கும் சூட்சுமமான உபாயத்தைச் சத்புருஷர்களுக்குச் சொல்லுகிறேன். அது யாதெனில், சங்கற்பத்தை விடுதலேயாகும். கேட்கப்படுகின்றவைகளும் காணப்படுகின்றவைகளுமாகிய அனுபவயோக்கியமான எந்தப் பொருளிடத்திலும் 'இது நன்றாயிருக்கின்ற தென்னும் புத்தியை விட வேண்டும். அப்படி விட்டால் ஆசையானது ஒருபோதும் உண்டாகாது. (இது நன்றாயிருக்கும் என்னும் எண்ணமிருப்பதாலே தான் அப்பொருளிடத்து ஆசையுண்டாகின்றது. அவ்வெண்ணம் இல்லாவிட்டால் ஆசையுண்டாதலுமில்லை.) காமமானது சங்கற்பத்தினாலேயே யுண்டாகின்றது. ஆகையால் சங்கற்பமே காமத்திற்கு வேராகும். வேர் நாசமானால் முளை அழிந்து போவது போல், வேராகவுள்ள சங்கற்பம் நசிப்பதால் காமமும் நசிக்கிறது. நன்றாயிருக்கின்ற தென்னும் பாவமில்லாமல் போக்கிய வஸ்துவைக் கோருவதற்கு எவனாயினும் சக்தியுடையவனாவானோ? ஆகான். அதனால் காமத்தை ஜெயிக்க நினைப்பவன் பதார்த்தத்தினிடத்தில் இது நன்றா யிருக்கின்றதென்னும் பாவத்தை அறவே யொழிக்க வேண்டும். காமத்தை ஜெயிக்கும் விருப்பமுள்ளவன் பதார்த்தத்தினிடத்தில் 'இது சுகமுடையது' என்னும் எண்ணத்தைத் தொலைக்க வேண்டும். வஸ்துவினிடத்தில் இது சுகமுள்ள தென்னும் பிராந்தி எதுவரையிருக்கிறதோ, அதுவரையிலும் ஒருவன் காமத்தை ஜெயிக்கும் சக்தியுடையவனாகான். ஆகவே, சங்கற்ப முண்டாகாமலிருப்பதற்கு வஸ்துவினுடைய உண்மையான ஸ்திதியை ஆராய்ந்தறிதலும், சங்கற்பத்தினால் அநேக அநர்த்தங்களுண்டாகுமென் றெண்ணு வதுமே தக்க உபாயங்களாம். இவ்விரண்டு உபாயத்தையும் அனுசரித்தால் சங்கற்பமுண்டாவதற்கு இடமேயிராது. உதாரணமாக,
 

ஓர் இரத்தினத்தைக்கண்ட வொருவன்' இது ஒருகல்' என்றெண்ணி, அதனிடம் விருப்பங்கொள்ளாமலிருப்பானானால், அதனால் நேரிடக்கூடிய பயம் அவனிடத்துண்டாகுமா? 'இது மிகவும் நல்ல இரத்தினம்; இது நமக்குக் கிடைத்தால் எவ்வளவோ ஆனந்தமாயிருக்கலாம்' என்று எண்ணுவானானால் பயம் உண்டாகாமலிருக்குமோ?' இது கிரகிக்கத் தகுந்தது. என்னும் எண்ணமிருந்தாலும் பயமுண்டாகாதா! உண்டாவது திண்ணம். ஆதலால், பொருள்களின் நிஜஸ்திதியைப் பார்த்தாலும், அநர்த்தத்தின் எண்ணமுமே, சங்கற்பத்தையும் காமத்தையும் நாசப்படுத்தத்தகுந்த மார்க்கங்களென்றறிதல் வேண்டும்.

 

'சங்கற்பந்தான் பவபந்தம், சங்கற்பம் தீர்ந்தது முத்தி' என்று ஞான வாசிட்டங் கூறுகின்றதும் இங்கு உணரற்பாலதாம். சங்கற்பம் உள்ள வரையில் இந்திரிய வியாபாரம் ஒழியாது. இந்திரிய வியாபாரமொழியாதவரை சுகதுக்கங்கள் தொலையா. சுகதுக்கமுள்ள வரை மனம் பரிசுத்த மடையாது. ஆகையால் எல்லா அநர்த்தங்கட்கும் காரணமாயிருத்தலின் சங்கற்பத்தை யொழிப்பதே காமத்தை ஜெயிக்கு முபாயம் என்றார்.


 'பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
 மருளானாம் மாணாப் பிறப்பு.'


 'அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
 தவாப் பிறப்பீனும் வித்து.'


 'ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
 நாடும் பொருளே என் நட்பே பராபரமே.''   


 'அற்றது பற்றெனில் உற்றது வீடு''


 'ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவு மன
      தலையுங் காலம்
 மோசம்வரு மிதனாலே கற்றதுங்கேட் டதுந் தூர்ந்து
      முத்திக் கான
 நேசமும் நல் வாசமும் போய்ப் புலனாய் இல் கொடுமைபற்றி
      நிற்ப ரந்தோ
 தேசுபழுத் தருள் பழுத்த பராபரமே நிராசையின்றேல்
      தெய்வ முண்டோ.


 எனும் பிறவான்றோர் வாக்கியங்களும் ஈண்டு அறியத்தக்கனவாம்.


தனத்தா லுண்டாந் தீமைகள்.

 

தனமானது பயத்தை யுண்டாக்கும்; துக்கத்தை எப்பொழுதும் அதிகரிக்கச் செய்யும்; உலகநிந்தையைப் பிறப்பிக்கும்; அந்நியரையெல்லாம் பந்துக்களாகச் சேர்க்கும்; நல்ல குணங்களைப் போக்கும்; லோபகுணத்தை விருத்தியாக்கும். இவ்வாறு பல தீமைகளையுண்டாக்குமேயன்றி, மோக்ஷ சாதனத்தையேனும், சித்த சுத்தியையேனும் தராது. (தனத்தால் பயமுதலானவை யுண்டாவதெங்ஙனமெனின் விவரிக்கிறார்) பணமுள்ளார்க்கு அரசரால் பயம்; கள்வரால் பயம்; பங்காளிகளால் பயம்; இவ்வாறு பலவகையிலும் பயத்திற்கே காரணமாயிருத்தலால் தனமானது சுகத்திற்குச் சாதகமாவதில்லை. மேலும், தனமானது சம்பாதிக்கும் பொழுதும் சம்பாதித்ததைக் காப்பாற்றும் பொழுதும், தானஞ் செய்யும் பொழுதும், செலவிடும் பொழுதும் துக்கத்தையே யுண்டாக்குவதாகுமாதலின் சுகசாதனமாகாது. நல்லவர்களுக்கும் தனத்தின் சேர்க்கையால் குணம் மாறுபட்டு இன்னும் சேர்க்க வேண்டும் என்னும் ஆசையதிகரிக்கும். அந்த ஆசையால் நன்மை தீமைகளை யறியும் விவேகம் குறையும். விவேகக் குறைவால் தீமையுண்டாகு மென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
 

செல்வம் சேராவிட்டால் வறுமையானது மனிதர்களை வாட்டுகின்றது. தனம் சேர்ந்தாலோ ஆசையானது மனிதரை வருத்துகின்றது. ஆதலால் தனமானது இருக்கிறவனையும் கஷ்டத்திற்காளாக்கும். இல்லாதவனையும் கஷ்டத்திற்காளாக்கும். எனில், வேறு யார்க்குத்தான் அது சுகத்தையுண்டாக்கும்! தனத்தை ஒருவன் தானே அனுபவித்தால் அது அவனுக்கு மதத்தை யுண்டாக்கும். தானதருமங்களைச் செய்தாலோ, அத்தானதருமத்தாலுண்டாகும் புண்ணியப் பேற்றை யனுபவிக்க மறுபிறவி யுண்டாகும். தான் அனுபவித்தல், பிறர்க்குக் கொடுத்தல் என்னும் இவ்விருவகையிலும் தனம் கன்ம ஏதுவாயிருக்கக்காண்டலின், வேறெவ்வகையில் தனம் இன்பம் தரும்! இவற்றைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

 

(இங்கு தான தருமங்களும் பிறவிக் கேதுவாகலின், அதுவும் செய்யத்
 தக்கதல்ல எனக் கூறியது, கேவலம், மோக்ஷத்தை மாத்திரம் கோருபவர்க்கே யாம், மற்றவர்க்கன்று. பேராசை கொண்டு செல்வந்தேடுதலும் தானு மனுப விக்க விரும்புதலும் எவருக்கில்லையோ, அன்னார்க்கே இது கூறப்பட்டது. 'இருவினையால் வரும் இன்பொடு துன்பம்'. பொன்னால் செய்த சங்கிலியாயினும், தளைப்படுத்தும் வகையில் இருப்புச்சங்கிலிக் கொத்ததேயாமாறுபோல், பாபத்தைத் துய்க்கத் தீவினை பிறவி தருவது போல், புண்ணிய கருமமாகிய நல்வினையும், பிறவியைத் தருவதாகலின், சகல துன்பங்கட்கும் இருப்பிடமாகிய பிறப்பை யொழித்துப் பிறவாநெறியை அடைய விரும்புவோர் இரு வினையுமற்றவராதல் அவசியம். இதுபற்றியே நாயனாரும் 'இருள்சே ரிரு வினையும் சேரா இறைவன் - பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்றார். பிறவியற்ற நிலையே முத்தியாம் - புண்ணிய மிகுதியாலுண்டாம் பிரமேந்திராதியர் பதமும் துன்பவேதுவாம் என்பது முன்னர் முதற்சாதனமாகிய நித்தியாநித்திய வஸ்து விவேகம் கூறியவிடத்து விளக்கப்பட்டிருக்கின்றது. ஆண்டுக்காண்க.

 

(தனத்தால் விளைவது தீமையே யென்பதை விவரிக்கிறார்.)

 

ஒருவனிடம், தனம் மிகுதியாகச் சேரச்சேர மதமும் மிகுதியாய்க் கொண்டேயிருக்கும். மதம் மிகுந்தால் தேகாத்ம பேத ஞானம் குறையும். அதனால் நித்தியவஸ்து இன்னது அநித்திய வஸ்து இன்னது எனப் பகுத்தறிதலாகிய விவேகம் நசிக்கும். விவேகம் நசிப்பதால் உண்டாகும் பலன் இன்ன தென்று சொல்லவும் வேண்டுமா. மூடர்களிதையறியாமல் தனமே சுகத்தைக் கொடுக்கின்றதெனக் கருதி, ஆசையாகிய பிசாசினால் உறுதியாய்ப் பிடிக்கப்பட்டவர்களாய், எப்பொழுதும் பூதம்போல் பணத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அதன் சமீபத்திலேயிருக்கின்றனர். செல்வமுள்ளவன் பணத்தைத் தவிர வேறொன்றையும் பார்ப்பதில்லை. பிறவஸ்துக்களைப் பார்க்கும் விஷயத்தில் அவன் குருடனாயிருப்பான். அநேக அயோக்கியர்கள் அவனைச் சூழவிருந்து இதம் பேசிக் கொண்டிருப்பர். அவர்களால் தூண்டப்பட்டுப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்ட தீ நெறிகளிற் சென்று உழன்று மீளா நரகிற்காளாகிறான். குருடனாகையால், இவனுக்குத் தான் செல்வது குமார்க்கமென்று தெரிவதில்லை. அந்தக் குருட்டுத்தன்மையைப் போக்குவதற்குத் தரித்திரமே சிறந்த மருந்தாகும். ("பெருத்திடு செல்வமாம் பிணிவந்துற்றிடில் - உருத்தெரியாமலே ஒளி மழுங்கிடும் - மருத்துளதோ வெனில் வாகடத்திலை - தரித்திரமென்னுமோர் மருந்திற்றீருமே.


 சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே
 வறிய புன் செருக்கு மூடி வாயுளார் மூக ராவர்
 பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்
 குறிபெறு கண்ணு ளாரும் குருடராய் முடிவரன்றே''

 

என்றின்னோரன்ன ஆன்றோர் மொழிகளையும் நோக்குக.)

 

தவிர, செல்வமானது ஆசை, கோபம், இடம்பம், மதம், மாற்சரியம் முதலிய துர்க்குணங்களையே யுண்டாக்குமன்றி, சித்தசுத்தியை யுண்டாக்குவதில்லை. தனத்திற்கு விரயம் நேரிட்டால் பணமில்லாமல் ஏழையாயிருந்த காலத்தில் இருந்த துன்பத்தைக் காட்டிலும் இருமடங்கு துன்பமுண்டாகும். நஷ்டமுண்டானால் அதினும் மும்மடங்கு துக்கமுண்டாகும். (பிறவிக் குருடன் துன்பத்தினும், பெற்று மீண்டு மிழந்தவனுடைய துக்கம் மிகுந்த தல்லவா?) எங்கே விரயமாய் விடுகிறதோ, எங்கே நஷ்டமுண்டாய் விடுகிறதோ என்னும் பயமும் பணமுள்ளவனை விட்டகல்வதில்லை. ஆகையால் பாம்பு வாசஞ் செய்யும் வீட்டில் குடியிருப்பவனுடைய மனமானது எப்படிச் சாந்தியின்றிச் சதா பயத்தோடு கூடியதாய் அல்லலுற்றலைந்து கொண்டிருக்குமோ, அது போலவே பணம் படைத்தவனுடைய மனமும் சாந்தியற்றுழன்று கொண்டிருக்கும்.

பணமில்லாதவன் நிர்ப்பயமாய் எங்குஞ் சஞ்சரிக்கலாம். அவன் நிர்மானுஷ்யமான காட்டிலிருந்தாலும் சரி, கிராமத்திலிருந்தாலும் சரி, கடலிலிருந்தாலும் சரி, வேறெவ்விடத்திலிருந்தாலும் சரி, அவன் பயப்பட வேண்டியதில்லை. சாந்த சித்தத்துடன் சுகமாயிருப்பான். (மடியில் கனமிருந்தாலல்லவோ வழியில் பயமுண்டாகும்!) பணமுள்ளவனோ, எப்பொழுதும் வியாகுலசித்தனாய், புத்திரனுக்கும் பயப்படுகிறவனாய், கஷ்டப்பட்டுக் கொண்டேயிருப்பான். ஆதலால் இந்தத் தனத்தால் புருஷார்த்த சுத்தி யுண்டாவதில்லை. அதற்கு மாறாக அது துன்பத்திற்கே மூலமாயிருக்கிறது. இதுபற்றியே சற்புருஷர்கள் அனுகூலமற்ற சமஸ்த செல்வங்களையும் விட்டு வனத்தில் வசிக்கின்றனர்.
 

ஆகையால், கற்புள்ள மனைவியும், தனதான்யாதிகளால் நிறைந்த அலங்கார மாளிகையுமாகிய யாவும் அழியுந்தன்மை யுள்ளவை என்று சுருதி வாக்கியங்களாலும் யுக்திகளாலும் தெரிந்து கொண்டு, புத்திமான்கள் அவற்றை விட்டு விடுகின்றனர். மற்றவர்களோவென்னில், அவற்றைச் சுகசாதனமெனக் கருதித் துக்கக்கடலில் மூழ்கித் தவிக்கின்றனர்.
 

சாணிக்குப்பையில் கிடக்கும் கிருமி கீடங்கள் அதுவே சொர்க்கபோக மெனக் கருதி இன்பமாய்க் கிரீடை செய்து கொண்டிருப்பது போல எந்த மனிதர்கள் சுகமுள்ள தென்று மனைவி மக்களிடத்துக் கொண்டுள்ள ஆசையால் சம்சாரக்குப்பையில் கிரீடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு எப்பொழுதும் நரகவாசத்தினாலும் கர்ப்பவாசத்தினாலும் நீங்காத துக்கமே யுண்டாவதன்றி மோக்ஷத்திற்கு மார்க்கமே யுண்டாதலில்லை. எவர்களுக்கு மனைவி மக்கள் தனம் முதலான வஸ்துக்களினிடத்துள்ள ஆசை நசிக்குமோ அவர்களுக்கே முத்திநெறி நேர்படும். ஏனையோர்க்குக் கிட்டாது.


(எத்தகையோருக்கு ஆசை நசிக்கும் என்பதைக் கூறுகிறார்.)

 

நிஷ்காமியமாய் சத்கருமங்களைச் செய்து அதனால் பாவம் நசிக்கப் பெற்றவர்களும், வேதாந்த வாக்கியங்களை இடைவிடாது சிரவணஞ் செய்வோரும், சித்த சுத்தியடைந்தோரும், புத்திமான்களும், இந்த நித்யாநித்ய வஸ்து பரிசீலனையை யுக்தியால் பலமுறை செய்து கொண்டிருப்போரும், அதனால் உண்டான தீவிர வைராக்கியமுடையோரும், மோக்ஷாபேக்ஷை யுள்ளோருமாகிய கிருதகிருத்தியர்களுக்கு மனைவி மக்களாதிய பதார்த்தங்களினிடத்துள்ள ஆசையாகிய கொடியை அறுத்தல் சுலபமாகும். (சம்சார பயமுண்டாகாதிருப்பதற் குபாயம் கூறுகிறார்.) பெண் - நாக்கு - பொன் இம்மூன்றன் மூலமாகவே ஜனன மரணப் பிரவாக (இடைவிடாது மேலும் மேலும் வந்து கொண்டிருத்தல்) வடிவமான சம்சாரமானது உண்டாகின்றது. ஆகலின் இம்மூன்றையும் எவன் நிக்கிரகிக்கின்றானோ அவனுக்குச் சம்சாரபயம் நேரிடுவதில்லை.


(மோக்ஷ லக்ஷ்மியை யடைதற்குரியவ னிவனென்பதைக் கூறுகின்றார்.)

 

மோக்ஷ லக்ஷ்மியினுடைய நகரத்திற்கு முதலில் போதிக்க முடியாத வாயில் ஒன்றிருக்கின்றது. அந்த வாயிலுக்குப் பொன் பெண் என்னும் இரண்டு கதவங்களுண்டு. அக்கதவுகள் காமமென்னும் பெயரையுடைய தாழ்க்கோலால் உறுதியாய் மூடப்பட்டிருக்கின்றது. எந்தத் தீரன் பொன், பெண், காமமென்னும் அம்மூன்றையும் உடைத்தெறிகிறானோ, அவன் அந்நகரத்திற்குள் பிரவேசித்து, மோக்ஷலசுதமியின் சுகத்தை யனுபவிப்பான். அந்த மூன்றையும் ஜெயிப்பதெப்படியெனில், விவேகமென்னும் குதிரைமீதேறினவனும் தீவிர வைராக்கியமென்னும் வாளாயுதத்தை யேந்தினவனும் துன்பங்களைச் சகித்தலாகிய கவசத்தைத் தரித்தவனுமாகிய வீரன் பொருள் காமம் என்னும் பகைவரை வெல்லவல்லவனாவான். இவற்றுள்ளும் விவேகத்தாலுண்டான தீவிர வைராக்கியமே மோக்ஷத்திற்கு முதற்காரணமாகுமென்பது சத்புருஷர்களுடைய அபிப்பிராயம். ஆகையால் மோக்ஷாபேக்ஷையுள்ள விவேகியானவன் அவ்வைராக்கியத்தையே முதலில் பிரயத்தினப்பட்டுச் சம்பாதிக்க வேண்டும். அதையடையாதவன் தேகரூபமான பந்தத்தை விட எண்ணுவதற்கு அருகனாகான். ஆகையால் இந்த வைராக்கியமே பந்த நிவர்த்திக்குச் சிறந்த மார்க்கமாகும். இந்த வைராக்கியத்தை யடையாதவர்கள் பண்டிதர் களேயாயினும், மோகத்தை முனிந்து நீக்க முடியாதவர்களாய் எமலோகத்தில் அனுபவிக்கும் வேதனையைப்போல கிருகத்தில் வாதைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.


(இனி மூன்றாஞ் சாதனமாகிய சமாதிஷட்க சம்பத்தி கூறப்படுகின்றது.)

 

சமம், தமம், திதிக்ஷை, உபரதி, சிரத்தை, சமாதானம் என்னும் இந்த ஆறும் சமாதிஷட்கம் என்னப்படும். இவ்வாறையும் அடைந்திருத்தலே சமாதிஷட்க சம்பத்தியாம். (இவை வேறு நூல்களில் இம்முறை மாறியுமிருக்கும். இவற்றுள் திதிக்ஷையென்பது சகித்தல், உபரதியென்பது விடல்.   கைவல்லியநவநீதத்தில் 'சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை யாறாம்'எனவும் விசாரசாகரத்தில் சமம், தமம், சிரத்தை, சமாதானம், உபரதி, திதிக்ஷை' எனவும் முறை மாறியிருத்தலுங் காண்க.) இவற்றுள்,

 

சமமாவது: - மனதை விஷயங்களிற் செல்லவிடாது தடுத்து ஒருமுகப்படுத்தி, தன் லக்ஷியத்தினிடத்தில் நியதமாய் நிறுத்துவதே சமமாம். (சமம் - அகக்கரணதண்டம் என்பது கைவல்லியம்)


      இந்த சமம், உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று வகைப்படும். அவற்றுள்,

 

(1) உத்தம சமமாவது: - மனமானது சங்கற்ப விகற்பங்களாகிய விகாரங்களை விடுத்து (நினைப்பு மறப்புக்களற்ற நிலையில்) உள்ளது உள்ளபடி பிரஹ்மைக்ய ரூபமாயிருத்தலாம்.

 

(2) மத்திமசமமாவது: - மனத்தை இடைவிடாமல் பிரம்மஞான ரூபமாகச் செய்தல். இதுவே மனத்தின் சுத்த சத்துவ ரூபமாகும். (மனமானது ஆகாயம் முதலாகிய சூக்ஷம பஞ்சபூதங்களின் சத்துவகுண காரியமாயிருத்தலால் அதனது இயற்கைச் சொரூபம் சத்துவ சொரூபமே யாகும். இராஜச தாமசக் கலப்பினால் சங்கற்பவிகற்பங்களுண்டாயின. அவற்றையொழித்துச் சுத்தசத்துவமாகிய இயற்கை வடிவாக்குதலே மத்திமசமமாகும்.)

 

(3) அதம சமமாவது: - விஷய வியாபாரங்களை விடுத்து வேதாந்த சிரவணத்தில் மாத்திரம் மனத்தை நிலையாக நிறுத்துதலே மனத்தின் அதம சமமாகும். (இது கலப்புள்ள சத்துவத்தை வடிவாகக் கொண்டுள்ளது.)

 

(ஈண்டு, பிரஹ்மைக்கிய ரூபமென்பது பாவனா வடிவப் பிரஹ்மமாம். அந்த பாவனாவடிவப் பிரஹ்மரூபமாக நிலைபெறல் உத்தமசமமாம். இதனை அசாக்ஷாத்கார ஆந்தா நிர்விகற்ப சமாதி என்றுங் கூறுவர். மனமானது முற்கூறிய பிரம்ம வடிவமாக விளங்காது அந்தப் பிரம்மத்தின் அகண்டாகார விருத்திரூபமாக விளங்குவது மத்திம சமமாம்.


      "பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமா குவரென்றால்

      நரச ரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமே னென்னாதே

பரம பாவனை பரொட் க்ஷமாம் பின்பந்தப்  பரோஷமே யபரோஷம்
      திரவி சாரமா ஞானமா முத்தியாந் தீர்வையீ தறிவாயே "


 என்னும் கைவல்லியச் செய்யுள் ஈண்டுணரற்பாலதாம்.)

 

இச்சமமானது முன் சாதனமாகிய விராகமும் பிற்சாதனங்களாகிய தமம் முதலானவைகளும் எவர்களுக்கு உளவாகுமோ அவர்களுக்கே சித்திக்கும். எனவே, காமம், குரோதம், உலோபம், மதம், மோகம், மாற்சரியம் என்னும் இவ்வாறும் எவனால் ஜெயிக்கப்படுமோ அவனுக்கே சமமானது சித்திக்கும். அவற்றை ஜெயிக்காதவனுக்கு சித்திப்பதில்லை. எவன் தீவிரமான மோக்ஷ வாஞ்சை கொண்டு விஷத்தைப் பார்ப்பது போல விஷயாதிகளைக் கண்டு, அவற்றினிடத்துப் புத்தியைச் செலுத்தாம லிருக்கின்றானோ அவனுக்கு சாந்தி யெனப்படுகின்ற இச்சமமானது கைகூடும். எவன் பரமேசுவரனை ஆராதிக்கின்ற தில்லையோ, எவனுக்கு குருவின் அனுக்கிரகம் கிடைக்கவில்லையோ, எவனுக்கு மனம் வசப்படவில்லையோ அவனுக்கு சாந்தியுண்டாகாது.

 

(மோஷத்தை யடைவதற்கு முக்கிய சாதனமாயிருப்பது மனோ சாந்தியேயாம். சகல கேவல் (நினைப்பு மறப்பு) வடிவமனமே சகல பந்தங்களுக்கும், அப்படியே மோக்ஷத்திற்கும் காரணமாம். சுத்த மனம் முத்திக்கும் அசுத்தமனம் நரகத்திற்கும் ஏதுவாகும்.


      "இறப்பும் பிறப்பும் பொருந்த - எனக்

கெவ்வண்ணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்
      மறப்பும் நினைப்புமாய் வந்த - வஞ்ச
      மாயா மனத்தால் வளர்ந்தது தோழீ!''


என்றார் ஞானச் செல்வராகிய தாயுமானவர்.

 

மனோ சுத்த முடையோரே முத்தியடைவர் என்பது எல்லா மதத்தினர்க்கும் ஒப்ப முடிந்த விஷயம். ஆலய வழிபாடு, தியானாதி யோகங்கள் யாவும் மனத்தை யடக்குதற் கேற்ற சாதனங்களே. மனத்தையடக்கியவனே மகா யோகியாவான். இதுவே செயற்கரிய காரியம். இச்செயற்கரிய காரியத்தைச் செய்தோரே பெரியோர். இதுபற்றியே திருவள்ளுவனாரும்,


 ''செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
 செயற்கரிய செய்கலா தார்.''

 

என்றார்.
 

எவனொருவன் இம்மனத்தைத் தன் வசப்படுத்திக்கொண்டவனோ அவன் மோக்ஷ வாயிலை யடைந்தவனாவன்.


''நின்னை யறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டு
துறக்கந் திறப்பதோர் தாள்''

 

என்னும் ஆன்றோர் வாக்கும் ஈண்டு அறிதற்பாலதாம்.

 

ஆனால், இஃது எளிதிற் கைகூடுங் காரியமல்ல. 'சிந்தையை யடக்கியே சும்மாவிருக்கின்ற திறமரிது' எனத் தாயுமானவரே கூறியிருப்பாராயின் சொல்லவேண்டுவது வேறு யாதுளது! இம்மனத்தின் தன்மையை யுணராதவர்கள் மனம் போன போக்கெல்லாம் போய்க்கொண்டே 'அதென்ன! நாம் சொன்னபடி, போவென்றால் போகின்றது, நில் என்றால் நிற்கிறது; இது பெரிய காரியமா' எனக் குழறுவர். இவர்கள் உண்மையில் தாம் வேறு மனம் வேறு என்பதையே அறியாதவராவர்.

 

நீண்டகால அப்பியாசத்தால் தான் மனோ வடக்கமுண்டாம். இது கைகூடாதவரையில் வேறெவ்வகை முயற்சியும் பயன்படாது.


 ''சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
 மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.''


 என்றார் தாயுமானார்.

 

விஷயாதிகளிற் சென்றுழலும் மனம் அவ்வாறலையாமல் அடங்க வேண்டுமாயின் முதலில் அது பரிசுத்தப்படவேண்டும். பரிசுத்த மடைந்த மனமே சாந்த நிலையை யெய்தப் பெறுவதாகும்.

 

ஆகலின் மனம் பரிசுத்த மடைதற்கேற்ற சாதனங்களை யீண்டுக் கூறுகின்றார்.

 

எந்தச் சாதனங்க ளுண்டாயிருத்தலால் மனம் பரிசுத்தமடையுமோ, எந்தச் சாதனங்களில்லாவிட்டால் பரிசுத்தமடைவதில்லையோ அத்தகைய சாதனங்கள் கூறப்படுகின்றன.

பிரம்மசரியம் - அஹிம்சை - ஜீவகாருண்யம் - கபடமின்மை - விஷயங்களினிடத்து ஆசையில்லாமை யென்னும் வைராக்கியம் - பரிசுத்தம் - இடம்ப மின்மை - சாத்தியம் - எனது என்னும் பாவமில்லாமலிருத்தலாகிய மமகார மின்மை - நிச்சலத்தன்மை - அபிமானமின்மை – ஈசுவரத்தியான வாஞ்சை - ஞானிகளின் கூட்டுறவு - ஞான சாஸ்திரங்களினிடத்து ஆசக்தியுடையவர்களா யிருத்தல் - சுக துக்கங்களைச் சமமாகப் பாவித்தல் - கௌரவம் விரும்பாமை - ஏகாந்த வாசம் - மோக்ஷ வாஞ்சை என்னும் இப்பதினெட்டுக் குணங்களும் (தர்மங்களும்) எவனிடத்திருக்குமோ அவனுக்கு மனமானது நிர்மலமாகும். இத் தர்மங்களில்லாதவன் வேறு வகையான கோடி தர்மங்களை யுடையவனாயினும் மனம் பரிசுத்தமாதலில்லை. (இப்பதினெட்டுத் தர்மங்களையும் தனித் தனி விவரிக்கின்றார்.)

 

பிரம்மசரியம்: - ஸ்திரீ சங்கமத்தைப்பற்றி நினைத்தலும் - ஸ்திரீகளைப் பார்த்தலும் - அவர்களுடைய குணங்களையும் காரியங்களையும் குறித்துப் புகழ்ந்து பேசுதலும் - அவர்கள் அழகாயிருக்கின்றார்களென் றெண்ணுதலும் - ஆசை கொள்ளுதலும் - சம்பாஷித்தலும் - அவர்களுடன் தனித்திருத்தலும் - கூடுதலும் என்னும் இவ்வெட்டுச் சங்கமங்களும் இல்லாதிருத்தலே பிரம்ம சரியமாகும். இது சித்த சுத்தியைத் தருவதாம். (பிரம்மசரிய விரதம் புருஷர்க்கு மட்டுமன்று, ஸ்திரீகளுக்கு முரியதாம். மேல் விவரிக்கப் பட்டுள்ளவை புருஷர்க்காகக் கூறப்பட்டிருப்பினும் உபலக்ஷணத்தால் மாதர்க்கும் கொள்ளற் பாலனவாம். அவ்வாறு கொள்ளுங்கால் ஸ்திரீகள் புருஷசங்கமத்தை நினைத்தலும் - அவர்களைப் பார்த்தலும் - அழகாயிருக்கின்றன ரென்றெண்ணுதலும் என்றிப்படி அவ்வெட்டையும் மாற் றிக்கொள்க. உபலக்ஷணமாவது: - ஒருமொழி தன்னினத்தைத் தழுவு தல்' (உ -ம்) விஷமுண்டவன் சாவான் என்றால் விஷமுண்டவள் சாவாள் - விஷமுண்டவர் சாவார் - விஷமுண்டது சாகும் என்பது போல.)

 

அஹிம்சை: - மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் எந்தப் பிராணிக்கும் இம்சை செய்யாதிருத்தல்.

 

ஜீவகாருண்யம் (பூததயை) - ஒருவன் தன்னிடத்தில் எவ்வளவு கருணை யுடையவனாயிருக்கிறானோ அப்படியே மற்றப் பிராணிகளிடத்திலும் கருணையுடையவனாயிருத்தல்.

 

கபடமின்மை: - எண்ணுவ தொன்று - பேசுவதொன்று – செய்வ தொன்றுமாயிராமல் மனம் வாக்குக் காயமென்னும் முக்கரணங்களும் ஒரே தன்மையாயிருத்தல்.
 

வைராக்கியம்: - பிரம்மா முதல் தாவர மீறாகவுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் காக்கை மலம் போலக் கருதி வெறுத்தல்.

 

பரிசுத்தம்: - இது வெளிச் சுத்தம் உள் சுத்தமென இருவகையாம். மண்ணாலும் ஜலத்தாலும் செய்யப்படும் சரீர சம்பந்தமான சுத்தம் வெளிச் சுத்தமாம். அஞ்ஞானத்தை யொழித்தல் மனோசம்பந்தமான உள் சுத்த மெனப்படும். உள் சுத்தம் நன்றாகச் செய்யப்பட்டால் வெளிச் சுத்தம் அவசியமில்லை. (உள் சுத்தமில்லாமல் வெளிச் சுத்தமாகிய சரீர சுத்தம் மட்டுமிருந்தால் பிரயோசனப்படாது. அப்பியாசிகள் இரண்டையும் உடையராயிருத்தல் அவசியம். ஆனால் சரீராபிமான மற்ற ஞானிகள் வெளிச்சுத்தமின்றி யிருப்பர். அவர்களுக்கு அது அவசியமுமன்று.)

 

இடம்பமின்மை: - தியானம் பூஜை முதலானவற்றினிடத்து உண்மையான பக்தியில்லாமல் பிறர் புகழும்படியாக அவர்களெதிரில் செய்தாலும், ஒரு வருமில்லாத காலத்தில் அத்தியயன பூசாதிகளைச் செய்யா தொழிதலும் இடம்பமாம். அவ்வாறு பிறர் புகழ்ச்சிக்காகச் செய்யாது நிஜபக்தி யோடு செய்தல் வேண்டும். இதுவே இடம்ப மின்மையாம்.

 

சத்தியம்: - தான் நன்றாய்ப் பார்த்ததும் கேட்டதுமான விஷயத்தையே சொல்லுதலும் பிரஹ்மம் ஒன்றே சாத்தியம் எனச்சொல்லுதலும் சத்திய மெனப்படும். (பார்த்ததைப் பார்த்தபடியும் கேட்டதைக் கேட்டபடியும் உள்ளது உள்ளவாறே சொல்லுதலே சத்தியமாயினும், பிறர்க்கு நேர்ந்த ஆபத்து நீங்கி மேன்மை யுண்டாவதற்காகச் சொல்லும் பொய்யும் சத்தியமேயாம். ஆனால் இப்பொய்யினால் ஒருவனுக்கும் யாதொரு விதமான ஆபத்து முண்டாகலாகாது. இது குற்றமற்ற நன்மை தருவதாயிருத்தல் வேண்டும். இதையே தமிழ் மறையும் 'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்' என விதித்தது. பிறிதோருயிர்க்குத் தீமையுண்டாக்காத சொற்களைச் சொல்லுதலே சாத்தியமாம்.)

 

மமகாரமின்மை: - தன்னுடையவை யல்லாத தேகம் மனைவி முதலானவற்றைத் தன்னுடையவை யென்றெண்ணும் எண்ணம் மமகாரமாம். அவ்வெண்ணத்தை விடுதலே மமகாரமில்லாமையாம். இதனால் மனிதன் முத்தியை யடைகின்றான்.

 

நிச்சலத்தன்மை (அ) உறுதி: - குருவாக்கியங்களினாலும் வேதாந்த வசனங்களினாலும் நிச்சயிக்கப்பட்ட பொருளெதுவோ அப்பொருளினிடத்தே நிச்சய புத்தி கொண்டு உறுதியாய் அதன் வழி நிற்றல்.

 

அபிமான மின்மை: - கல்வி செல்வம் தவம் அழகு குணம் குலம் ஆஸ்ரமம் முதலானவைகளால் உண்டான நான் பண்டிதன், நான் பணக்காரன், நான் தவசி, நான் அழகுள்ளவன், நான் பிராம்மணன், நான் யதி என்பவையாதிய அகங்காரங்களை விடுதல்.

 

ஈசுவாதியானம்: - மனம் வாக்கு காயமென்னும் திரிகரணங்களாலும் விஷய சம்பந்தமான சகலகாரியங்களையும் அறவே விட்டுத் தன் ஆத்மாவையே சிந்தித்தல் எதுவோ அது ஈசுவர தியானமாம்.

 

ஞானிகளின் கூட்டுறவு: - பிரம்மவித்துக்களை எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் நிழல் போல் கூடியிருத்தல்.

 

ஞான நிஷ்டை: - கர்மங்களைச் செய்வதில் சிறிதும் விருப்பமில்லாமல் ஞான சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட சிரவணம் முதலான சாதனங்களினிடத்து விருப்பங்கொண்டிருத்தல் ஞான நிஷ்டை யாகும்.

சமபுத்தி: - செல்வம் முதலானவை வந்த காலத்தில் இன்பமுற்றுச் சந்தோஷப்படாமலும் ஜுரம் முதலான துன்பம் நேர்ந்தபோது துக்கப்படாமலும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவித்தல் சமபுத்தியாம்.

 

கௌரவம் விரும்பாமை: - உலகத்தில் ஜனங்கள் என்னை உத்தமனென்றும் பூசிக்கத் தக்கவனென்று மறிந்து பூசிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருத்தல்.

 

ஏகாந்த வாசம்: - சத்விசாரத்திற்கு சனக்கூட்டம் தடையாமென்றெண்ணித் தனியாக இருத்தல் ஏகாந்த வாசமாம்.

 

மோக்ஷ வாஞ்சை: - எனக்கு சம்சாரபந்த விடுதலை விரைவில் எப்பொழுது வாய்க்குமோ என மிகவும் திடபுத்தி கொண்டிருத்தலெதுவோ அது மோக்ஷ வாஞ்சை எனப்படும்.

 

(சாதன சதுஷ்டயத்தி (நான்கில் மூன்றாவதாகிய சமாதிஷட்க சம்பத்தி ஆறனுள் இரண்டாவதாகிய தமம் கூறப்படுகின்றது.)

 

(2) தமம்: - புத்தியினிடத்திலுள்ள தோஷங்களை நிவர்த்திப்பதற்காக பிரம்மசரியம் முதலான தர்மங்களினால் புத்தியைத் தண்டித்தலே தமமெனப்படும். இது மனேசாந்திக்குக் காரணமாகின்றது. (மனதை விஷயங்களில் செல்லவிடாமல் தடுத்தல் சமமென்றும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் ஊறு - சுவை - ஒளி, நாற்றம், ஓசை (பரிசம் - ரசம் - ரூபம் - கந்தம் - சத்தம்) என்னும் தத்தம் விஷயங்களிற் செல்லவிடாது தடுத்தல் இங்குக் கூறிய தமமென்றும் அறிக. 'சமம் அகக்கரண தண்டம் தமம் புறக்காண தண்டம்' என்பது கைவல்லியம். தேகத்தினுள்ளிருந்து விஷயங்களை யறிதற்குச் சாதனமாயிருப்பது அந்தக்கரண மெனப்படும். அது விருத்தி (தொழில் செய்யும்) பேதத்தால் நான்கு வகையாம். அவை மனம் புத்தி சித்தம் அகங்காரம்.


இவற்றுள்,


மனம் - சங்கற்பத்தை (நினைத்தலைச் செய்வது.
புத்தி - பதார்த்தங்களின் நன்மை தீமைகளை நிச்சயிப்பது.
சித்தம் - சிந்தித்தலைச் செய்வது.
அகங்காரம் - நான் என்று அபிமானித்தல்.

 

இவ்விஷயங்கள் பின்னால் கூறப்படுமேனும் அவசியம் நோக்கி ஈண்டுச் சுருங்கக் கூறப்பட்டன.

 

இந்திரியங்களைத் தடுத்தல் தமமென்று கூறாமல் புத்தியைத் தண்டித்தல் தமமென்று மேல் கூறியது ஏனெனில்: முற்கூறிய பிரம்மசரியம் முதலானவைகளால் புத்தியினிடத்துள்ள குற்றங்களைப் போக்குதல் வாயிலாக இந்திரியங்களைத் தடுத்தல் சாத்தியமாகும் என்பதை யுணர்த்தற்கேயாம் என்க. (மேல் இந்திரியங்களைக் குறிப்பிடுவதும் காண்க.)

இந்திரியங்கள் சுயேச்சையாய் விஷயங்களிற் பிரவர்த்திக்கும்போது காற்றின் வழிச் செல்லும் நெருப்பைப் போல, அந்த இந்திரியங்களை அனுசரித்து மனமும் ஓடுகின்றது. இந்திரியங்கள் தடுக்கப்படுமானால் மனமும் தன் வேகத்தை விட்டு யோக்கியத்தன்மை யடைகின்றது; அதனால் மனம் பரிசுத்த மடைகின்றது; அப்படி நிர்மலத்தன்மையடைவதால் மனிதனுக்கு மோக்ஷம் சித்திக்கின்றது. வேறுவிதத்தால் சித்திப்பதில்லை. ஆகையால் எல்லா இந்திரியங்களையும் விஷயங்களிற் செல்லவொட்டாமல் தடுப்பதே மனோ சுத்தத்திற்கு மூலமாகும். அவ்வாறு இந்திரியங்களைச் செவ்வையாய் அடக்குவதனால் மனதில் விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் எண்ணம் உண்டாகாது. விஷயபோகத்தை விடுவதால் மனமானது தன் கெட்ட சுபாவத்தைவிட்டு மெல்ல மெல்ல உபசாந்தியை (டாமல் அடங்கியிருத்தலை) யடைகின்றது. இவ்வாறு மனம் வெளிவியாபாரங்களை விட்டு அடங்கப்பெறுவதையே மோக்ஷ (பந்தநிவிர்த்தி ஆனந்தப்பிராப்திவடிவ) மென்று மோக்ஷத்தின் தன்மையை யறிந்த பெரியோர் கூறுவர்.

 

ஆதலால் முக்தியையடைய விரும்புவோருக்குத் தமத்தைவிட நன்றாய்ச் சுலபமான மனோநிர்மலத்திற்குரிய மார்க்கம் வேறில்லை. தமத்தினால் மனம் தன் குற்றங்களை விடுத்துச் சாந்தியை விரைவில் அடைகின்றது. தேசகால பாத்திரங்களை யனுசரித்துச் செய்யப்பட்ட பிராணாயாமத்தினால் நிச்சலத் தன்மையும் நிர்மலத்தன்மையும் நல்ல ஞானமும் உண்டாகும்; அவை, எப்பொழுதும் அழியா. ஆகையால் புத்தி வானாயுள்ளவன் சித்த சாந்தியின் பொருட்டு பிரயத்தின பூர்வகமாய்த் தமத்தைச் செய்யவேண்டும்.

 

(மூக்கின் இடது துவாரத்தின் வழியாய் இடையென்னும் நாடியால் பிராணவாயுவை உள்ளுக்கிழுத்து சுழுமுனையால் அக்காற்றை யடக்கி மூக்கின் வலது துவாரவழியால் அக்காற்றை விடுதலாகிய பூரக்கும்பகரேசகங்களுக்குப் பிராணாயாமமென்று பெயர். இது அஷ்டாங்க யோகங்களிலொன்று. மனம் விஷயங்களில் செல்லாமல் தடுக்கப்படுதற்கு இதுவும் ஓர் வழியாகும். ஆயினும் இது மிக்க கஷ்டசாத்தியமானது. எல்லோராலும்
செய்யக்கூடியதல்ல.
 

(ஆனால் இங்குக் கூறப்பட்ட பிராணாயாமமென்பது இதுவல்ல. மேல் இவ்வாசிரியரே பிராணாயாமலக்ஷணங் கூறுமிடத்து எல்லாவிதமான மனோ வியாபாரங்களையும் தடுத்தலே பிராணாயாமமாம்'எனக் கூறியிருத்தலின் இங்கும் அதுவே கொள்ளத்தக்கது. ஆகையால் பிராணாயாம வடிவதமத்தால் எனப் பொருள் கொள்ளப்படும்.) எல்லா இந்திரிய வியாபாரங்களையும் தடுப்பதனாலும் அனுபவயோக்கியமான பதார்த்தங்களினிடத்துள்ள குண தோஷங்களை (நன்மை தீமைகளை) விசாரிப்பதனாலும், பரமேசுவரனுடைய அனுக்கிரகத்தாலும், குருவின் கிருபையாலும் மனமானது விரைவில் சாந்தியை யடைகின்றது.

 

(தோஷ திருஷ்டியாகிய அங்குசத்தால் மனதாகிய யானையைச் சுவாதீனப் படுத்துவது சமம். தோஷ திருஷ்டி பூர்வகமாய்ச் சாஸ்திர சிந்தனையாகிய சாட்டையால் சப்தாதி விஷய வடிவமார்க்கத்தில் போகும் இந்திரியங்களாகிய குதிரைகளைச் சுவாதீனஞ் செய்தல் தமம் என்னும் விசார சாகரக் குறிப்புரை ஈண்டறியத்தக்கது.)

 

(3) தீதிக்ஷை: - இது சகித்தலெனவும்படும். பிராரப்தத்தின் வேகத்தால் நேரிடும் ஆத்யாத்மிகம் முதலான துக்கங்களைச் சிந்திக்காமல் சகித்தல் திதிக்ஷையாம். மோக்ஷத்தைக் கோருமவனுக்கு இந்தத் திதிக்ஷைக்குச் சமானமான சாதனம் வேறில்லை. தைரியசாலிகள் இதையே கவசமாகத் தரித்துக் கொண்டு (தங்கள் காரியசித்திக்குத் தடையாக உண்டாகும்) எல்லா இடையூறுகளையும் நாசமாக்கி மாயையை ஜெயிக்கின்றார்கள். இக்கவசம் வச்சிராயுதத்தாலும் சேதிக்கப்படாது. அஷ்டாங்க யோக சித்திகளும் சுவர்க்காதிபத்தியம் முதலானவைகளா லுண்டாகும் சுகானுபவ சித்தியும் சகிப்புத் தன்மை யுடையோர்க்கே யுண்டாம். அஃதில்லாதவர்கள் மரத்திலிருக்கும் சருகானது காற்றால் உதிர்ந்து விடுவதுபோல் நேரிடும் தடைகளால் எடுத்த காரியத்தைச் சாதிக்கமுடியாமல் விழுந்து போவார்கள். தவம், தானம், யாகம், தீர்த் தம், விரதம், சாஸ்திரம், ஐசுவரியம், மோக்ஷம் ஆகிய யாவும் சகிப்புடையவர்களாலேயே தான் அடையப்படும். பிரம்மசரியம், அஹிம்சை, சாது பூஜை, பரநிந்தனையைப் பொறுத்தல் என்னும் இவை திதிக்ஷையுடையார்க்கே சித்திக்கும். தேவதைகளாலும் மனிதர்களாலும் நேரிடும் எல்லாத் தடைகளும் சகித்தலையுடையோரிடம் சேரா. விக்கினங்களுக்குப் பயந்து பின் வாங்காதவனுக்கு எல்லாச் சித்திகளும் அணிமாதி அஷ்ட ஐசுவரியங்களும் கைகூடும். ஆகையால் மோக்ஷத்தை விரும்புகிறவன் காரியசித்தியின் பொருட்டு அதிகமான சகிப்பைச் சம்பாதிக்க வேண்டும்.

 

தீவிரமான மோக்ஷாபேக்ஷையும் மிகுந்த ஆசையின்மையும் ஆகிய இவ்விரண்டும் திதிக்ஷைக்குத் துணைக் காரணங்களாம். (சகிப்புத் தன்மையுண்டா தற்குத் துணைக் காரணங்களாம்.)


 "மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

 எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
 அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
 கருமமே கண்ணாயி னார்"


 (என்ற செய்யுளும் ஈண்டு அறியத்தக்கதாம்.)

 

(சிரவணம் மனனம் முதலியவைகளைச் செய்யுங்காலத்தில் அவைகளுக்கு
 விரோதமான சீதோஷ்ணம் பசிதாகம் முலியவைகளைச் சகித்தல் திதிக்ஷை. இஃது இல்லாவிடின் சிரவணாதி காலங்களில் பசிதாகம் முதலியவைகள் சம்பவிக்கும். அப்போது அவற்றை நிவிர்த்திக்க மனது பிரவர்த்திக்கும். அதனால் சிரவணாதிகளுக்கு விக்கின முண்டாகும் ஆதலால் திதிக்ஷை (சகித்தல்) அவசியம் வேண்டும் என்பது விசாரசாகரம்.

 

இவ்வாறின்றி அப்பொழுதைக்கப்பொழுது உண்டாகும் வியாதிகளின் நிவர்த்திக்காக முயற்சித்துக் கொண்டிருப்பனேல் அவற்றைப் போக்க ஒளஷதங்களைப் புசிக்கவும் அவற்றை விசாரித்துக் கொண்டும் தேடிக்கொண்டு மிருக்கவும் நேரிடும். அதனால் சிரவண மனனாதிகளை விடவேண்டிவரும். எதியாயுள்ளவனொருவன் இவ்வாறு விடுவானானால் அவன் கதியாதாம்! இரண்டு விதத்திலும் பயனடையாமல் இரண்டுங் கெட்டவனாவானன்றோ.

 

ஸ்ரீ கிருஷ்ணபகவான் கீதையில் அஷ்டாங்க யோகங்களை அப்பியசிக்கும் சன்னியாசியைக் குறித்துக் கூறுமிடத்து யோகத்தினின்று இடையில் தவறி விட்டவன் இறந்தபின் புண்ணியவான்களினுலகத்தை யடைந்து மீண்டும் பரிசுத்தவான்களுடைய வீட்டிலாயினும் பிரபுக்களின் வீட்டிலாயினும் பிறந்து யோகசித்தியை யடைவான். கர்மங்களை விடாமல் செய்து கொண்டிருப்பவனும் அக் கர்மபலத்தைக் கோராமல் செய்வானாயின் அவனும் புண்ணியவான்களி னுலகத்தையே யடைவான் எனக் கூறியிருத்தலின் சிரவண மனனாதிகளை விடும் சன்னியாசியின் நிலைமை என்னவாகுமென்பது விளங்கும். மேலும், சன்னியாசத்தை மேற்கொண்டதனாலேயே அதாவது சகலகர்மங்களையும் செய்யாமல் விடுதல் மாத்திரத்தாலே ஒருவன் மோக்ஷத்தை யடைய மாட்டான் என்றும் பகவான் கூறியுள்ளார்.

 

ஆகையால் தனக்கு நேரிடும் துக்கங்களைப் பொறுமையாகச் சகித்துச் சக்திக் கேற்றபடி மெல்ல மெல்ல சிரவணம் மனனம் முதலானவைகளைச் செய்ய வேண்டும். அங்ஙனம் சகிக்காவிடின் அதுவரை முயற்சி செய்து சாதிக்கப்பட்ட திதிக்ஷைக்குப் பயனுண்டாகாமற் போகும்.

 

சந்நியாச லக்ஷணம்

 

கர்மமானது மோக்ஷத்திற்குப் பரம்பரைச் சாதனமேயன்றி நேர் (சாக்ஷாத்) சாதனமாகாது. ஞானமே சாக்ஷாத் சாதனமாம். ஆகையால் சகலகர்மங்களையும் அறவே விட்டு ஞானத்தையே அடைய முயலவேண்டும். அப்படிச் சகல கர்மங்களையும் விடுவதே சந்நியாசமாம். சந்நியாசம் என்பதற்குச் சகல கர்மங்களையும் நன்றாக விடுதலைச் செய்வது என்பது பொருளாம். எங்ஙனமெனின், சந்நியாசம் என்னும் பதம் உபராமம் என்னும் சப்தத்தால் வழங்கப்படுகின்றது. உபராமம் என்பது விடுதலையாம். ஆகவே, (சம் = நன்றாக; நியாசம் = பரித்யாகம் அல்லது விடுதலை) சகல கர்மங்களையும் நன்றாகத் தியாகம் செய்தல் சந்நியாசமாம்.

 

கர்மங்களை ஏன் விடவேண்டு மெனின்: - கர்மத்தாலுண்டாம் பலனானது நித்தியமானதன்று; அநித்தியமாகும். முத்தியோ நித்தியமானது. ஆகையால் நித்தியமான வீடுபேற்றை (மோக்ஷத்தை) அடைய விரும்புவோர்க்குக் கர்மத்தினால் ஒரு பயனுமில்லை. (கர்மத்தால் முத்திசித்திக்காதோ? எனின்: கூறுகிறார்.) கர்மத்தாலுண்டாகும் பயனானது உற்பத்தி செய்யத்தக்கதும் அடையத்தக்கதும் செவ்வைப் படுத்தத் தக்கதும் விகாரம் (வேறுபாடு) அடையத்தக்க துமென நான்கு வகையாயுள்ளது. இவற்றைத்தவிர வேறொன்றில்லை. பிரம்மம் தனக்குத்தானே சித்தமாயிருப்பதாகலின் உற்பத்தி செய்யத்தக்கதல்ல; எப்பொழுதும் அடையப் பட்டே யிருக்கின்றதாகலின் அடையத்தக்கதுமல்ல; நிர்க்குணமாயும் நிர்மலமாயுமிருப்பதாகலின் செவ்வையாக்கத் தக்கதுமல்ல; கிரியையற்றதாகலின் விகாரமடையத் தகுந்ததுமல்ல (இவற்றை விவரிக்கிறார் ஆசிரியர்.)
 

பிரம்மம் உற்பத்தியில்லாதது: - 'பிரம்மத்தின் உற்பத்திக்குக் காரணமாயுள்ளவ னொருவனுமில்லை'' என்னும் வேதவாக்கியத்தின்படி பிரம்மமேமற்றெல்லாவற்றின் உற்பத்திக்குக் காரணமாயிருப்பதன்றி அது மற்றொருவனால் உற்பத்தி செய்யத்தக்கதன்று,
 

பிரம்மம் அடையப்படுவதன்று: - அடைபவன் அடையப்படும் பொருள் என்னும் இவ்விரண்டிற்கும் பேதமிருந்தால் (அவையிரண்டும் தனித்தனிவெவ்வேறு பொருள்களாயிருந்தால்) அடைபவனால் அடையப்படும் வஸ்துவானது அடையப்படும். பிரம்மமோ அடைபவனுடைய சொரூபமாகவேயிருத்தலின் அடையத்தகுந்த பொருளன்று.

பிரம்மம் செவ்வை செய்யப்படத் தக்கதன்று: - அழுக்கடைந்ததான கண்ணாடி முதலியவைகளுக்கே * சம்ஸ்காரம் (செவ்வை செய்தல்) அங்கீகரிக்கப்படுகின்றது. ஆகாயத்தைப் போல நிர்மலமாயுள்ள பிரம்மத்திற்குச் சம்ஸ்காரம் சம்பவியாது. உலகத்தில் அழுக்கடைந்த பதார்த்தத்தினிடத்துள்ள அழுக்கைப் போக்கச் சம்ஸ்காரம் செய்யப்படுகின்றது. பிரம்மம்மலினவஸ்துவன்றே. நிர்மலமான தன்றோ! ஆகலின் அதற்குச் சம்ஸ்காரம் வேண்டப்படுவதின்று. தவிர, ஓர் வஸ்துவிற்கு மற்றொரு வஸ்துவால் தோஷம் நேரிடின் அத்தோஷம் சம்ஸ்காரத்தால் போக்கப்படும். இம்முறைமையின் படி பிரம்மத்திற்குத் தோஷத்தையுண்டாக்கும் பொருள் ஒன்றிருக்குமாயின் அது பிரம்மத்திற்கு அன்னியமாய் வேறானதாயிருக்க வேண்டும். பிரம்மம் அத்து விதமானது (இரண்டாவதற்றது); அதற்கு வேறாக மற்றொரு பொருளில்லை. மேலும் பிரம்மம் கிரியையற்றதாகலின் வேறொரு வஸ்துவுடன் சம்பந்தப்படத்தக்கது மன்று, ஆகலின் பிரம்மம் தோஷமுடையது மல்ல. சம்ஸ்காரம் வேண்டப்படுவதுமின்று.

 

* சம்ஸ்காரம் = மலத்தின் நிவிர்த்தி, குணத்தின் உற்பத்தி என இருவகை.
 இங்கு மலநிவர்த்தி.

 

அன்னிய வஸ்துவின் சம்பந்தத்தால் உண்டாகும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பிரமத்தினிடத்து சம்ஸ்காரம் வேண்டாவிடினும் தைலத்திற்குச் சுகந்தம்
உண்டாக்குவது போல குணாதான (குணத்தின்) உற்பத்தி வடிவமான சம்ஸ்காரமாயினும் சம்பவியாதோ? எனின், ஒருகாலும் சம்பவியாது. ஏனெனின், ஓர் வஸ்துவிற்குக் குணத்தையுண்டாக்குதல் வேண்டுமாயின் அவ்வஸ்து குணத்தோடு கூடியதாயிருத்தல் வேண்டும். குணத்தோடு கூடியவஸ்துவிற்கே மற்றொரு குணத்தைச் சம்பந்தப்படுத்தலாம், பிரம்மம் நிர்க்குணமானதென்று வேதம் கூறுகின்றது. ஆகலின் நிர்க்குணமான பிரம்மத்திற்கு, தைலத்திற்குச் சுவாசனை யூட்டுதல் போல வேறொரு குணத்தையுண்டாக்குதல் வடிவ சம்ஸ்காரம் சம்பவியாது.

 

பிரம்மம் † விகாரப் படுவதன்று: - ஒரு வஸ்து விகாரமடையத் தக்கதாயின் அது அவயவங்களோடு கூடியதாயும் பரிணாமம் (வேறு வடிவம்) அடைவதாயுமிருக்க வேண்டும். அதை விகாரப்படுத்துவதற்கு வேறொரு வஸ்து வேண்டும். பால் முதலான வஸ்துக்கள் மோர் முதலானவைகளால் தயிர் முதலான வடிவங்களாகப் பரிணமித்தல் போல. ஆனால் பிரம்மமோ நிரவயவமானதாயும் கிரியையில்லாததாயும் இரண்டாவதற்றதாயுமிருத்தலின் விகாரமடையதக்கதல்ல. ரூபமற்றது, கிரியையற்றது, அசைவற்றது, அசங்கமானது என்று பிரம்மத்தின் உண்மை வடிவம் சுருதியுக்திகளால் நிர்ணயிக்கப்பட்டிருத்தலின் பிரம்மம் எவ்விதத்தினும் கர்மத்தால் அடையக்கூடிய தன்றாம். ஏனெனின் கர்மத்தாலுண்டாம் பயன் அநித்தியமானதாயும் பிரம்மம் நித்தியமான தாயுமிருத்தலின் என்க.

 

விகாரம் = முன் ரூபத்தை விட்டு வேறு ரூபத்தை அடைதல். இது பரிணாமம் எனவும் படும்.

 

புண்ணிய பாவங்களிரண்டும் கலந்ததாகிய மிசிர கர்மத்தினால் உண்டாகிய தேகம் முதலாகிய இவ்வுலகப் பொருள்கள் எங்ஙனம் அழிந்து போகின்றனவோ அங்ஙனமே புண்ணிய கர்மத்தாலுண்டாகும் சொர்க்கமும் நாசமடைகின்றது. 'எது கர்மத்தாலுண்டாகின்றதோ அது அநித்தியமான' தென்று சுருதி கூறுகின்றது. சொர்க்கமும் கர்மத்தாலுண்டாவதாகலின் அநித்தியமேயா மென்பது இதனால் விளங்குகின்றது.

 

ஜெகத்திற்குக் காரணவஸ்து எதுவோ அது நித்தியமான தென்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. ஜெகத் காரணமாயிருப்பது பிரம்மமேயென்று சுருதியானது அறுதியிட்டுக் கூறுதலின் அப்பிரம்மம் நித்தியமானதேயாகும். சுவர்க்கமும் அப்பரப் பிரம்மத்தினாலுண்டானதே. 'பிரம்மமொன்றே முக்காலத்துமுள்ளது' என்பது சுருதிவாக்கியம். இதனால் பிரம்மத்திற்கே நித்தியத்துவம் சித்திக்கின்றது.

 

(கர்மம் மோக்ஷத்திற்கு சாக்ஷாத் சாதனமாகா தென்பது நிரூபிக்கப்படுகின்றது)

 

'மோக்ஷமானது கர்மத்தாலும் சித்திக்காது; சந்தானத்தாலும் சித்திக்காது' என்று சுருதியானது கர்மம் மோக்ஷத்திற்கு சாக்ஷாத் சாதனமாகா தென்று நிஷேதிக்கின்றது. சாக்ஷாத்காரணமாகாது என்றதனால் பரம்பராசாதனமா மென்பது விளங்குகின்றது.


      (ஆயின் மோக்ஷத்திற்கு ஏதுவாயிருப்ப தெது வெனின் :) ஜீவாத்மாயார்? பரமாத்மா யார்? என்று விசாரித்தலாகிய ஜீவாத்ம பரமாத்ம விசாரணையின் மூலமாக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்றுணரும் ஜீவப்பிரம்ம ஐக்கிய ஞானமே மோக்ஷ எதுவாம். இதைத்தவிர, ஸ்நானம், கீர்த்தனம், ஜெபம், உபவாசம், யாகம், மந்திரதந்திரங்கள் முதலிய வேறொன்றாலும் முத்தி சித்திக்காது. 'மோக்ஷமானது ஞானத்தாலேயே சித்திக்கும்' என்றுகூறும் வேதமே இதற்குப் பிரமாணமாம். ஆகவே, ஆத்மானாத்ம விவேகமுடையவனாய், விரக்தியடைந்து, பிரம்மமொன்றே நித்திய மென்றறிந்து அத்தகைய பிரம்மபாவத்தையடைய விரும்புவோனுக்கு அநித்திய பலனைத் தரும் கர்மத்தில் ஆசக்தியுண்டாகாது. அநித்தியமாகிய சுவர்க்க முதலான வற்றை யடைதற் பொருட்டுச் சாதனமாக விதிக்கப்பட்ட *
நித்திய நைமித்தி கங்களாகிய எல்லாக்கர்மமும் மோக்ஷசாதனமன்று. ஆதலின் பிரம்ம பாவத்தையடைய விரும்பும் முமுக்ஷவால் விடத்தக்கது.

 

* எதைச் செய்யாவிட்டால் தோஷமுண்டாகுமோ அது நித்தியம் - சந்தியாவந்தனம் முதலியவை. நிமித்தத்தால் (காரணத்தால்) செய்யப்படுவது நைமித்திகம் - விநாயக பூஜை முதலியன.

 

சமுச்சயவாத கண்டனம்.

 

(சமுச்சயவாதமாவது - கர்மம் ஞானம் என்னும் இரண்டும் மோக்ஷ சாதனமாமெனல். அது சரியல்லவென்று ஈண்டுக் கண்டிக்கப்படுகின்றது.)

 

சங்கை: - முமூக்ஷவுக்கும் ஞான கர்மங்களிரண்டும் சாதனங்களேயாம். எப்படி இரண்டு கைகளும் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்து முடிக்கின்றனவோ, அப்படியே கர்ம ஞானங்களிரண்டும் மோக்ஷ விருப்பமுள்ளவனுக்கு மோக்ஷமாகிய காரியத்தைச் சாதிக்கக் கூடியவைகளேயாம். ஓர் விளக்கிலுள்ள வர்த்தியைச் சரியாகச் செய்யும் காரியத்தால் அவ்விளக்கானது மிகவும் பிரகாசமாய் விளங்குவது போல, மனிதனுக்கு ஞானமானது சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கும் கர்மங்களைச் செய்வதனால் பிரகாசமடைகின்றது. இதனால் கர்மாபேக்ஷையுடைய ஞானமாயினும் அல்லது கர்மஞானங்கள் சேர்ந்து இரண்டுமாயினும் மோக்ஷத்திற்குச் சாதனமாகும் என்று வேதமுணர்ந்த பெரியோர் கூறுகின்றனர். ஆதலால் முமூக்ஷ வானவன் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை விடல் வேண்டும் - செய்யலாகாது - என்பது எப்படிப் பொருந்தும்? எனின், இவ்வித ஆக்ஷேபம் மூடர்களால் செய்யப்பட வேண்டுமே யன்றிப் பண்டிதர்களால் செய்யப்படக்கூடாது. ஏனெனின், கர்மத்திற்குப் பலன் வேறு; ஞானத்திற்குப் பலன் வேறு. இரண்டிலும் அதிகாரிகளுக்கும் சாதனங்களுக்கும் பேதமுண்டு. கோரிக்கையுள்ளவன் கர்மத்திற்கு அதிகாரி; கோரிக்கையில்லாதவன் ஞானத்திற் கதிகாரி. கர்மம்செய்வோனுக்கு மனைவி யாகதிரவியங்கள் முதலியவை சாதனமாம்; ஞானத்தைக் கோரியவனுக்கோ குருவைத் தவிர வேறு சாதனம் தேவையில்லை. கர்மத்தினால் அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக அகங்காரம் விருத்தியாகின்றது. ஞானத்தால் பிரதிநிமிஷமும் அகங்காரத்தின் நாசம் நேரிடுகின்றது. கர்மத்தை நிரூபிக்கும் சாஸ்திரம் பிரவிருத்தியை யுண்டாக்குவது; ஞானத்தைப் பிரதிபாதிக்கும் சாஸ்திரம் நிவிர்த்தியை யுண்டாக்குவது; இவை முதலான ஒன்றுக் கொன்று விரோதமானலக்ஷணங்கள் கர்ம ஞானங்களின் சாதனங்களிலும் அதிகாரிகளிடத்துமிருக்கின்றன. ஆகலின் கர்ம ஞானங்களிரண்டின் சாதனங்களுக்கும் அவ்வாறே இரண்டின் அதிகாரிகளுக்கும் அன்னியோன்னியாபேக்ஷை இல்லை. ஞானம் மேல் நிலையையும் கர்மம் கீழ் நிலையையும் அடைவிக்கும். அங்ஙனமாக எப்படி அன்னியோன்னியாபேக்ஷை யிருக்கும். சேர்க்கையாயினும் எப்படிச் சம்பவிக்கும். நெருப்பிற்கும் துரும்பிற்கும், ஒளிக்கும் இருளுக்கும் எப்படிச் சேர்க்கை சம்பவியாதோ அப்படியே ஞானத்திற்கும் கர்மத்திற்கும் சேர்க்கையுண்டாகாது.


 கர்மம் ஞானத்திற்கு உதவியாகாது.

 

கர்மம் ஞானத்திற்கு உதவியாவதுமில்லை. (ஒளியானது தோன்றத் தொடங்கின மாத்திரத்தில் இருளானது நாசமடைவது போல) ஞானத்தின் ஆரம்ப மாத்திரத்தால் கர்மம் பிரகாசமடைவதில்லை. அப்படித் தனக்கு நாசத்தை (அபாவத்தை) யுண்டாக்கும் ஞானத்திற்குக் கர்மம் எங்ஙனம் உதவி செய்வதாகும். கோடிக்கணக்கான விறகுச் சுமைகளால் எரிக்கப்பட்ட அக்கினியாயினும் சூரியனுக்கு உதவி செய்யத் தகுந்த தாகாதது போல ஆயிரங்கோடி கர்மங்களும் ஞானத்திற்கு உபகாரம் செய்வதற்குத் தகுதியுள்ளவையாகா. வேறென்னாகும்? எனின், தாமே நசித்துப் போகும்.

 

ஒரு காரியத்தைச் செய்து முடித்தற்கு இரண்டு கைகளின் உதவியும் அவசியமாயிருத்தல் போல மோக்ஷத்தையடைதற்கும் கர்மம் ஞானம் என்னும் இவ்விரண்டும் தேவையாம் என முன்னர் சங்கிக்கப்பட்டது. அச்சங்கை சரியன்று. ஏனெனில் இரண்டு கைகளும் ஒரே கர்த்தாவை ஆசிரயித்திருக்கின்றன. தவிர, இரண்டு கைகளும் கர்மத்திற்கே அதிகார முள்ளவை. ஆகலின் அவைகளிரண்டிற்கும் சேர்க்கை பொருந்தும். அதுபோல கர்மத்திற்கும் ஞானத்திற்கும் சேர்க்கை பொருந்தாது. ஏனெனில், ஞானத்திற்குக்கர்த்தா வேறு; கர்மத்திற்குக் கர்த்தா வேறு. ஞானத்தின் காரியம் வேறு; கர்மத்தின் காரியம் வேறு. இப்படி கர்த்தாவிலும் காரியத்திலும் பேதமுண்டாயிருத்தலின் ஒன்றற்கொன்று சேர்க்கையிற் பொருந்தாது. ஆகலின் இரண்டு கைகளின் திருஷ்டாந்தம் சரியன்று.
 

கர்மமானது கர்த்தாவால் செய்யப்படுவதற்கும் செய்யப்படாமலிருத்தற்கும் வேறொரு விதமாய்ச் செய்யப்படுவதற்கும் சாத்தியமானதாயிருக்கின்றது.
(அதாவது ஒருவன் கர்மத்தைச் செய்தாலும் செய்யலாம்; செய்யாமலுமிருக்கலாம்; வேறொரு விதமாகவும் செய்யலாம். ஆகையால் கர்மமானது கர்த்தாவி னதீனப்பட்டதாகும்.) அப்படி வஸ்துவினுடைய ஞானமோ ஒருபோதும் கர்த்தாவிற் கதீனப்பட்டதாகாது. ஞானமானது வஸ்துவின் அதீன்மானதே யாகும். ஒரு வஸ்துவை, உள்ளது உள்ளபடி அறியும் ஞானம் *
பிரமாணத்தா லுண்டாகுமேயன்றி, கர்மத்தாலாயினும் யுக்திவன்மையாலாயினும் உண்டாதலில்லை.

 

* அந்தக் கரணத்தின் விருத்தியால் (தொழிலால்) அறியத்தக்க வஸ்துவிற்கு பிரமா என்று பெயர். அந்தப் பிரமாவை யறியக் காரணமாயிருப்பது எதுவோ அதற்குப் பிரமாணம் என்று பெயர்.

 

சங்கை: - கர்மமானது கர்த்தாவி னதீனமானது. ஞானமோ அப்படி கர்த்தாவினதீனமாகாது வஸ்துவி னதீனமேயாகும் என்று கூறப்பட்டது. அது சரியென்று தோன்றவில்லை. ஏனெனில் ஞானமானது வஸ்துவினதீனமாகுமானால் சம்சய ஞானம் விபர்யயஞானம் முதலானவை எப்படி யுண்டாகும்? உண்டாகலாகாதன்றோ? அப்படி உண்டவாதால் ஞானம் வஸ்துவி னதீனமன்று.

 

சம்சயம் = சந்தேகம். தூரத்தில் நாட்டியிருக்கும் கட்டையைப்பார்த்து கட்டையோ புருஷனோ? எனச் சந்தேகித்தல் சம்சயஞானம்.

விபர்யயம் = மாறுபாடாக அறிதல். கட்டையைப் பார்த்தும் புருஷன்தா னென்று கொள்ளுதல் விபர்யயஞானம்.

 

சமாதானம்: - சம்சயஞானம் முதலானவை பிரமாணத்தினுடைய லோபத்தால் (குறைவால், தோஷத்தால்) உண்டாவனவேயன்றி வஸ்துவின தீனமானவையல்ல. (கட்டையா? புருஷனா? என்னும் சம்சயஞானம் முதலானவை கண்பார்வை முதலிய பிரமாணத்தினிடத்துள்ள தோஷத்தாலுண்டாவனவன்றி வஸ்துவி னதீனமானவையன்று. வஸ்துவோ நித்தியமும் முக்காலத்து முள்ளதும், ஸ்திரமும் வியாபகமுமானதுமாகிய பரப்பிரம்மமாகும். சுருதிரூபமாகிய பிரமாணமிருப்பின் கர்மாபேக்ஷையில்லாத அப்பரப் பிரம்மத்தின் ஞானம் தவறாமல் கிடைக்கும். எப்படி நல்ல பார்வையிருந்தால் ரூபஞானம் உண்டாகுமோ அப்படியே சுருதிவடிவப் பிரமாண மிருந்தால் வஸ்துவி னதீனமான ஞானம் உண்டாகின்றது.

     

உருவத்தை யறியும் விஷயத்தில் புருஷனுடைய கண்கள் யாதொருகர்மத்தையும் அபேக்ஷிக்கிறதில்லை. அதுபோல, சிரவணாதிகளால் உண்டானஞானம் பிரம்ம வஸ்துவைப் பிரகாசிப்பிக்கச் செய்யும் விஷயமாய்க் கர்மத்தை யபேக்ஷியாது, கர்மம் கர்த்தாவினதீனமானதாகும். நன்மை தீமைகள் கர்த்தாவி னதீனமானவை. ஞானம் பிரமாணாதீனமானதாகும். இப்பிரபஞ்சம் மாயையின் வசப்பட்டதாகும்.

 

(கர்மத்தால் மோக்ஷ முண்டாவதில்லை யெனில், சகலரும் மோக்ஷத்தையே விரும்புவார்களாதலின், கர்மத்திற்குக் கதி யாது? எனின், கூறுகிறார்.)

 

நித்தியா நித்திய வஸ்து விவேகமில்லாதவனும், இகலோக பரலோகபோகங்களினிடத்து ஆசையுள்ளவனும், விரக்தியடையாத மனத்தையுடையவனும் எவனோ அவனுக்கே கர்மம் விதிக்கப்பட்டது.
 

எல்லாவற்றிலும் விரக்தியடைந்து மோக்ஷத்தை விரும்புபவனும் பிரம்மானந்தத்தை அபேக்ஷிக்கின்றவனுமாகிய விவேகிக்கோ கர்மம் விதிக்கப்படவில்லை.

 
 (*ருணத் திரய விமுக்தனாகாமல் சந்யாசம் கொள்ளலாகாதாகலின் அதுவரையில் முமுக்ஷவாயினும் கர்மம் செய்யவேண்டுமன்றோ? எனின்)

 

* ருணத்திரயம் = மூன்று வகைக் கடன். (ருணம் = கடன்; திரயம் = மூன்று.)   

 

வேண்டுவதின்று. ஏனெனில் மோக்ஷத்தைக் கோரும் ஞானிக்கு எந்ததி னத்தில் விரக்தியுண்டாகின்றதோ அந்த தினத்திலே தானே அவன் சந்யாசத்தைக்கைக் கொள்வது உத்தமமாகும் என்று சுருதி விதிக்கின்றது. ஆகையால் இந்தக் கர்ம சந்யாசம் (கர்மங்களை விடுதல்) பிரமாண சித்தமானது.

 

(உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இயல்பாகவே மூன்று திறத்தார்க்குக் கடன் பட்டவர்களாயிருக்கின்றனர். அம்மூன்று திறத்தார் யாவர் எனின்: முனிவர், தேவர், தென்புலத்தார் அல்லது பிதிரர். இவர்களுள் முனிவர் கடன் கேள்வியாலும், தேவர்கடன் வேள்வியாலும், தென்புலத்தார் கடன் புதல் வரைப் பெறுதலாலும் தீர்க்கப்பட வேண்டும். இம்மூன்று கடன்களையும் தீர்க்காமலிருப்போர்க்குப் புண்ணிய லோகம் கிடைக்காமல் போவதோடு நரகத் துன்பமும் பிராப்தியாகும் என்று நூல்கள் கூறும். இந்த விதி கர்மத்தை யனுஷ்டிப்போர்க்கே யன்றி ஞானிகளுக்கன்று என்பது இங்கு அறியத்தக்கது.)

 

(வேதோக்தமான கர்மானுஷ்டானத்தை விடுவோனுக்கு பிரம்ம ஞானம் எங்ஙனம் சித்திக்கும்? எனின்: கூறுகிறார்.)

 

ஆத்மதத்துவமானது நித்தியாபரோக்ஷமாகலின் (எப்பொழுதும் பிரத்தி யக்ஷமாகவே விளங்குவதாகலின்) அதைத் தெரிந்து கொள்வதற்கு வேதம் முதலானவை காரணமாகா. ஆகலின் பிரம்ம ஞானத்திற்கு கர்மம் சாதன மாகாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் கீதையில் தான் எனப்படுகின்ற அபரோக்ஷ (பிரத்தியக்ஷ) மான ஆத்மதத்துவமாகிய நான் வேதங்களாலும் தவத்தாலும் போத்யனாக (அறியப்பட) மாட்டேன் என்று வேதம் முதலானவற்றில் ஆத்மஞான சாதனத்தன்மையை நிஷேதித்துள்ளார்.

 

(ஞானம் என்பது தன்னையறிதலாம். அதாவது ஆன்மா தனது எதார்த்த வடிவைக் காணுதலாம். அந்த ஆன்மாவோ ஒரு ரூபமுடையதல்ல ஆகலின் இதுதான் ஆன்மா என்று சுட்டிக் காட்டமுடியாது. ஆனால் வேதமானது ஆன்மாவல்லாத மற்றைப் பொருள்களைச் சுட்டி இதுவல்ல இதுவல்ல என்று கூறிக்கொண்டே போய் முடிவாக எது மிச்சமாய் நீக்க முடியாததாய் இருக்கிறதோ அதுதான் ஆன்மா; அதுதான் நீ என்று கூறுமேயன்றி, இதுதான் ஆன்மா என்று காட்டுவதில்லை. காண்பதாகிய வஸ்து ஒன்றும் காணப்படுவதாகிய வஸ்து ஒன்றும் என இரண்டு வஸ்துக்கள் அவ்விடத்தில் இல்லை; தானே தன்னைக் காணுதலாகிய நிலை, அதாவது ஆன்மா வானது வேறொன்றை எதிரிட்டு நோக்குதலின்றித் தன்மயமாகவே நிலைத்திருத்தலாம். இங்கு ஒரு சங்கை உண்டாகலாம். அதாவது பரப்பிரம்மத்தை யறிதலன்றோ ஞானம். அந்த ஞானமன்றோ முத்தியை யளிப்பது. அதைவிட்டுத் தன்னையறிதலால் அதாவது ஆன்மாவை யறிதலால் பயன் யாது என்று சங்கிக்கலாம். ஆன்மாவும் பரமான் மாவும் சொரூபத்தில் ஒன்றே. அதாவது ஆன்மா எத்தகைய சொரூபத்தை யுடையதோ அத்தகைய சொரூபத்தையே பரமான்மாவும் உடையது. சிறிது பெரிது என்பதைத் தவிர அவ்விரண்டிற்கும் வேறு வித்தியாசமில்லை. ஆகையால் தானாகிய ஜீவ ஆன்மாவை யறிந்தால் தலைவனாகிய பரமான்மாவை யறிந்ததாகும். ஆன்மா குடநீருக்கும் பரமான்மா கடல் நீருக்கும் ஒப்பாம். குடசலமானது கடல் நீரிற் கலந்து கடலாகவே தோன்றுதல் போல, நான் என்னும் ஆன்மாவும் பரமான்மாவுடன் கலந்தால் பரமான்மாவாகும். அதுவே முத்திநிலை. இதையே வேதாந்த நூல்களெல்லாம் 'நீ பிரம்மமாகிறாய்' எனக் கூறுகின்றன.

 

"தன்னையும் தனக்காதாரத் தலைவனை யுங்கண் டானேல் - பின்னையத் தலைவன் தானாய் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன் – உன்னை நீ யறிந்தா யாகில் உனக்கொரு கேடு மில்லை," என்று கைவல்லியம் கூறுவதும் ஈண்டறியத்தக்கதாம். இதன்படி ஒருவன் தனது எதார்த்த வடிவத்தை யறிவானானால், தான் ஜீவனல்ல வென்றும், ஜீவசாக்ஷியாகிய கூடஸ்தன் அல்லது ஆன்மாவேதானென்றும் அறிந்து, தன் ஆதாரத்தலைவனான பரமான்ம சொரூபத்தையு முணர்ந்து, அச்சொரூபமே தானாகும் பிரம்மான்ம ஐக்கியமடைவான் என்பது நூல்களின் கொள்கையாம். இது பற்றியே ஆன்மதத்துவமானது நித்தியாபரோக்ஷ மென்றும் அதைத் தெரிந்து கொள்வதற்கு வேதம் முதலானவை காரணமாகா வென்றும் கூறப்பட்டது.)

 

வேதத்தில் பிரவர்த்தி மார்க்கம் நிவர்த்தி மார்க்கம் என இரண்டு மார்க்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றில் பிரவர்த்தி மார்க்கத்தால் பந்தத்தையும், நிவர்த்தி மார்க்கத்தால் மோக்ஷத்தையும் ஜீவன் அடைகிறான். உலகத்தில் எந்த மூடனாயினும் தான் பந்தப்பட்டிருக்க விரும்புவானா? விரும்பான். விடுதலையையே விரும்புவான். அந்த விடுதலையே முக்தி. (முக்தி, மோக்ஷம், வீடு என்னும் இம்மூன்றும் ஒரே பொருளைத் தரும் சொற்கள். இம்மூன்றிற்கும் விடுதலை என்பதே பொருளாம்.) ஆகலின், அந்த விடுதலையை விரும்புவோன் பந்தத்தைத் தருவதான பிரவர்த்தி மார்க்கத்தைக் கைக்கொள்வானோ? கொள்ளான். நிவர்த்தி மார்க்கத்தையே கைக்கொள்வான். அதுவே கர்ம சந்யாசம். இதுகாறும் கர்மத்திற்கும் ஞானத்திற்கும் சேர்க்கை சம்பவியாது என்பது விரியாகச் சொல்லப்பட்டது. ஆகையால் ஞானத்தை விரும்புவோன் கர்மத்தைக் கட்டாயம் விடவேண்டும்.


சங்கை: - அப்படியானால் கர்மத்தை முதலில் என் கொள்ள வேண்டும்?

 

சமாதானம்: - ஒருவன் ஒரு வஸ்துவைக் கண்டு இதனால் நன்மையுண்டாகும் என்றெண்ணி அதை முதலில் கைக்கொள்கிறான். அங்கனம் கொண்ட பிறகு அதனால் யாதொரு பயனுமில்லை யெனத் தெரிந்து கொள்வானாயின் மீண்டும் அவஸ்துவை அவன் கோருவானோ? கோரமாட்டானன்றோ? அப்படியே இஷ்டத்தைச் சாதிப்பது என்னும் உத்தேசத்தால் முதலில் கிரகிக்கப்பட்டாலும் பின்னர் அதன் நிஷ்பலத்வத்தைத் தெரிந்து கொண்டவன் அதனைக் கைவிடுதலே நலமாகுமன்றே!

 

(எடுத்துக்கொண்ட நூலில் ஞான சாதனமாகவுள்ள சாதன சதுஷ்டயம் கூறப்படுமிடத்தில் சந்யாசத்தைப் பற்றிச் சொல்வானேன்? சந்யாசம் சாதன சதுஷ்டயங்களில் ஒன்றல்லவே? ஆகவே, அதைக்குறித்து இங்கு விவரித்துச் சொல்வது எவ்வாறு பொருந்தும்? என்னும் ஆசங்கை நிகழு மாகலின் அதற்குக் காரணம் கூறுகிறார்)

 

சாதன சதுஷ்டயங்களில் மூன்றாவதாகிய சமாதிஷட்கசம்பத்தியில் உபரதி யென ஒன்று கூறப்பட்டிருக்கின்றதன்றே. உபரதி என்னும் சப்தத்திற்கு முதலில் காணப்படும் பொருள்களிலிருந்து நிவிர்த்தியாதல் என்பது பொருள். இந்த உபரதியும் முக்கியம் அமுக்கியம் (கௌணம்) என இருவகைப்படும். எங்ஙனமெனின், * சப்தவிருத்திக்கு (சப்தத்தால் அறியப்படும் அர்த்தத்திற்கு) திருசிய வஸ்துக்களை விடுதல் அதாவது காணப்படும் வஸ்துக்களினிடத்துள்ள அபிமானத்தை விடுதல் என்பது முக்கியார்த்தமாம். கர்மத்தை மாத்திரம் விடுதல் என்பது அமுக்கியார்த்தம். எனவே கர்மத்தை விடுதலாகிய கர்மசந்யாசமானது சிரவணத்திற்கு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

* சப்தவிருத்தியெனினும் சக்தி விருத்தியெனினும் சொல்லாற்றல் எனினும் ஒக்கும்.

 

(கர்மத்தை மேற்கொண்டுள்ளவனுடைய மனம் சிரவணஞ் செய்யப் புகுங்காலத்தில் அச்சிரவணத்தில் நிலைபெற்றிராமல் பாகிய (வெளி) வியவகாரங்களில் சென்றலைந்து கொண்டிருக்குமாகலின் அங்ஙனம் செல்லவிடாமல் சிரவணத்தில் நிறுத்தும் பொருட்டுக் கர்மங்களை விடுதலாகிய கர்மசந்யாசம் அத்தியாவசியமாம். ஆகவே இது சிரவணத்திற்கு அங்கமாகவுள்ளது. ஆனால் கர்மங்களை விடுதல் மாத்திரம் போதாது. கர்மங்களை விடுதல் முதல் அப்பியாச (அங்க) மாகக் கொள்ளப்பட்டிருக்கிறதே யொழிய அதுவே முக்கியமல்ல. எந்த எந்தப் பிரிய வஸ்துக்களைக் காண்கின்றோமோ அந்த அந்த வஸ்துக்களினிடத்துள்ள அபிமானத்தை விடுவதே அத்தியாவசியமானதாம். மனம் ஓரிடத்தில் நிலைபேறுடையதாகாமல் ஓடுவதற்குக் காரணம் விஷயங்களினிடத்துள்ள அதாவது திருசிய வஸ்துக்களினிடத்துள்ள ஆசையே யென்பது ஆராயுமிடத்துப் புலனாம். ஆகையால் மீண்டும் மீண்டும் தலையெடுக்கும் படியான மேல் கிளைகளை வெட்டுவதைக் காட்டிலும் மரத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்து விடுவோமாயின், அம்மரம் மறுபடியும் தலையெடுக்காமல் உலர்ந்து போகு மது போல, மனம் ஓடி யுழல்வதற்குக் காரணமான விஷயாபிமானத்தையே விட்டுவிடின் மனம் எங்கும் ஓடி யுழலாமல் சிரவணத்தில் நிலைத்து நிற்கும். இவ்வாறு விஷயாபிமானத்தை விடுவதே சந்யாசமாம். இதுவே உபரதி சப்தத்தின் முக்கியார்த்தமாம். உபரதி என்னும் பதத்திற்கு சந்யாசம் என்பது பொருளாதலால் அச்சந்யாசம் ஈண்டு கூறப்பட்டது.)

 

சங்கை: - பிரதானமாக நாம் அடைய வேண்டியது வேதாந்த சிரவணமேயல்லவா? அதைச்செய்தல் போதாதோ? அங்கபூதமாகிய அப்பியாசமேன்?

 

சமாதானம்: - பிரதான காரியம் (அங்கி) சித்திப்பதற்காக அங்கபூதம் (அப்பியாசம்) அவசியம் அனுசரிக்கப்பட வேண்டும். அங்கம் லோபமானால் (சரியாகச் செய்யப்படாவிட்டால்) பிரதான வஸ்து சித்திக்காது. (இது உலகானுபவத்தில் பிரசித்தம்.) ஆகையால் இவ்வுலகத்தும் பரலோகத்துமுள்ள விஷய போகங்களினின்று நன்றாய் விரக்தி யடைந்தவனாய்ச் சந்யாசங் கொள்ள வேண்டும். விரக்தியில்லாதவன் கொள்ளும் சந்யாசம் நிஷ்பலமாம். சந்யாசங் கொண்ட பின்பு பூர்வ விஷயங்களை நினைத்தலுங் கூடாது.


சிரத்தை.

 

(சமாதி யாறனுள் உபரதிக்குப் பின்னதாகிய சிரத்தை நிரூபிக்கப்படுகின்றது.) குருவாக்கியங்களினிடத்தும் வேதாந்த வாக்கியங்களினிடத்தும் இவை சாத்தியமாம் (உண்மை) என்னும் நிச்சயவடிவ புத்தி எதுவோ அது சிரத்தையாம். சிரத்தையுடையவர்களுக்கே முத்தி சித்திக்குமன்றி அஃதிலார்க்குச் சித்தியாது. வேதமும் 'சௌமியா! சூக்ஷ்மமாகிய தத்துவஞானம் உனக்குக் கூறப்பட்டது. இதில் சிரத்தைவை' எனக் கூறுகின்றது. சிரத்தையில்லாதவனுக்குப் பிரவிர்த்தி யுண்டாதலில்லை. பிரவிர்த்தியில்லா விட்டால் காரியம் கைகூடாது. சகலரும் அசிரத்தையால் அடிபட்டே சம்சாரமாகிய பெருங்கடலில் ஆழ்கின்றனர். தெய்வத்தினிடத்திலும் வேதத்தினிடத்திலும் குருவினிடத்திலும் மந்திரத்தினிடத்திலும் தீர்த்தத்தினிடத்திலும் பெரியோரிடத்திலும் ஒருவன் எவ்வளவு நம்பிக்கை (சிரத்தை) யுடையவனாயிருக்கிறானோ அதற்குத் தக்கபடியே பலனுண்டாகும். பரப்பிரம்ம மிருக்கிறது என்னும் நிச்சய புத்தியாலுண்டாகும் நம்பிக்கையில்லா விடில் அதையறிதல் சம்பவியாது. அப்படி அந்த வஸ்து இருக்கிறது என்னும் நம்பிக்கையும் சாஸ்திரத்தினிடத்தில் நம்பிக்கையிருந்தால் தான் உண்டாகும். இல்லாவிட்டால் அந்த நிச்சயபுத்தி யுண்டாகாது. ஆகையால் குருவாக்கியத்திலும் வேதாந்த வாக்கியத்திலும் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். சிரத்தையுள்ள முமுக்ஷவிற்கே மோக்ஷரூபமாகிய பலன் சித்திக்கும். சிரத்தையில்லாவிடின் சித்தியாது.

 

ஒருவன் மற்றொருவன் வார்த்தையை நம்பவேண்டுமாயின் அந்த வார்த்தையைச் சொல்பவன் உண்மையாளனென்று (மெய்யே பேசுவான் பொய் பேசமாட்டான் என்று) தெரிந்தால் தான் நம்பிக்கை யுண்டாகும். எப்பொழுதும் உண்மையே பேசுவோனுடைய வார்த்தையில் தான் யாவருக்கும் நம்பிக்கை யுண்டாகுமல்லவா? அதுபோல, வேதமானது ஈஸ்வரவாக்கியமாகலின், அது உண்மையென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. இனி, குருவின் வாக்கியத்தில் எப்படி நம்பிக்கை யண்டாவதெனின், 'முக்தியடைந்தவன் ஈசவாசொருபன்' ஆகலின் அத்தகைய (ஜீவன் முக்த நிலைமையிலுள்ள) குருவின் வாக்கியமும் ஈசுவரவாக்கியம் போன்றதேயாகும். அதனால் விவேகிகளாகிய சத்புருஷர்களுக்கு வேதாந்த குரு வாக்கியங்களிடத்தில் நம்பிக்கை யுண்டாகின்றது.


 சமாதானம்.

 

மனத்தை விஷயங்களிற் செல்ல வொட்டாமல் தடுத்து ஆத்மவஸ்துவினிடத்தில் நிறுத்துதல் சித்த சமாதானம் எனப்படும். ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமெனக் கருதுவோர் தம் மனத்தை வேறிடங்களிற் செல்லவிடாமல் தடுத்து, தாம் எடுத்துக் கொண்ட காரியத்தினிடத்திற் சிதையாமல் நிலைபெற்றிருக்கச் செய்யவேண்டிய தவசியம். மனம் வேறிடம் சென்றிருந்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரியம்கைகூடாது. எல்லா முயற்சிகளும் வீணாகும்.

 

திருஷ்டாந்தமாக: - ஓர் லக்ஷியத்தை அடிக்க விரும்புகிறவன் தன்மனத்தையும் பார்வையையும் கைகளையும் பாணத்தையும் ஒரே இடத்தில் (அக்குறியில்) அசையாமல் நிறுத்தினால் குறிப்பிட்டதை அடித்து வீழ்த்தலாம். அப்படிக்கின்றிச் சிறிதேனும் குறி தவறுமானால் வீழ்த்த முடியுமோ? முடியாது. அதுபோல, ஆத்மாவை யறிய விரும்புவோனுக்குச் சித்த சமாதானம் அவசியமென்றறிய வேண்டும். ஆகையால் காரியசித்திக்கு முக்கிய காரணமாயிருப்பதால் சமாதானமானது மோக்ஷாபேக்ஷையுள்ளவர்களுக்கு அவசியமாயிருத்தல் வேண்டும். இந்தச் சமாதான முண்டாக வேண்டுமாயின், மிக்க தீவிரமான விரக்தியும் பலனையடைய வேண்டுமென்னும் பேராவலும் இருக்க வேண்டும். இந்த இரண்டுமிருந்தால் சமாதானம் உண்டாகும். ஆகவேசித்த சமாதானத்திற்கு மேற்கூறிய இரண்டுமே முக்கிய காரணங்களாம்.

 

இதுகாறும் கூறிய சமாதியாறும் முக்தியடைவதற்கு முக்கிய சாதனங்களாம். வேதமானது பிரம்மசரியம் முதலானவைகளையும் முக்தி சாதனமெனக் கூறியிருப்பினும் அவையெல்லாம் பகிரங்க சாதனங்களேயாம். இச்சமாதிஷட்கமே அந்தரங்க சாதனமெனப் பெரியோர் அபிப்பிராயப்படுகின்றனர். பகிரங்கத்தை விட அந்தரங்கமே சிறந்ததாகலின் ஞானத்தையடைய விரும்புவோர் சமாதிஷட்க சம்பத்தியை முக்கியமாகக் கொள்ள வேண்டும். போர்வீரனுக்குத் தைரியமொன்று மட்டு மில்லாவிட்டால் அவன் எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் யாது பயன்? ஒன்றுமில்லை. அதுபோல, அந்தரங்க சாதனமான இந்தச் சமாதிஷட்க சம்பத்தியை யடையாதவன் எவ்வளவு சிரவணம் செய்தாலும் பயனில்லை.

 

 

 

முமுக்ஷத்துவம்.

 

(இனி சாதன சதுஷ்டயத்தில் நான்காவதாகிய முமுக்ஷத்துவம் கூறப்படுகின்றது.)

 

ஜீவனும் பிரம்மமும் அபேதமானவை. அதாவது வெவ்வேறு பொருள்களல்ல. சொரூபத்தில் ஒன்றே என்றறிதலாகிய ஞானத்தால் சம்சார பாசபந்தத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்னும் விருப்பமே முமுக்ஷத்துவமாம். (மோக்ஷத்தை யடையவேண்டு மென்னும் அபேக்ஷையே முமுக்ஷத்துவம் என்னப்படும்.) முத்தியை விரும்பு மிச்சை' என்கிறார் கைவல்யத்தாரும். மோக்ஷம் என்னும் பதத்திற்கு விடுதலை யென்பது பொருள். விடுதலையென்னின் எதினின்றும் விடுதலை யென்னும் வினா நிகழுமன்றே? அதற்குப் பந்தத்தினின்று - அதாவது சம்சாரபாசபந்தத்தினின்று விடுதலையாதல் என்பதே விடையாம். ஆகவே சம்சார பாசபந்தத்தினின்று விடுதலையாதலே மோக்ஷமென்னப்பட்டது. அது ஞானத்தாலே மாத்திரம் அடையப்படுவதாம். விசாரசாகரமும் 'பிரஹ்மப் பிராப்தியும் அனர்த்த (துக்க) நிவிர்த்தியும் மோக்ஷத்தின் சொரூபமாம்' என்கின்றது. (முத்தி, வீடு என்னும் பதங்களுக்கும் விடுதலை யென்பதே பொருளாம்.) எல்லாச் சாதனங்களுக்கும் முதற்காரணமாயிருப்பது இந்த முமுக்ஷத்துவமே. ஏனெனில் மோக்ஷத்தில் இச்சையில்லாதவனுக்கு அதையடைய வேண்டுமென்று பிரவிர்த்தி யுண்டாகாது. பிரவிர்த்தியின்றேல் சிரவணாதி சாதனங்களில்லை. சாதனங்களில்லாதவனுக்கு முத்தியெங்ஙனம் கிடைக்கும்? ஆகையால் முத்தியடைய வேண்டுமென்னும் விருப்பமாகிய இந்த முமுக்ஷத்துவமே எல்லாவற்றிற்கும் முதற்காரணமாம். (அங்ஙனமாயின் இச்சாதனத்தை இறுதியில் (கடைசியில்) ஏன் சொல்லவேண்டும். முதலிற் கூறுவதன்றோ பொருந்தும்? என்னும் சங்கை நிகழும். இதற்குச் சமாதானம்: - (விசாரசாகாக் குறிப்புரை)'' இந்த முமுக்ஷத்துவம் எல்லாச்சாதனங்களுக்கும் முன்னரே யுண்டாகின்றது. ஏனெனின் பிரயோஜனத்தைக் கருதாமல் மந்தனும் ஒன்றிற் பிரவிர்த்தியான்' என்பதனால் மந்தமானமோக்ஷரூப்பலத்தின் இச்சையில்லா விட்டால் நிஷ்காமகர்மத்தில் ஒருவனுக்கும் பிரவிருத்தி யுண்டாகாது. ஆதலால் மந்தமான மோக்ஷ இச்சை எல்லாச் சாதனங்களுக்கும் முன்னரே இருக்கவேண்டியது. ஆனால் அப்போது அது தீவிரமாயிராது. மற்றச் சாதனங்கள் சித்தித்த பின் அவ்விச்சை தீவிரமாகின்றது. அத்தீவிர இச்சைதான் சிரவணாதிகளிற் பிரவிருத்தி யுண்டாகும்படி செய்கின்றது. ''அத்தீவிர இச்சையே முமுக்ஷத்துவம். இதுபற்றியே இது இறுதியில் கூறப்பட்டது.)

 

இந்த முமுக்ஷத்துவம் தீவிரம் - மத்திமம் - மந்தம் - மந்ததரம் (அதிகமந்தம்) என்னும் பேதத்தால் நான்குவகைப்படும். இவற்றுள்.

 

தீவிரம்: - தாபத்திரயங்களால் எப்பொழுதும் வருத்தப்பட்டு அதனால் கலங்கிய மனத்தை யுடையவனாய் மனைவி முதலிய சகல பொருள்களையும் விட்டொழித்தல்.
 

மத்திமம்: - தாபத்திரயங்களுக்குப் பயந்து 'ஐயோ! இவற்றையெல்லாம் ஒழித்துவிட்டு நித்தியானந்த வடிவமாகிய முத்தியை யடைய முயல் வதெப்பொழுதோ' என்று மோக்ஷத்தை யபேக்ஷித்தும், ஆனால் இந்த வீடுவாசல் மனைவி மக்களை எப்படி விட்டுவிடுவது என்று அவற்றை விடமுடியாமலும் இருப்பவனுடைய மோக்ஷாபேக்ஷை மத்திமமாம்.

 

மந்தம்: - மோக்ஷத்தை யடைய வேண்டியதுதான். அதற்கான முயற்சிகளைச் செய்யவும் வேண்டும். ஆனால் அதற்கு இது காலமல்ல. இப்பொழு தென்ன அவசரம்! இல்லறத்திலிருந்து அனுபவிக்க வேண்டிய போகங்களை யனு பவித்தல், பணம் சேர்த்தல் முதலிய காரியங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு அதன்பிறகு மோக்ஷத்திற்காக பயல்வேன் என்பது.

 

மந்ததரம்: - மோக்ஷமாவது நமக்குக் கிடைக்கிறதாவது! துர்லபம். அதற்காக முயற்சி செய்ய நம்மால் முடியுமா! வழியில் போகிறவனுக்குப் பண முடிப்பு கிடைப்பது போல, தானாக மோக்ஷம் கிடைத்தால் நான் புண்ணியசாலிதான் என்றெண்ணும் மூடர்களின் அபிப்பிராயம்.

 

இவர்களில், கடந்த அநேக ஜன்மங்களில் ஈசுவராராதனை செய்தவனும், அதனால் மனத்திலுள்ள சகல துர்க்குணங்களையும் அறவே யொழித்தவனும், சாஸ்திரார்த்தங்களை நன்குணர்ந்தவனும், உலகப் பொருள்களின் குணதோஷங்களை யறிந்தவனும், நித்தியா நித்திய வஸ்து விவேகமுள்ளவனும், திடமான நியமமுடையவனும், தீப்பற்றிய வீட்டினுள் சிக்கிக்கொண்டவன் அதினின்று தப்பும் பொருட்டு ஓடுகிறவனைப் போல, தாபத்திரயங்களால் தபிக்கப்பட்டு மனை மக்களாதியவற்றை விட்டு ஓடுகிறவனுமாகிய தீவிரமுமுகூவானவன் குருவின் அனுக்கிரகத்தால் அப்பொழுதே சம்சாரத்தைக் கடக்கிறான். ஆகையால் அத்தீவிர முமுக்ஷவானவன் அந்த ஜன்மத்திலே தானே ஜீவதசையி லிருக்கும் பொழுதே முத்தனாகிறான். இவன் ஜீவன்முத்தன் என்னப்படுவான். மத்திமன் அடுத்த ஜன்மத்தில் விமுக்தனாவன். மந்தன் யுகாந்தரத்தில் முக்தி யடைவன். அதிமந்தனோ கோடிகற்பகால மாயினும் முத்தியடையான்.

 

முத்தியே மானிடப் பிறவியின் பயன்.

 

எல்லாப் பிறவிகளினும் மானிடப் பிறவியே பெறுதற்கரியது. அதிலும் புருஷப்பிறவி துர்லபமானது. புருஷனாய்ப் பிறந்தாலும் விவேகமுடையவனாதல் மிகவரிது. ஆகையால் பூர்வபுண்ணிய வசத்தால் இம்மூன்றையும் அடைந்தவன் மிக்க விரைவில் விரக்தியடைந்து முத்தியடைய முயலவேண்டும். இன்றேல், இம்மூன்றும், நிஷ்பிரயோஜனமாம். (ஏன்? மனைவி மக்களின் சுகத்தை யனுபவிப்பது மானிடப் பிறவியின் பிரயோஜனமாகாதோவெனின்) பிள்ளைகள் சினேகிதர்கள் மனைவி முதலானவர்களா லுண்டாகும் சுகம் ஒவ்வொரு பிறவிக்கு முண்டு. மனுஷஜன்மமும் புருஷஜன்மமும் விவேகமும் மற்றொரு ஜன்மத்தில் உண்டாகா. (பசு பக்ஷியாதிகளும் மனைவி மக்களின் சுகத்தை யடைகின்றன. ஆகலின் அந்த போகங்களுக்காக மனிதப் பிறவி அவசியமில்லை.) பிராணி, அடைதற்கு மிகவும் அருமையான மனிதப் பிறவியை யெய்தி அதிலும் புருஷத்வத்தையும் பின்பு நன்மை தீமைகளைப் பிரித்து அறியும் அறிவையும் அடைந்தும் பிரபஞ்சசுகத்தில் விருப்பமுள்ளவனானால் புத்தியீனனும் அதம புருஷனுமான அவனுடைய ஜன்மம் நிந்தைக் குரியதேயாகும். நாய், கழுதை, பன்றி முதலியவைகள் எப்பொழுதும் தின்று கொண்டும் போகத்தை யனுபவித்துக் கொண்டும் சந்தோஷமாய்த் திரிந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களும் அவைகளைப் போலவே உண்பதும் உறங்குவதுமாய்க் காலங் கழிப்பார்களாயின் அவைகளுக்கும் அவர்களுக்கும் பேதமென்ன? ஒரு பேதமுமில்லை. ஆகையால், வியாதியானது நம்மைப் பிடித்து வருத்துதற்கு முன்னும் முதுமைப் பருவமானது வந்தடைந்து நடுங்கச் செய்வதற்கு முன்னும் புத்தி மாறாட்டமாவதற்கு முன்னும் எமன் வராததற்கு முன்னுமே - அரோக திடகாத்திரராயிருக்கும் பொழுதே, விரைவில் ஞானத்தையடைந்து சம்சாரபாசத்திலிருந்து விமுக்தியடைவதற்குப் பிரயத்தினப் படவேண்டும். (வியாதியாவது முதுமையாவது வந்தடைந்து அதனால் சரீரமும் இந்திரியங்களும் அந்தக்கரணமும் நம் வசப்படாமற்போகும் காலங்களில் முயற்சி செய்ய முடியுமா? காலபாசம் கழுத்தில் விழும் பொழுது முடியுமா? முடியாதன்றோ?


'காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல் விழுந்தே
உற்றா ரழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானை நீ கூறு'


'முற்றமூத்துக் கோல் துணையாய் முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்தங் கிளையாமுன்
பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலை யூடுயிரை
வற்றவாங்கி யுண்டவாயான் வதரி வணங்குதுமே'!


‘எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்

அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே'


என்னும் ஆன்றோர் அருளிச் செயல்களும் ஈண்டறியத்தக்கனவாம்.

 

(தேவர் கடன் முனிவர் கடன் பிதிரர் கடன் என்னும் மூன்று வித கடன்களைத் தீர்க்கவேண்டியது மனிதராகப் பிறந்தோருடைய கடமையாகின்றது. ஆதலின் இம்மூன்று கடன்களைத் தீர்த்த பின்னரே இல்லறத்தார் இல்லறத்தினின்று விடுதலையடைய வேண்டும். அக்கடன்களினின்று விடுதலை யாகாமல் சம்சாரபந்தத்தினின்று விடுதலை யாவ தெங்ஙனமெனின்) இம்மூன்று கடன்களினின்று விடுதலை யடைந்தவர்களோ (கடன்களைத் தீர்த்தவர்களோ) கோடிக்கணக்கானவர்களாயிருக்கின்றனர். ஆனால் சம்சாரபாசத்தினின்று விடுதலையடைந்தவனோ எவனோ ஒரு பிரம்மவித்வரிஷ்டனேயாவன். தவிர ஓர் வீட்டினுள் தம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனுக்கு தெருக்கதவு திறந்திருந்தால் யாது பயன்? ஒரு பயனுமில்லையன்றோ? அதுபோல, உள்ளேயிருக்கும் சம்சாரபாசபந்தத்தினால் கட்டப்பட்டுள்ளவனுக்குப் புறத்திலுள்ளவைகளாகிய தேவரிஷி பித்ரு ருணங்களாகிய பாசத்தினின்று விடுதலையடைவதால் மாத்திரம் பயன் யாது? ஆகையால் பண்டிதர்கள் சம்சாரபந்தத்தினின்று விடுதலை யடையவே முயற்சி செய்யவேண்டும்.

 

(மோக்ஷத்தை யடைய வேண்டுமெனும் இச்சை மட்டுமிருந்தால் போதாதோவெனின்) தீவிரமான மோக்ஷாபேக்ஷை (முமுக்ஷத்வம்) எவ்வாறிருக்குமெனின், சிரவணம் மனனம் நிதித்தியாசனங்களைத் தீவிரமாயுடையதே தீவிர முமுக்ஷத்வமாகும். அவ்வாறின்றி (சிரவணமனனாதிகளைச் செய்யாமல்) சும்மா எனக்கும் மோக்ஷத்தை யடைய வேண்டுமென்று மிகுந்த அபேக்ஷையிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பது வெறும் வாய்ப்பேச்சேயன்றி அதனால் வேறொரு பயனுமில்லை. பதிவிரதாஸ்திரீயானவள் தன் கணவன் மரித்தவுடன் வீடு முதலிய சகல பதார்த்தங்களையும் அற்பமாயெண்ணிக் கைவிட்டுப் பரலோக சுகாபேக்ஷையால் தன் கணவனுடன் அக்கினியிற் பிரவேசிக்க எவ்வளவு துணிவும் திடமுமுள்ளவளாக விருக்கின்றாளோ அவ்வளவு துணிவும் திடமும் முமுக்ஷவிற்கும் அத்தியாவசியமாகும். அப்பொழுதுதான் அவனுக்கு மோக்ஷபலப் பிராப்தி யுண்டாகும்.

 

(இத்தகைய திடபாவ முண்டாவ தெப்படியென்பது கூறப்படுகின்றது.) பிரம்மம் ஒன்றே நித்தியப் பொருள்: மற்ற உலகமும் அதிலுள்ள சகலபொருள்களும் அநித்தியமே யென்னும் (நித்தியாநித்திய வஸ்து) விவேகத்தால் தேகமானது அடுத்த நிமிஷத்தில் அழிந்து போகக்கூடியது; (இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை. புல்நுனி மேல் நீர்போல் நிலையாமையை யுடையது. நெருநலுளனொருவன் இன்றில்லையென்னும் பெருமையுடைத் திவ்வுலகு. மாலை கிடந்தா னெழுதலரிது) நிலைபேறுடையதாகாது. ஆகலின் இது அழியாமலிருக்குமென்று நம்பலாகாது என்னும் எண்ணம் தோன்றும். அதனால் மரணபயம் உண்டாகும். அதனால் பரிதாபம் தோன்றும். அதனால் மோக்ஷத்தை யடைய வேண்டும் என்னும் அவசரமும் உண்டாகும். எவன் நித்யாநித்ய வஸ்து விவேகமென்னும் சிரத்தை (தலையை) யும் தீவிர வைராக்கியமென்னும் சரீரத்தையும் சமாதிஷட்கமென்னும் இருதயம் முதலாகிய ஆறு அங்கங்களையும் முமுக்ஷத்வமென்னும் பிராணனையும் உடையவனாய் (இவ்விதமான அவயவங்களாகிய கருவிகளை யுடையவனாய்) ஞானேச்சை யுடையவனும் யோகியுமான சூரனாகவிருக்கிறானோ அவன் அபரோக்ஷ ஞானமென்னும் கட்கத்தினால் மிருத்துவைத் தப்பாமல் கொல்லுகிறான். (ஜனன மரணங்களைக் கடக்கிறான்.)

 

மேற்கூறிய சாதன சம்பத்திகளையுடைய, ஞானாபேக்ஷையுடைய ஜிஞ்ஞாசுவானவன் ஆத்மஸ்வரூபத்தை அறியும் பொருட்டு சதாசாரியனைத் தேடியடைதல் வேண்டும்.

 

குருவினிலக்கணம்.

 

வேதாத்தியயனஞ் செய்து அதன் பொருளைச் சந்தேக விபரீதமற வுணர்ந்தவரும், ஜீவப் பிரஹ்ம ஐக்கிய நிச்சயத்தால் ஆத்மஞான நிஷ்டை யுடையவரும், சாந்தி யுடையவரும், சமதிருஷ்டி யுடையவரும், அகங்கார மமகாரங்களற்றவரும், சுகதுக்காதி துவந்துவதோஷங்களில்லாதவரும் (சுகம் வந்த போது சந்தோஷிப்பதும் துக்கத்தில் வருந்துவது மில்லாமல் 'வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம், தாழ்வது வந்ததானால் தளர்வரோ தக்கோர்' என்றபடி சுகதுக்கங்களைச் சமமாகக் கருதுபவரும்) மனைமனைவியாதிகளிடத்தில் அபிமான மில்லாதவரும், அபேக்ஷை யில்லாதவரும், பா'சுத்தமானவரும், சிஷ்யனுக்குண்டாகும் சந்தேகங்களைத் தீர்க்கும் சாமர்த்தியமுள்ளவரும், தம்மை வந்தடுத்த சிஷ்யனுடைய துன்பங்களைத் துடைத்து அவனை உய்விக்க வேண்டுமென்னும் கருணையை மிகுதியு முடையவருமாக இருப்பவர் எவரோ அவரே ஞானேச்சை யுடையவனுக்குச் சரணமடையத்தக்க சதாசாரியராவர். கடந்த அநேக ஜன்மங்களில் ஒருவன் மிக்கபக்தியுடையவனாய் வேதவிதிப்படி ஆராதித்து வந்த ஈஸ்வரனே பிரத்தியக்ஷமாய் ஞானசம்பாத்தியுடைய குருவடிவங் கொண்டு வந்து ஆத்மஸ்வரூபத்தைச் செவ்வையாய் உபதேசித்து பக்தர்களைச் சம்சாரக் கடலினின்று கரை யேற்றுகிறார்.
 

அஞ்ஞானத்தாலுண்டான அகங்காரமாகிற பந்தத்தினின்றும் விடுவிப்பவர் எவரோ அவரே குருவாவர் என்று குரு சப்தத்தின் அர்த்தத்தை யறிந்தவர்கள் கூறியுள்ளார்கள்.

 

(குரு என்னும் பதத்தில் 'கு' என்பதன் பொருள் 'அந்தகாரம்' (அஞ்ஞானம்) 'ரு' என்பதன் பொருள், 'ஒழிகின்றது' என்பது. எனவே அஞ்ஞானத்தை யொழிக்கின்றவர் குருவாவர் என்பதாயிற்று.)

 

(இவ்வாறின்றிச் சடை வளர்த்துக் கொண்டும், மொட்டை யடித்துக் கொண்டும், விபூதி நாமம் முதலிய சின்னங்களை யணிந்து கொண்டும் குருத்தன்மையை ஜீவனோபாயமாகக் கொண்டு தக்ஷணையினிமித்தம் ஊர் ஊராகத் திரிவோர் குருவாகமாட்டார்.)

 

சிவனே பிரத்தியக்ஷமாகக் குருவாக வந்துள்ளார். ஆகையால் குருவேசிவன், சிவனே குரு. ஆகவே, முமுக்ஷவானவன் குரு சிவன் என்னும் இருவரையும் அபேதமாகப் பாவிக்க வேண்டுமேயன்றி சிவன் வேறு குரு வேறு என்றெண்ணலாகாது.


 "குருவே சிவமெனக் கூறினன் நந்தி
 குருவே சிவமென் பது குறித் தோரார்
 குருவே சிவமாகிக் கோனுமாய் நிற்கும்
 குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.''
                     (திருமந்திரம்)

 

சம்சாரபந்தத்தைக் கடவாதவன் பிறரைக் கடக்கச் செய்ய அசக்தனாவானாகலின் பந்த முக்தியடைந்தவரும் சமாதிநிஷ்டரும் கிருதார்த்தருமாகிய குருவைத் தேடியடைந்த உத்தம சீடனானவன் அவரைத் தரிசித்து (சைதந்யம்ஸாஸ்வதம் சாந்தம், வியோமாதீதம், நிரஞ்சநம், நாதபிந்துகளாதீதம், தஸ்மை ஸ்ரீ குரவே நம: என்று துதித்து பத்திர புஷ்பங்களால் அருச்சித்து,) அவரருகில் எப்பொழுது மிருந்து சேவை செய்து சமயமறிந்து,

 

சீடன்: - ஞானவைராக்கிய நிதியே! தயாசாகரரே! பண்டிதர்கள் உம்மை யடைந்து சம்சாரமென்னும் கடலைக் கடந்தார்கள். ஆகையால் தாங்கள் சம்சாரசாகரத்தைக் கடப்பதற்குத் தோணியா யிருக்கின்றீர். தேசிபோத்தமரே! நான் இப்பொழுது தமது கருணைக்குப் பாத்திரனானமையால் நான் பூர்வ ஜன்மங்களில் மிக்க புண்ணியஞ் செய்தவனாவேன். பிரம்மஞானியினுடைய தரிசனமானது அப்பொழுதே கண்களுக்கு விகாசத்தையும் முகத்திற்குக் காந்தியையும் சித்தத்திற்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றது. அஞ்ஞானத்தைக் கெடுத்து சுஞ்ஞானத்தைத் தருகின்றது. எத்தனை கோடிக்கணக்கான சந்திரரும் சூரியரும் அக்கினிகளும் இருந்தாலும் அவைகளாலும் போக்க முடியாத இருதயத்திலுள்ள அஞ்ஞானமாகிய அந்தகாரமானது தங்கள் அருட்பார்வை மாத்திரத்தால் நாசமாகின்றதே. இது எவ்வளவு ஆச்சரியம்! நான் கடக்க முடியாததும், ஜனனம் மரணம் வியாதி முதலாகிய துக்கங்களையுண்டாக்குவதும், மிக்க குரூரமானதும், புத்திர மித்திர களத்திரங்களென்னும் மிகுந்த ஜலசரங்களுக்கு இருப்பிடமாகவுள்ளதும் பயங்கரமானதுமாகிய சம்சாரசாகரத்தில் விழுந்து கர்மங்களென்னும் பெரிய அலைகளால் முன்னும் பின்னும் தள்ளப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவனாய் போக்கு வரவுகளால் பிரமையடைந்து திக்குத்திசை தெரியாமல் கிடக்கிறேன். இந்த நிலைமையிலிருந்தும் ஏதோ சிறிது புண்ணியமிருந்தமையால் தேவரீருடைய பாதகமலங்களைத் தெரிசித்தேன். தீனனாகிய என்னைத் தங்கள் கிருபா நோக்கத்தால் மரணத்தினின்றும் காப்பாற்றி யருளவேண்டும் குருநாதா என்று பிரார்த்திக்கின்றான்.

 

முன்னர்க் கூறியபடி தீனனாகத் தன்னெதிரில் வணங்கி நிற்கும் சீடனைக் கருணையோடு நோக்கி,

 

குரு: - (பயப்படாதே எனப் பலமுறை கூறி அபயமளித்து) புத்திரா! நீ மரணத்தினிடத்துக் கொண்டிருக்கும் பயத்தை விட்டுவிடு. உனக்கு மரணம் இல்லவேயில்லை. ஏனெனில் நீ நித்தியன் (அழிவில்லாதவன்); பேதமில்லாதவன்; பரமானந்த வடிவினன்; நீ பிரம்ம சொரூபி. ஆகையால் உனக்கு மரணமில்லை. இங்ஙனமாக, நீ பிராந்தியால் (மயக்கத்தால்) எதையோ பார்த்து பயமடைந்த மனத்தையுடையவனாய் அவாஸ்தவத்தை (உண்மை யல்லாத வார்த்தையைக்) கூறுகிறாய். கனவில் எதையோ பார்த்துப் பயந்து 'என்னைக் காப்பாற்று' என்று கூக்குரலிடுகின்றவனுடைய வார்த்தை எப்படி உண்மையல்லவோ அப்படியே உன் வார்த்தையு முண்மையானதல்ல; அசத்தியமேயாகும். நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்குமொருவன் கனவில் தன்னைப் பாம்பு கடித்து விட்டதாகக் கண்டு, 'ஐயோ ! நான் செத்தேன், செத்தேன்' எனக் கத்துகிறான். அப்போது அருகிலிருந்த வொருவன் அவனைத் தட்டி யெழுப்பி, 'என்னடா! ஏன் கத்துகிறாய்?' என்று கேட்டால், அவன் என்னபதில் சொல்லுவான். 'ஒன்றுமில்லை' யென்பான். அப்படியானால் அவன் முன்பு,'நான் செத்தேன்' என்று சொன்னதற்கு அர்த்தமென்ன? அது வெறும் வார்த்தையே யல்லவா? அன்றியும், தரையில் கிடக்கும் ஒரு கயிற்றை ஒருவன் கயிறு என்றறியாமல் பாம்பென்று கருதி, 'இதோ! பாம்பு!! பாம்பு!!! 'என்று அஞ்ஞானத்தால் (உண்மையையறியாமையால்) கத்து கிறான்; பயப்படுகிறான்; நடுங்குகிறான். அவன் சொன்ன வார்த்தை நிஜமா? மித்தையேயன்றோ! விசாரிக்குமிடத்து அங்கு சர்ப்பம் இல்லையன்றோ?

 

சற்சீடனே! இப்பொழுது காட்டின திருஷ்டாந்தத்தில் சொப்பனாவத்தையில் கண்ட சர்ப்பமென்னும் பயமும், சாக்கிராவத்தையிற் கண்ட சர்ப்பப்பிராந்தியும் எப்படி மித்தை (பொய்) யோ அப்படியே உனக்கு ஜனனம் மரணம் வியாதி முதலான துக்கங்களிருப்பதாக நீ கூறுவதும் மித்தையேயாகும். இத்துக்கங்களெல்லாம் உன்னுடைய பிரமையால் நீ கற்பித்துக் கொண்டவையே யாகும். (கற்பிதம் என்பது இல்லாததை உண்டெனக் கொள்ளுதல்) தீரவிசாரிக்குமிடத்து இந்த விஷயம் நன்கு விளங்கும். ஆகையால் ஆத்மாவின் விஷயமாக நீ கொண்டிருக்கும் இப்பயத்தை விட்டுவிடு.

சீடன்: - குருநாதா! தாங்கள் கூறிய திருஷ்டாந்தம் பொருத்தமானதாகக் காணப்படவில்லை. ஏனெனில் அப்பாம்பு பிராந்தியாலுண்டானமையின் மித்தையே யென்பது உண்மையாம். நான் சொன்ன வார்த்தையும் அதைப் போலவே பிராந்தி கற்பித மெப்படியாகுமென்பது அடியேனுக்கு விளங்கவில்லை. அதைத் தயைகூர்ந்து திருவாய் மலர்ந்தருள வேண்டும்.

 

குரு: - சீடனே! நீ சச்சிதானந்த வடிவினன். இத்தகைய நீ அசத்து ஜடதுக்க வடிவினதான சரீரத்தின் தர்மங்க (குணங்களாகிய ஜனன மரணாதிகளை உன்னிடத்திலிருப்பனவாக ஆரோபித்துக் (கற்பித்துக்) கொண்டு நான் வியாதியுடையவன்; நான் மரணமடைவேன் என்றெண்ணித் துக்கிக்கிறாய். உனது எதார்த்த சொரூபத்தை அறிந்து கொள்ளாமையாகிய அஞ்ஞானத்தால் உனக்கு இவ்வித பயமானது உண்டாயிற்றேயன்றி வாஸ்தவமாக அவைகள் உனக்கில்லை. ஆகையால் நீ கொண்டிருக்கும் இந்த பயத்தை விட்டு உன தெகார்த்த சொரூபத்தையறிந்து சுக சொரூபியாயிரு.

 

(ஆரோபம் - அத்தியாசம் - கற்பனை (பிராந்தி) என்பன ஒரு பொருட் சொற்கள். ஒரு வஸ்துவினிடத்து வேறொரு வஸ்துவை யுணர்தல் இதன் இலக்கணம். கயிற்றினிடத்துப் பாம்பு தோன்றுதல் - கட்டையினிடத்துக் கள்ளன் தோன்றுதல் - கானலில் நீர் தோன்றுதல் முதலியன இதற்குத் திருஷ்டாந்தங்களாம்,

 

 ஆரோப மத்தி யாசம் கற்பனை யாவ வெல்லாம்

 ஓரோர்வத் துவினில் வேறே யோரோர்வத் துவினை யோர்தல்

 நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியிற் றோன்றல்

 நீரூடு கானல் தோன்றல் நிறந்தலம் வெளியிற் றோன்றல்.

 

 என்னும் கைவல்ய நவநீதச் செய்யுளும் ஈண்டறியத் தக்கதாம்.)

 

சீடன்: - சுவாமி ஜனன மரணாதிகள் சத்தியமல்ல; மித்தையேயாம் என்று கூறினீர்கள். அதற்குச் சொப்பன சர்ப்பத்தையும் கயிற்றரவையும் திருஷ்டாந்தமாகக் காட்டினீர்கள். கனவிற் கடித்ததும் பிராந்தியால் காணப்பட்டதுமாகிய பாம்பு நிஜமல்லவென்பது யுக்தமே. ஆனால் நான் அனுபவிக்கும் ஜன்மம் ஜரை வியாதி மரணம் என்னு மிவைகள் சத்தியமல்லவெனக் கூறுவது எப்படிப் பொருந்தும் ! ஏனெனில், உண்மையல்லாத (பொய்யான) பாம்பு, கனாக்கண்டவனுக்கும் பிராந்தி யடைந்தவனுக்கும் மாத்திரமே காணப்பட்டதே யல்லாமல் மற்றவர்களுக்குக் காணப்படவில்லை. நானனுபவிக்கும் ஜனனமரணாதிகளோ எல்லோர்க்கும் பிரத்தியக்ஷமாகக் காணப்படுகின்றனவே. ஆகையால் இவை எப்படி மித்தையாகும்? பிரத்தியட்சப் பிரமாணமாக அனுபவிக்கப்படும் வஸ்து எங்ஙனம் மித்தையாகும்? கண்ணிற்குத் தோன்றுகிற குடத்தை எப்படி அசத்தியமென்றெண்ணுவேன் ! குருநாதா ! உள்ள வஸ்துவிற்கு மித்தியாத்தன்மை எப்படிச் சம்பவிக்கும்? எல்லாப் பிரமாணங்களினும் பிரத்தியட்சப் பிரமாணமே சிறந்ததாகும். ஏனெனில், அதுவே (அர்த்தத்தை ஸ்பஷ்டமாகப் போதிப்பதாகும்) பொருளை நன்கு விளக்குவதாகும்.

 

(பிரமையின் கரணம் பிரமாணம்; பிரமை = பிரமாணத்தாலுண்டாகும் ஞானம். கரணம் என்பது சிறந்த காரணம். ஆகவே பிரமாணத்தாலுண்டாகும் ஞானத்திற்குச் சிறந்த காரணமாயிருப்பது பிரமாணம் எனப்படும்.

 

பிரத்தியட்சப் பிரமாணம்: - பிரத்தியட்சப் பிரமையின் கரணம் பிரத்தியட்சப் பிரமாணமாம். குடம் முதலியவற்றைக் காணுமிடத்து நேத்திரம் (கண்) முதலிய இந்திரியங்கள் பிரத்தியட்சப் பிரமாணம். இது குடம் என்று அறியுமிடத்து நேத்திரேந்திரியப் பிரமாணம். கடம் பிரமேயம். அதன் ஞானம் பிரமை.

 

பிரமாணங்கள்: - பிரத்தியட்சம் - அனுமானம் - உவமானம் - சப்தம் என நான் கென்றும், இவற்றோடு அருத்தாபத்தி - அனுபலப்தி என்னும் இரண்டையும் கூட்டி ஆறென்றும் கூறுவர். இவற்றுள் பிரத்தியட்சமே பிரபலப்பிரமாணமாம். அங்ஙனமாக, அத்தகைய பிரத்தியட்சத்தால் காணப்படும் வஸ்து எங்ஙனம் மித்தையாகும் என்று சங்கித்துச் சீடன் இவ்வாறு கூறி மேலும் கேட்கிறான்.)

 

பகவானே! நீங்கள் என்னைப் பார்த்து'நீ பிரம்மஸ்வரூபி; அழிவற்றவன்; பரமானந்த வடிவினன் எனக் கூானீர்களே! மனிதனும் பிறப்பு இறப்பு முதலிய துக்கங்களையுடையவனும் அற்ப ஆயுளுள்ளனுமாகிய நான் எப்படி பிரம்ம சொரூபியாவேன்! சாசுவதத்துவமும் பரமானந்த ரூபத்துவமும் எனக்கு எப்படிச் சம்பவிக்கும்! ஆத்ம வஸ்து எது? அனாத்ம வஸ்து எது? ஆத்ம அனாத்மாக்களின் லக்ஷணமென்ன? ஆத்ம உஸ்துவினிடத்தில் அனாத்ம எஸ் துக்களின் ஆரோபம் எப்படி உண்டாகிறது? அஞ்ஞானமென்றாலென்ன? அந்த அஞ்ஞானத்தாலுண்டான பயத்தை விடுவதெப்படி? ஞானமென்றா லென்ன? அந்த ஞானத்தாலுண்டாகும் சுகத்தை அடைவதெப்படி? கிருபாசாகரராகிய சுவாமி ! இவையிற்றையெல்லாம் அடியேனுக்கு நன்கு விளங்குமாறு தெரிவிக்க வேண்டுகிறேன்.

 

மித்தியாத்துவ நிருபணம்.

 

குரு: - அன்புள்ள மகனே! நான் மனுஷன் என்று நீ சொன்னாயல்லவா! அந்த மனுஷத்தன்மை உன்னிடத்தில் இல்லை; பிராந்தியினால் கற்பிக்கப்பட்டதே யாகும். ஜன்மஜரா வியாதி முதலானவைகளும் கற்பனையே. ஆகையால், உனக்குண்டாவதாக நீ கூறும் துக்கமும் கற்பிதமேயன்றி வாஸ்தவமன்று. ஆகவே மித்தையேயாம். தூக்கத்திலுண்டாகும் அஞ்ஞானத்தால் காணப்படும் சுகதுக்கங்கள் விழித்துக் கொண்டபின் உனக்குக் காணப்படுவதில்லையே. அதுபோலவே, உனக்கு ஞானமுண்டான பிறகு இத்துக்கங்களும் காணப்படமாட்டா.

 

எல்லோராலும் பிரத்தியட்சமாக அனுபவிக்கப் படுகின்ற பிரபஞ்ச மெல்லாம் எப்படி மித்தையாகும் என்றும், பிரத்தியட்சமே பிரபல பிரமாணமென்றும் கூறினை. நீ விசாரணையில்லாமையால் மோகமடைந்தவனாய் இவ்வாறு கேட்டனை. இப்பொழுது நான் கேட்கும் கேள்விக்கு நன்றாய் யோசித்து விடைகூறு பார்ப்போம்.

 

கோட்டான் என்னும் பறவையின் கண்ணிற்குப் பகற்காலமானது இருண்டதாகப் பிரத்தியட்சமாய்க் காணப்பட்டாலும் அந்த இருள் உண்மையாகுமா? ஆகாதல்லவா! அவ்வாறே பிராந்தியால் (அஞ்ஞான மயக்கத்தால்) பார்க்கப்படும் வஸ்துவானது பிராந்தியுள்ளவனுக்கு உண்மையானதாகவும்' பிராந்தியில்லாதவனுக்கு மித்தையானதாகவும் காணப்படும். இது குடம் என்னுமிடத்துக் குடம் என்னும் பெயரையுடைய ஒரு பொருள் பிரத்தியட்சமாய்க் கண்ணிற்குப் புலனாகின்றது. அதை விசாரிக்குமிடத்து அந்தக் குடம் இல்லவேயில்லை. ஆனால் அங்கிருப்பது அந்தக் குடத்தினும் வேறான லக்ஷணமுடைய மண்ணேயாகும். மேலும், சூரியன் இப்பூமியைவிட மிகப் பெரிதாக இருக்கிறதென்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய சூரியன் நமது கண்ணிற்கு உள்ளங்கை யளவினதாக இருப்பதாய்க் காணப்படுகின்றது. இவ்விரண்டில் எது உண்மை? பிரத்தியட்சப் பிரமாணம் உண்மையா! நன்றாக யோசித்துப்பார். பிரத்தியட்சப் பிரமாணம் என்னவாயிற்று! பிரத்தியட்சமே பிரபலமானதென்னும் வியவஸ்தையுள்ளதா! இல்லை. ஆகையால், இந்த ஜனன மரணாதிகள் உன்னிடத்தில் பிராந்தியால் காணப்பட்டனவாதலின் மித்தையேயன்றி உண்மையல்லவெனத் தெரிந்துகொள். நீ ஆனந்தவடிவாகிய பிரம்மமாயிருக்கிறாய். உன்னைக் காட்டிலும் அன்னியமாகாத (வேறாகாத) பிரம்மத்தை உன் சித்தத்தில் (புத்தியில்) தேடுவாயாக.

 

சீடனே! பிரம்மமானது இவ்வுலகத்திலாகிலும் வேறு உலகங்களிலாகிலும் குகைகளிலாகிலும் தீர்த்தங்களினிடத்திலாகிலும் விசேஷித்த கர்மங்களிலாகிலும் சாஸ்திரங்களிலாகிலும் இல்லை. விசாரிக்குமிடத்து, அப்படி விசாரித்துப் பார்க்கிறவர்களுக்கு (வேறக இல்லாமல்) தானாகவே யிருக்கிறது. மூடனான ஓர் இடையன் தன் தோளின் மீது ஆட்டை வைத்துக் கொண்டு ஆட்டைக்காணோம் ஆட்டைக் காணோமென்று காட்டிலும் மேட்டிலும் சென்று தேடியலைவது போல், நீயும் உன்னிடத்துள்ள ஆன்மசொரூபத்தை அறிந்து கொள்ள முடியாமல் எந்த சாஸ்திரத்திலிருக்கின்றதோ என்று மயங்குகின்றாய். (சித்தமறியாதபடி சித்தத்தில் நின்றிலகு திவ்ய தேசோமயத்தை' என்றார் தாயுமானார்.) பண்டிதர்கள் தம் சீவான்மாவே பரமான்மாவென்றும், பரமான்வே சீவான்ம ரூபமாக இருக்கிறாரென்றும் கருதியும், திடநிச்சயத்தின் பொருட்டு (அதிக திடம் செய்து கொள்வதற்காக) மீண்டும் பஞ்சகோசங்களினிடத்து ஆன்ம சொரூபமுளதாவென்று தேடுகின்றனர். நீயோ ஆன்ம சொரூபத்தை மறந்து ஆன்மாவினிடத்தில் அநாத்துமத்துவத்தையும், அநாத்தும தருமங்களையும் ஆரோபித்துக் கொண்டு வீணாகத் துக்கிக்கின்றனை. (நீ ஆன்ம சொரூபத்தை மறந்து சத்திய ஞானானந்த லக்ஷணமாகிய ஆன்மாவினிடத்தில் ஆன்மாவல்லாத தேகத்தையும் தேகத்தின் தர்மங்க (தன்மைகளாகிய துக்காதிகளையும் ஆரோபித்துக் கொண்டு, நான் துக்கி' என்று துக்கிக்கின்றனை. இவ்வளவே யன்றி உண்மையில் உன்னிடத்தில் துக்கமானது இல்லை)

 

ஆத்மானாத்ம விவேகம்.

 

அன்புள்ள புத்திர! ஆத்மா இன்னதென்றும், அநாத்மா இன்னது என்றும் பகுத்தலாகிய ஆத்மானாத்ம விவேகத்தை உனக்குக் கூறுகின்றேன். இதைக் கேட்டவுடன் அனாத்மாவாகிய தேகரூபமான பந்தத்தினின்றும் விடுதலையடைவாய். ஆகையால் ஆவலாய்க்கேள் என்று இவ்வாறு கூறிக் குருவானவர் அத்தியாரோபம் அபவாதம் என்னும் இரண்டு யுக்திகளினால் நிஷ்பிரபஞ்சத்தன்மையை நிரூபிக்கின்றவராய் ஆன்ம சொரூபத்தை நன்றாய்ப் போதிக்கிறார்.

 

அத்தியாரோபம்: -

 

சர்ப்பமல்லாத கயிறு முதலானவற்றில் சர்ப்பம் என்னும் பாவம் தோன்றுவது போல, உள்ள வஸ்துவினிடத்தில் இல்லாத வஸ்துவை யாரோபித்தல் அத்தியாரோபமாம். அப்படியே சச்சிதானந்த வடிவ பரப்பிரம்மமே உள்ளவஸ்து. அதனிடத்தில் இந்தக் காணப்படும் உலகம் ஆரோபிக்கப்பட்டது. ஆகையால் கயிற்றினிடத்துக் காணப்பட்ட சர்ப்பம் பொய். உண்மையிலுள்ளது கயிறு மாத்திரமே. அதைப்போல உலகம் பொய். பிரம்மம் ஒன்றுமே மெய்.

 

சீடன்: - ஞான சிரியா! கயிற்றைக்கண்டு இது பாம்பு என்று அறியும் பிராந்தி எவனோ ஒருவனுக்கே உண்டாகும். அப்படி பிரம்மத்தினிடத்தில் உலகப்பிராந்தி ஒருவனுக்கே உண்டாயிற்றா? எல்லாருக்கும் பிராந்தி உண்டாயிற்று என்பதெப்படி?

 

குரு: - நல்ல கேள்வியே கேட்டனை. இருக்கட்டும். ஆகாயத்திற்கு ரூபமுண்டா? இல்லை. ரூபமில்லாத வஸ்துவிற்கு நிறமிருக்குமா? இராது. அங்ஙனமாக, ஆகாயத்தில் நீலநிறம் எப்படி எல்லாருக்கும் காணப்படுகிறது? பிராந்தியாலன்றோ! இங்கே எல்லாருக்கும் எப்படி பிராந்தியுண்டோ அப்படியே அவ்விஷயத்திலும் எல்லாருக்கும் பிராந்தியுண்டென்றே கொள்ள வேண்டும்.

 
 (பழுதை யதனிற் றோன்றியிடும் பாம்பை யுள்ள படி நோக்கின்
 பழுதை யாயே தோன்றியிடும் பாம்பு மதுவாய் விடுமஃதின்
 பழுதில் சிவத்தில் தோன்றியிடும் பன்மை யுலகை நோக்கியிடின்
 பழுதில் சிவமே யாய்த் தோன்றும் பன்மை யுலகு மதுவாய்ப்போம்.


 என்று அத்துவித வுண்மையும்,

 

 கானல் நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர் கனாவூர்
 வானமை கயிற்றில் பாம்பு மலடி சேய் முயலின் கோடு
 பீனமாம் தறிபுமானிற் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே
 ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்திடாயே.


 என்று கைவல்ய நவநீதமும்.


 "பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தியென்
 புந்திக்குளிந்தர ஜாலம் சாதிக்குதே.
 ஜகம் பொய்யெனத் தம்பட்ட மடியே "


என்று தாயுமானவரும் கூறுவனவும், இன்னோரன்ன பிறவும் ஈண்டறியத் தக்கனவாம்.)

அஞ்ஞானம்: - இந்த அத்தியாரோபம் எதனால் உண்டாயிற்றெனில் சத்ரூபமாகிய பிரம்மத்தின் காரியமாயுள்ள தும், பிரம்மத்தினும் வேறான லக்ஷணமுள்ள துமாகிய அஞ்ஞானமே அத்தியாரோபத் (அத்தியாசத்) திற்குக் காரணமாகின்றது.

 

எந்த வஸ்துவானது ஒரு காலத்தில் (ஆராய்ச்சி செய்யாத காலத்தில்) காணப்பட்டு மற்றொரு காலத்தில் (ஆராய்ச்சியின் போது) பாதிக்கப்படுமோ (இல்லாமற் போகுமோ) அது அவஸ்து வென்று கூறப்படும். கிளிஞ்சிலினிடத்துக் காணப்படும் வெள்ளித் தோற்றம் மயக்க காலத்தில் காணப்படுகின்றது; ஆராயுமிடத்து இல்லாமற் போகின்றது. ஆகையால் அங்குக்கண்ட வெள்ளி அவாஸ்தவப் பொருள். ஆனால் கிளிஞ்சிலோ வாஸ்தவப் பொருள். ஏனெனில் அது நாம் வெள்ளியாகக் கண்டதற்கு முன்னும் இருந்தது. வெள்ளியென்று கண்டபோதும் கிளிஞ்சிலாகவே யிருந்தது. அதன் பின்னும் கிளிஞ்சிலாகவே யிருக்கும். ஆகையால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலத்து மிருப்பதாகிய கிளிஞ்சில் வாஸ்தவப் பொருள். அந்தக்கிளிஞ்சிலில் காணப்பட்ட வெள்ளித் தோற்றமானது ஆராய்ச்சியில் பாதிக்கப்பட்டுப் போய் விட்டது போல கிளிஞ்சிலானது பாதிக்கப் படவில்லை யல்லவா? ஆகையால் அது வாஸ்தவப் பொருள். பாதிக்கப்பட்ட வெள்ளி அவாஸ்தவப் பொருள். இந்தத் திருஷ்டாந்தத்தின்படி ஜகத்தின் அத்தியாசத்திற்குக் காரணமாயுள்ள அஞ்ஞானமும் அவஸ்து என்னும் பெயருடையதாகும். (பாதிக்கப்படாத பரமாத்மா வாஸ்தவமென்றும் ஜகத் பிராந்திக்குக் காரணமான அஞ்ஞானம் அவாஸ்தவமான தென்றும் அறிக.)

 

இந்த அஞ்ஞானம் சத்து (உள்ளது) என்றாவது, அசத்து (இல்லது) என்றாவது வேறு இத்தன்மையான தென்றாவது கூறக்கூடியதன்று. சாத்தினாலும் அசத்தினாலும் நிர்வசனிப்பதற்கும் கூடாதது. (அநிர்வசனீயமாகவுள்ளது) சத்துவம் ராஜசம் தாமசம் என்னும் முக்குணங்களை யுடையது. பிரம்ம சொரூபத்தை யறிந்து கொள்வதால் பாதிக்கப்படுவது. பிரம்ம லக்ஷணத்திற்கு வேறான லக்ஷணமுடையது. அநிர்வசனீய சம்பந்தத்தால் ஆசிரயித்துக் கொண்டு அந்தப் பிரம்மத்தினிடத்திலிருப்பது. ஆயினும் சூரியகாந்த மணியினிடத்துள்ள உஷ்ண சத்தியானது தனக்கு ஆசிரயமாயுள்ள அந்த மணிக்கு எப்படி தோஷத்தை யுண்டாக்குவ தில்லையோ அப்படியே இவ்வஞ்ஞானமும் ஆசிரயமான வஸ்துவிற்கு தோஷத்தை யுண்டாக்குவதல்ல.

 

இந்த அஞ்ஞானம் சமஷ்டி, வியஷ்டி என இருவகையாகக் கூறப்படுகின்றது. (மரங்கள் போல் வியஷ்டி பேதம் வனமெனல் சமஷ்டிபேதம்(கைவல்யம்). மரம் என்பது வியஷ்டி. அனேக மரங்களின் கூட்டத்தைத் தோப்பு, வனம் என்று சொல்வது சமஷ்டி) விருக்ஷங்களின் சமுதாயம் (கூட்டம்) தோப்பாவது போல நானாவிதமாகப் பிரசித்தமாகவுள்ள அஞ்ஞானங்களுக்குப் பேதமில்லை யாகையால் ஏகத் (ஒன்றுபட்ட) தன்மையால் சமஷ்டியாகும். இந்த சமஷ்டி சுத்த சத்துவமே லக்ஷணமாகவுள்ள மாயை என்று கூறப்படுகின்றது.

 

      சத்துவகுணப் பிரதானமான மாயையினிடத்து பிரதிபிம்பித்த பிரம்மசைதன்யமும், அந்த மாயைக்கு அதிஷ்டானமான பரப்பிரம்மமும், மாயையும் சேர்ந்து ஈசுவரன் என்னப்படும். இந்த ஈசுவரன் சர்வஞ்ஞத்துவம் (எல்லாவற்றையும் தடையின்றி அறியும் அறிவு) முதலான குணங்களையுடையவனாயும், சிருஷ்டி திதி சங்காரம் என்னும் தொழில்களுக்குக் காரணனாயும், அவ்வியாகிருத னென்னும் பெயருடையவனாயு மிருக்கிறான். மேலும், இந்த ஈசுவரன் எல்லாவித சக்திகளோடும் குணங்களோடும் கூடினவனும், சகல ஞானங்களையும் பிரகாசிக்கச் செய்கிறவனும், சுவதந்திரனும், சத்தியசங்கற்பனும், சத்தியகாம (கோரிக்கைகளையுடையவ)னுமாவன். சர்வஞ்ஞத்துவமும் சர்வேசுவரத்துவமும் ஆதி காரணத்துவமும் உடையவனாயிருத்தலின் மகாவிஷ்ணு என்னும் வேறு பெயரையுமுடையவன். மிக்கசத்தி வாய்ந்தவன். அதி சிரேஷ்டன். இவ் வீசுவரனுக்குச் சத்துவ குணத்தைப் பிரதானமாகவுடையதும் எல்லா சீவர்களின் சமஷ்டி வடிவமானதுமான காரண சரரீரமே சரீரமாம் என்று பெரியோர் கூறுவர்.

 

எல்லா சீவர்களுடைய சமஷ்டி ரூபகாரண சரீரமே பரமேசுவரனுக்குச் சரீரமென்று கூறப்பட்டது. அக்காரண சரீரம் மிக்க ஆனந்தமுடையதும் ஆனந்தத்திற்குச் சாதகமானதுமாக விருத்தலின், ஆனந்தமய கோசம் என்று செல்லப்படும். (சீவர்களின் அன்னமயம் முதலாகவுள்ள பஞ்சகோசங்களும் பின்னால் கூறப்படும். அவற்றுள் கூறப்பட்டுள்ள ஆனந்தமய கோசமே சீவர்களுக்குக் காரண சரீரமாம். இந்தக்காரண சரீரங்களின் சமஷ்டியே (கூட்டம்) ஈசுவரனுக்குச் சரீரம் என்றறிய வேண்டும்).

 

நூல்களில் தினப் பிரளயமென்று ஒரு பிரளயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது நித்திராவஸ்தை. அந்த நித்திராவஸ்தை, சகலமும் லயமடைவதற்குக் காரணமா யிருத்தலின் அதுவே ஈசுவரனுக்கு ஸ்தான மென்பர். ("மாயையி னிடத்திலுள்ள சேதனத்தின் சாயை (ஆபாஸம்), மாயையின்அதிஷ்டான சேதனம் என்னும் இரண்டனையும் ஈசுவரன் என்பர். அந்த ஈசுவரன் மேகாகாசத்துக்குச் சமானமாவர்.

 

1. அந்த ஈசுவரன் அந்தரியாமி யாவர். ஏனெனின், எல்லோருள்ளிலுமிருந்து பிரேரணை செய்கிறார்.

 

2. அவர் சதாமுக்தர். ஏனெனின், அவருக்குத் தமது ஸ்வரூபத்தில்ஆவரணம் (மறைப்பு) இல்லை. ஆதலால் அவருக்கு ஜன்ம மரணாதி பந்தம்தோற்றுகிறதில்லை. இக்காரணத்தால் அவர் நித்திய முக்தராவர்.

 

3. ஈசுவரன் சர்வஞ்ஞர்; சகல பதார்த்தங்களையும் அறிபவரா யிருக்கிறார். ஏனெனில் மாயையில் சுத்த சத்துவ குணமுண்டு. தமோகுண ரஜோகுணங்களால் அமிழ்த்தப்பட்ட தாகாது. ரஜோதமோ குணங்களைத் தான்அமிழ்த்தும். சத்துவகுணம் எதுவோ, அது சுத்த சத்துவகுண மெனப்படும்'' என்று விசாரசாகரமும்,

 

"அகண்ட பரிபூரண சச்சிதானந்த பிரம்மத்தினிடத்தில் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல மூலப்பிரகிருதி (பிர = சத்துவகுணம், கிரு =ரஜோகுணம், தி தமோகுணம் : எனவே முக்குணங்களுடன் கூடிய மாயைபிரகிருதி யெனப்படும். இது சகலத்திற்கும் மூலகாரணமா யிருத்தலால் மூலப்பிரகிருதி யென்னும் பெயருடையது.) என்னும் ஒரு சக்தியுண்டாயிற்று. அந்த மூலப்பிரகிருதியும் விகிருதகுணமான மூன்று குணங்களுடன் கூடியிருக்கும். அந்தப் பிரகிருதியின் சத்துவகுணம் மாயை என்றும் சர்வஞ்ஞஉபாதியென்றும் ஈசுவர காரண சரீர மென்றும் சொல்லப்படும். இந்தமாயையினிடத்து நிர்மலஜல் பிரதி பிம்பம் போல் பிரம்மம் சுலக்ஷணமாய் பிரதிபிம்பிக்கும். இந்த பிரதிபிம்ப சைதன்யம் சர்வஞ்ஞனான ஈசுவரனென்று சொல்லப்படும்" என்று நாநாஜீவவாதக் கட்டளையும் கூறுவதிங் கறிதற்பாலதாம்.)

 

(முன் சஞ்சிகையிற் கூறியபடி) அஞ்ஞானம் வியஷ்டி பாவத்தால் அநேமாக பேதிக்கப்படுகின்றது. சத்துவாதி குணங்களினால் விலக்ஷணமுடைய அஞ்ஞானத்தின் விருத்திகள் அநேகம். எப்படி சமஷ்டி பாவத்தால் ஒன்றாகவுள்ள வனத்திற்கு வியஷ்டி பாவத்தால் விருக்ஷங்களென்று அநேகத்துவமுள்ளதோ, அப்படியே அஞ்ஞானத்திற்கு வியஷ்டி பாவத்தால் அநேகத்துவ முண்டு.

 

சீடன்: - சுவாமி! ஒரு வஸ்துவிற்கு சமஷ்டி வியஷ்டி என்னும் இரண்டு வியவகாரங்கள் எப்படிச் சம்பவிக்கும்?

 

குரு: - ஞான புத்திரா! பத்திர (இலை) புஷ்பாதி தர்மங்கள் தனித்தனியாக ஒவ்வொரு விருக்ஷத்தினிடத்து முண்டு. விருக்ஷங்களின் கூட்டமானவனத்திலு முண்டு. அதனால் சமஷ்டி பாவத்தால் வன மென்றும் வியஷ்டி பாவத்தால் மரம் என்றும் வழங்குவது பிரசித்தம். இப்படியே இந்த அஞ்ஞானத்திற்கும் சமஷ்டி பாவத்தினாலும் வியஷ்டி பாவத்தினாலும் வியவகார முண்டாதல் யுக்தமேயாகும். அஞ்ஞானத்தின் சமஷ்டி வடிவம் சுத்த சத்துவம். அதனுடன் கூடின பிரஹ்ம சைதன்யம் ஈசுவரன். இனி அஞ்ஞானத்தின் வியஷ்டி வடிவம் ரஜோதமோகுணங்களினால் மலினமான சத்துவம். இதனால் ஈசுவர உபாதியினும் தாழ்ந்ததாகும். (ஈசுவர உபாதி சுத்த சத்துவமான மாயை. உபாதி =தானிருக்குமிடத்தி லிருந்து கொண்டே வேறொரு வஸ்துவைக் காட்டிக்கொண்டு தானதனுடன் கலவாமல் அன்னியமா யிருப்பது). இத்தகைய அஞ்ஞானத்தின் வியஷ்டி ரூபமான மலின சத்துவத்துடன் கூடின பிரஹ்ம சைதன்யமே பிரத்தியகாத்மா வெனப்படும்.

 

(இங்கு இது அறியத்தக்கது: "மாயை, அஞ்ஞானம், அவித்தை என்பன ஒரே வஸ்துவுக்குப் பெயராயினும், சுத்த சத்துவத்தின் பிரதானம்மாயை யென்றும், மலின சத்துவகுணத்தின் பிரதானம் அஞ்ஞானம் என்றும் அவித்தை யென்றும் பெயர் பெறும். ஓர் பிராஹ்மண ஜாதியுடைய ராஜாவானவன் க்ஷத்திரிய சூத்திர ஜாதியுடைய இரண்டு மந்திரிகளால் தான் அமிழ்த்தப்படாது, அவ்விருவரையும் தான் அமிழ்த்தி யிருப்பான். அங்ஙனமே ரஜோதமோ குணங்களால் அமிழ்த்தப்படாது, அவ்விரண்டையும் தான் அமிழ்த்தும் சாத்துவ குணம் எதுவோ, அது சுத்த சத்துவ குணமாம். சூத்திர ஜாதியுடைய இரண்டு ராஜ புத்திரர்களால் பிராஹ்மண ஜாதியுடைய ஒரு மந்திரி அமிழ்த்தப்படுவது போல ரஜோகுண தமோகுணங்களால் அமிழ்த்தப்படும் சத்துவ குணம் எதுவோ அது மலின சத்துவகுண மெனப்படும்" விசாரசாகரம்.)

 

ஜீவசொருபம்.

 

சீடனே! இனி ஜீவசொரூபத்தைக் கூறுகிறேன். கேட்பாயாக. முன்சொன்ன அஞ்ஞானத்தின் வியஷ்டி வடிவமான மலின சத்துவத்தினிடத்தில் பிரதிபிம்பித்த பரமாத்ம சைதன்யம் பிரத்தியகாத்மா வெனப்படும். இந்தப் பிரத்தியகாத்மாவே தனக்கு உபாதியான அஞ்ஞானத்தினுடைய * தாதாத்மியத்தாலும் (சம்பந்தத்தாலும்) குணங்களினாலும் கிஞ்சிஞ்ஞத்வம் (சிற்றறிவு) முதலிய தன்மைகளுடன் கூடினதாய் ஜீவன் என்னப்படும். ஆன்மாவிற்கு அகங்காரத்தினாலேயே ஜீவத்தன்மை யுண்டாயிற்று.

 

* தாதாத்மிய சம்பந்தம் = கற்பித பேதத்தோடு வாஸ்தவ அபேதமாகியசம்பந்தம்.

 

ஆகையால் அவ்வித அகங்காரத்திற்குக் காரணமானதாகலின் வியஷ்டியாகிய காரண சரீரம் அந்த சீவனுக்குச் சரீரமாகின்றது. இந்தச் சரீரத்தினிடத்து அபிமானமுள்ளவன் பிராஞ்ஞனெனப்படுவான். பிராஞ்ஞன் என்பதற்கு ஞானவானென்பது பொருள். ஞானமென்பது பொருளை யறிதல். இதுவே வஸ்துக்களை விளங்கச் செய்வது ஆகலின் வஸ்துக்களைப் பிரகாசிக்கச் செய்யும் சக்தியெனக் கூறப்படும். ஆன்மாவானது நித்திராவஸ்தையில் காரண சரீரத்தை யபிமானித்திருக்கும். அப்பொழுது, நான் சுகமாகத் தூங்கினேன். வேறொன்றையும் அறியேன்' என்னும் அனுபவமிருக்கிறது. அறியாதிருப்பதே அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தை விளக்குகின்றமையின் காரண சரீராபிமானிக்கு பிராஞ்ஞத்தன்மை யுண்டாயிற்று. இந்த பிராஞ்ஞனுடைய உபாதியாகிய காரண சரீரம் வியஷ்டிரூபமாய் ரஜோகுண தமோகுணங்களால் மிகவும் நிகிருஷ்டமானதாகலின், இதனால் தன் அஞ்ஞானமொன்றைத் தவிர வேறு அஞ்ஞானங்களைப் பிரகாசிக்கச் செய்வதற்கு இது சக்தியுடைய தாகாது.

 

ஆன்ம சொரூபத்தை மறைப்பதாயும் மிக்க ஆனந்தமுடையதாயு மிருத்தலின், காரண சரீரம் ஆனந்தமய கோச மென்னப்படும். (கோசம் - கத்தி முதலியவற்றின் உறை. இங்குக்காரண சரீரம் அஞ்ஞானவடிவினதாகலின், ஆன்ம சொரூபத்தை மறைக்கும் கோசம் (உறை) என்றும், விசேஷ ஆனந்தமுடையதாகலின் ஆனந்த மயமென்றும் கூறப்படுகிறது.) இந்தக் காரண சரீரம் நித்திராவஸ்தையில் அறியப்படுகின்றது. இதில் ஆனந்தமிருக்கிறது. இதற்குப் பிரமாணம் யாதெனின்: - மனிதர் தூங்கியெழுந்து, 'நான் சுகமாகத் தூங்கினேன்; வேறொன்றையும் அறியேன்' என்கின்றனர். ஆகையால் அனுபவத்தினாலேயே நித்திராவத்தையில் ஆனந்த முளதென்று தெரிகிறது.

 

ஞானகுமாரா! இதுகாறும் கூறியவற்றால் என்ன ஏற்படுகிறது எனின்: முற்கூறிய தோப்புமர (சமஷ்டி வியஷ்டி) திருஷ்டாந்தத்தால் வியஷ்டியாகிய ஜீவோபாதிக்கும், சமஷ்டியாகிய ஈசுவரோபாதிக்கும் ஒரேசாதித் தன்மையால் பேதமில்லை. அப்படியே ஈசுவரனுக்கும் பிராஞ்ஞனுக்கும் பேதமில்லையென்று அறியக்கடவாய். கடலின் அலைகள் ஒன்றேயாகலின் அவ்வலைகளில் பிரதிபிம்பிக்கும் சூரிய பிரதிபிம்பங்களுக்குள் பேதமில்லாதது போல, ஜீவேசுவரர்களின் உபாதிகளுக்கும் பேதமில்லையாகையால் அவற்றோடு கூடியுள்ள ஜீவேசுவரர்களுக்கும் பேதமின்றாம்.

 

வியஷ்டி வடிவமாகிய அவித்தைக்கும் சமஷ்டி வடிவமாகிய மாயைக்கும் அவற்றில் பிரதி பலித்த ஜீவேசுவர பிரதி பிம்பங்களுக்கும் ஆதாரம் எது? சுத்த சைதன்ய மல்லவா? அந்த சுத்த சைதன்யம் துரிய மென்று கூறப்படுகின்றது.

 

இந்த சுத்த சைதன்யமே, மாயை அலித்தை வடிவ உபாதிகளுடனும் அவற்றின் குணங்களுடனும் கூடினதாய் மகா வாக்கியத்தினுடைய வாச்சியார்த்தமாகிறது. (வாச்சியார்த்தம் = பதத்தின் பொருள்.) உபாதிகளுடனும் அவற்றின் குணங்களுடனும் கூடாமல் லக்ஷியார்த்தமாகிறது. (தத்துவமசி - என்பது மகாவாக்கியம். இதில் 'தத்' என்னும் பதத்திற்கு சர்வஞ்ஞத்வ விசிஷ்ட (விசேஷமாகவுடைய) னாகிய ஈசுவரன் என்றும், 'துவம்' என்னும் பதத்திற்கு கிஞ்சிஞ்ஞத்துவ விசிஷ்டனாசிய ஜீவன் என்றும் பொருளாம். இவ்வாறு தத்துவம்' என்னும் பதங்களுக்கு, மாயை அவித்தை வடிவங்களாகிய உபாதிகளுடனும், அவற்றின் குணங்களாகிய சர்வஞ்ஞத்துவ கிஞ்சிஞ்ஞத்து வாதிகளுடனும் கூடிய ஈசுவர சீவர்கள் வாச்சியார்த்தம். பிறகு பாகத்தியாக லக்ஷணையால் (இது பின்னர் விளக்கப்படும்) அவர்களின் உபாதிகளையும், அவற்றின் லக்ஷணங்களாகிய சர்வஞ்ஞத்துவ கிஞ்சிஞ்ஞத்து வாதிகளையும் விட்டு, மிகுதியாகவுள்ள சுத்த சைதன்யங்களுக்கு 'அசி' பதத்தால் அபேத சம்பந்தம் கூறப்படுகின்றது. இவ்வாறு உபாதி விசிஷ்டமான ஆன்ம தத்துவம் மகாவாக்கியத்திற்கு வாச்சியார்த்த மெனவும், நிரூபாதிக (உபாதியற்ற) மான சுத்த சைதன்யம் லக்ஷியார்த்த மெனவும் நிரூபிக்கப் பட்டது என்றறியக்கடவாய்.

 

உலக சிருஷ்டி.

 

ஞானகுமாரா! இனி இப்பிரபஞ்சத்தி னுற்பத்தியைக் கூறுகிறேன். கவனமாய்க் கேள். அளவில்லாத சக்தியை யுடையவனும் மாயையை உபாதியாக வுடையவனுமாகிய ஈசுவரன் தன் சங்கற்ப மாத்திரத்தினால் சராசர வடிவமாகவுள்ள இப்பிரபஞ்சத்தைச் சிருஷ்டிக்கிறான்.

 

சீடன்: - குருநாதா! ஓர் காரியத்தின் உற்பத்திக்கு நிமித்த காரணம், உபாதான காரணம் என இரண்டு காரணங்கள் அத்தியாவசியமானவை. கடத்தின் உற்பத்திக்குக் குலாலன் நிமித்த காரணம். மண் உபாதானகாரணம். மண்ணில்லாமற் குயவன் குடத்தை வனைய வியலாது. அதுபோல, உலகசிருஷ்டிக்கும் இவ்விரண்டு காரணங்களும் தேவை. ஈசுவரன் இரண்டாவது பொருளில்லாமல் தான் மாத்திரமே யுள்ளவனாகலின், உபாதானகாரணம் அவனுக்கில்லை. உபாதான காரண மில்லாத இந்த ஈசுவரன் இந்த உலகத்தை எங்ஙனம் சிருஷ்டிப்பான்?

 

குரு: - நீ கூறிய துண்மையே. இரண்டு காரணங்களின்றி ஓர் காரிய வஸ்து தோன்றாது. ஆனால், ஈசுவரன் இந்த இரண்டு காரணங்களும் தானாகவே யிருக்கிறான். ஆகையால் தான் சிருஷ்டி திதி சங்காரமாகிய மூன்று காரியங்களையும் தானே செய்கிறான்.

 

சீடன்: - சுவாமி! இரண்டு காரணங்களும் ஒருவனிடத்து எவ்வாறு பொருந்தியிருக்கும்? இது சந்தேகிக்கக்கூடியதா யிருக்கிறதே.

 

குரு: - இரண்டு காரணங்களும் ஓரிடத்தே உளவாகும் என்பதற்கு திருஷ்டாந்தங் காட்டுகிறேன். இதனால் உன் ஐயம் அகலும். அது இது: - சிலந்திப் பூச்சி வலைபின்னுகின்றதே. எதைக் கொண்டு பின்னுகின்றது. அதாவது அதற்கு உபாதான காரணம் எது? அதனிடத்தே தானே தோன்றுகின்ற நூலேயல்லவா உபாதான காரணம்? அச்சிலந்தியானது தானே பிரதானமாகி நிமித்தகாரணமாகவும், தன் சரீரத்தின் பிரதானத்தன்மையால் உபாதான காரணமாகவும் இருக்கின்றது. அதுபோல, ஈசுவரனும் தன் பிரதானத்தால் நிமித்த காரணனாகவும், தன் உபாதியாகிய மாயையின் பிராதான்யத்தால் உபாதான காரணனாகவு மிருக்கின்றானென்று அறிக.

 

சீடன்: - என்னை ஈடேற்ற வந்த எம்பெருமானே! இப்பொழுது ஐயம் தொலைந்தது. இனி, தாங்கள் கூறத் தொடங்கிய உலக சிருஷ்டியைத் திருவாய்மலர்ந்தருள வேண்டும்.
 

குரு: - தமோகுணத்தைப் பிரதானமாகவுடைய பிரகிருதியோடு கூடிய பரமாத்மாவினால் ஆகாயம் பிறந்தது. ஆகாயத்திலிருந்து வாயு தோன்றிற்று. இவ்வாறே வாயுவால் அக்கினியும், அக்கினியால் அப்பு (ஜலம்)வும், அப்புவால் பூமியும் முறையே உண்டாயின. இந்த ஆகாயம் வாயு அக்கினி அப்பு பூமி என்னும் ஐந்தும் பஞ்சபூதங்க ளெனப்படும். இங்கு ஓர் விஷயம் கவனிக்கத்தக்கது. அஃதியாதெனின்: காரியவஸ்து வினிடத்துக் காணப்படும் குணம் அதன் காரணவஸ்துவினுடையதே என்பது நியதி. ஆகையால், சக்தியாகிய பிரகிருதியினுடைய காரியமாகவுள்ள இப்பஞ்சபூதங்களினிடத்து ஜடத்தன்மை காணப்படுதலால் இவற்றிற்குக் காரணமான பிரகிருதி தமோகுணப் பிரதானமானதென்பது விளங்குகின்றது.

 

இப்பூதங்களைந்தும் முதலில் ஒன்றோடொன்று கலப்பில்லாமல் இருந்தமையால் சூக்ஷ்ம பூதங்களென்றும் அபஞ்சீகிருத பூதங்களென்றும் (முக்குண பூதங்களெனவும்) பெயர் பெறும். இந்தச் சூக்ஷ்ம பூதங்களால் சூக்ஷமதேகம் உண்டாகின்றது. இப்பூதங்களில் ஒன்றுக் கொன்று கலப்புண்டாவதால் அவை தூல பூதங்களாகின்றன. அத்தூல பூதங்களால் தூல சரீரங்க ளுண்டாயின. இனி சூட்சும தேக உற்பத்தி கூறுகிறேன்.

 

பஞ்சி காணப்படாத (கலப்பில்லாத) பூதங்களால் (சூட்சும பூதங்களால்) உண்டானதும், ஞானேந்திரியமைந்து, கன்மேந்திரியமைந்து, பிராணாதி வாயுக்கள் ஐந்து, மனம் புத்தி இரண்டு, ஆகப்பதினேழு அங்கங்களை யுடையதும், சம்சாரத்திற்குக் காரணமாகவுள்ளதுமாகிய லிங்க சரீரம் (சூட்சும சரீரம்) ஆன்மாவிற்குப் போகசாதனமாக வுள்ளது.

 

ஆகாசம் முதலிய பஞ்சபூதங்களின் சத்துவாம்சங்களினால் முறையே சுரோத்திரம் (செவி), மெய் (தோல்), கண், நாக்கு, மூக்கு என்னும் ஞானேந்திரியங்களைந்தும் தோன்றின. ஆகாசாதி பஞ்ச பூதங்களின் சாத்துவிகாம்சங்கள் ஐந்தும் ஒன்றாகக் கூடி எல்லாவற்றிற்குங் காரணமான அந்தக்கரண முண்டாயிற்று.

 

சீடன்: - சுவாமி! ஞானேந்திரியங்களும் அந்தக்கரணமும் பஞ்சபூதங்களின் சத்துவாம்சத்தால் தோன்றியவை என்று அறிவதெப்படி?

 

குரு: - சத்துவகுணம் நிர்மலமானது. நிர்மலமான சத்துவகுணத்திற்கே ஒன்றைப் பிரகாசிக்கச் செய்யும் சக்தியுண்டு. இந்தச் சக்தி ஞானேந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்திற்கு மிருத்தலால் சாத்துவாம்சத்தால் உண்டானவை யென்றறிதல் வேண்டும். நிற்க,

 

இந்த அந்தக்கரணம் விருத்தி (தொழில்) பேதத்தால் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என நான்கு வகையாகக் கூறப்படுகின்றது.


சங்கற்பத்தை (நினைத்தலை)ச் செய்வது - மனம்.
பதார்த்த நிச்சயஞ் செய்வது - புத்தி.
'நான்' என்னும் அபிமான முடையது - அகங்காரம்.
சிந்தித்தலைச் செய்வது - சித்தம்.


என இந்த நான்கிற்கும் காரணமும் பெயரும் காட்டுவர் ஆன்றோர்.

 

சீடன்: - முன்னம் ஞானேந்திரியம் 5. கன்மேந்திரியம் 5. பிராணன் முதலியவாயுக்கள் 5. மனம் புத்தி 2. ஆக 17 அங்கங்களையுடையது சூட்சுமசரீரம் என்றீர்கள். அந்தக்கரணம் நான்காகுமானால் சூட்சும சரீரதத்துவங்கள் பத்தொன்பது என்றல்லவோ சொல்ல வேண்டும்?

 

குரு: - அந்தக்கரணம் நான்கில் சித்தம் மனதிலும், அகங்காரம் புத்தியிலும் அந்தர்ப்பாவமாகும் (அடங்கும்). ஏனெனில், சங்கற்பங்களைச் செய்வது போல சிந்தித்தலைச் செய்வதும் மனத்தின் தர்மமாகும். ஆகையால் சித்தத்திற்கு மனதினிடத்தில் அந்தர்ப்பாவம் பொருந்தும். தேகாதிகளினிடத்து 'நான்' என்னும் அபிமானம் புத்திக்குக் காணப்படுகின்றது. ஆதலால், புத்தியினிடத்து அகங்காரம் அடங்கும். இது பற்றியே புத்திக்குக் கர்த்திருத்துவமும் (கர்த்தாத் தன்மையும்) மற்ற இந்திரியங்களுக்குக் கரணத்துவமும் (கருவித் தன்மையும்) ஏற்படுகின்றன. இவ்வாறு நான், எனது', என்னும் அஞ்ஞானத்தினால் ஆன்மாவிற்குச் சம்சார வடிவ பந்தம் ஏற்பட்ட தென்றறிய வேண்டும்.

விஞ்ஞானமய கோசம்.

 

சுரோத்திரம் முதலாகிய ஞானேந்திரியங்களோடு கூடிய புத்தி விஞ்ஞானமய கோசமாம். இது விசேஷமான (இகபர கருமவிஷய) ஞானத்தையுடையதாயும் ஆன்மாவிற்கு மறைப்பை யுண்டாக்குவதாயு மிருத்தலால் விஞ்ஞானமய கோச மெனப்படுகிறது. (கோசம் என்பது கத்தியின் உறைக்கும், கோசதாரப் புழுவின் கூட்டிற்கும் பெயராம்.) இந்த விஞ்ஞானமயகோசம், 'நான்' என்னும் அகங்காரத்தை (அபிமானத்தை) யும், 'நான்கர்த்தா' என்னும் பாவத்தையும் உடையதாய்ச் சகலவித சம்சாரத்தையும் நிர்வகிப்பதாகின்றது. இந்தக் கோசத்தின் அபிமானியாகிய புருஷனே தேகேந்திரியாதிகளை நானென்றும், வீடு முதலானவைகளை என்னுடையவை யென்றும் அபிமானித்துக் கொண்டிருக்கிறான். மேலும், நான் ஜீவித்திருக்கிறேன், நான் செய்கிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் சுகி, நான்துக்கி' என்னும் அபிமானமும் இவனுக்கேயாம். இவனே (விஞ்ஞானமயகோசாபிமானியாகிய இப்புருஷனே) வாசனையால் தூண்டப்பட்டவனாய்பண்ணிய பாவ கர்மங்களைச் செய்து அக்கர்ம பலன்களாகிய சுகதுக்கங்களைப் மயபரலோக இகலோகங்களில் அனுபவிக்கின்றான். ஜீவன் இவ்வாறு கர்மங்களைச் செய்து பலவகைப்பட்ட பிறவிகளிற் பிறப்பதும் இறப்பதுமாய்ச் சம்சாரத்தில் உழலுகிறான்.

மனோமய கோசம்.


ஞானேந்திரியங்களோடு கூடிய மனமே மனோமய கோசமாம்.

 

சீடன்: - சுவாமி! விஞ்ஞானமய கோசத்திலும் ஞானேந்திரியங்கள் சேர்ந்திருக்கின்றன. மனோமய கோசத்திலும் ஞானேந்திரியங்க ளிருக்கின்றன வெனக் கூறுகின்றீர்கள். இவ்விரண்டிற்கும் பேதமென்ன?

 

குரு: - மனோ தர்மம் அதிகரித்திருப்பதே மனோமய கோச லக்ஷணமாம் என்றறிய வேண்டும். சிந்தை சோகம் காமம் முதலானவைகள் இந்த மனத்தின் தர்மங்களாம். இந்தப் புருஷன் மனத்தினாலேயே சங்கற்பிக்கிறான். பலங்களைக் கோருகிறான். வெளியிலும் பிரயத்தினம் செய்கிறான். கரியங்களைச் செய்கிறான். அனுபவிக்கிறான். ஆகையால் மனமே எல்லாவற்றிற்கும் காரணமா யிருக்கின்றது. இந்த மனமே ஜீவனுடைய பிரவிருத்திக்குக் காரணமாயுள்ளது. மனத்தினாலேயே ஜீவன் உள்ளிலும்வெளியிலுமுள்ள பதார்த்தங்களைத் தெரிந்து கொள்ளுகிறான். இதனாலேயே கேட்கிறான், முகர்கிறான், பார்க்கிறான், வசனிக்கிறான், புசிக்கிறான், சகலமும் செய்கிறான். புருஷர்களுக்கு பந்தமும் மோக்ஷமும் மனத்தினால் தான் உண்டாகின்றன. அனுகூல பிரதிகூல பதார்த்தங்களும் சித்திக்கின்றன. எப்படியெனில், பரிசுத்தமான மனத்தினால் மோக்ஷமும், அபரிசுத்தமான மனத்தினால் பந்தமும், விவேகத்தினால் பிரயோஜனமும், அவிவேகத்தினால் நிஷ்பிரயோஜனமும் நேரிடுகின்றன.


சீடன்: - மனம் எப்படி அசுத்தமாகின்றது?

 

குரு: - சத்துவகுணம் குறைந்து ரஜோகுண தமோகுணங்கள் மிகுந்துள்ள மனம் மலினமடைந்த மனமாகும் இந்த அசுத்தமனம் தமோகுண தோஷத்தையுடையதாகலின் அறியாமை, மோகம், சோம்பல், கோபம் முதலான தோஷங்களை மிகுதியுமுடையதாய் அனுபவ சித்தமான நிஜவஸ்துவின் சொரூபத்தை அறிய முடியாததா யிருக்கின்றது. இதனாலே பந்த முண்டாகின்றது.

 

மனம் சூட்சும வஸ்துவையும் அறியும் சக்தியுடையதா யிருந்தாலும், ரஜோகுண தோஷங்களாகிய சிந்தைகளினால் கலக்க மடைந்ததாயும், காமக்குரோதாதிகளை யுடையதாயு மிருத்தலால் பெருங்காற்றினால் அலைக்கப்படுகின்ற விளக்கைப் போல, சலித்துக் கொண்டு வஸ்துவை நன்றாய்ப் பிரகாசிக்கச் செய்யமுடியாத தாகின்றது. ஆதலால், மோக்ஷத்தை விரும்பும் புருஷன், சம்சார பந்த நிவிர்த்தியின் பொருட்டு மனத்தில் ரஜோகுண தமோகுணங்களும் அவற்றின் காரியங்களும் சேராமல் ஒழித்து, பிரயத்தினத்தால் மனத்தைப் பரிசுத்தமாகிய சத்துவகுண முடையதாகச் செய்யவேண்டும்.

 

நல்ல புத்திமான் கர்ப்பவாசம் ஜனனம் மரணம் முதுமை வியாதி நரகம் முதலானவைகளினால் பிராணிகளுக் குண்டாகும் துக்கங்களை யறிந்து அவற்றைப் பன்முறை சிந்தித்து, விஷயாதிகளிடத்துண்டாகும் விருப்பத்தை அவ்விஷயங்களி னிடத்துள்ள தோஷங்களை யறிவதன் மூலமாக ஒழித்து, சித்தத்தினுடைய கிரந்தியாகிய பந்தத்தினின்று விடுதலை யடைவதற்காக சத்துவகுணத்தை யவலம்பிக்கவேண்டும்.


சீடன்: - என்னை வாழ்விக்க வந்த வரதரே! மனம் எதனால் நிர்மலமடையும்?

 

குரு: - மைந்தா! எவனொருவன் பிரயத்தினத்தினால் இயமதியமங்களில் விருப்பமுடையவனாகின்றானோ அந்த விவேகியின் மனம் நிர்மல மடையும். (இயமம் = இந்திரிய நிக்கிரகம். நியமம் = ஞானாப்பியாசம்.) எவன்மோக்ஷாபேக்ஷையால் எப்பொழுதும் காமக்குரோதாதி துர்க்குணங்களாகிய அசுரசம்பத்தைவிட்டு விவேகம் விராகம் சமாதி சம்பத்தி முதலாகிய தேவசம்பத்தை அடைகின்றானோ அவனுடைய மனம் நிர்மலமாகும். எவனுடைய மனமானது பிறர் பொருளை யிச்சித்தல், பிறரைவஞ்சித்தல் பிறரை நிந்தித்தல், பரமாதரை விரும்புதல் முதலானவைகளை யடையா திருக்கின்றதோ அவனுடைய மனம் பரிசுத்த மடையும். எவன் தனது சுகதுக்கங்களைப் போல சகல பிராணிகளின் சுகதுக்கங்களைக் கருதுகின்றானோ அவன் மனம் மலினமற்றதாகும். எவன் சகிப்புத்தன்மையுடையவனாய் சிரத்தா பக்திகளுடன் குருவையும் ஈசுவரனையும் இடைவிடாமல் தன்னிடத்தேதானே சேவிக்கின்றானோ அவன் மனம் நிர்மலமானதாகும். ஈசுவராராதனமும் பெரியோர் சேவையும் தீர்த்தயாத்திரையும் சித்தசுத்திக்குக் காரணங்களாம்.
 

சீடன்: - சுவாமி! சத்துவகுண விருத்தி எதனாலுண்டாம்?

 

குரு: - கசப்பு, புளிப்பு, உப்பு, மிக்க உஷ்ணம், பசையற்றது, மிக்க தாகத்தையுண்டாக்குவது, துர்க்கந்தமுள்ளது முதலாகிய தமோகுண பதார்த்தங்களைப் புசியா திருத்தலால் சத்துவகுணம் விருத்தியாகும். வேதங்களையும் தத்துவார்த்தங்களைக் கூறுகின்ற புராணங்களையும் வாசிப்பதாலும் சாதுக்களுடன் சாங்கத்தியம் செய்வதாலும் சத்துவகுணம் மேம்படும். எவனுடைய மனம் விருப்பமற்றதாகின்றதோ, எவனுடைய மனம் சாந்த முடையதாகின்றதோ அவனுக்கு உலகமுழுதும் மித்திரபாவமாகும். முத்தியும் அவள் உள்ளங்கையிலிருக்கும்.

இதமும் மிதமுமான போஜனத்தைப் புசிப்பவனும் எப்போதும் ஏகாந்த (தனித்த) ஸ்தானத்தில் இருப்பவனும் மிதமாகப் பேசுவோனும் சொற்ப நித்திரையுடையவனுமாகிய மனிதன் விரைவில் சித்த சுத்தியையடைகிறான். சம்சார பந்தத்திலுள்ளவன் சித்த சுத்தியின்றி பரமாத்ம சொரூபத்தை (தத்துவஞானத்தைத்) தெரிந்து கொள்ளும் சத்தியுடையவனாகான். பரமாத்ம சொரூபத்தை யறியாவிடின் (தத்துவஞான மில்லாவிடின்: ஆயிரகோடி கற்ப மாயினும் முத்தி சித்தியாது. புருஷனுக்கு மனம் பரிசுத்தமாகாதிருத்தலே பந்தமாம். பரிசுத்தமாதலே சம்சாரபந்த விடுதலையாம். ஆதலால் மனச் சுத்தத்தின் பொருட்டு மனத்திலுண்டாகும் இச்சைகளை யொழிக்க வேண்டும். அன்புள்ள குமாரா! இனி பிராணமய கோசத்தைக் கூறுகிறேன். கேட்பாயாக.

 

 

பிராணமய கோசம்.

 

முற்கூறிய ஆகாசம் முதலிய (சூக்ஷ்ம) பூதங்களைந்தினுடைய ரஜோ குணாம்சத்தினின்றும் வாக்கு பாணி பாதம் பாயுரு உபஸ்தம் என்னும் கர் மேந்திரியங்களும், பிராணம் அபானம் வியானம் உதானம் சமானம் என்னும் ஐந்து வாயுக்களுமுண்டாயின. (பாணி - எக, பாயுரு (அ) - குதம் - மலத்து வாரம். உபஸ்தம் - ஜலத்துவாரம். கர்மேந்திரியம் - கர்ம இந்திரியம் - தொழிற்கருவி.) (சூக்கும பூதங்களின் தனித்தனியாகப் பிரிவுப்பட்ட ரஜோ தணாம்சத்தினின்றும் பஞ்சேந்திரியங்களும், கலப்பான ரஜோகுணம் சத்தினன்றும் பஞ்ச வாயுக்களும் தோன்றின வென்றறிக. கன்மேந்திரியங்கள் தனித் தனியாகப் பிரிந்திருப்பதும் வாயுக்கள் கலந்திருத்தலும் காண்க.) இவற்றுள்,


பிராணவாயு       -      மேல்நோக்காகச் சஞ்சரிப்பது. (இருதயத்திலிருக்கும்)
அபானவாயு       -      கீழ்முகமாகச் சஞ்சரிப்பது. (குதத்திலிருப்பது)
வியானவாயு      -      குறுக்காகச் சஞ்சரிப்பது. (சருவாங்கத்திலிருப்பது)
உதான வாயு      -      அன்ன ஜலங்களின் விபாகத்தைச் செய்வது

(கண்டத்திலிருப்பது)

சமானவாயு       -      உண்ட அன்னரசத்தை சமமாகச் சகல

அவயவகங்களிலும் செலுத்துவது (நாபியிலிருப்பது.)

 

சீடன்: - கன்மேந்திரியங்களும் வாயுக்களும் ரஜோகுணாம்சமானவை யென்றறிவதெப்படி?

 

குரு: - அவற்றினிடத்துக் காரியம் செய்யும் தன்மை காணப்படுவதால் அவை ரஜோகுண சம்பந்தமுடையவை யென்று அறிதல் வேண்டும். ஏனெனில், ரஜோகுணம் கிரியாசத்தியுடைய தென்றும், தமோகுணசக்தி சடத்தன்மையுடைய தென்றும், சத்துவகுணம் பிரகாச வடிவுடையதென்றும் மகரிஷிகள் கூறியிருக்கின்றனர். ஆதலால் கன்மேந்திரியங்களும் வாயுக்களும் ரஜோகுணாம்சமேயென்றறிய வேண்டும்.

 

இந்த ஸ்தூல சரீரம் சலித்துக்கொண் டிருத்தற்குக் காரணமாகவுள்ள இந்தப் பிராணன் முதலாகிய பஞ்சவாயுக்களும் கர்மேந்திரியங்களைந்துடன்கூடி பிராணமய கோசமாம். வாக்கு முதலிய கர்மேந்திரியங்களாலும் சரீரத்தாலும் செய்யப்படும் புண்ணிய பாவங்களாகவள்ள சகல காரியங்களும் பிராணமய கோசத்தினாலேயே செய்யப்படுகின்றனவாகும். எப்படி மரமானது காற்று வீசும்போது பல விதமாய் அசைகின்றதோ, காற்று வீசாத போது அசையாமலிருக்கின்றதோ அப்படியே சரீரமும் இந்த வாயுக்களாலும் கன்மேந்திரியங்களாலும் பிரேரேபிக்கப் (தூண்டப்) படுவதாய் விதிவிலக்குகளாகிய பல வகைப்பட்ட காரியங்களிலும் பிரவேசிக்கின்றது. நிற்க,

 

சூக்ஷ்ம பிரபஞ்சம்.

 

மைந்தா! இதுகாறும் கூறிய பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் என்னும் மூன்று கோசங்களும் கூடி ஜீவாத்மாவின் சூக்கும சரீரமாகும். இச் சரீரம் அதிசூக்ஷமமாய் ஒடுங்கிக் காணப்படுவதால் லிங்கசரீரமென்றும் ஸ்தூலசரீர திருஷ்டியால் சூக்ஷ்மசரீர மென்றும் சொல்லப்படுகின்றது. ஒரு புத்திக்கு விஷயமாவதால் மூன்று கோசங்களும் சேர்ந்து லிங்கசரீரமாயின.

 

சமஷ்டி வடிவமாகிய விருக்ஷங்களின் கூட்டம் வனமெனப்படுதல் போல, இந்த லிங்கசரீர சமஷ்டியுடன் கூடினதும் எல்லாவற்றினும் வியாபித்துள்ளதுமாகிய சைதன்யம் (ஈசுவரன்) இரண்யகர்ப்பனென்றும் சூத்திராத்மாவென்றும் பிராணம் என்றும் பெரியோர்களா லழைக்கப்படுகின்றது. பிரகாச ரூபமான புத்திக்குள் (கருப்பத்தில்) பொன்னைப் (இரணியம்) போல பிரகாசிப்பதால் இரணியகருப்பனெனவும், ஓர் மணிக் கோவையிலுள்ள நூல் (சூத்திரம்) போல எல்லா லிங்க சரீரங்களினும் வியாபித்திருப்பவனாகையால் சூத்திராத்மாவென்றும், எல்லா லிங்கசரீரங்களையும் ஜீவிக்கச் செய்கின்றவனாகையால் பிராணமென்றும் இந்த சமஷ்டி லிங்க சரீராபிமானி (ஈசுவரனு) க்குப் பெயர்களிடப்பட்டன.

 

மேலும், இந்த லிங்கசரீரம் அநேக புத்திகளுக்கு விஷயமாவதால் வியஷ்டியாகின்றது இந்த வியஷ்டி லிங்கசரீரத்தோடு கூடியதும் சிதாபாசனோடு கூடியதுமாகிய சைதன்யம் தைஜசன் என்னப்படும். இந்த லிங்கசரீராபிமானி (ஜீவன்) பிரகாச ரூபமாகிய அந்தக்கரணத்தை உபாதியாகவுடையவனாகையால் தைஜசன் (பிரகாச வடிவினன்) என்னப்படுகின்றான். (ஒரு புத்திக்கு விஷயமாவதால் லிங்கசரீர மனைத்தும் சேர்ந்து ஒரே சரீரமாயிற்றென்று முன்பு கூறப்பட்டது. இப்போது அநேக புத்திகளுக்கு விஷயமாவதால் லிங்க சரீரம் வியஷ்டியாகுமென்று கூறப்படுகின்றது. எனவே, அநேகமாகிய மரங்களும் ஒரு புத்திக்குக் கோசரமாகையால் அவற்றின் சமஷ்டி வடிவமாகிய வனமாகக் கிரகிக்கப்படுகின்றன. அவைகளே அநேக புத்திகளுக்குக் கோசரமாகும் பொழுது வியஷ்டி ரூபமாகிய அநேகமரங்களாகக் கிரகிக்கப்படுகின்றன. இங்கு ஒருமை (சமஷ்டி) த் தன்மையும் பன்மை (வியஷ்டி) த் தன்மையும் புத்தி கற்பிதமாகும். ஆதலால் இதையும் அவ்வாறே கொள்க.)

 

இந்த வியஷ்டிலிங்க சரீரம் ஸ்தூல சரீரத்தைவிட சூக்ஷ்மமானதாகலின் சூக்ஷ்மமென்றும் ஜாக்கிராவஸ்தையில் சம்ஸ்கார வடிவமாயிருத்தலின் சரீரமென்றும் கூறப்படுகின்றது. இந்த சூக்ஷம சரீராபிமானி (தைஜசனென்னும் பெயருடைய ஜீவன்) சொப்பனாவஸ்தையில் ஜாக்கிராவஸ்தையின் வாசனைகளால் கற்பிக்கப்பட்ட சூக்ஷ்ம பதார்த்த வடிவ விஷயங்களை சூக்ஷ்ம மனோவிருத்திகளால் அனுபவிக்கிறான்.

 

முன் கூறியபடி சமஷ்டிக்கும் வியஷ்டிக்கும் சமான தருமத் தன்மையிருப்பதால் (பேதமேயில்லை) அபேதமே யென்றறிய வேண்டும். ஜாதி ஒன்றாயிருக்கையில் பேதம் எப்படி யுண்டாகும்? இரண்டு உபாதிகளுக்கும் அபேதமேற்படும் பொழுது, அந்த சமஷ்டி வியஷ்டியென்னும் இரண்டு உபாதிகளை அபிமானித்த சூத்திராத்மாவிற்கும் தைஜசனுக்கும் மாத்திரம் பேதமுண்டாவ தெங்ஙனம். ஆகையால் அபேதமே அங்கிகரிக்கப்பட்டது.

 

ஞானகுமாரா! இதுகாறும் சூட்சும பிரபஞ்சத்தின் சொரூபம் நிரூபிக்கப்பட்டது. இனி ஸ்தூல பிரபஞ்சத்தின் தன்மையைக் கூறுகிறேன் கேட்பாயாக. முற்கூறிய ஆகாசம் முதலிய சூட்சும பஞ்சபூதங்களே ஒன்றோடொன்று பஞ்சீகரணப்படுவதால் (கலப்பதால்) ஸ்தூல பஞ்சபூதங்களாகின்றன. அஃதெவ்வாறெனின்,

 

பஞ்சீகரணம்.

 

ஆகாசம் வாயு தேயு அப்பு பிருதிவி என்னும் பூதங்களைந்தும் சமானமான இரண்டிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பூதங்களில் முதல் ஒரு பூதத்தின் ஒரு பாதிபாகத்தை யெடுத்து அதனை நான்கு பாகமாக்கி அந்த நான்கு பாகத்தையும் மற்ற நான்கு பூதங்களில் தனித் தனியாக ஒவ்வொன்றினுடைய அரைப்பாகத் தோடும் சேர்க்கவேண்டும். இவ்வாறே மற்ற பூதங்களின் தனித்தனி அரைப்பாகங்களையெடுத்து நன்னான்கு பாகமாக்கித் தன்னை யொழிந்த மற்றைய பூதங்களுடன் ஒவ்வொரு பாகத்தையும் சேர்த்தல் வேண்டும். இப்படிச் செய்வதால் ஒன்றோ டொன்று கலப்புண்டாகிறது. இதுவே பஞ்சீகரணமாம்.

 

சீடன்: - சுவாமி! இதனை நன்கு விளக்குதல் வேண்டும்.

 

குரு: - ஆனால் கூறுகிறேன். கவனமாய்க் கேள்.

 


பிருதிவி பு

அப்பு

தேயு

வாயு

ஆகாசம்


 

 

 

 

  

 

இவையைந்தும் சூட்சும பஞ்சபூதங்களென்று வைத்துக் கொள்வோம். இவைகளில் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பாகமாக்குவோம்.

 

ஒவ்வொன்றையும் இரண்டு பாகமாக்குதல்.

 

ஆகாசம்

ஆகாசம்

தேயு

தேயு

பிருதிவி பு

பிருதிவி பு

அப்பு

அப்பு

வாயு

வாயு

 

 

 

 

 

 

 

 

 

 


இவற்றில் ஒவ்வொரு பூதத்தினுடைய ஒரு பாகத்தை அப்படியே வைத்துவிட்டு மற்றொரு பாதி ஒவ்வொன்றையும் நன்னான்கு பாகமாக்குவோம்

 

ஒவ்வொரு பாதியை நன்னான்கு பாகமாக்குதல்.

 

ஆகாசம்

ஆகாசம்

தேயு

தேயு

பிருதிவி

பிருதிவி பு

அப்பு

அப்பு

வாயு

வாயு

 

 

 

 

 

 

 

 

 

 


இப்பொழுது ஆகாசத்தின் நான்கு பாகத்தையும் எடுத்து வாயு தேயுஅப்பு பிருதிவி என்னும் நான்கிற்கும், வாயுவின் நான்கு பாகத்தையுமெடுத்து ஆகாசம் தேயு அப்பு பிருதிவி என்னும் நான்கிற்கும், தேயுவின்நான்கு பாகத்தை ஆகாசம் வாயு அப்பு பிருதிவி என்னும் நான்கிற்கும், அப்புவின் நான்கு பாகத்தை ஆகாசம் வாயு தேயு பிருதிவி என்னும் நான்கிற்கும், பிருதிவியின் நான்கு பாகத்தை ஆகாசம் வாயு தேயு அப்பு என்னும் நான்கிற்கும் கொடுத்துவிடுவோம்.

 

பஞ்சீகரண சக்கரம்.

 

ஆகாசம்

வாயு

தேயு

அப்பு

அப்பு

ஆகாசம்

வாயு

தேயு

வாயு

ஆகாசம்

தேயு

அப்பு

தேயு

ஆகாசம்

வாயு

அப்பு

பிருதிவி பு

ஆகாசம்

வாயு

தேயு

 

 

 

 

 

 

 

 


பிருதிவி

பிருதிவி

பிருதிவி

 

அப்பு

பிருதிவி

 

 

 


இதுவே பஞ்சீகரணக் கிரமமாம்.

 

(ஒவ்வொரு பூதத்தில் அவ்வைந்து பூதத்தைச் சேர்த்துச் செய்வதற்குப் பஞ்சீகரணம் என்று பெயர். பஞ்சீகரணம் செய்யப்படுகிறதற்குப் பஞ்சீகிருதம் என்று பெயர். ஆதலால் இப்பஞ்சீகரணம் செய்யப்பட்ட பூதங்கள் பஞ்சீகிருத பூதங்கள். பஞ்சீகரணம் செய்யப்படாத பூதங்களுக்கு (சூட்சுமபூதங்க) அபஞ்சீகிருத பூதங்கள் என்று பெயராம்.)

பூதகுணங்கள்.


இனி, இப்பூகங்களின் குணங்களைக் கூறுகிறேன்.


ஆகாசம் - சப்தகுணமுடையது.

(வாயுவிற்குச் சொந்தகுணம் பரிசம், அதனோடு தனக்குக் காரணமான ஆகாசத்தின் குணமும் அதனிடம் உள்ளது. காரணத்தின் குணம் காரியத்திலுமிருக்கு மன்றோ? ஆகலின்)

வாயு - சப்தம் பரிசம் என்னு மிரண்டு குணங்களுடையது.

தேயு - (காரண குணங்களாகிய) சப்தஸ்பரிசங்களும் (சொந்த குணமான) ரூபமு முடையது.
அப்பு - (காரண குணங்களாகிய) சப்த ஸ்பரிச ரூபங்களும் (சொந்த குணமான) ரசகுணமு முடையது.

பிருதிவி - (காரண குணங்களாகிய) சப்த ஸ்பரிச ரூப ரசங்களும் (சொந்த குணமான) கந்தமு முடையது.

 

(எனவே ஆகாசம் சப்தத்தையும், வாயு சப்த ஸ்பரிசங்களையும், தேயு சப்த ஸ்பரிச ரூபங்களையும், அப்பு சப்த ஸ்பரிச ரூப ரசங்களையும், பிருதிவி சப்த ஸ்பரிச ரூப ரச கந்தங்களையும் உடையனவா மென்றறிக.)

 

இந்திரிய சாமர்த்தியம்.

 

ஞானேந்திரியங்களில், சுரோத்திரம் (காது) ஆகாசாம்சமாகலின் அதன் குணமாகிய சப்தத்தைக் கிரகிக்கின்றது. துவக்கு (தோல்) வாயுவி னம்சமாகலின் அதன் குணமாகிய பரிசத்தைக் கிரகிக்கின்றது. சக்ஷ (கண்) தேயுவி னம்சமாகலின் அதன் குணமாகிய ரூபத்தைக் கிரகிக்கின்றது. சிங்கவை (நாக்கு) அப்புவி னம்சமாகலின் அதன் குணமாகிய சுவை (ருசி) யைக் கிரகிக்கின்றது. கிராணம் (மூக்கு) பிருதிவி னம்சமாகலின் அதன் குணமாகிய கந்தத்தைக் கிரகிக்கின்றது.


கர்மேந்திரியங்களில்,

 

வாக்கு ஆகாசாம்சமாகலின் சப்தத்தை உச்சரித்தலாகிய காரியத்தைச் செய்கின்றது. பாதம் வாயுவாம்சமாகலின் நடத்தல் ஓடுதலாகிய காரியத்தைச் செய்கின்றது. கைகள் தேயு வாம்சமாகலின் அக்கினியாதிகளைப் பூசிக்கின்றது. உபஸ்தம் (ஜலத்துவாரம்) அப்புவாம்சமாகலின் மூத்திராதிகளை விடுகின்றது. பாயுரு (மலத்துவாரம். இது குதம் எனவும் சொல்லப்படுகின்றது.) பிருதிவியாம்சமாகலின் கடினமான மலத்தை விடுதலாகிய காரியத்தைச் செய்கின்றது.

 

இந்திரிய அதி தேவதைகள்.

 

சுரோத்திரத்திற்குத் திக்கும், துவக்கிந்திரியத்திற்கு வாயுவும், நேத்திரத்திற்குச் சூரியனும், நாக்கிற்கு வருணனும், மூக்கிற்கு அசுவினி தேவர்களும், வாக்கிற்கு அக்கினியும், கைகளுக்கு இந்திரனும், பாதங்களுக்குத் திரிவிக்ரமனும், பாயுருவிற்கு மிருத்துவும், உபஸ்தத்திற்குப் பிரஜாபதியும், மனத்திற்குச் சந்திரனும், புத்திக்கு பிரகஸ்பதியும், அகங்காரத்திற்கு ருத்திரனும், சித்தத்திற்கு க்ஷேத்ரக்ஞனும் அதிதேவதைகளாம்.

 

ஆகாசம் முதலியவற்றின் சத்துவாம்சத்தாலுண்டாக்கப்பட்டவர்களாகிய திக்கு முதலிய இந்தத் தேவதைகளெல்லாம் தத்தமக்குரிய இந்திரியஸ்தானங்களிலிருந்து கொண்டு பிராணிகளின் கர்மத்திற் கேற்றவாறு அவ்விந்திரியங்களை அனுக்கிரகித்துக் கொண்டும் நிக்கிரகித்துக் கொண்டும் இருக்கின்றனரென்றறிக. சகல கர்மங்களும் அனுபவிக்கப் படுவதற்குச் சரீரம், இந்திரியங்கள், பிராணன் முதலிய பஞ்சவாயுக்கள், அகங்காரம், அதிதேவதைகள் ஆகிய இவ்வைந்துமே காரணங்களா யிருக்கின்றன. கர்மத்திற் கேற்றபடி குணங்களுண்டாம். குணத்திற் கேற்றபடி மனம் பிரவர்த்திக்கும். மனத்தை யனுசரித்து ஞானேந்திரிய கர்மேந்திரியங்களால் புண்ணியமோ பாவமோ நிறைவேற்றப்படுகின்றது.
 

விஞ்ஞானமய கோசம் - ஞானேந்திரியங்களும் புத்தியும் சேர்ந்து விஞ்ஞானமய கோசமெனப்படும். நானே கர்த்தா என்னும் அபிமானத்தைக் கொண்டிருக்கும். சாட்சி மாத்திரமாக விளங்கும் ஆத்மவஸ்துவானது ஓர்மத்தியஸ்தனைப் போல யாதொரு காரியமும் செய்வதில்லை. காண்டல், கேட்டல், கூறல், செய்தல், அனுபவித்தலாதிய காரியங்களைச் செய்வது அகங்காரமேயாகும். ஆத்மா இந்தச் சகல விகாரங்களையும் பார்த்துக் கொண்டு சாட்சி மாத்திரமாய்ப் பற்றற்று விளங்குகின்றது.
 

உலகத்தில் பிராணிகளால் செய்யப்படும் எல்லாக் காரியங்களையும் சூரியன் சாட்சி மாத்திரமாய்ப் பார்த்துக் கொண்டிருத்தல் போல பரமாத்மாவும் சகல கர்த்திருத்துவங்களுக்கும் சாக்ஷியே யன்றிக் கர்த்திருத்துவ போக்திருத்துவங்கள் அவனுக்கில்லை. அப்படியே பிரத்தியக் ஆத்மாவும் (கூடஸ்தன்) சூரியன் போல கிரியையற்றவனாய் இந்திரியங்களின் காரியங்களுக்குச் சாட்சியாய் விளங்குகிறான். பரதத்துவத்தின் இவ்வித தன்மையை யறியாமல் மாயையால் மோகிப்பிக்கப்பட்ட சித்தமுடையவர்களாய் இக்கர்த்திருத்துவ போக்திருத்துவங்களைப் பிரத்தியக் ஆத்மாவே செய்கின்றதென்று அவ்வாத்மாவின் மீது ஆரோபிக்கின்றார்கள்.

 

ஆகாயத்தில் சந்திரன் அசையாமலிருப்பினும் தூரத்திலுள்ள மேகம் ஓடுவதைப் பார்த்துச் சந்திரனே ஓடுகின்றானெனக் கருதுவது போல மூடர்கள் ஆத்ம சொரூபத்தை விசாரித்தறியாமல் அனாத்மாவாகிய தேகேந்திரியங்களின் காரியங்களை ஆத்மா. வினிடத்து ஆரோபிக்கின்றார்கள். (ஆத்மாவே செய்கின்ற தென அறிகின்றார்கள்.)

 

(இந்த ஆத்ம அனாத்ம விவேகத்தைப் பின்னர் விரிவாகக் கூறுவேன். இப்பொழுது உலகசிருஷ்டியின் கிரமத்தைக் கூறுகிறேன் கேள்.)

 

 

 

பிரம்மாண்ட சிருஷ்டி

 

ஈஸ்வரனுடைய சங்கற்பத்தினால் பஞ்சீகரணம் செய்யப்பட்ட ஆகாசம் முதலாகிய பூதங்களால் சராசரங்களோடு கூடிய இந்த ஸ்தூல பிரம்மாண்டமுண்டாயிற்று.
இப்பிரபஞ்சத்திலமைந்துள்ள நான்குவகைப்பட்ட எல்லா ஜீவராசிகளுக்கும் தானியாதிகளும், காற்று, தீ, ஜலம், மண் என்பவைகளும் உணவுப் பொருள்களாகச் சமைந்தன.

 

சீடன்: - குருநாதா! நான்குவகைப்பட்ட ஜீவராசிக ளெவை?

 

குரு: - ஜந்துக்கள் தத்தம் கர்மானுசாரமாக ஜராயுஜம், அண்டஜம், சுவேதஜம், உற்பிஜ்ஜம் என நால்வகைப் பிறவிகளை யெய்தும். அவற்றில்,

(1) ஐராயுஜம் - கருப்பையினின்றுந் தோன்றும் மனிதரும், மிருகம் முதலானவைகளும் ஜராயுஜமாம்.

(2) அண்டஜம் - முட்டையினின்றும் தோன்றும் பறவை பாம்பாதிஅண்டஜமாம்.
(3) சுவேதஜம் - வியர்வை முதலிய அழுக்கினின்றும் தோன்றும்பேன் முதலாயின சுவேதஜமாம்.
(4) உற்பிஜ்ஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவரும் செடிகொடி புல் பூண்டு முதலியன உற்பிஜ்ஜமாம்.

 

சீடன்: - இவற்றிற்குத் தானிய தவசங்கள் உணவென்றது சரியே, காற்று, தீ முதலியவைகள் உணவென்றீர்களே! அது எப்படி?

 

குரு: - சில பிராணிகள் காந்றைப் புசிக்கும்; சில சூரிய சந்திரர்களின் கிரணங்களைப் புசிக்கும்; வேறு சில நீர்த்துளிகளைப் பானம் பண்ணும். மற்றுஞ் சில மண்ணைத் தின்னும்; சில மாமிசத்தைப் பக்ஷிக்கும்; சிலதானியங்களைப் புசிக்கும்; சில புக்லாதி யவற்றைப் புசிக்கும்.


விராட்டு விசுவர்கள்.

 

ஞானபுத்திரா! இந்த நால்வகைப்பட்ட பிராணிகளின் சம்பந்தமான இத்தூல சரீரங்களின் சமுதாயம் (கூட்டம்) சமானமா யிருத்தலால் 'ஒன்று' என்னும் புத்திக்கு விஷயமாவதால் சமஷ்டியாகும். இந்த சகலஸ் தூல சரீரசமஷ்டியோடு கூடின சைதன்யம் வைசுவானரனெனவம் விராட்டெனவுமழைக்கப்படுகின்றது. எல்லா ஜந்துக்களையும் தன் சரீரமாக அபிமானத்திருப்பதால் வைசுவானரன் என்பதும், தானே பலவிதமாகப் பிரகாசித்தலால் விராட்டென்பதும் பெயராம்,

 

மேலும், நால்வகையான ஜீவகோடிகளும் அந்தந்த ஜாதி பேதங்களால் அநேகமாகிய புத்திக்கு விஷயமாவதால், முற்கூறிய வனவிருட்ச திருஷ்டாந்தத்தின்படி வியஷ்டி யெனப்படுகிறது. சிதாபாசனோடு (பிரமச்சாயை) கூடிய வியஷ்டி ஸ்தூல சரீரத்தோடு கூடியதும் அச்சரீரத்தோடு தாதாம்ய (சம்பந்த) முடையதுமாகிய சைதன்யம் விசுவன் என்றழைக்கப் படுகிறது. வியஷ்டிஸ்தூல சரீராபிமானி விசுவனாம்.

(எல்லாச் சரீரங்களையும் தன் சரீரமென்றபிமானிக்கும் ஈசுவரன் வைசுவான ரனெனவும் விராட்டெனவும் அழைக்கப்படுகிறான். வியஷ்டியாகிய ஒருசரீரத்தைத் தனதென்றபிமானிக்கும் ஜீவன் விசுவனெனப்படுகிறான்.)

 

அன்னமய கோசம்.

 

இந்த விசுவ்னுடைய வியஷ்டிஸ்தூல சரீரமானது அன்னவிகாரமானதாகலின் அன்னமய கோசமாம். எவ்வாறெனில்; இச்சரீரமானது மாதாபிதாக்களுண்ட அன்னத்தின் விகாரமாகிய சுக்கில சோணிதங்களாலுண்டாவது. அன்னத்தால் வளர்வது; அன்னமில்லாவிடின் நசித்துப் போவது. ஆகலின் இது அன்னமயமாம். மேலும், இச்சரீரம் உறையானது கத்தியைமூடிக் கொண்டிருத்தல் போல் ஆத்மாவை மறைத்துக் கொண்டிருத்தலால் கோசமெனப்படுகிறது. இக்காரணங்களால் இத் தூலசரீரம் அன்னமயகோசமாம்.
 

இவ்வன்னமய கோசமாகிய சரீரம் ஆத்மாவின் ஸ்தூல போகங்களுக் கிருப்பிடமாயிருப்பதாம். ஆத்மா இந்தத் தூல சரீரத்தி லிருந்து கொண்டு வெளியில் ஸ்தூலமாகவுள்ள சப்தாதி விஷயங்களை யனுபவிக்கின்றது. அதனால் இது ஸ்தூல போக ஸ்தானமாம். ஆதலால் இந்த ஆத்மா தேகத்துடனும் இந்திரியங்களுடனும் மனத்துடனும் கூடின தாய் இந்திரியங்களால் கிரகிக்கப்படும் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றதெனக் கற்றறிந்த பண்டிதர்கள் கூறுவார்கள்.

 

பல ஊழியர் குற்றேவல் புரியுமாறு சிங்காசனத்தமர்ந்துள்ள ஓர் அரசன் போல், ஆத்மாவும் இந்திரியங்களாகிய சேவகரால் சேவிக்கப்படுகிறவனாய் நவத்துவாரங்களையுடைய இச்சரீரத்தி லிருந்து கொண்டு விஷயபோகங்களையனு பவிக்கின்றான். மனம் முதலாகிய ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் தத்தமக்குரிய அதி தேவதைகளால் பிரேரேபிக்கப்பட்டுத் தத்தம் தொழில்களைச் செய்யச் சித்தமாய்க் கிங்கரர்களைப்போல பிரயத்தனத்தால் ஆத்மாவாகிய அரசனைச் சேவித்துக் கொண்டிருக்கும்.
 

பேரறிவுடைய ஆத்மா எந்த அவஸ்தை (நிலைமை) யில் நான் எனது என்று ஸ்தூலமாக விஷயங்களை அனுபவிக்கின்றானோ அந்த அவஸ்தை ஜாக்கிராவத்தை யெனப்படும்.

 

முன்னர், வியஷ்டி ஸ்தூல சரீரத்திற்கும் சமஷ்டி ஸ்தூல சரீரத்திற்கும் விருட்சத்திற்கும் வனத்திற்கும் போல அபேதமென அங்கீகரிக்கப்பட்டபடி, வியஷ்டி ஸ்தூல சரீராபிமானியாகிய விசுவனுக்கும் சமஷ்டி ஸ்தூல சரீராபிமானியாகிய வைசுவானரனுக்கும் பேதமில்லை யென்பது ஈண்டறியத்தக்கதாம்.

 

இதுகாறும் ஸ்தூலம் சூட்சுமம் காரணம் என்னும் மூன்று வித பிரபஞ்சம் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் இம் மூன்றும் சேர்ந்து ஒரே மகாப்பிரபஞ்சமாகும். இந்த மகாப் பிரபஞ்சத்தோடு கூடினதும், விசுவன் பிரஞ்ஞன் முதலான லக்ஷணங்களை யுடையதும், விராட்டு முதல் ஈசுவரன் வரைக்குமுள்ளதுமாகிய சைதன்யமெல்லாம் ஒன்றேயாகும். ஆகையால் இச்சகலபிரபஞ்சமும் பிரஹ்மமேயாகும். கொல்லனது உலைக்களத்தில் செக்கச்செவேரெனக் காய்ச்சப்பட்ட இரும்புருண்டையினிடத்து நெருப்பெங்ஙனம் சேர்ந்திருக்கின்றதோ அங்ஙனமே பிரபஞ்சம் முழுதும் பிரஹ்மம் சேர்ந்திருக்கின்றது. ஆகையால் ''சர்வம் கல்பிதம் பிரஹ்மம்'' (பிரபஞ்சம் பொய்; பிரஹ்மமே சத்யம்.) என்னும் சுருதிவாக்கியத்திற்கு இப்பிரபஞ்சத்துடன்கூடியுள்ள பிரஹ்ம சைதன்யம் வாச்சியார்த்தமும், பிரபஞ்சத்துடன் கூடாத பிரபஞ்சரஹித பிரஹ்ம சைதன்யம் லட்சியார்த்தமுமா மென்றறிக.

 

அறிவுள்ள குமாரா! ஜாக்கிராவத்தையில் தூலவஸ்து காணப்படுகின்றது. சொப்பனவஸ்தையில் சூக்குமம் காணப்படுகின்றது. சுழுத்தியில் அஞ்ஞானம் காணப்படுகின்றது. (இதனால் ஸ்தூல சூக்கும் காரணமென்னும் இம்மூன்றும் ஒரு காலத்துள்ளது மற்றொரு காலத்தில்லாததாய் பிறழ்ச்சியுடையதாயிருத்தலின் பொய்யென்றும், இம் மூன்று அவஸ்தைகளையும் அறிந்து கொண்டிருக்கும் சாட்சியாகிய ஆத்மவடிவ பிரஹ்ம மொன்றே சத்தெனவும் (முக்காலத்து மழியாதிருப்ப தெனவும்) அறிக, ''சர்வம் கல்பிதம் பிரஹ்மம்" என்னும் வேதவாக்கியத்தின் பொருள் இதனால் அறியக்கிடப்பதும் காண்க.) அன்றியும், பிரபஞ்சமும் பிரஹ்மமும், குடமும் மண்ணும் போலக் காரியகாரண வடிவமாகக் காணப்படுபவையாம். இப்படி ஸ்தூல பதார்த்தம் முதல் அஞ்ஞானம் வரையிலுமுள்ள காரிய காரணத்தன்மையினையுடைய திருசிய (பார்க்கப்படுபவை) மனைத்தும் அநாத்மாவென்றறிக.

 

ஆத்ம நிருபணம்.

 

சீடன்: - சுவாமி! திருசியப் பொருள்களெல்லாம் ஆத்மாவன்றேல், ஆத்மாவென்னப்படுவதுதா னெது?

 

குரு: - உத்தம சீடனே! அந்தக்கரணத்திற்கும், அவ்வந்தக்கரண விருத்திகளுக்கும் சாக்ஷியாயும், நித்தியமாயும், நிர்விகாரமாயுமுள்ள சைதன்யமே ஆத்மாவா மென்பதை நீ உன் சூட்சுமபுத்தியா லறியக்கடவாய்.

 

சீடன்: - ஆத்ம லக்ஷணங்களெவை?

 

குரு: - அந்த ஆத்மா தனக்குத்தானே சுயம்பிரகாசமாக விளங்குவது; அவயவமற்றது; நிர்மலமானது; எப்பொழுதும் ஒரே தன்மையாயிருப்பது; பூரணானந்த வடிவாகவுள்ளது, சங்கற்பமற்றது, சாட்சி மாத்திரமா யிருப்பது; சித்வடிவினது; இரண்டாவதற்றது, நிர்க்குணமாயுள்ளது; அந்த ஆத்மா பிறப்பதன்று; வளர்வதன்று; குறைவுபடுவதன்று; அழிந்துபோவதன்று. அந்த ஆத்மா சத்திய சொரூபமானது. எக்காலத்துமுள்ளது; புராதனமானது. மேலும் சரீரம் வதைக்கப்படினும் அதுவதைபடாதது.

 

தோன்றுதல், இருத்தல், வளர்தல், மாறுபடுதல், குறைதல், நசித்தல்என்னும் இவ்வாறு விவகாரங்களும் திருசிய பதார்த்தங்களுக்கே யுளவாம். ஆதலால் இந்த ஷட்பாவ விகாரங்களும், பலவகைப்பட்ட வியாதிகளும் தூலத்தன்மை முதலியனவும், நீலத்தன்மை முதலாகிய குணங்களும், அளவும், வருணம் ஆஸ்ரமம் முதலிய வியவகாரங்களும் சரீரத்திற்கே உளவாமன்றி, சரீரவிகாரங்களுக் கெல்லாம் சாட்சியாகவுள்ள ஆத்மாவிற்கின்றாம். இதையறியாத மூடர் அஞ்ஞானத்தால் இந்த ஆத்மாவின் தன்மையை அநாத்மாவினிடத்தும் அநாத்மாவின் தன்மையை ஆத்மாவினிடத்தும் கற்பித்து ஜனன மரணப்பிரவாக ரூபமாகிய சம்சாரத்தில் விழுகின்றார்கள். சத்தியஞான ஆனந்த லக்ஷணமுடையது ஆத்மா. அசத்து, ஜட துக்க லக்ஷண முடையது அகாத்மா. இந்த ஆத்மாவின் தர்மங்களாகிய சத்தியஞானானந்தங்கள் சரீரமாகிய அநாத்மாவின் தர்மங்களென்றும், அநாத்மாவின் தர்மங்களாகிய அநிருத ஜட துக்கங்கள் ஆத்மாவின் தர்மங்களென்று மாறுபாடாக அறிதலே அஞ்ஞானமாம். இதனை விபரீதவுணர் வென்கின்றனர் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர். இவ்வஞ்ஞானமே பிறவிக்குக் காரணமாம். இதனை,

 

"பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு

மருளானா மாணாப் பிறப்பு.”

 

எனத் திருவள்ளுவரும், இதனுரையில் குற்றியை மகனென்றும் இப்பியை வென்ளி யென்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது (மருள் - விபரீதவுணர்வு) எனப் பரிமேலழகரும் கூறுவதனானு முணர்க. இம்மருளாகிய விபரீத வுணர்வை (அஞ்ஞானத்தை) விட்டு, பொய்ப் பொருளைப் பொய்ப் பொருளாகவும் மெய்ப்பொருளை மெய்ப்பொருளாகவுங் காண்டலே மெய்யுணர்தலாம். இதுவே தத்துவஞான மெனப்படும். இதனிலக்கணத்தை பொய்யில் புலவர்,


 "எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்

மெய்ப் பொருள் காண்ப தறிவு.''


என்னும் குறளால் விளக்கியுள்ளார். இதன் பொருளை ''பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதே அறிவாம். அஃதாவது, கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி, அரசனென்பதோர் சாதியும், சேரமானென்பதொரு குடியும், வேழநோக்கினை யுடையானென்பதோர் வடிவும், சேய் என்பதோ ரியற்பெயரும், மாந்தரஞ்சேரலிரும் பொறை யென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனையாகலின், அவ்வாறுணராது நில முதல் உயிரீறாகிய தத்துவங்களின்றொகுதியென வுணர்ந்து, அவற்றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றால் காரண காரியங்களிரண்டு மின்றி முடிவாய் நிற்பதனை யுணர்தலாம். இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறே யுணரப்படும். இதனால் மெய்யுணர்வின திலக்கணங் கூறப்பட்டது'' எனப் பரிமேலழகர் கூறியுள்ளார்.


“கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா செறி.''

 

என்றபடி மெய்ஞ்ஞானத்தால் பிறவி நீங்கும் என்னுமிவை ஈண்டறியத்தக்கனவாம்.

 

ஞான குமாரா! மாந்தர் தமது எதார்த்த நிலைமையை யறியாமல் பிராந்தியால் நான் மனிதன், நான் பிராமணன், நான் ஞானி, நான் மூடன், நான் பாவி, நான் பிரஷ்டன், நான் சிஷ்டன், நான் சுகி, நான்துக்கி என்றிவ்வாறு மோகமடைந்து ஆத்மாவினிடத்து இவைகளிருப்பதாகக் கற்பிக்கின்றனர். (மேற் கூறிய இவையாவும் தேகாதி அந்தக்கரணங்களின் தர்மங்களே யன்றி ஆத்மாவின் தர்மங்களாகா; அங்ஙனமாகவும் நான் என்னும் பொருளுக்கு விஷயமாகவுள்ள ஆத்மாவின் சச்சிதானந்த லட்சணத்தை யறியாமையால் இத்தன்மைகள் ஆத்மாவிற்குரியன என்று மயங்கி இவ்வாறு இயம்புகின்றார்.) பிராந்தியால் ஜனனம், விருத்தாப்பியம், மரணம், முதலிய தேகதர்மங்களையும், பசி, தாகம், சுகம், துக்கம் பயமாதிய அந்தக்கரண தர்மங்களையம் ஜன்னாதிகளில்லாத ஆத்மாவினிடத்து ஆரோபிக்கின்றனர். அவ்வாறு ஆரோயித்தாலும் ஆத்மாவினிடத்து அவையுண்டாவதில்லை. பிராந்தியால் கயிற்றினிடத்து பாம்பு ஆரோபிக்கப் பட்டாலும் சர்ப்பத்திற்குள்ள விஷாதிகள் அப்பாம்பினிடத்திருப்பதில்லை. அவ்வாறே ஆத்மாவினிடத்து ஆரோபிக்கப்படும் அநாத்ம வஸ்துவினுடைய அபிருத (அசத்து), ஜட, துக்காதி தோஷங்கள் ஆத்மாவினிடத்தும், ஆத்மாவின் சச்சிதானந்த குணங்கள் அநாத்மாவினிடத்தும் சேருவதில்லை. கானலைக் கண்டு உலகோர் ஜலமென மயங்கினாலும் அக்கானல் நீரினால் பூமி நனைவதில்லை. காமாலைக் கண்ணன் வெள்ளிய சங்கைப் பார்த்து இது பசுமை நிறமாயிருக்கின்ற தென நினைத்தாலும் அச்சங்கு பசுமை நிறமடைவதில்லை. சிறுவர் ஆகாயத்தைப் பார்த்து ஆகாயம் நீல நிறமாயிருக்கின்ற தென்கின்றனர் ஆயினும் அது நீல நிறமாவதின்று. அவ்வாறே, அநாத்மாவின் தர்மங்களாகிய ஜனன மரணாதிகளை ஆத்மாவினிடத்து ஆரோபித்தாலும் அது அவைகளை அடைவதில்லை.

 

சீடன்: - குருநாதா! சச்சிதானந்த லக்ஷணமுடைய ஆத்மாவினிடத்து அசத்து ஜட துக்க லக்ஷணமுடைய அநாத்மாவின் தர்மங்கள் ஆரோபிக்கப்படுகின்றனவெனத் தாங்கள் கூறினீர்கள். அது பொருந்தாது. ஏனெனின், ஒரு வஸ்துவினிடத்து மற்றொரு வஸ்துவைக் காணுதல் ஆரோபமாம். பாம்பல்லாத கயிற்றில் பாம்பைக் காணுதல் ஆரோபம். இவ்வாரோபம் பிரத்தியட்சமாகக் கண்ணெதிரில் காணப்படும் வஸ்துவினிடத்தே யுண்டாவதாம். ஆத்மாவோ காணக்கூடிய (திருசிய) எஸ்து வன்று. கோசரமாகாத ஆத்மாவினிடத்து ஆரோபமுண்டாதல் எங்ஙனம்? அன்றியும் அத்தியாசத்திற்கு சாதிருசியமும் சமான தருமமு மிருத்தல் வேண்டும். கயிறு நீளமாயிருக்கிறது; பாம்பும் நீளமாயிருக்கின்றது; இவ்வாறு இரண்டினிடத்தும் சமான தர்மமிருக்கின்றது. கிளிஞ்சலில் வெள்ளி ஆரோபிக்கப்படுகின்றது. இங்கு கிளிஞ்சலும் வெண்மை; வெள்ளியும் வெண்மை. இவ்வாறு இரண்டினிடத்தும் சமான தர்மமிருக்கின்றது. ஆதலால் சமானதர்மமே அத்தியாசத்திற்குக் காரணமாயிருக்கின்றது. இஃதிங்ஙனமாக, கோசரமாகாத வஸ்துவினிடத்து அத்தியாச மெவ்வாறுண்டாகும்?

 

(ஒருவஸ்துவைப் பார்த்தல்லவா அதனிடத்து மற்றொன்று என்று பிரமிக்க வேண்டும்? மேலும், தான் கண்ட பொருளுக்கும் பிரமிக்கப் பெற்ற பொருளுக்கும் சமானதர்ம மிருத்தல் வேண்டும். கயிறு காணப்பட்டாலன்றோ அதனிடத்துச் சர்ப்பமென்று பிரமித்தல் சம்பவிக்கும். அவ்வாறு ஆத்மாவைக் கண்டு அநாத்மாவென்று பிரமிப்பதற்கு ஆத்மா காணப்படும் வஸ்துவாக இருத்தல் வேண்டும். ஆனால் அங்ஙனமின்று. அன்றியும், கயிற்றைக் கண்டு இது பாம்பு என்று மயங்குதற்கு இரண்டினிடத்தும் நீளமாயிருத்தலாகிய சாதிருசியமுளது. ஆனால் ஆத்மா அராத்மாக்களிடத்துச் சாதிருசியமில்லை. ஒன்றுக்கொன்று விருத்த (வேறுபட்ட) லட்சணமுள்ளவை. ஆத்மா சாத்து சித்து ஆனந்த லட்சணமுடையது; அகாத்மா அசத்து ஜட துக்க லட்சணமுடையது. சாதிருசியமின்றி விருத்தலட்சண முடைய இரண்டு பொருள் களினிடத்து அத்தியாச மெங்ஙனஞ் சம்பவிக்கும். இஃதசம்பவமாம்.)

 

ஆத்மாவினிடத்து அநாத்மாத்தியாசம் இங்ஙனமாக, அநாத்மாவாகிய தேகேந்திரியாதிகளினிடத்து ஆத்மாவென்னும் பிரமை எங்ஙன முண்டாயிற்று? இப்பிராந்தி எவ்வு பாயத்தால் நிவிர்த்தியாகும்?

 

அத்யாசத்திற்கு உபாதியே காரணமாகுமாயின், அவ்வுபாதி சம்பந்தம் ஜீவேசுவரர்களிருவருக்கும் சமானமேயாகும். அங்ஙனமாக, ஜீவனுக்கு மட்டும் பந்தமுண்டாவதேன்? ஈசுவரனுக்கு இல்லாமலிருப்பதேன்? சற்குருமூர்த்தி இந்த ஐயங்களை யகற்றவேண்டும்.

 

குரு: - அன்புள்ள குமாரா! ஆத்மா அவயவமுடையதன்று. ஆதலால் ஒருவராலும் காண முடியாததாம். (கண்ணானது அவயவமுடைய பொருள்களையே காணுந் தன்மையுடையதாகும்.) ஆயினும், இந்த ஆத்மவஸ்துவானது நானென்னும் ஞானத்திற்கு கோசரமாவதாலும் எல்லோராலும் 'நான் இருக்கிறேன்' என்று அனுபவிக்கப்படுவதாய் அபரோக்ஷமாயிருத்தலாலும் ஆத்மா இருக்கின்றதென்பது பிரசித்தியாம். நான் இருக்கிறேன்' என்னும் ஞானத்தால் ஆத்மாவினிடத்து விசுவாசமிருக்கின்றது. எவருக்கும் நான் இருக்கிறேன் என்னும் விஷயத்திற்குப் (தன்னிருப்பிற்கு) பிரமாணம் வேண்டியதின்றாம். (இதனால் கோசாமாகாத ஆத்மாவினிடத்து அத்தியாச மெவ்வாறுண்டாமென்ற சீடன் வினாவிற்கு, ஆத்மா கோசரமா காத்தன்று; கண்ணாற் காணப்படாததாயினும் நான் என்னும் ஞானத்திற்கு விஷயமாய் அனுபவசித்தமா யிருப்பதாகலின் தன்னிருப்பிற்கு வேறு பிரமாணம் வேண்டுவதின்றாம். ஆகலின் அது உள்ள வஸ்துவே எனச் சமாதானம் கூறப்பட்டது.)

 

இந்த ஆத்மாவானது மாயையின் காரியங்களான அகங்காராதிகளால் மறைக்கப்பட்டதாயிருத்தலின் மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியன் காணப்படாதது போல நன்றாக விளங்குவதில்லை.

 

எதிரில் பிரத்தியட்சமாகக் காணப்படும் வஸ்துவில் தான் அத்தியாச முண்டாகுமெனக் கூறினையன்றோ? அத்தியாசத்திற்குப் பிராந்தியே காரணமாகுமின்றி, எதிரிற் காணப்படும் வஸ்துவில் தான் அத்தியாச முண்டாமென்னும் நியதியில்லை. மூடர்கள், பார்வையிற் படாத ஆகாசத்தினிடத்து நீலநிறமுதலானவற்றைக் காண்பது போல பார்வையிற் படாத ஆத்மாவினிடத்தும் சித்தப் பிராந்தியால் ஆரோபிக்கின்றனர். (காணப்படாத வஸ்துவினிடத்து அத்தியாச மெவ்வாறுண்டாகுமென்ற கேள்விக்குச் சமாதானங் கூறப்பட்டது.)

 

தேகேந்திரியாதிவடிவ அநாதம வஸ்துவினிடத்து ஆத்மத் தன்மை வடிவ அத்தியாசமுண்டாதற்கு சமானதர்மம் வேண்டுவதின்று. கண்ணில் காமாலை என்னும் தோஷமுடைய ஒருவன் சங்கைப் பார்த்துப் பசுமையாயிருக்கிறதென்கிறான். அங்கு என்ன சமான தர்மம் இருக்கின்றது? பிரமையானது நிருபாதிகமெனவும், சோபாதிகமெனவும் இருவகைப்படும். சங்கைக் கண்டு பசுமையாயிருக்கின்ற தென்றுன்னுதல் நிருபாதிகப் பிராந்தியாம். ரஜ்ஜு சர்ப்பப் பிராந்தி சோபாதிகமாம். சோபாதிகத்திற் கேசாதிருசியம் அபேக்ஷிக்கப்படும். ஆத்மாவினிடத்து அநாத்மாத்தியாசமும் நிருபாதிகமாம். ஆகலின் அதற்குச் சாதிருசிய மவசியமின்றாம். (கயிற்றினிடத்தும் பாம்பினிடத்தும் நீளமாயிருத்தலாகிய சாதிருசியமுண்டு. அதனால் கயிற்றில் சர்ப்பம் பிராந்தியுண்டாயிற்று. அப்படி ஆத்மாவிற்கும் அநாத்மாவிற்கும் என்ன சாதிருசிய மிருக்கின்ற தென்ற வினாவிற்கு விடை இறுக்கப்பட்டது.)

 

ஆயினும் சிறிது சாதிருசியம் உண்டென்பதைக் காட்டுகிறேன். இந்த ஆத்மா அதி நிர்மலமாயும் சூட்சும ரூபமாயும் மிக்க பிரகாசமாயுமிருப்பதாம். அவ்வாறே, சத்துவரூபமானதும் ஆத்மாவின் ஆபாசத்தோடு கூடியதும் பிரகாச வடிவாயுள்ளதும் நிர்மலமானதுமான புத்தியானது, சூரியனெதிரிலுள்ள படிகக்கல் சூரியனைப் போல் பிரகாசிப்பது போல, ஆத்மாவின் எதிரில் ஆதமாவைப் போலப் பிரகாசிக்கின்றது. அதனால் புத்தி ஆத்மாவைப் போல் பிரகாசிக்கின்றது. புத்தியின் சன்னிதானத்தில் மனம் புத்தியைப் போலப் பிரகாசிக்கின்றது. மனத்தின் சன்னிதானத்தால் இந்திரியங்கள் மனத்தைப் போலப் பிரகாசிக்கின்றன. இந்திரியங்களின் சன்னிதானத்தால் சரீரம் இந்திரியங்கள் போலப் பிரகாசிக்கின்றது. அதனால், ஆத்மாவினும் வேறான தேகேந்திரியாதிகளினிடத்து ஆத்மப் பிராந்தியுண்டாயிற்று. சிறுவர் கண்ணாடியிற் காணப்படும் பிரதிபிம்பத்தைக் கண்டு அது வேறொரு குழந்தை யென்றெண்ணுவது போல மூடர்கள் திருஷ்டிக்கும் புத்தியினிடத்து ஆத்மாவின் அத்தியாசத்திற்குக் காரணமான சாதிருசிய முண்டென்றறியக் கடவாய். (விவேகிகளுக்கு ஆத்மாத்மாக்களினிடத்துச் சாதிருசியமின்றேனும் அவிவேகிகளின் திருஷ்டிக்குச் சாதிருசியமுண்டென்க.)

 

(கயிற்றைக்கண்டு இது பாம்பு என்று ஒருவன் பிரமிப்பதற்கு அதற்கு முன் அவன் கண்ட பாம்பின் ஸ்மிருதி ரூபமாகிய சம்ஸ்காரம் காரணமாகின்றது. இங்கு அது எவ்வாறா மென்ற வினாவிற்குச் சமாதானம் கூறுகின்றார்.

 

சம்சாரவடிவ சம்ஸ்காரம் அநாதியாகவே யுள்ளதாகும். மனிதர் நித்திஜாயினின்றேனும் மூர்ச்சையினின்றேனும் விழித்து எழுந்தவுடன் பிரபஞ்ச வியாபாரத்தில் பிரவிர்த்திக்கின்றனர். அதனால் அஞ்ஞானம் அநாதியாம்; சம்ஸ்காரமும் அநாதியாம் என்பது பெறப்படுகின்றது. இனி,

 

எந்த அத்தியாசத்தினால் இந்த ஜனனம், மரணம், வியாதி, முதுமை முதலியவற்றா லுண்டாகும் துக்க வடிவ அநர்த்தங்கள் உண்டாயினவோ அத்தகைய அத்தியா சவடிவமாகிய பாதையுண்டாவதற்குக் காரணத்தைக் கூறுகிறேன். அன்புள்ள சீடனே! அமைதியாய்க் கேள்.

 

ஆத்மாவிற்துப் பாதியாகவுள்ள அவித்தையினிடத்து ஆவரணம், விட சேபமென்னு மிரண்டு சக்திகளுண்டு. ஆவரணம் தமோகுணத்தின் சக்தி மாம். தவமே ஆவாணத்திற்குக் காரணமாகும். உலகை மோகிக்கச் செய்யும் இந்த ஆவரணமே மூலாவித்தை யெனப்படுகின்றது. விவேகியாயினும் மிக்க யுக்தியுடையோனாயினும் ஆன்ம சொரூபத்தை யறிவிக்கும் வேதாந்த வாக்கியங்களைச் சிரவணஞ் செய்தவனாயினும் அவனுடைய ஞானக்கண்ணானது இந்த ஆவரண சக்தியால் மறைக்கப்பட்டிருக்குமாயின் அவன் தனதெதார்த்த சொரூபத்தையறிய மாட்டான்.

 

விக்ஷேப சக்தியானது ரஜோகுணத்தின் சக்தியாகும். பிரபஞ்ச வியாபாரத்தில் ஒருவன் பிரவிர்த்திப்பதற்கு இதுவே காரணமானதாகும். சத்ரூப ஆத்மாவினிடத்தில் அசத்ரூபமாகிய சகல பிரபஞ்சத்தையும் காண்பிப்பதும் இச்சகதியேயாம். உலக வியவகாரத்திலுள்ளவனை நித்திரையானது தன் வசப்படுத்துவதிபோல, இந்த ஆவரண சக்தியும் உள்ளே விடசேப சக்தியை விசிரிம்பிக்கச் (வியாபிக்கச்) செய்து கொண்டே அந்தராத்மாவை மறைத்துக் கொள்ளுகிறது. நித்திரையின் வசப்பட்டகாலத்து ஒருவனுக்கு ஜாக்கிராவஸ்தையின் சம்ஸ்காரங்கள் சொப்பனமாகக் காணப்படுவது போல, விட்சேபசக்தி பிரபஞ்சத்தைக் காணுமாறு செய்கின்றது. ஆவரணமென்னும் பெயருடைய மகத்தான சக்தியினால் நிர்மலமாகிய ஆத்ம சொரூபம் மறைக்கப்படுவதால் புருஷன் அஞ்ஞானத்தினால் சரீராதிகளை யாத்மாவென்று நினைத்து அநாத்மாவினிடத்து ஆத்மபாவத்தை யாரோபிக்கின்றான். எப்படி சொப்பனாவஸ்தையில் பிராதிபாதிக் சரீரத்தினிடத்தில் நானென்னும் பாவம் உள்ளதோ அப்படியே இப்புருஷனும் அவ்வநாத்மாவின் தர்மங்களாகிய ஜனனம் மரணம் பசிதாகம் முதலானவைகளை ஆத்மாவினிடத்து ஆரோபிக்கிறான்.

 

விக்ஷேப சக்தியால் தூண்டப்பட்டவனாய் புண்ணிய பாவ வடிவ கருமங்களைச் செய்கின்றான். மறுபடியும் அக்கர்மபலனை யனுபவிக்கிறான். இவ்வாறே சமுசாரசாகரத்தில் மூழ்கியலைகிறான். எந்த சமுசார பந்தத்தினால் கர்ப்பவாசம் ஜனனம் மரணம் கஷ்டம் பயம் முதலானவைகளினால் மிகுந்தகஷ்டத்தை யடைகின்றானோ அந்த அந்தராத்மாவின் சம்சாரவடிவ பந்தம் அத்தியாச தோஷத்தினால் உண்டானதாகும். இப்பிராந்தியாகிய அத்தியாசமே சம்சாரத்திற்கு மூலகாரணமாகும். ஆத்ம சொரூபத்தை உள்ளவாறுணராமையாகிய விபரீதஞானமே சகல அநர்த்தங்களுக்கும் காரணமாகின்றது. அதனாலேயே நீங்காத் துன்பத்திற் கிருப்பிடமாகிய பந்தமுண்டாயிற்று.


(இனி, சம்சாரம் எவ்வாறு நீங்குமென்று கூறுகிறர்)

 

சம்சாரம் எதனாலுண்டாயிற்று? அத்தியாசத்தினால். ஆதலால் அத்தியாசம் நசித்தால் சம்சாரம் தோன்றுவதில்லை. இதனுண்மையை பெத்த முத்தர்களிடத்திற் காணலாம். ஒருவன் பிரவிர்த்தி மார்க்கத்தை யனுசரித்திருப்பானாயின் அவன் பெத்தனென்றும், நிவிர்த்தி மார்க்கத்திலிருப்பானானால் முத்தனென்றும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில், பிரவீர்த்திமார்க்கமே சம்சாரம்; நிவிர்த்தி மார்க்கமே முக்தி.

 

சீடன்: - குருநாதா! அத்தியாசம் அஞ்ஞானத்தா லுண்டாயிற்றெனக் கூறினீர்கள். அஞ்ஞானத்தால் எப்பொழுது உண்டாயிற்றோ அப்பொழுதே அது அசத்தியமானதாகு மென்று ஒப்பித் தீரவேண்டும். அசத்துரூபமான அத்தியாம் ஒரு காரியத்தை யுண்டாக்காது. அங்ஙனமாக, அதனால் பிரபஞ்ச வியாபாரம் எங்ஙன முண்டாம்?

 

குரு: - ஞானகுமாரா! கயிற்றில் பிராந்தியால் காணப்பட்ட பாம்பானது பயம் நடுக்கம் முதலியவற்றை உண்டாக்குவது போல அரத்து வடிவ அத்தியாசமும் ஆன்மாவிற்குப் பிரபஞ்ச வியாபாரத்தை யுண்டாக்கிற்றென்றறிவாயாக. இனி,

 

பரமாத்மாவிற்கும் ஜீவனுக்கும் உபாதி சமானனாகவே யிருக்கையில், பரமாத்மாவிரகு மாத்திரம் சிருஷ்டித்துவம் முதலியவை உண்டாயிருப்பதேன் எனக் கேட்டன யன்றே? அதற்குச் சமாதானம் கூறுகிறேன், கேள்.

 

பரமாத்மாவுக்கு ஜீவனுக் திருப்பது போல உபாதி சமானமா இருப்பினும், அவ்விரண்டு உபாதிகளுக்கும் பேதமிருத்தலால், ஜீவனுக்கு இருப்பது போல் பரமாத்மாவிற்கு பந்தமும் அதன் காரியங்களும் இல்லை. ஈசுவரனுக்கு சுத்த சதுவப் பிரதானமான மாயை உபாதியாம். அது காரண சரீரசமஷ்டி வடிவினதாம். அதனால் அதனிடத்தில் அற்பத்தன்மையில்லை. அதனால், அது சத்துவகுணப் பிரதானமானதாம். அதனால், தமோசக்தியாகிய ஆவரணமும் ரஜோ சக்தியாகிய பிரபஞ்ச கற்பனாவடிவ விட்சேபமும் அணுவளவும் அதனிடத் சில்லை. அதனால், ஈசுவரன் பேரறிவுடையவனாயும் சர்வசக்தனாயும் சுவதந்திரனாயும் இருப்பதுமன்றி, சத்துவ குணத்தினின்றுஞ் சிறிதும் மாறாமல் தன் சக்தியினால் ரஜஸுதமஸ்களை நீக்கி, சகற்ப மாத்திரத்தால் சிருஷ்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றுகின்றனன்.

 

ஆத்மா ராஜஸ தாமஸங்களைப் பிரவிர்த்திக்கவும் நிவிர்த்திக்கவும் சக்தியுடையவனா யிருக்கின்றமையின் அந்த ராசத தாமதங்களின் காரியமாகிய ஆவரண விட்சேபங்கள் ஆத்மாவை ஒன்றும் செய்யச் சக்தியற்றவையாம்

 

சீடன்: - ஆவரண விட்சேபங்கள் ஜீவனுக்கு எங்ஙனம் உண்டாயின?

 

குரு: - சீவனுடைய பாதியாகிய அவத்தையில் சத்துவம் மிகச் சொற்பம் ராசத் தாமத குணங்கள் மிகுதியாயுள்ளன. அதனால் அவற்றின் காரியங்களாக ஆவரண விட்சேபங்கள் சீவனிடத்து மிகுதியாயிருக்கின்றன். இவ்வாறு சத்துவகுணம் மிகக் குறைவாயும் ராசத் தாமத குணங்கள் அதிகமாயும் இருப்பதனால் தான் சீவனுக்கு பந்தமும், அப்பந்தத்தால் சம்சாரமும் உண்டாயின.

 

ஆகவே, சீவனுக்கு சமசார முண்டாவதற்குக் காரணம் அத்தியாசமே.
அத்தியாசமென்றால், ஒரு வஸ்துவை வேறொரு வஸ்துவாகக் கருதுதல், வதந்திானயும் இல்ல ரஜமதக்கிரகமஇந்த அத்தியாசத்திற்குக் காரணமா யிருப்பதெது? அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானம் எத்தகைய தெனின், வஸ்துவின் சொரூபத்தை மறைப்பதே அதன் லட்சணமாம்.

 

அஞ்ஞான நிவிர்த்தி


சீடன்: - அந்த அஞ்ஞானத்தை நிவிர்த்தி செய்வ தெப்படி?

 

குரு: - அஞ்ஞானத்திற்கு ஞானத்தினாலேயே நிவிர்த்தி யுண்டாகுமேயன்றி, கர்மாதினால் உண்டாகாது. கர்மம் விரோதியாவதில்லை யாகலின், அஞ்ஞானத்தைப் பாதிக்காது. பிராணனானவன் கர்மத்தினால் பிறக்கிறான்; கர்மத்தினால் இறக்கிறான். ஆலையால் ஜனன மரணங்கள் காமத்தின் காரியமேயாகும். கர்மத்திற்கு இந்த ஜனன மரணங்களை யுண்டாக்குவதைக் காட்டிலும் விசேஷமான காரியம் வேறில்லை. இந்தக் கர்மம் அஞ்ஞானத்தினால் விருத்தியடைகின்றமையின் இது அஞ்ஞானத்தின் காரியமேயாகும். எது எதனால் விருத்தி யடைகின்றதோ, அதனால் அதற்கு நாசமுண்டாவதில்லை. எந்த வஸ்து விற்கு எந்த வஸ்துவோடு சேர்க்கை யுண்டாகின்றதோ அந்க வஸ்து அந்தவஸ்துவை யழிப்பதற்குச் சாமர்த்திய முடையதாகாது. அஞ்ஞானத்கால் கர்மம் விருத்தியடைவதாயும், அஞ்ஞானம் கர்மத்தோடு கூடியிருப்பதாயுமிருதலால், அவ்வஞ்ஞானம் கர்மத்தால் நசிப்பதில்லை.

 

எல்லாவிதமன கர்மங்களும் எப்பொழுதும் எல்லாவிதங்களாலும்
அஞ்ஞானத்திற்கு விரோதியாவதில்லை. ஆதலால், அஞ்ஞானத்தின் நாசம் கர்மத்தால் சித்தியாது. எந்த வஸ்துவிற்கு, அப்பொழ
தேநாசத்தை யுன்டாக்கும் எந்த வஸ்துவினுடைய சம்யோகம் (சேர்க்கை) உண்டோ, வேறுபட்ட சுபாவத்தையுடைய அந்த இரண்டு வஸ்துக்களுக்கே விரோதம் யுக்தமாம். எப்படி இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் அன்னியோன்னிய விரோதமுண்டோ அப்படியே ஞானாஞ்ஞானங்களிரண்டிற்கும் அன்னியோன்னிய விரோதமுண்டு. ஆகையால், ஞானத்தாலன்றி வேறெவ்வகையாலும் அன்ஞானத்தின் நீக்கம் உண்டாகாது ஆகவே, அஞ்ஞான நிவர்த்தியின் பொருட்டு ஒவ்வொருவரும் அத்தியாவசியமாக ஞானததைச் சம்பாதித்தல் வேண்டும்.


சீடன்: - ஞானம் எதனால் உண்டாகும்?

 

குரு: - ஞானம் ஆத்மானாத்ம விவேகத்தாலுண்டாகின்றது. வேறொன்றால் உண்டாவதில்லை. ஆகையால், ஆத்மா இது, அனாத்மா இது' என்றுயுக்தியால் வேறு பிரித்தறிதல் வேண்டும்.

 

ஆத்மாவல்லாது தேகேந்திரியாதிகளினிடத்தில் ஆத்மபாவ முண்டாகின்றது. அதுவே பந்தம்; இது எவ்வாறு நீங்கு மெனின், ஆத்மானாத்மவிவேகத்தால் நீங்கும். ஆகையால், அந்த ஆத்மானாத்ம விவேகம் நன்கு விளங்கும் பொருட்டு ஓர் விவாதத்தின் மூலமாக அதை நிரூபிக்கிறேன். இவ்விவாதத்தால் இது ஆத்மா, இது அனாத்மா 'வென்பது நன்கு விளங்கும் ஆகையால், அன்பனே! சித்தத்தைச் சிதையாமல் நிறுத்திக் கேள்.

 

இவ்விவாதம் எத்தகையோர்க்குள் உண்டாயிற்றெனின், வேதாந்த சிரவணம் செய்யாதவர்களும், நாமே சிறந்த பண்டிதர்களெனத் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொக்ளுகிசறவர்களும், ஈசுவரானுக்கிரக மில்லாதவர்களும், சற்குரு கடாட்சம் பெறாதவர்களும், பாகிய திருஷ்டியுடையவர்களுமாயிருக்கும் மூடர்களுக்குள் உண்டாயிற்று. அதனை ஆதாரத்தோடு கூறுகிறேன் கேட்பாயாக.

 

புத்திராத்ம வாதம்.

 

கேவலம் மூடனாகிய ஒருவன் தன்னிடத்தில் தனக்கு மிகுந்த பிரியமிருப்பது போலத் தன் புத்திரனிடத்திலும் மிகுந்த பிரியம் தனக்குண்டாயிருப்பதாலும், புத்திரன் சுகமாயிருந்தால் நான் சுகமாயிருக்கிறேனென்றும், புத்திரன் அசௌக்கியமா யிருந்தால் நான் அசௌக்கியமா யிருக்கிறேன் என்றும் எண்ணந் தோன்றுவது அனுபவமா யிருத்தலாலும், 'ஆத்மாவேபுத்திரன்' என்னும் சுழுதிவாக்கிய மிருப்பதாலும் 'புத்திரனே ஆத்மா' என்று எண்ணுகிறான். ஒரு விளக்கிலிருந்து எப்படி மற்றொரு விளக்கு உண்டாகின்றதோ அப்படியே தந்தையனிடத்தி லிருந்து புத்திரன் பிறக்கிறான். தந்தையின் குணங்கள் விதை முளை திருஷ்டாந்தப்படி (பீஜாங்குர நியாயமாக – விதையைப் போலிருக்கும் முளை என்பது போல) புத்திரனிடத்துக் காணப்படுவதால் புத்திரனே ஆத்மா என்றிவ்வாறு கருதுகிறான்.

 

தேகாத்ம வாதம்.

 

மற்றொருவன் 'புத்திரன் எப்படி ஆத்மாவாவான்? 'என்ற புத்திராத்மவாதி மதத்தைக் கண்டிக்கிறான்.

 

புத்திரனிடத்தில் மிகுந்த பிரியமிருப்பதால் மாத்திரம் புத்திரன் எப்படி ஆத்மாவாவான்? புத்திரனுக்கு அன்னியமாயுள்ள மண் பொன் முதலானவற்றினிடத்தும் பிரியம் காணப்படுகின்றது. (அவைகளெல்லாம் என் ஆத்மாவாகவில்லை. அப்படியே புத்திரனும் ஆத்மாவாகான்.)

 

பிராணிகளுக்கு இத்தேகத்தினிடத்தில் புத்திரனைக் காட்டிலும் அதிகமான அன்பு இருக்கின்றது. தன் வீடு தீப்பற்றிக் கொண்டபோது தன்புத்திரனையம் விட்டு விட்டு ஓடுகிறான், தன் தேகப் பாதுகாப்பினிமித்தம் புத்திரனையும் விற்று விடுகிறான். புத்திரன் தனக்குப் பிரதிகூலனாயிருப்பின் அவனைக் கொன்று விடுகிறான். ஆகையால் புத்திரன் எப்பொழுதும் ஆத்மாவாகான். விளக்கு திருஷ்டாந்தம் சரியல்ல. ஏனெனில் விளக்கிற்கருப்பதுபோல், புத்திரனிடத்துத் தந்தையின் குணரூபாதிகளின் சமத்தோற்றமில்லை. எல்லா அவயவங்களும் நன்கு அமையப் பெற்றவனுக்கு அங்கவீன முள்ளவனும், சற்குன முள்ளவனிடத்திலிருந்து துாக்குண முள்ளவனும் பிறக்கிறான். ஆகையால் புத்திராத்ம வாதியின் யுக்திகள் ஆபாசமேயாம்.

 

புத்திரனே ஆத்மாவென்ற சுருதியின் அபிப்பிராயம் இதுவாம். வீடு முதலிய எல்லாப் பொருள்களிடத்தும் எல்லாக் காரியங்களினிடத்தும் தந்தைக் கிருப்பது போல, எல்லாச் சுவதந்திரமும் புத்திரனுக்கும் உண்டு. இத பாறியே சுருதியானது உபசாரமாக புத்திரன் ஆத்மாவெனக் கூறியதே யன்றி முக்கிய மாகக கூறவில்லை. 'நான்' என்னும் பதத்தால் அறியப்படுவது எது? தேகம்; ஆதலால் தேசமே ஆத்மாவாகும். தேகமே நான் என்னும் நிச்சயம் எல்லாப் பிராணிகளுக்கும் பிரத்தியக்ஷமாயிருக்கின்றது. 'இப்புருஷன் அன்னரச ரூபமா யுள்ளவன்' என்று சுருதியும் தேகத்திற்கே புருஷ தவம் கூறுகின்றது. புருஷன் எனின் ஆத்மாவேயன்றோ? ஆகையால் இத்தேகமே ஆத்மாவாம். (இது சார்வாகர் மதம்.)

 

இந்திரியாத்ம வாதம்.

 

இந்த வாதத்தைக் கேட்டுச் சகிக்க முடியாதவனாய் வேறொரு மூடன் 'சுவதந்தர மற்றதாயம் சடமாயமுள்ள தேகம் எப்படி ஆத்மாவாகும்?' என்று தேகாத்மா வாதியைக் கண்டிக்கிறான்.

 

கிருகஸ்தனுக்குக் கிருகம் இருப்பிடமா யிருத்தல் போல கண் முதலிய இந்திரியங்களுக்கு இத்தேகம் இருப்பிடமா யிருக்கின்றது. அன்றியும், இது, சுக்கில சோணிதங்களால் பிறந்து, பால்யம் முதலாகிய அனேக அவஸ்தைகளை யுடையதாய், இந்திரியங்கள் அசைப்பதால் அசைவதா யிருப்பதேயன்றி சுவயேச்சையாகச் சிறிதும் அசையாததாயிருப்பது ஆதலால் சுவ தந்திரமில்லாத இத்தேகம் எவ்வாறு ஆத்மாவாகும்? ஆகாது.

 

தவிர, நான் செவிடன்; நான் குருடன்; நான் ஊமை என்னும் ஆனுபவத்தால் எந்த இந்திரியங்களுக்கு பதார்த்த ஞானம் இருக்கிறதோ அந்த இந்திரியங்கள் ஆத்மாவாம்.

 

'இந்திரியங்களும் பிராணனும் விவாதப்பட்டுக் கொண்டு பிரஹ்ம தேவனிடம் சென்று தங்கள் விவாதத்தைக் கூறின' எனக் கூறுவதன் மூலமாக சுருதியானது. இந்திரியங்கள் அசேதனமன்று சேதனமாம் என்பதை நிருபிக்கின்றது. ஆகையால், இந்திரியங்களே ஆத்யாவாம். (இது சார்வாகரில் ஒரு சாரார் மதம்.)

 

பகுதி - 24

 

மூல இதழ் - ஆனந்த போதினி 1928 December

 

இந்திரியாத்ம வாதியைப் பிராணத்ம வாதியாகிய மற்றொரு மூடன் கண்டிக்கிறான்.

 

விறகு முதலியவற்றை வெட்டுதக்குக் -கோடரி கருவியா யிருத்தல் போலப் பதார்த்தங்களை யறிதக்கு இந்திரியங்கள் கருவியாயிருக்கின்றன. ஓர் தொழிலைச் செய்வதற்குச் சாதனமாயுள்ள கருவிக்குச் சேதனத் தன்மையில்லாமை போல இந்திரியங்களுக்கும் சேனத்தன்மையில்லை. இந்திரியங்களின் அதிதேவதைகள் விவாதமிட்டதாகச் சொல்லவந்த சுருதி அவ்வதிதேவதைகளின் காரியத்தை உபசாரமாக இந்திரியங்களின் மீதேற்றிக் கூறிற்றேயன்றி இந்திரியங்கள் விவாதமிட்டதாக விளம்பிற்றில்லை. ஆதலால் இந்திரியங்கள் சேதனங்களன்று. அன்ருகவே ஆத்மாவு மன்றாம். அசேதனமாகிய விளக்கு முதலியவை வஸ்துக்களைப் பிரகாசிக்கச் செய்யுந் தன்மையுடையவையா யிருத்தல் போல, அசேதனமாகிய கண் முதலிய இந்திரியங்களும் பதார்த்தங்களைப் பிரகாசிக்கச் செய்யுந்தன்மை யுடையனவா யிருக்கின்றன. இங்ஙனம் பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்கும் தன்மை பெற்றிருத்தலாலேயே அவை சேதனமாகா. சேதனமாகாமையின் ஆத்மாவாதலு மின்றாம்.

 

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் பெயர்களோடு ஐந்திடங்களிலுள்ள தாகிய பிராணனே இந்திரியங்களைச் சலிக்கச் செய்கின்றது. சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி என்னும் மூவவத்தைகளினும் நீங்காமல் சலித்துக் கொண்டிருப்பது பிராணனே. ஆகலின் அந்தப் பிராணனே ஆத்மாவென்று சொல்லத்தக்கதாம். 'நான் பசியுடையவனாயிருக்கிறேன்', 'நான் தாகமுடையவனா யிருக்கிறேன்' என்பன போன்ற அனுபவத்தினாலும் பிராணனே ஆத்மாவென்பது பெறப்படுகின்றது. (பசி தாகம் முதலியன பிராணனது தர்மங்களாம்.) சுருதியும் பிராணனே ஆத்மாவெனக்கூறுகின்றது. (பிராணனே ஆத்மாவென்பது ஹிரணய கர்ப்பவபாசகர் மதம்.)

 

மன ஆத்ம வாதம்.

 

பிராணன் ஆத்மா வென்போனை மற்றொருவன் கண்டிக்கிறான்.

 

பிராணன் வாயுவா யிருத்தலால் அஃது எவ்வாறு ஆத்மா வாகும்? துருத்திக் காற்றுப் போல பிராண வாயுவானது வெளியே போவதும் வருவதுமா யிருக்கின்றது. நன்மையை யேனும் தீமையை யேனும் வேறு பொருள்களை யேனும் அது அறிவதில்லை. மேலும் அது (பிராணன்) அசேதனமானது. சலிக்குந் தன்மையது. ஆத்மாவின் காரியத்தைச் செய்து கொண்டிருப்பது. மனம் நித்திராவத்தையை யடைந்திருக்கையில் பிராணவாயு விருப்பினும் தோன்றுவதில்லை. மனமே எல்லா ஞானங்களுக்கும் காரணமாயிருப்பதாகும். அதுவே எல்லாவற்றையும் அறிகின்றது. ஆதலின் மனமே ஆத்மாவாகும். 'நான் சங்கற்ப முடையவன்', 'நான் சிந்தை யுடையவன்', நான் விகற்ப முடையவன்' என்னுமனுபவம் ஒவ்வொருவருக்கும் இருத்தலாலும், சுருதியும் 'ஆத்மா மனோரூபன்' எனக் கூறுதலானும் மனமே ஆத்மாவாம். (சங்கற்ப விகற்பங்கள் மனத்தின் தர்மங்களாம்.) (இது நாரத பாஞ்சராத்திரத்தை யனுசரித்தவர்கள் மதம்.

 

புத்தி யாத்ம வாதம்

 

புத்தி யாத்மவாதி இவ்வாறு கூறுகின்றனன்.

 

கண் முதலியவற்றைப் போல மனமும் ஓரிந்திரிய மாகும். அதனால் அது கரணமாம். அங்ஙனமாக அது ஆத்மாவாதல் எங்ஙனம் பொருந்தும்? அது ஒரு கர்த்தாவினால் ஓர் காரியத்தில் பிரவீர்த்திக்குமே யன்றி தானாகப் பிரவிர்த்திக்கக் கூடியதாகாது. எந்தக் கர்த்தா இந்திரியங்களை அல்லது கரணங்களைக் காரியத்தில் பிரவிர்த்திக்கச் செய்கின்றவனோ அவனே ஆத்மத் தன்மைக்குத் தகுந்தவனாவன். அவன் (ஆத்மா) சுவதந்திரனாயும் புருஷனாயுமிருத்தலால் எப்பொழுதும் பிறரால் நடதப்படுபவனாகான். ஆதலால் அவ்வாறிருப்பதாகிய புத்தியே ஆமோவாம். நான் கர்த்தா, நான் போக்தா, நான் சுகி' என்னும் அனுபவத்தாலும் புத்தியே ஆத்மா வென்றறியக் கிடக்கின்றது. அகங்காரம் புத்தியின் நீர்மமே யன்றோ? வேதமும் ஆத்மா புத்தி வடி - சான் என்கின்றது. புத்தி யஞ்ஞத்தைச் செய்கின்றது, கர்மத்தைச் செய்கின்றது' என்ற சுருதியானது புத்திக்குக் கர்த்துவத்தைக் கூறுகின்றது. ஆதலால் புத்தியே ஆமாவாம். (இது ஞானவாதி பௌத்தர்மதம்.)

 

அஞ்ஞானாத்ம வாதம்.


      புத்தியாத்மவாதியை மற்றொருவன் கண்டிக்கிறான். புத்தி ஆத்மாவாகாது. ஏனெனில் அது புத்தி) அஞ்ஞானத்தின் காரியம். தவிர, புத்திகணந்தோறும் சித்துக் கொண்டிருப்பது. பதி முதலானவைகள் அஞ்ஞானத்தினிடத்து லயமடைகின்றன. ஸ்திரீகள்.
பாலர் முதலானவர்களிடத்தில் 'நான் அஞ்ஞானி' என்னும் அனுபவமிருக்கின்றது. ஆதலால் அஞ்ஞானமே ஆத்மாவாமன்றி புத்தி ஆத்மாவாகாது. சுருதியும் விஞ்ஞான மயனைக் (புத்தியைக்) காட்டிலும் வேறான ஆனந்த மயனை (அஞ்ஞானம்) மேலான ஆத்மாவாகக் கூறுகின்றது. (சுழுத்தியில் அஞ்ஞான காலத்தில் துக்கானுபவமன்மையால் அந்த அஞ்ஞானம் ஆனந்த மயமெனப்படுகின்றது.) நித்திரை வடிவ அஞ்ஞானத்தினிடத்து புத்தி முதலியயாவும் லயமடைகின்றன. மிகுந்த துக்கமுள்ளவனுக்கும் நித்திராவஸ்தையில் அத்துக்கம் காணப்படுதலில்லை; ஆனந்தமேயிருக்கின்றது. ஆனால் அந்த நித்திராவஸ்தையில் நான் ஒன்றுமறியேன்' என்னும் அனுபவம் ஒவ்ம வாருவருக்கு மிருத்தலால் அங்கு அஞ்ஞானமிருப்பது பிரசித்தமாம். அந்த அஞ்ஞானமே ஆத்மாவாம். (இது பிரபாகரர் தார்க்கீகருடைய மதம்.)

 

ஞானாஞ்ஞானாத்ம வாதம்.

 

அஞ்ஞானம் ஆத்மாவென்னும் மூடனை மற்றொரு மூடன் தூஷிக்கிறான். அஞ்ஞானம் ஆத்மாவாத லெங்ஙனம்? ஆத்மாவினிடத்து ஞானமும் காணப்படுகின்றது. ஞானமின்றேல் நான் அஞ்ஞானியென்று தன் அஞ்ஞானத் தன்மையை யேனும் ஒருவன் எவ்வாறு அறிதல் கூடும்? நித்திரையினின்றெழுந்தவன் நான் ஒன்று மறியாமல் சுகமாய்த் தூங்கினேன் எனத் தன்னனுபவத்தைக் கூறுவதால் அவ்வனுபவத்தில் ஞானம் அஞ்ஞானம் இரண்டும் காணப்படுகின்றன. (ஒன்றுமறியேன் என்பது அஞ்ஞானம்; சுகமாய்த் தூங்குதலும் இவற்றை யறிந்து கொள்ளுதலும் ஞானம்) சுருதியும்' ஆத்மா ஞானாஞ்ஞானரூப' னென்று தெளிவாய்க் கூறுகின்றது. ஆதலால் ஆத்மா கத்தியோதப் (மின்மினிப் பூச்சிபோல் (ஒரு பாகம் பிரகாசமும் மற்றொருபாகம் அப்பிரகாசமு முடையதாயிருத்தல் போல) ஞானாஞ்ஞான வடிவினதென்பது பெறப்படுகின்றது. வெறும் அஞ்ஞான சொரூபனென்றால் குடம் சுவர் முதலியவற்றைப் போல ஜடமாயிருத்தல் வேண்டும். ஆத்மா ஜடமெனல் பொருந்தாது. (இது பட்டர் மதம்.)

 

சூனியாத்ம வாதம்.


இம்மதத்தை மற்றொருவன் கண்டிக்கிறான்.


      ஆத்மா ஞானாஞ்ஞான ரூபனாயின், அஞ்ஞானமும் ஞானமும் இருளும் ஒளியும் ஒன்றுக்கொன்று விரோதமானவையாகலின் ஆத்மா சித்தசித்து ரூபனாதல் வேண்டும். அஃது எங்ஙனம் சரியாகும்? ஞானாஞ்ஞானங்களுக்கு சாமானாதிகரணியமாயினும் (ஓரிடத்திருக்கை), சம்யோக சம்பந்தமாயினும், ஒன்றையொன்று ஆசிரயித்தலாயினும் சம்பவியாது. ஞானமும் அஞ்ஞானமும் புத்தியும் புத்தியின் குணங்களும் வேறெதுவும் நித்திராவஸ்தையில் காணப்படுவதில்லை. சத்த பரிசாதிகளும் சுழுத்தியில் சூனியமாகவே காணப்படுகின்றன. சுழுத்தியில் நான் இருக்கிறேன் என்பதும் தோன்றுவதில்லை. தூங்கி எழுந்தோர்' நான் ஒன்றும் அறியவில்லை' யென்கின்றனர். ஆகையால் ஒன்றுமில்லாமையாகிய சூனியமே ஆத்மாவாம்.

 

சிருஷ்டிக்கு முன்பு ஜகத்து அசத்து ரூபமா யிருந்ததென்றும் அசத்தினின்றே சத்துத் தோன்றியதென்றும் வேதமும் கூறுகின்றது. ஓர் குடம் மண்ணினின் றுண்டாயிற்றெனின், அதுவரை இல்லாததே உற்பத்தியாயிற்றே யன்றி இருந்து உண்டானதன்று. அதுபோல, அசத்திலிருந்தே உலகம் உண்டாயிற்று. ஆகையாலும் எல்லா விதத்தாலும் சூனியமே ஆத்மாவாதற்குரியதாகின்றது. (இது மாத்தியமிக பௌத்தர் மதம்)

 

அன்புள்ள ஞானகுமாரா! பரஸ்பரம் விரோதமுடையவர்களும் அந்தந்தமதத்திற் கேற்றவாறு அற்ப சுருதிகளையும் யுக்திகளையும் அனுபவங்களையும் கூறுகின்றவர்களுமாகிய புத்திராத்ம வாதி முதல் சூனியாத்மவாதி வரையிலுமுள்ள இம்மூடர்களால் நிர்ணயிக்கப்பட்ட மதங்களெல்லாம் பண்டிதர்களால் பிரதிவாதிகளுக்குப் பாதகமாயுள்ள சுருதிகளாலும் அனுபவங்களாலும் கண்டிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டிக்கப்பட்டுப் போயினமையின் புத்திரன் முதல் சூனியம் வரையுமுள்ள பதார்த்தங்களனைத்தும் விசேஷமாய் சுருதிகளாலும் அனுபவங்களாலும் ஆத்மாவன்றென்பதும் நிரூபிக்கப்பட்டது. பிரமாணங்களால் பாதிக்கப்பட்டுப் போன பதார்த்தம் வாஸ்தவமானதென்று பெரியோர்களால் அங்கீகரிக்கப்படாதன்றோ? ஆகையால் தக்க பிரமாணங்களால் பாதிக்கப்பட்ட புத்திரன் முதல் சூனியம் வரைக்கும் அனாத்ம வடிவமேயென்பது வெள்ளிடை மலை போல் விளங்குகின்றது.

 

சீடன்: - குருநாதா! சுழுத்திகாலத்தில் சகலமும் லயமடைந்திருக்கையில் அங்கே சூனியமே காணப்படுகின்றது. வேறொன்று காணப்படுத்தலில்லை. அந்த சூனியமும் அனாத்மாவாயின் அதைவிட வேறொரு கேற்றவாறு த்திராத்மவார்தேங்களெல்
ஆத்மாவென்னும் பெயருடைய பதார்த்தம் ஒன்றும் அனுபவிக்கப்படுதலில்லையன்றோ? அங்ஙனம் (சூனியத்தினும் வேறாக) ஆத்மா இருக்குமாயின் ஏன் காணப்படவில்லை? அது (ஆத்மா) நித்திராவத்தையில் இருக்கிறதெனின் அதற்குப் பிரமாணம் யாது? அந்த ஆத்மா என்ன லட்சணமுடையது? சுழுத்தியில் அகங்காரமாதிய சகலமும் பாதிக்கப்படுகையில் அந்த ஆத்மாமாத்திரம் ஏன் பாதிக்கப்படாது?

 

இருதய கிரந்திவடிவமான இந்த என் சந்தேகங்களை சுவாமி! யுக்தியாகிய வாளாயுதத்தால் சேதித்தருளவேண்டும்.

 

குரு: - பிரிய சீடனே! மிக்க சூக்குமமான இக்கேள்வி உனக்குத் தக்கதே. சூக்கும பதார்த்த ஞானம் சூக்கும புத்தியினிடத்துத்தான் காணப்படுகின்றது. இப்போது உன்னால் எது கேட்கப்பட்டதோ – உத்தமமும் சூக்குமமும் முமுட்சுக்களால் தெரிந்து கொள்ளத் தக்கதுமான அந்த எல்லா இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன் கேள்.

சூனியவாத நிராகரணம்.

 

(இதுகாறுங் கூறப்பட்ட வாதங்களில் முன் முன் வாதங்கள் பின் பின்வாதங்களால் கண்டிக்கப் பட்டுப் போயினமையின் கடைசியாக எஞ்சிநின்ற சூனிய ஆத்ம வாதம் ஈண்டுக் கண்டிக்கப் படுகின்றது.)

 

ஆலம் வித்தில் ஆலவிருட்சம் அடங்கி யிருத்தல் போல, புத்தி முதலிய சகலமும் நித்திராவத்தையில் தமக்குக் காரணமான பிரகிருதியினிடத்து ஒடுங்கி நிர்விகார வடிவமாக இருக்கின்றனவே யன்றி சூனியமா யிருப்பதில்லை. ஆல விருட்சம் ஒரு காலத்தில் முளை வடிவமா யிருக்கும். (இது காரியம்) மற்றொரு காலத்தில் வித்து வடிவா யிருக்கும். (இதுகாரணம்.) அவ்வாறே உலகம் ஒரு காலத்தில் காரிய வடிவமாகவும் மற்றொரு காலத்தில் காரணவடிவாகவு மிருக்கின்றது.

 

"சிருஷ்டிக்கு முன்பு உலகம் அசத்து வடிவா யிருந்தது என்று சுருதி கூறிற்றே யெனின்: அசத்துரூப மென்பதற்கு வியக்தமாகாத (வெளிப்படாத) நிலை யென்பது பொருளே யன்றி சூனிய ரூபமென்பது பொருளன்றாம். நித்திராவத்தையில் ஜகத்தின் பேதத்தை நிர்விகாரமானதாக வேதம் கூறுகின்றது. சுருதி யுக்திகளால் நிச்சயிக்கப்பட்ட இவ்வர்த்தத்தை யறியாமல் உண்மை (தத்துவம்) அறியாதார் உலகு காணப்படாம லிருத்தலைச் சூனியமென்கின்றனர்.

 

அசத்திலிருந்து சத்துண்டாயிற் றென்பது (கண்டனம்)

 

இல்லாத வஸ்துவினின்று உள்ள வஸ்து உற்பத்தியாயிற் றென்பதை என்றும் எவரும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இல்லாத பொருள்களாகிய முயற்கொம்பினின்றும், ஆகாயப் பூவினின்றும் என்ன உற்பத்தியாகும்? (மண்ணில்) இல்லாத குடம் மண்ணிலிருந்து உண்டாகாது. அங்ஙனம் உண்டாகுமாயின் அக்குடம் மணலிலிருந்தேனும் நீரிலிருந்தேனும் உண்டாகட்டும் பார்ப்போம். அங்ஙனம் உண்டாதலில்லை. ஆதலால், எதனால் எந்தப் பதார்த்தம் உண்டாகின்றதோ அதனிடத்து அப் பதார்த்தம் இருந்தே தீரவேண்டும். (இல்லது வாராது; உள்ளது போகாது.) காரியத்தின் தன்மை காரணத்தில் இன்றேல் எல்லாச் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டு எல்லாப் பதார்த்தங்களிலும் பிரசித்தமாயுள்ள காரிய காரண லட்சணம் விருத்தமாகும். சுருதியும் அசத்தினின்று சத்து தோன்றாது' எனக் கூறுகின்றது. ஆகையால் அசத்தால் சத்துண்டாதல் அசம்பாவிதமாம். சூனியம் என்பதன் பொருள் மித்தை யென்பதேயாம். ஓ! பிராந்தி யுடையவனே! அவ்வியக்தமென்னும் பெயருடையதும் ஞானமுடையதும் சத்துவ வடிவினதுமாகிய ஆத்மாவினிடத்து சூனியத்தன்மை எங்ஙனஞ் சித்திக்கும்?

 

(சுழுத்தியில் சூனியம் அனுபவிக்கப் படுகின்றது என்பதற்குச் சமாதானம் கூறப்படுகின்றது.)

 

சுழுத்தியில் சூனியமே அனுபவிக்கப் படுகின்றதெனக் கூறுவோனைப் பார்த்து இக்கேள்வி கேட்போம்.

சுழுத்தியில் சூனியம் இருக்கின்ற தென்று நீ எதனால் அனுமானித்தாய்? எவ்வாற்றிந்தாய்? எனக் கேட்போம்.

 

இக்கேள்விக்கு அம் மூடன் யாதொரு பதிலும் கூறமாட்டான். சூனியமென்பதற்கு அனுகூலமான லட்சணமுமில்லை; சொல்லுகிறவனுமில்லை. சுழுத்தியிற் காணப்படும் சூனியத்தை அனுபவித்தவன் யாவன்? ஆத்மாவினும் வேறாக யாவனுளன்? ஒருவனுமில்லை. நித்திராவத்தையில் தன்னால் அனுபவிக்கப்பட்ட சூனியத்தை சாக்கிரத்தில் கூறுகின்றான். இதனால் சூனியபதார்த்தம் தன்னினும் வேறு என்பது விளங்குகின்றது. இங்ஙனமிருக்க, மூடன், தன்னிருப்பை யறியாமல், தன்னால் அனுபவிக்கப்படும் சூனியமே தான் என மயங்குகின்றான்.

 

நித்திரையில் தான் பிரத்தியட்சமாக சுகத்தை யனுபவிக்கிறான். அவ்வாறு அனுபவிப்பதைப் பிறர் அறிவார்களா? அறியார். இவ்வாறு ஆத்மா, புத்தி முதலானவை யில்லாத நித்திரையில் நித்திராவத்தையையும் அறிகிறான். ஆகையால் ஆத்மா நிர்விகாரியுமாம்.

 

ஆத்ம சொருபம்.

 

சூரியனது பிரகாசத்தால் உலகிலுள்ள சகல பொருள்களும் பிரகாசிக்கின்றன. இவ்வாறு எல்லாவற்றையும் பிரகாசிப்பிக்கும் வஸ்து வேறொன்றில்லை. அதுபோல சத்ரூபனும் சுயம்பிரகாசனு மாகிய ஆத்மாவின் பிரகாசத்தால் சகலமும் பிரகாசிக்கின்றனவாகையால் அந்த ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்வது வேறொன்று மின்று. புத்தியாதிய வனைத்தும் அசேதனங்களாம். அவை ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்வனவாகா. ஆதலால் ஆத்மாவை விட அனுபவிக்கும் பொருள் வேறொன்றில்லை.

 

சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் மூன்றவத்தைகளிலும் எல்லா விஷயங்களையும் எவன் அனுபவிக்கிறானோ எல்லாவற்றையும் அறியும் அந்த ஆத்மாவை எவன் அறிந்து கொள்ளத் தக்கவனாவான்? எல்லாவற்றையும் தகிக்கும் அக்கினியைத் தகிக்கும் பொருள் மற்றொன்றுண்டோ? இல்லை. அங்ஙனமே, எல்லாவற்றையும் அறிகின்றவனாகிய ஆத்மாவை அறிபவன் ஒருவனுமில்லை. இந்த ஆத்மாவே எல்லாவற்றையு மடைகின்றவனாகலின் இந்த ஆத்மாவை அடைபவன் வேறொருவனில்லை. ஆதலால் ஆத்மாவை எவனும் அடைதல் முடியாது.

 

நித்திராவத்தையில் புத்தி முதலாகிய அறி கருவிகள் லயமடைதலால் இந்த ஆத்மா ஒருவனே யிருந்து கொண்டு எதையும் காண்பதும் கேட்பதும் அறிவது மின்றி, அந் நித்திராவத்தையி லுள்ள அஞ்ஞானத்திற்கும் தானேசாட்சியாய் சங்கற்பமின்றி சுக சொரூபனா யிருக்கிறான். நித்திராவத்தையில் இவ்வாறு ஆத்மா (தான்) இருக்கிறான் என்பதற்கு அனுபவத்தையே தக்கபிரமாணமாகக் கொண்டிருக்கின்றனர் சான்றோர். எவ்வா றெனின் 'நான்தூங்கினேன்' என்னு மனுபவம் பாலர் முதல் விருத்தர் வரைக்குமுள்ள அனைவர்க்கு முண்டு. இதனால் நித்திராவத்தையில் 'தான்' இருக்கிறானென்றேற்படுகின்றது. அன்றியும் தூங்கி யெழுந்தவன் நான் சுகமாய்த் தூங்கினேன்' என்று நினைக்கிறான். நித்திராவத்தையில் தான் இல்லாவிட்டால் சுகத்தை யனுபவிப்ப தெப்படி? சுகத்தை யனுபவிக்காவிடின் 'நான் சுகமாய்த் தூங்கினேன்' என்னும் ஸ்மிருதி (நினைப்பு) அவனுக் கெங்ஙன முண்டாகும்? உண்டாகாது. ஆகையால் நித்திராவத்தையில் தான் (ஆத்மா) இருக்கிறானென்பது நன்கு விளங்குகின்றது.

 

'எந்த அவத்தையில் இச்சையில்லாமையும் சொப்பனந் தோன்றாமையுமுள்ளதோ அந்த அவஸ்தையே சுழுத்தி என்று சுருதி கூறுதலின், சுழுத்தியில் ஆத்மாவின்றேல் கோரிக்கையில்லா திருப்பது யாருக்கு? பிரிய சீடனே! யோசித்துப் பார். ஆதலால் சுருதியி னபிப்பிராயத்தாலும் நித்திராவத்தையில் ஆத்மா வுண்டென் றேற்படுகிறது. இந்தப் பிரமாணங்களால் தான் மாத்திரமே யிருப்பவனும் நிர்மலனும் சத்து சித்து ஆனந்தங்களைச் சொரூபமாக வுடையவனுமாகிய இந்த ஆத்மா சாட்சி சொரூபமாயிருக்கிறானென்று பண்டிதர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தராத்துமாவிற்கு சாத்து சித்து ஆனந்தம் முதலானவையே லட்சணமாம். நித்திய சொரூபனாகையால் முக்காலங்களிலும் பாதிக்கப் படாம லிருப்பதே சத்ரூபத் தன்மையாம். ஞானசொரூபனாகையால் சுத்த சைதன்ய ரூபத்தன்மையே சித் ரூபத்தன்மையாம். நீங்காத ஆனந்த சொரூபனா யிருத்தலே ஆனந்த ரூபத் தன்மையாம்.

 

ஆத்மா சத்து.

 

"நான் இருக்கிறேன்' என்று தன் இருப்பு 'சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி யென்னும் மூன்றவத்தைகளிலும் பொருந்தி யிருக்கின்றது. இதனால் நாசமில்லாத ஆத்மா நித்தியனாவன். எப்பொழுது இருந்தேன் 'எனப்பார்க்கப்படுவதில்லை; எப்பொழுதும் இருந்தேன் என்னும் அபின்ன ஞானம் காணப்படுகின்றது. அதனால் ஆத்மா நித்தியமாம். கங்கையில் இதுவரையில் எவ்வளவோ அலைகள் வந்து போயின. இப்பொழுது எவ்வளவோ வருகின்றன; ஆனால் எல்லா வற்றிலும் ஜலம் ஏகவடிவமாகவே இருக்கின்றது. அதுமாறுபடுவதில்லை. அவ்வாறே, பாலியம் முதலிய தசைகளிலும் சாக்கிரம் முதலிய அவத்தைகளிலும் தோஷம் நிர்த்தோஷம் முதலிய புத்தி விருத்திகளிலும் அனேகம் அழிந்தன. இப்பொழுதும் அனேகம் அனுபவிக்கப்படுகின்றன. இவைகளும் அழிந்து இன்னும் அநேகம் தோன்றும்.) ஆனால் இவையெல்லாவற்றிலும் நான் இருக்கிறே னென்றும் 'தன்னிருப்பு' மாறாமல் ஏகரூபமாகவே யிருக்கிறது. ஆதலால் ஆத்மா நித்தியன் அடிக்கடி பேதப்பட்டுக் கொண்டிருக்கும் அகங்காரம் முதலானவை ஒவ்வொரு நொடியும் மாறுபடுகின்றவை யாகலின் அவை விகாரமடைவனவாம். ஆத்மா நிர்க்குணனாகலின் மாறுபடுதலில்லை. இந்த ஆத்மா நிர்விகாரியாகலின் நித்தியனாம்.

 

ஆத்மா சித்து.

 

எந்த நான் கனவைக் கண்டேனோ எந்த நான் சுகமாய்த் தூங்கினேனோ அந்த நானே பின்பு விழித்துக் கொண்டேன் என்றிவ்வாறு தன் இருப்பு அகண்டமாய் அனுபவிக்கப் படுகின்றது. இதிற் சந்தேகமில்லை யல்லவா? சடப் பொருள்களைய் பிரகாசிப்பிக்கும். சூரியன் பிரகாச ரூமியேயன்றி சவடிவினனன்று. அது போல புத்தி முதலானவைளைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவும் ஞானவடிவினனே யன்றி சடரூபனன்று சூரியவொளியில் கோமல் சுடபதார்த்தங்கள் சிறிதும் பிரகாசிக்க மாட்டா. அவ்வாறே ஆத்மா வில்லாமல் புத்தி முதலானனை இருப்பதாக எள்ளளவும் தோன்றாது. ஆகையால் சூரியன் எப்படி ஒளிவடிவினனோ அப்படியே ஆத்மாவும் சித்ரூபன். சூரியன் தான் பிரகாசிக்கும் விஷயத்திலாயினும் பிறவற்றைப் பிரகாசிப்பிக்கும் விஷயத்திலாயினும் மற்றொன்றின் பிரகாசத்தைச் சிறிதும் இக்சிப்ப தில்லை. அவ்வாறே சித்ரூபனாகிய இந்த பரமாத்மாவும் தன்னை யுணர்த்தும் விஷயத்திலாயினும் அகங்காராதிகளைப் பிரகாசிக்கச் செய்யும் விஷயத்திலாயினும் வேறு ஞானத்தை யபேட்சிப்பதில்லை. ஆதலால் சுயம் பிரகாசன் எனப்படுகிறான். சூரியனும் சந்திரனும் மின்னலும் நெருப்பும் எந்த ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய மாட்டாவோ, எந்த ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருத்தலால் அந்த ஆத்மாவை யனுசரித்து சகல பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ அந்த ஆத்மா எல்லா அவத்தைகளிலும் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.

 

ஆத்மா ஆனந்த வடிவினன்.

 

ஆத்மா சுகவடிவினனாகலின் ஆனந்த ரூபத் தன்மை ஆதமலடசண மாம். பரம (மிகுந்த) பிரீதிக்கு விஷயமாகலின் ஆத்மாவிற்கு சுகவடிவத் தன்மை யுள்ளதென்பது சர்வ சித்தமாம். சகலருக்கும் சுகத்திற்கு ஏதுவாகிய தாரம் தனம் முதலிய பதார்த்தங்களி னிடத்துள்ள பிரியம் அளவுடைய தாய் (முடிவுடையதாய்) காணப்படுகின்றது. ஆனால் தன்னிடத்திலோ அளவு கடந்த பிரியம் காணப்படுகின்றது. ஆகையால் ஆத்மா பராமானந்த வடிவினனான் எவ்வாறெனின்:

 

முடவன் குருடன் முதலிய அங்கவீனர்களும் மிக்க வயோதிக்கும் பிராணன் நீங்கும் சமயத்தி லுள்ளோரும் இன்னும் ஜீவித்திருக்க வேண்டுமென்று விரும்புவார்களே யன்றி இறந்து போக விரும்புவதில்லை. எவன் எந்த வஸ்துவைச் சம்பாதித்தாலும் தனக்காகவே சம்பாதிக்கிறான். ஆகையால் ஆத்மா எல்லாப் பிராணிகளுக்கும் பரமப் பீரீதிக்கு விஷயமானதாம். தன்னிடத்துள்ள பிரியம் புத்திரன் முதலான பிற பொருள்களிடத்திருப்பதில்லை. ஆதலால் ஆத்மா அதிமுக்கியனாவன். ஆபத்திலாயினும் சம்பத்திலாயினும் எப்படி ஆத்மா பிரியமானவனோ அப்படி மற்றொருவன் பிரியனாகான். தகரம் மக்கள் மித்திரர் கிருகம் தனம் முதலியவற்றைச் சம்பாதிப்பதும் வாணிபம் வேளாண்மை முதலிய தொழில்களைச் செய்வதும் யாருக்காக? தனக்காகவே யன்றோ? ஆகையால் ஆத்மா அதிப்பிரியனல்லவா? எவனும் அனுகூலமென்று ஒரு காரியத்தைச் செய்வதும் பிரதிகூலமென்று செய்யா தொழிதலும் தன்னிமித்தமே யன்றி அன்னியர்க்காக வல்ல. ஆகலின் இந்த ஆத்மாவினும் அதிக பிரியவஸ்து வேறொன்றில்லை.

 

இதனால் (தன்னிடத்து அதிகாரியம் இருக்கிற தென்று கூறுவதனால்) தான் (ஆத்மா) ஆனந்த சொரூபன் என்றேற்படுகின்றது. இவ்வாறெண்ணாமல் இவன் மனைவி மக்கள் - முதலிய மற்ற வஸ்துக்களைப் பிரியமானவைகளென்று என்னுகிறானோ அவன் அவ்வஸ்துக்களால் சோகத்தையே அனுபவிக்கிறான்.

 

சீடன்: - குருநாதா! அடியேனுக்கு ஓர் சந்தேகம் தோன்றுகிறது. அதனைக் கேட்க உத்தரவளிக்க வேண்டும். மூர்க்கனுடைய வார்த்தையைப் பெரியோர் குற்றமாகக் கருதமாட்டார். ஆதலால் எனது கேள்வி குற்றமுள்ளதாயினும் மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன். அதாவது: -

 

ஆத்மாவேறு, சுகம் வேறு. ஆத்மாவிற்கு சுகரூபத்தன்மை யில்லை. அங்ஙனமின்றி, தானே (ஆத்மாவே) சுகவடிவினனாபிருந்தால் பிராணிகள் சுகத்தையடைய வேண்டு மென்று பிரயத்தினம் செய்ய வேண்டிய அவசியமில்லையே. ஆனால் சகலரும் சுகத்திற்காக முயல்கின்றனர். சுவாமி! இச்சந்தேகம் எனக்குண்டாகின்றது. இதனை நிவிர்த்தி செய்தருள வேண்டும்.

 

குரு: - அன்புள்ள மாணவ! மூடன், தான் ஆனந்தரூபன் என்னும் விஷயத்தை அறியாமையால் தனக் கந்நியமாகவுள்ள விஷய சுகங்களைக் குறித்து முயற்சி செய்கிறான். தன்னை ஆனந்த ரூபனாக வறிந்த பண்டிதனோ அவ்வாறு பாகிய சுகத்திற்காக எத்தனஞ்செய்யான். எவ்வாறெனின்; தன் வீட்டிலிருக்கும் நிக்ஷேபத்தை யறியாத மூடன் பிட்சை யெடுத்துத் திரிவான். தன் வீட்டில் நிக்ஷேப மிருக்கிறதென்றறிந்த விவேகி பிட்சைக்காகத் திரிவானோ? திரிய மாட்டான்.

 

தூலம் சூக்குமம் என்னும் இரண்டு சரீரங்களும் இயல்பாகவே துக்கரூபமானவை. மூடன் சுகவடிவினனாகிய தன்னை மறந்து தூல சூக்கும சரீரங்களே தானெனப் பாவித்து துக்கத்தையே தரும் தாரபுத்திராதிகளால் தனக்குச் சுகம் கிடைக்கு மென்றெண்ணி அதனைப் பெறமுயல்கிறான். துக்கத்தைத் தரும் பொருள் சுகத்தைத் தரவல்ல தாமோ? மரணந்தரும் விஷமானது தன்னை யருந்தினவனுக்கு மரண மின்மையை யுண்டாக்க வல்லதாமோ? ஆகையால் மூடன் தான் வேறு சுகம் வேறு என்று நிச்சயித்தே அன்னிய சுகத்திற்கு முயல்கிறான். இதில் எவ்வளவும் சந்தேகமில்லை.

 

இவ்வுலகத்தில் சகல பிராணிகளுக்கும் தமக்குப் பிரியமான வஸ்துக்களின் நினைப்பினாலும் தரிசனத்தினாலும் அனுபவத்தினாலும் ஆனந்தம் தோன்றுகின்ற தல்லவா? அந்த ஆனந்தம் எதனுடைய தென்று (அப்பொருளினிடத்திலிருந்து உண்டாகின்றதா? தன்னிடத்திலிருந்து உண்டாகின்றதா? வென்று) விசாரிப்போம்.

 

வேறொரு வஸ்துவைத் தானனுபவிக்கும் பொழுது உண்டான ஆனந்தம் அந்த வேறு வஸ்துவினுடைய தன்று. ஏனெனில்? அந்த ஆனந்தம் எங்கே காணப்படுகின்றது? மனத்திலன்றோ காணப்படுகின்றது? அந்த ஆனந்தம் வஸ்துவின் தர்மமாயின் மனத்தில் எங்ஙனம் காணப்படும்? யோசித்துப்பார். ஒருவஸ்துவின் தர்மம் அந்த வஸ்துவை விட்டு வேறிடத்திலிராது. ஆதலால் மனத்தில் தோன்றும் இந்த ஆனந்தம் வஸ்துவின் தர்மமாகாது.

 

சீடன்: - சுவாமி! அங்ஙனமாயின் (ஆனந்தம் வஸ்துவின் தர்மமாகாது மனத்தின் தர்மமாயின்) வஸ்துவில்லாத போதும் மனத்தில் ஆனந்தம் தோன்ற வேண்டுமே! அங்ஙனமில்லையே. இல்லாமையின் மனத்தின் தர்மமென்று மாத்திரம் எங்ஙனம் கூறலாம்?
 

குரு: - உன் கேள்வி சரியானதே. வஸ்து வில்லாத போது ஆனந்தம் காணப்படாமையின் அது மனோதர்மமு மன்றாம். ஏனெனில் தர்மத்தை வெளிப்படுத்தும் வஸ்து இல்லாவிடின் தர்மம் காணப்படாது. பதார்த்த மிருப்பினும் சிலசமயங்களில் ஆனந்தமுண்டாதலில்லை. ஆனந்தத்தை யுண்டாக்கத் தகுந்த வஸ்து இருக்கும் போதும் ஆனந்தந் தோன்றா திருப்பது சரியல்லவே. ஒருகால், துரதிருஷ்டம் இதற்கு (இவ்வாறு ஆனந்தம் தோன்றாதிருப்பதற்கு காரணமாயிருக்குமோ வென்றால் அதுவும் சரியான சமாதானமாகாது. ஏனெனின், துரதிருஷ்ட மிருந்தால் பிரியவஸ்துவே சித்திக்காது. ஆகையால் துரதிருஷ்டமில்லை யென்று ஒப்பித் தீரவேண்டும். இதனால் ஆனந்தம் மனத்தின் தர்மமாகாது. ஆத்மாவின் தர்மமோவென்றால், ஆத்மா நிர்க்குணனாகலின் அதுவும் சரியன்று. வஸ்துவின் தர்மமுமன் றென்பது முன்னரே நிச்சயிக்கப்பட்டு விட்டது. மற்றெதன் தர்மமோவெனின்: புண்ணியத்தின் பயனாகப் பிரியவஸ்து கிடைத்த காலத்தில் நிர்மலஜலத்தில் காணப்படும் சந்திரன் போல சத்துவகுணப் பிரதானமான சித்தத்தில் ஆனந்த ரூபனாகிய ஆத்மாவே பிரகாசிக்கிறான். இவ்வாறு சித்தத்தில் பிரதிபலித்த ஆசை (சாயை) வடிவமான ஆனந்தம் புண்ணியத்தின் ஏற்றத்தாழ்வுகளுக் கேற்ப ஏற்றத்தாழ்வாயிருக்கின்றது. இந்த ஆனந்தம் அசாஸ்வதமானது. மேலும் இதுவே மேலான ஆனந்தமுமன்று. இதனினும் மேலான ஆனந்தம் வேறொன்றிருக்கும். புண்ணியம் நசிக்கு மிடத்து இதுவும் நசிக்கும். இதுவே விஷயானந்தம் என்றழைக்கப்படுகிறது. (இது விஷயமாக ஸ்ரீ விசாரசாகரம் கூறுவது இங்குணரற்பாலதாம். அதாவது எவன் புத்தி ஆத்ம சொரூபத்தையறிய வில்லையோ அவனுக்கு விஷயத்தில் இச்சை யுண்டாகிறது. இவ்விடத்தில் போகசாதனமே விஷயமெனப் படுகின்றது. ஆதலால் தன புத்ராதிகளையும் கொள்ள வேண்டும் என்பதாம்.)

 

1. அவ்விஷய விச்சையினால் புத்தி சஞ்சலமாயிருக்கும். அச்சஞ்சலபுத்தியில் ஆத்ம சொரூபானந்தத்தின் பிரதிபிம்பம் விளங்குகிறதில்லை.


       2. இச்சித்தவிஷயம் கிடைத்தவுடன் க்ஷண மாத்திரம் புருஷனதுபுத்தி ஸ்திரப்பட்டு அதன் விருத்தி அந்தர்முகமாகின்றது. அந்த அந்தர்முகவிருத்தியில் ஆத்மாவின் சொரூபானந்தம் பிரதிபிம்பிக்கிறது.

 

அந்த ஆத்ம சொரூப ஆனந்தத்தின் பிரதிபிம்பத்தை யனுபவிக்கிற புருஷனுக்கு " எனக்கு விஷயத்தா லாநந்த முண்டாயிற்'' றென்று பிராந்தி யுண்டாகிறது. ஆனால் விஷயத்தி லானந்தமில்லை.

 

(விசாரசாகரடிப்பணி: - ஆத்ம சொரூப ஆநந்தத்தின் பிரதிபிம்பத்தை அனுபவித்துப் புருஷனுக்கு விஷயத்தில் ஆதந்தத்தின் பிராந்தி யுண்டாகின்றது. அது, நாய்க்குப் பசையற்ற எலும்பைக் கடித்து தனது தாடையிலிருந்து வரும் இரத்தத்தைச் சுவைக்க அவ்வெலும்பிலிருந்து வருவதாகப் பிராந்தி யுண்டாவது போலாம்.)

 

1. ஒருகால் விஷயத்தில் ஆநந்த முண்டாகுமாயின், ஒரு விஷயத்திலாநந்த மடைந்தவனுக்கு மற்றொரு விஷயத்தில் இச்சை யுண்டாகும்போதும், முந்திய ஆநந்தம் இருந்து கொண்டே யிருக்க வேண்டும். ஆனால்அநுபவத்தில் அப்படியில்லை. இரண்டாவது, விஷயத்தினிச்சையால் புத்திசஞ்சலப்படுவதால் அச்சஞ்சல புத்தியில் சொரூபாநந்தத்தின் பிரதிபிம்பம் விளங்குகிறதில்லை.

 

2. விஷயத்திலேயே ஆனந்த முண்டாகுமாயின், ஒருவனுடைய பிரியமான புத்திரன் அல்லது மிகுந்த பிரியமுள்ள மற்றொருவன் வெகுகாலம்தேசாந்தரம் போயிருந்து வந்தவுடன் அவனைப் பார்த்தவுடனே முதலில்உண்டாகும் ஆநந்தம் எதுவோ அது மறுபடியும் எப்போதும் இருப்பதில்லை. அது மாறாமல் நீடித்திருக்க வேண்டும். ஏனெனின் அந்த ஆநந்தத்துக்குக்காரணமான புருஷன் சமீபத்திலேயே இருக்கிறான். ஆனால் அனுபவத்தில் அப்படி நீடித்திருப்பதில்லை. முதலிற்றான் ஆநந்தம் பொருந்துகின்றது; எப்போதும் சம்பவிக்கிறதில்லை. ஏனெனின் ஒருமுறை புருஷனைக் கண்டவுடன் விருத்தி ஸ்திரப்படுகிறது. மறுபடியும் விருத்தி வேறுவிஷயத்தில் சென்று சஞ்சலப்படுவதால் முந்திய ஆநந்தம் விளங்குகிறதில்லை. ஆதலால் பதார்த்தத்தாலாநந்தம் இல்லை.

 

3. அல்லது விஷயத்தில் ஆநந்தமுளதாயின் சமாதியிலுண்டாகிறயோகாநந்தத்தின் (சித்தத்தின் ஏகாக்கிரத்தன்மையாகிய யோகத்தினால்வெளிப்படக்கூடிய ஆநந்தம்) விளக்கமுண்டாகலாகாது. ஏனெனின் சமாதியில் ஓர் விஷய சம்பந்தமுமில்லை.

 

4. அவலது விஷயத்திலேயே ஆநந்தமுளதாயின் கழுத்தியில் ஆநந்தத்தின் பாவம் (தோற்றம்) உண்டாகலாகாது. ஏனெனின் சுழுத்தியிலும் ஒருவிஷயத்தின் சம்பந்தமுமில்லை. ஆதலால் விஷயத்தி லாநந்தமில்லை. ஆனால்ஆத்ம சொரூபாநந்தம் முழுவதும் விளங்குகிறது.)

 

புண்ணியத்தை யாசிரயித்து அதன் பலனாக வுண்டான விஷயானந்தத்தை யனுபவிப்போர் முடிவில் மிகுந்த துக்கத்தை யனுபவித்தேயாகவேண்டும். மேலும் அனுபவிக்குங் காலத்தும் தம்மினும் மிகுந்த ஆனந்தத்தை யனுபவிப்போரைப் பார்த்து துக்கப்படுவதனால் துக்கந்தருவதாகவேயிருக்கிறது. ஆதலால் விஷயசுகம் துக்கக்கலப்புடையதா யிருத்தலின் விஷத்தோடு கூடிய அன்னத்திற்குச் சமானமானதாகும். விஷய சுகம் (எல்லோரிடத்தும் ஒருவிதமாக விராமல்) ஏற்றத்தாழ்வுடையதாகலின் தான் அனுபவிக்கும் பொழுதே தன்னைக் காட்டிலும் அதிக சுகத்தை யனுபவிப்பவர்களைப் பார்க்கையில் துக்கத்தையே யுண்டாக்கும்; அழியு மென்னும் பயத்தினால் இறுதியிலும் துக்கத்தையே கொடுக்கும். அரசர் பதவிகளையடைந்தவர்களுக்குள் ஏற்றத்தாழ்ச்சி எங்ஙனமுளதோ மனிதருக்கும் பிரஹ்ம பதவி முதலிய பதவிகளை யடைந்தவர்களுக்கும் உண்டாம் சுகத்திலும் ஏற்றத்தாழ்வு அங்ஙனமே உளதாம். அதனால் துக்கமுமங்ஙனமே யுளதாம். ஆதலால் இத்தகைய விஷய சுகத்தை மூடர் இச்சித்தாலும் விவேகிகள் சிறிதும் விரும்பார்.

 

பிரதிபிம்ப வடிவமாகிய இந்த விஷயானந்தத்திற்கு ஆதாரமாகவுள்ள (பிம்பத்தின்) ஆனந்தமே பரமாத்மாவாகும். அந்த ஆத்மானந்தம் எப்பொழுதும் அழியாதிருப்பதும் பயமற்றதும் பரிபூரணமானதும் அபின்னமானதுமாகும். இந்த ஆத்மாநந்தம் பிரதிபிம்பமாகிய விஷயானந்தத்தினால் ஊகிக்கப்படுகின்றது. பிரதிபிம்பம் பிம்பத்தை விட்டு எப்போது முண்டாகாது. ஆகையால் பிரதி பிம்பமாகிய விஷயானந்தத்தினால் பிம்பமாகிய ஆத்மானந்தம் ஊகிக்கப்படுவது நியாயமேயாகும். அந்த ஆத்மானந்தத்தை யுடையவர்களாயிருந்தாலும் மூடர்கள் அதனை அனுபவிப்பதில்லை.

 

முன்கூறப்பட்ட இந்த ஆத்மா அவித்தையின் காரியமாகிய உலகத்திலும் கரணங்களாகிய இந்திரியங்களினிடத்தும் சாக்கிராவத்தையிலும் சொப்பனாவத்தையிலும் அறியப்படுவதில்லை. துக்க வடிவமாகிய தூலசரீரமும்சூக்கும சரீரமும் சுழுத்தியில் லயமாகும் போது ஆனந்த வடிவினனாகிய அந்தராத்மா அறியப்படுகிறான். இந்த நித்திராவத்தையில் ஆனந்த வடிவின்னும் இரண்டாவதில்லாதவனுமாகிய ஆத்மா மாத்திரம் இருக்கின்றானன்றியாதொரு விஷயமாயினும் புத்தியாதிகளிலெதுவாயினும் இல்லையன்றோ? அவித்தையின் காரியமாகிய கரணங்களின் கூட்டம் இல்லாமையினாலேயே சுழுத்தியில் ஆத்மா அறியப்படுகிறான். தூங்கியெழுந்த ஒவ்வொருவனும் தான் ஆனந்தமே வடிவாகவுடையவனென்று எண்ணுகின்றனன். இதில் சந்தேகமில்லை. ஞான புத்திரா! நீயும் தூங்கியெழுந்து நான் சுகமாய்த் தூங்கினேனென்று உனது சுகரூபத்தன்மையை நினைத்துக் கொண் டிருக்கிறாய்.

 

உபநிஷதார்த்தத்தை யறியாது சிலர் துக்கமின்மையே சுகமெனக் கூறுவர். அது சாரமற்ற மித்தியா வார்த்தையாகும். ஏனெனின், துக்க மின்மை மண்ணாங்கட்டி முதலியவற்றினிடத்தும் இருக்கின்றது. ஆனால் அவற்றினிடத்துச் சுகம் அணுவளவேனு முளதோ? இல்லை; இது எல்லார்க்கும் பிரத்தியட்ச அனுபவமே. ஆதலால் துக்காபாவம் சுகமாகாது. ஆத்மாசத்ரூபனென்றும் சித்ரூபனென்றும் ஆனந்த ரூபனென்றும் சுருதி நிரூபித்து ஆத்மா ஆனந்த கனமானது என்று கூறுகின்றது. கிருதகிருத்தியரும் புத்திசாலிகளும் பிரஹ்மவித்துக்களும் சற்சன சிரேஷ்டருமாகிய மகாத்மாக்கள் சமாதியில் ஆத்மாவை ஆனந்த வடிவினனாக அனுபவிக்கின்றனர். இதிற் சந்தேகமில்லை. பிரமா முதலாகவுள்ள சகல பிராணிகளும் பரமாதமாவின் ஆனந்தரூபமாகிய அம்சத்தையே (பாகம்) தத்தம் உபாதிக்கேற்றபடி அனுபவிக்கின்றன. பக்ஷணங்களில் ஆனந்தகரமாய் இனிமையாகவுள்ள எந்த ரசமுளதோ அந்த ரசம் வெல்லத்தினுடையதே யன்றி வேறெதிலும் இனிமை இல்லை. அப்படியே, விஷயச் சேர்க்கையால் எந்த ஆனந்தம் காணப்படுகின்றதோ அந்த ஆனந்தம் பிம்பத்தின் ஆனந்தத்தினது பாகத்தின் பிரகாசமேயன்றி ஜடபதார்த்தங்களி னுடையதன்றாம். எந்த வொரு பதார்த்தத்தின் சம்போகத்தினால் எந்தவொரு பிராணியிடத்தும் எந்த ஆனந்தம் காணப்படுகின்றதோ அந்த ஆனந்தம் பரப்பிரஹ்மத்தினுடைய பிரகாசரூபமேயாகும். ஆகையால் ஆத்ம வஸ்துவின் பிரகாசத்தினாலன்றி வேறெவ்வகையாலும் ஆனந்தோதய முண்டாகாது.

 

ஆத்மாவின் அத்துவிதத் தன்மை.

 

சீடன்: - சுவாமி! சத்து சித்து ஆனந்தம் என்னும் இம்மூன்றும் ஆத்மாவின்குணங்களோ?

 

குரு: - ஆத்மா நிர்க்குணன். நிர்க்குணனுக்குக் குணங்கள் எங்ஙனம் சம்பவிக்கும்? சம்பவிக்காதன்றோ? ஆதலால் சச்சிதானந்தங்கள் ஆத்மாவின் குணங்களன்று; ஆத்மாவின் சொரூபமேயாம்.

ஓர் வஸ்துவிற்கு விசேஷணம் (ஒன்றைப் பிறவற்றினின்றும் வேறு பிரித்தறிவித்தற் கேதுவா யிருப்பது விசேஷண மெனப்படும்.) கூற வேண்டுமாயின், அவ்வஸ்துவிற்கு அன்னியமாக வேறு வஸ்துக்களிருப்பின் விசேஷணங் கூற வேண்டுவ தவசியம். தனக்கன்னியமாக வேறு வஸ்துக்களில்லாத வொன்றிற்கு விசேஷண மவசியமின்று. (உதாரணமாக: - வெண் தாமரை என்பதில் தாமரை விசேஷியம்; வெண்மை விசேஷணம். இந்த விசேஷணம் செந்தாமரை முதலியவை யிருப்பதால் அவற்றினின்று வேறு பிரித்துக்காட்ட வந்தது. செந்தாமரை முதலிய வேறு தாமரைகளில்லாமல் வெண்டாமரை மட்டும் இருக்குமாயின் அப்பொழுது தாமரை என்று சொல்வதே போதும், வெண்மை என்னும் அடைமொழி (விசேஷணம்) கொடுத்து வெண்டாமரை என்று கூறவேண்டுவதின்று, வெண்மையாக விருப்பினும் மல்லிகை வெண் மல்லிகை எனக் கூறப்படுவதில்லை; வேறு நிற மல்லிகைகளில்லாமையின். அதுபோல) பிரஹ்மத்திற்கு அன்னியமாக வேறொரு வஸ்து இல்லாமையால் அதற்கு விசேஷணங் கூற வேண்டுவதின்று. ஆதலின் சச்சிதானந்தங்களைக் குணங்களாகக் கொள்ளாமல் பிரஹ்மத்தின் சொரூபமாகக் கொள்ள வேண்டும்.

 

சீடன்: - பிரஹ்மத்திற் கன்னியமாக உலகம் இருக்கையில் பிரஹ்மம் இரண்டாவதற்றதெனக் கூறல் எவ்வாறு பொருந்தும்?

 

குரு: - பிரபஞ்சம் இருப்பதாகக் காணப்படினும் அது மித்தியா மாத்திரமாகவுள்ளதே யன்றி அது ஒரு உண்மைப் பொருளன்று. ஆகலின் பரமாத்மா அத்விதீயன் (இரண்டாவதற்றவன்). இங்ஙனம் இரண்டாவது பொருளில்லாமையின் விசேஷிக்கத் தக்கவனாகான். தான் மாத்திரமேயிருப்பவன்; நிர்க்குணன் என்று சுருதியும் கூறுகின்றது. ஆகலின் சச்சிதானந்தங்கள் குணங்களன்றாம். வெப்பமும் ஒளியும் நெருப்பிற்கு எங்ஙனம் சொரூபமோ அங்ஙனமே சச்சிதானந்தங்கள் ஆத்மாவிற்குச் சொரூபமென்று நிச்சயிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனக் கன்னியமாக வேறொரு பொருளில்லாமையானும் ஆனந்தாதிகள் குணங்களாக வின்றிச் சொரூபமாக விருத்தலானும் அத்விதீய பரமாத்மாவினிடத்து சஜாதீயம் விஜாதீயம் சுவகதம் என்னும் மூவகைப் பேதங்களுமில்லை.


சீடன்: - அஃதெங்ஙனம்?


குரு: - (பேதம் (1) சஜாதீயம், (2) விஜாதீயம், (3) சுவகதம் என மூன்று வகையாம்.

 

(1) சஜாதீய பேதம்: - ஒரே ஜாதியாயுள்ள வஸ்துக்களுள் ஒன்றற் கொன்றுள்ள பேதமாம். அது, ஒரு விருக்ஷத்திற்கும் மற்றொரு விருக்ஷத்திற்கு முள்ள பேதம் போல்வதாம்.

 

(2) விஜாதீய பேதம்: - வெவ்வேறு ஜாதியாயுள்ள வஸ்துக்களுள் ஒன்றற்கொன்றுள்ள பேதமாம். அது, விருக்ஷத்திற்கும் கல் முதலியவற்றிற்கு முள்ள பேதம் போல்வதாம்.

(3) சுவகத பேதம்: - ஒரு பொருளின் பல பாகங்களுள் ஒன்றற் கொன்றுள்ள பேதமாம். அது, விருக்ஷத்திற்கும் அதன் அவயவமாயுள்ள இலை பூ முதலியவற்றிற்கு முள்ள பேதம் போல்வதாம்.)

 

பரமாத்மாவினிடத் தாரோபிக்கப்பட்ட இப்பிரபஞ்சம் மித்தியா வடிவமாயுள்ளது என்று நிஷேதிப்பதினால் (பிரபஞ்சத்தின் அபவாதத்தால்) விஜாதீய பேதம் (பிரஹ்மத்திற்கு வேறான இலக்கணமுடைய பிரபஞ்சம் இருக்கின்றது எனக் கூறுதல்) நிராகரிக்கப்படும். பிரிய சீடனே! அதன் விவரத்தைக் கேட்பாயாக.

 

அபவாதம்.

 

பிரஹ்மம் ஒன்றே நித்தியம். அதற்கன்னியமாகக் காணப்படும் பிரபஞ்சம் மித்தையாகலின் அப்பிரஹ்மத்தினிடத்துக் கற்பிதமா யிருப்பதாம். அதின் வேறாக வில்லையாம் என்பதைச் சீடனுக் குணர்த்தும் பொருட்டு அபவாத யுக்தி கூறுகின்றார் ஆசிரியர்.

 

அத்தியாரோபமென்றும் அபவாதமென்றும் இரண்டு யுக்திகள் வேதாந்தத்திற் கூறப்படும். அத்தியாரோபம் ஆரோபம் அத்தியாசம் கற்பனை என்பன ஒரு பொருட் சொற்கள். இஃது ஒன்றை வேறொன்றாக வுணர்தலாம். அதாவது பழுதையைப் பாம்பென்றும் கட்டையைக் கள்ளனென்றும் கிளிஞ்சலை வெள்ளி யென்றும் உணர்தல் போல்வதாம். (இது முன்னர் கூறப்பட்டது.)

 

அபவாத யுக்தியாவது: - கற்பனையைத் தள்ளி உள்ள பொருளைக் காண்டலாம். அது, பாம்பன்று பழுதை; கள்ளனன்று கட்டை; வெள்ளியன்று கிளிஞ்சல் என்று உணர்தல் போல்வதாம். இவ்விரண்டில்

 

கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப வெல்லாம்

சொற்பனம் போல வெண்ணித் துணிந்தவன் ஞானி யாவான்

செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்தவா காயம் போல்

அற்புத முத்தி சேரு மபவாத வழியுங் கேளாய்.

 

என்று கைவல்ய நவநீதங் கூறுகிறபடி, அச்தியாசம் முன்னர் கூறப்பட்டமைவின் இங்கு இரண்டாவதாகிய அபவாதயுக்தி கூறுகின்றார்.

 

கயிற்றின் விவர்த்த (கற்பித) வடிவமாகிய பாம்பை (இது பாம்பன்று; உண்மையிற்) கயிறே என்று காண்பது போல, பரமாத்மாவின் விவர்த்தமாகிய பிரபஞ்சத்தைப் பரமாத்மாவாகவே காணுதல் அபவாதமாமெனப் பெரியோர் கூறுவர்.


(இதனை விளங்கக் கூறுகின்றார்.)

 

எல்லாவித ஜீவராசிகளின் தூல சரீரங்களையும் அவைகட்கு உணவுப் பொருள்களாக வள்ளவைகளையும் அவற்றிற் கிருப்பிடமாகவுள்ள பிரஹ்மாண்டத்தையும் பஞ்சீகரணம் செய்யப்பட்ட (பஞ்சீகரண விவரம் முன்னர் கூறப்பட்டது. ஞாபகப்படுத்திக்கொள்க. இன்றேல், முந்திய சஞ்சிகைகளைப் பார்த்தேனும் அறிக.) தூல பூதங்களின் வடிவமாகவே காணவேண்டும். ஏனெனின்:

 

எப்பொருள் எதனுடைய காரிய ரூபமாகக் காணப்படுகின்றதோ அப்பொருள் அக்காரண வஸ்துவ யாகும். (வேறாதலில்லை). மண்ணின் காரியமாகிய கடம் முதலியவை நன்கு விசாரிக்கு மிடத்து மண்ணைக் காட்டிலும் வேறாக இருப்பதில்லை. ஓர் குடத்தைச் சோதித்தால் உள்ளும் புறமும் மண்ணே காணப்படுகின்றது. ஆகலின் குடம் மண்ணைவிட வேறல. சொரூபத்தில் மண்ணையன்றி வேறாகவில்லாத வொன்றை குடம் சட்டி பானை முதவிய பெயர்களா வழைக்கின்றனர். விசாரிக்கு மிடத்து குடம் சட்டி பானை என்னும் சொற்களுக்கே பேதமன்றி, எல்லாம் மண்ணேயாகலின் வஸ்துவில் பேதமில்லை. ஆகவே எப்போதும் காரியம் தன் காரணத்தினும் பின்னமன்று. இவ்வாறே சகல பொருள்களும் எவ்வெப் பூதத்தாலுண்டாயினவோ அவை அப்பூதங்களை விட வேறானவை யன்று; (இதனால் முற்கூறிய சரீராதிகள் பஞ்சீகிருத பஞ்சமகா பூகங்களின் காரியமா யிருக்தலின் அவற்றிற்கு அன்னிய மன்று. அப்பூதங்களேயாம் என்பது பெறப்படுதல் காண்க.)

 

அந்த பஞ்சீகிருத (பஞ்சீகரணம் செய்யப்பட்ட) பூதங்களும் சூக்கும் சரீரங்களும் அபஞ்சீகிருத (பஞ்சீகரணம் செய்யப்படாத) சூக்கும் பூதங்களாலுண்டானவையாகலின் அவையனைத்தும் சூக்கும் பூதங்களேயாம். அந்த அபஞ்சீகிருத பூதங்களும் அவற்றின் சத்துவம் இராசதம் தாமதம் என்னும் மூன்று குணங்களும் சொரூபத்தினால் அவற்றிற்குக் காரணமாகிய பிரகிருதியேயாம். அதப் பிரகிருதியும் தனக்காதாரமாகிய பிரஹ்மமேயாம். (இவ்வாறு தோன்றின முறையை, ஒன்றிலொன்றை யொடுக்கிக் காண்டலே அபவாதமாம். இவ்வாரோப அபவாதங்களின் விரிவை நாநா ஜீவவாதக்கட்டளை என்னும் சிறுநூல் நன்குரைக்கும். வாசகர்களின் உபயோகத்திற்காக அதிலுள்ள அபவாதபாகத்தை மாத்திரம் சிறிது காட்டுவது பொருத்தமான தாகும். அது இது: -

 

''சகல ஜீவர்களிடத்திலு மிருக்கின்ற சரீரமனைத்தும் தமக்காதாரமான ஸ்தூல பூதங்களிலே மடிந்து (முன்னிலைமை விட்டு) பூதமாத்திரமாக வொடுங்கும்; இந்த ஸ்தூல பூதங்களும் பஞ்சீகரணம் (கலப்பு) விட்டுத் தன்மாத்திரையான (சூட்சுமமான) தமோகுண பூதங்களாக மிஞ்சும்; அப்போது கேவலம் இரணிய கர்ப்பாவஸ்தை (சூக்கும் பூதங்களாயிருக்கும் நிலை) என்று சொல்லப்படும். சூட்சும சரீர தத்துவ மிருபதுங் கட்டு (நிலை) விட்டுப் பூதங்களினுடைய சத்துவ குணமும் இரஜோ குணமுமாக வொடுங்கும். அஃதெங்ஙனமெனில்: -

 

சகலப்பிராணிகளிடத்திலுமிருக்கின்ற அகங்காரமும், ஆக்கிராணமும், உதானமும், உபத்தமும் பிருதிவியி லொடுங்கும்; சித்தமும், சிங்கவையும், சமானமும், பாயுருவும் அப்புவிலொடுங்கும்; புத்தியும், சட்சுவும், அபான னும், பாதமும் அக்கினியி லொடுங்கும்; மனமும், துவக்கும், பிராணனும், பாணியும் வாயுவிலொடுங்கும்; உள்ளமும், சுரோத்திரமும், வியானனும், வாக்கும் ஆகாசத்தி லொடுங்கும். அப்போது பழைய படியே முக்குண பூதங்களாம். இந்த சூட்சும பூதங்களும் பிருதிவி அப்புவிற் கரைந் தொடுங்கும்; அப்புவும் அக்கினியிற் சுவறி யொடுங்கும்; விளக்குப்போல அக்கினியும் வாயுவி லணைந்தொடுங்கும்; வாயுவும் ஆகாசத்தி லோய்ந்தொடுங்கும்; ஆவரணசாத்தியும் விட்சேப சத்தியும் மூலப்பிரகிருதியின் தமோகுண மாத்திரமாய் ஆலமரம் வித்தினொடுங்கினாற் போல் இன்னுமொரு சிருட்டிக்கு வித்தாகமாயையிலும் அவித்தையிலும் ஒடுங்கும்; அந்த மாயையும் அவித்தையும் அதிநுண்மையான (சூட்சுமமான) மூலப் பிரகிருதியென்று சொல்லப்படும் விந்து தத்துவத்தி லொடுங்கும். அந்த விந்துவும் பாம்பென்கின்ற பெயர் போய்ப் பழுதையாய்க் கண்டாற் போலத் தனக்கதிஷ்டானமான பிரஹ்ம சைதன்யமாத்திரமாக வொடுங்கும். இப்படிப் பொய்யெல்லாம் (தேகாதிப் பிரபஞ்சமெல்லாம்) மெய்ப்பொரு ளொன்றாகக் கண்டு அதுவே சுபாவ சித்தமாய் நிசமாக விருக்கின்ற தன் வடிவெனக் கண்டு தெளிந்து கவலை கெட்டிருக்கின்றவனே ஜீவன் முக்தன். இப்படித் தத்துவங்களின் ஒடுக்கஞ் சொல்லப்பட்டது.''

 

(இவ்வாறு எல்லாவற்றையும் ஒடுக்கிக்கண்டால் எஞ்சி நிற்பது பிரஹ்மம் ஒன்தேயாம்.)

 

புருஷனுக்குப் பார்வைத் தோஷத்தால் ஒன்றாகிய சந்திரன் இரண்டாகக் காணப்படுதல் போல, புத்தி தோஷத்தால் ஒரு பிரஹ்மமே அனேகமாகக் காணப்படுகின்றது. தோஷம் நீங்கின் ஏகவஸ்துவே பிரகாசிக்கும்; கயிற்றின் சொரூப ஞானத்தால் சர்ப்பமென்னும் புத்தி கயிற்றினிடத் தொடுங்குவது போல், பிரஹ்ம ஞானத்தால் ஜகம் என்னும் பாவம் பிராந்தியுடன் அப்பிரஹ்மத்தினிடத்தே லயமடைகின்றது. பிராந்தியாலுண்டான பேதபாவம் நீங்கினவுடனே எப்பொழுதும் இரண்டாவது பொருளில்லாததும் ஏகமா யிருப்பதுமாகிய சத்தேயுள்ளது. ஆதலால் நிர்விகற்பப் பிரஹ்மத்தினிடத்து விஜாதீய பேதமின்றாம்.

 

எப்பொழுது உபாதி யிருக்கிறதோ அப்பொழுது ஆத்மா அவ்வுபாதியினும் வேறாய் சஜாதீய முடையவன் போலப் பிரகாசிக்கிறான். அவ்வுபாதி சொப்பன பதார்த்தம் போல மித்தியா ரூபமாயிருத்தலின் அந்த உபாதி தோன்றாத போது ஆத்மாதானே பிரஹ்மத்தினிடத்து ஐக்கியத்தை யடைகிறான். வேறாகத் தோன்றுவதில்லை. ஆதலால் சஜாதீய பேதழமின்றம்.

 

கடமில்லாதபோது கடாகாசம் மகாகாசமாவது போல உபாதியில்லாதபோது ஆத்மா தானே பிரஹ்மமாகிறான். கடமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆகாசம் எப்போதும் பரிபூரணமாகவே யிருக்கும். எப்பொழுதும் பரிபூரணமாகவுள்ள பிரஹ்மத்திற்கு எதனால் பின்ன முண்டாகும்? பின்னப்படாத ஆகாசம் பாமரருக்குக் கடகாச முதலிய வடிவமாகப் பின்னப்பட்டதுபோல் தோன்றுகின்றது. பூமி, கிராமம், க்ஷேத்திரம் முதலானவைகளாகப்
 பின்னமாகத் தோன்றுதல் போல், பெரியவை யனைத்தினும் பெரியதானபரப்பிரஹ்மமும் பிராந்தியால் கற்பிக்கப்பட்ட வஸ்துவினால் பரிச்சின்னப்பட்டது போல் தோன்றுகின்றது. ஆதலால் ஜீவப் பிரஹ்மங்களுக்குப் பேதம் கற்பிக்கப்பட்டதேயன்றி வாஸ்தவமன்று. இது பற்றியே சுருதி பன்முறையும் ஐக்கியத்தையே பிரதிபாதிக்கின்றது.

 சுருதியானது ‘தத்துவமசி' என்னும் வாக்கியத்தினால் ஜீவப் பிரஹ்மைக்கியத்தை நிரூபிக்கின்றது. அந்த வாக்கியத்தில் தத்' பதார்த்தத்திற்கும், துவம்' பதார்த்தத்திற்கும் அபேதம் காட்டுவதற்குப் பிரத்தியட்சாதிகள் விரோதமா யிருத்தலின் லட்சியார்த்தத்திற்கே அபேதம் சித்திக்கும்.

 

சீடன்: - தேசிக மூர்த்தியே! 'தத், துவம்' என்னும் பதங்களுக்கு எத்தனை வித அர்த்தங்களுண்டு? இரண்டு பதங்களுக்கும் வாச்சியார்த்தம் எது? லட்சியார்த்தம் எது? வாச்சியார்த்தத்தில் அவ்விரோதம் எங்ஙனம் நீங்குகின்றது? இவ்வாக்கியத்தில் ஐக்கியம் கூறுதற்கு எவ்வித லட்சணம் அங்கீகரிக்கப்படுகின்றது? இவையனைத்தையும் கருணைகூர்ந்து நன்கு விளக்கியருள வேண்டும்.

 

'தத்துவம்' பத அர்த்தம்.

 

குரு: - அறிவுள்ள மாணவா! உன் தவம் பலித்தது. இந்த மகா வாக்கியத்தின் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரத்தினாலே சந்தேகமற்ற ஞானமுண்டாம். எதுவரையில் இவ்வர்த்தத்தை ஒருவன் நன்கு விசாரிக்கவில்லையோ அதுவரையில் அவனுக்கு ஜனன மரணமாகிய சம்சாரம் பெருகிக் கொண்டே யிருக்கும். 'தத்துவமசி' என்னும் வாக்கியார்த்தத்தின் அபரோக்ஷே ஞானத்தால் ('பிரத்தியேகாத்மா உண்'டென்றெண்ணுதல் பரோக்ஷ ஞானம் நான் பிரத்தியேகாத்மா' வென்று தன்னைப் பிரத்தியேகாத்மாவாக வறிதல் அபரோக்ஷ ஞானமாம். கடம் உண்டென்றறிதல் பரோக்ஷமும், இது கடம் என்றறிதல் அபரேக்ஷமுமாம் என்றறிக.) சத்புருஷர்களுக்கு மோக்ஷம் சித்திக்கின்றது. ஆகையால் முக்தியை விரும்பினவனுக்குப் பந்த விடுதலைக்கான மகாவாக்கியார்த்தமே தெரிந்து கொள்ளத் தக்கதாம். ஆதலால் ஏகாக்கிர சித்தத்துடன் கேள்.

 

பண்டிதோத்தமர்களால் மகாவாக்கியங்களுக்கு வாச்சியம், லட்சியம் முதலிய பேதங்களாக அனேக அர்த்தங்கள் சொல்லப்பட்டன. அவற்றைக் கேள்

.

(இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களிலுமுள்ள மகா வாக்கியங்கள் நான்கு. அவை பிரஞ்ஞானம் பிரமம், அகம்பிர்மாஸ்மி தத்துவமசி, அயமாத்மாப் பிரமம் என்பவையாம். அவற்றுள்,


 "சுயமதுவாந் தத்வமசி யென்னும் வாக்யம்
 சொல்லுமுப தேசமகா வாக்ய மாகும்
 இயலுமகம் பிரமாஸ்மி யென்னும் வாக்யம்
 இலகுமனு பூதிமகா வாக்ய மாகும்
 அயல்மருவாப் பிர்ஞ்ஞானம் பிரம வாக்யம்
 மனனத்தி னப்யாச வாக்ய மாகும்
 அயமான்மாப் பிரமமென வறையும் வாக்யம்
 அதற்கெல்லாம் சம்மதமாம் வாக்ய மாமே.

 

என்று ரிபுகீதை கூறுகிறபடி, தத்துவமசி மகாவாக்கியம் உபதேச வாக்கியமாயிருத்தலின் அதன் அர்த்தமே எல்லா நூல்களினும் உரைக்கப்படுமென்றறிக.)

 

வாச்சியார்த்தம்.

 

அர்த்தம் வாச்சிய மென்றும் லட்சிய மென்றும் இரண்டு விதமாகக் கூறப்படுகின்றது, அவற்றுள் முதலில் வாச்சியார்த்தத்தைக் கூறுகிறேன் கேள்.

 

ஓர் சொல்லிற்கு (சப்தத்திற்கு) அதன் அர்த்தத்தோடுள்ள சம்பந்தம் சப்தத்தின் விருத்தி எனப்படும். அந்த விருத்தி சக்தி, லட்சணை என்னும் பேதத்தால் இருவகையாம். சப்தத்திற்கும் அதன் அர்த்தத்திற்கும் உள்ள நேரான சம்பந்தம் சக்தி விருத்தியாம். அச்சக்தி விருத்தியினா லறியப்படுவது வாச்சியார்த்தமாம். அந்த வாச்சியார்த்தத்தின் சம்பந்த மெதுவோ அது லட்சணா விருத்தி எனப்படும். அந்த லட்சணா விருத்தியினா லறியப்படுவது லட்சியார்த்தமாம்.

 

(விரிவஞ்சிச் சுருங்கக் கூறப்பட்டது. மேல் வருவனவற்றை ஊன்றி நோக்கின் எளிதிற் புலனாம்.)

 

'நீலோற்பலம்' என்னுமிடத்து நீலம் என்னும் பதத்தின் அர்த்தத்திற்கும் உற்பலம் என்னும் பதத்தின் அர்த்தத்திற்கும் வாச்சியார்த்தம் பொருத்த முடையதா யிருக்கின்றது. அதுபோலத் தத்துவமசி' என்பதில் வாச்சியார்த்தம் பொருந்துவதில்லை. நீலோற்பலம் என்னுமிடத்து நீல சப்தத்திற்கும் உற்பல சப்தத்திற்கும் விசேஷண விசேஷிய பாவ சம்பந்த மிருக்கின்றது. (ஒன்றைப் பிறவற்றினின்றும் பிரித்தறிவிப்பதற் கேதுவாயிருப்பது விசேஷண மெனப்படும். விசேஷணத்தினாற் பிரித்தறிவிக்கப்பட்டது விசேஷிய மெனப்படும் என்றறிக.) எங்ஙனமெனின்:

 

நீல சப்தத்திற்கு உற்பல சப்தத்தை விசேஷணமாக்கினால் நீல நிறமுடைய வேறு வஸ்துக்களைப் பிரித்து 'உற்பல நீலம் 'என்றறிவிக்கின்றது. உற்பல சப்தத்திற்கு நீல சப்தத்தை விசேஷணமாக்கினால் வெண்மை முதலிய நிறங்கள் நீக்கப்பட்டு 'நீலமாகிய உற்பலம்' என்றறிவிக்கின்றது. இவ்வாறு விசேஷண விசேஷிய பாவ சம்பந்தம் பொருத்தமா யிருத்தலின் எவ்வித பிரமாணத்திற்கும் விரோதமின்று. ஆதலால் நீலோற்பலம் என்னுமிடத்து வாச்சியார்த்தம் பாதிக்கப்படாமல் நன்கு பொருந்தி யிருக்கின்றது. அதுபோலத் 'தத்துவமசி' என்னுமிடத்து வாச்சியார்த்தம் பொருந்துவதின்று. ஏன்? எனின்; பிரத்தியக்ஷாதி விரோதமுண்டு. அது யாதெனில்.

 

(தத்துவமசி என்பதற்கு அது நீயா யிருக்கிறாய்' என்பது பொருளாம். தத் = அது, துவம் = நீ, அசி = இருக்கிறாய், அது என்பது பிரஹ்மம், நீ என்பது ஜீவன், அசி என்பது ஐக்கியம்)

 

'தத்' பதத்திற்கு வாச்சியார்த்தம் சர்வேசுவரத்துவம், சர்வஞ்ஞத்துவம், சுவதந்திரத்துவம் முதலான குணங்களால் சர்வோத்தமனும், சத்திய காமனும், சத்திய சங்கற்பனுமாகிய ஈசுவரனாம். 'துவம்' பதத்திற்கு வாச்சியார்த்தம் கிஞ்சிஞ்ஞனும், துக்கஜீவிதனும், பந்தத்திற் கட்டுண்டவனும், ஈசுவரனையே கதியாக வுடையவனும், பிரகிருதி சம்பந்த லட்சணமுடையவனுமாகிய ஜீவனாம்.

 

இவ்வாறு ஜீவேசுரர்களுக்கு விரோதம் பிரத்தியட்சமாகக் காணப்படுகின்றது. ஒன்றற் கொன்று விருத்த (விரோத) லட்சணமுடைய ஜீவேசுவரர்களுக்கு ஐக்கியம் எவ்வாறு பொருந்தும்? இத்தகைய விரோத லட்சணமுள்ள இருவரும் ஒன்றெனச் சொல்லுவது நெருப்புக் குளிர்ந்திருக்கிறது என்பதை யொக்கும். பிரத்தியட்சாதிகள் விரோதிக்கிறதென்று ஐக்கியம் கூறாது விடுவோமெனின் சுருதி விரோத முண்டாகும். பிரஹ்மத்திற்கு அன்னியமாக உலகமாயினும் ஜீவனாயினும் இல்லையாகலின் ஐக்கியமே சுருதி சம்மதமாம். சுருதிக்கு விரோத முண்டாகாதபடி கூறவேண்டுமாயின் அபேதமே கூறல் வேண்டும். அபேதங் கூறின் பிரத்தியக்ஷாதிகளுக்கு விரோதம் நேரிடுகின்றது. எங்ஙனஞ் சொல்வது? இதற்கொரு வழியுண்டு, அதனைக் கூறுகிறேன், கேள்.

 

விரோத பாகங்களை நீக்கி அவிரோத அம்சங்களைக் கிரகிக்கின் பிரத்தியக்ஷாதிகளும் பாதிக்கமாட்டா. சுருதி விரோதமு முண்டாகாது.

 

லட்சியார்த்த நிருபணம்.

 
சீடன்: - விரோத பாகங்களெவை? அவற்றை விடுவ தெங்ஙனம்?

 

குரு: - பிரிய சீடனே! வாச்சியார்த்தம் சித்திப்பதற்காக லட்சணை அங்கீகரிக்கப்படும். ஏனெனில், வாச்சியார்த்தத்தினால் இஷ்டார்த்தம் சித்திக்காவிடத்து லட்சணையைக் கொண்டு இஷ்டார்த்தத்தை யடைதல் வேண்டும், எனப் பெரியோர் கூறுவர்.
 

அந்த லட்சணை ஜஹதீலட்சணை, அஜஹதீலட்சணை, ஜஹத்ஜஹதீலட்சணை (பாகத்தியாக லட்சணை) என மூவகையாம். இவை முறையே விட்ட லக்கணை, விடாத லக்கணை, விட்டு விடாத லக்கணை எனவும் கூறப்படும். லட்சணை தமிழிலக்கணத்தில் ஆகு பெயர் எனப்படுகின்றது. ஆகவே இம்மூன்று லட்சணைகளும் விட்ட வாகு பெயர், விடாத வாகு பெயர், விட்டு விடாத ஆகு பெயர், எனத் தமிழிலக்கணங் கூறும்.)

 

(1) ஜஹதீ லட்சணை: - (வாச்சியார்த்தம் முழுதும் விடப்பட்டு அதன் சம்பந்தம் அங்கீகரிக்கப்படின் அது ஜஹதீ லட்சணையாம்.)

 

'கங்கையில் இடைச்சேரி' என்னுமிடத்து இந்த லட்சணை அங்கீகரிக்கப்படுகின்றது. அதுபோலத் தத்துவமசி' வாக்கியத்தில் பொருந்தாது. எவ்வாறெனின்:

 

கங்கைக்கும் இடைச் சேரிக்கும் ஆதார ஆதேய பாவம் கூறப்பட்டது. இந்த வாக்கியத்தில் வாச்சியார்த்தம் முழுவதும் விரோதமுடையதாகின்றது. ஆகையால் கங்கையின் சம்பந்தமுடைய கரையினிடத்து லட்சணை பிரவர்த்திக்கின்றது. ஏனெனில் கங்கை என்னும் பதத்திற்குப் பிரவாகம் (நீர்ப் பெருக்கு) வாச்சியார்த்தம். பிரவாகத்தில் இடைச்சேரி (ஒர் ஊரின்) யின் இருப்பு சம்பவியாது. ஆதலின் கங்கையின் சம்பந்தமான கரையில் இடைச்சேரி என்று லட்சணையால் பொருள் கொள்ளப்படுகின்றது. இது மகா வாக்கியத்திறகுப் பொருந்தாது. ஏனெனில்: 'நீ பிரஹ்மமாயிருக்கிறாய், (தத்துவமசி) என்னுமிடத்து உனக்கும் பிரஹ்மத்திற்கும் கிஞ்சிஞ்ஞத்துவம் சர்வஞ்ஞத்துவம் முதலிய அமிசங்களில் மாத்திரமே விரோத மிருக்கின்றதன்றி, முழுவதிலும் விரோதமில்லை; இருவரிடத்துமுள்ள ஞானத்திற்கு விரோதமில்லை. ஆதலால் இங்கு வாச்சியார்த்தம் முழுவதையும் விட வேண்டிய அவசியமில்லை. மேல் பாகம் கடினமாயிருத்தலால் தேங்காய் முழுவதையும் விட்டிடலாமா?

 

'கங்கையில் இடைச் சேரி'என்பதில், கங்கை என்னும் பதம் பிரவாக ரூபமாகிய தன் அர்த்தத்தை விட்டுக் கரை யென்னும் அர்த்தத்தைக் கூறுவது போலத், 'தத்'' துவம்' என்னும் பதங்கள் வாச்சியார்த்தம் முழுவதையும் விட்டு வேறு அர்த்தத்தைக் கூறின் ஜஹதீ லட்சணை பொருந்துவதாகும். ஆனால் அப்பதங்கள் வாச்சியார்த்தம் முழுவதையும் விட்டு லட்சியார்த்தத்தைப் பொருந்தா. ஆதலின், மகாவாக்கியத்தில் ஐஹதீ லட்சணை
உபயோகமாதலில்லை.

 

(2) அஜஹதீ லட்சணை: - மதத்தின் வாச்சியார்த்தத்தை விடாமலே அதன் சம்பந்தம் அங்கீகரிக்கப்படின் அது அஜஹதீ லட்சணையாம்.

 

"சிவப்பு ஓடுகிறது' என்னுமிடத்து இந்த லட்சணை அங்கீகரிக்கப்படுகின்றது. அதுபோல, தத்துவமசி மகாவாக்கியத்தில் பொருந்தாது.

 

'சிவப்பு ஓடுகிறது' என்பதில் சிவப்பு என்பது ஒரு குணத்தின் பெயராம். குணம் எப்பொழுதும் ஒரு பொருளைச் சேர்ந்திருப்பதே யன்றி தனித்திருப்பதன்று. ஆகவே, சிவப்பு என்னும் குணம் ஓடுகிறது என்பது அசம்பவம். அதனால் இந்த வாக்கியத்தில் அஜஹதீ லட்சணையால் சிவப்பு நிறமுடைய ஓர் மிருகம் ஓடுகிறது எனப்பொருள் கொள்ள வேண்டும். இதில்சிவப்பு என்பதின் வாச்சியார்த்தம் விடப்படாமலே மிருகரூபமாகிய லட்சியார்த்தம் கிரகிக்கப்படுகிறது. ஆகலின் இங்கு அஜஹதீ லட்சணை கிரகிக்கப் படுகின்றது. இது மகாவாக்கியத்தில் பொருந்தாது. ஏனெனின்,

 

எதனால் ஜீவப்பிரஹ்ம ஐக்கியத்தைப் போதிக்கும் தத்துவமசி மகாவாக்கியத்தில் ஜீவப்பிரஹ்மங்களின் சைதன்யங்க ளிரண்டிற்கும் பரோக்ஷத்தன்மை அபரோக்ஷத் தன்மை முதலான விரோதாமிசங்களை விடாமல் ஐக்கிய ரூபமாகிய வாக்கியார்த்தம் சித்திப்பதில்லையோ அதனால் அஜஹதீலட்சணை அங்கீகரிக்கப்படாது.

 

(3) ஜஹதஜஹதீ லட்சணை: - விரோத பாகத்தை விட்டு விரோத மில்லாத பாகத்தைக் கிரகிக்கும் பொழுது அது ஜஹதஜஹதீ லட்சணையாம்.

 

'அந்த தேவதத்தன் இந்த தேவதத்தன்' என்று ஒருவன் சொல்லுகிறான். ஒருவன் முன்பு ஒரு காலத்தில் ஒரு தேசத்தில் தேவதத்தன் என்பவனைப் பார்த்தான். அவனே பின்பு வேறொரு தேசத்தில் அந்த தேவதத்தனையே பார்த்து அந்த தேவதத்தனே இந்த தேவதத்தன் என்கிறான். அவன் முன்னர் பார்த்தது ஒரு தேசம்; இப்பொழுது பார்த்தது வேறொருதேசம். அது ஒருகாலம்; இது வேறுகாலம். அப்பொழுது ஒரு வேஷம்; இது வேறு வேஷம். ஆகையால் 'அவனே இவன்' என்பதற்குத் தேசம் காலம் முதலியவை விரோதமாகும். அதனால் இந்த பாகத்தியாக லட்சணையால் விரோத பாகமாகிய தேசகாலாதிகளை விட்டு விரோதமில்லாத பாகமாகிய தேவதத்தனுடைய தேகத்தை மாத்திரம் கிரகித்து முன்பு பார்த்த அந்த தேவதத்தன் இந்த தேவதத்தன் என்று ஐக்கியம் கொள்ளப் படுகின்றது. அதுபோல,

 

'தத்துவமசி' என்னு மிடத்தில் வாக்கியமாயினும் வாக்கியார்த்த மாயினும் பரோட்சத் தன்மை அபரோட்சத் தன்மை முதலிய தர்மங்களோடு கூடிய இரண்டு சைதன்யங்களுக்கும் உண்டாகிய ஏகத்வரூப மாகிய வாக்கியார்த்தத்திற்கு விரோதமாக வுள்ளதும் பரோட்சத் தன்மை அபரோட்சத்தன்மை சர்வஞ்ஞத்துவம் கிஞ்ஞத்துவம் முதலாகிய ரூபமாக வுள்ளதும் புத்தி முதல் தூலம் வரைக்கும் உள்ளதும் அவித்தியாசம் பந்தமானதும் அநாத்ம வடிவமான துமான பாகத்தை விட்டு விரோத மில்லாததும் சுத்தசைதன்ய வடிவமும் கேவலம் சத்ரூபமான துமாகிய வஸ்துவை இந்த லட்சணையால் நன்கு போதிக்கின்றது.

 

அகண்டார்த்தம்.

 

சகலவித உபாதிகளாலும் விடப்பட்டதும் சச்சிதானந்த வடிவமும் இரண்டாவதற்றதும் பேதமற்றதும் ஆபாசமில்லாததும் அத்தகையது இத்தகையது எனச் சொல்லப்படாததும் ஆதியந்த மற்றதும் அனவச் சின்னமும் ஊகிக்கத் தகாததும் தெரிந்து கொள்ளச் சாத்தியமாகாததும் நிர்க்குணமுமாகிய பிரஹ்மம் சேஷிக்கின்றது. (மிஞ்சுகின்றது.)

 

(பேதம் முதலாகிய லட்சணங்கள் அனைத்தும் உபாதியால் உண்டானவை யாகலின் அந்த உபாதிகளை நீக்குவதனால் சொல்லப்பட்ட லட்சணங்களுள்ள நிர்க்குணப் பிரஹ்மம் மிஞ்சுகின்றது.)

 

ஜீவப்பிரஹ்மங்களுக்கு விரோதம் உபாதியால் கூடியிருத்தலால் வந்தது. ஒன்றாகக் கிரகிப்பதனால் உபாதி சகிதத்தன்மை நீங்குவதனால் ஜீவப்பிரஹ்மங்களுக்கு யாதொரு விரோதமுமில்லை. ஜீவேசுவரர்களுக்கு மாயை அவித்தை வடிவ உபாதியும் அவ்வுபாதியோடு கூடியிருத்தலும் அவ்வுபாதியின் தர்மங்களை யடைதலும் பரஸ்பர பேதமும் சாக்கிராவத்தையில் காணப்படும். ஆகையால் இவையனைத்தும் மித்தையே. நித்திரை முதலிய அவஸ்தா பேதமும், ஜன்மம், சரீரதர்மங்கள், சுகதுக்கங்கள் முதலிய பிரபஞ்சங்களும், ஜீவேசுவராதி பேதங்களும் ஆகிய இவையனைத்தும் அவித்தியா கற்பிதமாம். ஆகலின் இதனைச் சாத்தியமெனச் சாதித்தலியையாது. இன்னும் மாயையாற் கற்பிதமாகிய தேசம் காலம் ஜகம் முதலிய பிரமைகளும் இத்தகையனவே. இவ்விரண்டிற்கும் என்ன பேதமிருக்கின்றது? இதில் எது சத்தியம் எது அசத்தியம்? கண்ட வஸ்துக்களையே காண்டல் முதலிய பிராந்தி கற்பிதங்களாகிய விகற்பங்களினால் சொப்பனாவத்தைக்கும் சாக்கிராவத்தைக்கும் எவ்விதபேதமும் காணப்படாது. ஆகலின் சொப்பனம் எங்ஙனம் மித்தையோ அங்ஙனமே சாக்கிராவத்தையும் மித்தையேயாம். சொப்பனம் சாக்கிரம் என்னு மிவ்விரண்டும் அவித்தியா காரியங்களே. இவ்விரண்டிலும் திரிசியம் முதலிய கற்பனைகள் சமானமாகவே யிருக்கின்றன. ஆகலின் இவ்விரண்டும் சமானமே. இதுவு மன்றி, நித்திராவத்தை (சுழுப்தி) யில் சாக்கிர சொப்பனங்க ளிரண்டும் அபாவமாகின்றன (இல்லாமல் போகின்றன). ஆகலின், இவ்விரண்டிற்கும் எவ்வித பேதமுமில்லை. அதனால் இவ்விரண்டும் மித்தையே. பிரஹ்மத்தினிடத்தில் சஜாதீயம் விஜாதீயம் சுவகதம்என்னும் பேதம் பிராந்தி கற்பிதமேயன்றி வாஸ்தவத்தில் முக்காலத்துமில்லை. எதனால் பேதம் கற்பித மாத்திரமோ அதனால் சத்ரூபமும் இரண்டாவதில்லாததும் விகற்ப மில்லாததும் உபாதி யில்லாததும் நிர்மலமானதும் நிரந்தர ஆனந்தமே வடிவாக உள்ளதும் சங்கற்ப மற்றதும் ஆதார மற்றதுமாகிய பிரஹ்மம் ஏகமேயாகும். எந்த பிரஹ்மம் தன்மாத்திரமாயும் பரமசாந்த சொரூபமாயும் அனவச் சின்னமாயும் ஆனந்தமாத்திரமாயும் சன்மாத்திரமாயும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதோ அத்தகைய பிரஹ்மத்தினிடத்து எவ்வித பேதமும் இல்லவேயில்லை. குணங்கள் காணப்படுவது மில்லை. வாக்கு பிரவர்த்திப்பதுமில்லை. மனம் பிரவர்த்திப்பது மில்லை. இந்த நிரதிசயமும் சத்தியமும் சச்சிதானந்த வடிவமும் சாஸ்வதமுமாகிய எந்த பிரஹ்மம் உளதோ அந்த பிரஹ்மமே நீ. அன்பனே! நீ தேகமன்று, பிராணமன்று, இந்திரியசமுதாயமன்று, மனமன்று, புத்தியன்று, அகங்கார மன்று, இவற்றின் சங்காதமு மன்று. வேறுயாரெனின்? இவற்றிற்குச் சாட்சி மாத்திரமாய்க் காணப்படும் நிர்மலமாகிய எந்தப் பிரஹ்ம முண்டோ அந்தப் பரப்பிரஹ்மமே நீ.

 

எந்த வஸ்து பிறக்கிறதோ அந்த வஸ்துவே வளர்கிறது. அதுவே காலத்தில் மரணமடைகிறது. நித்தியனும் வியாபகனும் உற்பத்தி யில்லாதவனுமாகிய உனக்கு ஜனனமில்லை. அப்படியே மரணமுமில்லை. உன்தேகமே பிறந்தது. அதுவே விருத்தியடைகிறது. கர்ம வசத்தால் நசிக்கிறது. நீ இந்த தேக சம்பந்தங்களாகிய எல்லா அவஸ்தைகளிலும் சாட்சிமாத்திரமா யிருக்கிறாய். ஞான சொரூபியா யிருக்கிறாய். தனக்குத் தானே பிரகாசிப்பதும் சர்வவடிவானதும் சுழுத்தி வரைக்கும் நான் நான் என்று எப்பொழுதும் ஏககூடிவாய் பிரகாசிப்பதும் புத்தியையும் சகல விகாரங்களையும் தெரிந்து கொள்ளுவதுமாய் நிர்விகாரமாகிய எந்தப் பிரஹ்ம முளதோஅந்தப் பிரஹ்மமே நீ.

 

எந்த பிரஹ்மம் மறைதலில்லாத ஞானவடிவமாகிய தன்னிடத்தில் கற்பிக்கப்பட்ட ஆகாசம் முதலிய சகல பிரபஞ்சங்களுக்கும் ஆதாரமாயிருக்கின்றதோ, பிரத்தியட்சமாய்த் தன் பிரகாசத்தினால் பிரகாசத்தைப் பரப்புகின்றதோ, கேவலம் ஞானரூபமாகிய அந்தப் பிரஹ்மமே நீ. சமாதி நிஷ்டர்களாகிய பரமஹம்சர்களால் நிர்மலமாகிய தங்கள் அந்தக்கரணங்களி னிடத்து அளவற்ற ஆனந்தமாகிய நிஜவடிவத்தைப் பிரத்தியட்சமாய்ப் பார்த்து எப்பொழுதும் நன்றாய் ஆனந்தமடையப் படுகின்றதோ, கேவலம் ஞானமந்திர ரூபமாகிய அந்தப் பிரஹ்மமே நீ. எந்தப் பிரஹ்மம் தான் உள்ளும் புறமும் அகண்டமாய் ஏகரூபமாகிப் பிரகாசிப்ப தாகுமோ, மூடசித்தர்களுக்கு மித்தியா பதார்த்தமாய்க் காணப்படுகின்றதோ, தனக்குத்தானே பிரகாசிப்பதோ, இத்தகைத் தென்று இயம்பக் கூடாததோ அத்தகைய பிரஹ்மமே நீ. சுருதிகளால் சொல்லப்பட்டதும் நாசமில்லாததும் (தான் எல்லாவற்றிற்கும் ஆசிரயமா யிருப்பதே யன்றி, தான் பிறி தொன்றை ஆசிரயித்திருப்ப தன்றாகலின்) நிராசிரியமானதும் பிரமாணங்களால் அறியப்படாததும் சச்சிதானந்த வடிவமானதும் அத்துவைத வஸ்துவான துமான எந்தப் பிரஹ்மமுள்ளதோ அந்தப் பிரஹ்மமே நீ.

நற்சீடனே! உன்னிடத்தில் சரீரமும் அதன் தர்மங்களும் ஆரோபமாகப் பிராந்தியால் தோற்றுவதன்றி உண்மையில் அவை சிறிதும் இல்லை. ஆதலால் நீ உற்பத்தியில்லாதவன்; ஆகையால் உனக்கு மரண பயமின்றாம்; அதனால் நீ பரிபூரணனா யிருக்கிறாய். நீ பிராந்தியோடு கூடிய பார்வையால் எந்தெந்த வஸ்துவைப் பார்க்கிறாயோ அந்தந்த வஸ்துவை (பிராந்தியை நீக்கி) தத்துவ ஞான திருஷ்டியால் பார்த்தால் அவ்வெல்லாப் பொருள்களும் நீயாகவே யிருக்கிறாய். உலகத்தில் உனக்கன்னியமாக வேறொரு சிறிதுமில்லை. இரண்டாவதல்லாத உனக்கு யாரால் பயம் நேரிடும். 'காணப்படும் இவையனைத்தும் நானே' என்று எல்லாவற்றையும் தன் வடிவமாகவே பார்க்கும் ஞானிக்கு எதனால் பயமுண்டாகும்? ஒன்றானு முண்டாகாது. ஆகையால் நீ பயமில்லாததும் நித்தியமானதும் ஆனந்த வடிவினதும் நிஷ்களமானதும் கிரியை யில்லாததும் சாந்தவடிவினதும் எப்பொழுதும் நாசமற்றதுமாயுள்ள பிரஹ்மமே யாகிறாய். நீ தெரிந்து கொள்ளுகிறவனும் (காண்பான் அல்லது ஞாதுரு) தெரிந்து கொள்ளத் தக்க வஸ்துவும் (காட்சிப் பொருள் அல்லது ஞேயம்), தெரிந்து கொள்ளும் ஞானமும் (காட்சி ஞானம்) (இவை திரிபுடி எனப்படும்.) இல்லாததும், தெரிந்து கொள்பவனைக் காட்டினும் பின்னமாகாததும் சித்வடிவமானதும் அகண்டமாயுள்ள துமாகிய பிரஹ்மமே யாகிறாய். எது எல்லாப் பொருள்களாயும் அவற்றிற்கு வேறானதாயும் 'இதுவல்ல இதுவல்ல' வென்று எல்லாவற்றையும் நேதி செய்யுங்காலத்து நீக்க முடியாமல் முடிவில் எஞ்சி நிற்பதாயு மள்ளதோ அந்த சத்திய சாஸ்வத ஏகஅனந்த சுத்தபுத்த சொரூபமாயிருக்கிறாய். சத்தியம் ஆனந்தம் அகண்டம் நிர்க்குணம் நிஷ்கிரியம் நிர்விகாரம் பிரத்தியக பின்னம் (அந்தராத்மாவினும் வேறாகாதது) பரம் நிர்மலம் ஞானரூபம் முதலியவற்றைச் சொரூபமாகவுடைய பிரஹ்ம சொரூபமே நீ யாகிறாய்.

 

'பிரஹ்மமே நான்; நானே நிர்க்குண நிர்விகார சொரூப பிரஹ்மம்' என்றிவ்வாறு பாவித்தலாகிய இடை விடாத அகண்டாகார விருத்தியால் கிரியையற்ற பிரஹ்மத்தில் நிலைத்திருப்பாயாக.

 

(விருத்தி என்பதற்குத் தொழில் என்பது பொருளாம். இது இங்கு மனத்தின் தொழிலைக் குறிக்கும். அந்த மனோவிருத்தி துவிதவிருத்தி சாட்சி விருத்தி அகண்டாகார விருத்தி எனப் பல திறப்படும். அவற்றுள்,

 

(1) தேகம் முதலானவற்றை'நான்'என்றால் துவி தவிருத்தியாம். இதுசாதாரணமாக அனைவரிடத்தும் உலக விவகார காலங்களில் நிகழ்வதாம்.

 

(2) மனதை உள் முகப் படுத்தி இத்தேகம் முதலியவை நானல்ல. இவ்வெல்லாவற்றையும் அவற்றின் காரியங்களையும் அறிந்து கொண்டிருக்கும் சாட்சியே நான் என்றறிதல் சாட்சி விருத்தியாம்.

 

(3) அங்ஙனம் சாட்சியாயுள்ள நான் பிரஹ்மத்தினும் பின்னமாகாமல் அகண்டமாய் விளங்கும் பிரஹ்மமே நான் எனப்பாவித்தல் அகண்டாகார விருத்தி யெனப்படும். இங்கும் திரிபுடி யுண்டாகலின் இவ்விருக்தியையும் தள்ளி பிரஹ்ம சொரூபமாகவே விளங்குதலே சாட்சாத்காரமாகிய நிஜ நிலையாம். இதனை,

தேக முதல் நானென்னல் துவித விர்த்தி
      திகழ் சாட்சி நானென்னல் சாட்சி விர்த்தி
ஏகபரம் நானென்னல் அகண்டவிர்த்தி
      இவ்விதமாம் விருத்திகளே தொன்று மின்றிச்
சோகமுறா சுத்தபர சொரூப வென்றே
      சுயஞ்சோதி வடிவாகச் சொலிக்கு மந்தோ


என்று ரிபுகீதை கூறுவதனாலுமுணர்க.)

 

உத்தம மாணவக! பேத பாவங்களனைத்தையும் தள்ளி உன்னிடத்தில் பரமானந்தத்தை உண்டாக்கும் இவ்வகண்டாகார விருத்தியினால் எஞ்சியுள்ள பிராரப்தத்தைக் (ஆயுட்காலத்தை) கழிப்பாயாக. ஓ வித்துவானே! பிரஹ்மானந்த ரசத்தை யனுபவிப்பதில் விருப்பங் கொண்ட சித்தத்துடனே சமாதி நிஷ்டையுடையவனாக யிருப்பாயாக.

 

சீடன்: - குருநாதா! இந்த அகண்டாகார விருத்தியானது மகா வாக்கியார்த்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் உண்டாய் விடுமா? சமாதி யாவதென்ன? அது எத்தனை வகைப்படும்? அதற்குச் சாதனம் யாது? சமாதி விக்கினங்களெவை? இவற்றை அடியேனுக்கு அறிவிக்கப் பிரார்த்திக்கிறேன்.

 

அதிகார நிருபணம்

 

குரு: - ஞானபுத்திரா! உத்தமர் மத்திமர் முதலாகச் சொல்லப்படும் பேதங்களால் அதிகாரிகள் பல திறப்படுவர். அவர்கள் புத்தி சக்திக்குத் தக்கபடி அகண்டாகார விருத்தியுண்டாகும். (உத்தமர்களுக்கு மகாவாக்கியத்தைக் கேட்டவளவிலும் ஏனையோர்க்கு அப்பியாச முதிர்ச்சி யினாலும் உண்டாம்)

 

சீடன்: - உத்தமாதிகாரிகள் யார்?

 

குரு: - எவன் பூர்வ ஜென்மத்திலேயே சிரத்தையோடும் பக்தியோடும் சத்கருமங்களைச் செய்து பரமேஸ்வரனைப் பூசித்து அவரனுக்கிரகம் பெற்றிருந்து இந்த ஜன்மத்தில் நித்தியா நித்திய வஸ்து விவேகம் தீவிரவைராக்கியம் சன்னியாசம் முதலிய சாதனங்களோடு கூடினவனா யிருக்கிறானோ அவனே உத்தமாதிகாரியாவன். இவனுக்குக் குருவானவர் அத்தியாரோப அபவாத யுக்திகளால் மகா வாக்கியத்தை உபதேசித்தவளவில் 'நான் பிரஹ்மம்' என்னும் அகண்டாகார விருத்தியுண்டாகிறது. சிதாபாசனோடு கூடின இந்த அண்டாகாரமாகிய சித்த விருத்தி தனக்கு பின்னமாகிய பரப்பிரஹ்மத்தையே விஷயமாக்கி ஆவரணம் என்னும் லட்சண முடைய தாய ஆத்மாவை யடைந்திருக்கும் அஞ்ஞானத்தை யழிக்கும். (இந்த அகண்டாகார விருத்தி ஆவர்ண வடிவ அஞ்ஞானத்தை அழிக்கு மென்பது அபிப்பிராயமாம்.)

 

நூல் முழுதும் எரிந்து போவதனால் அதன் காரியமாகிய ஆடையும் எரிந்து போவது போல அகண்டாகார விருத்தியினால் அஞ்ஞானம் நசித்தவளவில் அதன் காரியமனைத்தும் நசித்துப் போகும். ஜீவத்தன்மையும் அஞ்ஞான காரியமாகலின். அதுவும் நசிக்கும். எப்படி விளக்கின் ஒளியானது சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் சாமார்த்திய முடையதாகாதோ அப்படியே அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த சிதாபாசனுடைய சைதன்யம் சுயம் பிரகாசமாகிய பரப்பிரஹ்மத்தைப் பிரகாசிப்பிக்கும் வன்மை யுடையதாகாது. (பிம்பம் பிரஹ்ம சைதன்யம்; பிரதிபிம்பம் ஜீவ சைதன்யம்) இந்த ஜீவசைதன்யம் 'நானே பிரஹ்மம்' என்று அகண்டாகார விருத்தியினால் பாவித்தால் நடுப்பகலில் வெய்யிலில் வைக்கப்பட்ட விளக்கு ஒளி யிழப்பது போல சுயம் பிரகாசமாகிய பரப் பிரஹ்மத்தின் பிரகாசததினால் ஜீவ சைதன்யத்தின் உபாதி நசித்துத் தனக்குப் பிம்பமாகவுள்ள பரப்பிரஹ்மமே யாகின்றது. கண்ணாடி எதிரிலுள்ள பொழுது அதில் முகத்தின் பிரதி பிம்பம் காணப்படுகின்றது. அக்கண்ணாடியை எடுத்து விட்டால் அந்த பிரதி பிம்பம் முகமேயாகின்றது. அதுபோல, உபாதியுள்ள போது மாத்திரமே ஜீவ சைதன்யம் காணப்படும். உபாதி நசித்தவக்கணமே அது (ஜீவ சைதன்யம்) பரமாத்மா வாகின்றது.

 

கடாஞ் ஞானமுடைய (குடம் இன்னதென் றறியாத) வொருவன் தன் ஆப்தனுடைய வசனத்தால் குடம் இத்தகையதென்று கேட்டதும் அவன் சித்தத்தில் கடவடிவ விருத்தியுண்டாகும். அந்த விருத்தியால் கட சம்பந்த அஞ்ஞானம் நசிக்கும். அவ்வளவில் அந்தக் கரணத்தில் பிரதி பிம்பித்துள்ள சிதாகாசன் கடத்தைக் காணாமலே 'இது கடம்' என்று பிரகாசிக்கச் செய்வான். அவ்வாறு அந்த சிதாகாசன் சுயம் பிரகாசமாகவுள்ள பரப் பிரஹ்மத்தைப் பிரகாசிக்கச் செய்யமாட்டான். வஸ்து விஷயத்தில் விருத்தி வியாப்தி பல வியாப்தி என இருவகைப் பேதமுண்டு. இவற்றுள்

 

(1) விருத்தி வியாப்தியா வது: - வஸ்து இத்தகையதென்று மனோ விருத்தியாலறிதல்.

 

(2) பல வியாப்தியாவது: - கண்களாற் காணக் கூடியதாயும் ஸ்பரிசிக்கக் கூடியதாயுமுள்ள வஸ்துவையறிதல். இந்த பல வியாப்தி கடவிஷயத்தில் சம்பவிக்குமேயன்றி ஆத்ம விஷயத்தில் சம்பவியாது. ஆதலால் பிரஹ்மம் சூட்சும புத்தியாலறியப் படுவதாமென்று சுருதி கூறுகின்றது. மந்த புத்தயாதி விருத்தல் நிதித்தியாசனால தாரை போல் - யுடையவர்களுக்கு மனன நிதித்தியாசனங்களில்லாமல் மகாவாக்கிய சிரவணத்தால் மாத்திரம் அகண்டாகார விருத்தி யுண்டாகாது.

 

சிரவணாதி நிருபணம்.

 

சிரவணத்தினாலும் மனனத்தினாலும் எப்பொழுதும் தியானம் செய்வதனால் புத்தி ஏகாக்கிரத்தன்மை யடைகின்றது. அதனால் ஆத்ம சொரூபம் அறியப்படும். ஆகையால் மந்த புத்தியுடையோர் சிரவண மனனாதிகளைப் பல முறையும் செய்தல் வேண்டும்.

 

சீடன்: - சிரவணாதிகளின் லட்சணம் என்ன?

 

குரு: -

 

(1) சிரவணம் (கேட்டல்): - பிரஹ்மம் இரண்டாவதற்ற அத்துவைத வஸ்துவாம் எனக் கூறுவதே எல்லா வேத வாக்கியங்களின் அபிப்பிராயமாம் என்பதைப் பல யுக்திகளால் நிச்சயிப்பதே சிரவணமாம்.

 

(2) மனனம் (சிந்தித்தல்): - வேதாந்த வாக்கியங்களால் கேட்கப்பட்ட ஆத்ம சொரூபத்தை வேதாந்த வாக்கியங்களுக்குச் சாதகமான யுத்திகளால் சிந்திப்பதே மனனமாம்.

 

நிதித்தியாசனம் (தெளிதல்): - மகா வாக்கிய சிரவணத்தினால் ஆத்ம சொரூபம் இன்ன தன்மையின தென்றறிந்து, மனனத்தினால் திடமுண்டான பிறகு அதற்கு விஜாதீயமான தேகேந்திரியாதி சமஸ்காரங்களை விடுத்து ஸஜாதீயமான ஆத்ம விருத்தியை தைல தாரை போல் இடைவிடாது நிலைத் திருக்கச் செய்தலே நிதித்தியாசனமாம். (ஆத்ம சொரூபத்திற்கு சரீரேந்திரி யாதி விருத்திகள் விஜாதீய விருத்திக ளென்றும் ஆத்மாகார விருத்திக்கு அனுகுணமான விருத்திகள் ஸஜாதீய விருத்திகளென்றும் கூறப்படும்.)

 
சீடன்: - இச் சிரவணாதிகளை எதுவரையில் செய்யவேண்டும்.

 

குரு: - வேதாந்த வாக்கிய ரூபமான பிரமாணங்களினிடத்து சந்தேகம் நீங்கி நிச்சய புத்தி யுண்டாகும் வரையில் சிரவணம் அவசியமாம். எதுவரையில் பிரமேயமாகிய (பிரமாணத்தாலறியப்படுவது பிரமேயம்) ஆத்ம சொரூபத்தினிடத்தில் சந்தேக மிருக்கின்றதோ அதுவரையில் மனனம் அவசியமாம். (பிரமாணத்தினிடத்துள்ள சந்தேகம் பிரமாணகத சம்சயம்; இது சிரவணத்தால் நீங்கும். பிரமேயத்தினிடத்துள்ள சந்தேகம் பிரமேயாகத சம்சயம்; இது மனனத்தால் நீங்கும்) தர்க்க யுக்திகளால் பிரபஞ்சம் மித்தையென நிச்சயிப்பினும் பிரஹ்ம சுபரோக்ஷ சாக்ஷாத்கார முண்டாகும் வரையில் பிரபஞ்சம் தோற்றா திருப்பதின்று. ஆகலின் பிரஹ்மசுபரோக்ஷ சாக்ஷாத்கார முண்டாகி திருசியமாகிய பிரபஞ்சம் நசிக்கும் வரையில் நிதித் தியாசனமாகிய சமாதி அவசியமாம்.

 

சமாதி லட்சணம்.


சீடன்: - சுவாமி! சமாதியாவதென்ன?

 

குரு: - (விஷய வடிவமாகவுள்ள எல்லா விருத்திகளையும் விட்டு 'நானேபிரஹ்மம் பிரஹ்மமே நான்' என்று தன் நிஜ நிலையில் அசைவற்றிருத்தல் சமாதி எனப்படும்.) இந்தச் சமாதி சவிகற்ப சமாதி நிர்விகற்பசமாதி என இருவகைப்படும்.

 

(1) சவிகற்ப சமாதி: - ஞாதுரு ஞான ஞேயமென்னும் திரிபுடித்தோற்றத்தோடு அத்விதீயப் பிரஹ்மத்தில் அந்தக்கரணவிருத்தி நிலைத்திருத்தல் சவிகற்ப சமாதியாம். உதாரணமாக: - மண்ணினால் செய்யப்பட்ட பானையைக் கண்டு இது மண்ணேயென்றுணர்ந்த விடத்தும் மண் பானைகாணப்பட்டுக் கொண்டிருத்தல் போல, சவிகற்ப சமாதியில் சன்மாத்திரமாகிய ஆத்ம சொரூபம் காணப்படினும் சத்ரூபமாகிய திரிபடியும் காணப் பட்டுக்கொண்டிருக்கும்.

 

(சுத்த திரிபுடி யென்றும் அசுத்த திரிபுடி யென்றும் திரிபுடி இருவகைப்படும். தேகமே தான் என்பது அசுத்த ஞாதுரு (காண்பான்) அறிவே தானென்பது சுத்த ஞாதுரு; இந்த ஞாதுரு புத்தி விருத்தியோடு கூடி ஞானேந்திரிய வாயிலாகக் காணப்படும் பொருள்களில் இது விருப்புடையது, இது வெறுப்புடையது என்றறியின் அது அசுத்த ஞானம் (காட்சி). அவ்வசுத்த ஞானத்தைப் பொய்யென்றறிந்ததே சுத்த ஞானம். பூதங்கள் தடித்துப் பௌதிகங்களாய் எதிரே சப்தாதி விஷயங்களாகத் தோற்றுவது அசுத்த ஞேயம் (காணப்படும் பொருள்). சப்தாதி விஷயங்களைந்தும் சொரூபாகாரமாய்த் தோன்றுவது சுத்த ஞேயம். ஆகவே, இச்சவிகற்ப சமாதியிலுள்ள திரிபுடி சுத்த திரிபுடி என்றறிக.) இதனால்,

(அசுத்த திரிபுடி லயமாகி) சுத்த திரிபுடி லயமாகாமல் அத்துவிதீயப் பிரஹ்மத்தில் அந்தக்கரண விருத்தி நிலைத்திருப்பது சவிகற்ப சமாதியாம் என்றறிக.

 

(2) நிர்விகற்ப சமாதி: - காண்பான் முதலிய திரிபுடியை விட்டு மனமானது திடமாக காணப்படும் பொருளினிடத்து (ஞேயத்தில்) நிலைத்து நிற்றலே யோகமென்னும் பெயருடைய நிர்விகற்ப சமாதி யெனப்படும். உதாரணமாக, அப்பில் (நீரில்) போடப்பட்ட உப்பு வேறாகக் காணப்படாமல் நீராகவே காணப்படுதல் போல, பிரஹ்மாகாரத்தை யடைந்த விருத்தி பிரஹ்ம மாத்திரமாகவே யுள்ள தாய் வேறாகப் பிரகாசியாமல் அத்துவிதீய பிரஹ்மமாகவே விளங்கும். இதுவே நிர்விகற்ப சமாதியாம். ஞாதுரு முதலிய கற்பனைகளில்லாமையின் இது நிர்விகற்ப சமாதி எனப்படுகிறது. ஆகவே, சவிகற்ப சமாதிக்கும் நிர்விகற்ப சமாதிக்கும் பேதம் யாதெனின்: -

 

சித்த விருத்தி லயமாகாதிருப்பது சவிகற்ப மென்றும் லயமடைந்திருப்பது நிர்விகற்ப மென்று மறிக.

 

சீடன்: - சுவாமி! மனோவிருத்தி லயமடைவது சமாதி யென்றால் அதே நிலையினை யுடையதாகிய நித்திரைக்கும் இதற்கும் (சமாதிக்கும்) பேதமென்ன?

 

குரு: - சமாதியில் ஞானமிருக்கும்; நித்திரையில் அஞ்ஞானமிருக்கும். இதுவே பேதம். பிரிய சீடனே! பிரபஞ்சம் முதலிய விபரீத பாவங்கள் நிவிர்த்தியாகும் பொருட்டு மோக்ஷ விருப்புள்ளவன் இவ்விருவகைச் சமாதிகளையும் பிரயத்தின பூர்வகமாகச் செய்தல் வேண்டும். இச்சமாதியை அப்பியசிப்பதனால் ஆத்ம பாவத்திற்கு மாறான தேகேந்திரியாதி பாவம் நிவிர்த்தியாதலும், ஞானத்திற்குப் பிரதிபந்தமான ஆவரணம் நசித்து ஞானம் விளங்குதலும் பிரஹ்மானந்தமும் உண்டாம். இவையே சமாதியின் பலமாம். மேற்கூறிய சமாதிகளிரண்டனுள் முதலாவதாகிய சவிகற்ப சமாதியும் திருசியாநுவித்தம் சப்தாநுவித்தம் என இருவகைப்படும். இவற்றுள்,

 

(1) திருசியா துவித்த சலிகற்ப சமாதி: - திருசியங்களாகிய காமக்குரோதாதிகளுடன் சம்பந்தம் எதில் உண்டாயிருக்குமோ அது திருசியாது வித்த சமாதியாம். நான் எனது என்னும் காட்டக்குரோதாதி விருத்திகள் எவனால் பார்க்கப்படுமோ அகங்காராதிகளும் எந்த ஆத்மாவினால் பார்க்கப்படுமோ அவை திருசியங்களாம்.

நிஷ்கிரியனாகிய எந்த ஆத்மா அத்திருசியங்களைப் பார்க்கின்றானோ அத்தகைய தன்னை காமமாதிய சகல விருத்திகளுக்கும் திருஷ்டாவாகவும் நிர்விகாரனாயும் சாட்சி மாத்திரனாயும் அறிதல் வேண்டும். காமாதி விருத்திகள் என்னால் பார்க்கப்படுகின்றமையின் நான் அக்காமம் முசலிய விருத்திகளுக்கு சாட்சியாம் என்று தன்னைச் சாட்சி மாத்திரனாய்த் தெரிந்து கொண்டு திருசியமாகிய (பார்க்கப்படுகிற) காமம் முதலாகிய சகலமும் சாட்சி பூதனாகிய தன்னிடத்தே லயமாகும்படி செய்தல் வேண்டும்,

 

நான் தேகமன்று, பிராணமன்று, இந்திரிய வர்க்கமுமன்று, அகங்காரமன்று, மனமன்று, புத்தியன்று, தேகேந்திரியாதிகளுக்கும் அவற்றின்காரியங்களுக்கும் சாட்சி பூதனும் நித்தியனுமாகிய அந்தராத்மாவே நான். நான் வாக்கிந்திரியத்திற்கும் சாட்சி, பிராண சஞ்சாரத்திற்கும் சாட்சி, புத்திக்கும் சாட்சி, மனோ விருத்திக்கும் சாட்சி, கண் காது முதலிய இந்திரியங்களுக்கும் சாட்சி. ஆகலின் சாட்சி பூதனும் நித்தியனுமாகிய அந்தராத்மாவே நான். நான் தூலரூபனுமல்ல, நான் சூக்கும ரூபனுமல்ல. நான் பாலனுமல்ல, நான் வாலிபனுமல்ல, நான் விருத்தனுமல்ல, நான் குருடனுமல்ல, நான் ஊமையுமல்ல, நான் நபும்சகனுமல்ல, சாட்சிமாத்திரனும் நித்தியானுமாகிய அந்தராத்மாவே நான். நான் வருகிறவனுமல்ல, நான்போகிறவனுமல்ல, நான் கொல்லுகிறவனுமல்ல, நான் செய்கிறவனுமல்ல, நான் பிரயோகஞ் செய்கிறவனுமல்ல, நான் சொல்லுகிறவனுமல்ல, நான் புசிக்கிறவனுமல்ல, நான் சுகியுமல்ல, நான் துக்கியுமல்ல, சாட்சி மாத்திரனும் நித்தியனுமாகிய அந்தராத்மாவே நான். நான் கூடுகிறவனுமல்ல, நான் பிரிகிறவனுமல்ல, நான் காமியுமல்ல, நான் குரோதமுடையவனுமல்ல, நான் ராகமுடையவனுமல்ல, நான் லோபமுடையவனுமல்ல, நான் பந்தமுடையவனுமல்ல, நான் யோகமுடையவனுமல்ல, நான் முத்தனுமல்ல, சாட்சி பூதனும் நித்தியனுமாகிய அந்தராத்மாவே நான். நான் உள் பிரக்ஞையுடையவனுமல்ல, நான் வெளிப் பிரக்ஞை யுடையவனுமல்ல, பிரக்ஞையுடையவனுமல்ல, பிரக்ஞை யில்லாதவனுமல்ல. மேலும், நான் சிரவணம் செய்பவனுமல்ல, மனனம் செய்பவனுமல்ல, தெரிந்து கொள்பவனுமல்ல, ஞானரூபனும் சாட்சி மாத்திரனுமாகிய அந்தராத்மாவே நான். எனக்குத் தேகம் இந்திரியம் புத்தி இவற்றின் கூட்டுறவுமில்லை, எனக்குப் புண்ணியமுமில்லை, பாவமுமில்லை, பசி தாகம் முதலியவைகளில்லாதவனும் நித்தியமுக்தனும் சின்மாத்திரனுமாகிய அந்தராத்மாவே நான். நான் கால் கைகளில்லாதவன், நான் வாக்கில்லாதவன், கண்களில்லாதவன், பிராணனற்றவன், மனோரஹிதனும் புத்திரஹிதனுமாவேன். ஆகாசம் போல் நிறைந்திருப்பவனுமாவேன், நிர்மலனுமாவேன். எப்பொழுதும் ஒரே விதமாயிருப்பவன். கேவலம் சின்மாத்திரனே நான்.

 

உத்தம மாணவா! பண்டிதனானவன் இவ்வாறு தனது சொரூபத்தைக் காண்கிறவனாய் எப்பொழுதும் காணப்படுகிற திருசியத்தை லயமாக்கிக் கொண்டு, பிராந்தி வசத்தால் காணப்படும் சர்வ சித்தமான ஆத்மாவின் விபரீத பாவனையை விடுகிறான். இப்படி ஆத்மாவின் விபரீத பாவம் காணப்படாமையே முக்தியென்று மொழியப்படும். அந்த விபரீத ஆத்மபாவனை காணப்படாமை (ஆத்மாவின் நிஜ சொரூபம் காணப்படுதல்) சமாதி நிஷ்டாபரனுக்குச் சித்திக்குமின்றி அன்னியனுக்குச் சித்தியாது. மோக்ஷம் வேஷத்தாலும் பாஷையாலும் கிட்டாது. மோக்ஷ மென்றால் கேவலம் அகண்டமான சித்ரூபத்தோடிருத்தலாம். அது எய்தும் பொருட்டுமனிதன் தன் வடிவத்தையே பாவித்துக் கொண்டு, சரீரமே தானென்றேனும் சரீரம் தனதென்றேனும் எண்ணலாகாது. ஆத்ம சொரூபத்தைப் பாவித்துக் கொண்டு அவித்தையை நசிக்கச் செய்தல் வேண்டும். அதனாலேயே முக்தனாவனன்றி வேறோராற்றால் எத்தனைக் கர்மங்களினாலும் முக்தி யடையமாட்டான். அந்தராத்மாவைத் தெரிந்து கொண்டால் எல்லாப் பந்தங்களும் நசிக்கும். 'கிலேசங்கள் நசித்தால் ஜனன மரணங்கள் நசிக்கும் என்று வேதம் கூறுகின்றது. மோட்சமென்பது பிறவியில்லாமையே யாகும். பிறவியில்லாமை எதனால் உண்டாகுமெனின்: கிலேசம் நசித்தால் தான் உண்டாகும். கிலேசம் எங்ஙனம் நசிக்குமெனின்: அதற்கு ஆத்ம நிஷ்டையே காரணம். ஆகையால் முமுட்சுவானவன் (மோட்ச விருப்புள்ளவன்) ஆத்ம சொரூபத்தையே பாவித்துக் கொண்டிருத்தல் வேண்டும்.

 

பிரபஞ்ச வாசனைகளே கிலேசங்க ளெனப்படும். அவையே பிராணிகளின் ஜன்மாதிகளுக்குக் காரணமாம். அவற்றை ஞான திஷ்டை பென்னும் அக்கினியால் எரித்தால் அவற்றில் பிறப்புண்டாகுந் தன்மை யுண்டாகாது. அக்கினியால் சுடப்பட்ட விதைகள் மீண்டும் முளைத்தலில்லை; அப்படியே ஞானக்கினியால் வாசனைகள் தகிக்கப்படுவதனால் அவ்வாசனை மறுபடியும் ஆத்மாவோடு சேர்ந்து புனர் ஜன்மத்தை யுண்டாக்கமாட்டா. ஆகையால் முமுட்சுவானவன் வாசனைகள் முழுவதும் நசிப்பதற்கும் ஆத்ம சொரூபத்தின் விபரீத பாவங்கள் நிவிர்த்தியாதற்கும் ஞான கிஷ்டையைப் பிரயத்தினத்தால் ஆசரித்தல் வேண்டும். ஞான நிஷ்டையாவது ஆத்மசொரூபம் இப்படிப்பட்ட தென்றறிந்து அந்த பாவனையிலேயே நிலைத் திருத்தலாம்.

 

ஞான நிஷ்டையிற் கர்மாவினுபயோக மின்மை


சீடன்: - ஞான நிஷ்டை கர்மத்தின் வாயிலாக அடையப் படாதோ?

 

குரு: - ஞான நிஷ்டையினிடத்து ஆசக்தி யுள்ளவனுக்குக் கர்மம் உபயோகப்படுவ தின்று. விரோத சுபாவமுடைய கர்மமும் ஞானமும் ஒன்றற்கொன்று விரோதமுள்ளவையாகலின் அவ் விரண்டிற்கும் சேர்க்கையண்டாகாது. எங்ஙன மெனின்; கர்மமானது, நான் செய்கிறேன் என்னும் பாவத்தோடு கூடியது; ஞானமோ, நான் செய்கிறேனென்னும் பாவமின்றியது. ஞானம், தேகமே ஆத்மா என்னும் பாவத்தை நசிக்கச் செய்வது; கர்மம், அதனை விருத்தியாக்குவது. கர்மம் அஞ்ஞானத்தை மூலமாக வுடையது; ஞானமோ அஞ்ஞானத்தையும் கர்மத்தையும் நாசப்படுத்துவது. ஆகவே, கர்மத்திற்கு அதன் விரோதியான ஞானத்தோடு சேர்க்கை எங்ஙன முண்டாம்? எப்படி இருளுக்கும் ஒளிக்கும் சேர்க்கை சம்பவியாதோ அப்படியே ஞான கர்மங்களுக்கும் சம்பவியாது. மேற்குத் திசை நோக்கியுள்ள வொருவன் கிழக்குத் திக்கிலுள்ள பொருளைக் காண முடியாதது போல, அந்தராத்மாவினிடத்தில் வயமடைந்த சித்த விருத்தி யுடையவனுக்குக் கர்மத்தினிடத்துப் பிரவிர்த்தி யுண்டாதலில்லை. ஞான நிஷ்டையினிடத்து ஆசக்தியுடையயதிக்குக் கர்மத்தைச் செய்ய அவகாச மில்லவேயில்லை. அத்தகைய ஞானிக்கு ஞான நிஷ்டையே கர்மம்; அதுவே சந்தியா வந்தனம்; அதுவே சகலமும்; அதைத் தவிரப் பிறிதொன்றினை ஆசிரயிப்பதில்லை. ஆத்மாவிற்கு, புத்தியால் கற்பிக்கப்பட்ட அழுக்கைக் கழுவுதலே ஸ்நானமாகும். இந்த ஸ்நானத்தினால் ஆத்மாவிற்குப் பரிசுத்தத் தன்மையுண்டாகுமே யன்றி, மண் ஜலம் முதலியவற்றால் உண்டாகாது.

 

மனம் தனது நிஜவடிவத்தில் நிலைத்து நிற்பதே அனுஷ்டானமாகும். மனம் வாக்குக் காயம் என்னும் திரிகரணங்களாற் செய்யப்படுவது அசத்தியமாகலின் திருசிய வஸ்துக்க ளனைத்தையும் நிஷேதித்து நிஜரூபத்தைப் பாவித்துக் கொண்டிருத்தலே சந்தியா வந்தனமாம். அதுவே அனுஷ்டானமாம். அதுவே தானமாம். சுத்த சித்த முடையவர்களாய் உண்மைப் பொருளை யறிந்துள்ள ஞானிகளுக்கு ஆத்மானு சந்தானத்தைக் காட்டிலும் வேறு அனுஷ்டானம் யாதுளது? ஆகையால் ஞான நிஷ்டையில் விருப்புடையவன் நிச்சலனாய் ஞான நிஷ்டையினிடத்து ஆசக்தி யுடையவனாய்க் காரியாந்தரங்களை விட்டு எப்பொழுதும் ஆத்ம நிஷ்டை யுடையவனா யிருத்தல் வேண்டும். யோகத்தைக் கைக்கொள்ள விரும்புவோன் தனக்குகந்த சில கர்மங்களை அனுஷ்டிக்கலாமே யன்றி, அதனை மேற்கொண்டுள்ளவன் கர்மத்தைக் கருதலாகாது. ஞானாப்பியாசியாகிய முமூட்சுவுக்கு வேறு காரியங்களிற் சிறிதும் விருப்ப மிருத்தலாகாது. அங்ஙனம் வேறு கர்மங்களில் ஆசத்தி யடையவனா யிருப்பின், அவன், தன் மனத்தை வேறிடத்திற் செலுத்திக் கொண்டு பனைமர மேறுவோன் கட்டாயம் அதினின்றும் விழுந்து விடுவது போல் விழுவான். ஞானசித்தி யெய்தி கிருதார்த்த னானவனுக்குப் பாகிய திருஷ்டியே யில்லாதிருக்கு மென்றால் கர்மங்களில்லையென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


      (இப்படி திருசியானுவித்த சவிகற்ப சமாதி சொல்லப்பட்டது.)

 

(2) சப்தாநுவித்த சவிகற்ப சமாதி : - நான் நிர்மலன், ஆதியில்லாதவன், மனோ வாக்குகளா லறியப்படாதவன், சுருதி வசனங்களால் தெரிந்து கொள்ளத் தக்கவன், அகண்ட ஞான வடிவினன், அறிந்ததற்கும் அறியாததற்கும் வேறாயிருப்பவன் (அதாவது அறிந்து கொள்பவன்), மாயையும் அம்மாயையின் காரியங்களாகிய தேகேந்திரியாதிகளும் இல்லாதவன், கேவலம் திருக்ரூபன், சின்மாத்திரமாய்ப் பிரகாசிப்பவன், தேகேந்திரியாதிகளுக்கு வேறாயிருப்பவன், வேறானவனாக வின்றி நானாகவே யிருப்பவன், உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன், ஜராமரணங்களில்லாதவன், நித்தியானந்த வடிவினன், அத்துவிதியனா யுள்ளவன், அந்தராத்மாவினு மபின்னமும் சத்ய ஞானானந்தாதி லட்சணமும் சுருதிகளா லறியப்படுவதும் பரஞ்சோதி சொரூபமுமாகிய பிரஹ்மமே நான் என்றிவ்வாறு ஆத்ம சொரூபத்தை நிரூபிக்கும் சப்தங்களாலேற்பட்ட வஸ்துவை, சின்மாத்திரமாகிய ஆத்ம வஸ்துவைக் கிரகிக்கும் மனோவிருத்தியினால் பாவித்துக் கொண்டிருக்க வேண்டும். காமம் முதலாகிய திருசியங்களை அடக்குதல் முதலிற் கைகூடுமாறு திருக்கு வடிவமாகிய ஆத்மாவினிடத்தில் நிஷ்டை யுள்ளவனுக்கு, நான் சுத்தன் என்பன போன்ற சப்தங்களோடு கலந்த எந்த பாவம் உளதோ அது சப்தாநுவித்த சவிகற்ப சமாதியாம்.

 

நிர்விகற்ப சமாதி.

 

ஆத்மா சாட்சியாகலின் தன்னிடத்தில் திருசியங்கள் தோற்றிக் கொண்டிருக்கும். அவற்றை நிவிர்த்திக்கும் மனத்தின் அவஸ்தை (நிலை) யே நிர்விகற்ப மெனப்படும். (திரிபுடித் தோற்றமில்லாத அகண்டப் பிரம்மாகாரமான அந்தக்கரண விருத்தியின் நிலைமைக்கு நிர்விகற்ப சமாதி யென்று பெயர் - விசார சாகரம்).

எவன் சிலகாலம் வரையில் சவிகற்ப சமாதியை இடை விடாது அப்பியாசிக்கின்றானோ அவனுக்கு நிர்விகற்ப சமாதி சித்திக்கும். எப்பொழுதும் நிர்விகற்ப சமாதி நிஷ்டையி லிருப்பவனுக்குச் சனன மரணாதிகளி னழிவும் மோக்ஷ சுகத்தினடைவும் உண்டாகும். அந்த மகாத்மாவானவன், நான் இதனைத் தெரிந்து கொண்டேன் தெரிந்து கொள்ளவில்லை யென்னும் பாகியாப்யந்தர ஞானமின்றி நிஜரூபமாகிய ஆனந்த சாகரத்தில் மூழ்கிச் சும்மாவிருக்கிறான். நிர்விகற்பமாகிய எந்தப் பிரஹ்ம முளதோ அதனிடத்தே நிலைபெற்றிருக்கும் இந்தத் தன்னியனே, பாகிய திருஷ்டி யுள்ளவர்களுக்குச் சீவித்திருப்பவன் போலக் காணப்படினும் முக்தனே யாவன்.

 

பாகிய சமாதி.

 

திருசியானுவித்தம் சப்தானுவித்தம் நிர்விகற்பம் எனச் சமாதி மூன்றாம். இவை இருதயத்தில் (உள்ளே) எப்படி யத்தனத்தோடு செய்யப்படுமோ அப்படியே பேதபாவம் நிவிர்த்தியாகும் பொருட்டுப் பாகியப் பிரபஞ்சத்திலும் செய்யப்பட வேண்டும். (எனவே; சமாதி (1) அந்தர திருசியானுவித்த சமாதி (2) அந்தர சப்தானுவித்த சமாதி, (3) அந்தர நிர்விகற்பசமாதி, (4) பாகிய திருசியானுவித்த சமாதி (5) பாகிய சப்தானுவித்த சமாதி (6) பாகிய நிர்விகற்ப சமாதி என அறுவகைப்படும். இவற்றுள் இதுகாறும் கூறியவை அந்தர சமாதிகளாம். இனி, பாகிய சமாதி செய்யும் விதம் கூறப்படுகிறது.)

 

சச்சிதானந்த சொரூபமாகிய பிரஹ்மம் அதிஷ்டானமாகும். அந்தப் பரப்பிரஹ்மத்தினிடத்தில் நாமரூபாத்மகமாகிய உலகம் ஆரோபிக்கப்பட்டுப் பிகாசித்துக் கொண்டிருக்கின்றது. வெண்மை குளிர்ச்சி திரவம் இம்மூன்றும் ஜலத்தின் குணங்களாம்; நீளமா யிருத்தலும், அலையென்னும் பெயரும், அலையின் வடிவம். ஆனால் இவ்வைந்தையும் சேர்த்து அலையெனக் கூறுவர். அப்படியே சத்து சித்து ஆனந்தம் இம்மூன்றும் பிரஹ்மத்தின் வடிவங்களாம்; நாமம் ரூபம் இவ்விரண்டும் உலக ரூபங்கள். ஆனால் மூடர்கள் இவ் வைந்தையும் சேர்த்துப் பிராந்தியினால் உலகம் எனக் கூறுகின்றனர். இவற்றுள் பிரஹ்மத்தின் சொரூபத்தை மாத்திரம் கிரகித்தல் முதலாவதானபாகிய சமாதியாம் (பாகிய திருசியானுவித்த சமாதியாம்). ஞானியானவன் சச்சிதானந்த வடிவமாகிய பிரஹ்மத்தினின்றும் ஜகத்ரூபமாகிய நாமரூபங்களை நீக்கி, அவற்றைப் பிரஹ்மத்தினிடத்தே ஒடுக்கி, அதிஷ்டானமாய்ச் சச்சிதானந்த வடிவமாயுள்ள பிரஹ்மமே நான் என்று நிச்சயித்தல் வேண்டும்.

 

நான் நிலமுமன்று, நீருமன்று, தீயுமன்று, காற்றுமன்று, ஆகாயமுமன்று, அவற்றின் காரியமுமன்று, இவற்றிற்கு அதிஷ்டான (ஆதார) மாயுள்ள நிர்மலமான எந்தப் பிரஹ்மமுண்டோ, எல்லாவற்றினும் மேலானதும் ஏகமாயுள்ள துமான அந்தப் பிரஹ்மமே நான். நான் சப்தமுமன்று, ரூபமுமன்று, பரிசமுமன்று, ரசமுமன்று, கந்தமுமன்று, வேறொன்றுமன்று, இவை யனைத்திற்கும் அதிஷ்டானமாயும், மாயையின் சம்பந்த மற்றதாயும், ஒன்றாயும், நிரதிசயமாயும், சின்மாத்திரமாயுமுள்ள எந்தப் பிரஹ்ம முண்டோ அந்தப் பரப்பிரஹ்மமே யாவேன். நான் தேகமுமன்று, இந்திரியங்களுமன்று, பிராணவாயுவுமன்று, மனமுமன்று, புத்தியுமன்று, சித்தமுமன்று, அகங்காரமுமன்று, இவற்றிற்கெல்லாம் ஆதாரமும் நிர்மலமும் ஏகமும் நிரதிசயமும் சின்மாத்திரமுமாகிய பிரஹ்மமே நான். நான் தேசமன்று, நான் காலமன்று, திசையன்று, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவுமுள்ள பிற வஸ்துக்களுமன்று, இவற்றிற்கெல்லாம் அதிஷ்டானமும் நிர்மலமும் ஏகமும் நிரதிசயமும் சின்மாத்திரமுமான எந்தப் பிரஹ்ம முளதோ அதுவே நான். என்றிவ்விதமாக ஞானியானவன் எல்லாக் காலங்களிலும் எல்லா அவத்தைகளிலும் திருசியமாகிய உலக முழுதும் அதற்கு அதிஷ்டானமாகிய பரப் பிரஹ்மமே யென்று பாகிய சப்தானுவித்தத்தை ஆசிரயித்துக்கொண்டிருக்க வேண்டும்.

 

பிரம்மத்தினிடத்தில் ஆரோபிக்கப்பட்டுள்ள நாமரூபங்களை பிரம்மத்தி லொடுக்கிப் பரமானந்த வடிவ பிரம்மமே நான் எனப் பாவிக்க வேண்டும். சஜாதீய முதலிய பேதங்களற்றதும், நிர்விகாரமானதும், சின் மாத்திரமாயுள்ள துமாகிய பிரம்மமே நான் எனப் பாவிக்க வேண்டும். நிர்மலமும் சித்ரூபமும், அந்தராத்ம சொரூபமுமாகிய பிரம்மமே நான் எனப் பாவிக்கவேண்டும். அதி சூட்சுமமும் இருக்கிறதென்று மாத்திரம் கிரகிக்கத் தக்கதும் நிர்விகற்பமானதும் மேலானதும் தன்மாத்திரமும் நிரதிசயமும் அபின்னமு மாகியதுமாகிய பிரம்மமே நான் எனப் பாவிக்க வேண்டும். இப்படி நிர்விகாரம் முதலாகிய சப்தங்களால் ஏற்பட்ட ஆத்ம வஸ்துவைத் தியானிப்பவனுக்குச் சித்தம் லட்சியத்தில் நிலைக்கும். பிரம்மானந்தத்தின் எழுச்சியினால் பரப்பிரம்ம சொரூபத்தோடு ஏகத்தன்மை யடைந்து, பிரம்மாகாரத்தை யடைந்த சித்த விருத்தி சலித்தலின்றி நிச்சலமாய் இருத்தலே நிர்விகற்ப சமாதியாகும். பிரயத்தனமுள்ளவனும் இந்திரிய நிக்கிரக முள்ளவனுமாகிய ஞானி சமாதி நிஷ்டையினின்று மெழுந்த பொழுதும் சமாதியிலிருக்கும் பொழுதும் பிரமாதமில்லாத (மறதி யில்லாத) வனாய் எப்பொழுதும் ஆறு வித சமாதிகளையும் செய்து கொண் டிருத்தல் வேண்டும். எதுவரையில் ஆத்மசொரூபத்தின் விபரீதபாவனை முழுவதும் நீங்கவில்லையோ, எதுவரையில் சொரூபானுபவம் சித்திக்கவில்லையோ அதுவரையில் இவ் வறுவகைச் சமாதிகளையும் அப்பியாசித்துக் கொண்டிருத்தல் வேண்டும்.


(நன்கு விளங்கும் பொருட்டு இச்சமாதிக ளாறினையும் சுருக்கமாகக் காட்டுவோம்.)

 

(1) பாகிய திருசியாநுவித்த சமாதி: - உலகத்தில் நம்மால் பார்க்கக்கூடிய பதார்த்தங்க ளனைத்திலும் அஸ்தி பாதி பிரியம் நாமம் ரூபம் என்னும்ஐந்து அமிசங்களுண்டு. உதாரணமாக: - ஓர் கட (குடத்தை எடுத்துக் கொள்ளுவோம். அதில் 'கடம்' என்பது நாமம் (பெயர்), உருட்சியாயிருப்பது அதன் ரூபம். கடம் இருக்கிறதென்பது அஸ்தி. கடம் விளங்குகிறதென்பது பாதி, கடம் ஆனந்தமாய் (பிரியமாய்) இருக்கிறதென்பது பிரியம். இவற்றுள் அஸ்தி பாதி பிரியம் என்னும் மூன்றும் வியாபகம்; அதாவது எல்லாப் பொருள்களிலுமிருக்கின்றன. நாமம் ரூபம் இரண்டும் வியபிசாரியாம். அதாவது ஒன்றி லிருப்பது போல் மற்றொன்றிலிருப்பதில்லை. அதாவது கடத்தின் நாமரூபமும் மற்றொன்றிலிருப்பதில்லை. ஆகவே வியபிசாரியாம். அஸ்திபாதி பிரியம் இம்மூன்றும் எல்லாப் பொருள்களிலுமிருக்கின்றன. ஆகையால் வியாபகமாம். இம்மூன்றும் சத்து சித்து ஆனந்தம் எனப்படும். இவை மூன்றும் பிரஹ்மாமிசம். நாமரூப மிரண்டும் மாயாமிசம். துக்கத்தை யுண்டாக்குதற்குக் காரணமான நாமரூபங்களைத் தள்ளி எல்லாவற்றையும் சச்சிதானந்த சொரூபமாகப் பார்த்தல் வேண்டும். இதுவே பாகிய திருசியானு வித்தம் எனப்படும்.

 

(2) பாகிய சப்தா நுவித்த சமாதி: - நாமரூபங்க ளிரண்டையும் அதிஷ்டானமாகவுள்ள சச்சிதானந்தத்தில் ஒடுக்கி, அகண்ட சச்சிதானந்த சொரூபமென்னும் பாவனை கொண் டிருப்பதாம்.

 

(3) பாகிய நிர்விகற்ப சமாதி: - மேற்கூறிய இருவகைச் சமாதிகளினப்பியாசத்தால் சித்தமானது அலையில்லாத கடல் போல பரமானந்த நிலையில் நிற்றலாம்.

 

(4) அந்தர திருசியா நுவித்த சமாதி: - நான் திருசிய வஸ்துக்க ளனைத்திற்கும் சாட்சியாயிருக்கிறேன் என்று அனுசந்தானம் செய்தலாம்.

 

(5) அந்தர சப்தாநுவித்த சமாதி: - நான் ஏகன், சச்சிதானந்த ரூபன்எனச் சிந்தனை செய்தலாம்.

 

(6) அந்தர நிர்விகற்ப சமாதி: - மேற்சமாதிகளி னப்பியாச முதிர்ச்சியால் அவைகளை விட்டுத் தனதாத்ம சொரூபானந்தத்தில் நிவாத தீபம் போல இருப்பதாம்.

 

சப்தாநுவித்த மன்றிச் சப்தாந்நுவித்தம் என்றும் ஓர் சமாதியுண்டு. நிர்விகற்பமும் அத்வைத பாவனா வடிவம், அத்வைதாவஸ்தான வடிவம் என இருவகையாம். இவை ஈண்டு விளக்கப்படவில்லை; சங்கிரகமாகலின். பிற நூல்களிற் காண்க; அன்றி ஆன்றோர்பாற் கேட்டுணர்க.

 

பிரமாதத் தியாகம்.

 

மோக்ஷத்தைக் கோரும் பண்டிதன் இந்தச் சமாதி விஷயத்தில் பிரமாத மடையக்கூடாது. (பிரமாதம் = அவசியம் செய்யத் தக்கதை மறந்துவிடுதல்.) சூரியன் அஸ்தமித்த வளவில் இருள் சூழ்ந்து கொள்வது போல, பிரமாதத்தினால் மாயை மூடிக் கொள்ளுகின்றது. ஆகையால், பண்டிதர்கள் சுவானுபவத்தை விடுத்துக் கணநேரமாயினும் இருத்தலாகாது. சத் புருஷர்களுக்குச் சுவானுபவத்தில் பிரமாதம் எதுவுண்டோ அதுவே மிருத்யு வாகுமன்றி எமன் மிருத்யு வன்று. எவன் இச் சமாதியில் பிரயாசப்படுகிறானோ அவனுக்கு விகற்பம் (பிரபஞ்ச வாசனை) உண்டாதலில்லை. இந்தச் சமாதியினாலேயே சர்வமும் தான்' எனும் பாவமு முண்டாகும். இச் சர்வாத்மபாவமே கைவல்யமா மன்றோ? ஞானிக்கு சர்வாத்ம பாவமே பிரஹ்ம ஞானத்தின் பலமாக அறியப்படுகின்றது. ஜீவன் முக்தனுக்கு சர்வாத்ம பாவத்தின் பலமே ஆத்மானந்தத்தின் அனுபவமாகும். சமாதி வாயிலாக 'நான், எனது' என்னும் இவை முதலான அசத்துப் பொருள்களை ஆத்மாவாகக் கிரகிப்பதும் வாசனா மயமுமாகிய எந்தக் கிரந்தி (முடிச்சு) உளதோ அது அடங்குகிறது. கர்ம பந்தம் நசிக்கின்றது. பிரதாபந்த மற்றதாகிய 'பிரஹ்மமே நான்' என்னும் ஞானம் உண்டாகின்றது. சுத்த சித்தமுடைய முமுட்சுக்களுக்கு சத்ரூபமாகிய ஆத்மாவொன்றே யென்னும் எந்த ஞான முளதோ அதுவே, பிரஹ்ம சொரூபத்தோடிருத்தலையே வடிவமாகக் கொண்டுள்ள மோக்ஷத்திற்குத் தடையற்ற வழியாகும். ஆதலால், சீடனே! நீயும் பிரமாத மற்றவனாய் அறுவகைச் சமாதிகளையும் செய்து அகங்காரமென்னும் கிரந்தியை நன்றாய்ச் சுட்டெரித்து எப்பொழுதும் பிரஹ்மானந்த வாரிதியில் மூழ்கி விளையாடிக் கொண் டிருப்பாயாக.

 

யோகம்.

 

பிரஹ்மாகார விருத்தி சலனமற் றிருத்தலாகிய நிர்விகற்ப சமாதியையோக சாஸ்திர மறிக்தோர் யோகம் என்பர்.

 

அஷ்டாங்கம்.

 

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னு மிவ்வெட்டும் யோகத்திற்கு அங்கமாகப் பெரியோர்களால் கூறப்படும். இவற்றுள்,

 

(1) இயமம்: - சர்வம் பிரஹ்மம்' என்னும் ஞானத்தினால் இந்திரியங்களை யடக்குதல் இயமமாம். இது பிரஹ்ம ஞானத்திற்குச் சஜாதீயமாகவுள்ள விருத்திகளை இடைவிடாது செய்தலையும் விஜாதீயமாகவுள்ள விருத்திகளை விடுத்தலையும் ரூபமாக வுடையது. ஆகையால் இதனைப் பன்முறை அப்பியாசிக்க வேண்டும்.

 

(2) நியமம்: - பிரஹ்ம ஞானாப்பியாசம் நியமமாகச் செய்யப்படின் பிரஹ்ம ஸ்வரூபானுபவ முண்டாகும். ஆகையால் அந்த ஞானாப்பியாசமே நியமமாம்.

 

(3) ஆசனம்: - சகல பதார்த்தங்களையும் பிரஹ்மஸ்வரூபமாகவே பாவித்தல் ஆசனமாம். யோக நூல்களிற் கூறப்பட்டுள்ள சுவஸ்திகை முதலிய ஆசனங்கள் துக்க வேதுவாம்.

 

(4) பிராணாயாமம்: - மனோவிருத்திக ளனைத்தையும் விடுதலே பிராணாயாமமாம். இதில் பிரபஞ்சம் மித்தையா மென்றெண்ணி அப் பிரபஞ்ச வாசனைகளை நிஷேதித்தல் இரேசகமாம்; பிரஹ்மமே நான் என்னும் விருத்தி எதுவோ அது பூரகமாம்; அந்த விருத்தி சலியாதிருத்தலே கும்பகமாம். இந்தப் பிராணாயாமம் ஞானிகளுக் குரியதாம். பிராணவாயுவை நிறுத்துதலாகிய பிராணாயாமமோ அஞ்ஞானிகளுக் குரியதாம்.

 

(5) பிரத்தியாகாரம்: - திருசிய பதார்த்தங்களினிடத்து ஆத்மாவத்தை விடுத்து மனமானது சித்ரூபமாகிய ஆத்மாவினிடத்து மூழ்கி யிருத்தலே பிரத்தி யாகாரமாம். எங்கெங்கே மனம் போகிறதோ அங்கங்கெல்லாம் பிரஹ்ம பாவனை கொள்வதன் வாயிலாக இதனை அப்பியசித்தல் வேண்டும்.

 

(6) தாரணை: - மனத்தின் தாரணை (சலியா நிலை) யே சிறந்த தாகியதாரணை யெனப்படும்.

 

(7) தியானம்: - பிரஹ்மாகார விருத்தியினால் பிரபஞ்ச விஷயங்களை அவலம்பியா திருத்தல் தியானமாம்.

 

(8) சமாதி: - விருத்தி பிரஹ்மாகாரமா யிருக்கையில், தான் சரீரேந்திரிய மன முதலியவற்றின் சகல வியவகாரங்களையும் விட்டவனா யிருத்தலின், அந்த விருத்தியையும் மறத்தல் சமாதியாம். இது சம்யக்தியான மெனவும் படும். (சம்யக = மேலான)

 

சமாதி விக்கினங்கள்.

 

சீடனே! சமாதி செய்யப்படும் பொழுது ஆத்மானுசந்தானமில்லா திருத்தல், மந்தத்தன்மை, போகங்களினிடத்து இச்சை, பயம், அஞ்ஞானம், சித்தம் பல விஷயங்களில் வியாபித்தல், வீரிய மின்மை, சூனிய பாவம் என்னு மிவ் விக்கினங் (தடை) கள் பலாத்காரமாகவேனும் வரும். இவற்றைப் பிரயத்தினத்தால் விலக்க வேண்டும். ஞான குமாரா! இந்தத் தடைகளை விலக்கி, பிரமாத மின்றியவனாய் இந்திரிய நிக்கிரகமுள்ளவனாய்ச் சமாதி நிஷ்டையினால் பிரஹ்ம சாக்ஷாத்காரத்தை யடையக்கடவாய்.

 

சீடன் சுவானுபவம்.

 

இங்ஙனம் கூறிய குருவின் வாக்கியங்களாலும் சுருதிப் பிரமாணங்களாலும் சீடன் பர தத்துவத்தை யறிந்து கொண்டு ஆத்ம தியானத்தினால் ஜிதேந்திரியனாயும் சாந்தாகார சித்தனாயும் ஓரிடத்தில் சலனமற்றவனாய் ஆத்ம நிஷ்டை யுடையவனாயினான். புத்திமானாகிய அவன் மனத்தை நெடுநேரம் தன் நிஜசொரூபத்தில் நிறுத்தி, சமாதியினென்றெழுந்து குருவைச் சேர்ந்து, மீண்டும் நகஸ்கரித்துக் கூறுவானாயினன்.

 

குருமூர்த்தி! நித்தியானந்த ரூபரும் சாந்த வடிவினரும் அகம்பாவ ரகிதருமாகிய உமக்கு நமஸ்காரம். எந்த உமது கடைக்கண் பார்வையால் இரண்டாவதற்ற பிரஹ்மமே யானேனோ அந்த உமது மகிமைக்கு அளவே யில்லை. அத்தகைய தயைக்கு இருப்பிடமான உமது மகிமைக்கு நமஸ்காரம். குருநாதா! கற்ப காலத்தில் ஜலமானது உலக முழுதும் நிரம்பி யிருக்கிறது போல, நான் உலக முழுவதிலும் நிரம்பியிருக்கிறேன். இனி நான் செய்யத்தக்கது யாதுளது? போகத் தக்க விடம் எது? அடைய வேண்டியது யாது? விடத் தகுவது எது? கிருபைக்கடலே! மேலான ஞானானந்த சாகரமாயுள்ள வென்னிடத்தில் மாயையாகிய காற்றால் பிரஹ்மாண்டங்களும் நீர்க்குமிழி போலத் தோன்றித் தோன்றி யழிகின்றன. சற்குரு. நான் நித்தியானந்த வடிவினனானேன். நான் ஆத்மாவே யானேன். உமதனுக்கிரகத்தால் நான் பரிபூரணனானேன். நான் கைவல்யம் பெற்றவனானேன். நான் அர்த்தாவும் அபோக்தாவும் நிஷ்கிரியனுமானேன். நான் பரிபூரணானந்த சொரூபனும் சதாசிவனுமானேன். நான் உமது கடாக்ஷமென்னும் சந்திரிகையால் சம்சார தாபங்களாலுண்டான கஷ்டங்களைத் தொலைத்து க்ஷணப் போதில் நாசமற்றவனாய் அகண்டானந்தமாகிய ஆத்ம வஸ்துவை யடைந்தேன். விலக்ஷணனாகிய ஆத்மாவை குளிர்ச்சியாவது வெப்பமாவது தீமையாவது நன்மையாவது தொடுவதில்லை. விளக்கானது வீட்டைப் பிரகாசிக்கச் செய்வது போல திருக்ரூபனாகிய ஆத்மா திருசிய வஸ்துக்களைப் பிரகாசிக்கச் செய்கிறான். வீட்டின் நன்மை தீமைகள் விளக்கைத் தீண்டாமை போல, திருசியங்களின் குண தோஷங்கள் ஆத்மாவைத் தீண்டுவதில்லை. எப்படிச் சூரியனுக்கு உலகோர் புரியும் கர்மங்களினிடத்துச் சாஹத்துவமுளதோ, எப்படி அக்கினிக்கு இரும்பினிடத்துத் தகிக்கச் செய்யும் பாவமுளதோ, எப்படி கயிற்றிற்கு ஆரோபிக்கப்பட்ட வஸ்துவினுடைய சம்பந்தமுளதோ அப்படியே கூடஸ்தனாகிய சின் மாத்திர வடிவ எனக்கும் சாக்ஷி மாத்திரத் தன்மையே யுளது.

 

சீடன்: - இவ்வாறு சொல்லிக் குருவைப் புகழ்ந்து பக்தியினால் நமஸ்கரித்தவனாய், முமுட்சுக்களின் உபகாரத்திற்காகக் கேட்க வேண்டிய அமிசங்களைக் கேட்கத் தொடங்கினான்.

 

பகவானே! ஜீவன் முக்தர் விதேக முக்தர்களுடைய அனுபவ லட்சணத்தைக் கிருபை கூர்ந்து தெரிவித்தல் வேண்டும்.

 

ஞான பூமிகா லட்சணம்.

 

குரு: - எதை அறிவதனால் உன்னால் இப்பொழுது எது கேட்கப்பட்டதோ அது முழுவதும் தெரிந்து கொள்ளப்பட்டதாகுமோ அத்தகைய ஞானபூமிகளின் லட்சணத்தை யுனக்குக் கூறுகிறேன், கேள். சுபேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவா பத்தி, அசம் சத்தி, பதார்த்தாபாவனை, துரியம் என்று ஞான பூமிகள் ஏழாகும். அவற்றுள்,

 

(1) சுபேச்சை: - நான் மூடனாகவே யிருப்பதேன்? சாஸ்திரத்தினாலும்சத் புருஷர்களாலும் ஆத்ம ஸ்வரூபத்தை யறியக்கடவேன் என்று வைராக்கிய பூர்வமாயுண்டாகு மிச்சை பண்டிதர்களால் சுபேச்சை எனப்படும். (சுபஇச்சை)

 

(2) விசாரணை: - வேதாந்த சாஸ்திர விசாரணை ஞானிகள் பணிவிடை சம்சாரத்தினிடத்து விரக்தி இவை முதலில் உண்டாகும்படி எந்த சத் புருஷர்களின் நடக்கையில் பிரவிர்த்தி யுண்டாகிறதோ அது விசாரணையாம்.

 

(3) தனுமானசி: - எதனிடத்து மனம் விசாரணை சுபேச்சை என்னும் இரண்டு பூக்களால் விஷயங்களினிடத்து விரக்தியினால் சூட்சுமத் தன்மை யெய்துக்கிறதோ அந்த நிலை தனுமானசி எனப்படும். (தனுமான சி = மனத்தின் சூக்குமத் தன்மை.)

 

(4) சத்துவா பத்தி: - சுபேச்சை விசாரணை தனுமானசி என்னும் மூன்றையும் அப்பியசித்தலால் சித்தத்தினிடத்து விஷய வாசனைகளடங்குதலால் மனம் நிர்மலமாகிய ஆத்ம வஸ்துவினிடத்து நிர்விகற்ப சமாதியினால் நிலைபெற்றிருத்தல் சத்துவா பத்தியாம். (சத்துவ ஆபத்தி = ஆத்மாவின் சத்துத் தன்மையை யுணர்தல்).

 

(5) அசம் சாத்தி: - இதுகாறும் கூறப்பட்ட நான்கு பூக்களையும் அப்பியசிப்பதனாலும் விஷய வாசனைகளைப் போக்கும் சமாதி யப்பியாச முதிர்ச்சியின் பலனாலும் மனத்தினிடத்து திடமான பிரஹ்ம சாக்ஷாத்கார மெய்தும் நிலை அசம் சத்தியாம். (அசம் சாத்தி = அசங்கத் தன்மை.)

 

(6) பதார்த்தா பாவனை: - இதுகாறும் கூறப்பட்ட ஐந்து பூக்களையும் அப்பியசித்தலால் திடமான ஆத்ம நிஷ்டையுடையவனா யிருத்தலால், தடைகளும் பாகியங்களுமாகிய பதார்த்தங்களின் பாவனை யில்லாமையின் பிறருடைய பிரயத்தனத்தினால் தேக காரியங்களை நடத்திக்கொண் டிருத்தல் பதார்த்தா பாவனையாம். (சகல வாசனைகளும் நீங்கப் பெற்றவனாய் அழுந்திய உறக்கத்தில் இருப்பவனைப் போன்று ஆத்மானந்தத்தில் அடங்கி யிருத்தலாம். பதார்த்த அபாவனை = சகல பதார்த்தங்களின் பாவனை வடிவ சங்கற்ப மின்மை.)

 

(7) துரியம்: - ஆறு பூமிகளையும் சில காலம் அப்பியசித்த பின்னர் பர பிரயத்தினத்தா லாயினும் பேத வியவகார முண்டாகாமல் சச்சிதானந்தலக்ஷணமுடைய ஆத்மாவினிடத்தே நிலை பெற்றிருத்தல் துரிய மென்னும் ஏழாம் பூமியாகும்.

 

 

சாக்கிர சாக்கிரம்: - எல்லா திருசிய பதார்த்தங்களினிடத்தும் 'இதுஎனது' என்னும் பாவனையில்லா திருத்தல் சாக்கிர சாக்கிரம் என்று பிரம்மவேத்துக்களில் உத்தமர்களாகிய பெரியோர் கூறுவர்.

 

சாக்கிர சொப்பனம்: - சச்சிதானந்த வடிவினனாகிய தன்னிடத்துதிருசிய பரம்பரையை ஆரோபித மென்றறிந்து நாமரூபங்களை விடுதல் எதுவுண்டோ அதுவே சாக்கிர சொப்பனமெனக் கூறினர்.

சாக்கிர சுழுத்தி: - அகண்டமான சிதாகாசமே ரூபமாகவுடைய என்னிடத்தில் ஞான வடிவத்தை யன்றி வேறொன்று மில்லை என்றெண்ணுதல் சாக்கிர சுழுத்தி யெனப்படும்.

 

சொப்பன சாக்கிரம்: - மூலாஞ்ஞானம் நசிக்கின் தேகேந்திரியாதிகளின் கிருத்தியங்களால் எனக்குப் பந்தம் சிறிதும் இல்லை என்றெண்ணுதல் சொப்பன சாக்கிரமெனக் கூறப்படுகின்றது.

 

சொப்பன சொப்பனம்: - காரணமாகிய அஞ்ஞானம் நசித்தலால் அதன் காரியமாகிய பார்க்கிறவன் - பார்வை - பார்க்கப்படும் பொருள் என்னும் பேதம் இல்லையென் றறிதல் சொப்பன சொப்பனமாம்.

 

சொப்பன சுழுப்தி: - எப்பொழுது அதிசூட்சும விசாரத்தினால் ஸ்திரமாகிய தன் சித்த விருத்தி ஞானத்தினிடத்து லயமடை கின்றதோ அதுசொப்பன சுழுப்தியாம்.

 

சுழுப்தி சாக்கிரம்: - பண்டிதா! பிரம்மாகாரமாகிய சித்த விருத்தியால்நேர்ந்த சின்மாத்திர வடிவமாகிய ஆனந்தானு பவமே சுழுத்தி சாக்கிரம்.

 

சுழுப்தி சொப்பனம்: - சிறிது காலம் அனுபவிக்கப்பட்ட (அந்தர்க்கத) ஆனந்தத்தின் அனுபவ ஸ்திதியுள்ள சமத்துவ மடைவது சுழுத்தி சொப்பனமாம்.

சுழுப்தி சுழுப்தி: - சித்த விருத்தி கைவல்யத்தைப் பாவித்துக் கொண்டு ஞான ரூப மடைதலாம்.

 

துரியம்: - சகல அவத்தைகளினும் நிர்விகார ரூபமாய் பரப்பிரஹ்ம வடிவ தாரை (நெய்த்தாரை போல் இடைவிடா விருத்தி) துரிய மெனப்படும்.

 

இவ்வாறு அவத்தையின் விசேஷங்களை விவரித்தறிகிறவன் சுகமாக முக்தி யடைகிறான். சுபேச்சை முதலாகிய மூன்று பூமிகளும் சாக்கிரத்திலேயே சேர்கின்றன. நாலாம் பூமியில் துவைத பாவம் நசித்து அத்வைத்பாவம் ஸ்திரப்படுதலால் உலகத்தைச் சொப்பனம் போலக் காண்கின்றனர். ஐந்தாம் பூமியை யடைந்தவன் பேத பாவம் முழுவதும் நசித்தலால் அத்
வைத பாவனையிலேயே வசிக்கிறான். ஆறாம் பூமியை யெய்தினவன் எப்பொழுதும் அந்தர் முகனா (உள்நோக் குள்ளவனா) யிருத்தலாலும் சாந்தியடைந்தவனாதலாலும் காட நித்திரை யுள்ளவன் போல் காணப்படுகின்றான். யோகியானவன் இப் பூமியில் அப்பியாசம் செய்கிறவனாய் நன்றாய் வாசனாரகிதனாய் கிரமமாகத் துரியாவத்தையாகிய ஏழாம் பூமியை யடைகிறான்.

 

விதேக முக்தி.

 

எந்த நிலையில் அசத் பதார்த்த மில்லையோ, அகங்காரமு மில்லையோ, அகங்காரத்தை விட வேறான புத்தியாதிகளு மில்லையோ, எந்த நிலையில் சங்கற்ப மற்றவனாயும் யாதொரு பயமு மில்லாதவனாயும் பூரணபாவத்தி லிருக்கிறானோ இந்நிலையில் விதேக முக்தியே துரியாதீதம் என்று சொல்லப்படுகின்றது. ஆகாசத்திலுள்ள வெறுங் குடம் போல உள்ளும் சூனியமானவனும் வெளியும் சூனியமானவனும், சமுத்திரத்தில் நிறை குடம் போல் உள்ளும் நிறைந்தவனும் வெளியும் நிறைந்தவனுமாக வுள்ளவன் ஜீவன் முக்தன். வியவகாரியாயினும் எவனுக்கு இந்தச் சகலமும் உள்ள துள்ளபடி அஸ்தமித்ததாய் ஆகாச மாத்திரமாய் இருக்கிறதோ அவன் ஜீவன் முக்தன். எவனுடைய சித்த விருத்தி பிராப்கித்ததற்குத் திருப்தியடைந்ததாய்ச் சுக துக்கங்களினிடத்து உதயிக்காதோ அஸ்தமிக்காதோ (இன்பதுன்பங்க ளடையாதோ) அவன் ஜீவன் முக்தன். எவன் நித்திராவத்தையி லிருக்கிறவனாய் விழித்துக் கொண் டிருப்பானோ, எவனுக்கு ஜாக்கிரமில்லையோ, எவனுக்கு ஞானம் வாசனாரகித மாயிற்றோ அவன் ஜீவன் முக்தனெனப்படுகிறான். எவன் ராகம் துவேஷம் பயம் முதலானவற்றிற்கு அனுகூலமாய் நடப்பவனாயினும் உள்ளே ஆகாசம் போல அதிநிர்மலனாயிருப்பானோ அவன் ஜீவன் முக்தன். கிருத்தியங்களைச் செய்பவனாயினும் செய்யாதவனாயினும் எவனுடைய மனோ விருத்தி அகங்கார மற்றதாயிற்றோ, எவனுடைய புத்தி கர்மங்களின் குண தோஷங்களோடு சம்பந்தப்படுதலில்லையோ அவன் ஜீவன் முக்தன். எவன் சகல காரியங்களினிடத்தும் வியவகரிக்கிறவனாயினும் ராகத் துவேஷாதிகளில்லாதவனோ, எவன் எல்லா வஸ்துக்களினிடத்தும் நிறைந்திருப்பவனோ அவன் ஜீவன் முக்தன். எவன் அதிபவித்திரமும் பேதரகிதமான சின்மாத்திரமே வடிவமாயுள்ளதுமாகிய பிரஹ்மத்தினிடத்து சஞ்சலமற்றவனாய் சித்த விஸ்ராந்தியடைவானோ அவன் ஜீவன் முக்தன். 'இது ஜடம் அவன் இவன்' என்னுமிந்த மித்தியா மாத்திரமான திருசியஞானம் எவனுடைய சித்தத்தில் தோன்றுவதில்லையோ அவன் ஜீவன் முக்தன். 'நான் சித்ரூபன், நான் பரமாத்மன், நான் குணரகிதன், நான் பரத்திற்குப் பரமானவன்' என்று, எவன் ஆத்ம மாத்திர வடிவத்தோடு இருப்பானோ அவன் ஜீவன் முக்தன். எவனுடைய சித்தத்தில் 'நான் தேகேந்திரியாதிகளுக்கு வேறானவன், நான் மாயா சம்பந்தமில்லாத சின்மாத்திரனாவேன், நான் பாப்பிரஹ்மமே' என்னும் பாவமுளதோ அவன் ஜீவன் முக்தன். எவனுக்குத் தேகம் முதலானவை யில்லையோ, எவனுக்குப் பிரஹ்மமே என்னும் நிச்சயபாவமுளதோ, எவன் பிரம்மானந்தத்தால் நிறைந்திருப்பவனோ அவன் ஜீவன் முக்தன். எவனுக்கு நான் பிரஹ்மமாவேன், நான் பிரஹ்மமாவேன், நான் பிரஹ்மமே' எனவும், 'நான் சின்மாத்திரன், நான் சின்மாத்திரன்' எனவும் நிச்சய பாவமுளதோ அவன் ஜீவன் முக்தன்.

 

ஜீவன் முக்த பதவியை விட்டுத் தன் சரீரம் காலவசமடையும் பொழுது, வாயு சலனாகித மடைந்தது போல், விதேக முக்தித் தன்மையடைகிறான். அநந்தரம் இச்சாதகன் எதுவாக்குகளுக்கும் கோசர மாகாதோ, எது சூனியவாதிகளுக்கு சூனியமோ, எது பிரஹ்மவித்துக்களுக்குப் பிரஹ்மமோ, விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானமோ, மலினர்களுக்கு மலின வடிவமோ, சாங்கியர்களுக்குப் புருஷனோ, யோகமஸ்தருக்கு ஈசுவரனோ, சைவாகம நிஷ்டர்களுக்குச் சிவனோ, காலகாரண வாதிகளுக்குக் காலமோ, எது சர்வ சாஸ்திரசித்தாந்தமாகிய வஸ்துவோ அதுவாக ஆவான். (இச்சாதகன் இத்தகைய தென்று சொல்ல முடியாத வஸ்து எதுவோ அதன் வடிவமாயிருப்பான்.)

 

எவனால் நான் பிரஹ்மமே யெனவம், நான் சின்மாத்திரனே யெனவும் சிந்திக்கப்படாதோ, எவன் சின்மாத்திரமாகவே யிருப்பானோ அவன் தேகரகிதனாய் முக்தியடைந்தவனே யாவன். எவனுக்குப் பிரபஞ்சம் தோன்றுவதில்லையோ, இங்குப் பிரஹ்மாகாரத்தையும் பாவித்தலுமில்லையோ, எவன் அதீதத்திற்கும் அதீதமாகிய பாவனையுடையவனோ அவன் தேக ரகிதனாய் முக்தி யடைந்தவனே யாவன். எவன் சித்த விருத்தியினும் அதீதமானவனோ, எவன் சித்த விருத்தியைப் பிரகாசிக்கச் செய்கிறவனாய் சித்த விருத்திரகிதனோ அவன் விதேக முக்தனே யாவன். எவன் ஜீவாத்மா வெனவும் பரமாத்மா வெனவும் சர்வ விதமாகிய சிந்தைகளில்லாதவனும், சர்வ சங்கற்பங்களுமில்லாதவனாவனோ அவன் விதேக முக்தன். எவன் பிரணவ வாச்சியத்தினும் அதீதமானவனும், சர்வ சப்தங்களுக்கும் வாச்சியமாகாதவனும் சாக்கிர முதலிய மூன்றவத்தைகளு மின்றியவனுமாவானோ அவன் விதேகமுக்தி யடைந்தவனே யாவன். பாம்பு தான் உரித்துப் போட்ட தோலைப்பார்த்து 'இது எனது' என்று அபிமானங் கொள்ளுதலின்றி அதனை விட்டு விட்டே போவது போல, விதேக முக்தன் தூல சூக்குமங்களென்னும் சரீரங்களையும் என்னுடையவை என்றெண்ணாது விட்டு விடுகிறான். விபரீத ஞானம் அந்த ராத்ம ஞானமென்னும் அக்கினியால் முழுவதும் நசித்தலால் 'இதுவல்ல இதுவல்ல' என்னும் வாக்கியத்தால் ரூபமுடைய பதார்த்தங்களனைத்தையும் தானல்லவென்று நிஷேதிப்பதனால் விதேக முக்தி யடைகிறான். தூலசரீராபிமானி சூக்கும சரீராபிமானி காரண சரீராபிமானி என்னும் இம்மூவரும், பிரமாண்ட மும், சரீரமும், கிரமமாக பூமி முதலாகிய உலகமும் தத்தம் உபயாதிலயமடைவதால் அந்தராத்மாவினிடத்து லயமடைகின்றன.

 

அனந்தரம் மித்தையாகவே யிருக்குமின்றி உண்மையாகக் கிஞ்சித்தும் இல்லை. அந்த விதேக முக்தனுக்கு தேசம் காலம் வஸ்து என்னும் பேதமும், தனக்குப் பேதத்தை யுண்டாக்கும் வேறெவ்வித பேதமுமில்லை. ஜீவன் ஈசுவரன் என்னும் வாக்கியங்களும், வேத சாஸ்திரங்களும், நான் என்றும் இது சித்ரூபமென்றும், நான் சின்மாத்திரனென்றும் கிஞ்சித்து மில்லை. எவன் இத்தகைய நிச்சயமில்லாதவனோ அவன் விதேக முக்தனே.

 

வாஸ்தவத்தினாலும் அவாஸ்தவத்தினாலும் அனுபவ சித்தமாகிய பிரஹ்மமே யுளது. சத்திய ஞானானந்த ரூபமாகிய பிரஹ்மம் பிரஹ்ம ஞானத்தினால் கோசரமாகும். அந்தப் பிரஹ்மம் சாந்தமெனவும் சர்வாதீத மெனவும் பரப்பிரஹ்ம மெனவும் சொல்லப்படும். சர்வமும் நிஷேதிப்பதே வேதாந்த சாஸ்திரங்களின் சித்தாந்தம். இதில் அவித்தை இல்லை; மாயையுமில்லை; நிர்க்குணமும் நிருபத்திரவமுமாகிய பிரஹ்மமே யுளது. (மாயை அவித்தை இல்லை யென்பதனால் ஜீவேசுவர வேறுபாடு இல்லை யென்பது பெறப்படும்.) மித்திரர்கள் விஷயமாய் உபகாரமும் சத்துருக்கன் விஷயமாய் அபகாரமும்
விடுத்து, தியான யோகத்தினால் சாஸ்வதமாகிய பரப்பிரஹ்மத்தை யடைகிறான். முனிந்தீரா! எதுவரை எதுவரை தன்னால் சர்வமும் விட்டு விடப்படுகின்றதோ அதுவரை சுயம் பிரகாசமாகிய பரமாத்மாவே எஞ்சுகின்றது. எப்பொழுதும் பிரஹ்ம வித்தாகிய ஞானி எதனிடத் தெதனிடத்து மிருத்யுவடைவானோ அதனிடத் ததனிடத்து பரப்பிரஹ்மத்தில் லயிப்பானே யன்றி அந்த ஞானிக்குப் பிராணோத்க்ருமணம் இல்லை. எதுவெது தனக்கிஷ்டமாகிய வஸ்துவுண்டோ அதுவெல்லாம் விட்டால் முக்தி யடைகிறான். எப்பொழுது இந்தச் சித்தம் சற்கற்ப ரகிதம் என்னும் சஸ்திரத்தால் போதிக்கப்படுமோ அப்பொழுது சர்வரூபமும் சர்வமும் பொருந்தி யிருப்பதும் நிர்க்குணமுமாகிய பிரஹ்மமே யாகிறான்.

 

இவ்வாறு கூறிய குருவின் வாக்கியத்தைக் கேட்டுச் சீடன் சகல சந்தேகங்களையு மொழித்து, தத்துவத்தை யறிந்து, சற்குருவின் பாதகமலங்களை வணங்கி, அவரால் அனுக்கிரகிக்கப்பட்டவனாய், சம்சாரபந்த ரகிதனாய்ச் சென்றான். குருமூர்த்தியும் பரமானந்த சாகரத்தில் மூழ்கியவராய்த் தன்னையடுத்த முமுட்சுக்களுக்குத் தத்துவார்த்தத்தை யுபதேசித்துக் கொண்டு பூமண்டல முழுதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

 

முமுட்சுக்களுக்குச் சுலபமாய்ப் புலப்படுத்தற்காக இப்படி குரு சிஷ்ய சம்வாதத்தினால் ஆத்ம சொரூபம் நிரூபிக்கப்பட்டது. சர்வ வேதாந்த சித்தாந்த சார சங்கிரக மென்னும் பெயருள்ள இந்தக் கிரந்தம் சத்புருஷர்களின் சம்சயமென்னும் முடியை நசிக்கச் செய்வித்தற்காக எழுதப்பட்டது. பூஜ்யராகிய ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளால் ஆதரித்து வரையப்பட்ட இந்நூல் முமுட்சுக்களால் எப்பொழுதும் கேட்கத் தக்கதும் பார்க்கத் தக்கதும் படிக்கத் தக்கதுமாம்.

 

ஓம் தத் சாத்.


 முற்றிற்று.

 

பின்னுரை: - அன்பார்ந்த நேயர்களே! இந்தூல் யாதொரு விதத்திலும் இடையூறு இன்றி இனிது முடியுமாறு கிருபை புரிந்த எமது உபாசனாமூர்த்தியின் திருவருளைச் சிந்தித்து இறைஞ்சுகின்றோம். உபாசனா மூர்த்தியின் அனுக்கிரகத்தாலும் பெரியோர்களின் ஆசீர்வாதத்தினாலும் எம்மால் எழுதப்பட்டு வந்த இந்நூலை மனங்கோணாது பொறுமையுடன் வாசித்து வந்த உங்களுக்கு எம்மனமார்ந்த வந்தனம் உரியதாகுக. பலவிடங்களினின்று இந்நூல் விஷயமாகப் பலர் வாழ்த்துதல்களையும் ஐயங்களையும் அடிக்கடி தெரிவித்து எமக்கு மிக்க உற்சாகத்தை யளித்து வந்தனர். சில நண்பர்கள் விடுத்த ஐயவினாக்களுக்கு விடை யிறுப்பதன் முன்னர் (சமீபகாலத்தில் வந்தவை) கிரந்தம் முடிவு பெற்றதாயினும் அவர்களுக்குக் கூடிய விரைவில் விடைகள் அவர்கள் கேட்டுக் கொண்டவாறே கடித மூலமாயறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி, அடுத்தபடியாகச் சில அன்பர்கள் கோரிக்கையின் படி வேதாந்த சூடாமணி விவேக சூடாமணி என்னுமிவற்றி லொன்றினை எளிய வசன நடையில் எழுத உத்தேசித்திருக்கிறோம். கடைசியாக, இவ்வளவிற்கும் காரணமாக விருக்கும் "ஆனந்தபோதினி" யும் அதன் ஆசிரியர் திருவாளர் நா. முனிசாமி முதலியாரவர்களும் நீடூழி வாழக் கிருபை செய்யுமாறு உபாசனா மூர்த்தியை இறைஞ்சி இனிது முடிக்கின்றோம்.

 

நம் நாடு வாழ்க.

நம் மதம் வாழ்க.


 ஆனந்தன் வாசகர்கள் வாழ்க.

சுபம்.

ஓம் தத்த்.

 

பூ. ஸ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர்,

சித்தூர்.

 

ஆனந்த போதினி – 1926,1927,1928,1929, ௵

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment