Monday, September 7, 2020

 

வேதாந்த ஸித்தாந்த லேச சங்கிரகம்

பண்டிதர். K. V. தேவராஜ சாஸ்திரியார்.

 

1. பிரகதாரண்யக உபநிஷத்தில், இரண்டாவது அத்தியாயத்தில், நான்காவது பிராம்மணத்தில், சிறந்த பிரம்மக் கியானியாகிய யாக்யவல்க் கிய முனிவர், மைத்ரேயி, காத்யாயினி என்ற தமது இரு மனைவியர்களில் மைத்ரேயியைப் பார்த்து, "ஒ மைத்ரேயி! நான் இல்லறத்தை விட்டுத் துறவியாகப் போகின்றேன்; ஆகையால் உனக்கும், காத்யாயினிக்கும் சொத்துக்களைப் பாகம் செய்து வைக்கிறேன் " என்று சொன்னார். அதற்குப் பதிலாக மைத்ரேயி, 'மோக்ஷத்திற்குக் காரணமில்லாத சொத்துக்களால் எனக்கு என்ன பலன்? ஆகையால் நான் எதனால் மோக்ஷத்தையடைவேனோ அதை எனக்குக் கொடுக்க வேண்டும்" என்று கேட்டாள். முனிவர், "ஆத்மாவா அரேதிருஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசிதவ்ய:" என்று உபதேசம் செய்தார்.

 

2. இதில், "ஆத்மவிசாரம் செய்யவேண்டும்; மனனம் செய்யவேண்டும் " என்று விதி, விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தவிதி என்னவிதி என்று விசாரிப்போம்.

 

3. அபூர்வவிதி, நியமவிதி, பரிசங்கியாவிதி என்று விதிகள் மூன்று விதம். முன்காலத்திலும் எவ்விதத்திலும் தெரியாத சமாசாரத்தை உணர்த்தும் விதிக்கு அபூர்வவிதி என்று பெயர்; (உதாரணம்) "விரீஹீனப்ரோக்ஷதி'' என்பதற்கு " நெற்களை ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்'' என்பது அர்த்தம். இதில்,'' யாகத்தில் உபயோகமாகும் நெற்களை ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்'' என்னும் கருத்து அடங்கியிருக்கின்றது; இது எவ்விதத்திலும் அறியப்படாத சமாசாரம். ஆகையால் இது அபூர்வவிதி. “ஒன்றை இரண்டு விதமாகவும் செய்யலாம் " என்ற நியமம் இருக்கும்பொழுது, "ஒருவிதமாகத் தான் செய்யவேண்டும்'' என்று சொல்வது நியமவிதி. (உ - ம்) "நெற்களைக்குத்த வேண்டும்'' என்பதில், 'நெற்களை நகத்தால் உரித்து அரிசியாக்கலாம், உரல் உலக்கையால் குத்தியும் அரிசியாக்கலாம்'' என்ற இரண்டு வசைகளிருக்கின்றன. இவற்றுள் "உரல் உலக்கையைக் கொண்டு தான் அரிசியாக்கவேண்டும்'' என்று சொல்லுவது நியமவிதி. இரண்டில் ஒன்றை விலக்கும் விதி பரிசங்கியாவிதி. எப்படியென்றால் அக்னிசயனத்தில் 'இமாம் அக்ருப்ணன் ரசனாம் ரிதஸ்ய இதி அஸ்வாபிதானீம் ஆதத்தே'' என்ற வாக்கியம் கழுதையின் கடிவாளத்திலும், குதிரையின் கடிவாளத்திலும் எதைப் பிடிப்பது என்று சந்தேகம் உண்டான விடத்துக் கழுதையின் கடிவாளத்தைப் பிடிக்கக்கூடாது என்று விலக்குகிறது. ஆகையால் இது பரிசங்கியாவிதி.

 

4. இவ்வாறு மேற்சொன்ன மூன்று விதமான விதிகளில் 'ஸ்ரவணம் செய்ய வேண்டும்' என்ற விதி எவ்விதத்தைச் சேர்ந்ததென்று விசாரிப்போம். ஸ்ரவணம் செய்யவேண்டு மென்ற விதி அபூர்வவிதிதான். இந்தவிதிக்கு முன் பிரம்மசாக்ஷாத்காரத்திற்கு வேதாந்த ஸ்ரவணம் காரணம் என்று சொல்லும் பிரமாணம் ஒன்றுமி ல்லையாதலால் இது அபூர்வவிதி.

 

5. ''ஜுஷ்டம் யதாபஸ்யதி அன்யமீசம் அஸ்யமஹிமானம் இதிவீதசோகம்' என்ற வாக்கியத்தைப் பார்த்து, ஜீவாத்ம, பரமாத்ம பேதஞானம் மோக்ஷத்திற்கு ஹேதுவென்றெண்ணி, மோக்ஷத்திற்கு ஹேதுவானஞானத்தை அடைய ஜீவாத்ம, பரமாத்ம பேதத்தைப் போதிக்கும் சாஸ்திரத்தை அப்பியாஸம் செய்யலாம். அதைத் தடுப்பதற்காக ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கியத்தைச் சொல்லும் சாஸ்திரத்தைத்தான் அப்பியாஸம் செய்யவேண்டுமென்று சிலர் சொல்கின்றனர். இது நியமவிதி.

 

6. பிரம்மக்கியானத்தையடைய வேதாந்த ஸ்ரவணம் செய்பவனுக்கு வேறு விஷயங்களிலும் பிரவர்த்தி ஏற்படலாம். அதை விலக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது பரிசங்கியாவிதி.

 

7. இப்படி இவ்வாக்கியத்தால் பிரம்மஞானியாகிய யாக்யவல்க்கிய முனிவர் பிரம்ம விசாரம் செய்ய வேண்டுமென்றும், அது மோக்ஷத்திற்குக் காரணம் என்றும், தமது மனைவியாகிய மைத்ரேவிக்கு உபதேசித்தார்.

 

8. பிரம்ம விசாரம் செய்பவனுக்கு நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவை

(1) 'நித்யா நித்யவஸ்து விவேக:' அதாவது, அழிவற்றதும் அழிவுள்ளதுமான பொருள்களும் அவைகளின் குணங்களும் இன்னவையென்றறிதல்

(2) ''இகாமுத்ரார்த்த பல போகவிராக: "அதாவது மண்ணுலகு, விண்ணுலகு ஆகியவற்றின் வாழ்க்கையில் வெறுப்பு.

(3) சமாதிகுணங்களின் நிறைவு; அதாவது சமம், தமம், உபாதி,திதிக்ஷை, சமாதானம், சிரத்தை ஆகியவற்றைக் கொள்ளல்; (மனதை அடக்குவது சமம்; எனைய இந்திரியங்களை அடக்குவது தமம்; உலக போகத்தை வெறுத்து இருத்தல் - உபரதி; சுகம், துக்கம், சீதம், உஷ்ணம், ஜெயம், அபஜெயம், முதலியவைகளைப் பொறுத்தல் - திதிக்ஷை, வெவ்வேறு விஷயத்தில் மனதைச் செலுத்தாமல் ஒரே விஷயத்தில் செலுத்துவது சமாதானம்; குருவினிடத்தும் வேதாந்த வாக்கியங்களிலும் நம்பிக்கை - சிரத்தை. உபரதி என்பதைக் கொண்டு சந்நியாசிகளே பிரம்மவிசாரம் செய்யத்தக்கவரென்று சிலர் கருதுகின்றனர். ஜனகர் முதலிய ராஜ்யத்தை ஆண்ட அரசர்களும் வேதாந்த விசாரம் செய்திருப்பதாக பிரகதாரண்யகம் முதலிய உபநிஷத்துக்களால் தெரிவதால் ஒன்றிலும் ஆசையில்லாமல் இருத்தலே உபரதி என்று பொருள் கூறுவதே ஏற்றதாகும்.)

(4) ''முமூக்ஷத்வம்'' அதாவது மோக்ஷத்தில் ஆசை என்பனவாம். இந்த நான்கு குணங்களு முடையவன் பிரம்ம விசாரத்திற்கு அதிகாரி யாவான். 'யாதோலா இமானி பூதானி' என்ற வாக்கியம் ஜகத்துக்கு ஜன்மகாரணம் பிரம்மமென்றும், ஸ்திதி காரணம் பிரம்மமென்றும், லயகாரணம் பிரம்மமென்றும் அப்படி விசாரிக்கப்படும் பிரம்மலக்ஷணத்தைக் கூறுகிறது.

 

9. ஜகத்திற்குச் சுத்தப் பிரம்மம் காரணமா? ஈசுவர ரூப பிரம்மம்காரணமா? ஜீவன் காரணமா? என்று விசாரிப்போம். சம்க்ஷேபசாரீரகத்தில் சுத்தப்பிரம்மம் தான் ஜகத்திற்குக் காரணமென்றும், அப்படியே ஜன்மாதிசூத்திரத்திலும் பாஷியத்திலும் சுத்தப் பிரம்மத்திற்கு ஜகத் காரணத்துவம் லக்ஷணம் என்று ஆசாரியர் சொல்லுகிறார் என்றும் தீர்மானம் சொல்லப்பட்டிருக்கிறது. விவரணத்தில் மயாசபலி தமான ஈசுவரரூபப் பிரம்மம் ஜகத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அந்தஸ்தத் தரமோபதேசாத்'' என்ற அதிகாணங்களில் சங்கர பாஷியத்தில் ஜகத்துக்குக் காரணமானது பிரம்மம் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

 

10. இப்பொழுது ஈசுவரன் என்பது யார்? ஜீவன் என்பது யார்? என்று விசாரிப்போம்: அநாதியாய் சத் என்றும் அசத் என்றும் சொல்ல முடியாம லிருக்கும் மாபையில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஈசுவரன் என்றும், பரிச்சின்னமாயும், ஆவரணசக்தி விக்ஷேப சக்தி என்ற இருவகைச் சக்திகளை உடையதாயும் அவித்தையில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஜீவன் என்றும் கூறப் படுகிறது.'' கார்யோபாதிரயம் ஜீவ: காரணோபாதிரீசுவா'' என்ற வேத வாக்கியத்தை ஒட்டி அவித்தையில் பிரதிபிம்பித்த சைதன்யம் ஈசுவரன் என் றும், அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஜீவன் என்றும் துணியப் படும். பஞ்சதசப்ரகரணத்தில், சித்ர தீபத்தில், ஜீவன், ஈசன், விசுத்தசைதன் யன் என்று மூன்று விதமாகச் சொல்வதை விட்டுவிட்டு எப்படிக் கடத்தில் இருக்கும் (குடத்திலிருக்கும்) ஆகாயத்தை கடாகாயம் என்றும், அதில் இருக்கும் ஜலத்தில் மேகங்களுடனும், நக்ஷத்திரங்களுடனும் பிரதிபிம்பித்த ஆகாயத்தை ஜலாகாயம் என்றும், இதைத் தவிர மகாகாயம் என்றும், அந்தமகாகாயத்தின் மத்தியில் மேகமண்டலத்திலிருக்கும் ஜலத்தில் பிரதிபிம்பித்த ஆகாயத்தை மேகாகாயம் என்றும் நான்கு விதமாகச் சொல்லலாமோ, அப்படியே ஸ்தூல தேகத்திற்கும், சூக்ஷ்ம தேகத்திற்கும் அதிஷ்டானமாக இருக்கும் சைதந்யம் கூடம் போல் அசைவில்லாமல் இருப்பதால் கூடஸ்தன் என்றும், அந்த கூடஸ்தனில் கற்பிக்கப் பட்ட அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஜீவன் என்றும், அந்தக்கரணத்தில் பிரதிபிம்பத்தை அடையாத சைதந்யம் பிரம்மமென்றும், அந்த சைதந்யத்தை ஆசிரயித்த மாயையாகிய இருட்டிலிருக்கும் பிராணிகளின் புத்தி வாசனையில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஈசுவரன் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என்று குணம் மூன்று. குணரூபமான மூலப்பிரகிருதிக்கு மாயை என்றும், அவித்தை என்றும், இரண்டு உருவங்கள் இருக்கின்றன. சுத்த சத்வகுணப் பிரதானமாக விருந்தால் மாயை என்றும், மலினமான சத்வகுணப் பிரதானமாக விருந்தால் அவித்யை என்றும் மாயைக்கும் அவித்யைக்கும் வேற்றுமை கற்பித்து, மாயையில் பிரதிபிம்பித்த சைதந்யம் ஈசுவரன் என்றும், அவித்யையில் பிரதி பிம்பித்த 'சைதந்யம் ஜீவன் என்றும் சிலர் கூறுகின்றனர். வேறு சிசர் மூலப்பிரகிருதி ஒன்றுதான்: விக்ஷேபசக்தி யென்றும் ஆவரண சக்தி யென்றும், இரண்டு சக்திகளிருக்கின்றன; விக்ஷேபசக்தி பிரதானமாக இருந்தால் மாயை என்றும், ஆவரணசக்தி பிரதானமாக விருந்தால் அவித்யை என்றும் அந்தமாயையில் பிரதி பிம்பித்த சைதந்யம் ஈசுவரனென்றும், அவித்யையில் பிரதிபிம்பித்த சைதன்யம் ஜீவன் என்றும் சொல்லுகின்றனர்.

 

ஜீவாத்மா ஏகம். ஒரு சரீரம் தான் ஜீவனுடையது. மற்றவை யெல்லாம் நிர்ஜீவன்கள் என்று சிலர் சொல்லுகின்றனர். வேறு சிலர் ஜீவாத்மாஅநேகம் என்று சொல்லுகின்றனர்.

 

ஆனால் பரமாத்மா ஒன்று தான். அது ஸச்சிதானந்த ரூபி, அத்விதீயம், ஸ்வயம் பிரகாசம் என்று அநேகம் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன. ஆனால் கண்களில் உண்டாகும் திமிரம் என்ற வியாதியால் ஒரே சந்திரன்எப்படி இரண்டாகத் தோன்றுகிறதோ அப்படி, ஆத்மா ஒன்றாக இருந்த போதிலும் மாயையால் இரண்டாகத் தோன்றுகிறது. திமிரமில்லாதவர்களுக்குச் சந்திரன் எவ்வாறு ஒன்றாகவே தோன்றுகிறதோ அவ்வாறு மாயை என்றதோஷமில்லாதவர்களுக்கு ஆத்மா ஒன்றாகவே தோன்றும். கண்களின் திமிரத்தால் சந்திரனிடத்தில் எப்படி த்வித்வம் தோன்றுகிறதோ அப்படி மாயையால் ஆத்மாவின்கண் பிரபஞ்சம் தோன்றுகின்றது. சந்திரனிடத்தில் த்வித்வம் மித்தையாவது போல் ஆத்மாவின் கண் பிரபஞ்சமும் மித்தையாகும். ஆத்மாவின் காரியமாகிய ஆகாயம் ஆத்மாவில்லாமல் இருப்பதில்லை. காரியமாகிய ஆகாயம் எங்கும் நிறைந்த வஸ்துவாக இருப்பதால் காரணமான ஆத்மாவும் எங்கும் நிறைந்த வஸ்துவென்று சொல்லவேண்டுமா? காரியமான ஆகாயம் எப்படி ஒரே வஸ்துவோ அப்படி காரணமான ஆத்மாவும் ஞானிக்கு ஒன்றுதான். இரண்டல்ல. ஆகாயம் ஒன்றாக இருந்த போதிலும், உபாதியால்
(1) கடாகாயம் (குடத்தில் இருக்கும் ஆகாயம்) மடாகாயம் (வீட்டிலிருக்கும் ஆகாயம்) என்று எப்படிப் பலவகைப்படுகின்றதோ அப்படியே பிரம்மமும், உபாதியால் பலவகையாகத் தோன்றும். கடாகாயமும், மடாகாயமும். உண்மையில் எப்படி வெவ்வேறல்லாமல் ஒன்றுதானோ அப்படியே ஆத்மாவும் ஒன்று தான். எப்படி ஆகாயத்தைத் தவிர ஆகாயம் என்பது வேறானதல்லவோ அப்படி ஆத்மாவைத் தவிர ஆத்மா என்பது வேறல்ல.

 

தண்ணீர் மேகத்தின் சேர்க்கையால் எப்படி ஆலங்கட்டிகளாகின்றதோ, அப்படி மாயையின் சேர்க்கையால் ஆத்மா பிரபஞ்ச வடிவமாக ஆகிறது. மேகத்தின் சேர்க்கையால் தண்ணீரே ஆலங்கட்டிகளாகத் தோன்றுகின்றது. ஆலங்கட்டி நாசமடைந்தாலும், தண்ணீர் நாசமடைவதில்லை. அப்படியே மாயையின் சேர்க்கையால் ஆத்மாவே பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. பிரபஞ்சம் நாசமடைந்தபோதிலும் ஆத்மா நாசமடைவதில்லை. தண்ணீரிலுண்டாகும் நீர்க்குமிழி எப்படித் தண்ணீரை விட வேறாகத் தோன்றுகின்றதோ அப்படி ஆத்மாவி லுண்டாகும் பிரபஞ்சமும் அதைவிட வேறாகத் தோன்றுகிறது. நீர்க்குமிழி நாசமடைந்தபோதிலும், எப்படி நீர் நாசத்தையடைவதில்லையோ அப்படியே பிரபஞ்சம் நாசமடைந்தபோதிலும் ஆத்மா நாச மடைவதில்லை.

 

பாம்பின் சட்டையில் தோன்றும் சுத்தமும் அசுத்தமும் எப்படிப் பாம்பைச் சம்பந்திப்பதில்லையோ அப்படியே ஸ்தூல தேகத்தில் தோன்றும் சுத்தமும் அசுத்தமும் ஆத்மாவைச் சம்பந்திப்பதில்லை. எப்படி ஒரு பாம்பு தன் சட்டையைத் தானாக நினைப்பதில்லையோ அப்படி ஞானி தனது தேகத்தை ஆத்மாவாக நினைப்பதில்லை. பாம்புச் சட்டை நாசமடைவதால் எப்படிப் பாம்பு நாச மடைவதில்லையோ அப்படியே தேகம் நாசமடைவதால் ஆத்மா நாசமடைவதில்லை. நெருப்பில் காய்ச்சப்பட்ட இரும்பை எப்படி மனிதர் நெருப்பாக நினைக்கிறார்களோ அப்படி ஸ்தூல தேகத்தை ஆத்மாவாக நினைக்கிறார்கள்.
 

எப்படி (1) தாஹகம் (2) தாஹயமாவ தில்லையோ, தாஹயம் எப்படி தாஹக மாவதில்லையோ அப்படியே ஆத்மா அனாத்மாவாகவும், அனாத்மா ஆத்மாவாகவும் ஆவதில்லை. சூரியனுடைய வெளிச்சத்தால் எப்படி உலகத்திலிருக்கும் வஸ்துக்களெல்லாம் பிரகாசமாகத் தெரிகின்றனவோ அப்படி(1) க்யாதா, (2) க்யேயம், (3) ஞானம் [ (1) அறிகிறவன், (2) அறியப்படும் பொருள், (3) அறிவு) இம்மூன்றும் எதனால் பிரகாசமாகத் தெரிகின்றனவோ அதுவே ஆத்மாவாகும். சூரியனுடைய வெளிச்சத்தால் உலகத்திலிருக்கும் வஸ்துக்கள் தெரிவது போல ஆத்மப்பிரகாசத்தால், க்யாதா, க்யேயம், ஞானம் இம் மூன்றும் பிரகாசமாகத் தெரிகின்றன.

 

சர்க்கரையுடன் சேர்ந்த மாவு எப்படிச் சர்க்கரை போல் பிரியமாகவிருக்கிறதோ அப்படியே ஆத்மாவின் சேர்க்கையால், க்யாதா, க்யேயம், ஞானம் இம் மூன்றும் பிரியமாக விருக்கின்றன. ஒரு பானையிலிருக்கும் தண்ணீர் நெருப்பின் சேர்க்கையால் உஷ்ணமுடையதாக ஆகிறது. நெருப்பு இல்லாவிடில் தண்ணீரில் உஷ்ணம் ஏற்படுவதில்லை. அப்படியே உலகத்திலிருக்கும் பதார்த்தங்கள் ஆத்ம பிரகாசத்தின் சேர்க்கையால் பிரகாசிக்கின்றன. எப்படி ஒரே ஆகாயம் அநேக பாத்திரங்களி லிருக்கின்றதோ அப்படி ஒரே ஆத்மாவும் அநேக தேகங்களில் இருக்கின்றது.

 

அநேக பாத்திரங்களில் ஆகாய மிருந்த போதிலும், உண்மையில் அது எப்படி வேறுபடுவதில்லையோ அப்படி அநேக தேகங்களில் ஆத்மா இருந்த போதிலும், வேறுபடுவதில்லை. எப்படிப் பாத்திரங்கள் நாசமடைந்த போதிலும், ஆகாயம் நாசமடைவதில்லையோ, அப்படியே தேகங்கள் நாசமடைந்த போதிலும், எங்கும் நிறைந்த ஆத்மா நாசமடைவதில்லை. நாம் அநேகம்புஷ்பங்களை ஒரு நூலில் கோத்து மாலையாகக் கட்டுகிறோம். அவ்வெல்லாப் புஷ்பங்களிலும் நூல் இருக்கிறது. புஷ்பங்கள் நாச மடைந்த போதிலும், நூல் நாச மடைவதில்லை. அப்படி எல்லாத் தேகங்களிலும் ஆத்மா இருக்கிறது. தேகங்கள் நாசமடைந்த போதிலும் ஆக்மா நாசமடைவதில்லை.

 

அந்த ஆத்மா உடலும் அல்ல, இந்திரியங்களுமல்ல. ஏனென்றால் உடலுக்கும் இந்திரியங்களுக்கும் அழிவுண்டு. ஆத்மாவிற்கு அழிவில்லை. பிராணனும் ஆத்மாவல்ல. ஏனெனில் பிராணன்கள் அநேகம், ஆக்மா ஏகம். மனதும் ஆச்மாவல்ல. ஏனென்றால் மனம் சாம், ஆத்மா அசலம். புத்தியும், ஆத்மாவல்ல. ஏனெனில், புக்தி விகாரமடையும் ஆத்மா விகாரமடைவதில்லை. ஒரு நீல வஸ்திரத்திலாவது, இரக்த வஸ்திரத்திலாவது, படிகக்கல்லை வைத்தோமாகில், அப் படிகக்கல் நீலமாகவும் இரக்தமாகவும் தோன்றும். அது உண்மையில் நீலமும் இரக்கமுமல்ல. அப்படி ஆத்மா (1) அன்னமயகோசத்தாலும், (2) பிராணமய கோசத்தாலும், (3) மநோமய கோசத்தாலும், (4) விக்யானமய கோசத்தாலும், (5) ஆனந்தமய கோசத்தாலும், உண்டாகும் குணதோஷங்களில் சம்பந்திப்பதில்லை. பித்ததோஷத்தால் தலைசுற்றுகிறவனுக்கு பூமியே சுற்றுகிறது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் பூமி சுற்றுகிறதில்லை. அப்படி நிர்விகாரமான ஆத்மாவும், விகாரமடைவ தில்லை.

 

கனவில் தோன்றும் சுகதுக்கங்கள் ஜாக்ரத்தில் எப்படி தேகத்தில் சம்பந்திப்பதில்லையோ அப்படியே ஜாக்ரத்திலுண்டாகும் சுகதுக்கங்களும் ஆத்மாவைச் சம்பந்திப்பதில்லை. நித்திரை செய்யும் பொழுது நித்திரையிலிருக்கும் தேகம் ஜாக்ரத்தேகம் போலவே தோன்றுகின்றது. ஆனால் நித்திரையில் தோன்றும் தேகம் நாசமடைந்தாலும், ஜாக்ர தேகம் நாசமடைவதில்லை. அப்படி ஜாக்ராவஸ்தையில் இருக்கும் தேகம் ஆத்மா போல் தோன்றுகின்றது. ஜாக்ர தேகம் நாச மடைந்தபோதிலும், ஆத்மா நாசமடைவதில்லை. கனவில் காணும் சுகத்தை அனுபவிக்க எப்படி ஆசை உண்டாவதில்லையோ அப்படி சுவர்க்கத்திலிருக்கும் சுகத்தை அனுபவிக்க ஆசை உண்டாவதில்லை. கயிற்றின் ரூபத்தை யறியாதவன் கயிற்றைப் பாம்பென்றெண்ணி எப்படி பயப்படுகிறானோ அப்படி அஞ்ஞானி பிரபஞ்சத்தில் துக்கத்தை யனுபவிக்கிறான். கயிற்றைக் கயிறென்றறிந்தவன் எப்படி பயந்தோடுவதில்லையோ, அப்படி ஞானி சம்சாரதுக்கத்தை அனுபவிப்பதில்லை. ஜலத்துடன் சேர்ந்த உப்பு எப்படித் தண்ணீராய் விடுகிறதோ, அப்படியே ஆத்மாவுடன் சேர்ந்த புத்தி ஆத்மாவாகிறது. சூரியன் ஒன்றாக இருந்த போதிலும், அநேகம் தண்ணீர்க் குடங்களில் பிரதி பிம்பித்து எப்படி அநேகமாகத் தோன்றுகிறதோ, அப்படி ஆத்மாவும் அநேக தேகங்களில் அநேகமாகத் தோன்றுகின்றது. தண்ணீரில் பிரதிபிம்பித்த சூரியன் ஆகாயத்திலிருக்கும் சூரியனைவிட எப்படி வேறாகத் தோன்றுகிறதோ அப்படி ஆத்மாவைத் தவிர வேறாக ஆபாஸம் என்ற பெயருடன் புத்தியில் பிரதிபிம்பத்த ஆத்மாவும் தோன்றுகின்றது. பிம்பமில்லாமல் தண்ணீரில் பிரதிபிம்பம் எப்படித்தோன்றாதோ, அப்படி ஆத்மாவில்லாமல் புத்தியில் சிதாபாஸம் தோன்றுகிறதில்லை. பிரதிபிம்பத்திலிருக்கும் குணதோஷங்கள் எப்படி பிம்பத்தில் சம்பந்திப்பதில்லையோ, அப்படியே சிதாபாஸனுக்கு இருக்கும் கர்த்ருத்வாதி குணங்கள் ஆத்மாவைச் சம்பந்திப்பதில்லை. தண்ணீரிலிருக்கும் குளிர்ச்சி தண்ணீரில் பிரதிபிம்பித்த சூரியனை எப்படிச் சம்பந்திப்பதில்லையோ, அப்படியே புத்தியின் குணதோஷங்கள் சிதாபாஸனைச் சம்பந்திப்பதில்லை. புத்தியின் கர்த்ருத்வம், போக்த்ருத்வம், துக்கித்வம் முதலிய குணங்களுடன் சேர்வதால், சிதாபாஸன் கர்த்தாவாகவும், போக்தாவாகவும், துக்கியாகவும் தோன்றுகின்றது. எப்படியெனில், பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் அசைந்தால் அதில் பிரதிபிம்பித்த சூரியனும் அசைவதுபோல, பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் நாசமடைந்தால் அதிலிருக்கும் சூரியன் காணாமற் போவது போல் புத்திலயத்தை அடைந்த போது சிதாபாளனும் காணாமற் போய் விடுகிறது. ஆகாயத்திலிருக்கும் சூரியன், தண்ணீரிலிருக்கும் சூரியனையும், தண்ணீரையும், அலைகளையும் எப்படிப் பிரகாசிக்கச் செய்கின்றதோ அப்படி ஆத்மா சிதாபாலனையும், புத்தியையும், புத்தியின் கர்த்ருத்வம் முதலியகுணங்களையும், பிரகாசிக்கச் செய்கின்றது. மேகத்தைப் பிரகாசிக்கச் செய்யும் சூரியன் மேகத்தால் மறைக்கப்படுகின்றது. அதுபோல அக்யானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மா, அக்யானத்தால் மறைக்கப்படுகின்றது. சூரியன் மேகம் முதலியவற்றைப் பிரகாசிக்கச் செய்வது போல ஆத்மா ஸ்தூல தேகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. எல்லா வஸ்துக்களையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியன் எப்படி அந்த வஸ்துக்களால் தோஷ மடைவதில்லையோ அப்படி எல்லா வஸ்துக்களையும் பிரகாசிக்கச்செ ய்யும் ஆத்மாவும், அந்த வஸ்துக்களால் தோஷத்தை யடைவதில்லை.

 

கண்ணாடியில் தோன்றும் முகம் முகம் போலவே இருக்கின்றது. அது போல புத்தியிலிருக்கும் ஆபாஸனும், உண்மையான ஆத்மாவைப் போல் தோன்றுகின்றது. கண்ணாடியில் தோன்றும் முகம் நாசமடைந்தாலும், உண்மையான முகம் நாசமடைவதில்லை. அவ்வாறே, புத்தியில் தோன்றும் சிதாபாஸன் நாசமடைந்த போதிலும், ஆத்மா நாசமடைவதில்லை. கயிற்றில் தோன்றும் பாம்பு எப்படி சத்யம் என்று தோன்றுகின்றதோ அப்படி ஆத்மாவில் தோன்றும் பிரபஞ்சமும் சத்தியம் போலிருக்கிறது. உண்மையில் பாம்பில்லாததால் எப்படி கயிறு ஒன்று மாத்திரம் மிகுதியாகிறதோ, அப்படி உண்மையில் பிரபஞ்சம் இல்லாததால் ஆத்மா மாத்திரம் மிகுதியாகின்றது. உபாதியின் நீலநிறமும், சிவப்புநிறமும் எப்படி படிகக்கல்லில் தோன்றுகிறதோ, அப்படி ஆத்மாவின் கண் இருக்கும் சத்வம் பிரபஞ்சத்தில் தோன்றுகின்றது. படிகக்கல்லில் சிவப்புநிறம் எப்படி மித்தையோ, அப்படி ஆத்மாவில் தோன்றும் பிரபஞ்சமும் மித்தையாகும். அக்யானிகள் ஜீவன் என்றும் ஈச்வரன் என்றும் பேதம் கற்பிக்கிறார்கள். உண்மையில் பேதமில்லை. தேகசம்பந்தத்தால் பரமாத்மாவிற்கு ஜீவனென்று வ்யவகாரம் ஏற்படுகிறது. தேகம் நாசமடைந்தால் ஜீவன் என்ற வ்யங்காரம் எது? உண்மையில் ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் பேதமென்பதில்லை. ஜீவனுக்கும் ஈசுவரனுக்கும் பேதமில்லை யென்ற ஞானம் எவனுக்கு ஏற்படுகிறதோ அவனே ஞானியாவான், பாலுடன் சேர்த்த தண்ணீரும் பாலைப் போல் காணப்படுகிறது. அப்படி ஆத்மாவின் சேர்க்கையால், அனாத்மாவும் ஆத்மாவாகத் தோன்றுகின்றது.

 

பாலையும் நீரையும் பகுத்தறியக்கூடியது ஹம்ஸந்தான். அப்படி ஆத்மா அநாத்மாவை பகுத்தறிபவன் சந்நியாசி ஒருவன் தான். இருட்டில் நிற்கும் ஓர் கட்டையைப் பார்த்துத் திருடன் என்று நாம் பிரமிக்கிறோம். ஆனால் திருடனுடைய குணங்கள் அக்கட்டைக்கு ஏற்படுவதில்லை. அப்படி நிர்விகாரமான ஆத்மா விகாரம் அடைவதில்லை. இருட்டிலிருக்கும் கட்டையைக் கட்டையென்றறிந்தால் திருடன் என்ற பயமும் பிரமமும் போய்விடுகிறது. அப்படி ஸ்வஸ்வரூபத்தை அடைந்தால் பிரபஞ்சம் என்பது இல்லை. ஸ்வஸ்வரூபத்தை அடைந்தவன் மோக்ஷத்தை யடைகின்றான்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர், டிசம்பர், ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment