Monday, August 31, 2020

 

சூதினால் வரும் தீமைகள்

 

சகோதர சகோதரிகாள்!


பூர்வத்தில் நாம் செய்த புண்ணியத்தால், நமது அஞ்ஞானத்தையோட்டி, மெய்ஞ்ஞானத்தைப் போதிக்கவரும் ஆனந்தபோதினியின்கண், மேற்கண்ட தலைப்பை ஒட்டிச் சில விஷயங்களை எழுதத் துணிந்தேன். என்னிடத்தில் உள்ள பிழைகள் பெருமலைபோலத் தோன்றும் எனினும்,'' நல்லார் பிறர்குற்றம் நாடார் " என்னும் எண்ணம் தூண்டுதலினால், நான் இதை எழுதத் துணிந்தேன்.

 

இக்காலத்தில் நடக்கும் சில சீர்கேடான விஷயங்களைக் காணும் போது, நமது தாய்நாட்டின் க்ஷேமத்தைக் கோரும் ஒவ்வொரு தேசாபி மானியும் மனம் நொந்து உளங்குன்றுவாள் என்பதற்கோர் ஐயமும் இல்லை. சில செல்வவந்தர்களோ, நமது தாய்நாடு கூடிய சீக்கிரத்தில் கெடும் பொருட்டு, குலதர்மத்தையும் கைவிட்டு, மற்றும் பாவச் செய்கைகளைச் செய்கிறார்கள். முயற்சி யில்லாமல், பழிபாவங்களை விளைவிக்கும் வழியில் பணம் சம்பாதித்து ஜீவிப்பதைவிட, நல்ல முயற்சியினால் கிடைக்கும் பொருளை வைத்து, தரித்திரத்தை அனுபவிப்பதே நலம்.

 

பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும்
      கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
      பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை
      நீரு மமிழ்தாய் விடும். - -
            என்று சொல்லியிருக்கிறார் (நாலடியார்.)

 

தாய் நாட்டிலுள்ள மானிடர்கள் செய்யும் பாபச் செய்கைகளில், சூது விளையாடல் ஒன்றாகும். இன்னும் அனேகர்கள் இதையே முதற்றொழிலாக வைத்துக்கொண்டு, ஜீவித்து வருகிறார்கள். இவர்களைக் காணும்போ தெல்லாம் என் மனம் எரிகின்றது. ஈசனே! ஈசனே!! இத்தகைய மதி கேடும் நம்மவர்க்கு வருமோ? இது வெறும் பொய்யனுக் கருந்துணை; மெய்யனுக்குறும் பகை என்று இவர் உணர்கின்றாரில்லை. இவ்வாறு விளையாடுவானேன்? போலீஸார் வசம் கைச்சிறையாலானேன்? பின்னும் உதைகள் படுவானேன்? மான மழிவானேன்? இவைகளெல்லாம் இச் சூதினாலன்றோ?

 

இவ்வாறாக ஒருவன் விளையாடுவதற்கு முன், 'நாம் சூது விளையாடலாமா? இது கேவலமன்றோ, பணத்தை யெல்லாம் இழந்து ஆண்டியாக வேண்டிய திருக்குமே, பின்னும் உறவினர்களும், சினேகிதர்களும், நம்மைஇகழ்வார்களன்றோ' என்று முதலிலே கருதுகின்றானா? இல்லவே இல்லை. இதைக் கருதியே வள்ளுவர்


     "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
     எண்ணுவ மென்ப திழுக்கு''

 

என்று சொல்லி யிருக்கிறார். சூதாடுவோர்கள் இதனைக் கிஞ்சித்தேனும் கவனிக்கிறார்களா? அய்யோ! பாவம். உதாரணமாக நிடத நாட்டரசனான நளன், புட்கரனோடு சூதாடுகையில், முதலில் பொன்னைப் பந்தயமாக வைத்து ஆடினான். பின்பு, ஆடையாபரணங்களையும், ரதகஜ துரக பதாதிகளையும் வைத்து ஆடுகையில், நளனே தோற்றனன். அப்பொழுது மந்திரிமார்கள் வந்து,

 
      "உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
      திருவழிக்கும் மானஞ் சிதைக்கும் - மருவும்
      ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது

பொருவரோ தக்கோர் புரிந்து''


எனப் பலவாறு சொல்லியும், நளன் கேட்கவில்லை. கடைசியாக'' உன் மனைவி, தமயந்தியைப் பந்தயம் வைத்து ஓர் ஆட்டம் ஆடு" என்று புட்கான் சொல்லவும், புண்ணில் தீக்கோல் நுழைந்தது போலிருந்தது. நளன் மனம். இதைக் கேட்கவும், அவன் ஒற்றை வஸ்திரத்துடன், தன் மனைவி யோடு, கானகத்திற்குச் சென்றான். இவைக ளெல்லாம் சூதினாலன்றோ?

 

ஆகையால், சூதுவிளையாடுவதினால் பொன்னையும், ஆடையாபரணங்களையும், பின்னும் மனைவியையுங் கூட இழக்கவேண்டியதா'யிருக்கும். பின்னும் நம்முடைய மானமும் போய்விடும்.'' மான மழிந்த பின் வாழாமை முன்னினிதே'' என்றபடி மானமழிந்தபின் வாழவும் வேண்டுமா? ஆதலால் ஆண்டவன் அளித்த அற்பாயுளில் வாழ்நாட்களை வீணாக்காமல், சூது, களவு, பொய், முதலியவற்றை விட்டுவிட்டு, மறுமைக்கு வேண்டியதான தருமங்களைச் செய்து, எல்லாம்வல்ல பரம்பொருளை அனுதினமும் ஆராதிப்போமாக:

 

சுபம். சுபம்.


K. கிருஷ்ணன், எட்டியாபுரம்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச் ௴

 

 

   

 

 

சுக்கிரீவ ஆக்ஞை

சுக்கிரீவ ஆக்ஞை என்பது நமது நாட்டில் வழங்கப்பெற்று வரும் பழமொழிகளுள் ஒன்று. ஒரு காரியத்தைச் செய்யும்படி ஒருவர் மற்றொருவருக்கு உத்தரவிட்டாலோ அல்லது அவரைக் கேட்டுக் கொண்டாலோ அவ்வாறு உத்தரவிடப்பட்ட அல்லது கேட்டுக் கொள்ளப்பட்ட வர், அக்காரியத்தை உடனே செய்யத்தவறின், அன்னவரை நோக்கி '' ஏன் நமது உத்தரவை அல்லது வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்கிற கேள்வி நிகழும்போது " இதென்ன சுக்கிரீவ ஆக்ஞை'போலிருக்கிறதே " என்னும் மறுமொழி சில சந்தர்ப்பங்களில் பிறப்பது உண்டு. இதனைச் சிறிது பரியாலோசித்து, இதனால் நமது தாய் நாட்டை எவ்விதம் முன்னேற்றத்திற்குக் கொண்டு வரக்கூடுமோ அந்த உபாயத்தை யறிவோமாக.

 

சுக்கிரீவன் வானரேந்திரனாகிய வாலியின் தம்பி. வாலியோ அறிவு, ஆற்றல், தெய்வ நம்பகம் முதலிய சிறந்த குணங்கள் பொருந்தப் பெற்றவன். ஆகிலும் அகங்காரத்திற்கு இடங்கொடுத்தான். அக்காரணத்தால் அவ்வுயர்ந்த குணங்கள் அவனுக்கு வேண்டுஞ் சமயத்திற் பயன்படா தொழிந்தன. அவ்வாலி, சுக்கிரீவன் விஷயத்தில்'' ஐயோ! இவன் இளையவன்றானே; பெருந்தவறொன்றுஞ் செய்துவிட வில்லையே! நமது நாட்டாரின் வேண்டுகோளுக்கு இசைந்தன்றோ அரசுபுரிய உட்பட்டான்; இப்போது அச்செய்கையையும் தப்பிதமென்றே ஒத்துக்கொண்டு நம்மையே சரணாகதியடைந்தனனே; அவனுக்கு நம்மினும் உத்திருஷ்டமான உதவி வேறெவர்? " என்பவையாதிய நியாய நெறிகளை யொரு சிறிதும் கவனியாது, அவன் மனைவியையுங் கைப்பற்றிக்கொண்டு, 'இடங் கொடுத்தால் மடம் பிடுங்குவான்' என்றெண்ணிச், சிட்டுக் குருவியின் மீது இராமபாணந் தொடுத்தது' போல அவனைத் தொந்தரைக்குட்படுத்தினான். இது தனது பராக்கிரமத்துக்கே இழிவு என்பதையும் புறக்கணித்தான்.

 

இவ்வண்ணந் தன் உயிர்க்கு இறுதி தேடப்புகுந்த அண்ணனை '' உடன் பிறந்தே கொல்லும் வியாதி " க்கு நிகரெனக் கருதி, சுக்கிரீவன் தனக்குத் தக்க துணை சிக்கு மட்டும் பக்குவமாகப் பதுங்கி யிருந்தான். சுக்கிரீவனும் சாமானியன் அன்று. உத்தம குணங்களும், உயர்ந்த நடை யும் உள்ளவன். அரச தருமம் அனைத்தும் உணர்ந்தவன் "............ அரசும், இல் வாழ்வா ரில்வழியில்'' ஆதலின், அதற்குப் பழுது நேராதபடி குடி களைப் பெருக்கி அவர்களுக்குத் தன்னிடம் பூரண நம்பிக்கை யுண்டா கத்தக்க வழிகளை மேற்கொண்டு வந்தான். பால் தொட்டுப் பால் கறப்பது போலத் தன் பிரஜைகளிடம் அன்பு காட்டி அன்பு பெற்று வந்தான். இதனால் அவனிடமிருந்த சேனைகள் எழுபத்திரண்டு வெள்ளமும் அவன் மேற் பிரியங்கொண்டு அவன் சொற்படி நடக்க நேர்ந்தது. நிற்க,

 

கவலைக்கடலைக் கடக்கும் பொருட்டு, கண்ணியமானதோர் புணையா கிற துணையை நாடித்திரியும் சுக்கிரீவன் முன், இணையேற்றமிலாக் குணநிதி யாகிய ஸ்ரீராமபிரான் தோன்றினன். மெய்யன்பர்க்கு இடர் நேர்ந்த போது, உடுக்கை யிழந்தவன் கைபோன்று உதவ எங்கும் நிறைந்த ஐயன் எதிர்ப்படாமல் இருப்பனோ? "உடுத்த பெருந்திசை யனைத்தும் ஒலி கொள்ள உறு துயரால், அடுத்த பெருந்தனி மூலத்தரும் பரமே! பரமே!! என்றெடுத்து", கரிராஜனொருவன் அழைத்தபோது, அபயாஸ்தத்தை அவன் மீது வைத்து "என் அப்பா! இப்படிக் கூவுகின்றாய்? நான் தூரத்தில் இருப்பதாக நினைத்துவிட்டாயோ? தற்போதமற்ற அன்பர்களிடமே சதா குடிகொண்டிருப்பவன் யான் என்பதை மறந்தனை போலும்; மார்ச் சால நியாயத்தால் வழிபடுவோரையும், பெற்ற தாயினும் பற்று மேற் கொண்டு, இருப்பவனன்றோ?'' என்றருளிய பரமபுருஷன், நமது சுக்கிரீவன் சஞ்சலத்தைத் தீயிலிட்ட பஞ்சுபோலாக்க ஸ்ரீராமபிரானாகத் தோன்றினான்.

 

பண்டிதோத்தமரான மாருதியால் சுக்கிரீவன் ஸ்ரீராமபிரானுடைய குணாதிசயங்களை நன்கறிந்து, பிரியா நட்பைப் பிரியமாய்ப் பெற்று, பகைவனை வென்று சுகக்கடலி லாழ்ந்தான். பிறகு,

 

சுக்கிரீவன் தனக்கு மந்திரியாக மாருதியையும், பகைவரைத் தடுக்க வல்லதும், நட்பினரை ஆதரிக்க வல்லதுமாய், வற்றாத நீரையும், வெளிப் பிரதேசத்தையும், செழுமை வாய்ந்த பெருத்த மலைகளையும், அடர்ந்த வனங்களையும் கொண்ட கிஷ்கிந்தையை நாடாகவும் கொண்டு, ஊக்கமும் உற்சாகமும் உள்ள சேனா வீரர்களையும், ஐக்யமும் அன்புந் தழைத்த குடி மக்களையும் துணையாகப் பெற்று, செய்தொழிலில் அசட்டையாயிருத்தல் அளவறியாது செய்தல், பொருந்தாதவற்றை மேற்கொள்ளல் முதலிய விலக்குகளையனுசரித்து, காருண்யத்துடன் நடந்து வந்தபடியால் அவனுடைய கட்டளையை அவனது குடி ஜனங்கள் 'இராணுவக்கட்டளை' போல் தழுவி, சிறிதும் வழாது கீழ்ப்படிந்து வந்தனர். அக்கட்டளை உலகுள்ளளவும் நின்று நிலவ 'சுக்கிரீவ ஆக்ஞை' என்று வழங்கி வருகிறது. இத்தகைய கட்டளை, ஒற்றுமையோடு கூடிய கட்டுப்பாட்டைப் பலப்படுத்துகின்றது. இதற்குத் தலைவனுக்கும் பிறர்க்கும் இருக்க வேண்டிய பரஸ்பரோக்தமான அன்புதான் காரணம். உயிர் நிலையே அன்பின் வழியதாதலின், அந்த அன்பு எங்கு வளர்ந்து வருகிறதோ அங்கு சித்திக்காத விவகாரம் ஒன்றுமே யில்லை.

 

ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய அன்பானது தோஷ ராகிதமாகப் பரவி, பெரியோர் கட்டளைக்குச் சிறியோர் கீழ்ப்படிந்து நடந்துவரின், ஒற்றுமை பலத்து, சுதந்தரத்வம் தானேஉண்டாகி விடும். குடும்பத்திலுள்ள பெரியோர், இந்த நோக்கத்தை யுட்கொண்டு, தம்மைப் பின்பற்றியுள்ளவர்களை வேண்டிய உபாங்கங்களுடன் சீர்திருத்தி வந்தால் எல்லா நன்மையும் தன்னிடையே கைகூடும்.


 ம. இராஜகோபால பிள்ளை,

 கோமளே சுவரன் பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - டிசம்பர் ௴

 

 

 

 சுகாதாரம்-ஆரோக்கியப் பழக்க வழக்கங்கள்

ஆரோக்கியப் பழக்க வழக்கங்கள்

 

1.   சுகாதார இருப்பிடங்களில் தங்கும் விதிகளைக் கவனித்தல்

2.   எந்த விதமான புகையிலையையும் உபயோகிக்கா திருத்தல்.

3.   தொத்து வியாதி சம்பந்தப் பட்டவர்களை விட்டு விலகி இருத்தல். 

4.   டாக்டர் அனுமதியின் மேல் மருந்தைச் சாப்பிடுதல். வீட்டு மருந்துகளுக்கு இது அவசியமில்லை

5.   ஜலதோஷம் வர வொட்டாமல் தடுத்துக் கொள்ளுதல்.

6.   படுக்கைக்குப் போகும் காலத்தை ஒழுங்குப் படுத்தல்

7.   வியாதியிலிருந்து தேறி வரும் போது வெகு ஜாக்கிரதையாய் தேகத்தைப் பாது காத்தல்

8.   வெளிக் காற்றிலாவது, ஜன்னல்களைத் திறந்து வைத்தாவது படுத்துறங்குதல்.

9.   சர்ம வியாதிகள், தொத்து வியாதிகள் இவைகளை வர வொட்டாமல் தடுத்துக் கொள்ளுதல்

10.  அறையில் விளக்கு வைக்காமல் படுத்துறங்குதல்.

11.  பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த விளையாடுமிடம், வீடு, முற்றம், தெருக்கள், சந்துக்கள், பார்க்குகள், முகாம் போடும் இடங்கள் இவைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளுதல்.

12.  படுக்கும் போதாவது, ஓய்வடையும் போதாவது தேகத்தை நீட்டிக் கொண்டிருத்தல்.

13.  தாழ்ந்த தலையணையை உபயோகித்தல்; அல்லது தலையணை யில்லாதிருத்தல்.

14.  சமையலறை, ஸ்நான அறை, படுக்கை அறை இவற்றைச் சுகாதார நிலைமையில் வைத்திருத்தல்.

15.  போதுமானதும், லேசானதும், வெப்பமுள்ளதுமான போர்வையை உபயோகித்தல்

16.  வீட்டுக்குப்பை, செத்தை இவைகளைச் சரியான பாண்டங்களில் திரட்டிப் போடுதல். பள்ளிக்கூடத்திலாவது, வீட்டிலாவது ஓய்வு இருக்கும்போது படுத்துக் கொள்ளல்

17.  கொசுக்கள் மூட்டைப் பூச்சிகள் வளர வொட்டாமல் தடுத்தல்.

18.  பகலில் போதுமான ஓய்வடைய ஏற்பாடு செய்தல்

19.  தேகம் வளர்ந்து வரும்போது தேயிலை, காப்பி முதலிய பானங்களைக் குடியாதிருத்தல்.

20.  கூடுமானால் சாப்பிட்டானவுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளல்

21.  சாராயம், கள் முதலிய போதை வஸ்துக்களைக் குடியாதிருத்தல்.

22.  தூங்கு முன் லேசான ஆகாரம் சாப்பிடுதல்.

23.  தூங்கப் போகு முன் மனதிற்கு அதிக வேலையாவது கிளர்ச்சியாவது கொடாம லிருத்தல். (சாயங்கால வேளையில் நிம்மதியாயிருத்தல்.)

24.  சூரியனையாவது, பிரகாசமான வெளிச்சத்தையாவது சேராகப் பார்க்காமல் இருத்தல் (வேண்டும் போது கண்ணாடி போட்டுக் கொள்ள வேன்டியது.

25.  பிரதி தினம் காலையில் படுக்கைத் துணியைக் காற்றாடவிடல்.

26.  வெளிச்சத்தைப் பார்க்க வேண்டுமானால் இருட்டைக் கொடுக்கும் கண்ணாடி போட்டுக் கொள்ள வேன்டியது

27.  வாரத்தில் ஒரு இரவு இஷ்டர்கள் கூட்டத்தில் போயிருத்தல்.

28.  தன் சொந்த படுக்கையில் படுத்துறங்குதல், கூடுமானால் தன் சொந்த அறையிலேயே படுத்துறங்குதல்

29.  நுட்பமான வேலையைத் தவிர்த்தல்

30.  அடிக்கடி கண்களுக்கு ஓய்வு கொடுத்து, களைத்திருக்கும் போது மூடியாவது, அல்லது தூரத்திலுள்ள வஸ்துக்களையாவது பார்த்தல்.

31.  சௌகரியத்திற்கும், வேலைக்கும் ஒத்தாற்போல், ஆடையைத் தகுந்தபடி வைத்துக் கொள்ளுதல். இறுகக்கட்டும் கட்டுகள் அல்லது நெகிழ்ச்சியுள்ள வஸ்துக்கள் கூடா.

32.  படுத்துக் கொண்டே வாசியா திருத்தல்.

33.  உடையை கூடுமானவரையில் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

34.  போய்க் கொண்டிருக்கும் வண்டிகளில் வாசியாதிருத்தல்.

35.  ஆடையை நனைய வொட்டாமல் பார்த்துக் கொள்ளுதல், ஈரமான உடையை கூடிய சீக்கிரத்தில் அவிழ்த்துப் போடுதல்; குளிர் எடுத்தால் வெப்பமாக்கிக் கொள்ளல்

36.  கண்களில் ஏதாகிலும் கெடுதல் இருந்தால், டாக்டரைக் கேட்டு நடத்தல்.

37.  கண்களில் புண் இருந்தாலும், கண்கள் ஓய்ந்து கிடந்தாலும், அவைகளை கழுவிச் சுத்தம் செய்தல்.

38.  உஷ்ணாக்கிரம் சீதோஷ்ணம் இவற்றிற்குத் தகுந்தபடி உடுக்கும் உடையைச் சரிப்படுத்திக் கொள்ளல்,

39.  காதுகளை ஜாக்கிரதையாய்க் கழுவுதல்,

40.  காதுகளில் ஒன்றையும் போக வொட்டாமல் தடுத்தல்

41.  சீதோஷ்ணம், ருது இவற்றிற்குத் தகுந்தபடி உள் ஆடையைத் தரித்தல்.

42.  அதிகப்படியான கழுத்துப் பட்டை கம்பளம் முதலியவற்றைத் தவிர்த்தல்.

43.  காதுகளில் சப்தம் செய்யாமலும் மற்றவர்களுடைய காதுகளை இழுக்காமலுமிருத்தல்

44.  வியாயாமம் எடுத்துக்கொண்டபின் வெப்மாயிருந்தால் அதிகப்படி போர்வை போர்த்துக் கொள்ளுதல்

45.  மூக்கில் பலமாய் ஊதி காதுகளுக்குக் கெடுதல் உண்டாகாமால் செய்தல்.

46.  காதுகளுக்குக் கெடுதல் உண்டானால் டாக்டரைக் கொண்டு பார்த்தல்.

47.  கால் பெரு விரல் நகங்களை வளரவொட்டாமல் தடுத்து மேலே சீவி, சரியான பாதரட்சை போட்டுக் கொள்ளுதல்,

48.  நீந்தும் போது காதுகளைப் பாதுகாத்தல்.

 

("ஆரோக்கிய நீபிகை'')

ஆனந்த போதினி – 1930 ௵ - மே ௴