Monday, August 31, 2020

 

சிலப்பதிகாரமும் ஊழ்வினையும்

(வித்வான்-வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் P.O. L.)

 

கலிங்க மண்டிலத்தே சிங்கபுரத்திரன் கண்ணிருந்த வசு என்பவனும், கபிலபுரத்தின் கண்ணிருந்த குமரன் என்பவனும், தாய வேந்தர்கள். இவர்களிருவருக்கும் பகைமை மூண்டது. அதனால் சிங்கபுரத்திலிருந்து கபிலபுரத்துக்கும், கபிலபுரத்திலிருந்து சிங்கபுரத்துக்கும் யாரும் வருதல் கூடாது.

 

இப்படி யிருக்க, கபிலபுரத்திலிருந்த சங்கமன் என்பான் தன் மனைவிபுடன் மாறுவேடம் பூண்டு பல அணிகலன்களை யெடுத்துக்கொண்டு, சிங்கபுரம் சென்று அவ்வூர்க் கடைவீதியில் அணிகலன்களை விலை பேசிக்கொண்டிருந்தான். இச் சங்கமனுக்குப் பகைவனாகிய பரதன் என்பவன் அவனைப் பகைவனுடைய ஒற்றன் என்று சிங்கபுர அரசனிடம் கூறினான்.


அரசனும் இவனைக் கொன்றனன். கொலையுண்ணப்பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பாள், “அரசர்காள்! இது முறையோ! இது முறையோ |" என்று புலம்பி மன்றத்திலும், வீதியிலும் சென்று முறையிட்டுப் பதினான்குகாள் சென்ற பின்னர் ஒரு மலையின் மீது ஏறி நின்று, 'எனக்கு இத் துயரம் செய்வித்தோர் மறுபிறப்பில் தாங்களும் இத்தகைய துன்பத்தை அனுபவிப்பார்களாக' என்று கூறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். காட்டிக் கொடுத்த அப் பரதனே அச் சாபத்தால் கோவலனாகவும், அவனுடைய மனைவியே கண்ணகியாகவும் பிறந்தார்களென்று மதுராபதியின் தெய்வம் கூறியவாற்றால், கோவலனுக்கும் கண்ணகிக்கும் தாங்கள் பழம்பிறவிகளிலே செய்த வினையால் இங்கனம் துன்பம் அடைந்தார்கள் என்று ஊழ்வினை கற்பிக்கப் பெற்றிருக்கின்றது (கட்டுரை காதை 140-170) பாண்டியனும் அவன் மனைவியும் இறந்தமைக்கு ஊழ் ஒன்றும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

 

கோவலன் கண்ணகி இவர்களுடைய ஊழைக் கூறிய தெய்வம் மேற்கூறியதற் கேற்பச் சங்கமனே பொற்கொல்லனாகப் பிறந்து கோவலனைக் காட்டிக் கொடுத்தான் என்றும் ஆராயாது சங்கமனைக் கொன்ற வசு என்ற சிங்புரத்து அரசனே பாண்டியனாகப் பிறந்து கோவலனை ஆராயாது கொன்றான் என்றும் கூறியிருக்குமாயின் கதைப் போக்குக்குப் பொருத்தமாகவிருக்கும். பொற்கொல்லனுக்கு ஊழ் ஒன்றும் கூறவேயில்லை. ஜைனர்களுடைய நூலாகச் சிலப்பதிகாரம் இருக்குமானால் ஒருவனை ஒருவன் காட்டிக் கொடுப்பதும் பண்டைய ஊழின் வழியே யாகும் என்று கூறும் என்பதற்கு ஜைன நூலாகிய மேருமந்திர புராணத்தில் எண்ணிறந்த கதைகளிருக்கின்றன.

 

சோழநாட்டின் கண் பராசரன் என்ற பார்ப்பனன் சேரனுடைய கொடைத்திறனைக் கேட்டு அங்குச் சென்று பல்யானைச் செல்கெழு குட்டுவன் மரபினனாகிய மாந்தர சேரன் என்பவனைக் கண்டு தன்னுடைய கல்வித்திறமையால் அங்குள்ள பார்ப்பனர்களை வென்று பார்ப்பன வாகை சூடிப் பெரும் பரிசில்களுடன் திரும்பி வருகையில் மதுரைக்கு அணித்தாகவுள்ள திருத்தங்கால் என்ற ஊருக்கு வந்து அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறி ''பூந்தண் பொருணைப் பொறையன் வாழி; மாந்தரஞ் சேர்ன் மன்னவன் வாழ்க" (கட்டுரை காதை 83-84) என்று சேரனை வாழ்த்திக் கொண்டிருந்தான். அது போது அவ்வூர் பார்ப்பனச் சிறுவர் சிலர் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட பராசரன், “பிள்ளைகளே! உங்களுக்கு வேதம் வருமோ? வருமாயின் ஒதுங்கள்; உங்களுள் யார் நன்றாக ஓதுகின்றார்களோ அவர்கள் என்னிடமுள்ள பொருள்களைப் பரிசில்களாகப் பெறுவார்கள்" என்முன். அனைவரும் ஓதினார்கள்; அவர்களுள் வார்த்திகன் மகனாகிய தகணாமூர்த்தி என்பவன் மிக நன்றாக ஓதியதைக் கண்டு வியந்து ஆபரணங்கள் பலவற்றையும் அவனுக்குப் பரிசிலாக அளித்தான்.

 

பரிசில் பெற்ற பார்ப்பனச் சிறுவன் அணிகலன்களோடு ஊருக்குச் சென்றான். பெற்றோர் கண்டு கேட்டு மகிழ்ந்தார்கள். இவ் வணிகலன்களைக் கண்ட அரசன் காவலர்கள், இவன் அரசனுக்குச் சொந்தமான புதை பொருளைக் களவாடியுள்ளான் என்று சிறுவனுடைய தந்தையாகிய வார்த்திகன் என்பவனைச் சிறை செய்தனர். அது கண்ட அவனுடைய மனைவி கார்த்திகை என்பவன் மனம் வருத்திக் கீழ் விழுந்து புரண்டு அழுதனள். உடனே அவ்வூர் ஐயை கோட்டம் கதவடைபட்டது. திறக்க முடியவில்லை. அது கண்ட அரசன் நடுங்கி யானியற்றிய “கொடுங்கோ லுண்டு கொல்" (கட்டு 110) என்று மந்திரிமார்களை வினவினான். மந்திரிமார் கடந்தவற்றை அறிந்து கூற, அரசன்; 'அறிவில்லாத காவலரால் நேர்ந்த இக் செய்தியால் என்னுடைய அரசந்தி பிழைத்தது (கட்டு 116-17.) பொறுத்தருளல் வேண்டு மென்று வார்த்திகனுக்கு ஊர்களைத் தானமாகக் கொடுத்து வணங்கி அனுப்பினான். ஐயை கோட்டம் கதவம் திறந்து இலங்னம் இராஜ நீதி பிழைத்ததால், ஆடிமாதத்துக் கிருஷ்ணபகத்து பரணி கார்த்திகையும் கூடிய சுக்கிரவாரத் தன்று இம் மதுரைக்கும், அதுக்கும் கேடு வரும் என்ற ஒரு சோதிட வார்த்தை யுண்டு' என்று மதுரைக்கும், அரசனுக்கும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பரதனும் மனைவியும் கோவலனும் கண்ணகியுமாகப் பிறந்து மறுபிறப்பில் வாழ்வினையை அனுபவித்தார்கள். அரசன் அந்தப் பிறவியிலே யிறந்தான்: என்றது எங்கனம் பொருந்தும்?


      "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாயது''

 

என்றவாறு, கோவலனைக் கொல்வித்த அரசனை அறக்கடவுள் அந்தச் சன்மத்திலேயே கொன்றது, வேறு பிறவேண்டாதாயிற்று என்று ஒரு சமாதானம் கூறுவார்கள். என்றால், அரசன் இறந்தமைக்கும் மதுரை எரியுண்டமைக்கும் காரணம் வார்த்திகனைச் சிறை செய்ததனால் உண்டான சோதிட வார்த்தையா? கோவலன் கொலையா? என்ற கேள்விக்கு விடையாதோ?

கோவலன் கண்ணகி ஊழ் இப்படி யிருக்க, இனி இவர்களோடு சம்பந்தமுடைய மாதவி, அவளுடைய மகள் மணிமேகலை ஆகிய இவர்கள் எவ்வகை யூழால் கோவலனுக்குப் பரத்தையராகவும் மகளாகவும் பிறந்தார்கள் - என்று ஆராய்வோம். இவர்களுடைய முற்பிறப்பு சிலப்பதிகாரத்தில் கூறப்பெறவே யில்லை "ஊழ்வினை உறுத்து வந்தூட்டு மென்பதாகிய செய்தி" சிலப்பதிகாரத்தே வற்புறுத்தப் பெற்றிருக்கின்ற தென்பதற்குச் சான்றாகக் கோவலன் கண்ணகி இவர்களுடைய ஊழ்வினை தான் கூறப் பெற்றிருக்ககின்றதே தவிர, மற்றையோர்களுடைய ஊழ் கூறப் பெறவேயில்லை,

புகார் காண்டத்தேயுள்ள பத்துக்காதைகளுள் ஏறக்குறைய நான்கு. காதைகளில் கூறப் பெறுகின்றவளாகிய மாதவியின் முன்னூழ் கூறப்படவே இல்லை. ஆனால், கடலாடு காதையில் “முன்னம் இந்திர சபையில் ஊர்வசி என்ற அப்சரசு சயந்தன் மீது காதல் கொண்டமையால் தோரிய மடந்தையர்களுடைய பின் பாட்டிற்கும் நாரத முனிவருடைய
வீணைக்கும் ஏற்றவாறு நன்கு நடிக்காமையால் சாபம் பெற்று இவ்வுலகில் கணிகையர் குலத்தில் மாதவி என்ற பெயரோடு (காஞ்சியம் பதியில்) பிறந்தாள். அந்த மாதவி வழியில் வந்தவள் இந்த மாதவி என்று (வரி 18-24) கூறப் பெற்றிருக்கின்றதே யொழிய வேறில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தோடு சமமாக வைத்து எண்ணப்படுவது மணிமேகலை என்ற நூலாகும். இம் மணிமேகலை மதுரை கூலவாணிகன் சாத்தனாரால் செய்யப்பட்டது.
மேலும், மணிமேகலை சிலப்பதிகாரம் செய்யப்படுவதற்கு முன்னமே செய்யப்பட்டதாகச் சிலப்பதிகாரத்தின் இறுதியிலேயுள்ள "நூற் கட்டுரையின் சமணிமேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூடி உரைக்கப்படும். பொருள் முடிந்த சிலப்பதிகாரம் முற்றுதலுற்றது என்று பொருள்படும்." "மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" என்ற தொடர்களால் விளங்குகின்றது. மேலும் உரையில் “அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் (சிலப் - பதிகம் 88-89) என்ற தொடரால் சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டருளினர் என்றும் “இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளம்  கெழு கூலவாணிகன் சாத்தன் மாவண் டமிழ்த்திற மணிமேகலைத் துறவாறைம் பாட்டினு ளறிய வைத்தான்" என்ற மணிமேகலைப் பதிக இறுதித் தொடரால் இளங்கோவடிகள் கேட்க மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் கூறினார் என்றும் காணப்படு:கின்றமையால் இந்த இரண்டு நூல்களும், இரட்டைக் காவியங்கள் என்றும் சம காலத்திய இலக்கியங்கள் என்றும் மணிமேகலை முற்பட்டது சிலப்பதிகாரம் பிற்பட்டது என்றும் பெறப்படுகின்றன. இம் மணிமேகலை நூலில் மாதவியின் வரலாறு பின் வருமாறு கூறப் பெற்றிருக்கிறது. அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மன் என்ற அரசனுக்கும் அவன் மனைவி அமுதபதி என்பவளுக்கும் மூன்று பெண்கள் பிறந்தனர். அவர்கள் பெயர் இலக்குமி, தாரை, வீரை, என்பன. அவர்களுள் தாரையும், வீரையும் கச்சை நகரத்தாசனாகிய அச்சயன் என்ற அரசனை மணந்தனர். துச்சயன் தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு வெளி சென்று மலைவளங் கண்டு வந்து கங்கைக்கரையை யடைந்திருந்தான். அப்போது பாதபங்கய மலையைத் தரிசித்தற்குப் போகும் வழியில் அறவணவடிகள் அங்கு வந்தார். வந்த அடிகளை அரசன் வணங்கி வரலாறு வினவினான். அடிகள் தாம் பாதபங்கய மலையைத் தரிசிக்கப் போவதாகவும் அரசனையும் உடன் வந்து தரிசிக்குமாறும் கூறினார். அதன்படியே அரசன் தன் மனைவியாருடனே அடிகளோடு அம்மலையை அடைந்து புத்த தேவனுடைய பாத பங்கயங்களை வணங்கி மீண்டான். மற்றுமோர் முறை அறவணவடிகள் பாதபங்கய மலையைத் தரிசித்து மீண்டு வருகையில் மேலே குறிக்கப்பட்ட துச்சயனைச் சோலை ஒன்றிற் கண்டு, “அரசே! நீயும் உன் மனைவியாரும் சுகமோ?" என்றார். கேட்ட அரசன் மனங்கவன்று, “அடிகாள்! வீரை மதுவின் மயக்கத்தால் ஒரு யானைமுன் செல்ல அது அவளைக் கொன்றது. அது கேட்ட தாரை மனம் பொறாது மாடத்தின் மீது ஏறி விழுந்து இறந்தாள் என்று கூறி
அழுதான். அது கேட்ட அறவணவடிகள் அறவணவடிகள் “இது பழவினைப் பயனாகும்"
என்று கூறித் தேற்றிப் போயினார். அவர்களுள் தாரை மாதவியாகவும் வீரை சுதமதியாகவும் தோன்றியுள்ளார்கள் என்று மணிமேகலை 7வது துயிலெழுப்பியகாதை, 9வது பீடிகை கண்டு பிறப்புணர்ந்த கதைகளாலும் 10வது மந்திரங் கொடுத்த காதையாலும் 12வது அறவண வடிகளைத் தொழுத காதையாலும் அறியப்படும் பழவினை வரலாறாகும்.

நிற்க, இந்தத் தாரை, வீரை ஆகிய இவர்களுடைய உடன் பிறந்தாளாகிய இலக்குமி என்பவள் அத்திபதி என்ற அரசனுக்கும் நீலபதி என்ற வளுக்கும் மகனாகப் பிறந்த இராகுலன் என்பவனுக்கு மனைவியாயினள். அவனோ திட்டிவிடம் என்ற பாம்பால் கடியுண்டு இறந்தான். அவனுடன் தீப்புகுந்து இலக்குமியும் இறந்தாள். அவளே காவிரிப்பூம்பட்டினத்தில் தன் தமக்கையாகிய (தாரை) மாதயிவினுடைய வயிற்றில் பிறந்தவள் என்றும், வீரையே சுமதியாகப் பிறந்தாள் என்றும் மணிமேகலையே கூறுகின்றது.

அரச குலத்தில் பிறந்து அரசனை மணந்து தங்கையாகிய வீரை என்பவள், யானையால் கொல்லப்பட்டு இறந்த செய்தி கேட்டுப் பெரிதும் வருந்தித் தங்கையாகிய வீரை இறந்த பிறகு தான் உயிர்வாழ மனமில்லாமல் தன்னுடைய கணவனையும் விட்டு, மாடத்தின் மீது ஏறி விழுந்து உயிர் துறந்ததாரை என்பவள் ஒரு பரத்தையாகப் பிறப்பானேன்? நிற்க, ஒருவனும் ஒருத்தியும் கூடுவது ஊழ்வலிமையா லாகும். அதாவது முன் பிறப்பின் நடந்த ஒன்றின் தொடர்பால் நிகழுகிறது என்பது யாவருக்கும் ஒப்ப முடிந்த. ஒன்றாகும். வடகடலிட்ட நுகத் தொளையில் தென் கடலிட்ட கோல் நுழைந்தால் போலும் நீர் சாய்ந்தவழி கோரை சாய்ந்தால் போலும் ஊழ் வழிப்பட்டு ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்றார்கள் என்று இலக்கண நூலாரும் கூறுவது இச் செய்தியை வலியுறுத்தும்.

 

மேலும், சுமதியோடு மலர்வனம் சென்ற மணிமேகலை உ-தய குமாரனைக் கண்ட காலை அவளுடைய மனம் உதயகுமாரனிடம் சென்றதற்குரிய காரணம் உதயகுமாரன் முன் பிறப்பில் இராகுலனாவான். முற்பிறவி வாசனையே உன் மனத்தைத் தூண்டியது என்று மணிமேகலா தெய்வம் 10வது மந்திரங் கொடுத்த காதை 43-45வரிகளாலும் காயசண்
டிகையின் வேடத்திருத்தவள் மணிமேகலை யென்று அறியாது அவளுடைய கணவனான காஞ்சனன் என்பவன் உதயகுமாரன் காயசண்டிகையின் வடிவத்தினிடம் வரவே தன் மனைவியின்பால் காதல் கொண்டு இங்ஙனம் வருகின்மூன் என்று கருதி, உதயகுமாரனைக் காஞ்சனன் தன் வாளால் வெட்டினான். வெட்டுண்டு கீழே விழுந்த உதயகுமாரனை மணிமேகலை கண்டாள். காயசண்டிகை வடிவத்தை மாற்றித் தன் உண்மை வடிவைக் கொண்டாள். முன் பிறப்பின் தொடர்பைக் கூறிப் புலம்பினாள். புலம்பிக்கொண்டே விழுந்து கிடக்கும் அவனருகிற் செல்வாளாயினாள். அப்போது அங்கிருந்த கக்திற் பாவைத்தெய்வம் மணிமேகலையை நோக்கி, 'நீ அவனிடம் செல்லாதே! உனக்கு இவன் கணவனாயிருந்ததும் இவனுக்கு நீ மனைவியாயிருந்ததும் சென்ற பிறவியிலே மட்டும் நிகழ்ந்ததல்ல. அதற்கு முன்னும் எத்தனையோ பிறவிகளிலும் கணவனும் மனைவியுமாக விருந்தீர்கள்; (21வது 'கந்திற்பாவை வருவதுரைத்த காதை 29-32) என்று கூறியதனாலும் ஒருவனும் ஒருத்தியும் கூடுவதற்கு ஊழ்வினை வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. எனவே, அரசவம்சத்தைச் சேர்ந்த தாரை இறந்து பரத்தையாக அதாவது நாடகமகளாகப் பிறந்தவள் கோவலனை மணப்பானேன்? இவர்களிருவரும் காதலிப்பதற்கு உரிய பழ வினை யாது?

 

இதுகாறும் கூறியவாற்றால் கோவலன் முற் பிறப்பில் பரதன் என்பவனாக இருந்தான் என்றும் இவனால் கொல்லுவிக்கப் பெற்ற சங்கமனுடைய மனைவியாகிய நீலியிட்ட சாபத்தால் கோவலனாய்ப் பிறந்தான் என்றும் சிலப்பதிகார மதுரைக்காண்டக் கட்டுரை காதை 138-165வரிகள் கூறுகின்றன. துச்சயன் மனைவியாகிய தாரையே மாதவியாகப் பிறந்தாள் என்றும் ஏற்படுகிறது. முன் பிறப்பில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இவர்களிருவரும் இப்பிறப்பில் கூடியதற்கு உரிய ஊழைக் கூறாமலே விடப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்" என்று கூறுவது பொருந்துமா றெங்ஙனம்?

 

மணிமேகலையின் முற் பிறப்பில் அதாவது இலக்குமி என்ற பெயரோடு இருந்த காலத்துக் கணவனாகிய இராகுலன் என்பவன் திட்டிவிடம் என்ற பாம்பாலும் உதயகுமாரனாக வந்தபோது காஞ்சனன் என்ற விஞ்சையனாலும் கொல்லப்பட்டதற்குப் பின் வருமாறு ஊழ்வினை கூறப்பெற்றிருக்கிறது.

 

இலக்குமியும் (மணிமேகலை) இராகுலனும் (உதயகுமாரன்) காயங்கரை என்னும் ஆற்றங்கரையில் தருமோபதேசம் செய்துகொண்டிருந்த பிரம தரும முனிவுரைக் கண்டு வழிபாடு செய்து அவரைத் திருவமுது செய்விக்க வேண்டித் தன்னுடைய சமையற்காரனுக்குக் கட்டளை இட்டனர்: அந்தச் சமையற்காரன் யாதோ காரணத்தால் சிறிது காலம் தாழ்த்தி வந்தான். அங்ஙனம் வந்தவன் அச்சத்தால் கால் வழுக்கிக் கீழே வீழ்ந்தான். அவன் கொண்டுவந்த சமையல், பாத்திரத்தோடு கீழே விழுந்து கெட்டது. வீழ்ந்தவனைக் கண்டு இரங்காமல் “இவன் முனிவருக்குச் செய்ய வேண்டிய தொண்டினை விரைந்து வந்து செய்யாமல் தாமதித்தானே'' என்று இராகுலன் கோபித்துச் சமையற்காரனை வாளால் வெட்டினான். வெட்டிய அவ் வல்வினையே அப் பிறப்பில் திட்டி விடத்தால் இறக்கச் செய்ததன்றி, இப் பிறப்பிலும் வெட்டுண்டு விழச் செய்தது என்று கந்திற்பாவை வருவதுரைத்த காதை 47-62 வரிகளாலும், மணிமேகலை உதயகுமாரன் தாயாகிய விசயமா தேவிக்குக் கூறியதாகச் சிறைவிடு காதை 82-86 வரிகளாலும் அறியப்படுகின்றது.

 

அவர்களிடம் சென்று தனது நிலைமையைக் கல்லும் கரையுமாறு சொன்னான். உடனே அப்பெண்கள் தங்களால் இயன்றதானியத்தையும் மாவையும் கொடுத்து அதிக நேரமாய் விட்டபடியால் உடனே புறப்படுமாறு சொல்லிக் கண்ணீர் சிந்தி நின்றனர்.

 

சென்று வழக்குரைத்துத் தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்தலும், அரசனும் அவன் மனைவியும் இறக்க, வெளியே வந்து மதுரை எரியுண்ணட்டும் என்று சபித்தாள். மதுரை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதுபோது மதுரைமா தெய்வம் கண்ணகியின் முன்னே வர அஞ்சிப் பின்புறம் தோன்றிக் கோவலன் கண்ணகி பண்டைய (முன்பிறப்பு) வரலாறு கூறியதாகச் சிலப்பதிகார அழற்படுகாதை கூறுகின்றது. அங்ஙனம் கூறும் போது அன்றிரவு மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் மதுரையிலுள்ள வெள்ளியம்பலத்தே துயின்றிருந்ததாகவும் மதுரைமா தெய்வம் கோவலன் கண்ணகியினுடைய பழவினைச் செய்தி கூறும்போது தான் விழித்துக் கேட்டிருந்ததாகவும் பதிகத்து 39-42 வரிகளால் சாத்தனாரே இளங்கோவடிகளுக்குக் கூறியதாகவும் கூறியிருக்கின்றது. ஆதலால் கோவலன் பழம் பிறப்பு தெரிந்து கூறினார்; மற்றவர்களுடைய பழம் பிறப்பு மதுரை தெய்வம் கூறவில்லை; அதனால் இளங்கோவடிகள் கூறவில்லை என்பார்கள். என்றாலும் மணிமேகலையில் கூறியிருக்கும் பழம் பிறப்புக்கள் அத்தனையும் சாத்தனார் கூறியவைகளே யொழிய வேறில்லை.

கோவலனுடைய பழம் பிறப்பு தெய்வம் கூறினமையால் சாத்தனார் அறிந்தார். மற்றவர்களுடைய பழம் பிறப்பெல்லாம் எப்படித் தெரிந்து இவர் கூறினார்? மணிமேகலைதான் தன்னுடைய பழம் பிறப்பையும் ஏனையோருடைய பழம் பிறப்பையும் புத்தபீடிகையைத் தரிசித்தமையாலும் மணிமேகலா தெய்வத்தாலும், அறவணவடிகளாலும் கந்திற்பாவையாலும் தெரிந்து கொண்டாள். இவள் தெரிந்திருந்த வரலாறுகள் எல்லாம் சாத்தனார் எவ்வாறு அறிந்தார்? மணிமேகலை கூறினாளோ எனின், சாத்தனார் மணிமேகலையைக் கண்டு தெரிந்து கொண்டதாக எங்கும் கூறவேயில்லை. அல்லது கோவலன் பழம் பிறப்பை மதுராபதி தெய்வம் கூறியது போன்று மற்றவர்களுடைய பழம் பிறவிகளைப் புகார் தெய்வம் கூறியதோ என்றால் அங்ஙனம் கூறியதாகவும் நூற்களால் அறியக்கூட வில்லை. ஆதலால், இப் பழம் பிறப்புக்கள் எல்லாம் சாத்தனார் மனத்திலிருந்து தோன்றியவைகளே என்பதில் என்ன ஐயப்பாடு உளது?

 

மேலும் முன்னர்க் கூறியபடி சிலப்பதிகாரத்துக்கு முன்னதாகவே மணிமேகலை நூல் செய்யப்பட்டது என்ற கொள்கையின்படி நோக்கினால், கோவலனுடைய சாப வரலாறு முதல் முதலாக மணிமேகலையில் 26வது வஞ்சிமாநகரம் புக்ககாதையில் 5.35 வரிகளால் சாத்தனார் கூறியிருக்கின்றார்.

 

ஒரு சிலர் கோவலன் முன் பிறப்பு கூறவேண்டிய அவசிய மிருந்தது. அவன் கதைக்கு இன்றியமையாதவன். அவனில்லையானால் சிலப்பதிகாரக்கதையேயில்லை என்கிறார்கள். சிலப்பதிகாரக் கதைக்கு மாதவி மிக முக்கிய மானவள் - மிக இன்றியமையாதவள். அவள் இல்லை என்றால் கோவலன் கண்ணகியைவிட்டுப் பிரிவதேது? அவன் பொருள்களுக்கு அழிவேது? மாதவியோடு கூடியன்றோ பொருளை எல்லாம் இழந்தான். இழந்தவை போக எஞ்சியிருந்த பொருள் கண்ணகியின் காற்சிலம்பே. சீரும் சிறப்புடன் வாழ்ந்த ஊரில் கெட்டு இருத்தல் கூடாது என்று முடிவு செய்து கொண்டு கண்ணகியோடு மதுரையடைந்து அங்குக் கொலையுண்டான். எனவே, மாதவி. இல்லையானால் சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிக்கு இடமே இல்லை. அப்படிப்பட்டவளுடைய ஊழ் (கூறவேண்டுவது அவசியமல்ல என்று கூறுவது பொருந்துமா? இவள் மிகவும் முக்கியமானவள் என்பது மாதவி மடந்தை கானம் பாணி கனகவிஜயர் முடித்தலை நெரித்தது," என்று 27வது நீர்ப்படைக் காதை 49.51 வரிகள் வற்புறுத்துகின்றன.

 

கண்ணகியின் பிரதிட்டையைக் காண அரட்டன் செட்டி என்பவனுடைய இரட்டைப் பெண்களாகிய இருவரும் சேடக்குடிம்பியின் மகளும் வந்திருந்தனர். அது போது கண்ணகியின் தோழியாக விருந்த தேவந்தி பார்ப்பனப் பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். அவள் மீது பாசாண்ட சாத்தன் என்ற ஒரு தெய்வம் ஆவேசித்து அங்கிருந்த மாடலன் என்ற ஒருவனைப் பார்த்து, “மாடலா! மங்கலாதேவி என்ற தெய்வத்தின் கோயிலுக்கு நீ சென்று அத் தேவியை வணங்கி விட்டு அவளுடைய கோபுரவாயிலில் நின்று கொண்டிருந்தாயல்லவா? அருச்சகன் ஒருவன் வந்து அக்கோயிலிலிருக்கும் சுனைநீரை உடைய ஒரு கரகத்தை நின்னிடம் கொடுத்துச் சென்றானல்லவா? அந்த நீரை இங்கு வந்திருக்கும் மூன்று பெண்களின் மீதும் தெளிப்பாயானால் அவர்களுக்கு முற்பிறப்பின் உணர்ச்சிவரும்'' என்று கூறிற்று. அம்மாடல மறையோனும் அவ்வண்ணமே நீரைத் தெளித்தான். உடனே அப்பெண்கள் மூவரும் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி பெற்று மழலைச் சொற்களொழிந்து முதியவர்கள் போலப் பேசி அழுதார்கள். இவர்களே கண்ணகியின் நற்றாய், கோவலன் நற்றாய், மாதரி என்ற மூவரும் ஆவார்கள். கதைக்கு அத்துணை வேண்டற்பாலன வல்லாத செய்திகள் வந்திருக்க, கதைக்கு மிக இன்றியமையாத மாதவியினுடைய ஊழ்வினை கூறாமைக்கும், அல்லது மாதவி தன்னுடைய வாழ்க்கைக்கு இடையூறாக வர அதாவது வாழ்வினைப் பிடுங்கிக்கொள்ள கண்ணகி செய்த ஊழ்வினை கூறாமைக்கும் காரணம். இளங்கோவடிகள் மனோபாவத்தில் தோன்றிய கதையாகையால் அவர் தம்மிஷ்டம் போல் கூறியுள்ளார் என்பது புலனாகாமல் போகாது.

 

நிற்க, மதுரை எரியுண்டமைக்கும் அரசன் இறந்தமைக்கும் கூறியிருக்கும் காரணத்தை முன்னரே கூறியுள்ளேன். வார்த்திகன் என்ற அந்தணனை அரசனுடைய ஊழியர்கள் அரசனுக்குத் தெரியாமலே சிறைபிட்டனர். அந்தணனுடைய மனைவி கார்த்திகை என்பாள் அழுதாள், புரண்டாள், ஏங்கினாள், பொங்கினாள் (கட்டுரை' காதை 104-108). அதுகண்ட ஐயை கோயில் கதவடைந்தது. அது தெரிந்த பாண்டியன் மயங்கி மந்திரிகளை நோக்கி “யானியற்றிய கொடுங்கோன்மை ஏதேனும் உண்டோ?" என்று வினவினான். வார்த்திகன் சிறை செய்யப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. உடனே அரசன் வார்த்திகனைச் சிறையின்றும் கொணர்ந்து “அறியாத மாக்களால் முறைநிலை திரிந்து என் செங்கோல் முறை பிழைத்தது.” பொறுத்தருளுவது தேவரீர் கடனாகும்” என்று வேண்டிச் சில ஊர்களைக் கொடுத்து அனுப்பினான். ஐயை கோட்டக் கதவம் பலரும் அறிய பெருஞ் சத்தத்தோடு தானே திறந்து கொண்டது. இதில் அரசன் பிழை ஏதேனும் உண்டோ?
ஊர்செய்த பிழையுமுண்டோ? ஒன்று இல்லை என்று கூறுதல் பிழையாகாது. அங்ஙனம் பிழை செய்திருந்தாலும் அப்பிழை மன்னிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாகத் தாமாகவே மூடிக் கொண்ட கோயிற் கதவம் தாமாகவே திறந்துகொண்டது. எனவே, மன்னிக்கப்பட்ட செய்தி வெள்ளிடைமலை. இம் மன்னிக்கப்பட்ட செய்தியை ஒரு குற்றமாக்கி அதற்காக ஓரூரும் அரசனும் முறையே எரியுண்ணலும் ' இறத்தலுமாகிய இரண்டும் நிகழ்ந்தன என்று கூறுதல் பொருந்துமா? கற்பித்த இந்தக் காரணமும் பொருந்துமா? பொருந்தாதன்றே'' மேலும், மதுரை எரியுண்டதும் அரசு கேடுற்றதும் சோதிடவார்த்தையால் என்று கொண்டால், கோவலனைக் கொலை செய்வித்ததால் நேர்ந்த சம்பவம் யாது? என்ற கேள்விக்கு விடையில்லை.

 

எனவே, இன்னோரன்ன முரண்பாடுகள் தோன்ற ஊழ் கற்பிக்கப் பட்டிருத்தலைக் கூர்ந்து நோக்கின், சிலப்பதிகாரம் ஒரு புனைந்துரைக் காதை என்பது புலனாகாமற் போகாது.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜுன் ௴

 

 

No comments:

Post a Comment