Monday, August 31, 2020

 சாந்தி நிகேதனம்

 

மஹாகவி ரவீந்திரநாத தாகூர் ஸ்தாபனம் செய்து நடத்தி வரும் சாந்திநிகேதனத்தை நேரிற் கண்ணுற்ற ஸ்ரீ. ஜ. தானியேல் என்பார், அதைப்பற்றி ஒரு அழகிய வரலாற்றை ஒரு மலையாளப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். அதன் சாரத்தைக் கீழே தருகின்றேன்.

                         

கல்கத்தாவிலிருந்து ஆறு மைல் தூரத்துக்கப்பால் ஸ்தாபனம் செய்யப் பெற்றிருக்கும் சாந்தி-நிகதனம் அல்லது விசுவபாரதி இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற ஒரு ஸ்தாபனம்.

 

கவிச் சக்கரவர்த்தி தாகூரின் விசாலச் சிந்தனைக்கும், தீர்க்க தரிசனத்துக்கும் இலக்காக அது ஊழி யுள்ளனவும் நிலவும் என்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.

 

அத்தகைய பெருமை வாய்ந்த சாந்திநிகேதனத்தைப் பார்வையிடும் படிநான் இரண்டு சிநேகிதர்களுடன் கல்கத்தாவிலிருந்து புறப்பட்டேன். வழிநெடுக நீர்வளம் நிலவளம் மிகுந்த நன்செய் புன்செய்களைக் கண்ணுற்று நாங்கள் ஆனந்த பரவசரானோம். பார்க்குமிடமெல்லாம் இயற்கைத் தேவி ஆரந்த நடனம் புரிவது போல் தோன்றிற்று. வழி மத்தியில் மேன்மை தங்கிய பர்துவான் மகாராஜாவின் தேசத்தைக் கடந்து நாங்கள் போக வேண்டியிருந்தது. பர்துவான் தேசம் இந்தியாவில், மதுரக்கனி வர்க்கங்களுக்குப் பேர்போனது. அதிரஸம் பொருந்திய கனிகள் செடி கொடிகளிலும் மரங்களிலும் கொத்துக் கொத்தாகத் தொங்குவதைக் கண்டதும் எங்கள் நாவில் நீர் ஊறிற்று. சாந்தி நிகேதனத்துக்குச் செல்பவர்கள், இ. ஐ. ஆர். ரெயில் பாதையிலுள்ள போல்பூர் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். நாங்கள் பகல் இரண்டு மணிக்கு அவ்விடம் சென்றோம்.

 

போல்பூர் ஸ்டேஷனிலிருந்து சாந்திநிகேதனத்திற்கு இரண்டு மைல் தூரம். எங்கள் விஜயத்தைப் பற்றி விசுவபாரதி நிருவாகிகளுக்கு முன்னரே செய்தி யனுப்பி யிருந்த தனால் சாந்திநிகேதனத்துக்குச் சொந்தமான மோட்டார்கார் எங்களுக்காக ஸ்டேஷனில் காத்துக்கொண்டு இருந்தது. நாங்கள் காரில் ஏறி இரண்டரை மணிக்கு நிகேதனத்தை அடைந்தோம். எங்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வெகு ஒழுங்காகச் செய்யப் பெற்றிருந்தன. சூரியன் அஸ்தமிக்கும் வரை நிகேதனத்தைச் சுற்றியுள்ள சோலைகளை நாங்கள் சுற்றி நோக்கினோம். அந்த சோலைகள் சுமார் 900 ஏக்கர் விஸ்தீரண முடையன. நிகேதனத்துக்கு மேற்கிலும் தெற்கிலும் விசாலமான அழகிய வயல்களும், வடக்கிலும் கிழக்கிலும் மேட்டுப் பாங்கான பூமிகளும் காணப்படுகின்றன.



 

போதனா முறை

 

ஆசிரமம் முழுதும் பல லதா கிரகங்களும், செடி கொடிகள் படர்ந்த குடிசைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுக்கு இடையிடையே பல கட்டிடங்களும் இருக்கின்றன. குருகுல முறையில் கல்வி கற்பிக்கும். பொருட்டே எமது கவிச் சக்கரவர்த்தி இந்த விசுவபாரதியை ஸ்தாபனம் செய்திருக்கிறார். இங்கே சுமார் 200 பேர் கல்வி பயின்று வருகிறார்கள். அவர்களில் 150 பேர் சிறுவர்கள்; 50 பேர் சிறுமிகள், ஹைஸ்கூல் வகுப்புகளில் ஆண்களும் பெண்களுமாக 150 பேரும் காலேஜ் வகுப்புகளில் 50 பேரும் படித்து வருகிறார்கள். பொதுக்கல்வி தவிர, சங்கீதம், ஸாகித்யம், சித்திரமெழுதுதல், கைத்தொழில்கள் முதலியனவும் போதிக்கப்படுகின்றன. சீனா, ஜாவா முதலிய தூர தேசங்களிலிருந்தும் பலர் இங்கு கல்விபயில வந்திருக்கிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தான வாசிகளான இரண்டு பேரும் இங்கே படித்து வருகிறார்கள்.


ஒழுக்கமுறை

 

மாணவர்கள் எல்லோரும் காலை 5 மணிக்கு படுக்கை விட்டெழுந்து நித்தியக் கடன்களை முடித்து ஸ்நானம் செய்கிறார்கள். பின்னர் யாவரும் ஒரு இடத்தில் ஒருங்கு கூடிக் கடவுளை வழிபடுகிறார்கள். அப்பால் சிற்றுண்டியருந்தி அவரவர் வகுப்புகளுக்குச் செல்லுகிறார்கள். வகுப்புகள் எல்லாம் அநேகமாக லதா கிரகங்களிலும், மரச்சுவடுகளிலும் நடத்தப்படுகின்றன. யாவரும் தரையிலே உட்கார்ந்து படிக்கிறார்கள். உட்காருவதற்கு ஒவ்வொருவர் வசமும் ஒரு விரிப்புத் துணியும் இருக்கிறது. அவர்கள் கல்வி கற்கும் முறையை நாங்கள் வெகுநேரம் உற்றுக் கவனித்தோம். மாணாக்கர்களெல்லோரும் வெகு சுதந்தரமாக ஆசிரியர்களுடன் வார்த்தை யாடுகிறார்கள். தத்தமக்குத் தோன்றும் சந்தேகங்களைத் தாராளமாக ஆசிரியர்களிடம் கேட்கிறார்கள். அச்சம், கூச்சம், அதிகாரம் என்பன அங்கே மருந்துக்கும் காணப்படுவதில்லை. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் ஆசிரியர்கள் சாந்தமாகவும் கருணையுடனும் விடையளிக்கிறார்கள்.


 
ஆசிரியர்கள்


ஆசிரியர்களின் மிக்காரும் ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் பட்டம் பெற்றவர்களே. அவர்களும் மாணவர்கள் கூடவே வசித்து வருகிறார்கள். 11 - மணிக்கு யாவரும் போஜனம் செய்யப் போகிறார்கள். பிற்பகலில் சில வகுப்புகளே நடைபெறுகின்றன. மற்ற மாணவர்கள் எல்லாம் மத்தியானத்துக்கு மேல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இரவு 8 - மணிக்கு இராச் சாப்பாடு நடக்கிறது. 91/2 மணி வரையில் பாடங்களைப் படித்து அப்பால் மாணவர்கள் தூங்கப் போகிறார்கள். 91/2 மணிக்கு மேல் ஒருவரும் படிக்கக்கூடா தென்று கட்டுப்பாடான ஏற்பாடு செய்யப்பட்டிருக்
கிறது.


உணவு

 

சாந்தி நிகேதனத்தில் காபி, தேனீர் முதலிய பானங்கள் கிடையா. சாப்பாட்டின் போது பருகுவதற்குப் பாலே வழங்கப்படுகிறது. நாங்கள் இராப் போஜனம் செய்த பிறகு அதிதிமந்திரத்தில் சென்று படுத்துக் கொண்டோம். இரண்டாம் நாள் இரவு மிஸஸ் ஸ்லைடு என்ற ஒரு ஐரோப்பியமாது ஒரு பிரசங்கம் நடத்தினார். அமெரிக்காவில் தாம், மகாத்மாகாந்தியின் மகிமைகளைப் பற்றிக் கேட்டதாயும் அதனால் மகாத்மாவைப் பார்க்கும் பொருட்டும் இந்தியர்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டறிவதற்காகவும் இந்தியாவுக்கு வந்ததாகவும் அம்மாது கூறினார். இந்தியர் வாழ்க்கை முறையைக் கண்டு வியப்படைந்த அந்த ஐரோப்பிய மாது, இப்பொழுது இந்தியப்பேர் பூண்டு இந்திய உடை உடுத்து சஞ்சரிக்கிறார்.


நூல் நிலையம்

 

சாந்தி நிகேதன நூல் நிலையத்தில் உலகத்திலுள்ள எல்லா பாஷை நூல்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. நூல் நிலையத்தில் ஒரு ஆராய்ச்சி சாலையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பொருட் காட்சி சாலையில் அநேக கல் வெட்டுகளும், பழைய நாணயங்களும் செப்பேடுகளும், படங்களும், கொத்து வேலை செய்த பல சாமான்களும் வைக்கப் பட்டிருக்கின்றன.


கவிச்சக்கரவர்த்தி வாசஸ்தலம்

 

ஒரு பெரிய மரத்தின் உச்சியில் கவிச்சக்கரவர்த்தி இருப்பதற்கு ஆச்சிரமம் கட்டப்பட்டிருக்கிறது. அடிக்கடி தாகூர் அங்கே சென்று இருப்பதுண்டு. அவர் ஸ்திரமாக ஒரு இரண்டு மாடிக் கட்டிடத்தில் வசிக்கிறார். அவருடைய ஒரு மகனுக்கும் மகளுக்கும் தனித்தனி இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மரத்தின் உச்சியிலுள்ள ஆச்சிரமத்திலிருந்து நாற்புறமும் பார்த்தால் இயற்வீக வனத்தைப் பார்த்து ஆனந்த மடையலாம். அந்த ஆச்சிரமம் மஹாகவி தாகூரைப் போன்ற பெரும் புலவர்கள் வாசத்துக்கு முற்றிலும் பொருத்தமானதே.

 

சாந்தி நிகேதனம் இயற்கை வளம் மிகுந்த ஒரு வித்தியாலயம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. அதைக் கண்ணுற்றவர்கள் எல்லோரும் அவ்வாறே அபிப்பிராயப்படுகிறார்கள்.

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment