Sunday, August 30, 2020

 

 காயத்திரி சந்தியாவந்தனம்

 

காயத்திரி என்பதும், சந்தியாவந்தனம் என்பதும் ஏறக்குறைய ஒன்றெனவே சொல்லலாம். காயத்திரி என்பது யாதெனில் நாள் தோறும் காலை மாலைகளிலும், இதரகாலங்களிலும் பகவானை நினைத்தலாகிய தொழிலாம். அப்படி நினைப்பது எதற்காகவெனில் உயிர்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே. காயத்திரியை அனுஷ்டிக்கும் விதங்கள் பல வகைகளாகக் கூறப்பட்டுள்ளன. அவையாவன: -

 

பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு மனதில், மூன்று லோகத்தையும் எந்த சைதந்நியம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ அத்தகைய சொர்க்க தேவனாகிய நீர் என் புத்தியை சூட்சுமப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்; தவிரவும் அத்தகைய கடவுளாகிய உன்னை,

 

(1) (விஷ்ணு) வியாபக சொரூபமாகிய சங்குசக்ரதாரியாகிய திருமால்ரூபமாக நான் பாவிக்கின்றேன்.

 

(2) (சிவன்) மங்களரூபமாகிய பார்வதிசமேதராய ரூபமாக பாவிக்கின்றேன்.

 

(3) (அம்பாள்) யாவற்றையும் உண்டு பண்ணி யொடுக்கும் பாசாங்குசதாரியாகிய ஈஸ்வரிரூபமாகப் பாவிக்கின்றேன்.

 

(4) (கணேசன்) சங்கல்பரகிதமாய் எங்கும் நிறைந்துள்ள பாசாங்குச்தாரியாகிய விநாயகரூபமாகப் பாவிக்கின்றேன்.

 

(5) (சூரியன்) எங்கும் நிறைந்த பிரகாசமான ஆதித்தவடிவாகப் பாவிக்கின்றேன் என்பனவாம்.

 

இவ்வாறு பாவனை செய்துகொண்டு வாக்கினால் தம் மனதில் தோன்றிய இஷ்டத்திற் கேற்றபடி எனக்குச் சொர்க்கலோகம் கிடைக்கட்டும் என்றாவது, அல்லது நான் நீண்டகாலம் உலகில் வாழவேண்டும் என்றேனும் அன்றி நான் சக்ரவர்த்தியாய் இருக்கவேண்டும், அல்லது நான் தேவமாதர்களை அடைய வேண்டும், அல்லது அழகிய பெண் எனக்குக் கிடைக்க வேண்டும் என்றேனும், அல்லது நான் யாவரினும் படித்தவனாக விளங்க வேண்டும் என்றாவது, அல்லது நான் அதிக பலசாலியாக இருக்க வேண்டும் என்றாயினும், அல்லது எனக்கு அதிக திரவியம் கிடைக்கவேண்டும் என்றாவது, அல்லது என் விரோதிகள் நாசமடைய வேண்டும் என்றேனும் இப்படிப் பலவிதமாக மனிதர்கள் ஒருலக்ஷம் முறைகளுக்குக் குறையாமல் நினைத்து வருவார்களேயானால் அவர்களின் மனோசக்தியின் பயனாக அவரவர்களின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இவற்றுள் மேலான மார்க்கமானது யாதெனில், மூன்றுலோகத்தையும் எந்த சைதன்னியம் தாங்கிக்கொண்டிருக்கின்றதோ அந்த சைதன்னியத்தின் பாதாரவிந்தம் எனக்குக் கிட்டட்டும். அல்லது எந்த வஸ்துவானது எல்லாமாய் இருந்து கொண்டு வருகின்றதோ அந்த வஸ்து என்னிலும் கலந்திருப்பதாக என் புத்தி திடப்படட்டும். தவிர எந்த வஸ்து யாவற்றையும் விளக்கிக்கொண்டும், யாவுமாகியும், தன்னையன்றி வேறெதுவும் இல்லாமல் தான் தானாகவே எப்போதும் இருந்து வருகின்றதோ, அந்த வஸ்துவில் நான் வேறில்லாததான நிச்சயம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நினைத்தலேயாம்.

 

தீர்க்கமான ஒரே சங்கல்பம் எங்கு நிகழ்கின்றதோ அங்கு அச்சங்கல்பத்தின் பலன் நிகழ்கின்றது. ஆகையினாலேயே சகல சாஸ்திரங்களும் அவாவினாலேயே அதாவது எந்த அவாவோடு உயிர் பிரிகின்றதோ அந்த அவாவினாலேயே அதற்கேற்ற பிறவி கிடைக்கின்றது; ஆதலினால் அவாவின் மேலேயே மோட்சம் கிடைக்கும் என்று சொல்லுகின்றன. இதன்படி நடந்த பல புராண கதைகளில் ஒன்றை இங்குக் குறிப்பிடுகிறோம் : பாரதத்தில் ஜனமேஜெய மகாராஜன் சர்ப்பயாகம் செய்து சகல சர்ப்பங்களையும் அக்கினியில் பிரவேசிக்கச் செய்தானென்று சொல்லுமிடத்து, கூறப்படுகிறதாவது :

 

"அங்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்பீர்களானால் சக்ரவர்த்தியின் போஜனத்தை உட்கொண்டு சகல சாதுக்களும் அக்கினியின் பக்கத்திலமர்ந்து, குறித்த பெயருள்ள எல்லாச் சர்ப்பங்களும் இந்த அக்கினியில் பிரவேசமாக வேண்டும்' என்று லக்ஷம் தரம் நினைத்தார்கள்; அப்படி நினைத்த அவர்களின் மனோசக்தியானது சர்ப்பங்களின் மனதை வசீகரித்து அவர்கள் கோரியபடி சகல சர்ப்பங்களும் அக்கினியில் பிரவேசிக்கும்படி செய்து விட்டது " என்பதே. இதுவே காயத்ரி என்று சொல்லப்படும்.

 

       டாக்டர். மே. மாசிலாமணி முதலியார்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - பிப்ரவரி ௴

 

 

   

 

No comments:

Post a Comment