Monday, August 31, 2020

 

சிலப்பதிகாரம் பெருங்காவியமா?

வித்துவான்-வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் P. O. L.

 

செந்தமிழ் மிகவும் தொன்மையானது. பல நூற்கள் பன்னெடுக்காலங்களாகத் தோன்றி மறைந்தன. மறைந்தன போகமறையாதன பல. அவற்றுள் இப்போது காணப்படுவன திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி போன்ற நூற்களே. அவற்றுள் ஈண்டு ஆராய எடுத்துக்கொண்டது சிலப்பதிகாரம் என்பதாகும்.

 

இந் நூலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்றும், நாடகக் காப்பியம் என்றும், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் கூறுகின்றனர்.
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து பெருங்காப்பியங்களுள், சிலப்பதிகாரமும் ஒன்று என்று கூறுவார் கூற்றினைச் சிறிது ஆராய்வாம். வடமொழியாளர் தங்கள் மொழியிலுள்ள காவியங்களுள் இரகு வம்சம், குமார சம்பவம், நைஷதம், கிராதார்சுனீயம், சிசுபால வதம் என்பனவற்றைப் பஞ்ச காவியம் என்று வழங்கி வருகின்ற வழக்கினைக் கண்டு, அக் காலத்திலிருந்த சிலர் தமிழிலும் ஐந்து உண்டு என்று கட்டி விட்டனரே தவிர வேறில்லை. நம் தமிழில் எத்தனையோ காவியங்கள் உண்டு.

 

கவியினால் செய்யப்படுவது காவியம் எனப்படும். அக் காவியம் பெருங்காப்பியம் என்றும் சிறுகாப்பியம் என்றும் இருவகைப்படும். வாழ்த்து, வணக்கம், வருபொருள் என்ற மூன்றனுள் 'ஒன்று முன் வரநடந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை மக்கள் பேற்றினையும் கூறுவதாகித் தன்னிகரில்லாத் தலைவனை யுடையதாய் ஆக்கப்படுவது பெருங்காப்பிய மாகும். இவற்றுள், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளும் குறையாமல் வருவதே பெருக்காப்பியத்தின் இன்றியமையாத இலக்கண மாகும். இந்த நான்கு பேறுகளும் கூறப்பெற்றிருந்தா லல்லவோ, சிலப்பதிகாரத்தைப் பெருங்காப்பியம் என்று கூறவியலும்? சிலப்பதிகாரத்தில், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பேறுகளே, காவியத்துக்கு இருக்கவேண்டிய மற்றைய உறுப்புக்களாகிய கடல், மலை, நாடு, நகரம், தலைவி, தலைவனாகிய வருணனைகளைக் கொண்டு கூறப்பெற்றிருக்கின்றன.

 

மேலும், பெருங்காப்பியத்திற் குரிய தலைவன் ஒப்பாரு மிக்காருமற்ற தலைவனாக இருத்தல் வேண்டும். இக் காவியத்தின் தலைவனாகிய கோவலன் தன்னிகரில்லாதவனாக இல்லை. - இவன் சமணர்களுள் இல்லற ஒழுக்கத்தை மேற்கொண்ட சிராவக கோன்பினன். என்பது “சாவக நோன்பிகள் அடிகளாதலின்" (கொலைக்களக் காதை-18 வரி) என்ற தொடரால் விளங்குகின்றது. சிராவக நோன்பிகள் அனுஷ்டிக்கவேண்டிய விதிகளோ பல. அவற்றுள் பரத்தையரோடு கூடாமை மிக அவசியமாக அனுட்டிக்க வேண்டிய கரும மாகும். கோவலனோ இதற்கு மாறாக, அங்கிக் கடவுள் முன்னிலையில் மணந்த தன்மனைவியாகிய கற்பிற் சிறந்த 'கண்ணகியையும் மனையையும் மறந்து, (அரங்கேற்று-175 வரி) அவள் “அம்பெஞ் சீறடியணி சிலம்பொழியவும், மென்றுகில் அல்குல் மேகலை நீங்கவும், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாமலும், மங்கலவணியிற் பிறிதணி மகிழாமலும், கொடுங்குழை காதினி லணியாமலும், திங்கள் வாண்முகம் சிறு வியர்ப் பிரியவும், செங்கயல் நெடுங்கண் அஞ்சன மறப்பவும், பவள வாணுதல் திலகமிழப்பவும், தவள வாணகை கோவலன் இழப்பவும், மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பவும், (அந்திமாலை-47-57) வருந்தி வாடச் செய்ததோடு நில்லாமல் இல்லறத்தான் செய்யவேண்டிய தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் முதலியோரை வழிபடும் கடமைகளையும் நீத்து மாதவிப் பரத்தை வீட்டிலேயே தன்னுடைய வாழ்க்கையைக் கழித்து அவளிடமே மகளையும் பெற்றான். ஆதலின், இவனைத் தன்னிகரில்லாத் தலைவன் என்பது பொருந்தாது.

.

கோவலன் கண்ணகியோடு செய்த அறமும், அடைந்த இன்பமும், முறையே புகார் காண்டத்தே யுள்ள மங்கல வாழ்த்துக் காதை, மனையறம் படுத்த காதை என்ற இரண்டு காதையாலும், பொருளீட்டச் சென்ற செய்தி புகார்க் காண்டத்தின் கடைசி காதைகளாலும் மதுரைக்காண்டத்தின் முதலிரண்டு காதைகளாலுமே சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும், கோவலன் பாதவிப் பரத்தையை யடைந்து அவளோடு மனையறம் நடத்திய செய்தி; அரங்கேற்று காதை, இந்திரவிழா ஊரெடுத்த காதை, கடலாடு காதை,
அடைக்கலக் காதை முதலிய காதைகளால் சொல்லப்பட்டிருக்கின்றது. மதுரைக் காண்டத்தின் இறுதிக்கதையாலும், வஞ்சிக்காண்டத்தின் முதற் கதையாலும் (குன்றக்குரவை, காட்சி காதை) கண்ணகி மலைமீது ஏறி உயிர்துறக்க, விண்ணிலிருந்து விமானத்தில் வந்த தன்னுடைய கணவனேடு சுவர்க்கம் அடைந்ததாகக் கூறப் பெற்றிருக்கின்றதே யொழிய, அந்தமி லின் பத்தழிவில் வீட்டை அடைந்ததாகக் கூறப் பெறாமையால் வீட்டுப்பேறும் கூறப் பெறவில்லை. இன்னோரன்ன குறைபாடுகளையுடைய சிலப்பதிகாரத்தைப் பெருங்காப்பியம் என்று கூறுதல் பொருந்துமாறு எங்ஙனம்?

 

மேலும், இந்நூலோடு ஒருங்கு வைத்து எண்ணப்படுவதாகிய மணிமேகலை என்ற நூலிற் கூறி யிருக்கும் மணிமேகலை துறவினையும் கூட்டினால், இவை இரண்டும் சேர்ந்து ஒரு பெருங்காப்பியம் ஆகும். அதாவது அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் சிலப்பதிகாரத்தேயும், துறவின் மூலம், வீட்டினை மணிமேகலை நூலினுள்ளும் கூறுகின்றமையால், இரண்டும் சேர்ந்தே பெருங்காப்பிய மாகுமே யொழியச் சிலப்பதிகார மட்டும் பெருங்காப்பிய மாதல் இல்லை. இவை இரண்டும் சேர்ந்து ஒரு காப்பியமாய் நடை பெறவே இயற்றப்பட்டன என்று இந்நூலின் உரையாசிரிய ராகிய அடியார்க்கு நல்லாரும் பதிகவுரையில் அதாவது உரைப் பாயிரத்தின் இறுதியில் விளங்கக் கூறி யுள்ளார். எனவே, சிலப்பதிகாரம் சோழ, பாண்டிய, சேரரையும் அவர்களுடைய நாட்டையும் முறையே கூறுகின்றது. மணி மேகலையோ பாண்டியனை யொழித்துச் சேரனையும் வஞ்சியையும் சோழனையும் அதுபோது அவளிருந்ததாகக் கூறும் காஞ்சியையும் கூறுகின்றது.
இன்னோரன்ன காரணங்களால் சிலப்பதிகாரத்தைச் சிறு காப்பியங்களோடு சேர்த்துக் கூறலாம். இனி, சிலப்பதிகாரம் நாடக காப்பியமாகும் என்பார் கூற்றைக் கவனிப்போம்.


நாடகக் காப்பியமா?

 

தமிழ்மொழியில் நாடகக் காப்பியத்துக் குரிய பண்டை இலக்கண நூல் யாண்டும் கிடைத்திலது. வடமொழியாளர் கவிகளால் எழுதப்படும் காவியங்களை எல்லாம் சிராவிய காவியம் என்றும், திருசிய காவியம் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். காதினால் கேட்டு அனுபவிக்கப்படுனவெல்லாம் சிராவிய காவியமாம். கண்ணினால் கண்டு களிக்கக் கூடியன வெல்லாம திருசிய காவியமாம்... திருசிய காவியத்தை ரூபகம், உபரூபகம் என இரண்டாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் ரூபகத்தை நாடகம் பிரகரணம், பாணம் முதலிய பத்து வகையாகப் பிரிக்கின்றனர். கவியினடைய மனோபாவத்தால் கற்பிக்கப் படாததாய்த் தொன்று தொட்டுவரும் சரிதையாகி அரசர்களை யாவது கடவுளர்களை யாவது தலைவர்களாகக் கொண்டு இயற்றப்படுவது நாடகங்களாகும். கவியினுடைய மனோபாவத்தில் கற்பனை செய்யப்பட்ட சரிதையாகி- அதாவது கற்பனை கதையாகி, பார்ப்பனனையோ 'வணிகனையோ தலைவனாகக் கொண்டு இயலுவது பிரகரணங்களாகும். இவ்விருவகை இலக்கணங்களைக் கொண்டு சிலப்பதிகாரத்தை நோக்குவோம். இதனுடைய கதா நாயகர்களாகிய கண்ணகி, கோவலன் இருவரும் வணிக மரபினர்கள். அவர்களைத் தலைவர்களாகக் கொண்டு கவியினுடைய மனோபாவத்தில் தோன்றிய கற்பனைக் கதையாகும் இந்நூல். ஆதலால் இதனை இரண்டாவதாகக் கூறிய பிரகரணங்களின் பாற்படுத்திக் கூறுவதே சாலப் பொருந்தும். பிரகரணத்தின் இலக்கணத்திற் கேற்பப் பரத்தை ஒருத்தியும் (மாதவியும்) மற்றொரு முக்கிய உறுப்பினளாவாள். வடமொழி யில் சூத்திரகன் என்ற ஒரு கவிஞன் எழுதிய மிருச்சகடிகை என்ற நாட
கத்தின் கதையும் இந்தக் கதையும் ஏறக்குறைய ஒன்றை ஒன்று ஒத்தேயிருக்கின்றது. வடமொழியாளர் அந் நாடகத்தை (மிருச்சகடிகைப் பிரகரணத்தின் பாற்படுத்துகின்ஞார்கள். இதனையே நமது தமிழர்கள் உரை நடைச் செய்யுள் என்றார்கள். எனவே, இந்நூலை உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பதிக மெழுதியவரும் (பதி-86 வரி) கூறியது நாடகநூலே என்று வற்புறுத்த வேண்டியே யாகும் என்பது திண்ணம்.

 

நிற்க, இந்நூலுள் சேரனது செய்தி கூறும் வஞ்சிக் காண்டமாகிய ஏழு காதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றமையால், இது நாடக காப்பியமாகாது என்று கூறுபவரு முண்டு. - அங்ஙன மன்று; வஞ்சிக் காண்டம் பின்னரே எழுதி இணைக்கப்பட் டிருத்தல் வேண்டும். ஆதலால், சிலப்பதிகாரம் நாடகவகையிற் சேர்ந்ததே என்ற மற்றுமோர் கூற்றும் நிலவி வருகின்றது. கதை அல்லது காதை என்ற சொல்லே கதைப்பது அல்லது புனைந்து கூறுவது என்று பொருள்படுகின்றது: சிலப்பதிகாரத்திலும் ஒவ்வொரு பகுதிக்கும் காதை என்று வழங்கப்பட்டிருப்பதே இதனை வலியுறுத்தும். கவியினால் கூறப்படுவது காவியம் எனக்கொண்டு இந்நூலை காவியம் என்று கூறுதல் சாலப் பொருந்துமே யொழிய, மேற் கூறப்பட்டிருக்கும் பெருங்காப்பியத்துள் சேராது.

 

இனி மூன்றாங் காண்ட மாகிய வஞ்சிக் காண்டம், பெரும்பாலும் சேரன் செங்குட்டுவன் என்பவனுடைய வீரச் செயல்களையே கூறுகின்றது. இந்த வஞ்சிக் காண்டத்தின் முற்பகுதிகளாகிய புகார் காண்டம், மதுரைக் காண்டம் ஆகிய இரண்டும் முறையே பத்தும், பதின்மூன்றுமாக இருபத்திமூன்று காதைகளை யுடையன. இந்த வஞ்சிக்காண்டமோ எனில், ஏழு காதைகளால் ஆகிய சிறிய பகுதியே யாகும். இதில் கண்ணகியின் செய்தி கேட்ட செங்குட்டுவன் வடநாடு சென்று இமயமலையிலிருந்து ஒரு கல் கொணர்ந்து படிவம் செய்து நாட்டிய வீரச் செயலை,

"காட்சி கால் கோணீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்."    -(தொல் - புறத்திணை. 60-19-70)


தொல்காப்பியத்தில் வெட்சித்திணைக் குரிய துறை இலக்கணமாகக் கூறப்பட்டிருக்கிறது. இச் சூத்திரத்திற்கு இலக்கியமாக (2) காட்சிக்காதை, (3) கால்கோட் காதை, (4) நீர்ப்படை காதை, (5) நடுகற் காதை, (6) வாழ்த்துக்காதை என்ற காதைக ளோடு குன்றக்குரவை என்ற சாதையை முன்னும் வரந்தருகாதையைப் பின்னுமாக அமைத்து ஏழு காதைகளாகச் செய்து வஞ்சிக்காண்டம் எனப் பெயரிட்டார்கள். சிலம்பு காரணமாகத் தோன்றிய கோவலன் கண்ணகி கதை சிலப்பதிகாரம் என்று பெயரிடப் பெற்றது. பெயரளவில் நோக்கும் போது கதை மதுரைக் காண்டத்தோடு முடி வடைகின்றது. அவற்றோடு கற்பனைச் செங்குட்டுவனுடைய கதையைச் சேர்த்து, அவனுடைய பெருமையைக் காட்டுகின்றதே யொழிய வேறில்லை. மேலும் ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய காட்சி முதலிய இலக்கணங்களுக்கு உரையாசிரியர்கள் ஆண் மக்களுக்குக் கல் நாட்டலை உதாரணமாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், வஞ்சிக்காண்ட காட்சி முதலிய துறைகளுக்கு, கணவனைக் கொன்ற பாண்டியனுரையும் கொளுத்திய வீரப்பெண்ணுக்குக் கல் நாட்டியமை கூறப்பெற்றிருக்கின்றது. இந்த நூலைத் தவிர வேறு எந்த நூலிலும் பெண்களுக்குக் கல் நாட்டியதாகக் கூறப்படவேயில்லை. இச்செய்தி கூறுவதில் இதுவே முதல் நூலாகும்.

 

மேலும், காட்சிக் காதையில் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்களித்த மகட்பாற் காஞ்சியும், தென்றிசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன் றிய நீள்பெருங் காஞ்சியும், கொடை நிலை வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும், குன்குச் சிறப்பின் கொற்ற வள்ளையும் ஆகிய புறத்திணைத்துறை இலக்கணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ் விலக்கணங்களுள் ஆசிரியர் தொல்காப்பியனார் உலகம் நிலையாமையைப்பற்றிக்: கூறுவது காஞ்சித்திணையாகும் என்கின்றார். "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே'' (தொ-புற -சூ 23) இதனை வலியுறுத்தும். தொல்காப்பியர் ஒழிந்த மற்றைய பிற்பட்ட பன்னிரு படல முடையாரும் புறப்பொருள் வெண்பா மாலைக்காரரும் "பகையரசன் போருக்கு வந்துவிட, அரசன் காஞ்சி யென்னும் பூவைச் சூடிக்கொண்டு தன்னிடத்தைக் காக்க நினைத்தது." காஞ்சித் திணை யாகும் என்றும் கூறுகின்றார். இதனை “வெஞ்சின மாற்றான் விடுதர வேந்தன், காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று" (புறப் பொருள் வெண்பா மாலை. காஞ்சிப் படலம் 1 சூ) என்ற சூத்திரமும் வலிபுறுத்தும்.

 

நிற்க, ஆசிரியர் தொல்காப்பியர் “தாம் பெண்ணைக் கொடுக்காது மறுத்தல் பற்றிப் பகைவய்ைப் படை எடுத்து வந்த அரசனொடு முது குடியிற் பிறந்த மக்கள் தம் பெண்ணைக் கொடுத்தற்கு அஞ்சியமை மகட்பாற் காஞ்சியாகும்" என்கின்றார். “நிகர்த்துமேல் வந்த வேந்தனோடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்" (தொல்-புற-23 அ) அம் முதுகுடிகள் தாம் போர் செய்து அழியக் கருதுதலின் உயிரினது நிலையாமையை உணர்ந்த காஞ்சி யாயிற்று. இங்கும் நிலையாமை பற்றியே கூறி யிருக்கின்றார். புறப்பொருள் வெண்பா மாலைக்காரரும் புற-வென்-காஞ். 24-ம் சூத்திரத்தால் இங் இனமே கூறி யிருக்க; சிலப்பதிகார முடையார் “முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்” (காட்சி. 134-135) என்ற தொடராலே முதுகுடியிலே பிறந்த இளஞ் செல்வியைத்தான் சிறியனாய்க் கொடுத்த காஞ்சியும் என்று கூறுகின்றமையால், பெண் கேட்ட வேந்தனோடு வேறு நின்றமை என்று கூறிய தொல்காப்பியர் முதலியோருடைய கருத்துக்கு மாறுகொளப், பெண் கேட்டவனுக்கு இனிய னாய்க் கொடுப்பதை மகட்பாற் காஞ்சி என்றார். மேலும், சிலப்பதிகார முடையார் "நின்றெதிருன்றிய நீள்பெருங் காஞ்சியும்" (காட்சி-136) என்று முன்னர்க் குறிப்பிட்டபடி காஞ்சி எதிரூன்றலையும் பொருளாகக் கூறுகின்றார்.

 

இன்னோரன்ன காரணங்களால், நாடகக் காப்பியத்துக்கு வேண்டாதனவாகிய இலக்கணச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, அவ்விலக்கணம் களுக்கு இலக்கியமாக இந்த ஏழு காதைகளுமமைந்து கிடக்கின்றமையால், இது பின் சேர்க்கப்பட்டிருக்குமெனக் கருத வேண்டியிருக்கின்றது.

 

நூலின் உட்பொருள்

 

இந்நூல் பதிகம் ஒழிந்த முப்பது காதைகளை யுடையது. அவை மூன்று காண்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. சுமார் 4959 வரிகளையுடையன. மூன்றுவரிப் பாடல்களும் இரண்டு குரவைக் கூத்துக்களும் முப்பது கதையுள் அடங்கி யிருக்கின்றன. முதற்காண்டமாகிய புகார்க் காண்டத்தே சோழ நாட்டினையும் அதன் தலை நகராக இருந்த புகாரையும் முறையே (10) நாடு காண் காதையும் (5) இந்திர விழா ஊரெடுத்த காதையும் (சிறப்பிக்கின்றன) வருணிக்கின்றன.

 

மதுரைக் காண்டத்தே பாண்டிய நாட்டினையும் மதுரை மூதூரையும் முறையே (11) காடு காண் காதையாலும் (15) ஊர்காண் காதையாலும் சிறப்பிக்கின்றார். வஞ்சிக் காண்டமெனப் பெயரிய பகுதியில் வஞ்சி 55 ரின் சிறப்பினைக் கூறினாரில்லை. எனினும் "வஞ்சியின் சிறப்பைக் காட்சிக் காதையால் கவின்பெற அருளினார்," என்று கூறுவாருமுண்டு. மற்றைய கதைகள் கண்ணகியைப் பேருறுப்பாகக் கொண்டு, கோவலன் குட்டுவன் மூவரையும் மற்றும் சிலரையும் சிற்றுறுப்புக்களாகக் கொண்டு செல்கின்றன.

 

எனவே, மேற்கூறியவாறு நான்கு காதைகள் முடியுடை வேந்தர் இருவருடைய நாடு நகரங்களைக் கூறுகின்றன. ஆனால், அந்நாட்டில் அதுபோது ஆண்ட அரசர்களின் பெயர்கள் குறிப்பாகவன்றி வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், வஞ்சிக் காண்டத்தே மாத்திரம் ஏழு இடங்களில், செங்குட்டுவன் என்ற பெயரும் அவனே அக்காண்டத்தில் குறித்திருக்கும் வீரச்செயல்களை நடத்தினவன் என்றும் அறிய வெளிப்படையாகக் கூறியுள்ளது. புகார் காண்டத்தேயுள்ள முதற்காதையுள் “இப்பா லிமயத் திருத்தியவாள்வேங்கை யுப்பாலைப் பொற்கோட் டுழையதா, வெப்பாலுஞ் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனியாழி யுருட்டுவோன் எனவே" (மங்கல. 58.61) என்ற தொடருக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையால் (அதாவது கரிகாலன் மாறில்லாத தன் திகிரியை உருட்டுவோனாக") கோவலன் கண்ணகியை மணந்தபோது கரிகாலன் இருந்ததாக விளங்குகிறது. 'இரு நில மன்னற்குப் பெருவளங் காட்ட' (இந்திர. 212) தொடருக்கு “மிக்க நிலத்தையுடைய கரிகாலற்குத் தனது வளங் காட்டவாயிருந்தது" என்ற உரையாலும்,



இருநில மருங்கிற் பொருகரைப் பெறாஅச்
செருவெங் காதலிற் றிருமா வளவன்
வாளுங் குடையு மயிர்க் கண்முரசு
நாளொடு பெயர்த்து கண்ணார்ப் பெறுக விம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப
புண்ணியத் திசைமுகம் போகிய வந்தாள் (இந்திர-89-94)

 

என்ற தொடர்கள், கரிகாலன் வடதிசைப் போகிய நாள் என்ற இறந்த கலத்தால் கூறியுள்ளமையால், கோவலன் மாதவியைப் பெறுவதற்கு முன்னம் செய்த வடநாட்டு யாத்திரையைக் குறிப்பதாகும்.

 

விண்பொரு பெரும்புகழ்க் கரிகால்வளவன்

தண்பதம் கொள்ளும் தலை நாள்போல                   (கடலாடு-159.160)

 

என்ற தொடருக்கு, 'இக்கரிகால்வளவன் புதுப்புனலில்'விழவு கொண்டாடும் தலை நாட்போல' என்று எழுதியுள்ள உரையாலும் “கொள்ளும்" என்ற நிகழ்காலப் பெயரெச்சத்தாலும் கோவலன் மாதவியோடு கடலாடிய காலத்துக் கரிகாலன் இருந்தான் என்றும் புலனாகின்றது.


“உழைப்புலிக் கொடித்தேருரவோன் கொற்றமொடு

மழைக் கருவுயிர்க்கும்”                           (காடுகாண் காதை; வரி 142)


என்ற தொடரிலுள்ள "உரவோன்' என்ற சொல்லுக்குக் 'கரிகாலன்' என்று பொருள் எழுதுவதனாலும்,

 

“சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி" (அரங்கேற்று. 11) என்ற தொடருக்குச் 'சோழன் கரிகாலனுக்குக் காட்டவேண்டி' என்ற உரையிலும்,

 

''வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய

மாந்தளிர் மேனி மாதவி"                                (அடைக்கலம். வரி 21)


இதிலுள்ள 'வேந்து' என்ற சொல்லுக்குக் கரிகாலன் என்று பொருளெழுதியமையாலும்,


"மன்னன் கரிகால் வளவன்''                             (வஞ்சினம்-வரி 11)

 

என்று கரிகாலனுடைய பெயரை வெளிப்படையாகக் கூறுகின்றமையாலும் மேற்கண்ட எட்டு இடங்களில் சினவேற் செம்பியன், இருநிலமன்னன், திருமாவளவன், கரிகால்வளவன், புலிக் கொடித் தேருரவோன், சூழ்கழல் மன்னன், மன்னன் கரிகாலன். என்று சோழனுடைய பெயர் வெளிப்படை\யாகவும் குறிப்பாகவும் வந்துள்ளன.

 

மேலே காட்டியவாறு கோவலன் கண்ணகியை மணந்து இல்லறம் நடத்திய காலத்தும் மாதவியோடு கடலாடு காலத்தும் கரிகாலனுடைய செய்தியே கூறப்பெற்றிருக்கிறது.

 

மதுரைக் காண்டத்தேயுள்ள இறுதிக் கட்டுரையில் மட்டும் "அரசு கட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற பாண்டியனுடைய பெயர் குறிக்கப் பெற்றிருக்கிறது. மற்றைய இடங்களில் பாண்டியன் என்றும் தென்னவன் என்றுமே நூலகத்தே கூறியுள்ளது.

 

இக்காவியத்தின் மதுரைக்காண்டத்தின் இறுதியிலேயுள்ள, துன்ப மாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை. கட்டுரைக் காதை ஆகிய ஆறு காதைகள் கண்ணகியின் செய்தியையும், புகார்காண்டத்து உள்ள (1) மங்கல வாழ்த்துக் காதை, (2) மனையறம் படுத்த காதை (3) அடைக்கலக் காதை ஆகிய மூன்று காதைகள் கண்ணகி கோவலனை மணந்து இல்லறம் நடாத்திப் பிரிந்து மீண்டும் கூடி மதுரைக்குக் கணவனுடன் போந்து மாதரியிடம் அடைக்கலம் புகுந்த செய்தியையும், (3) அரங்கேற்றுகாதை (4) அந்திமாலைச் சிறப்புச் செய்த காதை (6) கடலாடு காதை (7) கானல்வரி (8) வேனிற்காதை ஆகிய ஐந்து காதைகள் மாதவி அரங்கேறி நடித்து அரசனால் பரிசிலாக அளிக்கப்பட்ட பச்சைமாலையால் கோவலனைப் பிணித்துக், கூடியிருந்து இந்திரவிழாவிற்குச் சென்று நடித்ததும் பின்னால் கடலாட்டு விழாவின் இறுதியில் கானல் வரி பாட்டால் கோவலனைப் பிரிந்து வீடு போந்து, பிரிவாற்றாது கோவலனுக்கு நிருபம் விடுத்து அழைத்தும் வாராமை கண்டு வருந்தி இருந்த செய்தியையும் கூறுகின்றார். (9) கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கண்ணகியின் தோழியாகத் தோற்றுவித்து வரந்தருகாதையால் அவளைக் கண்ணகியின் கோயிலுக்குப் பூசை செய்து வருமாறு பணிக்கின்றார். (13) புறஞ்சேரி இறுத்த காதையால் கோசிகன் கோவலனை மதுரைக்குச் சமீபத்தில் கண்டு மாதவியின் நிருடம் காட்டிச் சென்றமை முதலிய செய்தியையும் (15) அடைக்கலக் காதையில் மாடலன் என்னும்
பார்ப்பனன் மாவன் கோவலனைக் கண்டு அவனுடைய பெருமையைக் கூறின செய்தியையும் கூறுகின்றார். இறுதியிலுள்ள ஏழு காதைகளால் 25 முதல் 30) கண்ணகியின் செய்தி கேட்டுக் குட்டுவன், நிரபராதிகளான மதுரையைக் குடிகளோடு எரித்ததாகிய வீரச்செயலில் ஈடுபட்டு அவளுக்கு ஒரு கற்றளி (கோயில்) சமைத்து அவளுடைய படிவத்னத நாட்டி வணங்கி வரம் பெற்ற செய்தியையும் கூறுகின்றார்.


முக்கிய உறுப்பினர்கள்

 

இக்கதைகளுள் ஆறு கண்ணகியின் தனிச் செயலைப் பற்றியும், ஆறு செங்குட்டுவனுடைய தனிச்செயலைப் பற்றியும் கூறுகின்றமையாலும், இக்கதைக்கு முக்கிய உறுப்பினர்கள் இவர்கள் இருவருமேயாகும். மாடலன் என்பான் மதுரைக் காண்டத்தின் இறுதியிலே அதாவது 15வது அடைக்கலக் காதையில் தோன்றி, வஞ்சிக்காண்டத்தின் இறுதி 30 வது வரந்தருகாதையில் மறைகின்றான். கவுந்தி அடிகளும் அங்ஙனமே புகார் காண்டத்து இறுதியிலுள்ள 10வது நாடுகாண் காதையிலே தோன்றி மதுரைக் காண்டத்தின் 15வது அடைக்கலக் காதையில் மறைகின்றார். கோவலனைப் புகார் காண்டத்தில் முதலிலே மங்கல வாழ்த்துக் காதையில் மணப்பந்தலில் தோற்றுவித்து மதுரைக் காண்டத்தின் இடையிலே 16வது கொலைக்களக்காதையில் முடிக்கின்றார். மீண்டும் 23 வது கட்டுரைக் காதையில் அவனை விமானத்தில் தோற்றுவிக்கின்றார்.

 

செங்குட்டுவனையும் வஞ்சிக் காண்டத்தின் முடிவில் 25 வது காட்சிக் காதையில் தோற்றுவித்து இறுதியிலே மறைக்கின்றார். எனவே இவ்வுறுப்பினர்களை எல்லாம் இங்ஙனம் தோற்றி மறைத்துப் பின்னர் கண்ணகியை மட்டும் புகார் காண்டத்தின் முதற் காதையாகிய மங்கல வாழ்த்துக் காதையில் மணப்பந்தலில் கோவலனோடு தோற்றுவித்து, மதுரைக் காண்டத்தின் இடையேயுள்ள 16வது கொலைக்களக் காதையில் கோவலனிடமிருந்து பிரித்து மதுரைக் காண்டம் 23 வது கட்டுரை காதையில் அவளுடைய உடலை முடித்துக் கணவனோடு வானவூர்தி ஏறிச்செல்லும் காட்சியைக் காட்டி மீண்டும் வஞ்சிக் காண்டத்தின் இறுதியிலே 28 வது நடுகற் காதையில் அவளுடைய ஆவியைக் கல்லில் அறைகின்றார். எனவே இந்நூலில் தோன்றும் பலருள்ளும் கண்ணகியே தலையாய உறுப்பினள் ஆவாள். இது பற்றியே மங்கலவாழ்த்துப் பாடலில் கண்ணகியையே முற்கூறினார் போலும். மாடல. மறையோன் ஏறக்குறைய நான்கு காதைகளில் வந்தாலும் அவனை ஒரு உறுப்பாகக் கொண்டிலர் போலும்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - நவம்பர், டிசம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment