Sunday, August 30, 2020

 

கார்த்திகை

சகோதர சகோதரிகளே!

 

சித்திரை முதலாக எண்ணப்படும் மாதங்களுள் எட்டாவதான மாதம் கார்த்திகை யென்னும் பெயரால் வழங்கி நிற்கின்றது. இம்மாதத்தில் குறிஞ்சிப் பூவானகாந்தள் மிகவும் அலர்தலின் அப்பூவிற்குக் கார்த்திகைப் பூவென்றும், அதன் கிழங்கிற்குக் கார்த்திகைக் கிழங்சென்றும் பெயர் வழங்குகின்றது. இம்மாதத்தில் பூமிதேவி யானவள் தன் உடல் முழுவதும் பல வானப் பூவேலை செய்த பசும் பட்டாடையால் அலங்கரித்தது போலப் பச்சிலைத் தழைகளால் மூடப்பெற்று விளங்குவள்.

 

இம்மாதத்தில் மழை காரணமாகக் குளம், கிணறு முதலிய எங்கு பார்த்த போதிலும் நீர் நிறைந்து நிற்கும். ஆவணி மாதமான கார் காலத்தில் துவக்கப்பட்ட நெற்பயிர் கார்த்திகை மாதத்தில் முற்றுப் பெறுதலின் அவைகளைக் கார்த்திகைக் கார் என்னும் பெயரால் வழங்குகின்றனர்.

 

பூவும், கிழங்கும், பயிரும், கார்த்திகையின் பெயரைக் கொண்டு சிறந்தது போல இந்த மாதத்துப் பிறையைச் சுட்டிக் கார்த்திகைப் பிறை யெனக்கூறுவார்கள். இம்மாதத்து வரும் சோமவாரங்கள் மற்றைய மாதச் சோமவாரங்களினும் கார்த்திகைச்சோமவாரமென மிகப்பாராட்டப்படுவதோடு, சிவாலயங்களில் பூசனை முதலியன விசேஷமாக நடத்தப்படும். இம்மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் வருந் தினத்தைக் கார்த்திகை கார்த்திகை யென்று மிகக்சிறப்புற வழங்குவார்கள். எத்தினங்களில் தீப மேற்றப்பட்டாலும் கார்த்திகை நாளிலேற்றுந் தீபம் விசேஷமானதாகிக் கார்த்திகைத் தீபமென்னும் பெயரையே கொண்டு நிற்கின்றது. இத் தினத்தில் ஜனங்கள் அடுக்களை, புறக்கடை, தலைக்கடை யாதிகளிலும் தீபாலங்காரஞ் செய்து திருவிழாக் கொண்டாடுகின்றனர். கணேசராலய கந்தராலய சிவாலய விஷ்ணு வாலயங்களிலெல்லாம் இக்கார்த்திகை நாளில் விசேஷ பூசையுற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

 

இம்மாதமானது நாள், கிழமை திதி முதலிய ஒவ்வொன்றாலுஞ் சிறப்புள்ளதாய் விளங்குகின்றது. இம்மாதத்திற் சைவரிற் பெரும்பாலாரும் ஏனையோரும் திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப தரிசனத்துக்குப் போவது சிறந்த வழக்கம். இக்கார்த்திகை தீபதினத்தில் சனங்கள் தீபதரிசனஞ் செய்தே போசனஞ் செய்கின்றார்கள். திருவண்ணாமலையில் நடக்கும் தீபோற்சவத்தை யூன்றி யாராய்வோர் பல ரகசியங்களை அறிவார்கள்.  

 

"ஆர்த்தி யெல் லாமளிக்கும் அண்ணல் வரம்பெற்ற

கார்த்திகை யேயுனக் காயிர நமஸ்காரம்"

 

அந்த ரகசியங்களுள் அன்பர்களறியத்தக்க அதிமுக்கியமான ஒன்றைக்காட்டுவோம். மேற்பேசிய தீபக்காட்சியாகிய மகோற்சவத்தைக் கண்டு ஆனந்தித்தவாது கண்களே கண்கள். இது சிவபெருமான் உலக முழுதும் சோதிவடிவாய் விளங்கி நிற்கின்றமையை அறிதற்கு ஓர் பெரிய அறிகுறியாக எவ்விடத்தும் தீபமிட்டுத் தரிசிக்கும் வழக்காம். ''மலை மேலிட்ட விளக்கு" என்று வழங்கும் உலகத்து முதுமொழியானும் இதன் மகிமை புலப்படும். இத்தீப மிடுதல், தேகம் என்னும் ஆலயத்திலேயுள்ள மனம் என்னும் தகழியில் அறிவாகிய நெய்யை நிறைத்து உயிர் என்கிறதிரியிலே பிராணன் என்னும் காற்றை நிறுத்தி, ஆணவமலம் என்னும் இருள் நீங்கச் சிவஞானம் என்னும் தூண்டா விளக்காகிய ஞான தீபத்தை யேற்றினோர் சிவபெருமானது திருவடிப் பேறாகிய பேரின்ப முத்தியையடைவார் என்னும் உண்மை விளங்கவைத்த ஓர் பேருபகாரமேயாகும். அது

 

உடம்பெனு மனை யகத்து ளுள்ளமே தகழி யாக
      மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
      இடம்படு ஞானத் தீயா லெரிகொள் விருந்து நோக்கிற்

கடம்பமா காளை தாதை கழலடி காண லாமே''


என்னுந் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தாற்றெளிக.


வா. ர. வேணுகோபால் செட்டி,

செங்கழனிமேடு, வாயலூர்.

 

குறிப்பு: - திருவண்ணாமலைத் தீபத்தின் ஐதீகத்தைப்பற்றிய வரலாறு புராணத்தில் கூறப்பட்டிருப்பது யாவருமறிந்ததே. அதன்படி யாவற்றிற் கும் மூலகாரணமாகிய அத்துரிய பரம்பொருளின் ஆதியந்தங் கடந்த நிலை யொருவராலுங் காணமுடியாததென்று அறியக்கிடக்கிறது.

 

இன்னும் அத்தீபம், ஆன்மாக்கள் பிறப்பிறப்பாகிய பெருங்கடலைக் கடந்து, முத்தியென்னும் கரையைச் சேர வழிகாட்டும் தீபஸ்தம்பமாகும் (Light House - இலயிட்ஹவுஸ்) என்று சோணசைல மாலையில் கூறப்பட்டிருக்கிறது.

 

இத்தகைய விஷயங்கள் ஒவ்வொன்றும் மோக்ஷ மார்க்கத்தைக் காட்டும் குறிப்புகளேயாகும். இதனால் நம் தெய்வீகப் பூமியில் மோக்ஷமார்க்கம் எப்போதும் மறைபடாதென்பது உண்மை யென உணரலாகும். மோக்ஷ மார்க்கத்தின் சத்தியம் என்றும் பிரகாசிக்குமாறு நமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் கொள்கைகளடங்கிய நமது மதத்தின் பெருமை அளவிடற் பாலதன்று.

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - நவம்பர் ௴

 

 

   

No comments:

Post a Comment