Monday, August 31, 2020

 

கொற்கைப் பெருந்துறை.

 (நா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ. பி. எல்.)

 

தொன்னலம் வாய்க்கு தென்னாட்டில் தமிழ் மன்னர் மூவரும் தழைத்தோங்கி வாழ்ந்தனர் என்பது சரித்திர உண்மையாகும். பாண்டி நாடே பழம்பதியாகும் என்று மணிவாசகனார் புகழ்க்துரைத்த நன்னாட்டில் முத்தமிழ் வளர்த்த பாண்டியன் மீனக் கொடியோடு மிளிர்ந்தான். செந்நெல்லும் கரும்பும் செழித்தோங்கிய சோழ நாட்டில் வேங்கைக் கொடியோனாய வளவன் வீற்றிருந்தான். மஞ்சுலாவும் சோலை சூழ்ந்த மலைநாட்டில் வில்லவன் அமர்ந்து விளங்கு புகழ் எய்தினான். இவ்வாறு தமிழ் மன்னர் குடையின் கீழ்த் தங்கி நின்ற முந்நாடும் அளவிற் குறைந்தனவே யாயினும் வளமார்ந்த செழு நிலமாய் விளங்கித் திகழ்ந்தது. பாண்டிய நாட்டில் வையை யென்னும் பொய்யா நதி பாய்ந்து வளம் பெருக்கியது. இந்நாளில் ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் வையையாறு அந்நாளில் பூம்பொழில்களின் இடையே சென்ற புனலாறாக இலங்கிற்றென்பது சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களால் அறியப்படுகின்றது. ஆழநெடும் புனலமைந்த இவ்வாற்றின் அழகினை,


“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் குலக்கொடி."


என்று இளங்கோ அடிகள் இனிமை சான்ற மொழிகளால் எழுதிப் போந்தார். புலனழுக்கற்ற புலவரும், பொய் யடிமை இல்லாப் புலவரும், போற்றிப் புகழும் பெருமைசான்ற திருநதியை “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி" என்று அடிகள் புனைந்துரைத்தார். இத்தகைய அழகுவாய்ந்த ஆற்றின் கரையில் மதுரை மூதூர் அமர்ந்திருந்தது. தொன்மை வாய்ந்த பாண்டி நாட்டின் தென்பால் அமைந்த செந்தமிழ் நாட்டில் பொருனை யெனும் திருந்தி பரந்து பாய்ந்தது. பொதிய மலையிற் பிறக்கும் பொருனையாறு கடலொடு கலக்கும் துறையில் கொற்கை என்னும் துறைமுகம் அமர்ந்திருந்தது.

 

இனி, பொன் கொழிக்கும் ஆறென்று புலவர் புகழ்ந்துரைத்த பொன்னியாற்றின் வண்மையால் வளம் சுரந்த வளவன் நாடு நீர்வளம் மலிந்த நாடாகநின்று இலங்கிற்று. கழனி நாடென்று கவிஞர் புகழும் பெருமை சான்ற திருநாட்டின் உயிரென உலாவிச் சென்ற இவ்வாற்றின் அருமையை,


 "கோணிலை திரிந்து கோடை நீடினும்
 தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை.''


என்று சாத்தனார் போற்றிப் புகழ்ந்தார். இக்காவிரி யாற்றின் கரையில், ஊரெனப்படுவது உறையூரென்று உரையாசிரியர் வியந்துரைத்த திருநகர் விளங்கித் திகழ்ந்தது. பொன்னியாறு கடலொடு கலக்குமிடத்தில் பூம்புகார் நகரமென்னும் காவிரிப்பூம் பட்டினம் களித் திலங்கிற்று.

 

இனி மலைவளம் சிறந்த சேரநாட்டில் பேரியாறு என்னும் பெயரமைந்த திருந்தி பூவார் சோலைகளின் இடையே புகுந்து சென்றது. கோங்கும் வேங்கையும் நாகமும் திலகமும் நிறைந்த நளிர்பூ ஞ்சோலைகளினிடையே பரந்து பாய்ந்த இந்நதியின் பெருமையை,


''கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
 நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்
 உதிர்பூம் பாப்பின் ஒழுகுபுனல் ஒழித்து
 மதுகரம் ஞிமிரொடு வண்டினம்பாட
 நெடியோன் மார்பில் ஆரம் போன்று
 பெருமலை விலக்கிய பேரியாறு."


என்று இளங்கோ அடிகள் எழிலுற எழுதியமைத்த நயம் அறிந்து இன்புறத்தக்கதாகும். இன்னும் ஆன் பொருனை என்னும் பெயரமைந்த ஓர் அழகிய நதியும் சேர நன்னாட்டைச் செழிப்புறச் செய்தது. இவ்வான் பொருனையாற்றின் கரையில் சோர் தலைநகராய வஞ்சிமா நகரம் அமைந்திருந்ததென்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இங்ஙனம் செழுமை யுற்று நின்ற நன்னாடுகளின் பெருமை யறிந்த ஒளவையார்,


''வேழமுடைத்து மலைநாடு மேதக்கச்
 சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
 தென்னாடு முத்துடை பத்துத் தெண்ணீர் வயற்றொண்டை
 நன்னாடு சான்றோருடைத்து.”


என்று அருளிய புகழுரை பொருளுரையாகும். வில்லவன் ஆண்ட சோநாட்டை வேழமுடைய மலைநாடென்றும், வளவன் ஆண்ட நீர் நாட்டைச் சோறுடைய வளநாடென்றும், மீனவன் ஆண்ட தமிழ்நாட்டை முத்துடைய தென்னாடு என்றும் ஒளவையார் அறிந்துரைத்துப் போந்தார். தென் கடலில் விளைந்த முத்து ஆழ நெடுந்திரை ஆழிகடந்து யவனமாதரது கழுத்திலும் காதிலும் அழகுற இலங்குவதாயிற்று. குமரிக்கும் கோடிக்கும் இடையேயமைந்த கொற்கைத் துறையில் குளித்த முத்து கலத்தினும் சென்று காவலர் முடிமேல் களித்திலங்குவதாயிற்று. கலர்தரு திருவைக்காதலித்த யவனர் கொற்கைத் துறையில் வாழ்ந்த குடிகளோடு கலந்துறைவாராயினர். இப்பெருந் துறையில் விளைந்த முத்தின் அருமையைப் பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனது பெருமையைப் பேசப்போந்த புலவர்,


 "விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
 இலங்குவளை இருஞ்சேரி
 நற்கொற் கையோர் நசைப் பொருந.”


என்று புகழ்ந்துரைத்த நயம் போற்றத்தக்கதாகும். சூல் முற்றி ஒளி முதிர்ந்த சீரிய முத்தெடுக்கும் கொற்கையோர் விரும்பும் கொற்றவனே யென்று புலவர் பொருகனைப் புகழ்ந்துரைத்துப் போந்தார். தென்னவன் நாட்டில் தென்ளிய முத்து விளையும் துறைகளைச் செவ்வையாய் அறிந்த பொருனை நாட்டுப் புலவராய குமரகுருபர அடிகள்,


 “கோடும் குவடும் பொருதரங்க
 குமரித் துறையிற் படு முத்தும்
 கொற்கைத் துறையிற் றுறைவாணர்
 குளிக்குஞ் சலாபக் குவான் முத்தும்
 ஆடும் பெருந்தண் துறைப் பொருனை
 ஆற்றிற் படுதெண் நிலாமுத்தும்
 அந்தண் பொதியத் தடஞ்சாரல்
 அருவி சொரியும் குளிர் முத்தும்.''


என்று அழகுறத் தொகுத்துரைக்கும் அடிகளின் நயம் அறியத்தக்கதாகும். குமரித் துறையிலும், கொற்கைத் துறையிலும், பொருனை யாற்றிலும் பொதியத் தருவியிலும் ஒளி முதிர்ந்த விழுமிய முத்துப் பிறக்குமென்று அடிகள் அழகுற எழுதியமைத்தார். இவ்வாறு புலவர் நாவிற் பொருந்திய கொற்கைத்துறையின் அருமை யறிந்த சோனகரும் யவனரும் தென் குமரிக்குத் தென்பாலமைந்த திரைக் கடலை கொற்கைக் கடலென்றே குறித்துவைத்துள்ளார். மணிமாட மதுரை மாநகரம் மீனவன் தலைநகராய் மிளிர்வதன் முன்னமே கொற்கைத் துறை இணையற்ற துறைமுகமாய்த் திகழ்ந்தது. தென்புலம்காக்கும் தென்னவனைக் கொற்கைக் கோமான் என்று சிறுபாணாற்றுப்படைகுறிக்கின்றது. இன்னும் கொற்கைப் பெருந்துறையின் செழுமையையும் அவ்வூரில் அரசுபுரிந்த கொற்றவன் பெருமையையும் கூறப்போந்த அம்மூவனார் என்னும் அருந்தமிழ்ப் புலவர்,


 “இருங்கழிச் சேயிறா இனப்புள்ளாரும்
 கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
 வைகறை மலரும் செய்தல்போல
 தகை பெரிதுடைய காதலி கண்ணே.''


என்று சிறப்பிக்கும் மொழிகள் செம்மைசான் றனவாகும். கலந்தரு திருவிற்களித்திருந்த மாறன் மூதூரை கொற்கையம் பொருந்துறை என்று புலவர் புகழ்துரைத்தார். இத்தகைய பெருமை சான்ற பெருந்துறையில் விளங்கிய செழியனைக் கொற்கைக் கோமான் என்று குறித்துப் போந்தார். இவ்வாறு கவிஞர் பாடும் சிறப்பமைந்த கொற்கைத் துறையில் விளைந்த முத்தைக் காதல்புரியும் இளங்கன்னியரது கொவ்வைச் செவ்வாயிலமைந்த வெள்ளிய மூரலுக்கு உவமை கூறும் முறை செந்தமிழ் நூல்களில் சிறந்து விளங்கக் காணலாம். பன்னலந்திகழும் தன் காதலியின் முத்தனைய வெண்ணகையைப்புகழப்போந்த தலைமகன்,


''அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்றுறை
 இலங்கு முத்திறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
 அரம்போழ் அவ்வளைக்குறு மகள்
 நரம்பார்த்தன்ன தீங்கிளவிகளே.''

 

என்று அந்நங்கையின் நலம் புனைந் துரைக்கும் நயம் சான்ற மொழிகள் ஐங்குறு நூற்றில் அமைந்திலங்கக் காணலாம்.

 

இங்ஙனம் நற்றமிழ்வல்ல கவிஞர் பாட்டில் பயின்ற கொற்கைப் பெருந்துறை இப்பொழுது சீரிழந்த ஒரு சிற்றூராகப் பொருனை நாட்டில் அமைந்திருக்கின்றது. நித்திலம் நல்கிய நீலத் திரைக் கடல் இப்பொழுது நான்குமைலுக்கு அப்பால் விலகி நிற்கின்றது. அலையொலி மலிந்த மூதூர் இப்பொழுது அமைதியுற்றுத் துஞ்சுகின்றது. கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் இடையறாது நிகழ்ந்த கொற்கைமூதூர், காதலனை இழந்தகற்புடையாள் போல் கவினிழந்து பொலிவழிந்து நிற்கின்றது. முத்தம் தரும் தென்கடல் கொற்கைக்கு முத்தம் தராது விலகிய பொழுது காயல் என்னும் பெயரமைந்த கடற்கரையூர் எழுந்து திகழ்வதாயிற்று. பதின்மூன்றாவது நூற்றாண்டில் தமிழ்நாடு போந்த மார்க்கோப்போலோ என்னும் யவன அறிஞர் இக்காயலின் பெருமையை விரித்துக் கூறியுள்ளார். இக்காயலும் பிற்காலத்தில் கருங்கடலால் கைவிடப்பட்டது. துறைமுகமாக அமைந்த இடங்களைத் தூர்த்துக் கொடுங்கடல் கொண்ட குமரி நாட்டை மீண்டும் கவரக்கருதும் பொருனை யாற்றின் பெருமை யறிந்த போர்ச்சுகீசியர் இக்காயலைக்கைவிட்டுத் தூத்துக்குடியில் துறைமுகம் அமைக்கத் தொடங்கினார்கள்.

பொருனை யாறும் பெருங் கடலும் போர் புரியும் இடத்தில் அகப்படாத இவ்வூர் இன்றளவும் தென்னாட்டில் சிறந்த துறைமுகமாகவும் முத்துக் குளிக்கும் துறையாகவும் நின்று நிலவுகின்றது.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 



 

 

No comments:

Post a Comment