Monday, August 31, 2020

சசிவன்னன் 

மங்கலம்

 

சந்திரன் சூரியன் அக்கினி நீர் காற்று ஆகாயம் பூமி ஆன்மா என்னும் எட்டின் வடிவமாயும், எல்லாவற்றிற்கும் இறையாயும், எல்லாமாயும், எல்லா மல்லாததாயும், அறிவுருவமாகவுமுள்ள பரம்பொருளை மனதின்கண்வைத்து தியானிப்போமாக.


நூல்

 

முன்னொரு காலத்தில் பாகவெக்கியன் என்பானொரு வேதியன் விரதசீலை என்னும் மனையாளுடன் வாழ்ந்து வருங்காலத்தில் அவர்களுக்கு ஓர் புதல்வன் பிறந்தான். அவன் வயதில் வளர வளர சகல துர்க்குணங்களும் அவனுடன் வளர வாரம்பித்தன. அவன் தீவினைகளெல்லாவற்றிற்கும் இவனே இருப்பிடமென்னுமாறிருந்தான். அவன் செய்யாத கொலையும் களவும் வஞ்சனையும் உலகத்திலில்லை. பேசுவதெல்லாம் பொய்யே யொழிய மெய்யென்பதன் பெயரையும் அவனறியான். விபசாரத்திற் றலை சிறந்து விளங்கினான். பாவிகளனைவருள்ளும் பெரும்பாவி யிவனே. இவனுடைய பெயரைக் கூறுவோரது குலமும் எரிவாய் நரகை யெய்து மென்னுமாறு ஒழுகினான். இவன் செய்து வந்த தீவினையின் வன்மையானது சொர்க்கத்தில் வசித்து வந்த அவனுடைய பிதிரரையும் நரகத்தில் சேர்த்து விட்டதென்றால் இவன் செய்தபாவகாரியத்தை விவரித்துக் கூறுதல் எப்படிச் சாத்தியமாகும்!

 

ஒரு பிறவியின் கண் ஒருவன் செய்துவரும் புண்ணிய காரியமும் பாவகாரியமும் மறு பிறவியின் கண்ணே அவனுக்குப் பயன் தரும் எனக் கூறு அது சரியே யாயினும் முற்றிலும் சரியல்ல. ஒருவன் செய்யும் புண்ணியமோ பாவமோ அதிகரித்து விடுமாயின் அவை அப்பிறவியிலேதானே தம் பயனாகிய இன்பத்தையோ துன்பத்தையோ தந்துவிடும் என்பது உண்மை.


இப்பவ மதனிலீட்டும் இருவினை பயனளித்தல்

எப்பவத் தென்னுமைய மிதயமே எண்ணல் நன்றோ?
 
ஒப்புற விதைதெளித்தா லுடன்பல னளித்தல்போல
இப்பவ மீட்டு பாவ மிம்மையே யளிக்கு மன்றே.


என்னு மான்றோர் வாக்குப் பொய்யாமோ? அவன் செய்து வந்த பாவகிருத்தியங்கள் அளவு கடந்து விட்டமையின் அத்தீவினைகள் அப்போதே பயனைக்கொடுக்கத் தொடங்கி விட்டன. உலகத்தில் எத்தனை வகைப்பட்ட வியாதிகளுண்டோ அத்தனையும் அவனைச் சூழ்ந்து கொண்டு வாட்டத் தொடங்கி
விட்டன. அவனுடல் முழுதும் வெண்குட்ட நோயால் வெள்ளை வெளேரென சந்திரனுடைய நிறம்போல் வெளுத்து விட்டது. அதனால் அவனை யாவரும் சசிவன்னன் (சசி=சந்திரன்; வன்னன்=நிறத்தை யுடையவன்) எனப் பெயரிட் டழைக்கலாயினர்.

 

தன் மைந்தனது துன்பத்தைக்கண்ட எக்கியன் மனங்கலங்கினான். தன் மகனுடைய பிணிகளெல்லாம் நீங்கி அவன் குணமடைய வேண்டுமே எனப் பெருங் கவலை கொண்டு படாத பாடெல்லாம் பட்டான். அவனைத் தோளின் மேற் சுமந்து கொண்டு ஊரூராய்த் திரிந்து ஆங்காங்குள்ள மருத்துவரிட மெல்லாங்காட்டி சிகிச்சை செய்வித்தான். எதனாலும் அவன் நோய்கள் நீங்கவேயில்லை. பித்திரவாஞ்சையால் அவன் மனம் நொந்து வருந்தி எவ்விதத்தால் என்மகன் நோய் நீங்கிச் சுகப்படுவான் எனப் பெரிதும் ஏக்க முற்றான். “பிராரத்த வினையின் பயனை அனுபவித்தே யொழிக்க வேண்டும். அனுபவியாமல் ஒழியாது. நீரேன் வீணாகக் கஷ்டப்படுகின்றீர்'' என்று பலரும் சொல்லுவர். பாக வெக்கியனும் இவ்வுண்மையை யுணர்ந்தவனே யாயினும், மகன் மேலுள்ள ஆசையால் அவனைத் தூக்கிக்கொண்டு எங்குந் திரிந்துகொண்டே யிருந்தான்.


ஓர் முனிவன் பிணி போக்கு முபாயம் கூறல்

பாகவெக்கியன் தன் மகனாகிய சசிவன்னனைத் தலைமேல் சுமந்து கொண்டு அவன் வியாதியைப் போக்கும் வழி எங்கேனும் கிட்டாதோவெனத் திரிந்து கொண்டிருக்கையில், பாகவெக்கியன் படுந் துன்பத்தைக் கண்ட வோர் முனிவன் அவனை நோக்கி "ஐயா! நான் சொல்வதைக் கேளும். உன் மைந்தனுக்குற்ற பிணிமணி மந்திர ஔஷதங்களால் நீங்கா. ஒரே யொரு உபாயம் இருக்கின்றது. அதனால் தான் இவை நீங்கும். அது தெனில்: - நீக்கமற எங்கும் நிறைந்துள்ள பரப்பிரஹ்மத்தின் சொரூபத்தை உள்ளவா றுணர்ந்து, அவ்வடிவாகவே விளங்கும் ஞானிகளின் கிருபாகடாக்ஷமே (அருள் நோக்கே) இக்கொடிய நோய்களைப் பரிகரிக்கத்தக்க ஒளஷதமாகும்,'' எனக் கூறினான். அது கேட்ட பாகவெக்கியன் அம்முனிவனை வணங்கி "சுவாமி! பரப்பிரஹ்ம சொரூபராய் விளங்கும் பரமஞானி எங்கிருக்கின்றனரோ? எனக்குத் தெரிவித்துக் கிருதார்த்தனாக்குதல் வேண்டும்'' என வேண்டி நின்றான். அம்முனிவன் அதற்கு விடையாக "சத்தீச்சுரம் என்னும் க்ஷேத்திரத்தில் தன்னை யடுத்தவர்க்கு அருள் செய்யும் பொருட்டு எழுந்தருளி யிருக்கும் மாநந்திபராயணர் என்னும் திருநாமத்தையுடைய பரமஞானியே உன் புத்திரனுக் குண்டாயிருக்கும் நோய்களுக்குச் சிறந்த மருந்தாவர்'' எனக் கூறிச் சென்றார்.

 

பாகவெக்கியன் ஞானியை அடைதல்


அம்முனிவன் மொழியைக் குருமொழி யெனக்கொண்ட பாக வெக்கியனென்னு மவ் வந் தணன், சசிவன்னனைத் தூக்கிக்கொண்டு நடந்தான். தன்கஷ்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எப்படியாவது தன் மகன் குணமடைய வேண்டுமே என்னுமாசை அவனை இழுத்துச் செல்ல, நாள் நடந்து சத்தீச்சுர மடைந்து, சுவாமிகளிருக்கு மிடத்தை யடைந்தான். அவரது சன்னிதானத்தில் சசிவன்னனை நிறுத்தினான். அவரடிகளில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து எழுந்து நின்று, "சுவாமி! எம்பெருமானே! இவன் என் மகன். இக்கொடியோன் செய்த தீவினைகள் எண்ண முடியாதன. அவற்றை நினைக்கவும் உள்ளம் திடுக்கிடுகின்றது; நாவும் நடுங்குகின்றது. அவை தங்கள் சமுகத்தில் எடுத்துரைக்கத் தகாதன. அத்தகைய பாவச் செயல்களைப் பயமின்றிச் செய்து வந்ததன் பயனாக இக்கொடிய வியாதிகளால் பீடிக்கப்பட்டு வருந்துகின்றான். ஆண்டவரே! இவற்றைப் போக்கிக் காப்பாற்றி யருளவேண்டும்” என முறையிட்டு நின்றான்.


முனிவ ரருள் நோக்கால் தீவினை தொலைதல்


பரிசுத்த மூர்த்தியாகிய மாநந்தி பராயணர் அவன் முறையைக் கேட்டும் சசிவன்னன் நிலையைக்கண்டும் மனமிரங்கி, அவனுடைய வினைகளெல்லாம் நீங்கும்படி தமது சுவானுபூதியினால் விளங்கும் கிருபா நோக்கத்தினாலே சசிவன்னனை ஒருமுறை பார்த்தார். அவ்வளவில் அவனது நோய்களும் அவற்றிற்குக் காரணமான தீவினைகளும் சூரியன் நோக்கால் அந்தகாரம் ஒழி வதுபோல ஒழிந்தன.


தந்தை மைந்தனை விட்டேகல்

 

மாநந்திபராயண முனிவரது மகிமையைக் கண்ட பாகவெக்கியன் சகலகலைகளையும் கற்றுணர்ந்தவனாகலின் சசிவன்னனைத் தன்னுடனழைத்துப் போகவேண்டு மென்றெண்ணாமல், அப்புத்திரன், முனிவரரது அநுக்கிரகத்தைப் பெற்று ஆத்மலாபத்தை யடைந்து உய்ய வேண்டும் என்னும் உயர்ந்தநோக்கங்கொண்டவனாய் "சசிவன்ன! பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றதன் பயன் இனிப் பிறவா நெறியை யறிதலேயாம். ஆத்மஞானத்தைப் பெற்றாலன்றி பவக்கடல் தொலையாது. ஆத்மஞானத்தை யடைதற்குச் சிறந்த உபாயம் குரு சேவையே. கடவுள் வழி பாட்டினும் ஆசாரிய வழிபாடே சிறந்தது.


காவிலாதபே ரன்பினுக் கெளிவரும் கருணைக்
குவனாரரு ளன்றியிக் கொடியவெம் பாசம்
புரையில் கேள்வியால் கடப்பது புணையினா லன்றி
உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவ தொக்கும்.


என்பர் பெரியோர். ஆகையால் நீ இக் குருநாதருக்குத் தொண்டு பூண்டு வழிபாடு செய்து கொண்டிரு; உய்வாய்," எனக் கூறி, அந்த நல்ல பிதாவாகிய பாகவெக்கியன் சசிவன்னனை அங்கேதானே விட்டுத் தன திருப்பிடம் சேர்ந்தான்.


 சசிவன்னன் தொண்டின் சிறப்பு

 

ஆசாரியரை யடைந்த சசிவன்னன் அவரை மனிதரென மதியாமல் மானிடசட்டை சாத்தி வந்த பரம்பொருளாகவே மதித்து வழிபட்டு வந்தான். அவரேவிய கட்டளைகளை மனக்களிப்போடு அக்கணமே செய்து வருவான். சில காரியங்களை அவர் கூறா முன்னமே குறிப்பறிந்து செய்வான். அவருடலுக்குற்ற குற்றேவல்களை வேளையறிந்து குறைவறச் செய்து முடிப்பான். சில நாட்களுக்குள் இவனது தொண்டின் சிறப்பைக் கண்டோரனைவரும் ஆசாரியரின் திருமேனிக்குரியவ னிவனேயாம் எனக் கொண்டாடி வந்தனர்.


குரு சேவை பலன்

 

சசி வன்னன் இவ்வாறு ஆசாரிய ரகமகிழும்படி திருத்தொண்டு செய்து வந்ததனால், பலவகைப்பட்ட பிறவிகளை யொழித்துப் பேரின்பாகாரமாய் விளங்கும் வீட்டையடைய விரும்பும் உத்தமர்களுக்கு இருக்கவேண்டிய விவாகம், இகாமுத்திரார்த்த பலபோக விராகம், சமாதிசட்க சம்பத்தி, முமுட்சுத்துவம் என்னும் சாதனங்கள் நான்கும் உண்டாயின.


(1) (ஆன்மா ஒன்றே நித்தியம்; அதற்கன்னியமாயுள்ள வனைத்தும் அநித்தியம்' என்று விசாரணையின் வாயிலாக வுணர்தல் நித்தியா நித்திய விவேகமென்னும் முதற்சாதனமாம்.


(2) 'இவ்வுலகத்தும் மறுவுலகத்தும் அடைதற் பாலனவாகிய வனிதாதி போகங்கள் துன்பவேதுவா மென்றுணர்ந்து அவற்றினிடத்து விருப்பங்கொள்ளாதிருத்தல்' இகாமுத்திரார்த்த பலபோக விராகம் என்னும் இரண்டாஞ் சாதனமாம்.

(3) ‘சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை என்னும் ஆறின் அடைவு' சமாதி சட்க சம்பத்தி என்னும் மூன்றாஞ் சாதனமாம். இவற்றுள்.

(அ) சமம் = அகக்கரணங்களாகிய மனம் முதலியவற்றை யடக்குதல்.

(ஆ) தமம் = புறக்காரணங்களாகிய செவி முதலியவற்றைத் தத்தம் புலன்களிலோடாதபடி தடுத்தல்.

(இ) விடல் = சர்வகர்மங்களையும் விடுதல்.


(ஈ) சகித்தல் = சுகம் துக்கம்; சீதம் உஷ்ணம் முதலியவற்றைப் பொறுத்தல்.

(உ) சமாதானம் = சித்தத்தின் ஒருமை.


(ஊ) சிரத்தை = குருவாகிய வேதாந்த வாக்கியங்களில் விசுவாசம்.


(4) முமுட்சுத்துவம் = மோட்சத்தை யடைதல் வேண்டுமென்னும் தீவிர விருப்பம்.)


சசிவன்னன் குருவைப் பிறவியை யொழிக்கும் உபாயம் கேட்டல்

 

இவ்வாறு சாதனங்கள் நான்கும் பொருந்திய சசிவன்னன், பிறவிக்குப் பயந்து அதனை யொழிக்கும் வழியை யடைதல் வேண்டும் என்னும் விருப்பம் மிகுந்தவனாய் மாநந்தி பமாயணரை யணுகி வலம் வந்து பணிந்து கண்ணீர் பெருக எதிரில் நின்றான். அதைக்கண்ட சர்வஞ்ஞராகிய மாநந்தி முனிவர் அவனுள்ளக் கருத்தை யறிந்தும் ஒன்று மறியாதவர் போல அவனை நோக்கி, "அப்பா! உனக்குள குறை யாது? கூறுதி'' என வினவினார். அவ்வளவில் சசிவன்னன், "எனது சகல தீவினைகளையும் ஒழித்துக் காத்த கருணையங் கடலே! மிகக்கொடிதாகிய பிறவிக்கடலுள் விழுந்துதவிக்கும் யான், அதனைக் கடந்து கரையேறுதற்குரிய நெறிகாணாகாணா தலைகின்றேன். தாங்கள் தான் கிருபை கூர்ந்து அந்நெறியைக் காட்டியருளல் வேண்டும்'' என விண்ணப்பித்து நின்றான். அதனைச் செவியுற்ற முனிவர் பெருமான் மாணவனுள்ளத்திற் கொண்டுள்ள எண்ணம் (பிறவிப் பயம்) உறுதிப்படுமாறு பிறவிக்கடலின் தன்மையைக் கூறுவாராயினர்.


பிறவிக்கடலின்
வருணனை

 

உத்தம மாணவக! நீ பிறவியைக் கடலெனக் கூறியது மிகவும் பொருத்தமுடையதே. வேதாகமங்களும் அவ்வாறே கூறி யிருக்கின்றன. இக்கடலே மிகவும் அஞ்சத்தக்கது. அதன் தன்மையை நீ அறியும்படி கூறுகின்றேன் கேள்.

 

பிறவி யென்னும் பெருங்கடலானது, "பிறப்பு இறப்பு என்னும் நீரைமிகுதியு முடையது; அறிவை விழுங்கத்தக்க காமம் என்னும் பெரிய பாம்புகளை யுடையது; விடயமாகிற ஆகாரத்தை விரைந்து புசித்துக்கொண்டு திரியும் கரணங்களென்னும் மீன் கூட்டத்தை யுடையது;" என்னினும் மேம்பட்டவரில்லை யென்கிறதாகிய பெருமித மென்கி ஏறகம்பீர தோற்றத்தையுடையது; வியாதிகளாகிய அழியாத புலால் நாற்றமுடையது; இடைவிடாது வரும் இன்ப துன்பங்களாகிய அலைகள் மோதப் பெற்றது. என்று சொல்லும்படியான வஞ்சகம் பொருந்திய திமிங்கிலமாகிய இராச மீன் வசிக்கப்பெற்றது; அளவுக் கடங்காத 'நான்' என்கின்ற அகங்காரமாகிய அநேக ஆமைகளை யுடையது; அறிதற் கருமையான அறியாமை யென்னும் ஆழம் பொருந்தியது; கள்ளமென்னும் விஸ்தாரமான நண்டுகளிருக்கப் பெற்றது; கலக மென்னும் விஷக்கிருமிகளை மிகுதியு முடையது; நன்மை யென்பதில்லாத தீமைகளாகிய நுரையுடையது; இன்பத்தைத் தருவதாகிய துறவு
கரையை யடையாதபடி தடுக்கும்படியான பெண்ணாசை என்னும் பெரிய சுழலை யுடையது; எமனும் பயப்படத்தக்க கொடிய கோபமென்னும் வடவா முகாக்கினியை யுடையது; அச்சத்தைத் தரும்படியான போகமென்னும் முதலைகளைப் பெற்றிருப்பது. மைந்தனே! ஏழு வகைப்பட்டதாகிய த்தகைய பிறவிக்கடலின் தன்மையை அறிந்து கூற வல்லோர் யாவர்? பிறவிக்கடலைக் கடப்போ ரிவரெனல் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்னும் பஞ்ச விடயங்களிற் சென்று அலைந்து திரும்புகின்ற அவலமாகிய புத்தியைக்கொண்டு வாத மிடும்படியான ஆறுசமயவாதிகளும் அக்கடலைக் கடக்கு மாற்றலற்றவர்களாய் அதில் விழுந்து வருந்துவோரே யாவர். அறிவு சொரூபமாகிய பிரத்தியகாத்மாவானது அழிவற்ற பிரஹ்மமாம் என்னும் சுவானுபவமாகிய மரக்கலத்தில் ஏறும் ஞானிகளே அதனைக் கடக்க வல்லவராவர்.”

 

மனம் புத்திகள் நீ யன்று.

 

சசி: - எம்பெருமானே! தாங்கள் கூறியவற்றால் பிராணன் நானல்லவென்றறிந்தேன். அது பொருந்தும். ஆனால் மனம் புத்தி என்னு மிரண்டி லொன்றோ அல்லது இரண்டுமோ எனது வடிவமாதல் வேண்டும் என்றெண்ணுகின்றேன்.

 

மாநந்தி: - அன்புள்ள மாணவக! நீ கூறியது சரியன்று. மனம் நீ ஏனெனில், மனமானது, ‘அந்தக்கரணங்கள் நான்கனுள் ஒன்று' என்று எண்ணப்படுகின்றது. அதனாலும்,
மறிய' என்று சொல்லுகிறபோது, 'எனது' என்னும் விவகாரத்திற் கிடமா யிருப்பதாலும்
அதாவது மமதைக்கு விஷயமா யிருத்தலாலும், மனம் நீ யன்று. அன்றியும் மனமானது அன்னத்தின் காரியம் என்று முன்னம் சொன்னேனல்லவா? (உன்னால் உண்ணப்படும் அன்னமானது உள்ளே சென்று அங்குள்ள சாடராக்கினியால் தூலம் மத்திமம் சூக்குமம் என்று மூன்று பாகமாகப் பிரிகிறது. அவற்றுள் தூலப் பகுதியாக ஒருபாகம் மலமாய்விடுகின்றது. மத்திமமாகிய ஒருபாகம் உடம்பிற் குறுதி யுண்டாக்குவதற்காக அதனோடு சேர்ந்து ஒன்று பட்டு உடம்பாகின்றது. மற்றொன்றாசிய சூட்சும பாகம் மன மாகின்றது.) அன்னத்தின் காரியமாகிய மலம் நீயல்லாம லிருப்பதுபோல மனமும் நீ யாகமாட்டா யல்லவா? ஆகையால் மனமும் நீ யன்று. புத்தியும் இத்தன்மையினதே யாகலின் அதுவும் நீ யன்றாம்.


சசி: - அன்றேல், அகங்காரம் நானோ?

 

அகங்காரம் நீ யன்று.

 

மாநந்தி: - அகங்காரமும் நீ யல்ல. ஏனெனில், அகங்காரமும் அந்தக்கரணம் நான்கனுள் ஒன்றாக வைத்தெண்ணப்படுகின்றது. அன்றியும், இவ்வகங்காரந்தான் இன்ப துன்பங்களுடையதா யிருப்பது. அகங்காரமுள்ள காலங்களாகிய சாக்கிரத்திலும் சொப்பனத்திலும் இன்ப துன்பங்க ளிருப்பதும், அவ்வகங்கார மில்லாத சுழுத்தியில் இன்ப துன்பங்க ளில்லாமலிருப்பதும் அனுபவமா யறிந்த விஷயமல்லவா? சாக்கிர சொப்பனங்களி லிருப்பதும் சுழுத்தியில் இல்லாம லிருப்பதுமாகிய பிறழ்ச்சியுடையதாயு மிருக்கின்றது. இத்தியாதி காரணங்களால் அகங்காரமும் நீ யன்று. தவிர, இவ் வகங்காரமே பிறவிக்குக் காரணமா மென்று பெரியோர் பேசுவர். இதனாலும் அகங்காரம் ஆன்மா வன்றென்பது அறியக்கிடக்கின்றதே. மேலும், அகங்காரம் அறிவற்ற சடப்பொருளன்றோ!

சித்தம் நீ யன்று.


சசி: - சித்தமே ஆன்மாபோலும்?

 

மாநந்தி: - அதுவுமன்று. சந்தேகத்திற் கிடமாகிய பொருளையும் (சந்தேகித்தல் மனத்தின் தொழில்), இன்ன பொருள் தானென்று நிச்சயமா யறிதற் கிடமாகிய வோர் பொருளையும் (நிச்சயித்தல் புத்தியின் தொழில்), நான் எனது என்று அபிமானித்தற் கிடமாகிய வோர் பொருளையும் (நான் எனதென்று அபிமானித்தல் அகங்காரத்தின் தொழில்), சிந்திப்பது சித்தமாம். ஆகவே சித்தமானது சிந்திப்பதற்குரிய ஓர் கருவியே யாகுமன்றி ஆன்மாவன்று என அறிந்து கொள்ளக் கடவாய்.

 

உடம்பு முதல் சித்தம் வரையில் சொல்லப்பட்ட (தூலதேகம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், பிராணன், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய) அனைத்தும் உன்னால் அறியப்படும் பொருள்கள். ஆகலின் அவைநீ யல்ல; உன்னுடையனவு மல்ல.


அறியும் பொருளே நீ.

 

சசி: - ஞானதேசிகா! என்னா லறியப்படும் பொருள்களெல்லாம் நானல்லவெனக் கூறினீர்கள். இதை விளக்கத் தாங்கள் காட்டிய காரணங்களால் அது சரி யென்றே எனக்கும் தெரிகின்றது. ஆனால் நான் எனப்படும் பொருள் ஒன்று இருந்தே தீரவேண்டுமே. என்னால் அறியப்படும் பொருள்யானல்லவாயின், என்னா லறியப்படாத பொருளோ யான் எனத்தகும் பொருள்?

 

மாநந்தி: - அறியப்படாத பொருளும் நீ யன்று. ஏனெனில், அறியப்படாத பொருள் உலகத்திற்குக் காரணமான மாயையாகும். அறியப்படும் பொருள் அதன் காரியமான தேகாதிப் பிரபஞ்சமாம். ஆகையால் அவையிரண்டும் நீ யல்ல என்று உபநிஷத்துக்கள் பறை யறைந்து கொண்டிருக்கின்றனவே.

 

சசி: - சுவாமி! தாங்கள் கூறுவது மிகவும் விந்தையா யிருக்கின்றது.
அறியப்படும் பொருளும் நானல்ல வென்கின்றீர். அறியப்படாப் பொருளும் நானல்ல வென்கின்றீர். அப்படியானால் நான் யார்?

 

மாநந்தி: - மாணவக! நீ அறியப்படும் பொருள், அறியப்படாப் பொருள் என்னும் இரண்டிற்கும் வேறாகவுள்ள அறிவே நீயாகிய ஆன்மப் பொருள். அவ்வான்ம வஸ்துவானது இந்திரியங்களா லறியப்படும் பொருளன்று. அன்னியப் பிரகாசத்தை விரும்பாமல் சொப்பிரகாசமாக விளங்கும் ஆன்மாவானது, பரிசிக்கத் தக்க பொருளன்று. உருவுடைப் பொருளன்று, சப்தவடிவப் பொருளன்று, கந்தமுடைய பொருளன்று, சுவையுடைய பொருளன்று. ஆகவே, பரிசம், உருவம், சப்தம், கந்தம், சுவை என்பவற்றை யறியும் மெய், கண், காது, மூக்கு, வாய் என்று சொல்லப்படும் ஞானேந்திரியங்
களாலறியப்படும் பொருளன்று.


 
தன்ணைக் காணும் தன்மை சாற்றல்


சசி: - ஆனால் அதனை எப்படி யறிவது?

மாநந்தி: - அறிபடும் பொருள் நீ யல்லை, அறிபடாப் பொருள் நீ யல்லை,
அறிபொரு ளாகுமுன்னை அனுபவித்தறிவாய் நீயே. - (கைவல்யம்.)

 

ஞானக்கண்ணால் அபரோக்ஷமாய் அதன் வடிவாகவே யிருந்து அறிதல் வேண்டும். வேதத்தின் பரம தாத்பரிய மிதுவேயாகும். இதைத்தவிர வேறாகச்சொல்லப்பட்ட கர்மம்
உபாசனைகளெல்லாம் இப் பரம தாத்பரியத்தையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமே யன்றி பரம தாத்பரியமன்று. ஒன்றேனும் பேதமில்லாத அபேத ஞானார்த்தத்தைத் தரப்பட்ட சாமவேதத்திற்கு ஆபரணம்போன்ற சுத்தார்த்தமான தத்துவமசி என்னும் வாக்கியத்தின் அர்த்தமுமாகும்.


மகா வாக்கியங்கள்


இருக் வேதம்:     “பிரஞ்ஞானம் பிரஹ்மம்," என்றும்,
எசுர் வேதம்:       "அகம் பிரஹ்மாஸ்மி,” என்றும்,
சாம வேதம்:       "தத்துவமவி,'' என்றும்
அதர்வண வேதம்: “அயமாத்மா பிரஹ்மம்"
என்றும் கூறுகின்றன.

இவற்றுள், "தத்துவமசி" மகாவாக்கியம் சாமவேதத்தில் உத்தாலக முனிவர் தன் மைந்தனாகிய சுவேதகேதுவுக்கு உபதேசித்த உபதேச மகாவாக்கியமாகும். "தத்துவமசி" என்பதற்கு "அது நீயா யிருக்கின்றாய்'' என்பது பொருளாகும். ஆகவே, சசிவன்ன! நீ அறியப்படும் பொருளுமல்ல; அறியப்படாப் பொருளும் நீயல்ல; அறிவே நீ. உன்னைப் பிறிதொன்றால் அதாவது கண் முதலிய ஞானேந்திரியங்களால் அறிதல் இயலாது. உன்னை உன்னால்தான் அறியலாம். அதாவது அகண்டாகார விருத்தியாகிய அபரோக்ஷானுபவத்தால் தான் அறிதல் வேண்டும்.


தத்துவமசியின் அர்த்தங் கூறல்.

 

சசி: - தாங்கள் கூறிய தத்துவமசி என்னும் சாமவேத மாவாக்கியத்தின் பொருளை விளக்குமாறு பிரார்த்திக்கின்றேன்.

 

மாநந்தி: - 'தத்துவமசி' என்னும் வாக்கியமானது 'தத்-துவம்-அசி' என்னும் மூன்று பதங்களையுடைய வாக்கியமாகும். இவற்றுள் 'தத்' என்னும் சொல்லின் பொருள் நிர்மலமான பிரஹ்மமாம் (ஈசனாம்). 'துவம்' என்பதன் பொருள் சீவன். 'அசி' என்பதன் பொருள் நிர்மலமாகிய இவ்விரண்டு பொருள்களின் ஐக்கியமாம்.


உபாதி பேததித்தினுண்மை யுணர்த்தல்

 

சசி: - குருபா! தாங்கள் வேதவாக்கியமெனக் கூறிய தத்துவமசி வாக்கியத்திற்குச் சொன்ன பொருள் மிகவும் பொருத்தமில்லாததாகும். ஈசனுக்கும் சீவனுக்கும் ஐக்கியம் பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் ஈசுவரன் பேரறிவினன்; சீவன் சிற்றறிவினன். ஈசுவரன் சுதந்திரன் மாயாரகிதன்; சீவன் பரதந்திரன் மாயாசகிதன். ஈசுவரன் நித்தியமுத்தன்; சீவன் பந்தமுடையவன். இவ்வாறு பலவகையில் ஈசுவரனுக்கும் சீவனுக்கும் கேர்' விரோதமான பேதங்களிருக்க ஐக்கியம் எவ்வாறு பொருந்தும்? இது ஒளியும் இருளும் ஐக்கியமானவை என்பது போலல்லவோ விருக்கிறது!

 

மாநந்தி: - சீடனே! ஈசுவரனுக்கும் சீவனுக்கும் உபாதியால் பேதமேயன்றி உருவத்தாலன்று. ஈசுவரனும் உபாதியுடையவன் சீவனும் உபாதி ஆனால் ஈசுவரனுடைய உபாதி வேறு; சீவனுடைய உபாதி ஒரு பொருள் தன்னுடைய தன்மையை வேறோர் பொருளினிடத்திருப்பதாகத் தோற்றுவிப்பது உபாதியெனப்படும். சிவந்த நிறமுள்ள ஓர் மலரானது தனக்கண்டையிலுள்ள பளிங்கு முதலியவற்றினிடத்து அந்த நிறத்தைக் காட்டுகின்றது. அதைப் பார்ப்பவர்கள் பளிங்கு சிவப்பாயிருக்கின்றது என் றியம்புமாறிருக்கச் செய்கின்றதல்லவா? அது தான் உபாதி.

 

சீவனுக்கு உடல் முதலிய உபாதிகளிருக்கின்றன. அப்படியே னுக்கும் காரணத்தன்மை முதலிய உபாதிகளுண்டு. எனவே ஈசுவரவுபாதியைக் காரணோபாதி யென்றும் சீவ வுபாதியைக் காரியோபாதி யென்றுங்கழறுவர்.

 

ஈசுவரன், சர்வஞ்ஞத்துவம், சர்வ வியாபகத்துவம், சர்வ காரணத்துவம், சர்வசிருஷ்டித்துவம், சர்வ ஸ்தித்துவம், சர்வ சங்காரத்துவம் என்னும் காரணவுபாதிகளுடையவன். சீவவுபாதிகள் தேகம், இந்திரியம், மனம், புத்தி, அகங்காரம், சித்தம், பிராணன் என்னும் ஏழாம்,

 

இவ்வாறு ஈசுவான் சீவன் என்னு மிவ்விருவரும் உபாதிகளையுடையவர்களா யிருக்கின்றனர். அவ்விரு வகையினருடைய உபாதிகளையும் நீக்கிவிட்டால், துவம் பதத்தின் பொருளாகிய நீ என்னும் சீவனிடத்திலும், தத் பதத்தின் பொருளாகிய அது என்னும் ஈசுவானிடத்திலும் இருக்கின்ற அசுத்தத்தையும் சுத்தத்தையும் சொல்லுகின்றேன். சசிவன்ன சாவதனமாய்க் கேள்.


சுத்தாசுத்தப் பொருள்.

 

முன்னே கூறிய உடல், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் உபாதிக ளேழினையும் நான் என்று அபிமானித்திருத்தல் சீவனுக்கு அசுத்தமாம். ஒருவன் 'நான்' என்று நினைக்கும் பொழுது, தேகம் முதலிய உபாதிகள் அவ்வாறு நினைக்க முடியாது. னனில் அவை அறிவற்ற பொருள்கள். அறிவுள்ள வொன்றே அவ்வாறு நினைத்தற்குக் காரணமாகின்றது. அதுவே அதிர்ஷ்டானமாகவுள்ள சாக்ஷியாம். அதுவே அறிவு வடிவமாக விளங்குகின்றது. நான் என்னும்போது இவ்வுபாதிகளும் சாக்ஷியாகிய சேதனமும் (அறிவுப் பொருள்) சேர்ந்தே நான் எனப்படுகின்றது.
இது துவம் பதத்திற்குக் கூறும் அர்த்தத்தில் அசுத்தார்த்தமாகும். தேகம் முதலியவைகளை ஆராய்ந்து இவையனைத்தும் நானல்ல நானல்லவெனக்கழித்த பின் மிகுதியாகவுள்ளது எதுவோ அதுவே நான் என்னும் போது, மேற்சொன்ன உபாதிகளின்றி சாக்ஷி சேதனம் மாத்திரமே நான் என்று அழைக்கப்படுவதாகும் அல்லவா. இதுவே துவம் பதத்திற்குக் கூறும் அர்த்தத்தில் சுத்தமானதாகும். இப்படி துவம் பதத்திற்குச் சுத்தம் அசுத்தம் என்
னும் இரண்டு அர்த்தங்களிருத்தல் காண்க. இவ்வாறே,

 

'தத்' பதத்திலும் இரு பொருள் உண்டு. எங்ஙனமெனின், சர்வஞ்ஞத்வம், சர்வகாரணத்துவம், சர்வாந்திரியாமித்துவம், சர்வேசுவரத்துவம் சர்வ சிருஷ்டித்துவம், சர்வ ரக்ஷத்துவம், சர்வ சம்ஹாரத்துவம் என்னும் உபாதிகளுடன் கூடியவன். ஈசுவரன் இந்த இந்த ஏழுபாதிகளையும் அவற்றின் அதிஷ்டான சேதன த்தையும் நான் என்றெண்ணுவது தத்பதத்திற்குக் கூறும் அசுத்தார்த்தமாகும். அந்த சர்வ காரணத்துவம் முதலிய உபாதிகளை விட்டு சாக்ஷியாகிய பிரஹ்மம் நான் எனல் சுத்தார்த்தமாம்.

 

காரிய உபாதி (சீவ உபாதி) காரண உபாதி (ஈசுவர உபாதி) என்னும் இரண்டு உபாதிகளும் சப்தோபாதிகளாம். எனவே சொல்மாத்திர உபாதிகளன்றி யதார்த்த உபாதிகளன்று; கடாகாயம் போல.

 

கடம் (குடம்) மடம் (வீடு) என்னும் இவ்விரண்டின் உபாதி பேதத்தால் ஆகாயம் கடாகாயம் என்றும் மகாகாய மென்றும் போதித்துக் கூறப்படுகின்றது. குடம் மடம் என்னும் உபாதிகளை நீக்கிக் காணின் ஆகாயம் ஒன்றேயாகின்றது. அப்படியே சீவனின் உபாதியால் சீவசாக்ஷி யென்றும் ஈசுவரனின் உபாதியால் ஈசுவர சாக்ஷி யென்றும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இவ்வுபாதிகளை நீக்கினால் பிரஹ்மம் ஒன்றாகவே காணப்படும்.
னால் வெவ்வேறாகக் கருதி யிருந்த பேத புத்தி நீங்குகின்றது. அப் பேதபுத்தி நீங்குவதே 'அசி' பதத்தின் அர்த்தமாம்.

 

அசுத்தமானது, தத் பதம், துவம் பதம் என்னு மிவ் விரண்டினு மிருந்தபோது முக்கியார்த்த மென்றும், சத்தமானது, தத்பதம் துவம் பதம் என்னுமிரண்டினு மிருந்தபோது லட்சியார்த்தமென்றும் பெரியோர் கூறுவர். அதாவது ஜீவ சொரூபமும் ஈசுவர சொரூபமும் உபாதியோடு சம்பந்தப்பட்டு நின்றபோது முக்கிய மென்றும், உபாதியைப் பிரிந்தபோது லக்ஷியமென்றிம் பெரியோர் சொல்வர். உபா தியை நான் என்றபோது அசுத்தம்.
திக்குச் சாக்ஷியமான போது சுத்தம்.

 

ஒரு பதத்தின் நேரான அர்த்தம் முக்கியார்த்தம் எனப்படும். உதாரணமாக குடம் என்று ஒருவன் கூறின், குடம் என்னும் அந்தப் பதம், அப்பெயராலழைக்கப்படும் ஓர் பாண்டத்தையே குறிக்கின்றது. இதுவே முக்கியார்த்தம். ஒரு பதம் தன் நேரான பொருளைக் காட்டாமல் வேறு பொருளை யுணர்த்துவது லட்சியார்த்தமாகும். உதாரணமாக காளை வந்தான் என்பதின் முக்கியார்த்தம் எருதைக் குறிப்பினும் லக்ஷியார்த்தமாகக் கொள்ளுமிடத்து ஓர் புருடனைக் காட்டுவதாகும். ஆகவே,

 

உபாதி பேதத்தால் ஒன்றற் கொன்று விரோதத் தன்மையுடையனும் ஈசுவரனும் முக்கியார்த்தம், இரண்டினிடத்தும் உள்ள வேற்றுமைத்தன்மை (பேதம்) இல்லாத சின்மாத்திர சொரூபம் இலட்சியார்த்தமாம்.

 

சசி: - சீவ ஈசுவரர்களின் ஐக்கியம் எப்படிப் பொருந்தும்? என்பதை ஆசிரியரேறே! விளக்கியருள வேண்டும்.

மாநந்தி: -- சீவேசுவரர்களின் உபாதிகளை இலட்சணா வாக்கியத்தின்படி நீக்கினால், இரண்டிற்கும் சாக்ஷி (ஜீவசாக்ஷியாகிய கூடஸ்தனும் ஈசுவர சாக்ஷியாகிய பிரஹ்மமும்) ஒரு வஸ்துவேயாம்.

 

மூவகை இலக்கணையின் முறைமை கூறல்.

 

சசி: - "ஒரு வாக்கியத்திலுள்ள இரண்டு பதங்கள் ஒன்றுபட்ட பொருளைப் பயவாமல் மாறுபட்ட பொருளைத் தருவதாகக் காணுமிடத்து, பெரியோர்கள் பேசிய அவ்வாக்கியம் பிழையல்ல. பொருள் படுத்தும் முறையில் தவறிருக்கின்றதென வுணர்ந்து, இலக்கணையால் (ஆகு பெயரால்) பொருள் கொள்ள வேண்டுமென்றும், அதனால் (இலக்கணையால் பொருள் கொள்வதால்) வாக்கியப் பொருள் நன்கு உணரப்படு' மென்றும் சுவாமிகள் சொல்லியதை யறிந்தேன். சுவாமி! "இலக்கணையின் விஷயமாக ஏதேனும் இன்னும் இயம்ப வேண்டியிருப்பின், அதனையும், அவ்விலக்கணையால் சீவேசுவரர்கள் ஒன்றென்றறிவதெப்படி யென்பதையும் திருவாய் மலர்ந்தருளவேண்டுகிறேன்.''

 

மாநந்தி: - அறிவுள்ள மாணவனே! முற்கூறிய இலக்கணையைப் பெரியோர்கள் (இலக்கண நூல் வல்லோர்) மூன்று வகையாக முறைப்படுத்தியிருக்கின்றனர். அவற்றை விளக்குகின்றேன் கேள். ''விட்டலக்கணை-விடாதலக்கணை-விட்டுவிடாத லக்கணை'' என இலக்கணை மூன்று வகைப்படும். இவை முறையே " ஜகல்லக்ஷணை - அஜகல்லக்ஷணை-ஜக தஜகல்லக்ஷணை (பாகத்தியாகலக்ஷணை)" என்றும் கூறப்படும். இனி, இவற்றை உதாரணங்களால் விளக்குவோம்.


விட்டலக்கணை.

 

"சொல்லப்பட்ட பதத்தின் நேரான பொருள் எதுவோ, அதனை முழுவதும் விட்டு அதனோடு சம்பந்த தமுடைய வேறு பொருளைக் கிரகிப்பது லக்கணையாம். உதாரணமாக: - ஒருவன் “இடைச்சேரி எங்கிருக்கிறது?" எனக் கேட்டதற்கு, மற்றொருவன் "கங்கையிலிருக்கிறது இடைச்சேரி" என்கிறான். இல்வாக்கியத்தில் கங்கை என்னும் பதத்தின் பொருள் நீர்ப்பெருக்கு - (வெள்ளம்) அதில் இடைச்சேரி இருக்க முடியாது. ஆகலின், கங்கையின் கரையிலிருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். சொல்வோன் கருத்து வெள்ளமல்ல. ஆகலின் கங்கையோடு சையோக சம்பந்தமுடைய அதன் கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு, கங்கை என்பதன் பொருள் முழுவதையும் விட்டு வேறு பொருள் கொள்ளப்படுதல் காண்க. இதனால் இது விட்டலக்கணை எனப்படும். இதனை, விட்ட வாகுபெயர் என்று தமிழிலக்கணங் கூறும்.


மேலும், மற்றுமோருதாரணம் கூறுகின்றேன், கேள்.

 

வயலில் மஞ்சத்தின் மேலிருந்து, ஒருவன், பறவைகள் தானியங்களைத் தின்றுவிடாமல் அவைகளை ஒட்டுவதற்காகச் சத்தமிட்டுக் கூவுகிறான். அது கேட்ட மற்றொரு வயலிலுள்ளவன் "அதோ! அங்கே ஒரு மஞ்சம் கூவுகிறது" என்கிறான். 'மஞ்சம் கூவுகிறது' என்னும் வாக்கியத்தில் பொருள் சரியாகப் பெறப்படவில்லை. ஏனெனில், மஞ்சமென்பது து மரத்தால் செய்யப்பட்ட கட்டில்; அது கூவுதலைச் செய்யாது. ஆகவே, இங்கு இலக்கணையால் பொருள் கொள்ளுவது பொருத்தமாகும். மஞ்சத்தின் மீதுள்ள மனிதன் கூவுகிறான் என்பது சரியான பொருளாகும். இங்குக் கட்டிலின் பொருள் விடுபட்டுப் போய் ஆதேயத்தன்மைச் சம்பந்தமுடைய மனிதனை அந்த 'மஞ்சம்' என்னும் பதம் காட்டுவதால் இது விட்டலக்கணை யெனப்படும்.


இனி, விடாதலக்கணையை விளக்குகின்கிறன், கேள்.


விடாதலக்கணை.



"சொல்லின் முக்கியமான பொருள் எதுவோ, அதனை விடாமலே அதனோடு சம்பந்தமுடைய வேறு பொருளைக் காட்டுவது விடாத லக்கணையாம்.' இதனை விடாத வாகுபெயர் எனத் தமிழ் இலக்கணம் கூறும். இதனை விளக்க
ஓர் உதாரணம் கூறுவோம்.

 

ஒரு குடியானவன் வீட்டில் இரண்டு மாடுகளிருந்தன. அவற்றுள் ஒரு மாடு சிவப்பு நிறம். மற்றொன்று வெண்மை. ஒருநாள் குடியானவன் தன் மகனை நோக்கி "எருதுகள் என்ன செய்கின்றன?" வெனக் கேட்டான். அதற்கு மகன் "சிவகை (சிவப்பு) நின்று கொண்டிருக்கிறது வெள்ளை போய்க் கொண்டிருக்கிறது'' என்கிறான். இங்கு சிவலை வெள்ளை என்னும் பதங்களின், நேரான (முக்கிய) பொருள், சிவப்பு வெண்மை என்னும் நிறங்களின் பெயர்களாம். சிவப்பு வெண்மை முதலிய நிறங்களின் பெயர்கள் ஒரு பொருள்களின் குணத்தைக் காட்டுவனவாம். குணங்கள் எப்போதும் ஒரு பொருளைச் சேர்ந்திருக்குமேயன்றித் தனித் திருக்கமாட்டா. சிவப்பு நிறம் ஓடுமா? வெண்மை நிறம் மேயுமா? இல்லை. ஆகவே, சிவலை நிற்கிறது; வெள்ளை போகிறது. என்பதில் பொருள் பொருந்தவில்லை. ஆகலின், இங்கு இலக்கணையால் பொருள் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு கொள்ளின் அந் நிறங்களோடு தாதான்மிய சம்பந்தமுடைய எருதுகள் என்று பொருள் படுகின்றது.

 

இங்குச் சிவலை வெள்ளை என்னும் சொற்களின் நேர் பொருளாகிய சிவப்பு நிறமும் வெண்மை நிறமும் விடப்படாமல் எருதுகளோடு ஒற்றுமைப் பட்டிருத்தலின் (விடாமல் சேர்ந்திருத்தலின்) விடாத லக்கணை யெனப்படும்.

 

இனி, விட்டு விடாத லக்கணையை விளக்குவோம்.

 

விட்டுவிடாத லக்கணை.

 

''சொல்லில் பொருத்தமில்லாமல் விரோதமாகவுள்ள ஒரு பாகத்தைவிட்டு விரோதமில்லாத மற்றொரு பாகத்தைக் கொள்ளுதல் விட்டுவிடாத லக்கணை யாம்.'' உதாரணமாக: -

நாராயணன் என்பவனொருவன் காசி யாத்திரைக்குச் சென்ற போது அங்கே ஒரு பிரஹ்மசாரியாகவிருந்த தேவதத்தனென்பவனைப் பார்த்திருந்தான். பிறகு, சில ஆண்டுகளுக்குப் பின், நாராயணன் சென்னைக் கலாசாலை மாணவனாக அத்தேவதத்தனிருப்பதைப் பார்த்தான். சில வருடங்கள் கழிந்தபின், நாராயணன் தன் ஊரில் உபாத்தியாயராக விருந்தவரைப் பார்க்க நேர்ந்த போது, அவரை முன்பு எங்கோ பார்த்ததாகக் கருதிச் சிறிது ஆலோசித்து, "அந்த இத்தேவதத்தன் (சோயந் தேவதத்த:)" என்கிறான். அவனே இந்த தேவதத்தன் என்பதில், 'அந்த, இந்த ' என்னும் பதங்கள் ஒன்றுக் கொன்று விரோதமானவை. எவ்வாறெனின்; 'அந்த' என்னும் பதம் இறந்த காலத்தையும், காசி சென்னை என்னுமிடங்களையும், பிரஹ்மசாரி மாணவன் நிலைகளையும் காட்டும். 'இந்த' என்னும் பதம் நிகழ் காலத்தையும் நாராயணனது ஊரையும் உபாத்தியாயரையும் காட்டும். இவற்றுள், இறந்தகால நிகழ் காலங்களும், காசியும், நாராயணனுடைய ஊரும், பிரஹ்மசாரியும், உபாத்தியாயரும் ஒன்றுக்கொன்று விரோதமுள்ளவை. ஆகலின், காலங்களையும், ஊர்களையம், தொழில்களையும், (ஒன்றுக் கொன்று விரோதமுள்ளன வாகலின்) விட்டு, விரோதமில்லாத தேவதத்தனுடைய உடலை மட்டும் எடுத்துக் கொள்ளுதல். காசியிலிருந்தவனும் பின்பு சென்னையிலிருந்தவனும் இப்போது நாராயணனுடைய ஊரில் இருப்பவனும் ஒரே தேவதத்தனே என்பது அந்த இத்தேவதத்தன் என்பதன் பொருள். இவ்வாறு ஒரு பாகத்தை விட்டும் மற்றொரு பாகத்தை விடாமலும் பொருள் கொள்ளக் கிடத்திலின் இது விட்டு விடாத லக்ஷணை அல்லது பாகத்தியாக லக்ஷணை எனப்படுகின்றது. இதனைத் தமிழிலக்கணம் விட்டுவிடாத வாகுபெயர் எனக் கூறும்.

 

சசிவன்ன! இப்பொழுது இம்மூன்று லக்ஷணைகளின் இலக்கணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டனையா?

 

சசி: - பெருமானே! லக்ஷணைகளின் தன்மையை நன்றாயறிந்தேன். இம் மூன்றுவகை லக்ஷணைகளுள் மகா வாக்கியத்தில் உபயோகிக்கத்தக்கதெது? என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.


மகா வாக்கியத்தில் விட்டுவிடாத லக்கணையே உபயோகமாமெனல்.

 

மாநந்தி: - மகா வாக்கியத்தின் உண்மைப் பொருளை யறிவதற்கு முதலிரண்டு இலக்கணைகளும் பயன்படா. ஏனெனில்,

 

விட்டலக்கணையில் வாக்கியத்தின் வாச்சிய பாகம் முழுவதையும் விட்டு வேறு பொருளைக் கொள்ள வேண்டும். அவ்வாறு மகா வாக்கியத்தில் கொள்ள வேண்டுமாயின் வேறு பொருளாகிய சூனியமே கொள்ளப்பட வேண்டும். இது பொருந்தாது. இரண்டாவதாகிய விடாதலக்கணையின்படி பொருள் கொள்வதாயின், அங்கும் வாச்சியம் முழுமையு மிருத்தலோடு வேறு பொருளும் கொள்ளப்படுதலின் அதுவும் பயனின்றாம். ஆகவே, மூன்றாவதாகிய விட்டுவிடாத லக்கணையே மகா வாக்கியத்தில் உபயோகமுடையதாகும்.
எவ்வாறெனின்: -

'அவன் இந்தத் தேவதத்தன்' என்றதில் விரோத பாகங்களாகிய இறந்த காலம் நிகழ்காலம், தூர தேசம் சமீப தேசம் முதலியவைகளை நீக்கி விரோத மில்லாத பாகமாகிய தேவதத்தன் ஒருவனே எனக் கொண்டாற் போல , மகாவாக்கியத்திலும் ‘தத்துவம்' என்னும் இரு பதங்களின் விரோத பாகங்களாகிய, 'தத்' பதத்திலுள்ள காரண வுபாதிக ளேழினையும், 'துவம்' பதத்திலுள்ள காரிய வபாதிகளேழினையும் அறிந்து, நீக்கி, அவ்விரு வுபாதிகளினும் அதிஷ்டானமாயுள்ள சேதன சொரூபத்தில் விரோதமின்மையை ஆராய்ந்துணர்க.

காரண வுபாதி காரிய வுபாதி என்னும் இருவகை யுபாதிகளையும் நீக்கி, அவை நீங்கின ன விடத்து, அவற்றின் சாக்ஷியாகவுள்ள அதிஷ்டான சேதனங்கள் ஈசுவரனும் சீவனுமாம்' என்று முன்பு கொண்டிருந்த எண்ணத்தையும் நீக்கி, அவற்றின் உண்மையான சொரூபத்தை சசிவன்ன! நாம் கூறியபடியே அபரோக்ஷமாகக் கண்டுகொள்.


அபரோக்ஷமா யறியும் அருநெறி கூறல்.

 

ஞான நன்மகனே! பரப் பிரஹ்மமாகிய அவ்வகண்டப் பொருளை, அகக்கரணமும் புறக் கரணமுமாகிய தத்துவங்களனைத்தும் தொழிற்பட்டு நிற்குங்காலத்திலும் காணமுடியாது; அவை செயலற்று ஒடுங்கி நிற்குங் காலத்திலும் காண முடியாது. (தத்துவங்க ளனைத்தும் தொழிற்பட்டு நிற்குங் காலம் சகலமெனப்படும்.) இச்சகலம் நனவு கனவு (சொப்பனம்) என இருவகைப் பட்டிருக்கும். தத்துவங்கள் தொழிலற்று ஒடுங்கிக் கிடக்குங் காலம் கேவலம் எனப்படும். இது சுழுத்தி நிலையாம்.


அவத்தை மூன்றினடைவு கூறல்.

 

சசி: - ஞான தேசிக! தத்துவங்கள் தொழிற்படுங்காலம் தொழிற்படாக்காலம் என்னும் இரண்டு காலங்களின் தன்மையினை விளங்கக் கூறல் வேண்டும்.

 

மாநந்தி: - உள்ளும் புறமும் உள்ள கரணங்களெல்லாம் தொழிற்பட்டு நிற்கும் நிலை சாக்கிரமாம்; அந்தக் கரணங்கள் மாத்திரம் தொழிற்பட்டு நிற்கும் நிலை சொப்பன மெனப்படும்; அவ்வந்தக்கரணங்களும் அவித்தையில் ஒடுங்கி நிற்குங் காலம் சுழுத்தியாம்.


பிரஹ்மம் விளங்கும் பெருநிலை கூறல்.

 

சசி: - சாக்கிர சொப்பனங்களாகிய சகலாவத்தையிலும் சுழுத்தியாகிய கேவலாவத்தையிலும் அப்பொருளைக் காண முடியா தென்றீர்களே! தயாநிதியே! மாந்தருக்குள்ளவை இவ்விரண்டு நிலைகளே யன்றோ? இவ்விரண்டிலும் காண முடியாதென்றால் வேறெந்த நிலையிற் காண்பது?

 

மாநந்தி: - பிரஹ்ம சாக்ஷாத்காரத்தையடையும் நிலை வேறொன்றுளது. அது நனவிற் சுழுத்தி நிலை எனப்படும். அதாவது இந்தச் சாக்கிரத்திலேயே சுழுத்தியின் நிலையை யடைதல் வேண்டும். அந்த நிலையே சமாதி நிலையனப்படும். இது சகல நிலையுமல்ல; கேவல நிலையுமல்ல; துரிய நிலையாம். இந்த நிலையை ஒருவன் அரும்பாடுபட் டடைந்தால் பிரஹ்ம அபரோக்ஷானுதியை யெய்தலாம்.

 

சசிவன்ன! சீவனுடைய சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் இம்மூன்று நிலைகளையும் சாக்ஷியாக அறிந்து கொண்டிருந்தது எது? அத் துரிய நிலையாகிய பிரத்தியகாத்மாவே சீவனுடைய எதார்த்த வடிவமாம். இப்படியே அந்த ஈசுவரனுக்கும் மூன்றவத்தைகளையும் அறியும் துரியமென்னும் பிரஹ்ம ஸ்வரூபமே ஈசுவானுடைய எதார்த்த வடிவமாம். இதுவே சுவேசுவரர்களின் எதார்த்த வடிவமாம். இவ்வாறு அறிந்தபின் ஜீவசாக்ஷியாகிய ஆத்மாவானது சர்வ சாக்ஷியாகிய ஈசுவரனுடைய துரிய ரூபப் பிரஹ்மமாக இருக்கின்றது. அவ்வொரு பொருளே சீவனுக்கும் ஈசுவரனுக்கும் அதிஷ்டானமாம். உபாதிகளால் வெவ்வேறாகக் காணப்படுகின்றனவே யன்றி, உபாதிகளைக் கழித்து நோக்கின் இரண்டும் ஒன்றே யென்றறிவதே முற்கூறிய தத்துவமசி மகா வாக்கியத்தின் முடிந்த பொருளாம் என்றறிக.

 

ஆனந்த போதினி – 1932 ௵ -

ஜுலை, செப்டம்பர், நவம்பர், ௴

 

 



 



No comments:

Post a Comment