Sunday, August 30, 2020

 

கற்பு நிலைமை

 

''பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுத்
 திண்மையுண் டாகப் பெறின்''

 

1. என்னும் குறளில் ஒருவன் பெறுதற்குரிய பொருள்களுள் மனையாளினும் உயர்வாகிய பொருள் யாதிருக்கின்றது? அவளிடத்தே கற்பென்னும் கலங்கா நிலைமை இருக்கப் பெற்றால் என்று திருவள்ளுவநாயனார் திருவுளம் பற்றினமையால் உலகத்தில் பெண்களாய்ப் பிறந்தவர்கள் தமக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் நால்வகைக் குணங்களும் ஏதுவாக, மனதைப் பல விடத்திலும் செல்லவிடாது நிறுத்திக் கற்பு நிலை கெடா திருக்க வேண்டும்.

 

2. அந் நாற்குணங்களில் நாண மென்பது சங்கோசம்; மடமென்பது எல்லாம் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்; அச்சமென்பது காணாததைக் கண்டவிடத் தஞ்சுதல், பயிர்ப்பென்பது கணவரல்லாதவர் கை மேற்படின் அருவருத்தலாம். விவாகம் இல்லாமல் கன்னிகையாக இருக்கும் பருவத்தில் தாய் தந்தையர் ஆதீனத்திலும், விவாகமான பின் கணவர் ஆதீனத்திலும், கணவற்குப் பிற்காலம் புத்திரர் ஆதீனத்திலும், புத்திரர் இல்லாவிட்டால் சகோதரர் ஆதீனத்திலும் இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோதும் பெண்கள் சுவாதீனப்பட்டு இருக்கலாகாது.

 

3. கொண்ட கொழுநனை மேன்மையாகப் பாவித்து, அவன் சொல்லைத் தடுக்காமல் அவனுக்குக் கீழமைந்து, பக்தி விநயத்துடனே, ''பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது'' என்பதனாற் பொய் பேசாமல் கறந்தபால் கறந்தபடி அவன விஷயத்தில் உண்மையாய் ஊசியும் சாடும் போல் மனைவி அவன் கருத்தின் வழி ஒழுகல் வேண்டும்.

 

4. பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் பொழுது பிதா வித்தியா சாதுரிய முள்ளவனுக்குக் கொடுக்க வேண்டுமென்றும், தாயானவள் மகள் ஐசுவரிய வானுக்கு வாழ்க்கைப்படவேண்டு மென்றும், சுற்றத்தார் நல்ல குலஸ்தன் வந்து வாய்க்க வேண்டுமென்றும், அந்தப் பெண் அழகிற் சிறந்தவனை நாம் வரிக்க வேண்டும் என்றும் நினைக்கிறதுண்டு; ஆயினும் அது அப்படியே வாய்க்குமா? தெய்வச் செயலின்படி அல்லவோ சம்பவிக்கும்.

 

5. 'தலமகட் கழது தன் கொழநனைப் பேணுதல்' என்பதனால் தன் புருஷன் அழகிருந்த ஊரில் குடியிருந்தறியாத குரூபியாயிருந்தாலும் அவனை நவ மன்மதனாகவும், என்றும் அசாத்திய ரோகமுடையவனா யிருந்தாலும் அரோக திடகாத்திரனாகவும் , " அவன் தம்பி நான்தான், எனக்கொன் றும் வராது'' என்றவனைப் போல் வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் வாரடை யுங் கிடையாத நிரட்சர குட்சியாயிருந்தாலும் கல்விக் களஞ்சியமாகவும், பாண்டவர்களை நானறியேனா, கட்டிற் கால்போல மூன்று பெயரென்று வாயினாற் சொல்லி, இரண்டு விரல் காட்டி, ஒரு கோடு நிலத்தில் கிழித்தவனுக்குக் குறைந்தவனா நான் என்றெண்ணும்படி, கணக்கறியாத நிர்மூடனா யிருந்தாலும் சேஷசாயிபோல நிபுணனாகவும், உண்ணச் சோற்றுக்கும் கட்டக் கந்தைக்கும் கதியற்று, அடுப்பிற் பூனை தூங்க, கையில் அரைக்காசுக்கும் வழியில்லாத அஷ்டதரித்திரனாக இருந்தாலும் குபேர சம்பத்து உடை யவனாகவும், கொக்குப் போல நரைத்துக் கண்குழிந்து பல் விழுந்து வில்லைப் போல் வளைந்த முதுகுடைய கிழவனாயிருந்தாலும், நல்ல யவ்வனமுடைய விடனைப் போலவும் பாவனை செய்து அவனை அவமதியாமல் அனவரதம் பேணி நடக்க வேண்டும், கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்றல்லவா உலகம் சொல்லுகின்றது.

 

6. மனைவியானவள் கணவனுக்குத் தாதி போலப் பாதபணிவிடை செய்பவளும், மந்திரி போலச் சமயோசித மறிந்து நல்லாலோசனை சொல்பவளும், ஸ்ரீ மகாலட்சுமி போலப் பெண்ணைப் பெண் இச்சிக்கத்தக்க அதிரூப சௌந்தரியவதியாயும், பூமாதேவியைப் போல சலியாத பொறுமையுடைய வளாயும், வேசியைப் போலப் பர்த்தாவைச் சரசகேளி விநோதத்தால் பிரியப் படுத்துகிறவளாயு மிருப்பதுடன் அன்போடு தாய் போல இனிய உணவுகளாற் போஷிக்கின்றவளாயு மிருக்க வேண்டும். "தாய்க்குப் பின் தாரம் என்று உலகம் சொல்லுகின்றதல்லவா?

 

7. "வல்லிடி வழக்கைச் சொல்லடி மாமி'' என்று மாமியுடனே வாது செய்யாமல், அவளைத் தாய் போலக்கருதி அவள் காலிலே பட்டது தன் கண்ணிலே பட்டதாகக் குடும்ப பாரத்தையெல்லாம் ஏந்திக் கொண்டு, மாமியாரும் "கண்மணியாகிய என் செல்வமருமகளைப் போலத் தேடினாலும் கிடைக்குமா? " என்று சொல்லும்படி நடந்து "மாமியார் மெச்சிய மரு மகள் இல்லை'' என்னும் பழமொழியைப் பொய்யாக்க வேண்டும். இவள் எங்களுக்கு மருமகளா! அல்ல, எங்கள் குலதெய்வமே இப்படி உருக்கொண்டு வந்ததென்று மகிழும்படி மாமனாரைத் தந்தையைப் போலப் பூசிக்க வேண்டும்.

 

8. கணவனுடைய சகோதரர்களைப் பேதமாய் எண்ணாமல் பரிபாலிப்பதனால் அவர்களில் மூத்தவர்கள் இவள் தான் எங்கள் சகோதரியென்றும், இளையவர்கள் எங்களைப் பெற்ற தாயென்றும் கொண்டாடும்படி நடக்க வேண்டும்.

 

9. நாத்தன்மார்களையும் வரிசை வண்மை தவறாமல் அவர்கள் இந்தப் பாக்கியவதி போலப் பெண்கள் எங்கும் காணக் கிடையார்களென்று சொல்லும்படி நன்றாய் உபசரிக்கவேண்டும்.

 

10. அடிக்கடி அண்டைவீடு அயல் வீட்டிற்குப் போகலாகாது. எவ்விடத்திற்காவது யாதொரு நிமித்தத்தால் அவசியம் போகவேண்டியிருந்தால் சிறிய பெண் குழந்தையையாயினும் வழித்துணையாகக் கூட்டிக்கொண்டு போகவேண்டுமே அல்லது தனிவழி நடந்து தண்டுமாரியாய்த் திரியலாகாது.

 

11.    ''ஒருபெண் பேசினால் பூமி அதிரும்;

இரண்டு பெண் பேசினால் நக்ஷத்திரம் உதிரும்;

மூன்று பெண் பேசினால் கடல் சுவறும்;

நான்கு பெண் பேசினால் உலகம் யாதாகுமோ?"

 

என்பதனால் யாருடனும் இடி இடித்தது போல் உரக்கப் பேசாமல் குயில் கூவு தல்போல் இனிய குரலாய்க் கிளி கொஞ்சுவது போல் மிருது பாஷியாய் வசனிக்க வேண்டும். "பெண்கள் இருப்பிடம் பெரிய சண்டை'' என்கிறார்களே.

 

12. "தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்' என்பதை நினையாமல் நான் வீணே பிண்டமும் துண்டமும் சேர்ந்தது போல் 'பிடாரியைப் பெண்ணென்று பிடித்துப் பேயனானேனே! இதுவும் என் தலைவிதியா!'' என்று புருஷன் விசனப்படாதபடி, "பழம் நழுவிப் பாலிலே விழுந்தது போலவும் "'சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தது போலவும்,'' ஏதோ பாக்கிய வசத்தால் என தில்வாழ்கைக்கு நல்ல பெண் வாய்த்தாளென்று மன மகிழும்படி இங்கிதமறிந்து நடக்க வேண்டும். பெண்களின் கற்புநிலைமைக்கு ஓர் அறிகுறியானது இவ்வியாசம்.

 

குறிப்பு: - விநோதரச மஞ்சரியிலுள்ள பெண்களின் கற்புநிலைமையைத் தழுவி இவ்வியாசம் நமது நண்பரால் எழுதப்பெற்றது.

ப - ர்.

 

"கணவனுக்கு வரும் வருமானப் பொருளளவிற்குத் தக்கபடி மிதமாய்ச் செலவு செய்யாமற் கண்டபடி கைகொண்ட மட்டும் செலவழிக்கிறாளே! இவள் இன்னும் சில நாளில் அவன் தலையில் ஓட்டைக்கவிழ்ப்பாள்" என்று பிறர் இகழாதபடி மனைவியானவள் திறமையுடனே சிக்கனமாகச் செலவு செய்து தன் குடித்தனத்தைக் காக்கவேண்டும்; அன்றியும் உலகத்தார் இராக்காலத்துக் குதவியாகப் பகற் காலத்திலும் மழைக்காலத்திற் குதவியாகக் கோடைக்காலத்திலும், முதுமைக்குதவியாக இளமையிலும் வேண்டிய வைகளைத் தேடிவைத்துப் பாதுகாப்பது போல, இல்வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தருண மறிந்து சேகரித்து அவை பின்னுக்காகு மென்று அவற்றைச் சிக்கெனக் காப்பாற்ற வேண்டுமே யல்லது வீட்டிலுள்ள பண்டங்களை அநியாயத்தில் அழிக்கலாகாது.

 

ஆணாய்ப் பிறந்தவர் பிதாவானாலும், சகோதரரானாலும், பெற்ற பிள்ளையானாலும், அவர் இருக்குமிடத்தில் அச்சமின்றி இருக்கலாகாது. ஐந்து வயது ஆண்பிள்ளையைக் கண்டால் ஐம்பது வயதுப் பெண்பிள்ளையும் எழுந்திருக்க வேண்டுமென்கிறார்களே.

 

''அகத்தினழகு முகத்தில் விளங்குவது'' போல் குணத்தின் அழகு நடையில் விளங்கும். பெண்மக்கள் பூமாதேவிக்குச் சமானம்; பொறுமைக்கு உறைவிடம்; ஆதலால் அன்னம் போலவும் பெண்யானையைப் போலவும் மிருது நடையாகத் தலை இறங்கி நடக்க வேண்டும்; கண்ணின் திருஷ்டி கருத் துள்ள விடத்திற் போகுமாதலால் தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும். கற்புடை மகளின் திருஷ்டியெல்லாம் தன் மூக்கு நுனியிலிருந்து கால் பெருவிரல் வரையில் தான் செல்லவேண்டும்;

 

அதாவது மனத்தை பஹிர் முகத்தில் அலைய விடாமலும், அந்தர் முகப்பார்வை கெடாமலும் வெளி வியவகாரங்களை நடத்த வேண்டும். அந்தர் முகப்பார்வை பஹிர் முகப்பட்டால் மனம் விஷயப் பற்றுக்களி லாழ்ந்து சிதறிப்போம். கற்புடைமைக் கடையாளம் மனதைச் சிதறவிடாது காப்பதாம். மனக்காப்பே காப்பன்றி மதில் காப்பு காப்பல்ல என்கிறார்களே. பெண்கள் பூமி அதிரும்படி நடந்தால் மனமும் அதிர்ந்துபோம்; சாந்தி கலைந்து போம்; மற்றும்,  

 

ஆண் மக்களிலாவது பெண்மக்களிலாவது துஷ்டர்களாயிருக்கின்றவர்கள் தங்களைத் தாரதம்மியம் பாராமல் அக்கிரமமாகப் பேசினால், "அதென்ன உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா'', " நாய்குலைக்க நத்தம் பாழாமா? " என்று நினைத்துச் சாதுவாய்ப் போகவேண்டுமே யல்லாமல் அவர்களை எதிரிட்டுப் பத்ரகாளியைப்போல் அஞ்சாது " தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல் " ஆகாது. இதைத்தான்'' உபேக்ஷை " என்று சொல்வது; பின்னும்,

 

கணவனாவது மற்றவர்களாவது ஏதேனும் ஒன்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தால் அது என்ன சமாச்சாரமென்று அவர்களை நேரே விசாரிக்கவும் சாடையாய்க் கதவின் சந்தில் அல்லது சுவர்க்கோழிபோல் சுவரின் அருகில் ஒன்றியிருந்து கேட்கவுங் கூடாது. ஏனெனில் ஒட்டுக் கேட்கும் சுபாவம் மிகவும் கெட்டது. அது நம்பிக்கையைக் கெடுத்து, குடித்தனத்தில் கலகத்தை உண்டு பண்ணும்.
 

இவ்வாறு சொன்னதனால் சமுசாரக் கூர்மை யில்லாமலிருக்க வேண்டு மென்பது கருத்தல்ல; சமுசார விஷயங்களில் எப்போதும் கண்ணும் கருத்துமாய்ப் புத்தி கூர்மையோடிருக்க வேண்டியதே. சிலபெண்கள் மாமி வீட்டுக்கு வந்தவுடனே ஆரம்ப சூரத்துவமாய் எல்லாரும் ஒப்ப நடந்து, வரவா அசாக்ரதையினால் சோம்பல் மேலிட்டு, குடித்தனப் பொறுப்பில்லாமல் அலக்ஷியமாய் " எவனோ செத்தான் அவள் என் அழுதாள்'' என்பது போல் இருப்பதுண்டு. அது சுத்தப்பிசகு; கற்புடைய பெண்டிர் அப்படியிருக்கலாகாது.

 

"கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை" ஆதலால் வாக்கின் நாணயம் குறையாதபடி நடந்து கொள்ளவேண்டும்.

 

புருஷனுக்குப் பொருள் வரவின்றி அவன் வறுமைப் படுங்காலத்தில் அவன் சம்பாதிக்க வில்லையே யென்று அவனைச் செல்லரிப்பதுபோல் எந்நேரமும் வருத்தப்படுத்தக் கூடாது. தௌர்ப்பாக்கியம் வந்தால் இது புருஷனுடைய அசாக்ரதையால் தான் வந்தது என்று நினைக்கலாகாது. " ஏருழுகிறவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் " என்பது போல மனைமாட்சியுண்டானால் எப்பேர்ப்பட்ட புருஷனும் பாடுபட்டுழைக்கப் பின்வாங்கான். ஏனெனில் உழைப்பிலிருக்கின்றது பிழைக்கும் வழி. புருஷன் உழைக்கப் பிறந்தான், பெண் செலவிடப் பிறந்தாள் என்பதை மறக்கக் கூடாது. வெளியிலே போய், புருஷன் என்ன பாடுபட்டுழைத்தாலும், வீடுவந்தால் அவன் சிரமமும் கவலையும் கிலேசமும் நீங்க வேண்டும்; அந்த இடமே வீடு. அதற்கு மனையாள் உத்தரவாதியாயிருக்கிறாள். அவள் கிரஹதேவதை போல் வீட்டைச் சாந்தம் விளங்க க்ஷேமகரமாய் வைத்திருக்க வேண்டும்.

 

பெண்மணிகள் பரபுருஷருடைய முகத்தைப் பாராமலும், அவர்களுக் கெதிரே பல்லைக் காட்டிச் சிரிக்காமலும் பரிகாசஞ் செய்யாமலும், பக்குவ மாயிருக்க வேண்டும்.'' சிரித்தையோ சீரைக் குலைத்தையோ " என்னும் மொழியும் உலகில் வழங்குகிறதே. ஆகையால் உத்தமஸ்திரீகள் மனக்காப்பு விஷயத்தில் வெகு ஜாக்ரதையாயிருக்க வேண்டும்.

 

தாமரையில்லாத தடாகமும், சந்திரனில்லாத ஆகாயமும், புலவர்களில்லாத சபையும், அரசனில்லாத நாடும், மந்திரியில்லாத அரசாட்சியும், படைத் தலைவனில்லாத சேனையும், தெய்வஸ்து தியில்லாத நாவும், நற்சிந்தையில்லாத நெஞ்சும், கிருபையில்லாத கண்ணும், பயனில்லாத சொல்லும், மணமில்லாத மலரும் போலக் கற்புடை மனைவி யில்லாத வீடு சிறப்பின்றி இடுகாட்டுக் கொப்பாம்.

 

கண்டவர்கள் கேட்டவர்களெல்லாம் "இந்த உத்தமி கல்வியிற் கலைமாதோ! கற்பில் அருந்ததியோ! கருணையிற் பார்வதியோ! பரிசுத்தத்திற் பவானியோ! என்று அதிசயிக்கும்படி விவேகமும், கற்பும், இரக்கமும், சுசியும் உள்ளவளாயிருக்க வேண்டும்.


      "இல்லதென் இல்லவன் மாண்பானால்'' என்கிறபடி இல்ல முடையாள் (மனைவி) நற்குண நற்செய்கைகள் பொருந்தியவளானால் கணவனுக்கு இல்லாதது ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட மனைமாட்சியில்லாத விடத்து கணவனுக் கென்ன விருந்தாலும் பயனில்லை. ஆகையால் பெண்கள் ''மனைமாட்சி'' யுடையவராய் இருக்க வேண்டும்.
 

இம்மையில் தம்தம் கணவரைப் பூஜித்த பெண்கள் மறுமையில் தேவர்களால் பூஜிக்கத்தக்க பெருஞ் சிறப்புற்றவர்களாவார்கள்; பெண்கள் தமது கற்பினால் காக்கும் காவலே காவலாவதன்றி அவர்களைக் கணவர் சிறையினால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்.


"அறைகாத்தான் பெண்டிழந்தான்" என்பது பழமொழி.

S. நரசிம்மம்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - மே, ஜுன் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment