Monday, August 31, 2020

 

சரணாகதம்

(K. S. சடகோப ராமாநுஜ நாயுடு.)

வ்வுலகில் மானிடராய்ப் பிறந்த நாம், நம்முடைய அறிவீனத்தினாலோ, முன் ஜென்மங்களில் செய்த கர்மங்களின் பயனான பிராரப்த வசத்தாலோ நேரிடும் அநேகவிதமான கஷ்டங்களை யடையும் பொழுது, 'ஐயோ, என் கடவுள் என்னைப் படைத்து இப்படிக் கஷ்டப் படுத்தவேண்டும்?' என்று வாய் கூசாது சொல்லி விடுகிறோம். நாமும், இப் பிரபஞ்சமும் ஒருகாலத்தில் ஸூஷ்ம தசையில்கூட இல்லாமலே இருந்ததாகவும், திடும் என்று கடவுள் சிருஷ்டித்து விட்டதாகவும் எண்ணுவது சாஸ்திரஞான மில்லாத பாமரர்களின் கூற்றேயன்றி, வேதசாஸ்திரங்களை ஓதி யுணர்ந்தவர் அங்ஙனங் கூறார். ஏனெனில், ஈசுவரன், சித் (ஜீவாத்துமாக்கள்) அசித் (அறிவில்லாத ஜடபதார்த்தங்கள் ) ஆகிய மூன்று தத்துவங்களும் அநா தியாக இருப்பதாகவே வேதம் கூறுகிறது. ஆனால் ஈசுவரன், சித், அசித்துக்களைத் தனக்குச் சரீரமாகக்கொண்டு, தான் அவற்றுள் வியாபித்து சரீரியாய் விளங்குவதால், அதே வேதங்கள் ஈசுவரன் ஒருவனே இருப்பதாகவும் இரண்டாவது வஸ்து கிடையாது என்றும் கூறும். நாம், ஒருவனுடைய ஆத்மாவும் அவனுடைய சரீரமும் வேவ்வேறு பதார்த்தங்கள் என்று அறிந்தும், அவனை நோக்கி, ''நீ இளைத்திருக்கிறாய்'' என்று அவனுடைய ஆத்மாவையும் சரீரத்தையும் ஒன்று படுத்திப் பேசுகிறோம். இந்த வாக்கியத்தில் “நீ'' என்பது ஆத்மாவையும், ''இளைத்திருக்கிறாய்'' என்பது சரீரத்தையும் குறிக்கும். அதுபோலவே வேதங்களும், ஈசுவரனையும், அவனுக்குச் சுரீரமாக இருக்கும் சித் துசித்துக்களையும் ஒன்றுபடுத்திக் கூறுவதால், பிரம்மத்தைத் தவிர வேறொன்றுமே கிடையாது என்பர் ஒரு சாரார். “ஏக மேல வத்விதீயம் பிரம்ம" மென்றது போன்ற சுருதி வாக்கியங்களே இவர்கள் கூற்றுக்குக் காரணமாகும். ''இரண்டாவது கிடையாது, பிரம்மம் ஒன்றே உள்ளது'' என்பது மேற்கண்ட சுருதி வாக்கியத்தின் கருத்தாகும். ஒரு அரசனைக் குறித்துச் சொல்லும் பொழுது, ''இவன் ஒரே அரசன் தான் இருக்கிறான்; இரண்டாவதரசன் கிடையாது என்று ஒருவன் சொன்னால், பிரஜைகளும் கிடையாது என்று அர்த்தம் செய்து கொள்வது பொருந்தாதல்லவா? அதுபோல, பிரம்மம் ஒன்றே உள்ளது ஜீவாத்துமாக்கள் கிடையாது என்பார் பக்ஷமும் பொருந்தாது. ஆண்டானாகிய ஈசுவரன் வேறு; அடிமைக ளாகிற ஜீவாத்மாக்கள் வேறுதான்.

மேற்கூறிய சுருதி வாக்கியத்தையே நம்மாழ்வாரும் தம்முடைய திருவாய்மொழியில் ‘தானோர் உருவே தனிவித்தாய்" என்று அருளிச் செய்திருக்கிறார். இதில், 'தானே'' என்பதால் ஈசுவரனே உபாதாந காரண மென்றும், "தனி" என்பதால் அவனே நிமித்த காரண மென்றும் "ஓர்" என்பதால் அவனே ஸஹகாரி காரண மென்றும் அறியத்தக்கது. ஒரு குடத்தைச் செய்வதற்குக் குயவனான நிமித்த காரணமும், மண்ணாகிய உபாதாகாரணமும், தண்ட சக்கரங்களாகிய ஸஹகாரி காரணமும் வேண்டி யிருக்கின்றன. ஜகத் ஸிருஷ்டி முதலிய ஸகல வியாபாரங்களிலும், இம் மூன்று காரணங்களும் ஈசுவரனேயாக இருக்கின்றான். குடம் செய்வதற்கு, தண்ட சக்கரங்களின் உதவி குயவனுக்கு வேண்டி யிருத்தல் போல , ஜகத் ஸிருஷ்டி முதலிய காரியங்களில், ஈசுவரனுக்கு வேறு உதவி வேண்டியதில்லை யாகையால், அவனே ஸஹகாரி காரணம் என்னத் தட்டில்லை. ஆனால், குடத்திற்கு மண் உபாதாந காரணமாக இருப்பது போல், ஈசுவரனை எப்படி ஜகத்திற்கு உபாதாந காரணமாகச் சொல்லலாம் என்று உண்டாகலாம். ஸிருஷ்டிக்கு முன்பு ஸூக்ஷம தசையில் அவனுக்குச் சரீரமாக உள்ள பிரகிருதியை, அதாவது அசித்தை ஸ்தூலமாகப் பரிணமிக்கச் செய்வதே ஸிருஷ்டி எனப்படுவதால், சரீரியாகிய அவனே உபாதாந காரணமாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அவன் பிரகிருதியே உபாதாக காரணமாகும். சிருஷ்டி என்னவென்பதையும், அதன் காரணத்தையும் ஆராய்வோம்.

ஒருவனுக்கு எக்காரணத்தைக் கொண்டாயினும் அதிக ஆநந்தம் உண்டாகிவிட்டால், அந்த ஆகந்தம் அவனைப் பாடச் செய்கிறது. சும்மா யிருக்க வொட்டாது. அதிகமாக ஆநந்தம் பொங்கிவிட்டால், அது அவனை மெய்மறந்து ஆடவும் செய்துவிடும். இது கண்கூடு. இதைப் போலவே, பிரம்மாநந்த சொரூபியாகிய பகவான், தன் ஆகந்த மேலீட்டால், ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரம் ஆகிய முத்தொழிலையும், அநாயாஸமாக லீலையாகச் செய்கிறார். அதாவது, ஒரு குழந்தை மண்ணால் வீடுகட்டி விளையாடி விட்டு பிறகு அதை அழித்துவிட்டுப் போய் விடுவதைப்போல் அவ்வளவு ஸுலபமாகச் செய்கிறார் என்பதாம். இன்னொரு காரணமும் உண்டு. ஒவ்வொரு மஹாபிரளயத்திற்குப் பிறகும், விருஷ்டிக்கு முன்னால், ஸமுத்திர ஜலத்தோடு உப்பு கலந்திருப்பதுபோல், பரப்பிரம்மத்தோடு சேதநா சேதநங்கள் ஒன்றாய்க் கலந்து அதி ஸூக்ஷ்ம தசையில் இருக்கின்றன. அப்பொழுது ஜீவனுக்கு 'நான் இருக்கிறேன்'' என்கிற ஞாபகம்கூட கிடையாது; ஜடத்தோடு ஜடமாய் இருக்கிறது. ஜீவனுடைய இந்த துர்த்தசையைப் பார்த்து பகவான், "நம்மைப் போல் பிரம்மாநந்தத்தை அனுபவிக்கக் கூடிய ஜீவன் இப்படி மூலப்ரகிருதியில் இறகுதிர்ந்த பக்ஷி ஜாலங்களைப் போன்று உருமாய்ந்து கிடக்கிறதே," என்று இரங்கி, தன் சங்கல்பத்தினால் மூலப்ரகிருதியை அசைவித்து, அதிலிருந்து மஹத், அஹங்காரம் முதல் பஞ்சபூதங்கள் வரையில் ஒன்றிலிருந்து ஒன்றை படிப்படியாக உண்டாக்கி, இந்திரியங்களையும் மனத்தையும் உண்டாக்கி, இவற்றால் அண்டத்தையும், அதற்குள் பிரம்மாவையும் சிருஷ்டித்தார். பிறகு, பிரம்மனுக்குள் அந்தராத்மாவாய் இருந்துகொண்டு, தேவர், மனிதர் , பசு பக்ஷியாதிகள், ஸ்தாவரம் முதலிய நால்வகை பிறப்புக்களையும், உண்டாக்கினார். இவற்றுள் தேவர்களைப்போல மனிதர்களும் உபாசிக்கும் வண்ணம், மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களோடு கூடினதாயும், கைங்கர்யத்திற்கு யோக்கியமாயுமுள்ள சரீரத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இதற்கு மேலும், தன்னுடைய ஸ்வரூபகுண விபூதிகளையும், தன்னையடையும் மார்க்கத்தையும் உபதேசிக்கும் வேதங்களையும் கொடுத்தருளினார். வேதங்களைப் படித்தறிய அவகாசமும், ரமும் இல்லாதவர்களுக்காக, கிருஷ்ணனாக அவதாரம் செய்து வேதஸாரமான கீதா சாஸ்திரத்தையும் கொடுத்தருளினார். எவ்வகையிலாவது ஆத்மாக்கள் தன்னை யடைந்து, பேரின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று, பகவான் பரமகாருண்யத்துடன், அநேக சாதனங்கள் ஏற்படுத்தியிருக்க"இன்னமுங் கெடுவேன், என்ன பந்தயம்," என்ற பழமொழிப்படி மனம் போனபடி சென்று, கர்மாநுகுணமாகக் கஷ்டம் வரும்போது மாத்திரம், "பாழும் தெய்வமே, உனக்குக் கண்ணில்லையா,?'' என்று கூறும் பித்தரின் பேதைமையை என்னென்றுரைப்பது! இதனையே ஒரு பெரியாரும், “வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் வைவதுவும் எங்களுலக வாய்பாடு," என்று கூறினார்.

ஞானசாஸ்திரங்கள் எண்ணில்லாதவைகள் இருப்பதுபோல், கடவுளையடையும் மார்க்கங்களும் எண்ணிறந்தனவாக உள்ளன. ஆயினும், யாவரும் சுலபமாய நுஷ்டிக்கக் கூடியதும், இக் கலியுகத்திற் கேற்றதுமான சரணாகத மார்க்கமே, கீதையின் முடிவில், கிருஷ்ணபகவானால் அர்ஜுனன் மூலம் உலகத்தாருக்கு உபதேசிக்கப்பட்டது. இதையே, பரநியாசம், சரணாகதி, ஆத்மநிஷேபம், பிரபத்தி, தியாகம் முதலிய சொற்களால் பல சாஸ்திரங்கள் கூறும். நாள் முழுவதும், வயிற்றுப் பிழைப்புக்கே உழைத்து, கடவுளை நினைக்கவும் நேரமில்லை என்று சொல்லும்படியான நெருக்கடியான காலத்தில், மோக்ஷ சாதனத்திற்காக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களுக்கு, இந்த சரணாகத மார்க்கம் அல்லது ஆத்ம ஸமர்ப்பணத்தைத் தவிர வேறு சதியில்லை. இனி, இத் துணைச் சிறப்பு வாய்ந்த ஆத்ம ஸமர்ப்பணம் என்பது என்ன வென்பதை விசாரிப்போம்.

ஆத்ம ஸமர்ப்பணமென்னும் சரணாகதியானது இதி ஹாஸங்களில் விஸ்தரித்துக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி ஆத்ம ஸமர்ப்பணமானது ஆறு அங்கங்க ளுடையது. அவையாவன,

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம், அதாவது பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டுமேன்னு மெண்ணம்,

(2) பிரதிகூல்ய வர்ஜநம், அதாவது அபகார சிந்தையை விட்டு விடுதல்,

(3) பகவான் தன்னைக் காப்பாரென்ற மஹாவிசுவாஸம்,

(4) அப்படித் தன்னைக் காக்கவேணு மென்று பகவானை வரித்தல்,

(5) அதன்படியே தன்னை பகவானுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்தல்,

(6) மற்றொன்றும் சாதனமென்று நினையாமை என்பனவாம்.

மேற்கண்ட ஆறு பிரிவுகளுள், தன்னை ஸமர்ப்பிப்பது தலையும், மற்ற ஐந்தும் அங்கங்களெனக் கருத்து, இவ்வாத்ம ஸமர்ப்பணம், ஸமர்ப்பணமென்றும், பல ஸமர்ப்பணமென்றும் இரண்டு உட்பிரிவினை யுடையது. அதாவது, தன்னைக் காத்தலின் சுமையையும், அதனா லுண்டாகும் பலனையும் ஸமர்ப்பிப்பதாகும். இப்படித் தன்னைக் காத்தலின் சுமை, அதாலுண்டாகும் பலன், இவைகளின் ஸமர்ப்பணத்தோடு, தான் தனதென்னும் இரண்டு வடிவான சுதந்திராத்ம மயக்கத்தையும், புறமேயுள்ள வஸ்துக்களில் தனக்குள மமதையையும் கூட்டி ஸமர்ப்பித்தலே, ஆத்ம ஸமர்ப்பணமாகும்.

இதன் விபரம் அஷ்டாக்ஷர மந்திரத்திலும், அதன் விரிவான த்வயத்திலும் த்வயத்தின் விரிவான சரம ஸ்லோகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. தைத்திரீய உபநிஷத் ஆத்மஸமர்ப்பணம் செய்யும் விதத்தைக் கூறும். இப் பிரபத்தியைச் செய்பவனே ப்ரபன்னன் எனப் படுவான். இப்படிப் ப்ரபன்னனானவன் விஷயத்தில், பகவான் தானே உபாயமாக நின்று, இவனுக்குத் தன்னையடைய இடையூறுகளா யிருந்த பாவங்களை விலக்கி, முடி வில் தானே பயனாய், அப்பயனும் தனது பேறாய் அங்கீகரிப்பான். இதனையே அன்பனாய்த் தனதாடைந்தார்க்கெல்லாம், மரணமானால், வைகுந்தம் கொடுக்கும் பிரான்'' என்றார் நம்மாழ்வாரும்.

ஒருவன் விறகைப் பிளந்து அதன் கூலியாக ஒரு ரூபாயைப் பெற்றுக் கொண்டு போகிறான் . ரூபாய் தனக்கு வேண்டியிருந்தும், சரீர சக்தி யில்லாத ஒருவன், ''எனக்கு விறகு பிளக்கச் சக்தியில்லை. ஆனால் எனக்கு ரூபாய் வேண்டும். அதுவும் எனக்காகக் கொடுப்பதாக இருக்கக்கூடாது. நீயே உன்னிஷ்டமாகக் கொடுக்கவேண்டும்,'' என்று அழுது ஒரு ரூபாயைப் பெற்றுக் கொள்ளுகிறான். பக்தனுடைய நிலைமை முன்னவனு டையதையும், ப்ரபன்னனுடைய நிலைமை பின்னவனுடையதையம் ஒக்கும். “எனக்கு பக்தி யோகம் செய்யச் சக்தியில்லை. ஆனால் மோக்ஷம் வேண்டும். அதுவும், நான் உன்னைச் சேர்ந்தவனென்பதற்காக நீயாக இஷ்டப்பட்டுத் தரவேண்டுமே யொழிய எனக்காக ஒன்றும் வேண்டாம்,'' என்று ப்ரபன்னன் வேறு பிரயோஜனத்தை விரும்பாமல், அநந்ய சரண்னாய் எம்பெருமானிடம் சரணாகதம் செய்தால், ரக்ஷிக்க வேண்டியவன் ஒருவனும் இல்லையே யென்றும் யாராவது மோக்ஷம் வாங்கிக் கொள்ள மாட்டார்களா என்றும் தாபப்பட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதியும், தீநசரண்யனுமான பகவான் மோக்ஷம் கொடுத்து ரக்ஷிப்பானென்பதில் சந்தேகமில்லை. அப்படியே ரக்ஷிப்பதாக கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜுனனிடத்திலும், ராமாவதாரத்தில் விபீஷணாழ் வானுக்கு அபயப்ரதாநம் கொடுக்கும் சமயத்திலும் உறுதி கூறி யிருக்கிறான். அந்த ஸத்ய சொரூபியின் வார்த்தை பொய்யாப் போகுமா? அப்படிப் பொய்யாய்ப் போனால்;

"செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த

மெய்ம்மை பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்

தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே?''

 

என்று ஆண்டாள் அருளியபடி, அவரை நியமிக்கிறவர்கள் யார் இருக்கிறார்கள்?

உண்மையை ஆராயுமிடத்து, ஆத்ம ஸமர்ப்பணம் செய்வது கூடத் தப்பாக முடியும். ஏனெனில், அநாதிகாலமாக அவனுக்கு லொத்தாக இருப்பதாகவும், அவனுக்கே உரியபதாகவுமாக ஆத்மாவை, அவனுக்குச் சொந்த மல்லாத ஒரு அந்நிய பதார்த்தத்தை எடுத்து அவனுக்கு ஸமர்ப்பிப்பது போல ஸமர்ப்பிப்பதற்கு நமக்கு என்ன அதிகார மிருக்கிறது? ஆயினும், நம்முடைய ஆத்ம உஜ்ஜீவநார்த்தம் ஆத்ம ஸமர்ப்பணம் செய்யத்தான் வேண்டும். இதனாலே, "ஆத்ம ஸமர்ப்பணம் செய்யவும் வேண்டும். ஐயோ! இப்படிச் செய்தோமே என்று இரங்கவும் வேண்டும்" என்பர் பெரியோர். நம்மாழ்வார், எம்பெருமான் தன் மனதில் வந்து சேர்ந்ததற்குக் கைம்மாறாகத் தன்னையே அவனுக்கு ஸமர்ப்பித்துவிட்டு, பின்னர் தன்னுடைய ஸ்வரூப ஞானம் ஞாபகத்திற்கு வந்ததும்," அந்தோ! என்ன காரியம் செய்து விட்டோம். ஆத்மாவைக் கொடுக்கிற நான் யார்? கொடுக்கப்பட்ட ஆத்மா யார்? உடைமைக் காரனாகிய அவனன்றோ தன்னுடைய கைங்கர்யத்தைச் செய்வதற்காக என்னைத் தன்னதாகச் செய்து கொண்டான்'' என்று வருந்தி,

''எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு

எனதாவிதந் தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே

என தாவியும் நீ பொழிலேழு முண்ட எந்தாய்

எனதாவியார் ? யானார் ? தந்த நீ கொண்டாக்கினையே.''

 

"யானே யென்னை அறிய கிலாதே

யானே யென்றனதே யென் றிருந்தேன்

யானே நீ யென்னுடைமையும் நீயே

வானே யேத்தும் எம்வானவர் ஏறே.

 

என்னும் பாசுரங்களைப் பாடி தன் துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்.

நாராயணனே ஸர்வரக்ஷகன் என்று நம்பி ஒரு தடவை ஆத்மஸமர்ப்பணம் செய்துவிட்டால் மோக்ஷம் கிடைத்துவிடுமோ என்று சங்கிக்க வேண்டாம். சங்கித்தால் ஆத்ம ஸமர்ப்பணம் செய்தது பொய்யாய்ப் போய்விடும். மோக்ஷம் கிடைக்குமென்று நம்பினாலும், ஆத்ம ஸமர்பபணத்திற்குப் பலன் மோக்ஷம் என்று நினைக்க வேண்டாம். மோக்ஷமாகிய பெரிய ஸாம்ராஜ்யத்தை வாங்குவதற்கு, ஆத்ம ஸமர்ப்பணம் சரியான விலையாகாது. எப்படியெனில், ஒரு ஏழை ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு போய்க் கொடுத்து ஒரு அரசனைக் கண்டுகொண்டு, அவனிடம் ஒரு கிராமத்தைப் பெற்றுவந்தால் எலுமிச்சம்பழத்திற்காகக் கிராமம் கொடுக்கப்பட்டதாகக் கொள்வது மதியீனமன்றோ? அதுபோல, பகவான் மோக்ஷமாகிய பெரிய ஐச்வர்யத்தைத் தன் புத்திரர்களாகிய ஆத்மாக்களுக்குக் கொடுப்பதற்குக் காத்துக்கொண்டிருந்தும், உலகத்தார் ''இவன் இன்னது செய்து மோக்ஷம் பெற்றான்'' என்று சொல்வதற்காக அவர்களிடம் ஒரு வியாஜமாத்திரம் எதிர்பார்ப்பதால், ஆத்ம ஸமர்ப்பணம் உண்மையில் ஒரு வியாஜமாத்திரமாகுமே யொழிய சரியான விலையாகாது. ஆத்ம ஸமர்ப்பணம் ஆத்ம ஸமர்ப்பணம் செய்த பிறகு, மோக்ஷத்தை யடைவதற்கு உடம்பு நம்மை விடுகிறவரையில் தாமதம். அது வரையில் உடம்பு எப்போது நம்மைவிடப்போகிற தென்று நாள்களை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதே.

ஆத்ம ஸமர்ப்பணம், இன்னவிடத்தில் இன்ன காலத்தில், இந்நிலைமையில் தான் செய்யவேண்டு மென்கிற நியதியில்லை. எம்பெருமானிடம், ஆத்மாக்கள் நின்ற நிலையில் சரண்புகுதற்குரியர். ஆகையால், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் சரணாகதம் செய்யலாம். உதாரணமாக, வஸ்திராபரண சமயத்தில் திரௌபதி ரஜஸ்வலையாக இருந்தும், அந்த நிலையிலேயே கண்ணபிரானிடம் சரணாகதம் செய்து தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டாள். கஜேந்திராழ்வான், பொய்கைக் கரையில் நின்ற நிலையிலிருந்து சரணாகதம் செய்து முதலை வாயிலிருந்து விடுபட்டு வீடும் பெற்றான். விபீஷணாழ்வான், தான் கட்டிய வஸ்திரமொன்று தவிர வேறொன்று மில்லாதவனாய், இலங்கை யிலிருந்து புறப்பட்டு வந்து இராமபிரானிடம் சரணாகதம் செய்தான். ஒரு காலத்தில், வேல்வெட்டி நம்பி யென்பார் ஒருவர், நம்பிள்ளையை நோக்கி, ''ஸமுத்திரத்தில் அணை கட்டுவதற்காக, ஸமுத்திர ராஜனாகிய வருணனிடம் சரணாகதம் செய்யும்படி விபீஷணாழ்வான் ஸ்ரீராமனுக்குச் சொல்ல, ஸ்ரீராமபிரான் நியம நிஷ்டைகளுடன் சரணாகதம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே! அப்படியிருக்க, பிராணிகள் நின்ற நிலையில் சரண்புகுதற்குரியர், என்று சொல்வது எங்ஙனம் பொருந்தும்?" என்று கேட்க, நம்பிள்ளை' 'ஸ்ரீராமபிரான் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவராகையால், அவருடைய குலாசார தர்மப்படி, நியம நிஷ்டைகளுடன் சரணாகதம் செய்தார். அவரைச் சரணாகதம் செய்யச் சொன்ன விபீஷணாழ்வான் எந்த நிலையில் சரணாகதம் செய்தார் என்பதை எண்ணிப்பாரும். ஆகையால், நாம் விபீஷணாழ்வானைப் போல், நின்ற நிலையில் சரணாகதம் செய்யலாம்" என்று பதிலிறுத்தார்.

ஒருவன் ஆத்ம ஸமர்ப்பணம் செய்த உடனேயே மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாகி விடுகிறபடியால், அதன் பிறகு அவன் செய்யும் பூஜாநுஷ்டானங்க ளெல்லாம், ஸ்வயம் புருஷார்த்தமான ஈசுவர கைங்கர்யமாகவும், அவனிடமுள்ள பிரீதியினாலும் செய்வதே யன்றி, மோக்ஷப் பிரயோஜனத்தை உண்டாக்குவதற்கல்ல. எப்படி யெனில், ஒருவன் ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு அவளைத் தனக்கு ஸ்வாதீனமாக்கிக்கொண்ட பிறகும், அவளிடம் உள்ள பிரீதியினால் அதிகப்படியாக நகைகளையும், சேலைகளையும் வாங்கிக் கொடுத்து அவளைச் சந்தோஷப்படுத்தல் போலாம். ஆத்ம ஸமர்ப்பணம் செய்துவிட்டால் மோக்ஷம் நிச்சயமாகி விடுகிறபடியால், அதன் பிறகு பகவானை நினைக்கக்கூட வேண்டியதில்லை என்று சிலர் நினைக்கலாம். உண்மைதான். ஆனால், ஜீவாத்மா எம்பெருமானுக்கு அடிமை என்ற ஸ்வரூபஞானமுள்ளவன், எம்பெருமானுக்கென்றே உயிர்வாழும் கொள்கையை யுடையவனாயிருப்பானாதலால், அவனை ஒரு கணமும் மறவாது, அவனுடைய முகோல்லாஸத்தைப் பெறுவதற்கென்றே, சகல கருமங்களையும் அவனுடைய கைங்கர்யமாகச் செய்வான். மேலும், “எம்பெருமான் அவனால் கொடுக்கப்பட்ட சரீர இந்திரியாதிகளைக் கொண்டு, தனது ஆராதன ரூபமான கர்மங்களை, தனது லீலா விபூதியின் பொருட்டு, தானே செய்வித்துக்கொள்ளுகிறான்'' என்று நினைப்பானே யன்றி, ஒரு காரியத்தையும் தான் செய்வதாக நினைக்க மாட்டான்.

"எதிராஜன் என்னும் சீமான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே'' என்று பிள்ளைப் பெருமாளையங்கார் அருளிச் செய்தபடி, அதிரகஸ்யமாகிய சரணாக தமார்க்கத்தைத் தம்முடைய காலத்தில் இந்து தேசம் முழுதும் பரவும்படி செய்த உடையவரென்றும், பாஷ்யகாரர் என்றும், எதிராஜர் என்றும் பல பெயர்களுடைய இராமாநுஜருக்கு கூரத்தாழ்வான் என்னும் சிஷ்யர் ஒருவர் இருந்தார். இக்கூரத்தாழ்வானுக்கு பட்டர் என்னும் திருநாமமுடைய திருக்குமாரர் ஒருவர் இருந்தார். ஒரு சமயத்தில் பட்டர் சிஷ்ய வர்க்கத்துடனே சேது யாத்திரை செய்து திரும்பிவருகிறபொழுது ஒருநாள் சாயங்காலமான வளவிலே', பாதிரியென்கிற கிராமத்தில் ஒரு வேடனுடைய குடிசைக்கு எழுந்தருளினார். வேடனும், உடனே எழுந்து ஒரு கட்டிலை இவருக்கு ஆசனமாகக் கொடுக்க, பட்டர் அதன்மேல் எழுந்தருளினார். பட்டர் வேடனுடைய அன்பைக் கண்டு வியந்து “இவன் நமது மகிமையை யறிந்து இவ்வுதவி செய்தானல்லன்; நம்மால் ஒரு கைம்மாறு பெறலாமென்று செய்தானுமல்லன். தனது இருப்பிடத்திற்கு நாம் வந்தோமென்ற அபிமான மன்றோ இவன் இவ்வளவு உபசாரம் செய்யக் காரணமாகிறது! புத்தி சக்திகளில் மிகக் குறைவுள்ள ஒரு வேடனுக்குள்ள இயல்பு இதுவானால், அறிவாற்றல்களில் சிறந்த சர்வேச்வரன் தனது அபிமானத்தி லொதுங்கினார்க்கு என்ன தவித்தான் செய்யமாட்டான்'' என்று ஈடுபட்டு அன்றிரவு அங்கே தங்கினார். பிறகு அவர் அவ்வேடனை யோக க்ஷேமம் விசாரித்தருள, அவன், ''ஸ்வாமி! நான் இன்று காட்டிற்கு வேட்டையாடப் போனேன். அங்கே ஒரு முயற் குட்டியைக் கண்டு அதனைப் பிடித்து வரலானேன். அப்பொழுது அதன் தாய் என் முன்னே வந்து வழியிலே எதிரே கும்பிட்டுக்கொண்டு கிடந்தது. அதைப் பார்த்து, எனக்கு மனம் இளகிவிட்டதனால், அதன் குட்டியை விட்டு வந்தேன்" என்று சொன்னான். அவ்வேடன் வார்த்தையைக் கேட்ட பட்டர் ஆச்சர்யப்பட்டு, மயிர்சிலிர்த்து, நஞ்சீயரைப் பார்த்து, 'கேட்டீரோ? எல்லா உபாயங்களையும் விட்டு என்னைச் சரணாகதம் செய் நான் உன்னைச் சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்' என்று கண்ணன் அருச்சுனனுக்கு உபதேசித்தது போல், எவ்வகைத் துன்பமும் தீர்தற்குச் சரணாகதியே சிறந்த உபாயமென்று யாரேனும் அந்த முயலுக்கு உபதேசித்தவருண்டோ? 'யார் சரணமடைந்தாலும் அவரை எவ்வாற்றாலும் பாதுகாக்க வேண்டும்'' என்று சுக்கிரீவன் முதலியோருக்கு இராமபிரான் அறிவுறித்தினாற் போலச் சரணாகத் ரக்ஷணம் சிறந்த தருமமென்று இந்த வேடனுக்கு உபவேசித்தவர் தாம் யாரேனும் உண்டோ? யாதொரு உபதேசமுமில்லாதிருக்கத் தன்னடைவிலே சரணாகதியும் அதன் பயனும் பகுத்தறிவற்ற முயலினிடத்தும் வேடனிடத்தும் இப்படிக் கைகூடிற் றன்றோ? இவ்வேடனுக்கே சரணாகதகதியில் இரக்கம் பிறந்தது கண்டபடியால் . பரம சேதனனான எம்பெருமானுக்குச் சரணாகத்ரிடத்திலே இரக்கமுண்டாவதற்கு ஒரு சாஸ்திரம் தேடவேண்டியதில்லையே! என்று ஈடுபட்டு அருளிச் செய்தார்.

ஞானசாஸ்திரங்களில், பக்தன் ஈசுவனை அடையும் உபாயத்திற்கு, மார் ஜாலக்கி சோரநியாயம், மர்க்கடகக்கி சோர நியாயம் என்ற இரண்டு உபமானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, முறையே பூனைக்குட்டி நியாயம், குரங்குக் குட்டி நியாயம் என்பனவாம். பூனையானது தன் குட்டிகளைக் காப்பாற்றும் முறையில், குட்டிகளிடம் எவ்வித முயற்சியு மில்லாமல் தானே தன் வாயால் கவ்விக்கொண்டு உற்ற இடத்தில் சேர்ப்பிப்பது போல, நம்மால் எவ்வித முயற்சியுமின்றி, பரம கருணையால் கடவுளே நம்மை இப்பிறவித் துன்பத்தினின்றும் அன்பின் வாயிலாகக் கரையேற்றுகிறார். இது மார் ஜாலக்கி சோர நியாயம். குரங்கானது தன் குட்டிகளைக் காப்பாற்றும் முறையில், குட்டிகள் தன் வயிற்றை அணைந்து கட்டிக்கொள்ளவும், தான் அதற்கு தன் வயிற்றை ஆதாரமாகக் கொடுக்கவும், இவ்விரண்டு தன்மையால் உற்ற இடத்தை நோக்கி, தான் தாவி, குட்டிகளைக் குரங்கு சேர்ப்பிக்கிறது. பகவானுடைய திருவடிகளைச் சேரவேண்டுமானால், சரீரசுத்தி, மனச் சுத்தி, ஆத்மசுத்தி என்ற பல சம்ஸ்காரங்களும் செய்யப்பெற்று, அவைகளின் மூலமாய் மனம் பரிபக்குவமாகி, அவரும் அருட்பிரசாதம் செய்ய ஜீவன் மோக்ஷத்தை யடைகிறான். இது இரண்டாவது பிரஸ்தாபித்துள்ள மர்க்கடகக்கி சோர நியாயம். சாதாரண ஜனங்கள் முயற்சி செய்யவேண்டியதை உத்தேசித்து பிந்தியதை நலமென்று சொன்னாலும், அன்பின் விகாச அளவில், முந்தியதே உயர்வாம். ஏனெனில், தான் என்ற பாவமே முற்றும் மறந்து அவனே அடைக்கலம் என்ற பூர்ண நம்பிக்கை கொண்டு நிற்கின்ற நிலையாதலால் இதுவே உயர்ந்ததாகும்.

      "நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பம்'' என்றார் நம்மாழ்வார். அதாவது, ஜீவாத்மாக்களாகிய அடிமைகளுக்கு அன்பனாகவும் செந்தாமரைப் பூவில் பிறந்தவளான பிராட்டிக்கு அன்பனாகவும் இருக்கிற நாராயணன் என்று பொருளா கும். இதில், முதலில் ''நமக்கு இன்பனை" என்றும், பின்னர் “பூவின் மிசை நங்கைக்கு இன்பனை'' என்றும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு எஜமானன் தன் மனைவி யினிடத்தில் அதிக ப்ரீதியுள்ளவனாக இருப்பது சகஜம். ஆனால், அவன் தன் மனை வியிடமுள்ள பிரீதிக்குச் சமமான பிரீதியைத் தன் வேலைக்காரனிடம் வைத்திருந்தால், அவ்வேலைக்காரனிடமுள்ள பிரீதி அதிகப்படியல்லவா? இக் காரணத்தைக் கொண்டே, எம்பெருமான் லக்ஷ்மியினிடம் வைத்திருக்கும் அன்பைவிட தன் அடிமைகளாகிய ஜீவாத்மாக்களிடம் அதிக அன்புள்ளவன் என்பதைக் காட்டுவதற்காகவே, ஆழ்வார் முதலில் "நமக்கு இன்பனை'' என்றார். ஆகையால், எம்பெருமானுக்குப் பாதந்திரனும், பிராட்டியைவிட அதிகப் பிரீதி பண்ணப்பட்ட வஸ்துவாகிய ஜீவன், தான் ஸ்வதந்திரன், தனக்காகவே இருக்கிறான் என்று எண்ணுதல், இராவணன் பிராட்டியைத் திருடிய திருட்டை விடப் பெரிய திருட்டாகும். ஒருவன் தெரியாத்தனமாகத் திருடிய ஸொத்தை, நல்லறிவு வந்த பிறகு உடைமைக்காரனிடம் சேர்ப்பிப்பது மாத்திரம் போதாது. ''அந்த ஸொத்து நம்முடையதல்ல; இன்னானுடையாது'' என்ற எண்ணம் இருக்கவேண்டும். அதைப்போல ஒருவன் ஆத்மஸமர்ப்பணம் செய்த பிறகு அதோடு நில்லாமல், “நான் சர்வேச்வரனுக்குச் சேஷ பூதன், அடிமை'' என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்கும்படி செய்யவேண்டும்.

      வேதவியாஸர், நாரதர், போன்ற பெரிய மஹரிஷிகளும் ஆழ்வாராதிகளும் லக்ஷமியோடு கூடிய நாராயணனையே சரண மடைந்திருக்கிறார்கள். இதனாலேயே நம்மாழ்வாரும், "நம் திருவுடையடிகள் தம் நலங் கழல் வணங்கி என்றபடி பிராட்டி முன்னதாகப் பெருமாளைச் சரணமடைய வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். ஒரு சமயத்தில் நஞ்சீயர் பட்டரை நோக்கி 'சர்வேச்வரனைச் சரணமடைந்தால் அவன் பயனளிக்கிறான்; பிராட்டியைப் புருஷ காரமாகப் பற்றவேண்டுகிறதென்?" என்று வினாவ, பட்டர் “நம் திருவுடையடிகள் தம் நலங் கழல் வணங்கி" என்றவிடத்து பிராட்டி முன்னாகப் பெருமானை அடைய வேண்டும்' என்று ஆழ்வார் அருளிச் செய்ததைப் பார்க்கவில்லையா? ஒருவன் எம்பெருமானை ஆசிரயிக்கப் புகும் பொழுது அப்பொழுது அவன் குற்றம் பாராமல், அவனைத் தன் நிழலிலே வைத்துச் சமயமறிந்து எம் பெருமான் திருமுன்பே கொண்டு விட்டு இவன் குற்றத்தைப் பொறுக்க வேண்டுமென்று சொல்வதற்கு பிராட்டி புருஷகாரம் (சிபார்சு) இன்றியமையாதாதலால், அவள் முன்னாலேயே பற்றவேணும்' என்று விடையளித்தருளினார். ஆகையால், நாமும் அவரு டைய சொற்படி, நம்முடைய ஆத்மாவைப் பிராட்டி முன்பாக எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பித்து அவருடைய திருவருளுக்குப் பாத்திரராவோமாக.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment