Monday, August 31, 2020

சங்கம்

சங்கமென்ற பதம் பல்வேறு பொருள்களில் வழங்கப்படுமாயினும் இவண்
 நுண்ணுணர்வுடைய அறிவாளர் பலர் குழுமி ஆராய்ச்சி செய்யுங் கழகத்திற்கே சங்கம் என்று கூறுதும்.

 

நம் பழந்தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் முதல் சங்கம்,
 இடைச் சங்கம், கடைச் சங்கம் என முச்சங்க மிருந்து எந்தாய்த் தமிழ் மொழியில் நல்லிலக்கிய லக்கண தருக்க முதலிய செந்தமிழ் நூற்கள் ஆக்கப்பட்டிருப்பதாக இக்காலத்கிலும் முன்னைய சங்க நூற்களென்று பெருமாண்புற்று விளங்கும் சீவக சிந்தாமணி தொல்காப்பியம் முதலியபிறவு முள்ள பெருங்காப்பியத்தினின்றும் தெளிந்தறிகின்றோம்.

 

நம் பழந்தமிழ் நாட்டின் தொன்மையும், கல்வி, இசை, ஓவியம், மருத்துவம், வானாராய்ச்சி, வீரம், அரசியல், வாணியம் மற்றையவைகளிற் மக்கள் விழுமியவர்களாய் வதிந்து வந்தன ரென்பற்குரிய காட்டுகளை நம் பழந்தமிழ் நூலகத்திலுந்தி உய்த்துணர்ந்தாலன்றி அறிதலரிது.

 

இப்போது நந்தமிழ்த் தாயகத்தில் முன்னைய தொத்த சங்கங்களில்லாமையாலும், பன்னூறு ஆண்டுகளாக நந்தமிழ் நாடு உரிமையிழந்தமையானும் மக்கள் நாட்டுக் கல்வியல்லாத இந்தியக் கல்வியை தனத்தை நாடிப் பயின்று வருதலானும் நாட்டில் பிற்காலத்தில் நல்லிலக்கியங்கள் தோன்றவில்லை.

 

சரித்திர ஆராய்ச்சியின்படி பண்டைய காலத்தில் குன்றிக் கிடந்த
மேனாட்டார்கள் இதுபோழ்து குன்றெனத் தோன்றி உலகாள்வதும், தொழில் வியாபாரம் விவசாயம் முதலியவைகளில் நாளடைவில் பேராக்கம் பெற்று வருவதும் சங்கங்களின் பெரும்பணியேயாம். சிறிய நகரங்களிலும் ஆங்காங்கு அநேகச் சங்கங்களை நிறுவிப் பல்கலையாய்ந்துப் புதுப்புது நூதனக் காட்சிகளை நம்மவர் இறும்பூதுறத்தக்க ஆற்றிக் கீர்த்தி பெறுவதும் சங்கங்களின் துணையே யன்றி வேறில்லை. சில்லாண்டுகட்கு முன் சிற்றரசா யிருந்த ஜப்பானும் இப்போது வல்லரசாகத் தனது அரசியல் வாணிபம் கைத்தொழில் நாகரீகம் முதலியதி லீடுபட்டு ஞாயிறென களிர்ந்து காண் டிருப்பதற்கும் காரணம் சங்கங்களின் ஊழியமென்றே நன்கு விளங்குகிறது.

 

இவ்வாறு ஒவ்வொரு நாட்டாரும் பற்பலத் துறைகளில் முற்போக்கெய்தி வரும் இந்நாளில் நம் தமிழ் மக்கள் கல்வி, தொழில், அரசியல் முதலிய பிறவுமுள்ள முன்னேற்றத்தில் பிற்போக்காக இருந்து வருவது மிகவும் விசனிக்கத் தக்கதேயாம். இவர்களின் உண்மையான நிலைமை இங்ஙனமிருக்குமாயின் நம்மவர்கள் யாண்டுதான் உரிமையாளராகவும், மேம்பாட்டுக்குரியவராகவுமாவர். ஒரு தேயம் பற்பலத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து மாண்புற வேண்டுமாயின் அத் தேயத்திலுள்ளாரனைவரும் கல்வி, கேள்விகளிற் சிறந்து இலௌகீக வைதீக சாதனங்களைப் பெறுதற்குரிய பலசங்கங்களை நிறுவி அச்சங்கங்களின் ஒற்றுமையாலும் மற்றைய முன்னேற்றத்துக் குரிய ஊக்கமெனும் ஊர்தியிலுந்திப் பேறு பெறுவதை யோம்பிவரல் வேண்டும். இவண் பேறு என்பது செல்வத்தைக் குறித்தமையால் அச்செல்வம் நுண்ணுணர் உடைமையேயாம்.


 "நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை
 பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்''


 "அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
 ரென்னுடைய ரேனு மிலர்''


என்னும் ஆன்றோர் கூற்றையோர்க. செல்வங்களெல்லாம் அறிவின் துணையாலே சம்பாதிக்கவும் காக்கவும் படுதலால் அறிவுடையாரே எல்லா முடையாரெனவும் அவையெல்லாம் முன்னரே யமைந்து கிடந்தாலும் அவையழியாமைக் காத்தற்கும் அழிந்தவிடத்தே மீண்டுஞ் சம்பாதித்தற்கும் கருவியாகிய அறிவில்லாமையால் அறிவில்லாதவரை என்னுடைய ரேனுமிலர் என்றுங் கூறினார். இதனால் அறிவுடையாரே பெரியார் என்பது பெற்றாம்.

 

இத்தகை அறிவுடையோரால் நடாத்தப்படும் சங்கங்கள் பட்டின முதல் கிராமங்களீறாகவும் மலிந்திருத்தல் வேண்டும். மக்கள் தன் வேதனத்துக்குரிய வினையாற்றி எஞ்சிய ஞான்றை வாளாக்காது முன்னைய அறிவுடையோரது சங்கங்களில் அங்கம் பெற்று அவற்றின் துணையால் அறிவை ஊறச் செய்யும் நெறி நூற்களையும், இந் நிலவுலகின் நிகழ்ச்சியை எளிதில் உணர்த்தி வைக்கும் பத்திரிகைகளையும் உய்த்துணர்ந்து ஏனைய நாட்டாரைப் போல் கல்வி, வியாபாரம், விவசாயம், கைத்தொழில், அரசியல் முதலியவைகளிலீடுபட்டு உயர்நிலை யெய்தல் வேண்டும்.

 

இக்காலத்தில் கிராமங்களிலும் மற்றைய விடங்களிலும் வியவகாரஞானம் இன்னதென்றறிந்திராக பஞ்சாயக் கருத்தாக்களையும், கைக்கூலி வாங்கிக் கொண்டு ஒருதலைச் சார்பாக வழக்குரைக்கும் போலித் தலைவர்களையும், அனாதை யேழைகளின் ஆக்கத்தை நயத்தாலும் பயத்தாலும் வஞ்சித்து அபகரிக்கும் பேராசைப் பிரியர்களையும் காண்கிறோமல்லவா? இன்னோரன்ன கொடுஞ் செய்கைகளின் காரணத்தாலே ஆங்காங்கு கலகமும் பிளவு முண்டாகி மக்களுள் உயிர்கட்கும் பொருள் கட்கும் பெரிய அழிவை உண்டாக்கி விடுகிறது. நம்மால் நடாத்தப்படுஞ் சங்கங்களின் வாயிலாக இன்னவர்கட்கு நற்புத்தி புகட்டி வைப்பதோடு பஞ்சாயத்துப் பரிபாலன முதலிய பொறுப்பு வாய்ந்த வேலைகளைச் சங்கங்களின் சார்பாகவே நடாத்தி வர வேண்டும். நம்மவரில் வெகுபேர் நாங்கள் தலைமுறைத் தலைவனென்றும், பரம்பரைத்தலைவனென்றும் வேட்கையில் உரிமை கோலுகின்றனர். இவ்விடத்தில் நாம்தலைவனென்பதற்குரிய இலக்கணம் அறிவுடைமையே யன்றிப் பிறிதில்லை. ஒரு நாட்டைக் கோலோச்சிக் காக்கும் அரசன் அந்நாட்டு மக்களுக்குரிய நியாயமான வழியில் அரசுரிமை செலுத்திக்காக்க ஆற்றல் பெறாதவனா யிருந்தால அவ்வரசனை நீக்கி வேறொரு நல்லரசனை யேற்படுத்திக் கொள்ளப் பொது மக்களுக்கு உரிமையிருக்கும் போது பரிபாலன ஞானமில்லாத பரம்பரைத் தலைவர்களையோ, தலைமுறைத் தலைவர்களையோ நாம் ஆதரிக்க வேண்டிய தேவையில்லை. நாட்டுக்கு நல்லாசில்லாதிருந்தால் அந்நாடு காடாகி விடுவது போல் நகரங்களுக்குரிய தலை மகனில்லாதிருந்தால் அந்நகரமும் நரகமாகி விடும். அவ்விடத்தில் ஒருபோழ்தும் அருள்நெறி மிளிராது. பணக்காரர்களாயிருந்தாலும், பணமில்லாதவர்களாகவே யிருந்தாலும் பொறுப்பு வாய்ந்த நியாய பரிபாலன நிர்வாக மனைத்தும் அறிவுடையோர்க்கே உரியது. இத்தகைய அறிவுடையோரால் நடாத்தப்படுஞ் சங்கங்கட்கு பொது மக்களியாவரும் அங்கம் பெற்றுத் தமக்குள் இயல்புக்குத் தக்கவாறு பொருளீட்டி அப்பொருளைப் பொதுப் பொருளாக வருமானந் தரத்தக்க நல்வழியில் பண்படுத்தித், திக்கற்றவர்கட்கும் வைத்தியசாலைப் பாடசாலைகட்கும் அனாதை ஆண் பெண் கலியாணங்கட்கும், இறப்பு முதலிய புண்ணிய வழிகளில் செலவு செய்வதோடு கைக்தொழில், விவசாயம் இதர சிறுதொழில் செய்வோர்கட்கும் பேருதவி செய்து வருவோமானால் நாட்டின் வறுமைவி ட்டகலுமென்பது நிச்சயம். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் தான் சம்பாதிக்குஞ் செல்வத்தை மற்றையருக்கும் நல்வழியில் வழங்க அழியாப் பெரும்புகழ் பெறுவதே மனிதனது இலக்கணம். பொது நலத்திற் பற்றற்றவனது வாழ்க்கை 'நடுவூரில் நச்சு மரம் பழுத்தற்று'' என ஆன்றோர் வலியுறுத்தியுள்ளார்கள். அறிவுடையாரால் நடாத்தப்படுஞ் சங்கங்களின் அணிகலமாவது மேற்கண்ட நன்னயங்களே.

 

சிலச்சில விடங்களிற் சங்கம், சபா, எழாம், கழகம், அஸோஸியேஷன், ஸொஸைடி, கிளப், லைப்ரரி எனப் பிறவுமுள்ளப் பற்பலப் பெயர்களால் பகுக்கப்பட்டு வருமவைகளின் நிர்வாகத்தை உற்று நோக்குழி உண்மையான நோக்கத்தோடு உழைத்து வருபவை ஒரு சிலவேயாம். எஞ்சியக் குழூஉக்களெல்லாம் அவைத் தலைவரின் நன்மைக்கும், நிர்வாக சபையாரின் தன்னயத்துக்குமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிலர் ஒழுங்கற்றப் பாட்டுக் கச்சேரிகள், சதுர்க் கச்சேரிகள் நடாத்துகின்றனர். வேறு சிலர் தமது சபைகளைச் சொந்த விருந்தவையாகவும், மற்றுஞ் சிலர் தமது சங்கங்களிற் சூதாட்டம் கட்குடி வியபிசாரம் முதலியவைகளையே ஆதரித்து வருகின்றனர். சில பணக்காரர்கள் தமது காரியசித்தி பெறுவதற்குத் தம் வயப்பட்ட பலரை ஒருங்கு திரட்டி அவசரத்தில் சங்கமென்று தாபித்து தம் மனப்போக்கின்படி ஆட்சி செலுத்தி வருகின்றனர். ஐயகோ! இத்துணைப் போலிச் சங்கங்களின் மலிவால் பொது மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்ன? இவைகளெல்லாம் சங்கமென்ற பெயரைக் கெடுக்க வந்த பங்கமென்றே சொல்ல வேண்டி யிருக்கிறது. ஒருவன் அவையகத்தே அருத்த மில்லாத எண்ணிறந்த வார்த்தைகளைப் பேசுவதைக் காணக் கற்றறிந்த ஒருவனால் பேசப்படும் அருத்தம் பொதிந்த ஒரு வார்த்தையை யொக்காதல்லவா? அதுபோல் அறிவில்லார் நடாத்தும் அநேகச் சங்கங்களைக் காண அறிவாளிகள் நடாத்தும் ஒரு சங்கம் ஓரூரிலிருக்குமாயின் அவ்வூரின் குறைகளை இருளறுக்கும் ஞாயிறு போல் அகலச் செய்யு மென்பது திண்ணம். அறிவுடையாரால் நடாத்தப்படும் சங்கங்களை ஆதரித்து நாளடைவில் நலந் திகழ்தற் குரிய நற்கருமங்களிற் ஈடுபட்டு இருமைப்பயனை அடையுமாறு எல்லாம் வல்ல முழுமுத லிறைவனை வழுத்துகிறோம்.

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment