Showing posts with label மெய்யான சமயம் எது? பொய்யான சமயம் எது?. Show all posts
Showing posts with label மெய்யான சமயம் எது? பொய்யான சமயம் எது?. Show all posts

Sunday, September 6, 2020

 

“மெய்யான சமயம் எது? பொய்யான சமயம் எது?”

 

 நேயர்களே! நாம் முதல் வியாசத்தில் மத தூஷணை'' என்ற தலைப்பின் கீழ் உள்ள விஷயத்தில் குறித்த சிறு புத்தகம் மேற்கண்ட பெயருடையதே. இது யாழ்ப்பாணத்திலுள்ள ரோமன் கத்தோலிக் சமயத்தவர்களால் வெளியிடப்பட்ட ஒரு சிறு புத்தகம். இதில் 'கத்தோலிக் சமயம் ஒரே தேவன் உண்டென்று கூறுகிறது. இந்து சமயமோ முப்பத்து முக்கோடி தேவர்கள் உண்டென்று போதிக்கிறது. எது மெய்? எது பொய்'' என்று, இவ்வாறு இருபத்தைந்து வித்தியாசங்களைக் கூறி முடிவில் காத்தொலிக் சமயமே, அதில் கூறப்பட்ட தெய்வமே, மோக்ஷமே மெய்யென்றும், இந்து சமயம், தெய்வம் அதில் கூறப்பட்ட மோக்ஷம் யாவும் பொய் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

 

இதை யனுப்பிய நண்பர் இந்த நூலுக்கு மறுப்பெழுதி வெளியிட வேண்டுமாய் நம்மை மிகவும் வருந்திக் கேட்டுக்கொள்கிறார். அவ்வாறே செய்வது மிகச் சுலபமான காரியமேயாகும். ஆனால் அப்படிச் செய்வது வீணான பயனற்ற காரியம் என்பதே நமது அபிப்பிராயம். ஆகையால் ஏன் பயனற்ற காரியம் என்பதற்கு மட்டும் இரண்டொரு காரணங்களைக் கூறி அதோடு இதை முடிக்கிறோம். முன்னாடி யொன்று மட்டும் கூறுகிறோம். அதாவது, இவர்கள் பைபிலில் கூறப்படும் தெய்வம், அந்த ஒரே கடவுளாதலால் அது பொய்யென்று நாம் கூறவில்லை. பையில் என்ற நூல் ஏசுகிருஸ்து கூறிய உபதேசங்கள் என்பதாக அவர் சீடர்கள் நால்வரால் தனித்தனி வரையப்பட்ட ஒரு நூல் என்பது தெரிந்த விஷயம். மேலும் அக்காலத்தில் பதுமைகளையே தெய்வமாக ஆராதித்துக் கொண்டிருந்த நாகரீகமற்ற ஜனங்களுக்கு எவ்வளவு புத்திமதிகள் கூறத்தகுமோ அவ்வளவு மட்டும் கூறி, அவர்கள் அந்நிலையினின்றும் ஒருபடியேனும் மேலேறுமாறு வழிகாட்டப்பட்டிருக்கிறது. இனி மேற்கண்ட சிறு புத்த கத்தில் கூறப்பட்ட விஷயங்களைக் கண்டனம் செய்வது வீண் என்பதற்குக் காரணங் கூறுகிறோம்:

 

1. இவர்கள் நம் நூற்களில் கூறியுள்ள விஷயங்களை யாராய்ந்தறியா மலே தவறாக அர்த்தங்கொண்டு அவற்றைக் குற்றமாகக் காட்டிப் பாமரரை மயக்கப் பார்ப்பதே வழக்கம்.

 

திருட்டாந்தமாக - நமது மதம் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் உண்டென்று போதிப்பதாகக் கூறியிருப்பது பெரும் பொய். அதற்கு மாறாக தெய்வம் ஒன்றே என்பதைப்பற்றியும், தெய்வ லக்ஷணத்தைப் பற்றியும் நமது வேதத்தில் கூறியிருப்பது போல் பைபிலில் வீசம்பங்கு கூட கூறப்படவில்லை யென்பதை எளிதில் நிரூபிக்கலாம். மேலுலகமாகிய தேவ லோகத்திலுள்ளவர்களும், சிருட்டியாகிய எழுவகைத் தோற்றத்தில் ஒன்றைச் சேர்ந்தவர்களுமாகிய தேவர் முப்பத்து முக்கோடி என்று கூறப்பட்டிருப்பதை இவ்வாறு தவறாய்க் காட்டுகிறார்கள். இப்படித்தான் இவர்கள் காட்டும் குற்றங்களனைத்தும்.

 

2. நாம் எவ்வளவு சமாதானம் கூறினும், அல்லது அவர்கள் கொள்கைகளிலுள்ள தவறுதல்களை எவ்வளவு நிரூபித்தாலும் அவர்கள் அதை யொப்பமாட்டார்கள். அவர்கள் மனச்சாட்சி ஒப்புக்கொண்டாலும் ''நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே'' என்று சாதித்துப் பழையபடியே தூஷித்துக் கொண்டுதானிருப்பார்கள். ஏனெனில் அப்படி யொப்புக் கொண்டால் அனேகர் பிழைப்புக்கே ஊனம் நேரிடும். திருட்டாந்தமாய் இவர்கள் மதக்கொள்கைகளை நியாயவாயிலாகக் கண்டித்து உண்மையை நிரூபித்துள்ள நூல்களில் சிலவற்றை ஈண்டு கூறுகிறோம்:

 
1. சைவ தூஷண பரிகாரம்

2. சிவநாம விளக்கம்

3.விக்கிரஹ வணக்கம்

4. சிவனுந் தேவனா? வென்னுந் தீயநாவுக்கு ஆப்பு

5. இந்து ஜெய பேரிகை 1 - ம் பாகம்

6. இந்து ஜெய பேரிகை 2 - ம் பாகம்

7. இந்து ஜெய பேரிகை 3 - ம் பாகம்

8. இந்து ஜெய பேரிகை 4 - ம் பாகம்

9. கிறிஸ்தவர் விடைகளின் மறுப்பு

10. விவிலியக் குற்சிதம்

11. விவிலியக் குற்சித கண்டண திக்காரம்

12. வஜ்ஜிர டங்கம்

13. கிறிஸ்துமத திரியேகத்துவ ஆபாசம்

14. ஏசுவை நம்பினால் இருப்படையலாமா?

15. ஏசுக்கிறிஸ்துவுங் கடவுளா!

16 ஏசுக்கிறிஸ்து மனிதனே!

17. மிலேச்சமத நண்டனம்

18. கிறிஸ்தவர் ஞானோதய ஆபாச விளக்கம்

19. கிறிஸ்து மதத்தின் குருட்டு நம்பிக்கை

20.பையில் யாரால் எழுதப்பட்டது?

21.பாதிரிகளுக்கு ஓர் சற்புத்தி

22. ஏகோவாவின் அசங்கியமொழி

23. பழய ஏற்பாட்டின் ஆபாசமும், விபசாரமும்

24. மதுபானமும், கிறிஸ்து மதமும்

25. கிறிஸ்துமத வியாபகமும், கொலைகளும், அநீதிகளும்

26. பைபிலும், உலக சிருஷ்டியின் ஆபாசமும்

27. ஏசுமதசங்கற்ப நிராகரணம் முதலியன.

 

மேற்கண்ட நூல்களில் –

1. பைபிலில் ஆரம்பத்திலேயே கடவுள் மனிதனைப் போல் கைகால் முதலிய அவயவங்களை யுடையவரென்று கூறப்பட்டிருக்கிறது.

 

2. கடவுள் இலக்ஷணம் சரியாய்க் கூறப்பட்டிருக்கவில்லை. ஆன்ம லக்ஷணம் மோக்ஷ லக்ஷணம் கூறப்பட்டிருக்கவில்லை.

3. ஆன்மாவை உள்ளபடி யறியும் மார்க்கம் கூறப்பட்டிருக்கவில்லை.

 

4. ஏசு " உன் விரோதி யுன்னை ஒரு கன்னத்திலடித்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு " என்று வாயால் கூறினும், தம் விரோதிகளை மட்டும் சபித்துக் கடிந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு முரண்படும் விஷயங்கள் அனேகம் உள்ளன.

 

5. கிருஸ்துமதத்தில் சேராதவர்களெல்லாம் என்றும் மீளாத நித்திய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இது கடவுளைக் கருணையற்றவரென்று அறிவிப்பதோடு சுருதியுக்தி அனுபவங்களுக்கும், கடவுள் கருணாநிதி யென்ற உண்மைக்கும் முற்றும் பொருந் தாத விஷயம்.

 

இவ்வாறு நம்மவர் அனேகம் நூல்களை வரைந்திருக்கிறார்கள். ஆயினும் கிருஸ்றவர்கள் கிணற்றுத் தவளை போல் பழைய கந்தனே கந்தன் என்று தங்கள் பாட்டைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலின் அத்தகைய நூல்களுக்கு மறுப்பெழுதுவது பயனற்ற வேலை. அத்தகைய வற்றைப் பொருட்படுத்தாமல் விட்டு, நம்மவர்கள் அவர்களது கட்டுக் கதைகளாலும், மாய மொழிகளாலும் மயங்காவண்ணம் தடுப்பதற்கு முயலவேண்டியதே நாம் செய்யவேண்டிய வேலை. அது நமது கடமையாகவு மிருக்கிறது.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - ஆகஸ்டு ௴