Sunday, September 6, 2020

 

மூவர் தேவாரத் திருமுறைகளின் மகிமை

 

முகவுரை.


 அன்பார்ந்த அறிஞர்களே!

 

உண்மை நாயன்மார்களாகிய மூவர் அருளிச் செய்த தேவாரத்திருமுறைகளின் மகிமைகளை இத்தன்மைத் தென்றறிந்து என் போன்றவர்கள் கூறிமுடிவதரிதென்பதை யான் உணர்வேன். ஆயினும் சென்ற ஆறுமாதகாலமாய் அத்திருமுறைகளை ஆதி முதல் முறையே யான் ஓதி வந்தமையால் அவைகளின் மகிமைகளைக் கூறும் அவா எழுந்தது. ஈசன் றிருவருள் அந்நாயன்மார்களிடம் நிரம்பி யிருத்தலின் அவர்கள் திருவருளே துணையாக்கொண்டு என் சிற்றறிவிற் கெட்டியவளவே ஒரு சிறிது கூறலுற்றேன். இதில் யாதேனும் குற்றங்களிருப்பின் பெரியோர்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.


தேவாரம் என்றல் என்ன?

 

தே + ஆரம் = தேலாரம் என்றும், தேவு + ஆரம் = தேவாரம் என்றும் தேவாரமென்ற தொடர் பிரியும். தே ஓரெழுத்தொரு மொழிப்பதம். தேவு: தேவன் என்ற பதத்தின் சிதைவு; தே தேவு என்பன தெய்வம் தேவன் என்ற பொருளையும் எனைய பொருளையுந் தரும். தெய்வம் முழுமுதற் கடவுளாகிய பரசிவம். சிவமென்றால் நித்தியமங்களம் என்று பொருள். பரசிவம் தித்தமாய் அகண்டமாய் சர்வ வியாபகமாய் உயிர்க்குயிராய் உண்மையறிவானந்த வுருவாய் பூ, பூவின் நிறம், பூவின் மணம்போல எங்கும் நீக்கமற விளங்குவதென வேதாகமங்கள் மொழியும். அவ்விதம் எங்கும் நீக்கமின்றிப் பாலில் நெய்போல் தோன்றாது விளங்கினும் பரங்கருணைத் தடங்கடலாய அருளே திரு மேனியாய் ஆன்மாக்கள் வழிபட்டுய்யும் பொருட்டு திருவாலயங்களினிடத்தும் சிவனடியார்களினிடத்தும் தயிரில் நெய் போல் தோன்றி விளங்கும். ஆனது பற்றியே 'ஆலயந் தொழுவது சாலவும் நன்று என்றார் முது ஞானப் பழமாகிய ஒளவைப் பிராட்டியார். ஆலயந் தொழுவது நன்றென்று மாத்திரங் கூறாது சாலவும் அதாவது மிகவும் நன்றென்று வற்புறுத்திக் கூறியது ஆலயந் தொழுவதால் பாவங்களினீங்கி இகத்தில் நன்மையெலாம் எய்தப் பெற்று பரத்தில் அழிவற்ற முத்தியும் அடையலாம் என்பது பற்றியாம். ஆரம் = மாலை, கோட்டுப் பூ கொடிப்பூவா தியமலர்களால் பலவித மாலைகளைக் கட்டி ஈசன்றிருமேனியிற் சாத்துவது போல் பெயர்ச்சொல் வினைச்சொல்லாதிய சொற்களால் பலவித சொன்மாலைகளையியற்றி மெய்யடியார்களால் சாத்தப்படுவது. ஈசனுக்கு மலர் மாலையினும் சொன்மாலையிற் பிரீதியதிகமாம். இதற்குப் 'பன் மாலைத் திரளிருக்கத் தமையுணர்ந்தோர் பாமாலைக்கே நீதான் பக்ஷமென்று, நன்மாலையா வெடுத்துச் சொன்னார் நல்லோர்'' என்ற தாயுமானார் கூற்றே சாலும்.

2. தேவாரத் திருழறைகளை இயற்றியவர்கள்.

 

தேவாரத் திருமுறைகளை இயற்றியவர்கள் ஆளூடைய பிள்ளையார், ஆளுடைய வரசு, ஆளுடைய நம்பி - முறையே திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் திருவாரூரரெனும் சுந்தரர் ஆகிய மூவருமாவர். இம் மூவர்களில் சம்பந்தர் சுந்தரர் என்னுமிருவரும் அந்தணரும் திருநாவுக்கரசரெனும் அப்பர் வேளாளருமாவர். சம்பந்தரை மூன்று வயதில் சிவபெருமான் இடப்வாகனாரூடராய்க் காட்சியளித்து ஞானப்பால் கொடுத்தாண்டருளினர். அப்பரை முன் சமணசமயத்து தருமசேனரென்று பெயருற்றிருக்குங்கால் அவருக்குச் சூலைநோய் கொடுத்து அது தீராது வருந்தியிருக்கும் போது அவர்தமக்கையார் திலகவதியாரெனும் உத்தமியாரால் ஸ்ரீபஞ்சாக்ஷரம் ஓதிய விபூதியளிப்பித்து முதலிற் சூலை நோய் தீரப்பதிகம் ஓதச்செய்வித்து ஆண்டருளினர். சுந்தரரை அவர் கலியாண காலத்தில் இவன் தம்மடியான் என்று கூறி வந்து தடுத்தாட்கொண்டனர். மூவர்களில் சம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர்; சுந்தரர் காலத்தால் பிற்பட்டவராவர். இம்மூவர்களின் வயது


'' அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரருக்குச்
 செப்பியநா லெட்டினிற் றெய்வீகம் - இப்புவியிற்
 சுந்தார்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்
 கந்தம் பதினா றறி'"


என்ற வெண்பாவினால் அறியத்தகும்.


 3. மூவர் தேவாரங்களை மூன்று பெயரால் மூதறிஞர் மொழிவர். மூவர்களருளிச் செய்த தேவாரங்கள் அருட்பா வென்றும், அடங்கன் முறையென்றும், தமிழ்மறை யென்றும் ஆன்றோர்களால் கூறப்பெற்று வழங்கி வருவதை ஆராய்வோம். மெய்யடியார்களும், கணவனைத் தெய்வமாகத் தொழுது அவன் பணிபுரியும் உத்தமக் கற்புடையாரும் அன்பினால் ஒப்பாவர். மனைவி நாயகன் நாமத்தைக் கேட்டபொழுது தன் வசமிழந்து உடல் புளகங்கொண்டுஉள்ளம் செகிழ்வள்; அவனைக் கண்டு அவனுக்குப் பணியியற்றும் போது மனமுருகி அவனோடொன்றித்து இருவருயிரும் ஒன்றாகி விளங்குவர். அதுபோல் மெய்யடியார்களும் தமதிறைவன் திருநாமத்தைக் கேட்டபோது உரோமாஞ்சிதர்களாய் உடல் புளகித்து மனம் நெகிழ்வர். ஈசன்றிருமுன் சென்று அவனைத் தரிசித்து வணங்கும் போது திருவுருவத்தை உள்ளத்துட் கொண்டு நினைந்துருகித் தம் வசமிழந்து அவனோடொன்றி ஐக்கியமாகிறார்கள். இத்தகைய மெய்யன்பர்களில் தலைசிறந்தவர்களாய் நமது சைவசமயாசாரியர்களாய் ஆலயங்களில் நாம் வழிபடு முறைகளைக் கற்பித்த வழிகாட்டிகளாய் விளங்கிய இம் மூவர்களின் அன்பின் பெருக்கும் ஈசனருளின் பெருக்கும் அன்பு அருள் இன்னதென்றறியாத என்போலிகள் கூறுந்தரமன்றென்று முகவுரையிலுங் கூறியுள்ளேன். இந்நாயன்மார்கள் புண்ணிய பூமியெனப்படும் நம் பரதகண்டத்துள்ள (274) சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான அடியார் குழுவோ டெழுந்தருளித் திருக்கோபுரங்களைக் கண்டபொழுதே புவியில் விழுந்து வணங்கி இருகர மலர்கள் சிரங்குவியத் திருவாலயத்துள் வலம் வந்து, கற்றாவினுள்ளம் போற் கசிந்து எம்பெருமான்றிருவடித் தாமரைகளில் வீழ்ந்து அட்டாங்கமாதி வணக்கம் புரிந்தெழுந்து சிவபரம்பொருளைத் தமதுள்ளத்திற் கொண்டு அழலிடைப்பட்ட மெழுகு போல் என்புருக்வருகி வருகி நினைந்து நினைந்து இருகணீர் பெருகியோடத் தற்போதமகன்று அதாவது நான் எனது என்ற அபிமானச் செயல் நீங்கிச் சிவானந்தப் பெருவாரியிற் றேக்கித்திளைத்து சிவனருள் உள்ளே பெருகிப் பொங்கி வடிந்தாற்போல் இம் மூவர்களின் றிருவாய்களினின்றும் வந்த அருட்பாக்களானமையால் திருவருட்பா எனவும், வேதங்களிற் கூறும் எழுகோடி மந்திரங்களையும் திரட்டி ஏழுமுறைகளால் கூறியிருப்பது கொண்டு அடங்கன் முறை யென்றும், வேதங்கள் கன்மம்பத்தி ஞானம் என மூன்று காண்டங்கள் உடையனவாகி அளவிலாச் சாகைகளோடு ஆன்மாக்களுக்குத் தர்மார்த்தம் முதலிய புருடார்த்தங்களை யடையச் செய்விப்பனவாய் உண்மைப் பரம்பொருளின் இலக்கணங்களையும் அதனையடையச் செய்யும் வழிகளையும் விளக்கும் பிரமாணங்களாயிருப்பது போல் தேவாரத் திருமுறைகளிலும் தூலரூபமாகவும் தத்துவவடிவ சூக்கும ரூபமாகவும் அப்பொருள்களைப் பிரதிவாதித்து ஓதியிருப்பது - கொண்டு தமிழ் வேத மெனவும் ஆன்றோர்களால் மொழியப் பெற்று வழங்கி வருகிறது, இதற்குப் பிரமாணம்


''தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
 மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
 திருவா சகமுந் திருமூலர் சொல்லும்
 ஒருவா சகமென் றுணர்''


 என்ற ஆன்றோர் கூற்றேயாம்.

 
 எம், சிதம்பரதற்றலம் பிள்ளை.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment