Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ ராமேச சந்திர தத்தர்

 

1. பூர்வாங்கம்.

 

பாரதமாதேவிக்குப் பலாபேக்ஷையின்றிப் பாங்குறத் திருத்தொண்டாற்றத் தோன்றிய பாக்கியவான்களான வீரசிம்மங்களுள் பெரும்பான்மையோரின் ஜென்மபூமி வங்காள மேயாகும். அவ்வங்கமாதேவியின் வரபுத்திரரான ஸ்ரீமத் விவேகானந்த மூர்த்திகள் 'ஹிந்துமத' உத்தாரணராய் உலகோருள்ளத்தில் அருள் வெள்ளத்தைப் பாய்ச்சினார். சுரேந்திரநாத் பனர்ஜி, சித்தரஞ்ஜனதாஸர் முதலான சிம்மங்களை என்ற சீருடைப் பூமியும் வங்காளமேயாகும். வங்காளமே கலைமகளின் இருப்பிடம்; அஷ்ட லக்ஷமிகளும் அற்புதவாஸஞ் செய்யு மரங்கம்; தேசாபிமானமுள்ள தியாகமூர்த்திகளின் திவ்ய அவதாரஸ்தலம். இததகைய சிறப்புவாய்ந்த வங்கமாநாட்டிற்குத் தலைநகரான கல்கத்தா வென்னுங் காளிகட்டத்தில் 'ரம்பாகான்' என்னும் பேட்டை யொன்றுண்டு. பெரும்பான்மையும் 'காயஸ்தர்' என்னும் கணக்காயச் சாதியார்களே அப்பாகத்தின் வாசிகளாவார். அவர்களுள், தத்தர் குலஉத்தம மரபினர் மிகவும் படித்தவர்களா யிருந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நீலமணி தத்தர் என்பார் அக்காயஸ்தகுல திலகமா யிலங்கினார். அவருடைய இளைய சகோதரரான ரஸமய தத்தர் வடமொழியில் பாணினிக்கு நிகரானவராய் கல்கத்தா 'சமஸ்கிருத காலேஜின் தலைமையாசிரியர் (பிரின் விபல்) பதவியை வகித்திருந்தார். இவருக்கு முன் எந்த இந்தியரும் இத்தகைய மேலான பதவியை வகித்ததில்லை. இங்ஙனம் சிறிதுகாலம் வடமொழித் தொண்டாற்றிய பின்னர் அவர் கல்கத்தா நீதிபதியாக ஆக்கப் பெற்றார். அதற்குப்பின் லார்ட் வில்யம் பெண்டிங் துரைமகனார் இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த காலத்தில், அவருடைய பெருங்கருணையால் இந்தியர்கட்கு உயர்ந்த உத்யோகங்கள் அளிக்கப் பெற வேண்டுமென்ற திட்ட மேற்பட்டது. அது அனுஷ்டானத்திற்கு வந்ததன் பலனாய் நீலமணிதத்தரின் புதல்வரான ஈசான சந்திர தத்தர் முதல் முதலாக 'டெப்யூடி கலெக்ட'' ராக நியமிக்கப் பெற்றார். இவ்வீசான சந்திரருக்கு கி. பி.1848 - ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 - ம் தேதி ஸ்ரீராமேச சந்திர தத்தர் திருவவதரித்தார்.

 

2. இளமைப் பருவம்.

 

ஈசான சந்திர தத்தர் அடிக்கடி தம் உத்தியோக நிமித்தம் வங்காளத்தின் உள்நாட்டுப் பாகங்களில் வசிக்க நேர்ந்தமையால், ராமேச சந்திரரின் இளமைப் பருவமும் வங்காள நாட்டின் வர்ணனைக் கேற்ற பாகங்களிற் கழிந்தது. பிறகு, ராமேச சந்திரதத்தர் தமது பெற்றோர்கள் தேகவியோகமாக, தமது சிறிய தந்தையாகிய சசி சந்திய தத்தரின் ஆதரவிலிருந்து கல்வி பயின்று வந்தார். சசிசந்திரர் வடமொழியில் வல்லுநராயிருந்ததோடு ஆங்கில இலக்கியத்தில் ஈடற்ற ஆர்வமுடையாராதலின் அவருடைய ஆதரணையிலிருந்த ராமேசருக்கும் வாலிபமுதல் அம்மொழியிடம் அளவற்ற பிரியம் ஏற்பட்டிருந்தது. ராமேசர் 1864 - ல் பிரவேச பரீக்ஷையில் அவர் படித்து வந்த வித்யாசாலைக்கே முதல் தர மாணவராய்த் தேறினார். பிறகு 1866 - ல் அப்பரீக்ஷையில் அச்சர்வகலாசாலைக்கே இரண்டாவது மாணவராய்த் தேறினார். தேறவே, எல்லோரும் செய்வது போலத் தாமும் சீமைக்குச் சென்று ஐ. வி. எஸ். பரீக்ஷை கொடுக்கவேண்டுமென்ற எண்ணம் அவருக் கெழுந்தது. இவ்விஷயம் அவருடைய போஷகர் செவிப்பட்டதும், அவர் சீற்றங் கொண்டு கப்பலேறிச் செல்வது கூடாதென்று ராமேசரைத் தடுத்து விட்டார். ராமேசரின் ஸ்தூல சரீரம் தடுக்கப்பட்ட போதிலும், சூக்கும சரீரத்தின் அவா அடங்கிற்றில்லை. பெரியோரை எடுத்தெறிந்து பேசி தாயையடக்கி மகள் விபசாரஞ் செய்வதுபோல், நடந்து கொள்ளவும் அக்குணசாலியின் மனம் இடந்தரவில்லை. அங்கும் அவா! இங்கும் பெரியார் மொழிகளைத் தட்ட மனமின்மை! - இப்படி அவர் தயங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், தமது நண்பர்களான ஸ்ரீயுத விகாரிலால் குப்தா அவர்களும், ஸ்ரீயுத சுரேந்திரநாத் பனர்ஜி யவர்களும் இங்கிலாந்துக்கு மேற்படி பரீக்ஷையின் நிமித்தம் புறப்பட நிச்சயித்திருந்தமை கண்டு, தாமுஞ் செல்வதென்றே உறுதி பூண்டார். ஸ்ரீ விகாரிலாலரும் ராமேசரும் தமது போஷகர்களின் அனுமதி பெறாமல், அவர்களறியா வண்ணம் இரவோடிரவாகப் புறப்பட்டு விட்டார்கள். ஸ்ரீ சுரேந்திரநாத் பனர்ஜி மட்டும் தமது தந்தையிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு பிரயாணமானார். ஆக மூவரும் 1868 - ம் மார்ச்சு 3 - ம். இங்கிலாந்துக் கேகுவாராயினர். இம்மூவருடைய நோக்கமும் ஐ. வி. எஸ். பரீக்ஷையில் தேர்ச்சியடைய வேண்டு மென்பதே.


3. இங்கிலாந்து வாசம்.

 

இம்மூவருடைய மனோபீஷ்டமும் நிறைவேறினவாயினும், ராமேசசர்திரரும், விகாரிலால் பாபுவும் உத்தியோகத்திலேயே தமது வாழ்வின் பெரும்பாகத்தைக் கழித்தனர்; சுரேந்திர நாதர், வங்கமாதேவியின் வரப்பிரசாதியாய் விரையில் உத்தியோகத்தினின்றும் விலகி தேசசேவையின் முன்னணியில் நிற்கும் பாக்கியத்தை யடைந்தார். 1889 - ம் உருடம் நடந்த இந்தியன்சி வில் சர்விஸ் பரீக்ஷையில் முந்நூருக்கு மேற்பட்ட ஆங்கிலேய மாணவர்கள் போட்டியினிடையே இம்மூவரும் தேறினார்கள். அதில் ராமேசர் மூன்றாவதாகத் தேர்ச்சி பெற்றார்; ஆங்கில இலக்கியத் தேர்வில் அவர் ஆங்கிலேய மாணவர்களனை வரையும் பின்னடையச் செய்து முதன்மையாக விளங்கினார்.

 

பரீக்ஷை கொடுத்தானதும் ராமேசதத்தர் தம்மிரு தோழர்களுடன் உல்லாசமாக ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றிப் பார்க்கப் பிரயாணப்பட்டார். முதலில் அவர்கள் 1871 - ம் ஆகஸ்டு மாதத்தில் பிரஞ்சுதேசத்தின் தலைநகரான பாரினிலழகிய பாரிஸ் பட்டணத்தை யெய்தினர். அப்பொழுதுதான் 1870 - 71 - ம் ஆண்டின் பிரஞ்சு யுத்தம் முடிவடைந்திருந்தது. ஆனாலும், பிரான்ஸ் தேசத்தில் அமைதியும் சமாதானமும் அவ்வமயம் ஏற்பட்டிருக்கவில்லை. 'கம்யூனலிஸ்ட்' க்ஷியார் அப்பொழுது, நகரத்தினை யலங்கரித்து அழகா யமைந்திருந்த மனோகர மாளிகைகளை யெல்லாம் தரைமட்டமாக இடித்துத் தகர்த்து அட்டூழியஞ் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை யுத்தவீரர்கள் வெடிகுண்டுப் பிரயோகஞ்செய்து வீழ்த்திக் கொண்டு மிருந்தார்கள். இப்படிப் பாரிஸ் நகரிலே பெரும் அமளியாயிருக்குஞ் சமயத்தில் ராமேசர் தமது நண்பர்களுடன், பாரிஸிலிருந்து 'மார்செலில்ஸ்' என்னும் மத்ய தரைக் கடல் முனையைப் பார்க்கச் சென்றார். அப்பொழுது பிரஞ்சு வீரர்கள், இவர்களை கம்யூனலிஸ்ட் கட்சியாருக்கு அனுதாபங்காட்ட வந்தவர்களென் றையுற்றுச் சிறைப்பிடித்தார்கள். இங்கனம் மூவரும் ஓரிரவு சிறைக் கோட்டத்திருந்து, பின்பு தாம் சந்தேக பாத்திரர்களல்ல ரென்பதைத் தங்கள் 'பாஸ்போர்ட்' டைக் கொண்டு நிரூபித்து, விடுதலை யடைந்தார்கள். இவர்கள் இன்னுஞ் சில தினங்கட்கு முன் பாரிஸ் நகரில் பிடிபட்டிருந்திருப்பார்களேயாயின் அந்நகரக் கல்லறையில் விளங்க நேர்ந்திருக்கும்.


4. உத்தியோக மாட்சிமை.

 

பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்ப 1871 - ல் வங்காளத்தில் ஸிவில் சர்விஸில் நியமிக்கப் பெற்று ஓராண்டு வரை வங்காளத்தின் வெவ்வேறு ஜில்லாக்களில் வேலை பார்த்து வந்தார். அப்பால் 1874 - ல் நதீயா என்னும் நவத்வீப ஜில்லாவில் கொடிய பஞ்சம் ஏற்பட ராமேசர் பஞ்ச நிவாரண காரியத்தில் நியமிக்கப்பட்டார். அதுவே தமக்குக் கிடைத்தபாக்கிய மென்று அவர் மக்களின் வறுமையைப் போக்கப் பெரிதும் பாடுபட்டு வந்தார். இப்படியிருக்கையில் 1876 - ம் வருஷத்தில் வீசிய பெரும் புயற்காற்றில் வங்காளத்தில் கீழ்வட பாகங்கட்குப் பெருத்த நஷ்டமேற்பட்டது; பாகர்கஞ்சத்திற்குத் தெற்கிலுள்ள ஷாஹராஜபூர் தரை மட்டமாகிப் பிணக்காடாய் வீட்டது; நவத்வீபங்களிலும் பிணக்குவியல்களே காணப்பட்டன; தெருக்களிலும் சாலைகளிலும், கழனிகளிலும் சவங்களே தென்பட்டன; குளங்குட்டைகளிலும் கிணறுகளிலும் நதிகளிலும் பிரேதங்களே மிதக்கலாயின ;கீழ் வங்காள மெங்கும் இவ்வளவவ்வள வென்று எண்ணுவதற் கடங்காப் பிரேதங்கள் நாற்றம் வீசின; எஞ்சிய ஜனங்கள் இருக்க நிழலற்று உண்ண உணவின்றிப் பரிதபிக்கலாயினர். இவ்வமயத்தில் ஷாஹராஜபூரில் ராமேசதத்தர் அமைதியை யுண்டுபண்ணி, ஜனங்களின் துயரத்தைத் தள்ளி, தேச மகாஜனங்களாலும் துரைத்தனத்தாராலும் புகழப்பெற்றார். இன்னணம் தத்தர் பதினோராண்டுகள் சிறக்க சிவில்சர் விவில் உத்தியோகம் பார்த்தார். இவருடைய திறமையை மெச்சி அரசாங்கத்தார் இவரை இரண்டொரு முறை தாக்காலீக ஜில்லா மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்த்து வரும்படி நியமித்தார்கள். அதன்பின், அவர் கொஞ்சகாலம் பாரிசாலில் மாஜிஸ்டிரேட் வேலை பார்த்து வந்தார். எப்பொழுதும் பாரிசாலில் கலவரமும் கொலையும் அதிகரித்து அமைதியற்றிருக்கும். அதனால் ராஜாங்கத்தாருக்கு வங்காளத்தின் அப்பாகத்தைப் பொறுத்த அளவில் நல்ல அபிப்பிராயமில்லா திருந்தது. அப்பொழுது ராஜரீக நிபுணத்துவமும், மக்களின் உண்மையான குறைகளை உட்புகுந்தறிந்து உபசாந்தி செய்யும் உரமும் வாய்ந்த நமது ராமேசரை அரசாங்கத்தார் விஹார நாட்டின் தலைவராக்கினார்கள். அவர் தமக்குக் கீழ் வேலைபார்க்கும் போலீஸ் இலாகா அதிகாரிகள் நீதிபதிகள் வைத்திய இலாகாத்தலைவர் முதலான உயரிய பதவிகளை வகிக்கும் ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களை யெல்லாம் அனுசரித்துக் கொண்டு திறமையுடன் நிர்வகித்து, அப்பாகத்தில் அமைதி நிலவச் செய்தார். அவரது நிர்வாக வல்லமையைப் பற்றி துரைத்தனத்தார் தமது ராஜாங்கப் பத்திரிகை (Gazette) யில் புகழ்ந்திருந்தனர்.

 

5. கௌரவ சம்பிரமங்கள்.

 

அப்பொழுது ராஜப்பிரதிநிதியாய், இந்தியாவிடத்தில் அந்தரங்க அனுதாபமுடையவராயிருந்த அப்பன் - லார்ட் ரிப்பன் அவர்கள், ராமேசரை ஒரு முறை அழைத்து பேட்டி கொடுத்து " நான் எனது ஜென்ம பூமிக்கேகுமுன் தம்மை ஒருமுறை பார்க்கவேண்டு மென்ற அவாவினால் அழைத்தேன்; தமது பரிபாலன சக்தியை சீமையிலுள்ள ராஜரீக நிபுணர்கள் அறிந்து, இந்தியர்களுக்கு நிர்வாக சாமார்த்திய முண்டோ? என்று தங்களுக்கிருந்த சம்சயம் நிவர்த்தியாயிற்றென்று எனக்கு வரைந்துள்ளார்கள் '' என்று மெச்சுப் பேச்சுப்பேசி யனுப்பினார். மற்றும் இவர் விகார நாட்டுத் தலைவராயிலங்கிய நாட்களில் எவ்வாறு ராஜ்ய பரிபாலனஞ் செய்ய வேண்டு மென்பதை ஓர் நிகழ்ச்சியினின்றும் குறிப்பாக உணர்த்தினமையால் அரசாங்கத்தார் அவரை ராஜப்பிரதிநிதியின் சட்ட நிரூபணசபையில் அங்கத்தினராயமரச் செய்தார்கள். வல்லவனுக்குப் புல்லுமாயுதமல்லவா? இதுவே தாயன்பைத் தனையன் வெளியிடத்தக்க தருணமென்றோர்ந்த ராமேசர் -வங்காள வேளாண்மைத் தொழிலாளரின் கஷ்ட நிஷ்டூரங்களை இளமை முதலுணர்ந்து அது சம்பந்தமான நூல்களை வரைந்து கொண்டிருந்த அவர் குடிமுறைமைச் சீர்திருத்த சட்டத்தின் பல அம்சங்களைப் புதுக்கப் பாடுபட்டு வந்தார். இதனிடையே அவர் சந்தர்ப்பம் வாய்த்த பொழுது இங்கிலாந்துக்கு இரண்டொரு தடவை சென்றார். அப்பால் 1892 - ம் ஆண்டில் அவருக்கு 'இந்திய சம்ராட நேசன் (Commander of the Indian Empire) என்ற பட்டமளிக்கப்பட்டது. பின்னர், அவர் 1897 - ல் தமது பதவியினின்றும் நீங்கி உபகாரச் சம்பளம் பெற்றுக் கொண்டார். இதற் கிடையில் இந்திய ஜாதீய மகா நாடொன்று கல்கத்தாவில் நடைபெற, அதற்கு ராமேசர் தலைமை வகித்தார். இங்ஙனம், அவர் அரசாங்க பதவியிலிருந்தும் விலகியமை யறிந்த பரோடா மன்னர் அவரை அழைத்து அமைச்சராக அமர்த்திக்கொண்டார். அதைவகித்து, மன்னரும் மக்களும் மகிழப் பரிபாலித்து வருங்கால், இடையில், ராஜரீகப் பிரிவினை ஆலோசனைக் கூட்டத்தில் (Decentralisation Committee) பங்காளியாயிருந்து உழைக்கக் கொஞ்சகாலம் பதவியை விட்டு நீங்கியிருந்து மறுபடியும் ஏற்றுக் கொண்டு பரிபாலித்து வந்தார்.

 

6. பாஷா ஞானம்.

 

ராமேச சந்திர தத்தர் சமிஸ்கிருத பாஷா நிபுணரென்பதை நாம் முன்னமே குறிப்பிட்டுள்ளோம்; அவர் அம்மொழி நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து கற்றவர். வங்கமொழியின் உயர்வை எடுத்தோதி, வங்காளிகளின் உள்ளமாகிய கழனியில் பாஷாபிமானத்தைப் பயிர் செய்தவரும் அவரேயாவர். ஆங்கில இலக்கியங்களில் அவருக்குச் சிறந்த பாண்டித்யமுண்டு. சரித்திர சாஸ்திர ஆராய்ச்சிகளில் அவரது வன்மை உலக மறிந்தது. சமயப்பற்றும் சதாசாரமும் அவரிடத்தில் குடி கொண்டிருந்தன. அவர் 1893 - ம் வருடத்தில் வங்க சாஹித்ய சங்க மொன்றை ஸ்தாபித்து பாஷா சீர்திருத்தங்கள் செய்ததன்றி கலாசாலைகளில் வங்க மொழியை உயர்ந்த வகுப்பு மாணவர்கட்குக் கட்டாய பாடமாக வைக்கச் செய்தார். மேலும் அவர் உங்க பாஷையில் 'ஆக்ராநகரத்து சேவினிராணி' என்ற ஓர் நவீன கதையையு மெழுதினார். ஆங்கிலத்தில் 'தென்னைத் தாடகம், விமலா' என்னும் நவீனங்களும் அவரால் வரையப் பெற்றனவே. அவர் தமதாயுட்காலத்திற் செய்த விசேஷ காரியங்களில் ரிக் வேதத்தை வங்கபாஷையில் மொழி பெயர்த்தது மொன்றாகும். வடமொழி நூல்களை ஆதாரமாகக் கொண்டு, பொய்யான சரித்திர பாகங்களை நீக்கி ரஸமான சரித்திராம்சங்களை இனிமைப்பட விளக்கி, சத்யமான சரித்திரத்தை வெளியிடவேண்டு மென்று சில அன்பர்கள் அவருக்கிருந்த ஆர்வத்தைத் தூண்ட, அவர் 'பூர்வீக ஹிந்துக்களின் நாகரிகம் என்ற விதானமுள்ள சரித்திர நூலை எழுதினார். அந்நூல் இன்றளவும் தமிழ்பயிலத் தொடங்கும் மாணவர்கட்குத் தலை நின்று தவும் நன்னூல் போல, சரித்திர மாணவர்களின் முதல் நூலாக விளங்குகின்றது. மற்றும், அவர் வரைந்து போந்த 'கர்ஸன் பிரபுவிற்குப் பகிரங்க கடிதங்கள்,'' பூர்வகால ஹிந்துக்களுடைய சரிதையின் கால நிலை, ''விக்டோரியா மகாராணியாரின் ராஜ்யபரிபாலனம்' ஆகிய நூல்கள் அவரது விசாலமான மனோபாவத்தையும், அதிநுட்ப ஆராய்ச்சி வன்மையையும் காட்டி நிற்கின்றன. 'இந்திய குடிகளின் நிர்வாக சரித்திர' மென்று அவர் வெளியிட்ட நூல் அவருடைய சர்வஜன அன்பையும், அனுதாபத்தையும் விளக்கப் போதிய சான்றாயுள்ளது. இன்னும்அவர் ஸ்ரீமத் இராமாயண மகாபாரத காவியங்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்தில் இசைநோக்குடன் மொழி பெயர்த்துள்ளார். இவை ஜெகப்பிரியர் கவன சக்தியையும் அடக்கி மேலெழுந்தன்மையன.


7. சம்பூர்ணம்.

 

அந்தோ! எத்துணை மேதாவியா யிருந்தாலுமென்ன! துஞ்சினாரென்றெடுத்துத் தூற்றப்பட்டா பல்லால் எஞ்சினார் இவ்வுலகத்தி லில்லையன்றோ? எவராயிருந்தாற்றான் எனக்கென்ன? அவர்களைக் கவர்ந்து செல்வேன்'' என்று கால மறிந்து உயிரைக் கோள் இழைக்கும் காரணத்தில் 'காலன் எனும் அரிய காரணப் பெயரைச் சாலப்படைத்த இயமன் வந்து விடுகிறானன்றோ? வங்க நாட்டின் வரபுத்ரராய் அவதரித்த இப்பெரியாரையும் அக்கொடும்பாவி 1909 - ம் வருடம் நவம்பர் மாதம் 31 - தேதி செவ்வாய்க்கிழமையன்று அழைத்துச் சென்று விட்டான். ஆகா! தம் நாட்டு மக்களிடத்தில்அவர் கொண்ட தயை என்ன! ராஜாங்க பதவிகளை அவர் நிர்வகித்த திறமையென்ன?' அமரர் அன்று அமுதமுண்டார்; இன்று நாமுண்டோம்' என்றனை வரும் புகழ்ந்து கொண்டாடிய மதுரமான சொற் பொழிவுகளியற்றும் அவர் சொகுசுதான் என்ன! ரிக் வேதத்தை வங்காளியில் மொழி பெயர்த்த அவர் பாஷாபிமான மென்ன! ஆங்கில இலக்கிய நூல்கள் பலவற்றை ஆக்கித்தந்த அவரது அருளென்ன! கர்மயோகியைப் போல் தமது கடமைகளினின்றும் வழுவாத கம்பீரமென்ன! வாழ்க்கையின் எந்தத் துறையிலும் ஏற்றத்தாழ்வின்றி அனைத்திலும் அழியாப் புகழெய்திய அவர் ஏற்றமென்ன! அவருடைய வாழ்க்கையின் யோக்கியதாம்ஸங்களில் எதைத்தான் நாம் பூரணமாகப் புகழவல்லோம். அவருடைய கர்ம வாழ்க்கையின் பிரகாசமான ஞாபகம், துருவ நட்சத்திரத்தைப் போல, நமது சத்ய வாழ்வினுக்குச் சரியான காட்டியாய் நின்று நிலவுவதாக!

ஸ்ரீ லக்ஷிமீகாந்தன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment