Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ வேமன சுவாமிகள் பாடல்


 

குறிப்பு: -ஸ்ரீ வேமன சுவாமிகளென்னும் பெரியார் ஆச்திரகானவை தேசத்தில் சில நூற்றாண்டுகட்கு முன்னர் வசித்து வந்த ஓர் மகான். இவர் ஆந்திர பாஷையிலருளிச் செய்த பாடல்கள் ஆயிரக்கணக்கானவை அப்பாஷையறிந்தோரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. சாதி சமய வேற்றுமை முதலிய மூடக் கொள்கைகளை இவர் வெகு அழுத்தமாகக் கண்டிக்கிறார். இப்பாடல்களினருமையைக் கண்டு ஆங்கிலேயரும் தம் பாஷையில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஆகவே, தமிழுலகும் அவற்றின் பயனை நுகர்தல் வேண்டுமென்னு மாவல் எம்மைத்தூண்டியதால் சில பெரியோர்களின் கட்டளைக் கிணங்கி அவற்றைத் தமிழில் வெண்பாக்களாக வெழுதி வெளியிடத் துணிந்தோம். அன்பர்கள் ஊன்றி வாசித்துப் பயனுறக் கோருகிறோம்.

 

(1)    முடி சூடி மண்ணாள முன்னியநன் னாளில்

சடைசூடிக் கானுற்றான் தாசரதி யாதலால்
சிந்தித்தல் நாமொழியத் தெய்வசித் தம்வேறே
சந்ததமு மாகும்வே மா.

 

(க-து) அயோத்தியா நகரை யாசாண்ட தசரதச் சக்கரவர்த்தி தன்னருமந்த மைந்தனாகிய ஸ்ரீராமச் சந்திரப் பெருமானுக்கு மகுடாபிடேகம் செய்வதற்கென்று நியமித்த நல்லோரையில் சீதாபதி மணிமுடி தரியாது சடைமுடியும் மரவுரியுந் தரித்துக் கானகமேகினான். ஆதலால், எப்பொழுதும் எல்லாக் காரியங்களும் தேவசித்தத்தின்படி நிறைவேறுமேயன்றி, நாம் ஒன்றை யெண்ணுவதாலும் முயல்வதாலும் ஒன்றும் பெறுவதில்லை, "நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்.''


ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி யதுவரினும் வந்தெய்து - மொன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளு மீசன் செயல்

 

என்று அவ்வைப் பிராட்டியார் பாடி யுள்ளதையும் நோக்குக.

 

(2)     பொல்லாங்கு ளேசெய்து பொற்பாகத் தாமிக்க

நல்லாரைப் போலே நடிப்பார் புறத்திலே
தேசமறி யாவிடினும் தெய்வ மறியாதோ?
மாசிலபி சாமவே மா.


(அரும்பதவுரை) பொற்பு=அழகு.

 

(க-து) உலகிற் பிறரறியாதபடி இரகசியமாகப் பல தீச்செயல்களைச் செய்து கொண்டே வெளிக்கு மெத்த உத்தமர்கள் போல் நடித்து யாவரையும் வஞ்சிப்பார்கள். ஒருகால் இவர்களது கூடா நெறியை உலகமறியாதிருக்கலாம். ஆனால், சர்வவியாபியாகிய பகவானுமா அறியமாட்டார்? ஆகவே, 'ஒருவரும் அறியா' ரெனக் கரவடமாகத் தீத்தொழில் செய்யாதிருத்தல் அறிவுடைமையாம்


வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.

 

என்னும் செய்யுளின் கருத்தை இதனோடு இயைக்கை.

 

(3)    ஊர்க்கேணி மொண்ட வுதகத்திற் கோர்பாத

தீர்த்தமெனப் பேரிட்டுச் செய்வார் பிரமைமிக
பாததீர்த்த மென்றதாற் பாங்குடனுண் டாம்பயனென்?

நீதமுட னோதுவே மா.


(அ-ரை) கேணி =கிணறு-உதகம் =ஜலம். பிரமை=மயக்கு.

 

(க-து) உலகிற் சிலர் பாமரமக்களை ஏமாற்றும் பொருட்டுக் கிணற்று நீரைக் கொணர்ந்து அதற்கு 'சுவாமி பாத தீர்த்தம்' என்றோர் பேரிட்டுக் கொடுத்துப் பணம் பறிப்பர். அவர்களு மதனை உண்மையென நம்பிக் குடிப்பர். கிணற்று நீரைச் சுவாமி பாத தீர்த்த மென்றெண்ணிக் குடிப்பதனால் உண்டாம் பயன் தான் யாதோ?

 

(4)    நற்குணவான் கல்வி நகத்தளவிற் றாயினும்
வெற்பாகு மன்னான் விழுமியதோர் பண்பினால்
குன்றன்ன வித்தை குணவீன னுக்காமோ
என்றுமிப் பூவில்வே மா.

 

(அ-ரை) வெற்பு = மலை. விழுமியது =சிறந்தது. பண்பு=குணம்.

 

(க-து) நல்ல குணவான் கற்ற கல்வி நகத்தள வென்னுமாறு சொற்பமாயினும், அவனது சிறந்த குணத்தால் மலைபோலக் காணப்படும். குணவீனன் மலைபோல மிகுந்த கல்வி கற்பினும், அது பெருமை குன்றி ஒன்று மில்லாதே போய்விடும்.

 

(5)    அரிதனக்கு வாய்த்தனளா லந்தப்பூ மாது

அரனுக்கு வாய்த்ததே ஆலால மீதாயின்
ஏவற்கே தாகுமோ ஏவனறி வானுண்மை
மேவி நீ கூறுவே மா.


(அ-ரை) பூமாது = இலக்குமி. ஆலாலம் = லிஷம்

 

(க-து) அரியும் அரனும் சமமானவரேயாயினும் திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் அரிக்கு இலக்குமி கிடைத்தாள்; அரனுக்கு விஷம் கிடைத்தது. இதனுண்மையை யாராயுமிடத்து, மனிதப் பிரயத்தினத்தினால் பயன் சிறிது முண்டாதலில்லை. யார்க்கு எது பிராப்த மாகுமோ யாரறிவார்கள்?

 

(6)    அப்பா பசியென் றகம்வாடிக் கூவினும்
இப்பாரி லோர்பிடிசோ றீயான் பரதேசிக்
மீவான் பரத்தைக் குவப்புடனே
தப்பாம லென்றும்வே மா.

 

(க-து) இவ்வுலகத்தில் மூடர் பலர் 'அப்பா! பசிக்கிறது' என்று கூவிக்காண்டு, அகமும் முகமும் வாடிவரும் பரதேசிகளுக்கு மனமுவந்து ஓர் பிடி சோறும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு லோபிகளா யுள்ளவர்களே தாசிகளுக்கும் வேசிகளுக்கும் அவர்கள் வேண்டும் பொருள்களனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் விருப்பத்துட னீவர். இவர்கள் மடமைதானென்னே!

 

(7)    சூத்திரர்கள் தாழ்ந்தோ ரெனக்கூறித் தூஷிக்கும்
பித்தப் புலைஞரினும் பேசிலிழிந் தோரில்லை
வீந்தபின் னிப்பதகர் மீளா நாகடைவர்
சாந்தவபி சாமவே மா.


(அ-ரை) வீந்தபின்=இறந்தபின். பதகர்=பாவிகள்.

 

(க-து) சூத்திர ரென்னும் ஜாதியார் இழிவான ஜாதியார் என்று ஒரு சாரார் சொல்லி அவர்களை இழிவாப் பேசுவார்கள். ஆராயுமிடத்து இவ்வாறு ஜாதிபேதங் கற்பித்துக்கொண்டு பிறரைத் தாழ்ந்த ஜாதியாரெனக்கூறித் திரியும் இவர்கள் புலையரினும் கீழ்ப்பட்ட புலையராவர். இவர்கள் இறந்த பின்னர் கொடிய நரகத்தில் வீழ்ந்து துன்புறத் தவறார்.

(8)    வெற்புமலை யென்றும் வியன்பாண்டம் சட்டியென்றும்
உப்பே லவணமென் றோதினுமொன் றாகலின்
பாஷை பலவாம் பரம்பொருளொன் றல்லவோ?
மாசிலபி சாமவே மா.


 (அ-ரை) வெற்பு = மலை.

 

(க-து) ஒரு பொருள் பல பெயர்களா லழைக்கப்படும். உதாரணமாக:
மலையை வெற்பு என்றும் அசலம் என்றும் ஓங்கல் என்றும் பல பெயர்களாலும், மட்பாண்டத்தைச் சட்டி என்றும் பானை என்றும் பல பெயர்களாலும், உப்பை லவணம் முதலிய பல பெயர்களாலும் அழைப்பர். இவ்வாறே வெவ்வேறு பாஷைகளாலும் வெவ்வேறு பெயரிட்டழைப்பர். பாஷையும் பதங்களும் வெவ்வேறாக விருப்பினும் பொருளொன்றே யன்றி பலவன்று. அப்படியே பல பெயர்களால் அழைக்கப்படினும் கடவுள் ஒருவரே யென்றறிந்து ஒழுகுதல் வேண்டும்.

 

(9)    இத்தனைகு லத்துள்ளு மெக்குலம் முக்கியம்
வித்தை யுடையோர்தா மேற்குலத்தோ ராவரே
வித்தையிலா செக்குலத்து மேவினென் கீழாங்கு
லத்தவரே யாவர்வே மா.


(அ-ரை) வித்தை = ஞானம்.

 

(க-து) எத்தனையோ ஜாதிகள் கணக்கற்றுக் காணக் கிடக்கின்றன. ஒவ்வொரு ஜாதியினரும் தத்தம் குலமே சிறந்ததெனக் கூறுவர். பெரும் மூடத்தனமே யாகும். ஞானமுடையவ னெவனோ அவனே உயர் குலத்தோனாவன், மேலானதாகக் கருதப்படும் குலத்துப் பிறந்தோனேனும் ஞானமில்லாதன் இழி குலத்தவனே யாவன். ஆகையால் ஜாதியால் உயர் வாக வேண்டுமென விரும்புவோர் எப்பாடு பட்டேனும் ஞானத்தைச் சம்பாதிக்கக் கடவர்.


கல்லா வொருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பார்
நாற்பாற் குலத்தில் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப்பவனே.


என்னும் செய்யுள்களின் கருத்தை ஒருவாறு தழுவிய திப் பாடல்.

 

(10)   அஞ்ஞான மேசூத்திரத்தன்மை யாமெனவும்
சுஞ்ஞான மேபிரம் மென்று மறை சொல்லுங்காண்
அஞ்ஞான நீக்கிவான் மீகியன் றந்தணனாம்
சுஞ்ஞானி யாயினன்வே மா.

(க-து) அஞ்ஞானமே சூத்திரத் தன்மை யென்றும் ஞானமே பிராஹ்
மணத் தனமை யென்றும் சுருதிகள் அறுதியிட்டுரைப்பதைப்பார். முற்காலத்தில் வேடனாகிய வான்மீகி பென்பவன் அஞ்ஞானத்தை யகற்றி மெய்ஞ்ஞான மெய்தி அந்தணனாகவில்லையா. ஆகவே, ஞானமில்லாதவனே சூத்திரன்; ஞானியே பிராஹ்மணன் என்றறிந்து கொள்.

 

(11)   காக்க கணவன் மனைவியை யெக்காலும்
காக்க வகையிலான் சாதலே நன்மையாம்
காப்பிலா ளில்வாழ்க்கை காணின் நகையாகும்
சீர்ப்படா தென்றுவே மா.

 

(க-து) கணவன் தன் மனைவியை யெப்போதும் அடக்கிக் காத்தல் வேண்டும். அவ்வாறு அடக்கியாளத் திறமை யில்லாதவன் பழிச்சொற்கள் செவிப்படு முன்னர் உயிர் துறத்தல் வேண்டும். அடக்கியாளப் படாதவள் செய்யும் குடித்தனம் நகைப்பிற் கிடமாவதோடு சீர் கெட்டழியும்.

 

(12)   கோபத்தி னால் நரக கூபமே சித்திக்கும்
கோபத்தி னாலே குணங்களெல் லாமழியும்
கோபத்தி னால்வாழ்க்கை குன்றியே மாயுமே
பாபவி நாசவே மா.

 

(க-து) கோபமானது தன்னையுடையானை நரகக் குழியில் சேர்க்கும்; கோபத்தினால் ஒருவனது, நற்குணங்களெல்லாம் நசிக்கும்; கோபத்தினால் வாழ்க்கையும் தாழ்ச்சி யுற்றழியும்.


கோபமே பிறவியைக் கொடுக்குங் கொள்கையாம்
கோபமே யறிவினைக் குறைக்குங் குட்ட நோய்
கோபமே தாயையும் கொல்லும் திண்படை
கோபமே தவத்தினைக் குலைக்கும் பேயரோ,
தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.


என்றார் பிறரும்.

 

(13)   எத்தனையோ தேசம்பார்த் தெப்பாடு பட்டாலும்
தத்தமதிர்ஷ் டந்தத்தம் பின்னால் திரியுமே
பூமி புதிதன்றிப் போக்தா புதியனோ
நீமகிழ்ந் தோதுவே மா


(அ-ரை) போக்தா= அனுபவிப்போன்.

 

(க-து) சிலர், 'இவ்விடம் அனுகூல மான தாயில்லை; வேறிடத்திற்குப் போகவேண்டும்' என்று எத்தனையோ தேசங்களில் திரிந்து எவ்வளவோ கஷ்டப்படுவர். எத்தனை தேசங்கள் சுற்றினாலும் அவரவர் அதிருஷ்டமும் பின் தொடர்ந்து செல்லா தொழியாது. சுற்றித் திரிந்து பார்க்கும் இடங்கள் புதியனவாகுமே யன்றி அவற்றைப் பார்ப்போன் புதியனல்லவே. ஆகவே, அவ்வாறு திரிவதனால் புதிதாக ஒரு அதிருஷ்டம் அங்கு அகப்படப் போவதில்லை. ஆகவே, இவ்வாறு நினைப்ப தெல்லாம் மூடத்தனமே யாகும். ஞானிகள் முயலவேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று, அறியவேயாகும்.

 

(14)   மதுச்சுவையி னாலீ மகிழ்வுடனே கிச்சாம்
மதியிலான் காமசுவை மாந்தவெண் ணிச்சாம்
தியாகியல் லானறம் செப்பினும் சாமே
வியாகுல முற்றுவே மா.


(அ-ரை) மது =தேன். மாந்த = அருந்த, தியாகி தருமவான். செப்பு =சொல்.

 

(க-து) ஈயானது தேனின் சுவையி லாசைகொண்டு சந்தோஷமாக உண்ணப்போய் அதில் விழுந்து சாகும். அறிவிலாதவன் மாதராசையால் மயக்குண்டு காமாந்தகாரமென்னும் கள்ளுண்டு சாவான். உலோபி தருமம் என்ற சொல் செவிப்பட்ட வளவில் வியாகுலமுற்று மரிப்பான்.

 

(15)   கமல பவனாக்குங் கர்த்தாவா மென்பர்
அமல வரிகாக்கும் போக்குமா னென்பரால்
மூர்த்திபல வாயினும் மூலமொன் றேயடா
ஓர்தியிவ் வுண்மைவே மா.


(அ-ரை) கமலபவன் = தாமரை மலரிற் றோன்றிய பிரமன். அமல=பரி
சுத்த. ஓர்தி = ஆராய்ந்தறி.

 

(க-து) பிரமன் சிருஷ்டி கர்த்தா; அரி காத்தற் கடவுள்; சிவன் அழித்தற்கடவுள் எனக்கூறுவர். இவ்வாறு மூர்த்திகள் மூவராகக் கணப்படினும் அம்மூவரும் ஒருவரே. அம்மூவர்க்கும் மூலமாயிருப்பது ஒரு வஸ்துவே. ஆகவே, அம்மூவர்க்குள்ளும் பரஸ்பரம் பேதமில்லை.


ஆதிப் பிரானு மணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யயனும்
சோதிக்கின் மூன்று தொடர்பினி லென்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின்றார்களே'


என்னும் திருமந்திரார்த்தத்தையுங் காண்க

 

(16)   வரும்போ தெதைக்கொண்டு வந்தான் மடிந்திவன்
போம்போ தெதைக்கொண்டு போவா னிடைநடுவில்
சேகரித்த பொன்னெங்கே செல்லு மிடமெங்கே
வாகுடனே கூறுவே மா.

 

(க-து) மனிதன் இவ்வுலகத்தில் பிறந்தபோது என்ன கொண்டு வந்தான்? ஒன்றுமில்லை. சாகும் போது தன்னுடன் எதைக்கொண்டு போவான்? ஒன்றுமில்லை. இடையில் சிலகாலம் இங்குத் தங்கி இருக்கும்போது திரவியத்தைச் சேகரிக்கின்றான். அதனை இங்கேதானே விட்டு எங்கோ சென்று விடுகின்றான். அவன் சேகரித்த பொருளோ அன்னியர் வசமாகின்றது. அவனுக்கும் அச்செல்வத்திற்கும் யாதொரு சம்பந்தமு மில்லாதே போகின்றது. ஆகவே, இவ்வுண்மையை யுணர்ந்து உள்ள பொழுதே சேகரித்த பொருளைக் கொண்டு தான தருமங்களைச் செய்து புண்ணியம் தேடல்வேண்டும்.


பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை இடைநடுவே
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சியேகம்பனே.


என்ற பட்டினத்தடிகள் பாடலின் கருத்தை இதனுடன் ஒப்பிடுக.

 

(17)   ஆதியாம் காரண மற்பெனெவ் வாறறிவான்
ஓதவறி யான் குற்றம் கூற வறிவான்
உடைக்கவறி குக்க லடுக்க வறியுமோ?
பீடுடைப் பொற்பவே மா,


(அ-ரை) குக்கல் =நாய். பீடு = பெருமை.

 

(க-து) பெரியோர்கள் தக்க காரணமில்லாமல் எக்காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அக்காரணங்களை மூடனறிவானோ? அறியான். அதனால் அவன் அவைகளைக் குற்றமெனச் சொல்லிக்கொண்டிருப்பான். அவனைக் கூறும் படி கேட்டால் அதனைக் கூறவுமறியான். தான் காரணங்கூற வறியாதாவனாயினும் குற்றங் கூறுவதிற் குறையிராது. நாய் சட்டிபானைகளை யுருட்டி உடைக்க அறியுமேயன்றி அவற்றை படுக்க வறியுமோ? அறியாதன்றோ? அது போலவா மென்க.

 

(18)   சனிபோதா தென்று தவிப்பார் சிலபேர்
சனிக்கெது போதாதோ தாமறிய கில்லார்
கரும்பல மேகஷ்ட காரணமதாமே
மருமமறி யார்கொல்வே மா.

 

(க-து) உலகில் சிலர் 'எனக்கு இப்பொழுது சனி போதாது; அதனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் நேரிடுகின்றன' எனக்கூறுவர். அந்தச்சனி இவர்களுக்கித்தனை கஷ்டத்தை யுண்டாக்கினா னென்பதிவர்க ளபிப்பிராயம். அப்படியே இருக்கட்டும், ஆனால் அந்தச்சனி வீடு வீடாகத் திரிந்து கொண்டு கஷ்டப்படுகின்றா னல்லவா? அக்கஷ்டம் அவனுக்கு யாரால் விளைந்தது? அதனை மாந்தரறியார். ஆகவே, அவரவர் கஷ்டத்திற்கு அவரவர் வினையே காரண மன்றிச் சனியன்று.

 

(19)   இரும்பிறு மாயின் இருமும் முறையு
முருக்கிக் கருமானே யொன்றாக்க வல்லான்
மனமுடையு மாயின்மீண் டார்கூட்ட வல்லார்?
அனகவபி ராமவே மா.

 

(க-து) கடினமான இரும்பு இரு துண்டாக உடைக்கப்பட்டு விடுமாயின் கொல்லன் உலையிலிட்டு இருமுறை மும்முறை யேனும் காய்ச்சி முன் போல ஒன்றாகச் சேர்த்து விடுவான், ஆனால் பிறர்தம் கெடுஞ் சொற்களால் மனம் உடைந்து போமாயின் அதனைப் பண்டுபோ லாக்கவல்லாரார்? ஒருவருமிரார். "இரும்புடைந்தால் கூடும், மன முடைந்தால் கூடுமா?" என்றோர் பழ மொழியும் உண்டு.

 

(20)   சூத்திர னாயினும் சுத்த மனத்தினனாய்
ஏத்துமறைக் கெட்டா விறையி னெறியறிந்
தப்பொருளே யாயி னவனேகா ணந்தணனாம்
எப்பொழுது முண்மைவே மா.


(அ-ரை) மறை=வேதம், இறை=கடவுள்.

 

(க-து) சூத்திரனெனச் சொல்லப்படுவோ னாயினும் பரிசுத்த அந்தக் காண முடையவனாய்ச் சற்குருவையடுத்து உபதேசம்பெற்று வேதங்களுக்கு மெட்டாத பரப்பிரஹ்மத்தை யடையு நெறியறிந்து ஆத்ம சாஷாத்கார மெய்தினவனாயின், அவனே பிராஹ்மணனன்றி வேறெவ்வகையினாலும் யாரும் எப்பொழுதும் பிராஹ்மணனாத லியலாது.

 

(21)   சிலைகளைக் கண்டு சிவனெனப்பா விப்பார்
சிலை சிலையே யன்றிச் சிவனுமா காதரோ
தம்மிடத்தி லேசிவனைத் தாங்காணா சென்மதியோ
இம்மானு டர்க்குவே மா.

 

(க-து) மாந்தர் சற்களைப் பார்த்துச் சிவனெனப் பாவிப்பர். கற்கள் கற்களேயன்றிச் சிவனன்றென வறியார். தம்முளேயுள்ள சிவனைக் காணாமல் இவ்வாறு மயங்கித் திரிவர். இஃதென்ன பேதைமை!

 

(22)   சதிபுரியும் தீமை தனது பதிக்காம்
பதிபுரியும் நன்மை சதிதனக்குப் பாதி
பதிபுரியும் தீமை சதிக்குச்சே ராதேன்
இதுவென்ன விந்தைவே மா.


(அ-ரை) சதி=மனைவி, பதி=கணவன்.

(க-து) மனைவி செய்யும் பாவ காரியங்களிற் பாதி கணவனைச் மென்றும், கணவன் செய்யும் புண்ணியத்திற் பாதி மனையைச் சேருமென்றும் உலகருரைப்பர். ஆனால், கணவன் செய்யும் பாபம் மாத்திரம் என் மனைவியைச் சேராது? இது எனக்கு மெத்த ஆச்சரியமா யிருக்கின்றது!

 

(23)   கடனால் குடும்பத்தைக் கல்லலுற வைக்கும்
மடவோன் பெரும்பகையா மைந்தற் கெதிர்பேசும்
பீடிலாப் பெண்டிரும் பேசிலற் றேயாவள்
ஈடிலபி சாமவே மா.

 

(அ-ரை) கல்லல் =கலகம், மடவோன் = அறிவீனன், பீடு = பெருமை,
அற்றே=அவ்வாறே.

 

(க-து.) கடன் அதிகமாக வாங்கிக் குடும்பத்தைக் கலக்கமுற வைக்கும் தந்தை பெருஞ்சத்துருவாவன். கணவன் வார்த்தைக் கிணங்காமல் எடுத்தெறிந்து பேசும் மனைவியும் கணவனுக்குச் சத்துருவாவாள்.

 

(24)    கனகமான் காசினியிற் காணக் கிடையா
தெனவறியா னோசாம னென்மதிவேந் தல்லனோ?
கெட்டகா லத்தில் கெடுபுத்தி தோன்றுமே,
இட்டமுட னாய்திவே மா.


(அ-ரை) கனகமான் =பொன்மான். மதி=அறிவு.

 

(க-து) மாயப்பொன்மானைக்கண்டு சீதாபிராட்டி பிடித்துத் தருமாறு வற்புறுத்தியபோது இளையபெருமாள் “அது பொய்ம்மான்-மாயமான். இத்தகைய பொன்மான் உலகத்திலிருத்தலியையா'' தெனக் கூறியும், ஸ்ரீராமச்சந்திரன் அவன் வார்த்தையை யேற்றுக் கொள்ளாமல், உண்மையான மானெனவே கருதிப் பிடிக்கச் சென்றார். பொன்மான உலகில் இல்லை யென்பதை அறியாரோ? அவ்வளவு அறிவில்லாதவரோ அவர்? அன்றே. சிறந்த விவேகமுடைய வேந்தர் பெருமானல்லரோ? இருந்தும் உணராததற்குக் மென்னவெனில், கெட்டகாலத்திற் கேற்றவாறு அவர் அறிவு மழுங்கிற்று. எத்தகைய விவேகிகளுக்கும் தீமை யனுபவிக்க வேண்டியகாலம் நேரில் மாயிள் கெடுபுத்தி தோன்றுவது சர்வ சாதாரணம்.


அறியாரு மல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல்.
. . . . . .
செய்த வினையான் வரும்.                             
(நாலடியார்)

 

(25)   வித்தை யிருந்தும் விநய மிலதேஎவ்
வித்தையின் மேன்மை வெகுககை பூண்டாலும்
மாங்கலிய மில்லாத மங்கையை மானுமே
தீங்கிலபி ராமவே மா.


(அ-ரை) விநயம் = நன்னடக்கை, அடக்கம்.

 

(க-து) ஒருவனுக்கு வித்தை யிருந்தும் விநயமில்லா விட்டானில்லை. அத்தகைய வித்தையானது சகல ஆபரணங்களை யணிந் திருந்தும் மாங்கலிய சூத்திரமில்லாத மங்கையின் வாழ்க்கையைப் போன்றதாகும்.

 

(26)    பன்றியீ னுங்குருளை பாரீரை தோரைந்தே
அன்றியா னையீனு மாராயி - னான்றன்றோ
உத்தமச் சேய னொருவனே சாலானோ
இத்கரையி லார்க்கும்வே மா.

 

(அ-ரை) குருளை = பன்றிக்குட்டி, சேயன் = மகன், சாலானோ = போத
மாட்டானோ.

 

(க-து) பன்றி பதினைந்து குட்டிகள் போட்டாலும் பயன் யாது? யானைக் கன்று ஒன்று போதாதோ? நற்குணமில்லாத பிள்ளைகளைப் பெறுவதினும் உத்தம புத்திரன் ஒருவனைப் பெறுதல் சிறப்பன்றோ?

 

(27)    பாமபாத மேகோரும் பக்தனே யென்றும்

அரயன்றான் கோரு மமரில் - பெருவெற்றி
மூர்க்கனென் றுங்கோரும் வேசையர் சேர்க்கையே
பார்க்குளபி ராமவே மா.

 

(க-து) பகவத் பக்தன் எப்பொழும் பரம பதத்தையே கோரி நிற்பான்.
அரசனோ யுத்தத்தில் வெற்றியே கோரி நிற்பான். மூடனோ தூர்த்தைகளின் கூட்டுறவையே கோரி நிற்பான்.

 

(28)    அவனவனாகா னவனு ளொளிரு

மவனவ னாகா னவனவன் மெய்யோர்க்
தவனவற் கூட்டு மவனே பிரஹ்ம
மவனியி லாவன்வே மா.

 

(க-து) (நான் மனிதன் என்னும் போதமுள்ள வரையிலும்) மனிதன் ஈசுவர னாகமாட்டான். அந்த மனிதனுக் குள்ளிருக்கும் ஆத்மாவே ஈசுவரன். ஆதலால் மனிதன் ஈசுவரனென் றெண்ணவேண்டாம். உண்மையறிந்து ஆன்மாவைப் பரமான்மாவி னிடத்தில் ஐக்கியப் படுத்துவோனே பிரஹ்மமெனப் படுவான்.



 

(29)   மாதொருத்தி வேதாவின் வாய்மே லுதைத்திட்டாள்

மாதொருத்தி விண்டுவின் மார்மே லுதைத்திட்டாள்
மாதொருத்தி மாசிவனைப் பாதியுட லாக்கினாள்
ஓதலென்பி றர்க்குவே மா.


(அ-ரை) வேதா = பிரமன், விண்டு = திருமால்.

 

(க-து) ஒருமாது (சரஸ்வதி) பிரமனை வாய்மே லுதைத்தாள், (வாயில் வசிக்கிறாள்.) ஒருமாது (இலக்குமி) திருமாலை மார்மே லுதைத்தாள், (மார்பில் வசிக்கிறாள்.) ஒருமாது (பார்வதி) சிவனை பாதி சரீர முடையவனாக்கினாள், (தான் பாதியுடலைப் பங்கிட்டுக் கொண்டாள்.) இவ்வாறு திரிமூர்த்திகளே அரிவைய ராசையிற் சிக்கி அவமான மடைந்தன ரென்னின் சாமானியர்களின் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமோ?


(30)    பறையனென் போனையேன் பாரிற் பழித்தல்

சிறையுடலஞ் சோரிதசை செப்பில் - முறையொன்றே
அப்பறையற் குள்ளா ரவன்றன் குலமென்னே
தப்பிலா தோதுவே மா.


(அ-ரை) பார்=பூமி, சோரி=இரத்தம், தசை=மாமிசம்.

 

(க-து) இவ்வுலகத்தில் பசுர் பறையரென்று ஒரு சாராரைப் பெயரிட்டுப் பழிக்கின்றார்கள். அவ்வாறு பழிப்பது ஏன்? சிறைபோன்ற சரீரத்திலுள்ள இரத்தம் மாமிசம் முதலியவை யாவர்க்கும் ஒன்றாகவே இருப்பதன்றி ஒன்றற்கொன்று பேதமின்றே. நிற்க, பறைய னெனப்படுவோனுக்குள்ளே யொருவனிருக்கின்றா னல்லவா? அவன் குலமென்ன? ஆராய்ந்து பார்


(31)    விட்டிற்கு ளேமறைப்பு வீக்குசே லைமறைப்பு

மேட்டிமை யாய்மறைப்பு மெய்குக்கி யின்மறைப்பு
எண்ணித்த னை மறைப்பு ளீசன் மறைப்படா!
மண்ணிலபி ராமவே மா.


(அ-ரை) வீக்கு = கட்டு, யாய் = தாய், குக்கி = வயிறு.

 

(க-து) உலகத்தில் எல்லாம் மறைப்புகளே நிறைந்திருக்கின்றன. வீட்டின் வியவகார முழுதும் மறைப்பு. அவயவ முழுதும் ஆடைகளால் மறைப்பு. தாயின் கர்ப்பம் மறைப்பு. வயிறு மறைப்பு. இத்தனை மறைப்பு களை யுடையவனாக மனிதனிருக்கையில் பரமாத்மா மறைப்பென்பதி லென்ன அதிசய மிருக்கிறது?


(32)   திருமகள் வாழிலங்கைச் செல்வன் பதியைச்

சிறுவான ரக்குழுமேல் சென்று - -- திறலழித்த
காலமனு கூலமே லற்பர் கனம்பெறுவர்
ஞாலவி யல்புவே மா.

(அ-ரை) திருமகள் = இலக்குமி, குழு = கூட்டங்கள், திறல் = போர், வலி.

 

(க-து) லஷ்மி வாசஸ்தானமாயி ருந்த இலங்கேசனுடைய நகரத்தைச் சிறிய வானரக்கூட்டங்கள் சென்று முற்காலத்தில் தம் வலிமையால் அழித்து விட்டனவே. இதனால் அறியக்கிடப்ப தென்னவென்றால், காலம் அனுகூலமாயிருக்குமாயின் அற்பரும் மேன்மை பெற்று விடுவர். வலியோரும் மெலியோராவர் என்பதே.


(33)    மாதரைக் கண்டாலு மாதனங் கண்டாலு

மோதுசுவை யுண்பொருளைக் கண்டாலுந் - தீதகற்று
மாசாரி யர்க்கேனு மாசைதோன் றாதுகொலோ
மாசிலபி ராமவே மா.

 

(க-து) குருக்கள் ஆசாரியர்கள் சன்னியாசிகள் என்று சொல்லிக் கொள்ளு கின்றவர்களுக்கும் பண ஆசை விடுவதில்லை. மாதரைக் கண்டாலும், சிறர்த செல்வத்தைக் கண்டாலும், உருசியுள்ள பதார்த்தங்களைக் கண்டாலும் ஆசாரியர்களுக்கு மாசை யுண்டாகா திருக்குமோ?


(34)    நீரிற் பலகாத நீந்தித் திரிமீனம்

பாரி லொருமுழமும் பாறுமோ- தேரினிது
தன்பலம தாகுமோ தானபல மல்லவோ
வன்புவியு லாகும்வே மா.


(அ-ரை) பாறும் = ஓடும்.

 

(க-து) மீன் நீரில் பல காததூரம் செல்ல வேண்டுமாயினும் எளிதிற்செல்லும். ஆனால் பூமியில் ஒருமுழ தூரமும் செல்லாது. ஆகவே, ஒருவர்க்குச் செல்வாக்கும் வல்லமையும் இடத்தை யனுசரித் துண்டாகுமேயன்றி சொந்த பலத்தினாலல்ல. “தன் ஊரில் யானை அயலூரில் பூனை" யல்லவா?

 

(35)    அறிவுடைய ரேபெரிய சாவரா லன்றி

அறிவிலா ராகார் வயதினால் வாசுதே
வன்பெரிய னன்றி வசுதேவ னாவானோ
மன்புகழான் சாற்றுவே மா.

 

(க-து) அறிவினால் பெரியோரா யிருப்போரே யாவராலும் கௌரவிக்கப் படுவரே யல்லாமல், அறிவிற் சிறியராயும் வயதிற் பெரியராயு மிருப்போர் கௌரவிக்கப்பட மாட்டார். வசுதேவன் வயதிற் பெரியவனாயினும் அவனை ஒருவரும் வணங்குவதில்லை. அவன் மகனாகிய வாசுதேவன் (கிருஷ்ணன்) யாவராலும் பூசிக்கப்படுகிறா னல்லவா?


(36)   தத்துவங்க ளேபேசித் தர்க்கமிடு வோர்பலரால்

தத்துவத்தி லேநிற்போர் தாமரியர் - தத்துவமோர்
பீடுடையார் வைகினும் பெட்புடன்காண் டற்கரியர்
நேடிடினு மெங்கும்வே மா.

 

(க-து) உலகத்தில் தத்துவவாத மிட்டுத் தர்க்கித்துத் திரிவேர் பலர் கிடைப்பர். ஆனால், அத்தத்துவநெறி நிற்போர் மிக வரியர். இருந்தாலும் அவர்கள் புலப்படுவதில்லை.


(37)    சலத்தின்மீனைநம்பித் தன்வாய்த் தசையைச்

சலமுறவே போகட்டுச் சம்பு--நலமிழக்க
விண்பருந்து வேகமாய் மேவிக்கொண் டேகியதே
மண்ணிலிதை யாய்திவே மா.


(அ-ரை) சலம் = உறுதியின்மை. சம்பு = நரி.

 

(க-து) மாமிசத்துண்டை வாயிற்பற்றிய வண்ணம் ஆற்றங்கரையை யடைந்த நரியொன்று தண்ணீரிற் போய்க் கொண்டிருந்த மீனைப் பிடிக்கச் செல்ல அம்மாமிசத்துண்டு கீழே விழ அதனை ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டே பருந்து விரைவாக வந்து தூக்கிச் சென்றது.


சம்புவே யென்னபுத்தி சலந்தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப்போட்டு வானத்தைப் பார்ப்பதேனோ.


என்னுஞ் செய்யுளோ டிதனை ஒப்பிட்டு நோக்குக.


(38)    மாதாவின் கர்ப்பத்தில் மாம்சபிண்ட மாயிருந்து

பூதவினை யெண்ணிப் புலம்பியே- பேதுற்றுப்
பூதலத் துற்றளவில் பொச்சாந்து மோகியாம்
காதலா லென்றும் வே மா.


(அ-ரை) பூதம் = இறந்தகாலம். பொச்சாந்து = மறந்து.

 

(க-து) மனிதன் மாதாவின் வயிற்றில் மாமிசபிண்டமாக விருந்த காலத்தில் தன் முன்னை வினையை எண்ணி யெண்ணி வருந்தி, இனி, வினைகளைச் செய்யாது கடவுள் திருவடியை யடைய முயல்வேன் என்று கருதுவான். ஆனால் பூமியில் பிறந்தவுடன் அந்நினைவை மறந்து மேலும் ஆசைக் கடலுளாழ்ந்து பிறவிக்கே வழி தேடுகிறான்.


உற்றி டுங்கருப் பாசயப் பையுறுத் துதல் முற்
சொற்றி டுந்துய ரழுந்தி முன் னிகழ்ச்சியுந் தோன்ற
பற்றி டும்புவிப் பிறந்து நன் னெறிநின்று பவநீர்
வற்றி டச்செய்வா மென்றுள்ளிப் பிறக்கும்பின் மறக்கும்.


என்னும் குசேலோபாக்கியானச் செய்யுளோடிதனை ஒப்பிடுக.

(39)   வேம்பின் றோல் தின்றால் விடரோகம் போகுமே

ஆம்படிவந் தேசு திட னாகுமால் - சோம்பின்றித்
தின்னத்தின் னத்தானும் தேக்கினிமை யாகுமே
மன்னவபி ராமவே மா.

 

(க-து) வேம்பு மிகவும் சசப்புடையதாயினும் அதனைப் பொருட் படுத்தாது வேம்பின் பட்டையை இடைவிடாமல் தின்றால் சரீரத்திலுள்ள விஷநோய்களெல்லாம் நீங்கும். தேகத்தில் தேசுண்டாவதோடு சரீரதிடனு முண்டாகும். விடாமல் தின்னத்தின்ன கைப்பு நீங்கி இனிமையாகவு மிருக்கும். அதுபோல, ஷ்டபான காரிய மென்று விட்டுவிடாமல் செய்துவரின் மும் நன்மையுமாகும். அப்படியே பிரஹ்மோபாசனையும் முதலில் சிரமமாகத் தோன்றினும் இடைவிடாது அப்பியசித்து வந்தால் எளிதாகும்.


(40)    நீரிலே மூழ்குவோன் நிர்மலான் மாவாகான்

பூரணமா முத்தி பொருந்தானால்-ஆராயின்
நீர்க்கோழி யெப்போதும் நீரிலே மூழ்காதோ
மார்க்கமீ தன்றுவே மா.

 

(க-து) ஒருவன் புண்ணிய நதிகள் எனப்படும் கங்கை முதலியவற்றின் நீரிலே மூழ்குவதனால் பரிசுத்தனாக மாட்டான். முத்தியை யடையான். ஆராயுமிடத்து நீர்க்சோழி எப்பொழுதும் நீரில் மூழ்கிக் கொண்டிருக்காதோ! அதனால் அது பரிசுத்தத் தன்மையையும் முத்தியையும் அடைவதாமோ.


(41)    தன்னை யறிந்தானேல் தானே பிரமமாந்

தன்னுடலு ளேமுத்தி தானிறைந்- தென்றுமுள
தன்னையறி யான் பிரமந் தானாவ தெப்படியோ
மன்னவபி ராமவே மா.

 

(க-து) ஒருவன் தனதெதார்த்த சொரூபத்தை யறிவானாயின் அவன் பிரஹ்மசொரூபியே யாகிறான். தன்னை யறியாதவன் பிரஹ்ம சொரூபனாவது முடியாது. முத்தியானது வெளியில் ஓரிடத்திலிருப்ப தல்ல. எப்பொழுதும் தனக்குள்ளே தானே நிறைந்திருக்கின்றது. நுண்ணறிவு அன்புடன் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.


(42)    தானந்தா வென்றிரப்போன் தாரணியிற் கீழ்மகனாம்

தானந்தா வென்றிரவான் றான் தேவன்—மானுவனே

தானந்தா னீயாதான் தன்னியனா கானரோ

ஞானவபி ராமவே மா.

 

(க-து) எவன் பிறரிடஞ் சென்று தானந்தா வெனக் கேட்கின்றானோ அவன் நீசனாவான். அவ்வா றிரவாமல் சீவிப்போன் தேவனுக்குச் சமானமாவான். தான மீயாதவன் எப்போதும் கடைத்தேறமாட்டான்; அவன் தன்னியனுமாகான்.

 

(43)    தானங் களிலன்ன தானமே மேலாகும்

கானங் களிற் சாம கானமே லாமே
தியானத்தி லேசிவத்தி யானமே மேலாம்
தயாளவபி ராமவே மா.

 

(க-து) தானங்களில் அன்ன தானமே சிறந்தது. கானங்களில் கானமே சிறந்தது. தியானங்களில் சிவத்தியானமே சிறந்தது.


(44)   உதயத்திற் சூத்திரனே யுத்தமனா மாறென்

சதிசூத்திரத்தன்மை சத்தியமே யன்றோசொல்
தாய்சூத்தி ரச்சியாந் தானெங்ஙன் பார்ப்பனன்
மாயமே யாகும்வே மா.

 

(க-து) பிராஹ்மணன் எல்லாரினும் உயர் குலத்தா னென்பர். அவன் பிறப்பில் சூத்திரனே யாகிறான். (உபநயனத்திற்கு முன் சூத்திரனேயாவான்) பிறப்பில் சூத்திரனா யிருப்பவன் எவ்வாறு உத்தமனாவான். அவன் தாய்க்கு (பிராஹ்மண ஸ்திரீக்கு) உபநயன மின்மையால் அவள் சூத்திர ஸ்திரீ யென்பதில் தடையென்ன? சூத்திர ஸ்திரீக்குப் பிறந்தவன் எவ்வாறு பிராஹ்மணனாவான். இவ்வாறு கூறுவதனைத்தும் உலகினரை யேமாற்றும் மாய வார்த்தை களேயாகும்.

 

(45)    கற்சிலைக் கேனோ பகட்டு நிறவாடை

பொற்பான கோயிலும் கோபுரங்கள் - கற்கும் பம்
சோறு துணிகளைக் கோருமோ தெய்வந்தான்
வீரவபி சாமவே மா.

 

(கருத்து) மூடர்கள் கல்லினால் பொம்மை செய்துவைத்து அதற்குக் கண் கணப் பகட்டக்கூடிய பல நிறங்களையுடைய ஆடைகள் கட்டுவார்கள். கான கோயிலும் கோபுரங்களும் கட்டுவார்கள். எதிரில் கும்பம் (சோற்றுக் குவியல்) கொட்டுவார்கள். இவைகளெல்லாம் கற் பதுமைக்கேன். தெய்வம் சோற்றையும் துணியையும் விரும்பி நிற்குமோ! இது என்ன அறியாமை


(46)    செங்கருப்பஞ் சோலைக்குள் செத்தை கிடந்தாலும்

பொங்கு மதன்குணந்தான் போகாதாலிங்கிதமாம்
ஞான முளவிடத்தே துட்டனிருத் தல்மானும்
ஞானசொ ரூபவே மா.

 

(க- து) செழுமையான கருப்பஞ் சோலைக்குள் செத்தை குப்பைகள் எவ்வளவு கிடந் தாலு மென்ன! அதனால் கரும்பின் குணம் மாறிவிடுமோ! மாறாது. அதுபோல, மேன்மை பொருந்திய ஞானிகள் மூடர்களுடன் சேர்க்திருந்தாலும் அவர்கள் குணம் சிறிதும் மாறிவிடாது.



(47)   நிசம்பேசு வோன்காண் நிருமலனே யாவான்

நிசம்பேசு வோனீதி வானாம் - வசையில்
நிசத்தையே பேசாதோன் நீசசண்டாளன்
நிசத்தின்சொ ரூபவே மா.

 

(க-து) இவ்வுலகத்தில் உண்மை பேசுவோனே பரிசுத்தான்மாவாவான். அவனே நீதிவானாவான். குற்றமற்ற உண்மை பேசாதவன் இழிவான சண்டானனாவான்.


(48)   தனவுளே யங்கி தகவா யொளிர

பினுங்கொளுத்திக் கொள்ளுவதென் கன்மந்- தனக்கோ
கொளுத்திக்கொண் டாலவனும் கூறுயர்வா வானோ
அனிமிகு பொற்பவே மா.

 

(க-து) தனது இதயத்திற்குள்ளே தானே அக்கினியானது பிரகாசித்துக் கொண்டிருக்க, மீண்டும் உடலை முத்திரை போட்டுக்கொள்ளுகிறே னென்று சுட்டுக்கொள்ளுவ தென்ன கர்மம்? அவ்வாறு கொளுத்திக்கொள்வதனாலவன் உயர்ந்தோ னாவானோ? ஆகான்.


(49)   கன்னிவான் கூடிக் கலங்குங்கா லோர்போது

பின்னமிலா மூத்திரத்தாற் பிண்டந்தான்- நன்னயமாய்
உற்பவமாம் ஓரினெவன் மேற்குலத்தோன் ஈனனெவன்
விற்பனவி வேகவே மா.

 

(க-து) ஓர் மாதும் புருடனும் ஒருவரை யொருவர் காதலித்துக் கூடும் பொழுது வெளிப்படும் சுக்கில சோணிதங்களால் ஓர் காலத்தில் மாமிச பிண்டமாகிய இவ்வுடல் உண்டாகின்றது. இத்தகைய உடலையுடையோரில் உயர்ந்தோ ரெவர்? தாழ்ந்தோரெவர்? இவ்வுடலில் உயர்வதாழ்வு கற்பித்தல் மடமையேயாம்.


(50)   கடையக் கடையப் பிறக்குமரத் தங்கி

கடையக் கடையவுண் டாந்ததியில் வெண்ணெயே

எண்ணவெண் ணப்பிறக்கும் தன்னுளே தத்துவமே
அண்ணலபி சாமவே மா.

 

(க-து) கட்டையைக் கடையக் கடைய செருப்புண்டாகும்; தயிரைக் கடையக் கடைய வெண்ணெயுண்டாகும். அதுபோல, தன்னை விசாரிக்க விசாரிக்கத் தன்னுள்ளே தத்துவமுண்டாகும்.


(51)   அண்டை யயலா ரருஞ்செல்வந் தன்னையே

கண்டு தமக் கில்லையெனின் காரியமென்-பண்டு
தருமமென் றாலுதைத்துக் கொண்டு மடிந்தாரே
தருமசொ ரூபவே மா.

 

(க-து) அக்கம்பக்கத்தாரின் செல்வத்தைக் கண்டு ஐயோ! அவர்கள் அவ்வளவு பணம் வைத்திருக்கின்றார்களே! நமக்கில்லையே என்று வருந்துவதாற் பயன் யாது? முற்பிறவியில் தருமஞ் செய்யுங்கள். அது தான் கூட வரும். மறுமையிலுதவும் என்று பெரியோர் சொன்னால் அதைக் கேளாமல் தருமம் என்றவளவில் உதைத்துக்கொண்டு செத்தார்களே! இப்போது எப்படி கிடைக்கும். கொடுத்து வைத்தவனுக்கல்லவா கிடைக்கும்!


(52)   குலமிலான் செல்வத்தால் கூவி லிலகும்

குலந்தாழும் செல்வமிலா னுக்கே - குலத்தினும்
ஆராயின் செல்வமே லாகுமே முக்கியம்
சீரவபி ராமவே மா.

 

(க-து) தனக்கென வோர் குலமில்லை யென்னுமாறு இழிகுலத்தோனாயிருப்பினும் செல்வமுடையவனாயிருப்பானாயின் அவன் இவ்வுலகத்திற் புகழ்பெற்று விளங்குவான். உயர்ந்த குலத்தினனாயினும் செல்வமில்லாதவனாயின் அவன் இழிகுலத்தோனாவன். ஆகவே, குலத்தினும் செல்வமே மிக முக்கியமான தாகும்.


(53)    நாளுமுப் போதுண்டும் நன்றா யுறங்கியும்

வேளம்பிற் காளாகி வேசையர்பால்-மீளாத
காதல்வைத் துச்சேர்ந்தும் காசை யழிக்காதே
தீதாகு மென்றும்வே மா.

 

(க-து) நாடோறும் மூன்று வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டும் நன்றாகத் தூங்கிக்கொண்டும், காமியாய் வேசிகளிடத்து நீங்காத அன்புவைத்து அவர்களிடத்தே தானே தங்கியும் செல்வத்தை வீணாகச் செலவழிக்காதே. பாடுபட்டுப் பணந்தேடிச் சேர்ப்பதில் கருத்துடையவனாயிரு.


(54)   பார்ப்பனர்க் குச்சகல பாக்கியமு மீதலாம்

சீர்த்தி யுடன் மேன்மை செய்தலாம் - சேர்தலாம்
ஞான மருளியே மாந்தர்க் கடைத்தேற்றின்
ஞான சொரூபவே மா.

 

(க-து) அந்தணர்கள் மற்றவர்களுக்கு ஞானோபதேசம் செய்து அவர்களைக் கடைத்தேற்றுவதையே தம்முடைய முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பார்களானால் அவர்களுக்குச் சகல பாக்கியங்களும் கொடுக்கலாம். கீர்த்தியுடன் எல்லாச் சிறப்புக்களையுஞ் செய்யலாம். அவர்களுடன் கூடியுமிருக்கலாம்.


(55)   அன்னைக் கெதிர்பேச லச்சற்கெதிர்பேசல்,

முன்னோர் கெதிர்பேசல் மூன்றுமிவை - எந்நாளும்
பாதக மென்றோர்ந்து பாரிலுறைகவே
வேத வடிவவே மா.

 

(க-து) தாயை எதிர்த்துப் பேசுதலும் தந்தையை எதிர்த்துப் பேசுதலும் மூத்த சகோதரனை எதிர்த்துப் பேசுதலும் ஆகிய இம்மூன்றும் கொடிய பாவகாரியங்களாதலின் இக்குற்றங்கள் போதவாறு எச்சரிக்கையோடிருத்தல் வேண்டும்.


(56)   கொல்லப் படத்தகும் கூடாரும் கைப்படின்

ஒல்லாது தீமை யுஞற்றலே - நல்லவை
செய்தவனைப் போவென்னச் செப்பலே சாலுமே
துய்யவபி ராமவே மா.

 

(க-து) கொல்லப்படத்தகுந்த கொடிய பகைவர்களாயிருப்பினும் நம்மிடத்துச் சிக்கிக்கொள்வார்களாயின் அவர்களுக்கு ஒரு தீமையும் செய்யலாகாது. அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்து அனுப்பிவிடுவதே போதுமானது.

 

இன்னா செய்தாரை ஒறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

 

என்னுங் குறளின் பொருளை ஈண்டு நோக்குக.

 

ஆனந்த போதினி – 1932 ௵ -

ஜனவரி, பிப்ரவரி, மே, ௴

 

 



No comments:

Post a Comment