Monday, September 7, 2020

 வாய்மை

 

வாய்மை என்பது வாயின் தன்மை எனப் பொருள்படும். வாய்மையும் மெய்மையும் ஒரு பொருட் சொற்கள் மெய்மை யெனினும், உண்மையெனினும் பொருந்தும். வடமொழிச் சொற்களாய நிஜம் சத்தியம் என்பனஇதே பொருளை உடையனவே. வாய்மை யெனின் உண்மை பேசல் எனலாகும். பிறருக்குத் தீமையைத் தராத சொற்களைச் சொல்லுதலே உண்மை. உள்ளதை உள்ளவாறு கூறல் வேண்டும். அவ்வாறு கூறுங்காலத்தும் உலகுக்கோ பிறர்க்கோ கேடு தருமாயின் அது வாய்மை எனப்படாது. இன்னும் உண்மைக்கு மாறாக ஒன்றைக் கூறுமிடத்து யார்க்கும் எத்தகைய தீங்கையும் விளைவிக்காது நன்மைகளையே தருமாயின் அதுவும் வாய்மை யெனக் கருதப்படும். இதனை,

 
 "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கு மெனின்”


என ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் கூறியருளினார். இதனையே வில்லி புத்தூராழ்வாரும்,


 "உம்மையின் மறுமைதன்னி லுறுபய னிரண்டும் பார்க்கின்
 இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே
 மெய்மையே யொருவர்க்குற்ற விபத்தினை மீட்டுமாயிற்,
 பொய்ம்மையு மெய்மை போலப் புண்ணியம் பயக்கு மன்றே”


எனத் திருவாய் மலர்ந்தார்.

 

ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றை மற்றவர்களுக்கு மெய் போலச் சொன்னால் அவன் மனமே அவனைச் சுடுகின்றது. அவன் கூறியதுவாய்மை யன்றென நன்கறிந்த அவன் நெஞ்சே அக்கேடான செய்கைக்குத் துணைநின்று துன்பத்தைத் தரும். பொய்மை கூறுகின்றவன் கடவுள் பால்அஞ்சி நடப்பவனல்லன்; ஆனால் மனிதர் பாலே அஞ்சுகின்றான். இதை ஏற்ப பிரஞ்சுக் கட்டுரையாளர் (French essayist) மான்டேன் (Montaigne) மிகவும் வேடிக்கையாய்க் கூறியுள்ளார்.

 

“If it be well weighed, to say that a man lieth, is as much as tosay, that he is brave towards God, and a coward towards men, for alie faces God, and shrinks from man.”

 

அதாவது, "பொய்மை யுரைக்க ஒருவன் மனிதனிடத்தில் பயந்து கடவளை எதிர்க்கிறான்'' என்றார். பொய்மை எக்காலத்தும் மறைவு படாதாதலால் அதனை அறவே நீக்க வேண்டும். வாய்மையானது மக்கட்கு ஓர் ஒப்பற்ற அணிகல மெனலாம். இது சிற்றுயிர்க்குற்ற சிறப்பான துணைகளில் ஒன்று. இதனை ஆங்கில ஆசிரியர் பேக்கனார் (Bacon) என்பாரும் மக்கள் இயல்பில் உண்மையே உயர்ந்த நலம்'

 

(“Truth is the sovereign good of human nature”) எனக் கூறியுள்ளார். வாய்மை யுள்ளவன் எக்காலத்தும் உயர்ந்தோர் உள்ளங்களி லிருப்பான். பொய்யாத உள்ள முடையோன் உலகத்தின் திலகமாகக் கருதப்படுவான். ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மையைச் சொல்லுவானாயின்தவம், தானம் முதலியன செய்பவரினும் மேலாகச் சிறப்பைப் பெறுவான். பொய்யாமையே எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும். இதனைத் தெய்வத் திருவள்ளுவரும்,


''பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று"


''யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத் தொன்றும்

வாய்மையினல்ல பிற"


எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இஃது பொய்யாமையை பொய்யாமற் செய்யிற் பிறவறஞ் செய்யாமை நன்று என்றும், பொய் கூறின் பிறவறஞ் செய்கை நன்றாகா தென்றும், வாய்மை யில்லார் எவ்வளவு அறங்கள் புரியினும் அவை பயனிலா தொழியும் என்றும் பொருள்படும். மனிதர் மறை முழுதுணர்ந்தாலும், பல யாகங்கள் புரிந்தாலும், தானங்கள் செய்திடினும், அநேக தீர்த்த யாத்திரைகள் போயினும் ஒரு பொய் சொல்வரேல் கடு நரகத்தில் அழுந்தி விடுவரென்பதைக் காசி ரகசியச் செய்யுளால் அறிகிறோம்.

 

இளங்கோவடிகள் " பொய்யுரை அஞ்சுமின்'' என்றனர். சிறு பஞ்சமூல முடையாரும்,


 "இம்மை நலனழிக்கும் எச்சங் குறை படுக்கும்
 அம்மை யருநரகத் தாழ்விக்கு - மெய்ம்மை
 அறந்தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும்
 மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய்''

 என்று கூறியுள்ளார்

 "வான் கவிந்த .....................................................
 வையகமெல்லாம் பெறினும் உறையற்க
 பொய்யோ டிடைமிடைந்த சொல்''

எனச் சமண முனிவர்களும் நீதிச் செய்யுள் பாடியிருக்கின்றனர். வாய்மையை விரதமாகக் கொண்டு மேன்மை பெற்றிருந்த நம் நாட்டின்கண் அரிச்சந்திரன் என்ன, தருமர், மனு, ராமர், பரதன், மற்றும் எண்ணிலா மக்கள் என்ன, இவர்களெல்லாம் சத்தியத்தைக் கடைப்பிடித்துக் (கடவுளே வாய்மை, வாய்மையே கடவுள்) என்ற திருமந்திரத்தைச் சிரமேற் கொண்டு மேன்மையடைந்தது யாவரும் அறியாததன்று. ஆதலின் நாமும் வாய்மையை எக்காலத்தும் கைக்கொண்டு பொய்மையை அறவே யொழித்தல் வேண்டும்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

No comments:

Post a Comment