Tuesday, September 8, 2020

 ஸர் பிரபுல்ல சந்திர ரே

 

1. முன்னுரை

 

ஒரு தேசம் முன்னேற்ற மடைந்து அதன் கீர்த்தி உலகில் பரவுவதற்கு அத்தேசத்திலுள்ள மேதாவிகளின் அரிய குணங்களும், தேசாபிமானமும், விசேஷ அறிவுமே காரணம்; இவ்விஷயங்களில் நம் இந்தியாவும் முன்னேறி வருகிற தென்பது யாவரு மறிந்த விஷயம். காவியத்தில் ரவீந்திரநாத டாகூர், ஸரோஜினி தேவி முதலியவர்களும் ஸம்ஸ்கிருத பாஷையில் ஸர் ராமகிருஷ்ண பண்டார்க்கரும், கணித சாஸ்திரத்தில் சென்னை இராமானுஜஐயங்காரும் பெரிய நிபுணர்களென் மேனாட்டாரும் புகழ்கின்றனர். இன்னும் தேசபக்தியில் காலஞ்சென்ற கோகலே, மேடா, திலகர், சித்திரஞ்சனதாஸ், லஜபதிராய் முதலிய அரிய தலைவர்களும் மத விஷயங்களில் ஸ்வாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஸ்ரீவிவேகாநந்தர் முதலியவர்களும் மேன்மையுடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களோடு, சாஸ்திர விஷயத்திலும் ஸர் ஜகதீச சந்திரவரை, ஸர் பிரபுல்ல சந்திர ரே, வி. வி. ராமன் ஆகிய மூவரும் மஹா நிபுணர்கள். இவர்களின் அபார ஆராய்ச்சிகளை ஒவ்வொரு தேசத்தாரும் புகழ்ந்துரைத்திருக்கின்றனர் அவர்களில் ஒருவரான ஸர் " ரே " அவர்களின் கரிதத்தை இங்கு சுருக்கிக் கூறுவோம்.

 

2. பிறப்பு.

 

வங்காள மாகாணத்தில் குல்னா ஜில்லாவில் " கபோதாக்ஷ " நதி தீரத்தில் உள்ள "ரரூலிகடிபாரர்" என்ற ஊரில் 1861ம் ளுரே பிறந்தார். அப்போது இவர் தந்தையாகிய ஹரிச்சந்திரரே என்பவர் அவ்வூரில் ஒரு பள்ளிக் கூடத்தை ஸ்தாபித்திருந்தார் அப்பள்ளிக்கூடத்திலேயே இவரும் சிறு வயதில் வாசித்து வந்தார். இவருக்கு ஒன்பது வயது வந்தவுடன் இவரைக் கல்கத்தாவுக்கு கூட்டிக்கொண்டு போய் வாசிக்க வைத்தார். அங்கு 1879ம் வருஷம் முதல் 1882ம் வருஷம் வரை வித்யாஸாகரர் ஸர்வ காலா சாலையில் வாசித்து வந்தார்.

 

3. இங்கிலாந்தில் படிப்பு

 

மேற் படிப்புக்காக இங்கிலாந்துக்குப் போக வேண்டு மென்ற அவா இவருக்கு அதிகமுண்டு; ஆனால் அதற்கு வேண்டிய திரவியம் தம் தகப்பனாரால் கொடுக்கமுடியாதென நினைத்து "கில்க்ரைஸ்ட்' என்ற ஸ்காலர் ஷிப்புக்காக ஒருவருக்கும் தெரியாமல் படித்துக் கடைசியில் அதை வாங்கிக் கொண்டு 1882ம் வருஷத்தில் எடின்பரோவுக்குப் போனார். அங்கு ஆறு வருஷம் ரஸாயன சாஸ்திரத்தையே வாசித்து 1885ம் வருஷம் பி. எஸ். வி. (B. S. C.) பரீக்ஷையும். 1888 - ம் வருஷம் டி. எஸ். வி. (D. S. C.) பரீக்ஷையும் கொடுத்து இந்தியாவுக்கு, திரும்பி வந்தார்.


 
4. ஆராய்ச்சி

 

இந்தியாவிற்கு வந்ததும் கல்கத்தா ராஜதானி கலாசாலையில் ரஸாயன சாஸ்திர ஆசிரியராக இவரை நியமித்தார்கள். தம் வேலையில் அதிக ஆராய்ச்சி செய்து 1895ம் வருஷம் டிசம்பர் மாதத்தில் "மர்கூரஸ் நைட்ரைட்" (Mercurous Nitrite) என்ற புது வஸ்துவைக் கண்டு பிடித்தார். அதுவரையில் அவ்விஷயம் ஒருவருக்கும் தெரியாதிருந்ததால் அவரை ஐரோப்பாவிலுள்ள ரஸாயன சாஸ்திரிகள் எல்லோரும் மதித்து வருகிறார்கள். பிரான்சு தேசத்திலுள்ள மான்ஷியர் பர்தாலெட் என்பவர் இவருக்கு உபசாரமாய் ஒரு கடிதம் எழுதியதோடு முற்காலத்தில் ஹிந்துக்களுக்கு ரஸாயனத்தில் எவ்வளவு பயிற்சி இருந்ததென்பதைப் பற்றி ஒரு புஸ்தகம் எழுதும்படியும் கேட்டிருந்தார். அதற்கிசைந்து பழைய நூல்களையும் எட்டுப் பிரதிகளையும் அருமையான ஸம்ஸ்கிருத நூல்களையும் பார்த்து, புத்தகம் எழுதத் தொடங்கி 1902ம் வருஷத்தில் முதற்பாகத்தையும் 1907ம் வருஷத்தில் இரண்டாம் பாகத்தையும் எழுதி முடித்தார். அதிக சிரமப் பட்டு எழுதிய புத்தகமானதால் அப்புத்தகம் வெகு நன்றா யிருந்தது. அதைப் புகழாதா ரில்லை.


 5. ரசாயன வைத்தியசாலை ஸ்தாபிதம்.

 

இந்தியா கைத்தொழிலில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற ஆவல்கொண்டு 1892 - ம் வருஷத்திலேயே 'வங்காள ரஸாயன வைத்தியசாலை'' ஒன்றை ஸ்தாபித்தார். ஆரம்பத்தில் அதற்கு 800 - ரூபா தான் மூலதனம் இருந்தது. அதைக்கொண்டு ஒரு சிறு வீட்டை வாடகைக்கு வாங்கி அதில் வைத்திய சாலையை வைத்துக் கொஞ்சங் கொஞ்சமாய் விருத்தி செய்து தமது ஒழிவு நேரத்தையெல்லாம் அதற்கே அர்ப்பணம் செய்து அதைத் தம் கண்ணுக்குக் கண்ணாய்ப் பாராட்டி வருகிறார். மஹா யுத்த சமயத்தில் ரசாயன மருந்துக்கள் பல வேண்டு மென்று கேட்ட போது இச்சாலையிலிருந்தே பல வித உதவிகள் செய்தார். இவ்வைத்தியசாலைக்கு 1919 - ம் வருஷத்திலேயே 5 - லக்ஷம் ரூபாய் மூலதனம் சேர்ந்து விட்டதாம். ரஸாயன சாஸ்திர நிபுணர்கள் பலர் இதிலிருந்து பொதுஜன நன்மைக்கு உழைத்து வருகின்றார்கள். 1904 - ம் வருஷத்தில், கவர்னர் ஜெனரலாயிருந்த லார்டு கர்ஸன் பிரபு, ஐரோப்பாவிலுள்ள சர்வகலாசாலைகளில் சாஸ்திர ஞானம் சொல்லிக் கொடுப்பதை அறிந்துவர இவரை அயல் நாடுகளுக்கனுப்பி வைத்தார். அங்குசென்று புதிய விஷயங்கள் பலவற்றை அறிந்து கொண்டு திரும்பி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். அயல் நாடுகளில் இவருக்கு அரிய மரியாதைகள் நடந்ததோடு அயல் நாட்டுப் பத்திரிகைகளும் இவரைப் புகழ்ந்து எழுதியது.

 

6. மற்றும் பல வேலைகள்

 

1912 - ம் வருஷத்தில் பிரிடிஷ் ராஜ்யத்திலுள்ள சர்வ கலாசாலைகளின் முக்கிய அங்கத்தினர்கள் எல்லோரும் லண்டன் மாநகரில் ஒரு கூட்டம் கூடினார்கள். அதற்குக் கல்கத்தா யூனிவர்ஸிடியின் சார்பாக நமது ரே அவர்கள் லண்டனுக்குச் சென்றார். அங்கே'' சர்வ வித்யா பாரங்கதர்'' என்ற பெயர் வாங்கி ரசாயனப் பத்திரிகைகளில் பல வியாசங்கள் எழுதினார். இவைகளைக் கண்டு, டர்ஹாம் யூனிவர்ஸிடியார் இவரை வரவழைத்து டி. எஸ். வி. (D. S. C.) என்ற பட்டத்தை அளித்தார்கள். இப்படியே சில காலம் ஐரோப்பாவிலிருந்து மறுபடி கல்கத்தாவுக்குத் திரும்பி வந்தார்.

1916 - ம் வருஷம் பிப்ரவரி வார்டு ஹார்டிஞ்சு பிரபு அவர்கள் காசிமாநகரத்தில் ஹிந்து யூனிவர்ஸிடியை ஸ்தாபித்த சமயத்தில் ரஸாயன சாஸ்திரத்தைப் பற்றி இரண்டு மூன்று பிரசங்கங்கள் செய்தார்; இவரை அந்த யூனிவர்ஸிடியின் கௌரவ உபாத்தியாயராக நியமித்தார்கள்.
 

1918 - ம் வருஷத்தில் சென்னை யூனிவர்ஸிடியார் அழைப்பிற் கிணங்கி சென்னைக்கு வந்து இரண்டு பிரசங்கங்கள் செய்தார். அதற்காக யூனிவர்ஸிடியார் அளித்த வெகுமதியை ஏற்றுக்கொள்ளாமல் அதை மூல தனமாக வைத்து அதிலிருந்து வரும் லாபத்தை ரஸாயன சாஸ்திரத்தில் புத்தியுள்ள ஒரு பையனுக்கு வருஷா வருஷம் பரிசளிக்க வேண்டியதென்று ஏற்பாடு செய்து அதற்கு இந்திய நண்பராகிய காலஞ் சென்ற வெட்டர்பர்ன் பரிசு என்றும் பெயர் வைத்தார்.


7. சம்பூர்ணம்.

 

இவர் டாம்பீக மற்ற வாழ்கையிலேயே பிரியமுள்ளவர். தன் ஜன்ம பூமிக்கு தன்னாலியன்ற தொண்டு செய்து வருகிறார். இவரிடம் கவர்ன்மெண்டாருக்கு அதிக மரியாதை யுண்டு; அதற்கறி குறியாக 1919ம் வருஷத்தில் இவருக்கு "ஸர்'' என்ற பட்டத்தை யளித்தார்கள். இவர் தமது வயது முதிர்ந்த இக்காலத்திலும் சுற்றுப் பிரயாணங்கள் செய்து சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். சென்ற வருஷத்திலும் சென்னைக்கு வந்து போயிருக்கிறார். "கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு'' என்பதற் கிணங்க இவருக்கு செல்லுமிடங்களெல்லாம் தகுந்த உபசாரங்கள் நடக்கின்றன. இப்பேர்ப்பட்ட மஹான்கள் நீடித்த ஆயுளுடன் செழித் தோங்கி வாழவேண்டு மென்பதே நமது பிரார்த்தனை.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment