Monday, September 7, 2020

 வால்மீகி ராமாயணம்

 

(1) இது வேதங்களுக்கு ஒப்பானது என்று சம்க்ஷேப ராமாயணத்தில் 98 -வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றுமொரு ஸ்லோகம் வேதப்பொருளாகிய பரமபுருஷன் தசரதர் புதல்வராக அவதரித்த பொழுது வேதம் சாக்ஷாத் ராமாயண வடிவங் கொண்டு வால்மீகியினிடமிருந்து உண்டாயிற்று என்று சொல்லுகிறது. ஆதலால் வால்மீகி ராமாயணம் வேதத்திற்கு ஒப்பானது என்பது நிச்சயம். இதற்காதார மென்னவெனில் யஜுர்வேத சங்கிதை 24000 கிரந்தங்களாம். முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஒரு கிரந்தம் என்று சொல்வது வழக்கம். அது ஏழு காண்டங்களாக வகுக்கப்பட் டிருக்கிறது. அது போலவே வால்மீகி ராமாயணமும் 24000 - கிரந்தங்களாம். ஏழு காண்டங்களாகவும் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனது பற்றியும் இதை வேதத்திற்கு ஒப்பானது என்ற சொல்லலாம். இக்கருத்துடந்தான் வால்மீகி முனிவர் முதல் சர்க்கத்தில் முதல் ஸ்லோகத்தில் தைத்திரிய உபநிஷத்தில் ரிஷிகளெல்லாம் ஒன்று சேர்ந்து யோசித்து முத்திக்குத் தபமும் ஸ்வாத்தியாயமும் எதுவென்று ''ஸ்வாத்யாப்ரவசன ஏவேதிநாகோ மௌத கல்ய: தத்திதபஸ் தத்திதப:' என்ற வாக்கியங்களில் நிச்சயித்துள்ள தப : என்ற பதத்தையும் ஸ்வாத்தியாய; என்ற பதத்தையும் உபயோகித்துள்ளார் என்று கூறலாம்.

 

(2) தைத்திரிய சங்கிதையில் அநேகம் மந்திரங்கள் அடங்கியுள்ளன. அவைகளை நாம் முறைப்படி ஜபித்தால் விசேஷ பலனையும் அடையலாம். அதுபோலவே ராமாயணத்திலும் அநேகம் மந்திரங்கள் அடங்கியுள்ளன. அவைகளை ரிஷி, சந்தஸ், தேவதை முதலியவைகளுடன் ஜபிக்க பற்பல விசேஷ பலன்களையும் பெறலாம். மேலும் மந்திரங்களுக்கெல்லாம் மாதாவாகிய காயத்ரியும் இதில் அடங்கியுள்ளது. காயத்ரியின் முதலெழுத்தைக் கொண்டே இதுவும் துவக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் ஒவ்வொரு எழுத்தாக காயத்ரி சேர்க்கப்பட்டிருக்கிறது.
காயத்ரியின் ஏழு வியாகிருதிகளுக்கு ஒப்பாக இங்கு ஏழு காண்டங்களிருக்கின்றன.

 

(3) மற்ற காண்டங்களை விட சுந்தரகாண்டத்தில் அநேகம் மந்திரங்கள் அடங்கியுள்ளன. ஆனது பற்றியே சுதந்தர காண்டத்தை பலபேர் நித்தம் பாராயணம் செய்து வருகின்றனர். சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்யப் பல முறைகளுண்டு. சுந்தர காண்டத்தில் மொத்தம் அறுபத்தெட்டு சர்க்கங்களிருக்கின்றன. இவைகளை தினமொன்றுக்கு எழுவீதம் பாராயணம் செய்ய ஏழாவது தடவையில் ஏழாக முடியும். இது ஒரு முறை. " ராகவோ விஜயம் தத்யாத் மம சீதாபதி ப்ரபு " என்ற வாக்யத்தின் படி ரா2 க4 வோ4 வி4 ஜ யம் 1 தத்யாத்8, 1 ம5 ம, 5 சீ, 7 தாபதி, 6 ப்ரபு, 4 இவ்வாறு
கணக்கிட்டு முதல் நாள் இரண்டு சர்க்கங்களும் முறையே 4, 8 - ஆக பதினாறு
தினங்களில் பாராயணம் செய்து முடிப்பதுண்டு. இது ஒரு முறை. நாளொன்றுக்கு இருபத்தைந்து சர்க்கங்களாக இருபததைந்து தடவை பாராயணம் செய்து முடிப்பது முண்டு. இதுவும் ஒரு முறை. நாளொன்றுக்கு முப்பத்தி நான்கு சர்க்கங்கள் பாராயணம் செய்து இரண்டு நாட்களில் முடிப்பதும் உண்டு. இதுவும் ஒருமுறை. ராமாயணத்தில் ஏழுகாண்டங்களிலும் ஆங்காங்கு அடங்கியுள்ள மந்திரங்களையும் அவைகளின் ரிஷி, சந்தஸ், தேவதை, முதலியவற்றையும் இங்கு கூறுவோம்.

 

(4) பாலகாண்டத்திற்கு சதாசிவ ரிஷி, அனுஷ்டுப் சந்தஸ், ராமர்தேவதை. தசரதர் புத்திரகாமேஷ்டி செய்ததாகச் சொல்லும் சர்க்கத்தை முப்பத்திரண்டாயிரம் பாராயணம் செய்ய பிள்ளையில்லாதவர்கள் புத்திரபாக்கியத்தை அடைவார்கள். "அகம் வேத்மி மகாத்மானம் ராமம் சத்யபராக்ரமம்" இதற்கு ராமஷோடசாடிரி மாலாமந்திரம் என்று பெயர் சொல்வதுண்டு. இற்கு முன்போலவே, ரிஷி, சந்தோ தேவதைகளாம். நாலு அங்குலம் தங்கம் அல்லது வெள்ளித் தகட்டில் ஒரு ஷட் கோணத்தைச் செதுக்கி, ஷட் கோணத்திற்கு வெளியே பதினாறு இதழ்களுள்ள ஒருதாமரைப் பூவையும் செதுக்கி ஷட் கோணத்தினுள் ஓங்காரத்தையும் ஷட்கோணங்களல் ராம், ராமாய நம : என்ற மந்திரத்தையும், சிம் சீசாயைஸ்வாஹா என்ற மந்திரத்தை ஷட்கோண சந்தியிலும் இதழ்களில் அகம் வேத்மிமகாத்மானம் என்ற மந்திரத்தையும் ஒவ்வொரு எழுத்தாக எழுதி, இரண்டுபூபுரங்களை எழுதி அதற்குள் யந்திர காயத்ரி, மந்திர காயதரிகளையும் எழுதி, பூபுரத்தை மெய்யெழுத்துக்களால் அலங்கரித்து உண்டாகும் யந்திரத்தை
ராமசஹஸ்ர நாமத்தால் பதினாறு ஆயிரம் பூஜை செய்வதும் உண்டு. அவ்விதம் பூஜை செய்கிறவர்கள் இராமமூர்த்தியின் அனுக்கிரஹத்தால் திவ்யஞானம பெறுவார்கள். காலதர்மம் கதே' என்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கங்காவதரண சர்க்கத்தை ச்ரார்த்த காலத்தில் பாராயணம் செய்ய பிதுர்க்கள் திருப்தி அடைகின்றனர்.

 

(5) சுந்தரகாண்டத்திற்கும் முன் போலவே ரிஷி சந்தோ தேவதைகளாம். அனுமான் இலங்கைக்குப் போக கடல் தாண்டியதை வர்ணிக்கும் சர்க்கத்தை இருநூறு தடவை பாராயணம் செய்ய தண்ணீரால் ஏற்படும் ஆபத்து நீங்கிவிடும். “எனிர்ஜித்ய புரீம் லங்காம்” என்ற ச்லோகத்தை முப்பத்திரண்டாயிரம் ஜபிக்கிறவன் ராஜ தண்டனையினின்றும் நீங்குவான். அனுமான் சீதையைக் கண்ட கதையைச் சொல்லும் சர்க்கத்தை 32000 - ம் தடவை பாராயணம் செய்கிறவன் எல்லாவித சோகத்திலிருந்தும் நீங்குவான். திருஜடையின் கனவைச் சொல்லும் சர்க்கத்தைப் பாராயணம் செய்கிறவன் ஒருபொழுதும் கெட்ட கனவே காணமாட்டான். அனுமான் சீதையினிடம் கணையாழியைக் கொடுத்த சர்க்கத்தைப் பாராயணம் செய்கிறவன் காணாமல் போன பதார்த்தங்களை யெல்லாம் எளிதில் கண்டெடுப்பான். அனுமான் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட கதையைச் சொல்லும் சர்க்கத்தைப் பாராயணம் செய்கிறவன் எல்லா நிர்ப்பந்தத்திலிருந்து நீங்கி விடுவான். அனுமான் இலங்கையைச் சுட்ட கதையைச் சொல்லும் சர்க்கத்தை 32000 - ம் தடவை பாராயணம் செய்ய நெருப்பினால் நேரும் உபத்திரவத்திலிருந்து நீங்குவான். அப்பொழுது சீதை அக்னி பகவானை நோக்கி அனுமானுக்கு உபத்திரவம் நேரிடாமலிருக்க வேண்டு மென்று வணங்கிக் கேட்டுக் கொள்ளும் "சீதோபவ ஹனூமத:'' என்பதைக் கொண்டு முடியும் ஸ்லோகங்களை ஒரு வருஷ காலம் பாராயணம் செய்கிறவன் உஷ்ணத்தால் ஏற்படும் சகல வியாதிகளிலிருந்தும் விடுபடுவான்

 

(6) அனுமான் ஸஞ்சீவி என்ற ஒளஷதத்தைக் கொண்டு வந்த கதையைச் சொல்லும் சர்க்கத்தைப் பாராயணம் செய்கிறவன் எல்லாவித விஷங்களிலிருந்தும் நீங்குவான். இலக்குமணன் இந்திரஜித்தை வதைக்கும் பொழுது சொன்ன "தர்மாத்மா சத்ய சந்தஸ்ச' என்ற மாலா மந்திரத்தை 32, 000 – ம் தடவை ஜபிக்க சத்துருக்களை வெல்லுவான். நாலு அங்குலம் இரும்புத் தகட்டில் ஷட்கோண மொன்றைச் செதுக்கி அதைச் சுற்றி முப்பத்திரண்டு இதழ்களுள்ள தாமரைப் பூவையும் செதுக்கி ஷட்கோணத்தினுள் பிரணவத்தையும் ஷட்கோணங்களில்'ராம் ராமாய நம :'' என்ற மந்திரத்தையும் ஷட்கோண சந்தியில் ''சிம் சீதாயை ஸ்வாஹா'' என்ற மந்திரத்தையும் இதழ்களில் ''தர்மாத்மா சத்ய சந்தஸ்ச'' என்ற மாலா மந்திரத்தை ஒவ்வொரு எழுத்தாகவும் எழுதி இராடு பூபுரங்களை வரைந்து அதனுள் யந்திர காயத்ரி மந்திர காயத்ரிகளை எழுதி பூபுரத்தை மெய்யெழுத்துக்களால் அலங்கரித்து ராம சஹஸ்ர நாமத்தைச் சொல்லி யந்திரத்தை ஒரு வருஷம் பூஜை செய்ய சத்துருக்களை யெல்லாம் வென்று விடுவான். ஸ்ரீராமருக்கு அகத்திய முனிவர் உபதேசித்த ஆதித்ய ஹிருதயத்தை ஒவ்வொரு நாளும் பாராயணம்
செய்து அப்பெயர்களை நமோந்தமாக மாற்றி சூரியனைப் பூஜை செய்கிறவர்கள் நேத்திர வியாதி, உதர வியாதி முதலிய தீராத கொடிய வியாதிகளி லிருந்து நீங்கிச் சுகமடைவார்கள். ஸ்ரீராமர் ராவணனை சம்ஹாரம் செய்யும் கதையைச் சொல்லும் சர்க்கத்தைப் பாராயணம் செய்கிறவர் சகல துக்கங்களிலிருந்தும் நீங்கி பரமசுக மடைவார்கள்.

 

இதற்கு ஆதிகாவ்யம் என்றும் ஒரு பெயர் உண்டு. இராமாயணத்தில் அடங்கியுள்ள பற்பல கதைகளையும் படிக்குங்கால் 'விநாசகாலே விபரீத புத்தி: ", "கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே" என்ற நியாயமே விளங்குகிறது. உதாரணமாக சில கதைகளை இங்குக் கூறுவோம்.

 

(1) தசரத சக்கரவர்த்தி இளவரசனாக இருந்த பொழுது மாரி காலத்தில் ஒரு நாள் வேட்டைக்காகக் கானகம் சென்று இரவில் தண்ணீர் அருந்த வரும் மிருகங்களைக் கொல்லலாம் என்று எண்ணி ஒரு குளத்தின் அருகில் ஒளிந்திருந்தான். அங்கு அந்தகர்களான வயது சென்ற பெற்றோர்களுக்குத் தண்ணீருக்காக வந்த ஒரு ரிஷி குமாரன் தண்ணீர் எடுக்கும் பொழுது உண்டாய சப்தத்தைக் கேட்டு பிரமித்து தனது சப்தவேதி வித்யையின் சாமர்த்தியத்தைக் கொண்டு சப்தம் வரும் திசையை நோக்கி அம்பு எய்தான். பிறகு அங்கு சென்று பார்த்த பொழுது குற்றுயிராகக் கிடக்கும் ரிஷி குமாரனைக் கண்டான். ரிஷி குமாரன் வார்த்தைப் பிரகாரம் தண்ணீருடன் அந்தரிஷியிடம் சென்று அங்கு நடந்த சமாசாரத்தைத் தெரிவிக்க அவரும் அரசில்லையோ அரசாணையும் இல்லையோ, வேலியே பயிரைத் தின்றுவிட்டதே, என் அருமை மகனை மாய்த்த மாபாபி மன்னா, நீயும் என்னைப்போல் பிள்ளையைப் பிரிந்து மரண மடைவாயாக என்று சாபமிட்டார். ஐயோ! கஷ்டம்! தசரத சக்கரவர்த்திக்கும் கேடுவரும் முன்னே மதி கெட்டது.

 

(2) போர்க்களத்தில் தனது பிரிய மனையாளாகிய கைகேயி புரிந் தஉதவிக்கு மெச்சி தசரதர் அவளுக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தார். கைகேயியும் தனது கணவனை நோக்கி நாதா இவ்விரு வரங்களும் தங்களிடமே இருக்கட்டும். வேண்டும் பொழுது வாங்கிக் கொள்வேன் என்று வைத்திருந்த இருவரங்களைக் கொண்டு இராமரைக் காட்டிற்குத் துரத்தினாள். தசரதரும் ரிஷி வாக்கியத்தின் படி பிள்ளையைப் பிரிந்து மரித்தார். அந்தோ கஷ்டம். தசரதருக்கு வரம் கொடுக்க புத்தி நேர்ந்தது. கைகேயியும் வரத்தைப் பெற்று இராமரைத் துரத்தி புருஷனை இழந்தாள். வைதவ்யம் அடைந்தாள். ஐயோ! கஷ்டம்! கைகேயிக்கும் கேடு வருவதற்கு முன்மதி கெட்டது.

 

(3) இராமர் சீதை இலக்குமணர்களுடன் காட்டிற்குச் சென்றார். அதுபொழுது காட்டிற்குச் செல்லவேண்டாமென்று வசிஷ்டர் முதலிய குருக்கள் சொன்ன போதிலும் அவர்களின் வார்த்தையைச் சிறிதும் கவனியாமல் சீதையும் காட்டிற்குச் சென்றாள். அங்கு அநேக துன்பங்கள் அடைந்தாள். சீதைக்கும் கேடுவரும் முன்பே மதி கெட்டது. அங்கு பொன்மானாக மாறிய மாரீசனுடைய உதவியைக் கொண்டு இராவணன் சீதையை அபகரித்தான். அது ஏதுவாக இராவணன் இறந்தான். இராவணனுக்கும் கேடு வரும் முன்னே மதி கெட்டது. மாரீசனும் இராமரால் வதைக்கப்பட்டான். அவனுக்கும் மதி கெட்டது. பொன்மானைப் பிடிக்க சீதை தன் கணவனை வேண்டினாள். சீதைக்கும் மதி கெட்டது. இராமரும் அதற்கு இசைந்தார். ஐயையோ! கஷ்டம்! அவருக்கும் மதி கெட்டது.

 

ஆனந்த போதினி – 1929 ௵ -

அக்டோபர், நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment