Tuesday, September 8, 2020

 

ஸ்ரீமதி சாரதாமணி தேவியார்

தொகுப்பு

A. துரை.

 

 

 

 

மாத இதழ்

1927 ஆகஸ்ட் யில் இருந்து 1928 ஜனவரி வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 


 

ஸ்ரீமதி சாரதாமணி தேவியார்

இவர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மனைவியார். இவ்வம்மையாரின் ஜீவியசரிதம் ஆங்கிலமுணர்ந்தோர் படித்துணரும் பொருட்டு மாடர்ன் ரெவ்யூவில் இராமாநந்த சட்டர்ஜீ அவர்களால் ஆங்கிலத்தில் எழு தப்பட்டிருக்கிறது. அது, தமிழ் மக்கட்கும் பயன்படுமாறு அதனைத் தமிழில் மொழிபெயர்த்து யாம் வெளியிடுகிறோம்:

 

இந்துக்களுடைய சாஸ்திரங்கள் கிரகஸ்தர்களையும், சந்நியாசிகளையும் பாராட்டுகின்றன. கிரகஸ்தன் ஒருவன் தான் மற்ற ஆசிரமங்களிலுள்ளவர்களுக் கெல்லாம் அடிப்பீடமாயிருக்கிறான் என்பதை உண்மையாகவே அவை எடுத்துரைத்து வருகின்றன. எல்லாருமே சந்நியாசிகளாகவும் கிரகஸ்தர்களாகவும் இருந்து விட முடியாது. சந்நியாசி, கிரகஸ்தன் ஆகிய இவர்களில் யாராயிருந்தபோதிலும் அவர்களுடைய தாரதம்மியங்களை அறிந்து நாம் அவர்களை மதிக்கவேண்டுமேயல்லாமல் வெளிவேஷங்களைக் கொண்டு மயங்கி விடக்கூடாது.

 

சந்நியாசிகளா யிருப்பவர்கள் பிறந்தது முதல் பிரமச்சரிய விரதத்தை மேற்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அப்படியில்லாது கலியாணம் செய்து கொண்டு மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்களாயிருந்தாலும் அந்தப் பந்தங்களையெல்லாம் ஒழித்துவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டவர்களாயிருக்கிறார்கள். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அவருடைய இருபத்தினான்காவது வயதில் திருமணம் நடந்தேறியது. ஆனாலும் அவர் சந்நியாச வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தார். அவருடைய சம்மதியில்லாமல் அவருக்குக் கலியாணம் நடக்கவில்லை. அவருடைய முழுச் சம்மதத்தின் பேரில் அவருக்குக் கலியா ணம் நடந்தது. அவர் தம்முடைய மனைவியாராகிய சாரதாமணிதேவியாரைத் தாமாகவே பெரியவர்களின் முன்னிலையில் தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்பது நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய மனைவியுடன் அவர் மற்ற கிரகஸ்தர்களைப்போல் வாழவில்லை. மனைவியுடன் தேகசம்பந்தம் வைத்துக்கொள்ளாமல் அவர் தம்முடைய காலத்தைக் கழித்து வந்தார். இதைக் கொண்டு அவர் தம்முடைய மனைவியைப் புறக்கணித்து விட்டார் என்று எண்ணி விடக்கூடாது. அவர் தம்முடைய மனைவியை அரு கிலேயே வைத்துக் கொண்டிருந்தார் அவர் தம்முடைய செயல்களாலும் அன்புபொருந்திய கட்டளைகளாலும் தம்முடைய மனைவியைத் தமக்கு உற்ற துணைவியாகவும் நண்பியாகவும் செய்துகொண்டார். ஸ்ரீ இராமகிருஷ்ண பரம ஹம்சரின் குணாதிசயங்களில் இஃதொன்று. அவரைப்போல் அவருடைய மனைவியராகிய ஸ்ரீமதி சாரதாமணி தேவியாரும் அநேக நற்குணங்களைத் தம்மிடத்தே கொண்டு விளங்கினார் என்பதற்கு அநேக சான்றுகள் இருக்கின்றன. ஸ்ரீ இராமகிருஷ்ணர் அந்த அம்மையாரை நற்குணங்களில் திருத்தியவராயிருந்தாலும் அம்மையாரும் அதற்குத் தக்கபடி மனமிசைந்து நடந்தது தான் விசேடத்திலும் விசேடமாகும். ஓர் உபாத்தியாயரிடத்தில் படிக்கும் எல்லா மாணவர்களும் உயர்ந்த அறிவையும் குணாதிசயங்களையும் ஒரேபடித்தாக அடைந்துவிடல் முடியாது; இயற்கையில் குருபோதனைக் கிசைந்து நடக்கும் குணமுடையோரே அவற்றை அடைதல் கூடும்.

 

இத்தகைய ஸ்ரீமதி சாரதாமணி தேவியாரின் வாழ்க்கையைப்பற்றிய சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியது அத்தியாவசியமாகின்றது. ஆனாலும் அந்த அம்மையாரைப் பற்றிய வரலாறுகள் முழுமையும் கிடைப்பது அருமையாயிருக்கின்றது. ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் சரித்திரத்தில் ஆங்காங்குக் கிடைக்கும் விஷயங்களைக் கொண்டு தான் அந்த அம்மையாரின் சரித்திரம் ஒருவாறு தெரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கிறது.

 

ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கு அவருடைய பெற்றோர்கள் குழந்தைப் பருவத்தில் "காதா தார்'' என்னும் நாமகரணம் செய்திருந்தார்கள். அவர் சிறு வயது முதற் கொண்டே உலக விஷயங்களில் பற்றுக்கொள்ளாமலும், மனத்திருப்தியில்லாமலும் சித்தப்பிரமை கொண்டவர்போல் இருந்து வரலானார். இவ்வாறு இருப்பதைக்கண்ட அவருடைய தாயாரும் தமையனாரும் அவருக்குக் கலியாணம் செய்துவிட்டால் அவருடைய சித்தப்பிரமை நீங்கிவிடுமென்று எண்ணித் தங்களுக்குள்ளாகவே இரகசியமாய் அதைப்பற்றி ஆலோசிக்கலானார்கள். ஆனாலும் அவ்விஷயம் காதாதாருடைய செவிக்கெட்டியது. அதற்கு அவர் ஒருவித ஆட்சேபமுஞ் செய்யவில்லை. கலியாண விஷயத்தைக் கேட்டு அவர் ஆனந்தங் கொள்ள ஆரம்பித்தார்.

 

தகுதியான பெண்ணைப் பார்த்து அவருக்கு விவாகம் முடிப்பதற்காக அவரைச் சார்ந்தவர்களால் நாலா பக்கங்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் சென்ற காரியத்தில் ஜெயம்பெறாமல் திரும்பிவிட்டார்கள். அவர்கள் திரும்பிவந்ததைக் கண்ட காதாதார், பங்கூரா ஜில்லாவைச் சேர்ந்த ஜெயராம்பதி வாசியான இராமச்சந்திர முக்கர்ஜியின் பெண்ணாகிய சாரதா மணி தேவியைக் குறிப்பிட்டார். அதன் மேல் அவருடைய தாயாரும் தமையனாரும் அப்பெண்மணியை விசாரிக்க ஆளனுப்பினார்கள். பின்னர் எல்லாவித ஏற்பாடுகளும் தங்கு தடையின்றி நிறைவேறலாயின.

 

அதன்மேல் வங்காளி வருஷம் 1266 வைகாசி மாத பிற்பாதியில் காதாதாருக்கும் இராமச்சந்திர முக்கர்ஜியின் பெண்ணாகிய சாரதாமணி தேவியாருக்கும் விவாகம் சிறப்பாக நடைபெற்றது. கலியாணமாகும் போது காதாதாருக்கு இருபத்து மூன்று வயது முடிந்து இருபத்துநான்காவது வயது நடந்து கொண்டிருந்தது. சாரதாமணி தேவிக்கு ஐந்து வயது.

 

கலியாணகாலத்தில் தம்முடைய குடும்பத்தின் கௌரவம் போகாமல் இருப்பதற்காகவும், பெண் வீட்டார் தம்மை ஏளனஞ் செய்யாமல் இருப்பதற்காகவும் காதாதாரின் தாயாகிய சந்திரா தேவியார் தமக்குத் தெரிந்த அண்டை வீட்டிலுள்ளவர்களிடமிருந்து சில நகைகளை இரவலாக வாங்கித் தம்முடைய மருமகளுக்கு அணிந்தார். கலியாணமான சில தினங்கள் கழித்து அந்நகைகளைச் சொந்தக்காரர்களுக்குத் திருப்பிக்கொடுக்குஞ் சந்தர்ப்பம் வந்தது. காதாதாரின் தாயார் அந்நகைகளைக் கொடுத்து விட்டால் தம்முடைய மருமகளுக்கு அணிந்து கொள்ள வேறு நகைகள் இல்லையே யென்று மிகவும் வருத்தப்பட்டார். தம்முடைய தாயாருக்கு நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட நேர்ந்ததினால் ஏற்பட்ட மனக்கஷ்டத்தைக் காதாதார் அறிந்து கொண்டார். அங்ஙனம் அறிந்து கொண்ட அவர், தம்முடைய தாயாருக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறி, தம்முடைய மனைவி தூங்கிக் கொண்டிருக்கையில் அவ்வம்மையார் மேலிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். அந்த அம்மையார் விழித்தெழுந்தவுடன் தம் முடைய தேகத்தில் நகைகள் இல்லாததைக் கண்டு 'என்னுடைய நகைகள் எங்கே போய்விட்டன?' என்று மனங்கலங்கலானார். அதைக்கண்ட சந்திராதேவி தம்முடைய மருமகளை மடியின் மேல் தூக்கி வைத்துக்கொண்டு " காதாதார் இன்னுஞ் சிலகாலங் கழித்து இப்போது உன்னுடைய தேகததிலிருந்து கழற்றிவிடப் பட்ட நகைகளைக் காட்டிலும் அதிக விலை உயர்ந்த நகைகளை உனக்குக் கொடுப்பான்'என்று கனிந்த மொழிகளால் அவருக்குத் தேறுதல் சொன்னார்.

 

நகைகளைக் கழற்றியதைப்பற்றிய விஷயம் இத்துடன் நின்றுவிடவில்லை. காதாதார் நகைகளைக் கழற்றிய அதே தினத்திலேயே கலியாணப் பெண்ணின் சிற்றப்பன் அவர்களுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் இவ்விஷயம் தெரிய வந்தது. அவர் இதைக் கேட்டு மனத்தில் அதிருப்தி கொண்டவராய்த் தம்முடைய அண்ணன் குமாரத்தியைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இங்ஙனம் நடந்துவிட்டதைக் கண்ட சந்திராதேவி மிகவும் மனங்கலங்கினார். அவருடைய மனக்கலக்கத்தைக் கண்ட காதாதார் அந்த அம்மையாரைப்பார்த்து, '' கலியாணம் ஆய்விட்டது ஆய்விட்டதுதான். இனி பேச்சாலும் செயலாலும் அதை நிவர்த்திக்க மார்க்கமில்லை. நீங்கள் என் வீணில் மனக்கலக்க மடைகின்றீர்கள்; கவலையை விட்டுத் திருப்தியுடன் இருங்கள்'' என்று கூறினார்.

 

தம்முடைய தாயார் வீட்டிற்குச் சென்றிருந்த சாரதாமணி தேவியார் வங்காளி 1267 -ம் வருஷத்தில் காதாதாருடன் அவருடைய சொந்த ஊராகிய காமார்புகூருக்கு வந்து சேர்ந்தார். இதற்குப் பின் ஸ்ரீ இராமகிருஷ்ணர் அநேக வருடங்கள் வரை காமார்புகூரை விட்டு வெளியே சென்றிருந்தார். வெளியே சென்றிருந்த காதாதார் வங்காளி 1274 - ம் வருடத்தில் தம்முடைய ஆன்மார்த்த விஷயங்களில் தமக்குத் துணை புரிந்த பிராமண ஸ்திரீயுடனும் தம்முடைய சகோதரர் புத்திரராகிய ஹரிதேவ் என்பாருடனும் தம்முடைய சொந்த ஊரை வந்தடைந்தார்.

 

அவர்  அநேக ஆண்டுகள் கழிந்த பின் திரும்பி வந்ததைக்கண்ட தாயாரும், மற்றுமுள்ள உறவின் முறையினரும் கரைகடந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அதன்மேல் பெண்பிள்ளைகள் ஸ்ரீ இராமகிருஷ்ணரையும் சாரதாமணி தேவியாரையும் உலகா நுபவசுகங்களில் ஆழ்த்திவிட முயற்சித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். கலியாணமாகிப் புருஷன் வீட்டிற்கு வந்து, சிற்றப்பனுடன் தாய்வீடு சேர்ந்திருந்து, மேற்கூறியபடி வங்காளி 1267 - ம் – புருஷன் வீடு வந்த போது ஒரே தடவைதான் சாரதாமணி தேவி தம்முடைய புருஷனைப் பார்த்தார். அது காலை அவருக்கு ஏழு வயது தான் ஆகி யிருந்தது. அதன்பின் அவருக்குப் பதின்மூன்று வயதான போது அவர் தம் கணவருடைய இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் அவ்விடத்தில் ஒரே ஒரு மாதகாலம் வரைதான் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்தில் தங்கியிருந்தபடியால் ஸ்ரீமதி சாரதாமணிதேவி அவரைக் காணக்கூடவில்லை. பின் தாய் வீடு சேர்ந்தார். அதன் பிறகு சுமார் ஆறுமாதங்கழித்து ஸ்ரீமதி தேவியார் திரும்பவும் தம்முடைய கணவனாருடைய சொந்த ஊருக்கு வந்து ஆறுவாரகாலம் வரை அவ்விடத்தில் தங்கியிருந்தார். அப்போதும் ஸ்ரீ இராமகிருஷ்ணரைப் பார்க்கக்கூட வில்லை. பின் ஸ்ரீ தேவியார் தம்முடைய பெற்றோர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விட்டார். அந்த அம்மையார் சென்ற மூன்றல்லது நான்கு மாதங்கள் கழித்து ஸ்ரீ இராமகிருஷ்ணர் தம்முடைய சொந்த ஊராகிய காமார்புகூருக்கு மேற்கூறியபடி வந்து சேர்ந்தார். இவ்விஷயம் தேவியாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் வீட்டைந்தார். அப்போது அவருக்குப் பதின்மூன்று ஆண்டுகளும் ஆறல்லது ஏழுமாதங்களும் ஆகியிருந்தன.

 

தம்முடைய மனைவியார் வந்து சேர்ந்தவுடன் ஸ்ரீ இராமகிருஷ்ணர் அந்த அம்மையாருக்குக் கல்வி கற்பிக்கவும், அந்த அம்மையாரின் தேகசௌகரியத்தைக் கவனிக்கவும் ஆரம்பித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய குருவான தோதாபூரி என்பார் அவருக்குத் திருமணம் நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டு "இவருக்குக் கலியாணம் ஆகியிருந்தாலும் தோஷமொன்றுமில்லை; இவர் பிரம்மத்தை உள்ளபடி யறிந்துள்ளார்; மனைவியுடன் இவர் கூடி வாழ்ந்தாலும் இவருடைய நிலைக்கு ஒருவித தோஷமும் ஏற்படாது; பிரம்மவித்தையை இவர் ஒருவர் தாம் உள்ளபடியே அறிந்தவர்; இவர் ஆணையும் பெண்ணையும் எத்தகைய வித்தியாசமுமின்றி ஒரேபடித்தாகக் காணும் நேர்மையுடையார்; ஜனங்களை ஆத்மாவுக்கு நிகராகமதித்துஅதற்குத் தக்கபடி நடந்து கொள்ளும் பான்மையுடையார்; ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசங் கற்பிக்கிறவர்கள் பிரமத்தை அடையார்; அதற்கு வெகு தூரத்திலிருப்பவர்களாவர்'' என்று அவர் விஷயத்தில் அபிப்பிராயங் கொண்டார்.

 

தம்முடைய குரு கொண்டிருந்த அபிப்பிராயத்தின்படியே ஸ்ரீ ராமகிருஷ்ணர் காரியங்களை நடத்தலானார். அவர் தம்முடைய கடமைகளை அரைமனதுடன் செய்யாமல் முழுமனதுடன் செய்து வந்தார். தம்முடைய மனைவிக்குக் கல்வி கற்பிக்க வாரம்பித்த ஸ்ரீ ராமகிருஷ்ணர், அந்த அம்மையாருக்குக் கடவுள் பக்தி, குருபக்தி ஆகிய இவைகளைப் பற்றியும், விருந்தினர்களை உபசரிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும், வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டிய தன் அவசியத்தைப் பற்றியும், பணத்தைச் செட்டாய்ச் செலவு செய்யவேண்டியதன் முறைகளைப் பற்றியும், விரிவான நீதிகளை எடுத்தோதி அவர் எல்லா நற்காரியங்களிலும் திறமைசாலியாகச் செய்துவிட்டார். பின்னும் எப்போதும் கடவுளிடத்தில் இடையறாத அன்புபூண் டொழுக வேண்டுமென்றும், எத்தகையோரிடத்திலும் எத்தகைய செல்வம் வந்துற்ற காலையிலும் அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டு மென்றும் அந்த அம்மையாருக்கு எடுத்துக்கூறி அவை பசுமரத்தாணியைப் போன்று அவ்வம்மையாரின் மனதில் பதியும்படியும் செய்து விட்டனர்.

 

ஸ்ரீமதி தேவியார் பதினான்காவது வயதில் மேற்கூறியபடி தம்முடைய கணவனாரிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தார். அவர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடைய அன்பையும், ஆதரவையும் அனுபவித்து அவருடன் வசிப்பதைப் பெரும் பேறாகக் கருதினார். இதை ஸ்ரீ தேவியார் பிற்காலத்தில் தம்முடைய கணவனாருடைய சிஷ்யைகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். "என்னுடைய கணவனார் எனக்குப் புத்திமதிகள் போதித்ததிலிருந்து என்னுடைய இருதயத்தில் ஞானம் நிறைந்த ஒரு குடத்தை வைத்து விட்டாதாக எனக்கு உணர்வு ஏற்பட்டிருந்தது; என்னுடைய மனதிடை ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியையும் சாந்தத்தையும் அளவிட்டுரைத்தல் முடியாது'' என்று அவர் அடிக்கடி சொல்லுவது வழக்கம்.

 

சிலமாதங்கள் கழித்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரத்திற்குச் சென்றுவிட்டார். ஸ்ரீ சாரதாமணி தேவியார் பேரானந்தத்தை அடைந்து விட்டதாக எண்ணித் தம்முடைய பெற்றோர்கள் வீட்டிற்குச் சென்று விட்டார். தம்முடைய கணவனார் தம்மைவிட்டு தக்ஷிணேஸ்வரத்திற்குச் சென்றுவிட்டதற்காக மனவருத்தங் கொள்ளாமல் அமைதியாகவும் தன்னலமற்றும் இருந்து வந்தார்.

 

தம்முடைய பெற்றோர்களின் வீட்டிற்குச் செல்ல நேரிட்டதற்காக ஸ்ரீமதி தேவியார், வருத்தப்படவில்லை. அவ்விடத்தில் அமைதியாகவும், சுயநலத்தை விரும்பாமலும் காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். தம் சொந்த சௌகரியங்களை யெல்லாம் அவர் அறவே மறந்து விட்டார். பிறருடையதுயரைக் கண்டு அநுதாபப்பட்டு அவர்களை அத்துயரங்களினின்று நீக்கத் தம்மாலான முயற்சிகளையெல்லாம் செய்துவந்தார். இதனால் அவர் அன்பே ஓர் உருவெடுத்து வந்ததைப் போன்றிருந்தார். இவ்வாறு பிறருக்கு உதவி செய்வதில் ஈடுபட்டிருந்ததினால் அவர் தம் கஷ்டங்களையெல்லாம் அறவே மறந்திருந்தார். இவ்வண்ணம் அவர் தம் பெற்றோர்கள் இல்லத்தில் வசித்துக் கொண்டிருந்தாலும், அவருடைய மனமானது தக்ஷிணேஸ்வரத்திலிருந்த அவருடைய கணவரிடமே செலுத்தப்பட்டிருந்தது. அவரை அவ்விடத்திற்குச் சென்று பார்க்க வேண்டுமென்று ஸ்ரீமதி தேவியார் அடிக்கடி எண்ணுவதுண்டு. ஆனாலும் அவ்வாசையை அடக்கிக் கொண்டிருந்தாரே யன்றி நிறைவேற்றிக் கொள்ளவில்லை. சமயம் நேர்ந்த போது ஸ்ரீராம கிருஷ்ணர் தம்மை அவரிடம் அழைத்துக் கொள்வார் என்று மனதைத் திருப்தி செய்து கொண்டிருந்தார். தம் கணவனார் தம்மை அழைத்துக் கொள்ளும் நாள் வருமென்று பொறுமையுடனிருந்து தம் காலத்தைக் கழிக்கலானார்.

 

இப்படி இருந்து கொண்டிருக்கையில் வங்காளி 1278 - ம் ஆண்டு பாஷ் மாதத்தில் அவர் தம்முடைய பதினெட்டாவது வயதில் புஷ்பவதியாயினார். தம்முடைய கணவனாருடைய தெய்வீக சக்தியைக் கண்டு ஸ்ரீமதி தேவியார்வருத்தமேனும் ஆனந்தமேனும் கொள்ளாமல் வாழ்க்கையை நடத்திவந்தார். எனினும் அவருடைய உறவினர், அவா அந்நிலையிலேயே யிருந்து வர இடங்கொடுக்கவில்லை, அவ்வம்மையார் வசித்து வந்த கிராமத்திலிருந்த ஸ்திரீகள் அடிக்கடி அவ்வம்மையாரைப் பார்த்து 'உன்னுடைய புருஷன் ஒரு பைத்தியக்காரன்; அவன் தெய்வங்களின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகிறான்: அத்தகைய பைத்தியக்காரனுக்கு நீ மனைவியானதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்' என்று அடிக்கடி சொல்லி வந்தார்கள். அவர்கள் அங்ஙனம் சொல்வதை அம்மையார் விசேஷமாகக் கவனிப்பதில்லை. எனினும் சிற்சில
'சமயங்களில் அவர்களுடைய சொற்கள் அம்மையாரின் இருதயத்தில் பதிய வாரம்பித்தன. அதனால் அவர், நம்முடைய கணவர் இவர்கள் சொல்லுகிறபடி பைத்தியம் பிடித்தவராய்த்தான் இருப்பாரோ? என்று சந்தேகித்துத் தமக்குத் தம் பெற்றோர் வீட்டில் வேலையில்லை யென்றும், தம் கணவரிடஞ்சென்று அவருக்கு வேண்டிய உபசாரங்களையும் சௌகரியங்களையும் செய்து வருவதே தம்முடைய கடமை என்றும் எண்ணலானார். கடைசியில், தாமாகவே தக்ஷிணேஸ்வரம் சென்று தம் கண்ணாலே ஸ்ரீராமகிருஷ்ணரின் நிலையை யுணர வேண்டுமென்றும், அதற்கு மேல எங்கனம் நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறே நடந்து கொள்ளலாமென்றும் அவர் தீர்மானித்தார்.

 

அம்மையார் இத்தகைய தீர்மானத்தோ டிருக்கையில், அவருடைய சுற்றத்தார்களிற் சிலர், அவ்வருடத்திய பங்குனிமாத பௌர்ணமியன்று நடைபெற்ற ஸ்ரீசைதன்னிய மகரிஷியின் ஆண்டு விழாவினிமித்தம் கல்கத்தாவிற்குப் போய்க் கங்கையில் தீர்த்தமாடத் தீர்மானித்திருந்தனர். தேவியார், அவர்களுடன் தாமும் செல்ல விரும்பி, அவ்விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அவ்விஷயத்தை அம்மையாரின் தகப்பனாரிடம் தெரிவித்தார்கள். அவர் தாமே தேவியாரைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அக்காலத்தில் ஜெயராம் பதியிலிருந்து கல்கத்தாவுக்குச் செல்ல ரெயில்வே சௌகரியம் இல்லாதிருந்தது. பிரயாணிகள் கால் நடையாக வேனும் பல்லக்கு மூலமாகவேனுந்தான் அங்கே செல்ல வேண்டும். பல்லக்கை அமர்த்திக் கொள்வது பணக்காரர்களுக்குத்தான் முடியும்; மற்ற வர்க்கு இயலாது; ஆதலால், அதிகப்பணம் படைக்காத இராமச்சந்திர முக்கர்ஜி என்பார் தம் குமாரத்தியாகிய ஸ்ரீமதி தேவியாருடன் கால் நடையாகக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். அவர்களுடன் இன்னும் சிலரும் சென்றார்கள். அவர்கள் நடந்து சென்ற வழி நெடுக, கண்ணைக் கவரத்தக்க நெல் விளையும் நிலங்கள், பச்சைப்பசேலென்று காணப்பட்ட படியால், அவர்களுக்கு முதல் இரண்டு தினங்கள் வரை நடப்பதன் கஷ்டம் தெரியாமலே இருந்தது. இன்னும் அவ்வழியின் இடை யிடையில் தாமரைத் தடாகங்களும் இருந்தன. ஆதலின் அவர்கள் அத்தடாகங்களில் நீரை அருந்தியும், மரங்களின் நிழலில் தங்கி இளைப்பாறியும் சென்று கொண்டிருந்தார்கள். இதே மாதிரி, அவர்கள் பிரயாணம் முடியும் வரையிலும் இருக்கவில்லை. ஸ்ரீமதி தேவியார் நடந்து பழக்கமில்லாதவராகையால் சில தினங்களுக்குப்பின் சுரநோய் கொண்டு வருந்தினர். தம்முடைய குமாரத்திக்குச் சுரம் ஏற்பட்டதைக் கண்ட ஸ்ரீராமச்சந்திர முக்கர்ஜியானவர் பெரிதும் கவலையுறலானார். அத்தகைய நிலையிலுள்ள அம்மையாரைக் கால் நடையாகப் பின்னரும் அழைத்துச்செல்வது தகுதியல்லவென்று கருதி, அவருடன் வழியிலிருந்த ஒரு சாவடியில் ஓர் இரவு தங்கினார்.

 

அவ்வாறு தங்கி மறுநாட்காலையில் எழுந்து தம் குமாரத்தியைப் பார்த்தார். அப்போது ஸ்ரீமதி தேவியாருக்குச் சுரம் முழுமையும் நீங்கியிருந்தது. அதன் மேல் அவர், சத்திரத்தில் இருப்பதைக் காட்டிலும் மெதுவாக நடந்து செல்லுதல் உசிதமென்று கருதித தம் எண்ணத்தை அம்மையாரிடம் தெரிவித்தார். அதற்கு அம்மையாரும் சம்மதித்தார். இருவரும் அச்சத்திரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அவ்வாறு புறப்பட்டுச் சற்று தூரம் போகவே அவர்களுக்கெதிரில் ஒரு பல்லக்கு வந்தது. அதை அவர்கள் குடிக்கூலிக்குப் பேசி அதில் ஏறிச்சென்றார்கள். அத்தினத்திலும் ஸ்ரீமதி தேவியாருக்குச் சுரம் வந்தது. ஆனால் அந்தச் சுரமானது முந்திய நாள் வந்த சுரத்தைப் போல் அவ்வளவு கடுமையாயில்லை. அம்மையார், அதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளாமலிருந்தார். அன்றிரவு ஒன்பது மணிக்கு அனைவரும் தக்ஷிணேஸ்வரம் போய்ச் சேர்ந்தார்கள். அம்மையார் மிகவும் நோய் கொண்டு வந்ததைக் கண்ட ஸ்ரீராம கிருஷ்ணர் மிகவும் கவலையுற்றார். தேவியாரைவெளியில் படுக்கவைத்தால், அம்மையாருக்கு ஜலதோஷம் காணுமென்று கருதியவராய், தம் அறையிலேயே அவருக்கும் படுக்கையை அமைத்து அதில்அவரைப் படுக்கவைத்தார். அங்ஙனம் படுக்கவைத்து அம்மையார் அருகில், இருந்து வருத்தத்துடன் 'நீ நோயுடன் வந்திருக்கிறாய்; இச்சமயத்தில் செஜோபாபு இவ்விடத்தில் இல்லை; அவர் இருந்தால் உனக்கு எல்லாவித சௌகரியங்களும் செய்து வைப்பார்' என்று கூறினார். பின்னர் அவரால் ஸ்ரீதேவியாருக்கு வேண்டிய வைத்திய சிகிச்சைகளும், மற்றுமுள்ள சௌகரியங்களும் செய்யப்பட்டு வந்தன. அவற்றால், தேவியார் நான்கு தினங்களுக்குள் சௌக்கியமடைந்து விட்டார்.

 

அம்மையாரை இத்தினங்களிலெல்லாம் ஸ்ரீராம கிருஷ்ணர் தம் அறையிலேயே வைத்து அவருக்கு வேண்டிய மருந்துகளையும் ஆகாராதிகளையும் தாமே கொடுத்து வந்தார். அம்மையார் குணப்பட்டவுடன், அவர், கோயிலின் எல்லைக்குச் சிறிது தூரத்திலிருந்த ஓர் அறையில் தேவியாரைத் தம்தாயாருடன் வசித்துவரச் செய்தார். ஸ்ரீராம கிருஷ்ணருக்கும் அவருடைய தாயாருக்கும் அம்மையார் ஊழியஞ் செய்வதிலேயே தம் காலத்தைக் கழிக்கலானார். தேவியாரின் தகப்பனாரும் வந்து அவரிருக்கும் சந்தோஷ நிலைமையைக் கண்டு ஆனந்தித்துச் சென்றார். ஸ்ரீ இராம கிருஷ்ணர் தம் மனைவிக்கு ஒழிந்த வேளைகளில் ஆத்மார்த்தமான உபதேசங்களையும், கைக்கொள்ள வேண்டிய கடமைகளையும் சொல்லி வந்தார். இச்சந்தர்ப்பத்தில் தான் அவர் தம் மனைவிக்கு "சந்திரனானவன் குழந்தைகளுக்கெல்லாம் மாமனாயிருப்பதைப் போல் கடவுள் அனைவருக்கும் சமீபமாகவும் அன்புடையவனாகவு மிருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவனிடம் முறையிட்டுக் கொள்ள உரிமையுண்டு" என்று கூறினார்.

 

வங்காளத்தில் குழந்தைகள் சந்திரனைத் தாயுடன் பிறந்த சகோதரன் அல்லது மாமா என்று அழைப்பது மரபு. அவர் தம்மிடம் வந்து கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு வாசா கைங்கர்யமாகப் போதிப்பதுடன் நின்று விடுவதில்லை; அவர்களை அருகில் வைத்துக் கொண்டு தம் அன்பினால் அவர்கள் மனதைக் கொள்ளை கொள்வது வழக்கம். அவர் அங்ஙனஞ் செய்து அதற்கு மேல் அவர்களுக்கு முறையான கல்வியைக் கற்றுக் கொடுத்து அதன்படி செய்கையில் நடக்கிறார்களா என்று கவனித்து, தவறும் காலையில் அத்தவறுகளினின்று நீக்கி நல்வழியில் பிரவர்த்திக்கச் செய்வது வழக்கம். இதே வழக்கத்தை அவர் ஸ்ரீமதி தேவியார் விஷயத்திலும், கையாளவாரம்பித்தார். அவர் சிறுசிறு விஷயங்களையும் ஸ்ரீமதி தேவியாருக்கு மிகவும் உன்னிப்பாய்க் கற்றுக் கொடுத்து வந்தார். உதாரணமாக அவர் தேவியாரைப் பார்த்து நீவண்டி அல்லது படகில் ஏறுவதாயிருந்தால் முதலில் ஏறிக்கொள். இறங்கும் போது கடைசியில் இறங்கு. வண்டி யல்லது படகில் சாமான்கள் மறதியாய் வைக்கப்பட்டு விட்டனவா என்பதையும் பார்த்துக் கொள்' என்று
சொல்லி வந்தார்.

 

பிறகு க்ஷோதசி பூசையை (Shodasi Puja) நடத்த ஏற்பாடு செய்தார். இப்பூசை, நல்ல யௌவன கன்னிகை ஒருத்தியைத் தேவமாதாவாகக் கருதி வணங்கி வருவதாகும். அதன்படியே ஸ்ரீராம கிருஷ்ணர் தம் தேவியாரைப் பூசை புனஸ்காரங்களுடன் வணங்கினார். இங்ஙனம் அவ்வம்மையாரை அவர் வணங்கிக் கொண்டிருக்கையில் தேவியார் பூசையின் பிற்பகுதியில் தம்மைமறந்து சமாதி நிலையை யடைந்து விட்டார். இதனால் அம்மையார் கர்வங் கொள்ளாது எப்போதும் போலவே இருந்தார் என்க.

 

க்ஷோதசி பூசை முடிந்த ஐந்து மாதங்கள் வரை தேவியார் தக்ஷிணேஸ்வரத்திலேயே யிருந்து வந்தார்; பிறகு ஸ்ரீராம கிருஷ்ணருக்கும் அவருடைய தாயாருக்கும் வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தார். பகற்காலத்தை அம்மையார் நகவத்' எனுமிடத்திலும், இராக்காலத்தை இராம கிருஷணர் அருகிலும் கழித்து வந்தார். ஸ்ரீராம கிருஷ்ணர் இரவும் பகலும் சமாதியில் அழுந்தி விடுவது வழக்கம். அப்போது அவர் இறந்தவரைப் போல காணப்படுவார். இதைக்கண்டு தேவியார் பயங்கொள்வதுண்டு. இதையறிந்த ஸ்ரீராம கிருஷ்ணர் தேவியாரைத் தம் தாயாருடன் படுக்கும்படி செய்து விட்டார். இங்ஙனம் பதினாறு மாதத்தைக் கழித்து விட்டு ஸ்ரீமதி தேவியார் வங்காளி 1280 - வருஷம் கார்த்திகை மாதத்தில் காமார்பூகூர் போய்ச் சேர்ந்தார்.

 

ஸ்ரீமதி தேவியார் இதைப்பற்றித் தம்முடைய பிற்கால வாழ்க்கையில்
 தம் மாணவிகளிடம் சொல்லியிருப்பதாவது: -

 

ஸ்ரீராம கிருஷ்ணர் என்னுடன் வசித்துக் கொண்டிருக்கையில் காட்டிய கடவுள் பக்தியை வெளியிட வார்த்தைகள் போதா. ஓர் இராத்திரி முழுமையிலும் பைத்தியக்காரனைப் போல் அவர் பேசிக் கொண்டிருப்பார்; தமக்குத்தாமாகவே சிரித்துக் கொள்வார்; கடவுளை நோக்கி அழுவார்; தம்மைமறந்து சமாதியில் மணிக்கணக்காகவும் ஆழ்ந்து விடுவார். அவர் இங்ஙனம் எல்லாம் செய்தது எதைக் காட்டியது என்றால் கடவுளிடம் ஒன்றாய்க் கலந்திருந்ததைக் காட்டியதாம். அவர் இங்ஙனம் இருந்ததைக் கண்டு நான் பயமும் ஆச்சரியமுங் கொண்டு பொழுது எப்போது விடியப்போகிறதென்று பார்த்துக் கொண் டிருப்பேன். முதலில் எனக்குச் சமாதியைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஒரு தினத்தில் அவர் நீண்ட நேரம் வரைக்கும் சமாதியிலேயே இருந்து விட்டார். அதைக்கண்டு நான் பயமடைந்து கூச்சலும் அழுகையும் கொண்டவளாய் ஹிருதே என்பாருக்கு ஆள்விட்டனுப்ப அவர் வந்து ஸ்ரீராம கிருஷ்ணருடைய செவிகளில் கடவுளுடைய நாமங்களை உச்சரித்தார். உடனே அவர் சமாதி கலைந்து எழுந்தார். பின்னர் நான் பயப்படுவதை அறிந்து தம்மைச் சமாதியினின்று எழுப்புவதற்குரிய மந்திரங்களையும் நாமதேயங்களையும் எனக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். அது முதற்கொண்டு நான் அவருடைய சமாதி நிலையைக் கண்டு பயப்படுவதேயில்லை. அவரைச் சமாதியினின்று கலைக்க வேண்டுமானால் அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த மந்திரங்களையோ உச்சரிப்புக்களையோ அவருடைய காதில் ஓதுவது வழக்கம். இங்ஙனம் செய்தால் அவர் சமாதியினின்று எழுந்து விடுவார். அவர் எனக்கு இலௌகீக சம்பந்தமான விஷயங்களையும் வைதீக சம்பந்தமான விஷயங்களையும் கற்றுக் கொடுத்தார். அவர் கடவுளை நோக்கிச் சிந்திப்பதனால் ஏற்படக் கூடிய நலன்களையும் சமாதியை எங்ஙனம் அநுசரிப்பது என்பதைப் பற்றியும் பிரம்மம் என்பது யாது அதைத் தெரிந்து கொள்வ தெப்படி என்பதைப் பற்றியும் எனக்கு விளக்கமாகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்தார்.

 

ஸ்ரீராம கிருஷ்ணரைக் கண்டு தரிசித்துச் செல்வதற்காக அநேக ஸ்திரீகள் கல்கத்தாவினின்றும் தக்ஷிணேஸ்வரத்திற்குச் செல்வது வழக்கம். அவர்களுக்காகவும் ஸ்ரீமத் தேவியார் சமையல் செய்ய வேண்டிவரும். இங்ஙனம் பார்க்க வருகிறவர்களில் சிலர் விதவைகளாகவுமிருப்பார்கள். இவர்கள் மாமிசாகாரங்களை உட்கொள்ள மாட்டார்கள்; இவர்களுக்காக ஸ்ரீமதி தேவியார் அடுப்பங்கரையைத் தினம் மூன்று தடவை மெழுகிச் சாதாரண சமையலைச் செய்ய வேண்டி வரும்.

 

ஒரு சந்தர்ப்பத்தில் பானிஹாதி எனுமிடத்தில் விசேட வைஷ்ண உற்சவம் ஒன்று நடைபெற்றது. அதற்கு ஸ்ரீமதி தேவியார் போகப் பிரியப்படுகிறார்களாவென்று ஸ்ரீராம கிருஷ்ணர் தம்முடைய சிஷ்யைகள் மூலமாய்த் தேவியாரைக் கேட்டனுப்பினார். அதற்குப் பதிலளிக்கையில் தேவியார் ஏராளமான ஜனங்கள் உற்சவத்தைக் கண்டுகளிக்க வருவார்கள். ஆகையால் படகினின்றும் இறங்கி உற்சவங் காண்பது எனக்குக் கூடாத காரியமாகும். ஆதலால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதைப்பற்றி ஸ்ரீராம கிருஷ்ணர் ஒரு சந்தர்ப்பத்தில் பேசுகையில்'அவள் அந்த உற்சவத்திற்கு வராமல் இருந்து விட்டதே நல்ல காரியம்; ஜனக்கூட்டம் அதிகம். எல்லாரும் என்னுடைய பைத்தியக்கார சேஷ்டைகளையும் சமாதி நிலையையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவள் உண்மையிலே புத்திசாலி,' என்று கூறினார். அத்துடன் நில்லாமல் ஸ்ரீமதி தேவியாரின் புத்தி சாதுர்யத்தையும் ஆசையின்மையையும் விளக்குவதற்காக என்னிடம் பற்றுக் கொண்ட மார்வாரி ஒருவர் எனக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். அது என்னுடைய இருதயத்திற்குள் ஈட்டியைப் பாய்ச்சியதைப்போல் ஆய்விட்டது. அதற்கு மேல் நான் உலகமாதாவை நோக்கி 'என்னுடைய தாயே! கடைசியாக என்னைப் பரிசோதிக்கவா வந்து விட்டாய்?' என்று கதறினேன். பிறகு என்னுடைய மனைவிக்கு இப்பணத்தின் மீது ஆசை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க அவளைக் கூப்பிட்டு, இந்த பக்தர் இப்பணத்தையெல்லாம் என்னை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறார். எனக்கு இஷ்டமில்லை. ஆதலால் உனக்குக் கொடுத்துவிடப் பிரியப்படுகிறார். நீ ஏன் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது? உன்னுடைய அபிப்பிராயம் என்னை?' என்று கேட்டார். அதற்கு ஸ்ரீமதி தேவி யார், பணத்தை நான் ஏற்றுக் கொள்வதும் தாங்கள் ஏற்றுக் கொள்வதும் ஒன்றேயாகும். ஜனங்கள் தங்களைத் தங்களுடைய துறவுக்காக மெச்சுகிறார்கள். ஆதலால் இப்பணத்தை எக்காரணம் பற்றியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது,' என்று கூறினார். இதைக்கேட்டு ஸ்ரீராம கிருஷ்ணர் பெரிதும் சந்தோஷ மடைந்தார்.

 

இதைவிட அவா அறுத்தலுக்கும் புத்தி சாதுர்யத்திற்கும் வேறு என்ன உதாரணம் வேண்டியிருக்கிறது என்றார்.

 

ஸ்ரீமதி சாரதாமணி தேவியார் பானிஹாதி உற்சவத்திற்கு ஸ்ரீராம கிருஷ்ணர் அன்புடன் விடை தராமையால் போகவில்லை. இவருக்கு - கூச்சம். இவர் கணவனாரை உபசரிப்பதிலும் அவரை நாடி வருபவர்களுக்குச் சமையல் செய்வதிலும் மூழ்கியிருப்பார்; விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்து காலைக்கடன் முடித்துத் தம் அறைக்குச் செல்வர்; வேலை செய்வதிலோ இவர் சுறுசுறுப்புள்ளவர்; ஓய்வு நேரங்களில் கடவுளைத் தியானிப்பர். இவர்கள் பாதல்தாலாவில் தங்கியிருந்த போது தேவியார் ஒருநாள் ஆற்றில் ஸ்நானம் செய்யப்படிக்கட்டுகளினின்று இறங்கினார். அங்கு படுத்துக் கொண்டிருந்த முதலை இவர் காலடிச் சத்தங்கேட்டு நீரில் மூழ்கிச் சென்றுவிட்டது. இவ தெய்வாதீனமாத் தப்பித்துக் கொண்டார். அது முதல் விளக்கில்லாமல் குளிக்கப் போவதில்லை. ஸ்ரீராம் கிருஷ்ணருக்குக் கட்டி உண்டாய் அதைச்ளெக்கியப்படுத்திக் கொள்வதற்காக அவா ஷாம்புகூருக்கு வந்திருந்தார். அம்மயாரும் அவருடன் வந்து தமமாலான உதவி செய்தார். தம் சொந்த சௌகரியங்களையும் கவனிக்கவில்லை; அவ்விடத்தில் இருந்த போது தேவியார் இரவு பதினொரு மணியிலிருந்து காலை இரண்டு மணி வரைக்குந்தான் தூங்குவது வழக்கம். இவர் ஸ்திரீயாயிருந்தாலும் தைரியத்தையும் மனோ உற்சாகத்தையும் கஷ்டகாலங்களில் விடாமல் அணிகலனாகக் கொண்டிருப்பர். இதைப்பற்றிப் பின்வரும் விஷயம் சான்று பகரும். அது வருமாறு: - " ஸ்ரீமதி சாரதாமணி தேவியார் காமார்புகூர் அல்லது ஜெயராம பதியிலிருந்து தக்ஷிணேஸ்வரத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று; அந்தப்பாதையானது தெலாப்ஹிலோ, கைகாலா என்னுமிடங்களைச் சேர்ந்த வயல்களின் மத்தியில் இருந்தது. அக்காலத்தில் இவ்வழிகளில் திருடர்களும் கொலையாளிகளும் அதிகமாயிருந்தார்கள். இன்றைக்கும் அவ்வயல்களின் மத்தியில் ஒரு காளிகோயிலுண்டு. இதிலுள்ள தேவதையைத் தெலாப்ஹிலோவைச் சேர்ந்த திருடர்களின் காளி என்று கூறி வருகிறார்கள். திருடர்கள் கொள்ளை யடிக்கப் போகு முன்னும் கொலை செய்யப் போகுமுன்னும் இக்காளியைப் பிரார்த்தித்துக் கொண்டு செல்வது வழக்கம் அக்காலத்தில் இவ்வழியாய் ஜனங்கள்கூட்டங் கூட்டமாய்ச் செல்வார்களே யல்லாமல் தனித்துச் செல்லவே மாட்டார்கள்.

 

ஒரு சந்தர்ப்பத்தில் தேவியார் காமார்புகூரிலிருந்து ஸ்ரீராம கிருஷ்ணருடைய பந்துக்களுடனும் இன்னும் சிலருடனும் சேர்ந்து தக்ஷிணேஸ்வரத்திற்கு வந்து ஆரம்பாக் எனுமிடத்தைச் சேர்ந்தார்; பொழுது சாய்வதற்கு இன்னும் நீண்ட கேமிருக்கிறதென்று கருதி அவ்விடத்தினின்று மேலே சொல்லப்பட்ட வயல்களைத் தாண்டிச் சென்று விடத் தீர்மானித்து அதன்படியே செய்யலானார். தேவியார் நடந்து வந்ததன் பயனாய்க் களைத்து பட்டாலும், கூட வாதவர்களுடன் நடந்து வரவே ஒப்புக்கொண்டார். ஆனால் களைப்பின் பயனாய் மெவ்லமெல்ல நடந்து கொண்டு போனார். அவருடன் சென்றவாகளும் அவருக்காக நின்று என்று சென்று, இப்படி நடந்தால் பொழுதுபோகு முன் அவ்விடத்தைவிட்டு அகல முடியாதென்றும், திருடர் வசம் சிக்கநேரிடுமென்றும் கூறினார்கள். இதைக் கேட்ட தேவியார் ஒருவரும் தமக்காகக் காக்க வேண்ட மென்றும், தாம் தாரகேஸ்வர சாத்திரத்தில் அவர்களைச் சந்திப்பதாகவும் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்களும் வேகமாய் நடந்து அம்மையாருடைய கண்ணுக்குத் தெரியாத தூரம் வரை சென்றார்கள். அம்மையாரும் வேகமாய் நடக்கப் பார்த்தார்; களைப்பால் நடக்க முடியவில்லை; மெதுவாகவே நடந்து அப்பாதையின் பாதிவழி செல்வதற்குள் இருள் அதிகரித்து விட்டது. அப்போது உயரமான மனிதனொருவன் புஜத்தில் தடியோடு மற்றொரு மனிதனுடன் எதிரே வந்தான். அம்மையார் மனோதைரியத்துடன் அசைவற்று நின்றார். வந்த மனிதன் அம்மையாரை 'இநநள்ளிரவில் தன்னந் தனியாய் இங்கு நிற்பது யார்? என்று உரத்துக் கேட்டான். அம்மையார் சாந்தமாய் அவனைப் பார்த்து 'தகப்பனே! என்னுடன் வந்தவர்கள் என்னை விட்டு விட்டுச் சென்றனர். நான் வழிதவறி விட்டேன். என்னை அவர்கள் இருக்குமிடங் கொண்டு போய்ச் சேர்ப்பீராக. உமது மருமகப்பிள்ளை தக்ஷிணேஸ்வரத்திலுள்ள ராணிராஷ்மாணி காளி கோயிலில் இருக்கிறார். நான் அவரைச் சந்திக்க வேண்டும். தாங்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றால் அவர் தங்களுக்கு அதிக நன்றியறித லுள்ளவராயிருப்பார்' என்று கூறினார். அதற்குள் இரண்டாவது மனிதனும் சமீபித்தான். சமீபித்தவன் அம்மையார் எண்ணியபடி ஆண் அல்ல; அவரை வினவிய திருடனின் மனைவியே. இதைக்கண்ட அம்மையார் மிகவும் சந்தோஷங் கொண்டு அந்த ஸ்திரீயின் கையைப் பிடித்துக் கொண்டு 'தாயே நான் உன்னுடைய குமாரத்தியாகிய சாரதா. என்னுடன் வந்தவர்கள் போய் விட்டபடியால் நான் வழிதப்பி விட்டேன்; நற்கால வசமாய்த் தகப்பனாரும் தாங்களும் என்னைச் சந்தித்தீர்கள். இல்லாவிட்டால் என்னுடைய கதி யாதாமோ!' என்று கூறினார்.

 

அவர்கள் இருவரும் தாழ்ந்த வகுப்பினர். அவர்கள் ஜாதிமத வித்தியா சங்களை யெல்லாம் விட்டு, தேவியாரைத் தங்கள் குமாரத்தியாகப் பாவித்து, களைப் புற்றிருந்த அவரை நீண்ட தூரம் ஈடக்க வைக்காமல் அருகிலிருந்த ஒரு கிராமத்தில் அன்றைய இரவைக் கழிக்க வைத்தனர். திருடன் மனைவி தன் துணியை விரித்துப் போட்டு அதில் அம்மையாரைப் படுக்க வைத்தாள். திருடன் அருகிலிருந்த கடைக்குச் சென்று சோற்றை வாங்கிவந்து சாப்பிடும் படி அவரை உபசரித்தான். பொழுது புலர்ந்ததும் தேவியாரை அவ் விருவரும் தாரகேஸ்வரத்திலிருந்த கடைக்கு அழைத்துச் சென்று அங்கு களையாற்றினார்கள். திருடனுடைய மனைவி அவனைப் பார்த்து 'ஐயனே! என்னுடைய குமாரத்தி நேற்றிரவு கொஞ்சமாகத்தான் சாப்பிட்டாள். கோயிலில் சீக்கிரமாய்ப் பூஜையை முடித்து விட்டுக் கடைக்குச் சென்று மச்சத்தையும், கீரை தினுசுகளையும் வாங்கிக்கொண்டு வாரும். இன்றைக்கு அவளுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டும்' என்றாள்.

 

உடனே அவன் வெளியே சென்றதும் முன்னம் தேவியாருடன் வந்தவர்கள், அவர் தங்கிய இடத்திற்கு வரலானார்கள், அவரைக்கண்டு ஆனந்தித்தார்கள். தேவியார், தன்னைக் காப்பாற்றிய பெற்றோர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு திருடனும் அவன் மனைவியும் அவரிடம் விடைபெற்றுத் தம்மிடஞ் சென்றகர். தேவியார், அவர்களை யன்புடன் அனுப்பினார். இதைப் பற்றித் தேவியார் '' ஓர் இரவு நான் அவர்களுடன் தங்கியிருந்தாலும் எங்களுக்குள் ஏற்பட்ட அன்பு அளவு கடந்தது. அவர்கள் மறுநாள் காலையில் என்னைவிட்டுச் செல்லுகையில், என்னை அறியாமலே நான் அழ ஆரம்பித்தேன். அவர்கள் என்னை மறுபடியும் தக்ஷிணேஸ்வரத்தில் வந்துபார்ப்பதாக வாக்குறுதி கொடுத்த பின்னரே அவர்கள் என்னை விட்டுப் பிரிய இடங் கொடுத்தேன். அவர்கள் என்னுடன் நீண்ட தூரம் தொடர்ந்து வந்தார்கள். அந்த ஸ்திரீ சாலையில் கிடந்த சில பட்டாணிகளைப் பொறுக்கி என் முன்றானையில் கட்டி அழுதலிதமாய் 'தாயே சாரதா! இராத்திரியில் அன்னமுண்ணும் போது பட்டாணியையும் சேர்த்துச் சாப்பிடு' என்றாள். அவர்கள் பின்பு அநேக தடவைகளில் என்னைத் தக்ஷிணேஸ்வரத்தில் சந்தித்துப் போவது வழக்கம். வரும் போதெல்லாம் ஏதாவது வெகுமதி கொண்டுவந்து கொடுப்பார்கள். என் கணவரும் இச்சமாசாரங்களை அறிந்து அவர்களை நன்றாய் உபசரித்தனுப்புவார். என்னை ஆதரித்த அந்தத் தாழ்ந்த வகுப்புத் தகப்பனார் ஒன்றிரண்டு தடவைகளில் திருட்டுத் தொழிலில் பிரவர்த்தித்திருக்கிறார் என்றே நான் எண்ணி வந்தேன்'' என்று கூறுவர்.

 

வங்காளி 1293 -ம் வருஷத்தில் சிராவண மாதத்தில் ஸ்ரீ இராம கிருஷ்ணர் விண்ணுலகு ஏகினார். அப்போது ஸ்ரீமதி சாரதாமணி தேவியாருக்குவயது முப்பத்து மூன்று. புருஷன் இறந்த பின் தேவியார் விதவைக்குரிய கோலங் கொள்ளவில்லை யென்பது தெரிகிறது. இதைப்பற்றி ஒரு நண்பர் தெரிவிப்பதாவது:

 

'ஸ்ரீராம் கிருஷ்ணர் இறந்த பிற்பாடு ஸ்ரீமதி தேவியார் தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்ற முயற்சித்தார். அப்போது ஸ்ரீராம கிருஷ்ணர் இளவயதுடன் கூடியவராய்த் தோன்றி அவருடைய கையைப் பிடித்து நான் இறந்து விட்டேன் என்றா உன்கை வளையல்களைக் கழற்றிவிடுகிறாய்? என்று கேட்டார். பிறகு தேவியார் கையிலிருந்த வளையல்களைக் கழற்றவேயில்லை; வளையலோடு கப்புக்கரை கொண்ட துணியை அணிந்து கொண்டிருந்தார்" என்பதே.

 

ஆத்மா இறக்கிறதில்லை யென்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் கொண்டால் உலகத்தில் இப்போதுள்ள கஷ்டங்களும் பாபச் செயல்களும் பிறவும் ஒழியும்.

 

ஸ்ரீராம கிருஷ்ணருக்குப்பின் ஸ்ரீமதி தேவியார் முப்பத்தினான்கு ஆண்டுகள் வரை பிழைத்திருந்தார். அவர் வங்காளி 1327 - ம் வருஷத்தில் இவ்வுலகவாழ்க்கையை நீத்தார். அவர் இறந்த பின் அவருடைய குணாதிசயங்களைப் புகழ்ந்து வங்காளி மாதப் பத்திரிகையான உத்போதன், "ஸ்ரீராம கிருஷ்ணரது சீடர்களும் இவ்வம்மையாரது சீடர்களும் இவரை 'மாதா' என்றே அழைப்பது வழக்கம். இப்போது அங்ஙனமே கூறி வருகிறார்கள்.'' என்று கூறுகின்றது. ஸ்ரீமதி தேவியாரின் நாமதேயம் என்றைக்கும் நிலைத்திருப்பதாக.

 

A. துரை.

 

ஆனந்த போதினி – 1927, 1928 ௵ -

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர், ஜனவரி, ௴

 

No comments:

Post a Comment