Showing posts with label ஹிந்து மத சித்தாந்தங்கள். Show all posts
Showing posts with label ஹிந்து மத சித்தாந்தங்கள். Show all posts

Tuesday, September 8, 2020

 

ஹிந்து மத சித்தாந்தங்கள்

 

கீழ்க் கூறப்படும் விஷயங்கள் ஸ்ரீமான் பாபு கோவிந்ததாஸ் என்பவரால் வரையப்பட்ட “ஹிந்து மதம்" என்ற நூலைப்பற்றி கனம் பொருந்திய பிரம்மம் ஸ்ரீ ஸா. சதாசிவய்யரவர்கள் (சென்னை ஹைகோர்ட் ஜட்ஜாக விருந்தவர்) மேலே கண்ட தலை யங்கமிட்டு 'இந்தியன்ரிவியு" என்ற சஞ்சிகையில் வரைந்துள்ளவற்றின் மொழி பெயர்ப்பு: -

 

''உபநயனம், கலியாணம் என்ற இரண்டு ஸமஸ்காரங்கள் மட்டுமே இக்காலங்களில் நிலையாக அனுசரிக்கப்பட வேண்டியவை. பிறவி வித்தியாசம் ஜாதி வித்தியாசமின்றி எல்லா இந்துக்களுக்கும் உபநயன ஸம்ஸ்காரம் அளிக்கப்பட வேண்டும். இக்காலத்தில் வழக்கத்திலில்லாததும் கெட்டதுமான நியோக ஸமஸ்காரம் போன்றதையும், பலதார மணத்தையும் மறுபடி வழக்கத்திற்குக் கொண்டுவர முயலலாகாது. வைதீக கர்மங் களையும் சடங்குகளையும் சுருக்கிவிட வேண்டும். அர்த்தமற்ற மந்திர உச் சாடனங்களைக் கைவிட வேண்டும். சவங்களைத் தகனம் செய்யும் வழக் கத்தையே யாவரும் அனுசரிக்க வேண்டும். சுகாதார விதிகளை யனுசரித்த மட்டிலேயே பிறப்பு இறப்புக்குரிய சடங்குகளைச் செய்யவேண்டும். சூதக (தீட்டு) கால அளவைக் குறைத்து விடவேண்டும். அசுத்தம், சுகாதாரக் குறைவு இக்காரணங்களால் தவிர, தீண்டாமை நிறுத்தப்பட வேண்டும்.


      சமீபத்தில் வரலாகாதென்ற விதி எந்தச் சாத்திரங்களிலும் கூறப்படாத விபரீத வழக்கம். இது அடியோ டழிக்கப்பட வேண்டும். சாதாரண புத் தியை யனுசரிக்க வேண்டும். ஆண் பெண்களுக்குரிய உரிமைகளிலும், சுதந்தரத்திலும் பூர்வீக வைதீக காலங்களில் இத்தகைய துவேஷமுண்டாக்கும் எந்த வித்தியாசமும் கற்பிக்கப்படவில்லை. இவை ஒழிக்கப்பட வேண்டும். கொன்று தின்பதையும் மயக்க வஸ்துக்களை யுபயோகிப்பதையும் ஒழிப்பதை உண்மை இந்துக்கள் சட்டமாய் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையான இந்து மதத்தின் அழியாத அஸ்திவாரம் அஹிம்ஸையே. ஊர் ஊராகச் சென்று இயற்கை யழகுகளையும், கம்பீரமான கோயில்களின் வனப்பு முதலியவற்றையும், ஆங்காங்குள்ள ஜன சமூகங்களின் ஆசார ஒழுக்க வழக்கங்களையும் பார்த்தறிவது ஓர் கல்வி யாதலானும், அத்தகைய யாத்திரைகள் குறுகிய மனதை விசாலிக்கச் செய்து, இதரக் கொள்கைகளைச் சகிக்கொணாத குருட்டு நம்பிக்கையை யொழிப்பதாலும், தாய் நாட்டிலும் அன்னிய நாடுகளிலும் யாத்திரை செய்தல் உற்சாகப் படுத்தப்படவேண்டும்.

 

தானங்கள் கொடைகள் சத் பாத்திரமுடையவர்களுக்கு மட்டுமே யளிக்கப்பட வேண்டும். தகுதியற்ற பிராம்மணர்களுக்கும் வெளி வேடச்சந்நியாசிகளுக்கும் தானங் கொடுக்கும்படி கூறும் கற்பித நூல்கள் நிராகரிக்கப்படவேண்டும். பிதுர்க்களுக்குச் செய்யப்படும் சிரார்த்தத்தைப் பன்முறைகளில் வைத்துக்கொள்ளலாகாது. குறித்த ஒரு பருவகாலத்தில் எல்லா பிதுர்க்களுக்கும், அன்போடு அதைச் செய்ய வேண்டும். கலி யாணங்கள் ஆடவர்க்கு இருபது வயதான பிறகும், பெண்களுக்குப் பதினைந்து பதினாறு வயதான பிறகும் மட்டுமே செய்யப்படவேண்டும். கோத்திர விதியை யனுசரித்து மணம் நடத்துவது வீண் துன்பத்தை யளிப்பதேயாகும். ஏனெனில் இக்காலத்தில் எந்த உண்மை இந்துவின் மெய்யான கோத்திரமும் நிச்சயமான தல்ல. வதூவரர்களின் வயதுகளிலுள்ள தாரதம்மியம், அதிக நெருக்கமான இரத்தக் கலப்பில்லாமை, இந்த விஷயங்களில் மட்டுமே நியமம் இருக்க வேண்டும். (அதாவது பிள்ளை பெண்ணை விட 6, 7 - வயதேனும் மூத்தவனாக விருக்கவேண்டும். அதிக நெருக்கமான இரத்தக் கலப்புள்ள சம்பந்தமா யிருத்தலாகாது. பிள்ளை பெண்ணை விட அதிக அளவுமீறி மூத்திருக்கலாகாது என்பதாம்.) இப்போதிருப்பது போல் கேவலம் பரம்பரைப் பிறவியையே காரணமாகக் கொண்டு ஏற்படுத் தப்பட்டிருக்கும் ஜாதிப்பிரிவினை கண்டிப்பாய் அடியோடொழிக்கப்பட வேண்டும்."

 

ஆனந்த போதினி – 1924 ௵ - அக்டோபர் ௴