Monday, September 7, 2020

 

விதியின் போக்கு

(கார்த்திகேயன்.)

திரிகோண பர்வதத்தின் சரிவு ஒன்றிலே அடர்ந்த பெரிய காடு. அதில் தங்கி யிருந்த சைன்யத்திலே குமார் ஒரு ராணுவ தளகர்த்தன். பட்டாளத்தில் தாகக் போனபோது அவனுக்கு வயது 20. கன்னிகை ஒருத்தி கைபிடித்து சரியாக மூன்று மாதங்கூட ஆகவில்லை. அதற்குள் குண்டுகளுடன் பரிச்சயமாக வந்து விட்டான். வந்து வருஷமும் இரண்டு ஓடி விட்டது.

வறண்ட ஆற்று மணலில் ஒருநாள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்ததன் விளைவு இது. இல்லாவிட்டால் அவன் வாழ்க்கைப் பாதை ஒரு மனோகரமான இன்ப லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். ஏன் செய்வது? எல்லாம் ஊழ்வினை விதியின் விபரீதம்! அவனை இந்த அபாய, வாழ்வில் சிக்க வைத்தது!

காட்டுக்கு வெளியே நல்ல நிலவு. மலை யுச்சியையும் அப்பாற் கிடந்த சரிவு அடிவாரங்களையும் ஒரே மட்டமாகக் காட்டுகிறது. காட்டினுள் கூட நடுநடுவே சிட்டி சிட்டியாக நிலா வெளிச்சம் மரக்கிளைகளி னிடையே வந்துகொண் டிருந்தது.

இராணுவத்தில் குமாருக்கும் அவன் சேனைக்குந்தான் நல்ல பேர். இரு அபாயகரமான சமயங்களில் அவன் தன் வீரர்களுடன் மிகச் சாமர்த்தியமாக போர் புரிந்து வாகை சூடியுள்ளான். என்றாலும் இடை யிடையே அவன் மனத்திரையிலே வந்து காட்சி தரும் அந்தச் சுந்தர முகத்தை அவனால் மறக்க முடியவில்லை, மூன்று மாத வாழ்க்கையில் வார்க்கப்பட்ட அந்த மோகனச் சித்திரம் அந்த யௌவன பிராயத்தில் எவ்வாறு அழிக்கப் பெறும்?

இன்று அந்த வேதனை மிகுந்தது. ஆறாமை பெருகிற்று. அமைதி காண முடியாமல் தவித்தான். மெதுவாக எழுந்து பாறை யுச்சியை நோக்கி நடந்தான்.

மொழு மொழுவென் றிருந்த ஒரு கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு வானத்தையும், சந்திரிகையின் வனப்பையும், லோகத்தின் அமைதியையும் ஒரு கணநேரம் கவனித்தான். அவ்வளவு தான்; அதன்பிறகு அவன் குரங்கு மனம் அவனை எங்கெல்லாமோ இழுத்துக்கொண் டோடிற்று.

அந்தநாள்! - அவன் விதியின் தேர் நெறி தவறிச் சென்ற நாள்! - ஆற்று மணலில் நண்பர்கள் பலருடன் உரையாடி யிருந்தது, அவர்களில் ஒருவன் பட்டாளத்தில் ஆள் எடுப்பதைப் பறை யடித்தது, ராணுவத்தில் சேர்வதால் சீரும் செல்வமும் மிகும் என இன்னொருவன் நவின்றது, மற்றொருவன் குமார் நல்ல தேகக் கட்டுள்ள
ஆஜானுபாகு! வெகு சீக்கிரத்தில் கம்மாண்டர் பதவி கிட்டும் என்று அவனுக்கு ஆசை யூட்டியது, அவனாவது மிலிட்டரியில் சேரவாவது! - புது மனைவியை விட்டுட்டு! என்று
வேறொருவன் கேலி செய்தது, அப்படி நம்ப குமார் சிலரைப்போல சம்சாரப் பித்தனல்லடா என்று இன்னொருவன் எதிர்வாதஞ் செய்தது, அதன் பிறகு நடந்த கடுமையான வாதப் பிரதிவாதங்கள், முடிவில் குமார் பட்டாளத்தில் சேர்ந்தது.... பின்னர் சில மாதங்களில் கம்மாண்டர் பதவி கிடைத்தது...

இப்படி ஆரம்பம் முதல் சுற்றித் திரிந்த அவன் சிந்தை இறுதியில் அந்த அபலை மீது கவிந்து நின்றது.

“அந்தோ! என் பிரிய சாந்தா! இப்போது இப்போது நீ தன்னந் தனியே என்ன செய்கிறாய்? மாடி யறையில் சாளரத்தின் வழியே பொழியும் நிலவைப் பார்த்து ஏங்கித் தவிக்கிறா யல்லவா? என்னையே நினைந்துருகும் உன் பேதை மனமும்! நான் சைன்யத்திற் சேர்ந்தேன் என்ற செய்தி உனக்கு எட்டியதே அந்தக் கபடமற்ற உன் இருதயம் என்ன பாடு பட்டதோ? குண்டுகளும், வெடிகளும் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் யுத்த களத்திலே கூட என்னால் உன்னை மறக்க முடியவில்லையே! அமைதியான வீட்டிலே தன்னந் தனியே வசிக்கும் நீ என்னை எவ்வாறு மறந்து வாழ்வாய்?

"ஐயோ! அந்த மூன்றுமாத கால வாழ்வில் நீ என்னிடங் காட்டிய அன்புதான் என்னே! நான் வெளியே சென்று திரும்பு வதற்குள் எத்தனை முறை அந்தத் திண்ணைக்கும் உள்ளுக்குமாக என் வருகையைத் தேடி நடந்திருப்பாய்! என்னை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதில் தான் உனக்கு எத்தனை ஆனந்தம்! என் உடைகளை அழகாய் எடுத்து எனக்கு அணிவிப்பதில் தான் உனக்கு எவ்வளவு ஆசை!

“ஆ! நீ என் மாடியறைக்கு வந்து நிற்கும் அழகை நான் எவ்வாறு மறப்பேன்!
கறுத்து நீண்ட பின்னற்சடையை முன்னே இழுத்துப் போட்டுக்கொண்டு நீலப்புடவையின் முன் தாணியை ஒரு கையால் பற்றிய வண்ணம் முகத்திலே புன்னகை தவழ மான்விழிகளிலே குறும்பும் குதூகலமும் கொந்தளிக்க என் தோளருகே மருவி நிற்கும் அந்த ஒய்யாரம் என்ன லேசானதா?

"என் கரங்களுக் கிடையே புகுந்து கொண்டு நீ அடிக்கும்
கொட்டம்! ... எத்தனை ஆட்டம்! எத்தனை கலுக்கு; எத்தனை நெளிப்பு!......"

குமார் தன்னை மறந்து தன் இரு கைகளையும் முன்னே நீட்டினான். "சே! இது என்ன பைத்தியம்!” என்றும் வெறும் வெளியிலே நீண்ட தன் கரங்களை பெரும் ஏமாற்றத்தோடு கலக்கி கொண்டான்.

நெடுநேரம் அந்த மோக நினைவுடன் போராடித் தளர்ந்து போனான். சந்திரன் மேற்கே சாய்ந்த பிறகே எழுந்து தன் கூடாரத்தை நோக்கி மெதுவாக நடந்தான். அப்போதும் அதே சிந்தனை தான்.

“அவளுக்கு எத்தனை கடிதங்கள் எழுதினேன். அவை எப்படியும் அவளுக்கு ஆறுத லளிக்கும்! ... ஆனால் அவள் ஏன் எனக்கொரு கடிதம் கூட எழுதவில்லை? நான் ஊரினின்றும் புறப்பட்டபோது அவளிடம் சொல்லிக் கொள்ளவில்லை என்ற கோபமா யிருக்கலாமோ! சே! இராது! என்னைக் காணாத ஏக்கம் அவளை வருத்திக் கொண்டிருக்கும்போது எனக்குக் கடிதம் எழுதுவதைப் பற்றி அவள் எங்கே சிந்திக்கப் போகிறாள்? இன்னும் ஒரு வருஷம் எப்போது தொலையுமோ?......''

அவன் பட்டாளத்தில் சேர்ந்த சில மாதங்களிலே ஊரில் பரவிய காலரா என்ற கொடிய நோய்க்கு சாந்தா இலக்காகி பூவுலக வாழ்வை நீத்து விட்டாள். அவன் எழுதிய தபால்கள் அனைத்தும் பூட்டப்பட்டுக் கிடந்த அவன் வீட்டினுள் குப்பையோடு குப்பையாகக் கிடந்தன என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

அவன் காட்டை நெருங்குஞ் சமயம். திடீரென மலையே அதிரும்படியான ஒரு குண்டு அவனுக்கு உச்சியிலுள்ள வானவீதியைக் கடந்த சென்றது. அவன் விரைந்து நடந்தான். அடுத்த சில நிமிஷங்களில் இன்னொரு பலத்த ஓசை! - இன்னுஞ் சற்று கீழாக ஒரு குண்டு பாய்ந்து சென்றது. அப்பால் அடுத்தடுத்து பல குண்டுகள் அதி விசையுடன் அலறிக்கொண்டு பாய்ந்தன.

சேனை முழுதும் விழித்துக்கொண்டது. குமார் உத்திரவை எதிர்நோக்கி நின்றனர் வீரர் அனைவரும். அவன் கூடாரத்தைக் குறுகிய அதே சமயம் ஒரு பேய்க்குண்டு அவன் நெஞ்சைப் பிளந்து சென்றது. அப்போது இலைகளி னிடையே வந்த நிலவொளிக் கற்றை யொன்று அவன் முகத்தில் வீசியது. தன் ஆருயிர்ச் சாந்தாவைத் தழுவும் ஆனந்தம் அவன் முகத்தில் விளையாடியது.

ஆனந்த போதினி – 1943 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment