Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ மாதவ கோவிந்த ரானடே

 

ஒவ்வொரு தேசத்திற்கும் அங்கு ஜனிக்கும் பெரிய அறிவாளிகளே நிகரற்ற செல்வமாகின்றனர். அவர்களால் நாட்டின் பெருமை பெருகுகின்றது. கற்றவர் கூட்டத்திற்கு அன்னோர் உற்ற தலைவராய் விளங்குகின்றனர். அவர்கள் மக்களிடத்து அரசியல் ஞானத்தைப் பெருக்கித் தமது தொண்டையியற்றி இகத்தி லழியாப் புகழையும் பரத்தில் மோக்ஷத்தையும் அடைகின்றனர். பொன்னினும் நவமணிகளினு மிக்க அத்தேசபக்தருள் ஸ்ரீ மாதவ கோவிந்த ரானடே முதன்மையானவர்.

 

பிறப்பு பாலியம் கல்வி.

 

இப்பெரியார் 1842 - ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18 - ம் நாளில் நாட்டினெழில் சிறக்கப்பிறந்தார். இவருடைய மூதாதையரைப் பற்றிய சரித மெதுவும் தெளிவாகக் கிடைக்காவிடினும் இவருடைய பாட்டனாரின் தந்தை சாங்கிலீ சமஸ்தான வக்கீலாகவும், பாட்டனார் பூனா ஜில்லாவில் ஒரு நிர்வாக உத்தியோகஸ்தராகவும், தந்தை நாஸிக்கைச் சேர்ந்த நிப்காட் (Niphad) என்ற ஊர் மம்லத்தாரின் குமாஸ்தாவாகவு மிருந்தது தெரியவருகிறது. ரானடேயுடைய முன்னோர் செல்வவந்தருமல்லர்; மிக்க ஏழையருமல்லர்; நடுத்தர ஸ்திதியுடையவர்கள். அவர்கள் மகாராஷ்டிரகுலத்தைச் சார்ந்தவர்கள். சிறு பிராயத்தில் இவர் தொன்மையான திண்ணைப்பள்ளிக்கூடத்திலேவாசித்து வந்தார். ரானடே பதினோராம் பிராயத்தை யடைந்த உடனே இவ்ருக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டி, இவருடைய பெற்றோர்கள் இவரைக் கோல்காப்பூர் கலாசாலைக் கனுப்பினர். ஆங்கு பயின்ற பின்னர் இவர் பம்பாய் நகரிலுள்ள எலிபின்ஸ்டன் கலாசாலையிற் சேர்ந்து வாசித்து வந்தார். இவர் மாணவராயிருக்கும் பொழுது, 'மகாராஷ்டிர மன்னர்கள்' என்பது பொருளாகஓர் வியாச மெழுதி வெளியிட்டார். அக்கட்டுரையில் ஆங்கில அரசாட்சியின் சில பொருத்த மற்ற விஷயங்கள் எடுத்துக் காட்டப்பட்டிருந்தமையாலும், மகாராஷ்டிரர்களின் மன எழுச்சிக்குக் காரணமான தீவிர தேசாபிமானச் சொற்களடங்கியிருந்தமையாலும் அக்கலாசாலையின் ஐரோப்பியத் தலைமையாசிரியர் சினந்து இவருக்கு ஆறுமாத உபகாரச் சம்பளத்தைக் கொடா தொழிந்தனராம். இவரால் கலாசாலை மாணவர்களுக்குத் தாய் நாடு, தாய்மதம் என்ற உணர்ச்சி யேற்பட்டது. எலிபின்ஸ்டன் கலாசாலையில் ரானடே தலைமாணாக்கராகி 1862 - ல் கலாகுமாரப் பரீக்ஷையில் (B. A.,) ஆங்கிலத்தில் முதன்மை பெற்றுத் தேறினார். 1865 - ல் இவர் கலாதிகாரராகி (M. A.,) ஓர் தங்கப்பதக்கமும் பரிசாகப் பெற்றார். 1866 - ம் ஆண்டில் இவர் சட்டப் பரீக்ஷைக்குச் சென்று பட்டதாரியானார். பெரும்பாலும் இவர் அரசாங்கத்தாரிடமிருந்து உபகாரச் சம்பளம் பெற்றே கல்வி பயின்றார்.


உத்தியோகம்.

 

ரானடேக்குப் பின்பு கல்வி இலாகாவில் மராத்தி பாஷா மொழி பெயர்ப்பாளர் வேலை கிடைத்தது. சில ஆண்டுகள் சென்ற பின்னர் இவருக்குக் கோலாப்பூர் சமஸ்தான நியாயமன்றத்தின் தலைமை குமாஸ்தா பதவியளிக்கப்பட்டது. இவ்வுத்தியோகத்திலும் இவர் நீடித்திருக்கவில்லை. 1872 – ல் இவர் போதகாசிரியர் வேலையை விரும்பி எலியின்ஸ்டன் உயர்தரக் கலாசாலையில் ஆங்கில ஆசானாக அமர்ந்தார். பேசுவதிலும், விஷயங்களை விளக்கிக் கூறுவதிலும் இவர் அதிக நிபுணத்துவ மடைந்திருந்தமையால் மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தார்; மகாராஷ்டிர மன்னர்களின் தோள்வலிமையைச் சிறப்பித்து மாணவர்கட்குத் தேசபக்தியை யூட்டி வந்தார். சிவாஜியின் சரித்திரத்தில் ரானடேக்கு அதிகப் பிரியமுண்டு. சாத்தியமானவாள் கொண்ட சிவாஜியின் வீரத்தைத் தாளில் மைகொண்டெழுதி மாணவர் மனதில் சுதேச உணர்ச்சியுண்டாக்கிச் சிறந்தார் ரானடே. இதன்பிறகு இவருக்கு நியாயவாத (வக்கீல்) தொழிலில் பிரிய மேற்பட்டது. சிலகாலம் இவர் பம்பாய் மாகாண நியாயஸ்தலத்தில் தொழில் நடாத்தி வந்தார். வழக்காடும் வழியில் அக்காலத்தில் இவர் மிகவும் சாமார்த்திய சாலியாயிருந்தமையால் அரசாங்கத்தார் இவரை 'சப் ஆர்டினேட் ஜட்ஜ்' ஆக நியமனம் செய்தனர். அதிலிருந்து இவர் மாகாண நியாயாதிபதியாகவும் (Presidency) Magistrate) சிறு குற்ற நியாயாதிபதியாகவும் (Small cause Court Judge) இருந்து, படிப்படியாக உயர்ந்து 'ஹைகோர்ட் ஜட்ஜ்' (High Court Judge) ஆனார்.

 

இவர் நியாயாதிபதி வேலை பார்த்து வந்த காலங்களில் நிகழ்ந்த ஓர் முக்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது; துரைத்தனத்தார் ராஜத்துரோகமான விஷயங்களில் ரானடே கலந்து கொண்டிருப்பதாகச் சம்சயித்து, தேசத்தில் குழப்பத்தை உண்டாக்கக்கூடிய கடிதப் போக்குவரவு சிலரால் நடப்பதாக எண்ணி, இவரை விசாரித்த பொழுது, இவர் தூர்த்தர்கள் தம்மைத் துன்பத்திலாழ்த்த அவ்விதம் செய்து வருவதை விளக்கிப் பகிரங்கமாக அக்கடிதங்களை ராஜாங்கத்தாரிடம் கொடுத்துவிட்டார். இவரை நிரபராதி யென்றறிந்த அவர்கள் இவரிடங்கொண்ட அபிப்பிராய பேதத்தை மாற்றிக்கொண்டனர். இவர் நீதி செலுத்தி வந்தகாலத்தில் பொறுமையுடன் வாதி பிரதிவாதிகளுடைய உரைகளைக் கேட்டு, நிதானித்து உண்மையை ஆராய்ந்தறிந்து முடிவு கூறுவார். இவரது தீர்ப்பை மேலதிகாரிகள் புகழ்ந்து வந்தனர். தர்ம தேவதை வாசஞ் செய்யும் நியாயஸ்தலத்தில் ரானடே சத்யவந்தராக விளங்கித் தண்டனை பெற்ற குற்றவாளியாலும் போற்றப்பட்டு வந்தார்.


பாஷாபிமானம்.

 

நிகழ்காலத்தில், கல்வி சிலரால் உத்யோகத்தைக்கருதியும், சிலரால் பட்டம் பெறும நோக்கத்துடனும் கற்கப்பட்டு, அவர்கள் கலாசாலையினின்றும் வெளிவந்த பிறகு தாம் அனைத்தையும் கண்டறிந்து விட்டதாக நினைக்கக்கூடியதாயிருக்கின்றது. ரானடே அவ்வாறு எண்ணவில்லை. ஒருவன் தனது ஆயுட்காலம் முழுவதிலும் மாணவனாயிருக்க வேண்டுமென்பதே இவருடைய அபிப்பிராயம். இவர் மூன்று பாஷைகளில் நல்ல பாண்டித்திய மடைந்திருந்தார். மராத்தி, சமஸ்கிருதம், ஆங்கிலமான மும்மொழிகளிலும் இலக்கிய இலக்கணங்களில் ரானடேக்கு நல்ல வல்லமையுண்டு. இவருடைய தாய்மொழியான மகாராஷ்டிரபாஷையில் இவருக்கதிக அபிமானமுண்டு. இவர் மகாராஷ்டிரச் சரித்திரத்தை ஆங்கிலத்தில் ஆராய்ச்சியுடன் எழுதி வெளியிட்டார். அதனால் இந்து தேசச் சரித்திரம் முன்னரே வரைந்துள்ள மேனாட்டுச் சரித்திராசிரியர்களின் பொய்க்கூற்று நன்கு புலனாயிற்று. அந்நூலில் சிவாஜியின் உண்மைத் தேசாபிமானத்தைப் புகழ்ந்திருக்குமளவு கொண்டு ரானடேயின் தேசபக்தியினளவை நிர்ணயிக்கலாம். அர்த்தசாஸ்திரத்தில் இவர் விசேஷப் பிரியங்கொண்டவர். இந்தியர்களின் சுதேசக் கைத்தொழில், விவசாயம், வியாபாரம் முதலியவற்றைக் குறித்து இவர் பத்திரிகைகளுக்கு வரைந்த வியாசங்கள் எண்ணில். பம்பாய் சர்வகலாசாலையில் அக்காலத்தில் பிரபலராயிருந்த மேதா என்னும் பெரியாருடன் போதனா முறை விஷயங்களில் ரானடே பலத்த வாக்குவாதஞ் செய்து தமது கொள்கையை ஸ்தாபித்தார்.

 

பொதுஜன ஊழியம்

 

அக்காலத்தில் இந்தியர் எத்தகைய உயர்ந்த பதவியை வகிக்க அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்டிருந்தனரோ அப்பதவி ரானடேக்கு அளிக்கப்பட்டிருந்தது. அரசாங்க நிர்வாக உத்யோகஸ்தர்கள் அரசியல் தேசீய விஷயங்களில் தலையிடலாகாதென்ற நிபந்தனை அக்கால முதலே அமுலிலிருந்து வந்தது. நியாயவாதிகளாயிருந்து ராஜீயத்துறையில் பெருஞ்சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்த பல சொல் வல்லுநர், நீதிபதி ஸ்தானங்களையடைந்து பேழைப் பாம்பென அடக்கப்பட்டு வந்தனர். ஆனால் ரானடே
'தேசசேவை வேறு, ராஜீயம் வேறு, உத்யோகம் வேறு' என்ற கொள்கையுடையவராதலால் - தம் நாட்டின் நன்மைக்கெனப் பாடுபடும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கு முண்டென்னும் உண்மையை நிலைநாட்ட வந்த உத்தமராதலால் தேசீய விஷயங்களில் பகிரங்கமாகவே அவர் உழைத்துவந்தார். அகில இந்திய காங்கிரஸ் மகாசபை நிறுவப்பட்டகாலத்திலிருந்தே அதனைபாரதபூமியின் எதிர்கால நன்மைக்கென்று கிடைத்த ஓர் நிதியென்றேற்றுப் போற்றி வந்த பலருள் இவர் முதல்வரானவர். மாகாணங்களில் காங்கிரஸ்தனது வேலையை முதல் முதலாகத் தொடங்கிய பொழுது, துரைத்தனத்தார், ராஜத்துரோகமான சூழ்ச்சிகளைக் காங்கிரஸ் மகாசபை செய்து வருகின்றதெனச் சம்சயித்தும், ரானடே அதன் காரியக்கமிட்டி கூட்டங்களுக்குச் சென்று அக்கூட்டத்தை ஊக்கி அவர்க்கு வேண்டியவற்றை உபகரித்து வந்தார்; சில ஆண்டுகள் காங்கிரஸ் வேலைகளை மேற்பார்வை பார்த்து வந்தார். ''மேன்மை தங்கிய சக்ரவர்த்தினியின் ஆதரவில் உரிமையுடன் இந்தியர் தேசநலம் பெருகும் வகையில் ஆட்சி முறையை அமைக்க வேண்டு'' மென்பதே அவரது அரசியல் கொள்கை.

 

அவர் ஓர் வித்தசாமானியவாதி. ஜனாசார சீர்திருத்த இயக்கத்திற்காக அவர் பெரிதும் பாடுபட்டு வந்தார். அவர் நண்பராகவும், ஞானாசாரியராகவும், வழிகாட்டியாகவும் மக்களின் உரிமைக்காக அரசாங்கத்தாருடன் வாதித்து வந்தார். பிறப்பால் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைச் சமூகத்தினிடமிருந்து போக்க அக்கொள்கை வேரூன்றியிருந்த அக்காலத்தில் துணிந்து முன்வந்து போராடியவர் ரானடேயேயாம். இவர் சர்வஜன சமரஸ மகாநாட்டைக் கூட்டி வைத்து அதன் காரியதரிசியாக உழைத்து வந்தார். பொது வாழ்வில் அனுசிதமான அனுஷ்டானங்களும், கேவலமான ஒழுக்கங்களும் நமது மூடநம்பிக்கையா லேற்பட்டனவேயன்றி, பூர்வீகமான சாத்திரங்களில் அவற்றை வலியுறுத்தும் ஆதார மேதுமிலை யென்பதை அவர் விளக்கிய வியாசங்களால், அவருடைய பரந்த நோக்கத்தையும், சிறந்த ஒழுக்கத்தையும், ஆழ்ந்த கல்வியையும் ஊகித்துணரலாம். ரானடே சர்வதேச ஜனாசார விஷயங்களைச் சீர் தூக்கி அவற்றை நமது அனுஷ்டானங்களுடன் ஒப்பிட்டுப் பல நூல்கள் மூலம் வெளியிட்டார். தாம் அறியாத்தன்மையால், மதத்தின்பாற்சார்ந்து தமது தேயத்திலேயே தோன்றிய சகோதரமக்களை விலங்குகளெனத் தாழ்த்தி நடத்தியதற்காக வருந்திக் கழுவாய்ச் சடங்கு பிராயச்சித்தம்) செய்து கொண்டனரென்பது அவருடைய சரித்திரத்தினின்று புலனாகின்றது. இதனால் அதிவைதீக மதக்காரர்கள் ரானடேயை வெறுத்து வந்தனர்.


மதசேவை

 

அவருடைய ஜீவியத்தில் பிரதான சமாஜத்தின் ஸ்தாபனமே ஓர் முக்கிய சம்பவமாம். ரானடே அதன் ஸ்தாபகராய் விளங்கியது மன்றி, மத விஷயங்களில் அவர் ஸேசுவரமதத்தை வற்புறுத்தி வந்தார். பாரத வர்ஷமும் அதன் வேத வேதாந்த இதிகாச புராணங்களும் தோன்றிய காலந்தொட்டு ஸேசுவரமதம் நம் நாட்டிலிருந்து வருகின்றதென அவர் பிரதான சமாஜத்தின் ஆதரவில் தக்க ஆதாரங்களுடன் பேசிவந்தார். கடவுள் ஆத்மரூபியாய் ஒவ்வொரு மனிதனிடத்தும் விளங்கி அவனுடைய ஒவ்வொரு கர்மாவிலும் வியாபித்து உட்புகுந்து நிற்கின்றன ரென்பதே அவர் ஸ்தாபித்த சமாஜத்தின் முக்கிய நம்பிக்கை. 'இந்திய ஸேசுவா மதம், ஸேசுவர மதவாத தாத் பரியம்' என்ற அவருடைய சிறு நூல்கள் ஜனங்களுக்கு சமாஜப்பற்றைப் புகட்டுந் தன்மையனவாய்த் திகழ்ந்தன. அவருடைய சரித்திரத்தை யாராயுங்காலத்து அவர் கைத்தொழில் அபிவிருத்திக்கென உழைத்து வந்தனரென்பதும், பல கண்காட்சி மகாநாடுகளைத் திறந்துவைத்தன ரென்பதும், காங்கிரசுடன் கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தையும் சேர்த்து வைத்தனரென்பதும், ஹிந்து மகாசபையையும் காங்கிரசின் ஓர் பிரிவாக அமைத்தனரென்பதும் காணக்கிடக்கின்றன.


முடிவுரை

 

உயர்ந்த பதவிகளை அவர் வகித்திருந்தும் ஆடம்பரமற்ற தூயவாழ்வை நடாத்தி வந்தார். அவருடைய நண்பர்கள் அவரை ருஷியென்றழைப்பது வழக்கமாம். ஒரு ஏழைமகன் தனக் கேற்பட்ட இடுக்கண்ணைப் போக்கிக் கொள்வான் கருதி ரானடேயைப் பேட்டி கண்டபொழுது அவர் அவ்வெளியனைச் சமத்துவ உரிமையுடன் அருகேயழைத் தமரச்செய்து அவனுடைய குறைகளைப் பொறுமையுடன் கேட்டு ஆதரித்தனராம்.

 

அக்காலத்தில் ரானடே தீவிர தேசீய வாதியாக விளங்கினார். எவ்விதத்திலோ பாரதமக்கள் சுயஆட்சி பெற்று வாழவேண்டுமென்ற எண்ணம் முதல்முதலாக அவருள்ளத்திலேயே உதித்தெழுந்தது. பாரதபூமியும் அதன்தொன்மையான நூல்களும் அவருக்கு ஆனந்தத்தை யூட்டுவனவாயிருந்தன. அவர் உத்யோகத்தினின்றும் விலகிய பின்னர் காங்கிரசில் சேர்ந்து அதன் தலைவராக விளங்கினார். லக்ஷமணபுரியில் 1900 - ம் வருடத்தில் கூடிய 'இந்திய வித்த சாமானிய சங்கத்தின்' ஆதரவில் அவர், " ஆயிரமாண்டுகட்கு முந்திய இந்தியா'' என்பதனடியாக தென்னிந்திய வட இந்தியர்களின்பூ ர்வசரித்திரங்களையும், வசிஷ்ட விஸ்வாமித்திராதி மஹரிஷிகளின் விஷயங்களையும், இக்ஷவாகு, த்விலீபன், ரகு முதலான ஆரியமன்னர்களின் பேராற்றலையும் ஆராய்ச்சியுடன் விளக்கிப் பேசினார். அவர் இந்திய நாட்டைக் குறித்தெழுதியுள்ள நூலில் சமயம், மெய்ஞ்ஞானம், ஜாதி, விக்ரஹ ஆராதனம், தண்ட நீதி, பாஷாஞானம், ரசாயனம், கணிதம், வைத்தியம், பூவிவரணம், வானசாஸ்திரம், சிருஷ்டிக்கிரம விவரணம், ரஸவாதம், ஜோதிஷம் முதலிய விஷயங்களை விரிவாக விளக்கும் எண்பது அத்தியாயங்களுள்ளன. ஸ்ரீ மாதவ கோவிந்த ரானடேயே காங்கிரசின் முதல் தலைவராவர். அம்மகாசபையை முதலிலிருந் தாதரித்துச் சுமார் பதினைந்தாண்டுகள் வரை அதனை வளர்ப்பதில் தமது கருத்தைச் செலுத்தியவரும் இவரே.

 

இப்பெரியார் 1901 - ம் வருஷம் ஜனவரி மாதம் 16 - ந் தேதி வானுலகேகினர். பம்பாய் நகர நீதிமன்றங்கள் அன்று மூடப்பட்டன. பொதுஜனங்கள் கூட்டங்கூடித் தம தனுதாபத்தை வெளியிட்டனர். காங்கிரஸைப் போற்றும் உத்தம தேசபக்தர்கள் ரானடேயை நினைத்து வணங்கக் கடமைப்பட்டவராவர்.

 


 ஸ்ரீ லக்ஷ்மீ காந்தன்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஆகஸ்டு ௴

 

 

 

No comments:

Post a Comment