Tuesday, September 8, 2020

 

ஹிந்து மதம் – அதன் பெருமை

 

 (ஸ்ரீமான் வி. நாராயணசாமி ஐயர் எழுதியது.)

 

நாம் ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி எழுதப் புகுந்தால், முன்னால் அதன் சரித்திர சம்பந்தமானவைகளை ஆராயவேண்டும். அதாவது, அத னுடைய ஆரம்பம், வளர்ச்சி, தற்கால நிலைமை முதலியவைகளைக் கவ னிக்க வேண்டும். நம் ஹிந்து மதத்தைப்பற்றி எழுதப் புகுந்த சமயத்து, அஃது எக்காலத்தில், எவரால் தாபிக்கப்பெற்றது? அது எவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது? அதற்கு மத்தியில் ஏதாவது மாறுதல் கள் உண்டாயினவா? எனும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியவர் களாகிறோம்.


மதம் என்பது யாது?

 

முதன் முதல் மதம் என்பது யாது, என்பதை ஆராய்வோம். அது மனிதனுக்கு, அதீதமாயிருக்கும் சக்திக்கு அடங்கியாவது, அல்லது, சகு ணமாயிருக்கும் ஒரு கடவுளின் கட்டளைக்காவது, தாழ்ந்து நடக்க வேண்டு மென்று மனிதனுக்குத் தோன்றும் ஓர் இயற்கை உணர்வெனலாம். ஆகையால் உலகத்தில் ஒரு மனிதன் எந்த மதத்தையாவது சாராமலிருக்க முடியாது. அவனுடைய தினசரி நடவடிக்கைகள் அதன் சார்பாகவே நடை பெறுகின்றன.

 

ஆகவே நம்மாலும் நம் முன்னோர்களாலும், அனுசரிக்கப்படுகிறதும், அனுசரிக்கப்பட்டதுமான மதம் ஹிந்துமதமெனப்படும். நாம் அனுசரிக்கின்ற மதத்திற்குப் பூர்வகாலத்தில், ஹிந்துமத மென்னும் பெயரே கிடையாது. ஆனால் அது, ஆரியமதம், சநாதனதர்மம், வைதீக மார்க்கம் எனும் அரிய பெயர்களை உடைத்தாயிருந்தது. காலக்கிரமத்தில் வெவ்வேறு மதத்தைத் தழுவிய தேசத்தவர்களுடன் சேர்ந்ததாலும், நம் முன்னோர்கள் முன்காலத்தில் சிந்து நதிக்கரையில் வசித்த காரணத்தாலும், சிந்தியர்களென்று வந்து அப்புறம் ஹிந்தியர்களாய், அவர்கள் அனுசரிக்கும் மதத்திற்கு ஹிந்துமதம் எனும் பெயர் அவர்களால் (அன்னியரால்) வழங்கலாயிற்று.


ஹிந்து மதத்தின் புராதனம்.

 

நாம் நம் மதத்தை எவ்வளவு காலமாக அனுசரித்து வருகின்றோம், இம்மதம் எவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது எனும் வினாக்கள் நிகழ்கின்றன. மேனாட்டாரின் சரித்திரத்திலிருந்தும், சாஸ்திரத்திலிருந்தும், நமக்கு ஒருவிதமான திடஆதாரமும் இவ்விஷயத்தில் கிடைக்கவில்லை. அவர்கள், மனித சிருஷ்டியே 6,000 வருடங்களுக்கு முன்தானென்றும், யூதர்கள் தான் (Jews) முதன் முதல் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட பாக்கியம் பெற்றார்களென்றும், அனேக நூற்றாண்டுகளாக நம்பி வந்தார்கள். ஆனால் சமீபகாலத்தில், ஆராய்ச்சிக்காரர்கள், எகிப்து (Egypt) தேசம் 8,000 வருடங்களுக்கு முன் நாகரிகத்தில் சிறப்புற்றதாயிருந்த தென்று சொல்லிவிட்டார்கள். நாம் முன் காலத்தில் எகிப்து தேசத்தோடு வர்த்தகம் புரியும் அவ்வளவு நாகரிகம் உடையவர்களாயிருந்தோ மென்று சரித்திரம் கூறுகின்றது. ஆகையால் நம்கால அளவோ அவர்களின் மனதிற்கே எட்டாததாக இருக்கின்றது. இந்தியாவின் பூர்வ சரித்திரத்தை, எவ்வளவு காலம் வரையில் நிர்ணயிக்கலாம் என்பதற்கு ஆராய்ச்சிக்காரர்கள் முயன்றிருக்கின்றார்கள். ஹிந்து மதத்தை அனுசரிக்கின்றவர்கள், ஆரியர்களாதலால் அவர்கள் கால நிர்ணயமும் நமக்கு அவசியமாகிறது.

 

நம் ஹிந்துமத புத்தகங்களில் அதிபுராதனமானது ருக்வேதம் என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இப்புத்தகத்தை இயற்றின நம் மூதாதையர்கள், முதன் முதல் இந்தியாவிலேயே இருந்தார்களில்லை. அதிக உத்தரப் பிரதேசத்திலிருந்தே குடியேறினார்கள். அவர்கள் அப்படி சுயதேசத்தை விட்டுக் குடியேறினதற்குக் காரணம் உண்டு. பிரகிருத பூகோள சாஸ்திரப் பிரகாரம் (Physical Geography) பூமியில், அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அனேக வருஷங்களுக்கு முன் பூமியின் வடபாகங்களைச் சமுத்திரம் உண்டு பனிமூடிய காரணத்தால், ஜனங்கள் வசிப்பதற்கு சௌகரியப்படாதென்று, சூடாயிருக்கின்ற தெக்ஷண தேசங்களை அடைந்தார்கள். இது சுமார் கி. மு. 15,000 வருஷங்களுக்கு முன் என்று மேனாட்டு சாஸ்திரக்காரர்கள் அபிப்பிராயப்படு கிறார்கள்.

யுகங்களின் பிரிவு.

 

நம்மவர்கள் காலநிர்ணயம் செய்வது வேறு தன்மையானது. ஆரியர்கள் இந்த ஜம்புத்தீபத்தில் அதாவது ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த பாகத்தில் வருவதற்கு வெகுகால முன்னமேயே வசித்திருக்க வேண்டும். அக்காலங்களை அவர்கள் யுகங்களாகப் பிரித்துக் கொண்டார்கள். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்நான்கும் சேர்ந்து ஓர் சதுர்யுகமாகிறது. இவைகள் 43, 20, 000 வருஷங்களாகின்றன. திரேதாயுகத்தில் ஆரியர்கள் ஹிமயமலைச் சாரலில், சூர்ய சந்திர வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டார்களென்று சரித்திரம் கூறுகின்றது. இது கி. மு. 1, 80, 000 வருஷம் வரையில், அதற்குப்பின் துவாபரயுகம் இதில் பாரத யுத்தம் நடந்ததாகத் தெரிகிறது. சுமார் கி. மு. 3, 100 வருஷங்களுக்கு முன் கிருஷ்ணபகவான் வைகுண்டம் சென்றார். அன்று முதல் கலியுகம் ஆரம்பித்து இப்பொழுது 5, 025 வருஷங்களாயின. கலியுகம் 4, 32, 000 வருஷங்களுள்ளது. மற்ற வருஷங்கள் முடிந்த பிறகு அடுத்த சதுர்யுகம் ஆரம்பமாகும். இவற்றால் ஆரியர்கள் அனேக ஆயிர வருஷங்களுக்கு முன் இருந்தார்களென்றும், அவர்கள் அந்தக்காலத்திலேயே பெரும் தத்வ புத்தகங்களை வேதமாகவும், அவர்கள் வரலாறுகளை இதிகாஸ புராணங்க ளாகவும், சட்டங்களை தர்ம சாஸ்திரம் அல்லது ஸ்மிருதிகளாகவும் இயற்ற வல்ல நாகரிகத்தை அடைந்திருந்தார்களென்றும், அவர்கள் மதம் ஒருவராலேயும் ஏற்படுத்தப்படாமல் அனாதியானதென்றும் தெரியவந்தது.

 

காலதேச வர்த்தமானங்களுக் கேற்றாற்போல நாகரிகம் உண்டாகிறது. நாகரிகத்திற்கும் அனுசரிக்கும் மனிதர்களின் மனப்பான்மைக்கும் ஏற்றாப்போலும் உண்மை அறிந்தவர்கள் சில மதங்களை ஆங்காங்கு ஸ்தாபிக்கின்றனர். ஆகையால் மதங்களுக்குள் உயர்வு தாழ்வென்பது கிடையாது.

 

 

மதச் சீர்திருத்தம்.

 

சில சமயங்களில் மத சாதாரண வழக்கங்கள் சீர்திருத்தப்படவேண்டும். அப்படி அடிக்கடி சீர்திருத்தப்பட்டும் வருகின்றன. நம் ஹிந்து மதமும் அனேக மாறுதல்களை அடைந்திருக்கின்றது. உலகத்திலிருக்கின்ற ஒவ்வொரு மதமும் பொதுவாகச் சில கொள்கைகளை உடையதாயிருக்கின்றது; தனக்கு மட்டும் உரித்தாயிருக்கின்ற சில கொள்கைகளை உடைத்தாயிருக்கின்றது. ஆனால் மனித அறிவுக்கேற்றாப் போல அவ்வப்போது சீர் திருத்தப்பட்டும், மனிதருக்கு நிகழும்படியான பெரும் சந்தேதங்களை நீக்கக் கூடியதாயுமிருக்கின்ற மதங்களே உத்தமமானதெனலாம்.

 

சில மதத்தினர்கள் மூடநம்பிக்கையால் மதத்தைச் சீர்திருத்துதல் ஆகாதகாரியம் என்கிறார்கள். அதனால் மத வளர்ச்சி குன்றுகின்றது. நமது தேகம், மனம், ஆத்மாவெனும் இம்மூன்றிலும், முறையே ஒன்றைவிட ஒன்று மேலானதும், அதிக கவனத்தைச் செலுத்தவேண்டிய தாகவுமிருக்கிறது. ஆத்மாவைப்பற்றியறியாதவர்கள் பெரிய ஞானிகள் அல்ல. ஒவ்வொரு நாட்டுப் பெரிய தத்வஞானிகளும் ஆத்மாவைப் பற்றின விஷயங்களிலேயே சர்சசை செய்து வருகின்றார்கள். ஆனால் ஒரு சில மதத்தினர்களே அரும் பெரும் விஷயங்களைக் கண்டறிந்திருக்கின்றனர். ஹிந்துக்களை விட இத்தகைய ஆத்ம ஞானத்தையுடையவர்கள் நாமென்று வேறு யாரும் தலையெடுக்க முடியாது. "பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் தவமிருந்தாலும் ஹிந்துக்களைப் போல ஆத்ம ஞானத்தில் வளர்ச்சி பெற மேல் நாட்டாரால் முடியாது. ஆத்மஞானத்தைப் போதிக்கும் சாஸ்திரங்களை மேல் நாட்டார் எழுதினார்களில்லை; எழுதுகின்றார்களில்லை; எழுதப்போவதுமில்லை'' என்று மேக்ஸ்முல்லர் (Max Mullar) என்னும் பெரிய ஆங்கிலர் ஒருவர் தம்மால் இயற்றப்பட்ட ஷட்தர்சினி (Six Svstems of Indian Philosophy) எனும் புத்தகத்தின் முகவுரையில் அபிப்பிராயப்படுகிறார்.

 

தற்காலத்தில் ஆத்மஞானப் பயிற்சி.

 

எல்லா ஞானத்திலும் ஆத்மஞானம் சிறந்தது. வித்தைகளில் அத்யாத்ம வித்தை நான் என்று கிருஷ்ணபகவான் கீதை வாயிலாக உபதேசிக்கின்றார். அதிகம் சொல்லி என்? ஹிந்து மதத்தைவிட வேறெந்த மதமும் ஆத்ம ஞானத்தைப் போதிக்கும் சாஸ்திரங்களை உடைத்தாயில்லை. ஆத்மஞானமல்லவோ இம்மையிலும் மறுமையிலும் சுகத்தைக் கொடுப் பது. அஃதல்லவோ கண்ணேபோல் போற்றத்தக்கது. ஆனால் ஆரிய மக்களில் எத்தனை பேர் அவ்வாத்ம ஞானத்தை இக்காலத்தில் கற்க முயற்சிக்கின்றனர்? மேனாட்டு லோகாயத நாகரிகம் பரவியிருக்கின்ற இக்காலத்தில் எத்தனை ஆரிய மாந்தர் ஞானவாசிட்டம், சிவஞான போதம், கைவல்யம் முதலிய நூற்களை ஓதுகின்றனர். அந்தோ ! பாரத்வாஜர், வசிஷ்டர். மைத்திரேயர் முதலியவர்களின் சந்ததிகளில் பிறந்தவர்கள் நாங்கள், அக்கோத்திரத்தை யுடையவர்கள் நாங்கள், எனும் சொற்களுக்கு உடையவர்களா யிருக்கிறார்களே தவிர அவர்களாலியற்றப்பட்ட நூற்கள் இருக்கின்றனவா என்றும் அறியாதவர்கள் எத்தனைபேர் இருக்கின்றனர்? இக் கோலம் நீங்கி எக்காலத்தில் அச்சாஸ்திரங்களில் கவனம் செல்லுமோ?

 

ஆத்மா வென்பது என்ன?

 

 ஆத்மாவென்பது யாது? இஃது எங்கிருந்து வந்தது? அஃது இவ் வுலகத்தில் செய்ய வேண்டிய காரியங்களென்ன? இவ்வுலகத்தை விட்டதும் எவ்விடம் போகின்றது. இவ்வுலகங்களைத் தவிர ஆன்மா வசிக்கக்கூடிய வேறு உலகங்களிருக்கின்றனவா? என்பவைகளைத்தான் நாம் நம் மதத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். வேறுபல இருந்தாலும் முக்கியமானவைக ளிவைகளே.

 

ஒவ்வொரு மதமும் அதை அனுசரிக்கின்றவர்களுக்கு எதை நினைக்க வேண்டும், எதை விரும்பவேண்டும், எதைச் செய்யவேண்டும் எனும் மூன்று விஷயங்களைத் தெரிவிக்கின்றது. எல்லாத் தேசத்து மனோதத்வ சாஸ்திரக்காரர்களும், ஒரு மனிதனின் உணர்ச்சி, ஞானம், இச்சை அல்லது பக்தி, கிரியை என்று மூவகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென் பதை ஒத்துக்கொள்ளுகின்றனர். இவைகளைத் தனித்தனியே தெரிந் தெடுக்க முடியுமானாலும் ஒன்றுக்கொன்று சேர்ந்துதானிருக்கும். இதைத் தான் மும்மார்க்கம் என்றும் சொல்வது.


(கடலூர் ஹிந்து சபையின் பிரசுரம்)

(நவசக்தி)

 

ஆனந்த போதினி – 1923 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment