Showing posts with label கடவுளை நம்பினோர் கைவிடப்படார். Show all posts
Showing posts with label கடவுளை நம்பினோர் கைவிடப்படார். Show all posts

Saturday, August 29, 2020

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

 இந்த வாக்கியத்தின் உண்மையை முற்றாய் உணர்ந்தவர்களுக்கு மெய்யான சந்தோஷமும் மன ஆறுதலும் உண்டென்பதற்குச் சந்தேகமில்லை. அனேகர் கடவுளுடைய திருவருளின் சக்தியை அறியாதவர்களாயிருக்கிறார்கள். "சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" யென்பதைப் பரிகாசமாக எண்ணுகிறார்கள். எத்தனையோ பெரிய மகான்கள் இடைவிடாது ஈஸ்வரதியான முடையவர்களாய் இருந்ததன் பயனாகச் சொலற்கரும் தீமை விளைக்கக்கூடிய இடர்களிலிருந்து தங்களைத் தப்புவித்துக் கொண்டதாகச் சரித்திரங்களில் சொல்லப்பட்டிருப்பவைகளெல்லாம் பெரும் கட்டுக்கதைகளென்று பிதற்றுகிறார்கள். இப்படியெல்லாம் சிலராவது எண்ணுவது கலிகாலத்தின் கோலமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுளை நம்பும் விஷயத்தில் அனேகர் தங்களைத் தாங்களே அணாப்புகிறார்கள். மனுஷன் தன்னாற்றலாய்ச் செய்பவைகள் போலத் தோற்றுபவைகளெல்லாவற்றையும் தான் செய்ததாக நினைத்து இறுமாந்திருக்கிறான். தன்னால் ஒரு காரியம் செய்ய முடியாதென்று கண்டவிடத்து மாத்திரம் கடவுளைப்பற்றி நினைக்கிறான். தான் செய்ய முடியாமலிருப்பது விதியின் பயனென்று முடிக்கிறான். இதை நாம் உற்று உணரும் பொழுதும் அனுபவத்தில் காணும் பொழுதும் மிகவும் வேடிக்கையாயிருக்கும். "அவனன்றி ஓரணுவும் அசையா'' தென்பதை அனேகர் தங்களிடத்திருக்கும் ஆணவமுதிர்ச்சியினால் மறந்து விடுகிறார்கள். இம்மறதியே சனங்களின் சங்கடங்களுக்குப் பெரும்பாலும் காரணமாயிருக்கின்றது. சுகபலம் செல்வம் அதிகமாயிருப்பவர்கள் இயல்பாய் உலக விஷயங்களுக்குள் முற்றாயமிழ்ந்தித் தலைவனுடைய தியானம் சற்றும் இல்லாதவர்களாயிருப்பதை நாம் காண்கிறோம். இதுபற்றித்தான் இடையிடையே மனுஷருக்குக் கஷ்டங்கள் நேரிடுவது அவர்களுக்குப் பெரும் நன்மை பயத்தற்கு ஏதுவாகுமென்று சொல்வதுண்டு. பிறந்த நாள் முதல் இறக்கும் வரையும் ஒருவன் ஒருவகையான கஷ்டத்தையும் அனுபவியாதிருக்கும் சிலாக்கியத்தைப் பெறக்கூடுமாயின் அவன் கடவுளை நினைக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் ஏற்படாது. உலகப் பொருட்களின் பற்று அவனுக்கு மிகவும் அதிகரிக்கும். இதுவுமன்றிப் பிறருக்கு இயன்றவரையில் தீமை செய்யக் கொஞ்சமும் யோசிக்க மாட்டான். பிறவிப்பிணியை நீக்குதலின் அவசியம் அவனுக்குக் கொஞ்சமும் தோற்றாது. இப்பிறவியிலிருந்து கொண்டே இன்னும் அனேக பிறவிகளுக்கு அஸ்திவாரம் போட்டபடி யிருப்பான்.

 

கடவுளிடத்திலே பூரண விசுவாசம் வைத்திருப்பவர்களுடைய சுகானுபவம் அவர்களுக்கு மாத்திரமேயன்றி மற்றவர்களுக்குச் சரியாய் விளங்காது. அது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தக் கூடியதொன்றல்ல. அனேகர் கடவுளை நினைத்தவுடன் தாங்கள் எண்ணிய காரியங்களெல்லாம் சித்தி யெய்தாதிருந்தால் அவரைக் கண்கெட்ட வளென்றும், கடவுளுக்குக் கண்ணில்லை யென்றும் சொல்வது வழக்கம். இதுவுமன்றி, தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளைகள் யாராவது இறந்துவிட்டால் கோயில்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்வதையும் நிறுத்திவிடுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்குக் கடவுளிடத்தில் எப்படிப்பட்ட மதிப்பு இருக்குமென்பதைப் பற்றியும் அவரின் திருவருட் சக்தியைப் பற்றியும் அவர்கள் என்ன வகையான எண்ணம் வைத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் நாம் இலகுவாய் விளக்கிக் கொள்ளலாம். உலக விஷயங்களில் அனுகூல மடைவதற்காகக் கடவுளைப் பிரார்த்திக்கிறவர்களை உலகத்தில் அதிகமாய்க் காணலாம். ஆனால் தங்களைப் பந்தித்திருக்கும் மும்மலங்களையும் போக்கித் திருவருட் சக்தியால் தங்களைச் சிவத்தோடு ஒன்றித்து நிற்கச் செய்யத்தக்க வல்லமையைக் கொடுக்கும்படி ஈஸ்வரனை அல்லும் பகலும் வேண்டி நிற்பவர்களைக் காண்பது அரிதிலு மரிதாயிருக்கின்றது.

 

நஷ்டம் வரும்பொழுது மாத்திரம் கடவுளை நினைப்பவர்களுக்கும் கடவுள் இல்லையென்று சாதிக்கும் நிரீச்சுரவாதிகளுக்கும் அதிகபேதமிருக்கிறதாகத் தோற்றவில்லை. நிரீச்சுரவாதிகளிற் சிலர் முன் சொல்லப்பட்டவர்களைக் காட்டினும் சீவபிராணிகளில் அன்பு அனுதாபம் காட்டக் கூடியவர்களாயிருக்கிறதை நாம் காண்கிறோம், இவர்கள் பலவகையான தீமைகளிலுமிருந்து விலக்கக்கூடிய வரையில் மற்றவர்களுக்கு நன்மை செய்தல் இவ்வுலகசீவியத்தின் அனுகூலத்திற்கு இன்றியமையாததென எண்ணி நடக்கிறார்கள். ஆனபடியால் ஆபத்து நேரிடும் காலத்தில் மாத்திரம் அரனை நினைப்பவர்கள் அதனால் அடையத்தகும் பயன் அற்பமா யிருத்தலை எண்ணி அவரின் அனந்த சக்தியைக் குறைவாய் நினைத்தல் பெரும் தவறாகும்.

 

நிரீச்சுரவாதி இகத்தைப்பற்றி மட்டும் நினைத்து அதன் அனுகூலத்திற்குரிய வழிவகைகளைத் தேடுகிறான். இகபரம் இரண்டிலும் நம்பிக்கை வைத்து முத்திய பெரும்பேறு சித்தியெய்த விரும்புபவன் எல்லாம் வல்ல இறைவனை இரவும் பகலும் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் பூரண நம்பிக்கையோடும் நிறைந்த அன்போடும் தியானிப்பது அத்தியா வசியகம். அப்படிச் செய்யும் தோறும் அவனுக்கே ஒரு வகையான மன ஆறுதலும் சந்தோஷமும் உண்டாதல் மாத்திரமன்றி அவனுடைய சொல் செயல் முதலியவைகளில் மற்றவர்கள் மெச்சத்தகும் ஒருவகையான வித்தியாசத்தையும் காணுவார்கள். இந்த நிலையை அடைதற்கு மானிடர் அனைவரும் முயற்சித்தல் வேண்டும் அப்படிச் செய்யுந் தோறும் அவர்கள் தங்கள் ஈடேற்றத்தை நாடுகிறது மாத்திரமன்றி மற்றும் தங்களைச் சூழ இருப்பவர்களுக்கும் ஓர் சிறந்த முன்மாதிரியாய் இருப்பார்கள், செய்யத் தகாதவற்றைச் செய்வதாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விடுவதாலும் எண்ணாது ஒழிக்கவேண்டியவற்றை எண்ணுவதாலுமே நாம் பலமுறைகளிலும் துக்கத்தை அனுபவிக்கிறோம். இத்துக்க நிவிர்த்திக்குச் சிவத்தியான மன்றி வேறொன்றும் உதவி புரியாது. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் பலர் அறியாதிருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறிந்தது போலப் பாசாங்கு பண்ணி அல்லலுறுகிறார்கள். உண்மையான வழிதெரியாமல் மயங்கி நிற்கிறவர்களைக்காட்டினும் சரியான முறையை அறிந்தும் அதன்வழி ஒழுகும் மனத்திடமில்லாதவர்களுக்காகவே நாம் பெரிதும் பரிதாபப் படவேண்டும். உலகத்திலேயுள்ள சனங்களில் பெரும்பாலார் இப்படிப் பட்டவர்களென்றே சொல்லலாம். இவர்கள் மனம் போன போக்கெல்லாம் போய்க் கடைசியாய்க் கடவுளென்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வியோடு தங்கள் சீவியத்தை முடிக்கவேண்டியதாய் வரும்.

 

போதனையால் மாத்திரம் பயனொன்று மில்லை. சற்போதனையைச் சாதித்தலால் அடையத்தகும் பயன் அற்பமல்ல. ஆதலால் எத்தொழிலைச் செய்யும் பொழுதும் சும்மா இருக்கும் நேரத்திலும் இடைவிடாது இறைவனைத் தியானிக்கும் பழக்கத்தை நாம் நாள்தோறும் பழகிக்கொண்டு வரவேண்டும். அழியும் பொருளொன்றிலும் நிலையான நேசம் வையாது தாமரையிலைத் தண்ணீர்போல, பார்த்தால் உலகத்தவர் போலிருக்க மாத்திரம் பயின்று வருதல் நன்மைக்கு ஏதுவாகும். ஒரு கொடிய நோயுற்றிருக்கும் போது, சிலகாலம் ஒரு வைத்தியனிடத்திலும் வேறு சிலகாலம் இன்னொரு வைத்தியனிடத்திலும் நாம் மாறிமாறி நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்வது போலல்லாமல் வாழ்விலும் தாழ்விலும் சுகமாயிருக்கும் போதும் வியாதியுற்றிருக்கும் போதும் ஒரே மனதோடு ஈஸ்வரனை முற்றாக நம்பினால் நற்கதியடைந்து உய்வது நிச்சயமென்பதைக் கனவிலும் மறவாதிருப்போமாக.

 

               கா. சின்னப்பா, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

முன்னொரு காலத்துக் கோதாவரி நதிக்கருகில், 'புஷ்பபுரி' என்றும், பிரமபுரம்' என்றும் பெயருடைய நகரங்க ளிரண்டுண்டு. அவை, கல்வியாலும் செல்வத்தாலும் கைத்தொழிலாலும் வர்த்தகத்தாலும் மேன்மை பெற்றவை. அந்நகரங்க ளிரண்டினையும் ஆண்டு வந்த 'இராஜ திலகன்' என்னுமாசன், கல்விக்கு உறைவிடம், கற்றோர்க்கு அருங்கலன், வறியோர்க்குப் பெருநிதி, கருணைக்கு அருங்கடல், அறத்துக்கு நற்றோழன், மறத்துக்குக் கடும்பகை. இவ்வாறு சிறந்து விளங்கா நின்ற அவ்வரசன் செங்கோல் செலுத்தி வருநாளில், மாதம் மும்மாரிபெய்தமையால், அப்பட்டணங்க ளிரண்டும் நீர்வள நிலவளங்களாற் செழித்து விளங்கின.

 

அவற்றுள் புஷ்பபுரி என்ற நகரத்தில், 'தேவதத்தன்' என்னும் ஓர் அந்தணனும், பிரமபுரமென்றநகரத்தில் தேவராதன்' என்னும் ஓர் அந்தணனு மிருந்தார்கள். அவர்கள் கல்வியிற் கரைகண்டோ ராயினும், வறுமைப்பிணியால் வருத்தமுற்று வந்தனர். ஆதலின், அவர்கள் தினந்தோறும் பற்பல இடங்களிற் சென்று பிச்சையெடுத்துச் சீவனஞ் செய்ய வேண்டுவதாயிற்று. அவ்விருவரில் தேவராதன் பெருங்குடும்பி. அவன் மனையாளோ கற்புக்கரசி, கணவனையே கடவுளாகக் கருதுந்தன்மையள்; அவனது குறிப்பறிந்து நடக்குங் குணவதி, பொறுமையே தனக்குப் பூஷணமாகக் கொண்ட பெண்மணி. இவ்வாறு குணச்சிறப்புடைய அம்மங்கை, கணவன் நாள்தோறும் பிச்சையெடுத்துக் கொணரும் அரிசியைச் சமைத்துக் கடவுளுக்கு நைவேத்தியம் செய்து, கொழுநனுக்கும் மக்களுக்கும் அளித்துப் பின்பு, ஏதேனும் ஒரு சிறிது மிஞ்சுமாயின் அதனைத் தான் அருந்துவாள்.

 

இவ்வாறாக, தேவராதன் தான் பிச்சைக்குச் செல்லுகையில், கடவுளை நம்பினோர் கைவிடப்படார்,'' என்று சொல்லிக் கொண்டே செல்வது வழக்கம். தேவதத்தனோ என்றால், அவன் கடவுளிடத்து அத்துணை நம்பிக்கை கொண்டவனல்லன். இங்ஙனம் தேவராதன் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்ட இராஜதிலகன், அதன் உண்மையைச் சோதிக்கக் கருதி, தன் மந்திரியினிடம் ஆலோசிப்பானாயினான். இங்ஙனம் பலநாள் கழிய, அப்பால், ஒருநாள் தேவதத்தன் தன் வழக்கப்படி பிச்சைக்குச் சென்றபோது, அரசன் மாளிகைக்குச் சென்றான்.

 

அரசன், ஒரு பூசணிக்காயின் மேற்பக்கத்தில் ஓரங்குல அகலம் துளையொன் றுண்டாக்கி, அக்காயினுள் ளிருக்கும் விதைகளை எடுத் தெறிந்துவிட்டு, அத்துளை வழியே பல பொன் நாணயங்களை அதனுட் செலுத்தி, பின்பு அத்துளையைக் கண்ணுக்குத் தெரியாதபடி மூடி, அதனை அத்தேவதத்தனிடம் கொடுத்து அனுப்பினான். அது பெற்ற தேவதத்தன், அக்காயுடன் தன் இல்லம் நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் தேவராதனைச் சந்தித்தான். உடனே தேவதத்தனுக்கு, "இந்தக் காயைக் கொண்டு செல்வதில் இவ்வளவும் நமக்கு உபயோகமாவ தில்லையே? வீணேதானே அழியும். ஆதலின், இதனைத் தேவராதனுக்குக் கொடுத்தால், இது முற்றும் பயன்பெறு மன்றோ? அவனோ பெருங்குடும்பி, ஆதலால், இதனை அவனுக்கே கொடுத்து விடல் வேண்டும்'' எனும் எண்ணம் உதிக்க, அவன் அங்ஙனமே அதைத் தேவராதன் கையிற் கொடுத்துச் சென்றான்.

தேவராதன், அதனைத் தன் வீடு கொண்டு சென்று, மனைவிபாற் கொடுக்க, அவள் உடனே அதனைத் திருத்துகையில் அதிலிருந்த பொன்நாணயங்கள் பலபல வென்று கீழே விழுந்தன. அதுகண்ட அம்மாது, அச்சமும் வியப்புங்கொண்டு தன் கணவனுக் கறிவிக்க, அவன் அதனுண்மை யறியாதவனாதலின், திடுக்கிட்டு, "இது ஏதோ தெரியவில்லையே? இதனை நாம் வைத்துக்கொள்ளல் வீண்பழிக்கன்றோ காரணமாகும்? ஆதலால், தேவதத்தனிடத்திலேயே இதனைச் சேர்த்துவிடல் வேண்டும்" எனக்கருதி, அவனைத் தேடிச்சென்றான். தேவராதன் தேவதத்தனை எங்குங்காணப் பெறாமையால் மனக்கவலையோடு அரசனிடம் அணுகி, நிகழ்ந்தவற்றைக் கூறினான்.

 

அரசன், தேவராதனுடைய உண்மை யுடைமைக்கும், தேவதத்த னுடைய தயாகுணத்துக்கும் வியந்தமையோடு, கடவுளை நம்பினோர் பெறலாகும் பேறுகளை நினைந்து நினைந்து மகிழ்வானாயினான். அப்பால் அரசன், தேவதத்தனையும் வருவித்து, தான் செய்த செய்கையின் உண்மையை விளக்கி, தேவராதனையே பொன் நாணயங்களைப் பெறுமாறு செய்து தேவதத்தனுக்கும் சிறிது பொருள் கொடுத்தனுப்பினான். பிறகு, இருவரும், தம்முள் சிறிதும் கலகங்கொள்ளாமல், இல்லஞ்சென்று இன்பமாய் வாழ்ந்தனர்.

 

ஆதலின், என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! எக்காலத்தும் தெய்வத்தை நம்பினோரே உயர்ந்தவராவர். கடவுள் பாற்சிறந்த நம்பிக்கை கொள்ளாத தேவதத்தன், தான் அளவற்ற பொன் நாணயங்களைப் பெற்றும், அவற்றை அனுபவிக்கப் பெற்றிலன்; கடவுளையே நம்பினவனான தேவராதனே அவற்றை அனுபவிக்கப் பெற்றான். ஆகவே, கடவுளை நம்பினோர், ஒருகாலமும் கைவிடப் படமாட்டார்; என்பதை நீங்கள் திட்டமாகத் தெரிந்து கொள்வதோடு இதர விஷயங்களிலும் சரிவர நடந்து கொள்ள வேணுமாய் வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

எஸ் - எம். பிள்ளை,

 கூத்தூர், நாகப்பட்டணம் தாலூக்கா.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

 

 

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

எவனொருவன் எல்லாம் வல்ல இறைவனும், ஏகநாயகனும், கருணா நிதியுமான பரமாத்மாவினிடத்தில் உண்மையான பக்தி வைக்கின்றானோ அவனுக்கு அப்பகவான் எவ்விதக்குறைவையும் வைக்காமல் அவன் கோரிக் கைகளையும் ஈடேற்றி வைக்கிறார் என்பதை அடியிற் கண்ட உண்மைச் சரித்திரம் கரதலாமலகம் போல் தெரிவிக்கிறது.

 

சுமட்றா தீவில் பாலெம்பரங் என்னும் துறைமுகப் பட்டணத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன் ஓர் மலாய்க்காரரும் அவருடைய பத்தினியும் வசித்துவந்தார்கள். இவர்கள் மிகவும் பரம ஏழைகளா யிருந்தாலும் தெய்வபக்தியிற் சிறிதும் குறைந்தவர்களல்ல. வறுமையின் கொடுமையால் அதிக கஷ்டத்துடன் ஜீவனம் செய்து வந்தார்கள். ஹிந்துக்களுக்கு காசியாத்திரை எவ்வளவு விசேஷமோ அதேமாதிரி இவர்களுக்கு மெக்கா ஸ்தலயாத்திரை மிகவும் அவசியம். சதிபதிகளிருவரும் தங்கள் ஜீவியகாலத்திற்குள் ஓர் முறையாவது அவ்விடம் போய்வரா விட்டால் தாங்கள் இவ்வுலகில் மானிட உடலெடுத்ததின் பிரயோசனம் ஒன்றுமில்லை என்று கருதி, தங்கள் எண்ணத்தை எவ்விதத்திலாவது முற்றுப் பெறச் செய்ய வேண்டுமென்று இரவும் பகலும் இடைவிடாது இறைவனைத் தொழுது வந்தார்கள்.

 

இம்மாதிரி சிலகாலம் சென்றபின் ஓர்நாளிரவு அம் மலாய்க்காரரின் கனவில் ஓர் பெரியவர் தோன்றி " உனக்கு அடுத்த வருஷம் ஒரு ஆண் குழந்தை பிறக்கும்; அக்குழந்தையால் உன் கோரிக்கை நிறைவேறும்' என்று சொல்லி மறைந்தார். பெரியார் அருளிய பிரகாரமே மலாய்க்காரரின் மனைவி மறுவருஷம் ஓர் ஆண்மகவை யீன்றாள். இக்குழந்தை இரண்டு சாணுக்கதிக நிகளமில்லை. பிறந்து இரண்டு தினங்களாவதற்குள்ளாகவே எழுந்து உட்காரவும், மழலைச் சொற்களைக் கழறவும் ஆரம்பித்தது. மறுதினம் எழுந்து நடக்கவும் தலைப்பட்டது. இந்தப் பேரதிசயத்தைக் காண திரள் திரளான ஜனங்கள் வந்து கூடினார்கள். வேடிக்கை பார்க்கவரும் ஜனங்களொவ் வொருவரும் தங்கள் தங்களாலியன்ற பொருளுதவியை அவ்வேழை மனிதனுக்குச் செய்யத் தவறுவதில்லை.

 

இம்மாதிரி ஒருவருஷம் சென்றது. குழந்தை பிறந்த பொழுதிருந்த வளர்ச்சியை விட ஓரங்குலங் கூட அதிகம் வளரவில்லை. புருடன் மனைவி இருவரும் தாங்கள் கோரிய இடம் போய்த் திரும்புவதற்குப் போதிய பணமும் சேர்ந்து விட்டது. இக்குழந்தை ஒரு நாள் காலையில் எவ்வித வியாதியாலும் பீடிக்கப்படாமலிருக்கையிலேயே திடீரென்று இம்மண்ணுலகை நீத்து விண்ணுல கடைந்தது. பெற்றோர்களடைந்த விசனத்திற் கோரளவில்லை. அதற்குச் செய்யவேண்டிய கருமங்களைச் செய்து முடித்த அதே இரவில் மலாய்க்காரரின் கனவில் முன்தோன்றிய பெரியவர் வந்து, ''இனி நீ அக்குழந்தைக்காக விசனப்படுவதை யொழித்து நீ கொண்ட கோரிக்கையை உன் பத்தினி சகிதம் நிறைவேற்று" என்று சொல்லி மறைந்தார். கண் விழித்ததும், பரம கிருபா நிதியின் பெருமையைக் கொண்டாடி, தானும் தன் மனைவியும் மறுநாளே தங்கள் பிரையாணத்தை ஆரம்பித்தார்கள். கடவுளிருப்பைச் சந்தேகிப்பவர்கள் என்றும் மீளாநரகிற்காளாவர்கள்.

 நா. மதுரைழத்துப்பிள்ளை.

74, அம்பாங்ஸ்திரீட், குவாலாலம்பூர்   

ஆனந்த போதினி – 1920 ௵ - டிசம்பர் ௴