Sunday, September 6, 2020

 

மெய்ப்புகழும், பொய்ப்புகழும்

 

உலகத்தில் மக்கட் பிறப்பில் தோன்றிய ஒவ்வொருவரும் தேடத்தக்கவைகளுள் தலை சிறந்து நிற்பது புகழ் ஒன்றே யாம். இஃது உலகமுள்ளவரையிலும் அழியாது நிற்கும் பெருஞ் செல்வமாம். இது,


''ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
 பொன்றாது நிற்பதொன் றில்''


என்னுந் திருக்குறட் செய்யுளாலு முணரப்படும். ஆதலின் இத்தகைய புகழை மனிதர் அவசியம் தேடிக்கொள்ளுதல் வேண்டும். புகழுடையாரை உலகமுழுவதும் போற்றும்; தேவர்களுந் துதிப்பார்கள்; தெய்வமும் விரும்பும். இத்தகைய புகழ் இரப்பார்க்கு வேண்டுவன கொடுத்தல் முதலிய தான தருமங்களாலும், வேறுபல செயற்கரிய செயல்களைச் செய்வதனாலுமே ஏற்படுவதாம். அங்ஙனமுண்டாவதில் மெய்ப்புகழ், பொய்ப்புகழ் என இரண்டு வகையுண்டு. இவ்விரண்டில் மெய்ப்புகழாவது ஒருவர், உண்மையாகவே கொடையாலும், கல்வியாலும், வீரத்தாலும், வேறுபல செயற்கரிய செயல்களாலும் அடைவதாம். பொய்ப்புகழாவது, ஒருவர் தம்மிடத்தில் அப்புகழ்ச்சிக்குரிய காரியம் சிறிதுமில்லாவிடினும் அதனைச் செய்தார் போன்று நடித்துப் பிறரை மயக்கி அவரால் நன்கு மதிக்கப்படுதலாம். இவ்விரண்டினுள்ளும் உண்மைப்புகழ்தான் புகழென்று சொல்லப்படும். பொய்ப்புகழ், புகழ்
என்று சொல்லளவிலுங்கூடச் சொல்லுவதற்கும் பொருந்தாதாம்

 

பண்டைக்காலத்தில் நம் நாட்டில் உண்மைப் புகழ் தேடுவோரே மலிந்திருந்தனர். பலர், கல்வியிற் பெரியாராய்ப் பற்பலநூற்களை இயற்றியிருக்கின்றனர்; தனிக்கவிகளைச் சாற்றியிருக்கின்றனர்; தங்கள் பாடல்களிற் கூறிய சொற்கள் பலிதமாகும்படி செய்து தெய்விகச் செயல்களைக் காட்டியிருக்கின்றனர்; அவர்கள் இயற்றிய நூற்களும், பாசுரங்களும் நிலை பெற்றிருந்தன; இப்போதும் நிலை பெற்றிருக்கின்றன; இனிமேலும் இருக்கக்கூடியனவாய் விளங்குகின்றன; அவற்றால் அவர்களுக்கு உண்மைப் புகழுண்டாய் என்றும் அழியாததாய் நிலை பெற்றிருக்கின்றது. சிலர், இரப்பார்க்கில்லை யென்னாமல் தங்கள் பொருள்களை வாரிக் கொடுத்திருக்கின்றார்கள்; குமணன் ஒரு தமிழ்ப்புலவனுக்குத் தலையையும் கொடுக்க இசைந்தான்; சிபி தன் உடலையும் ஒரு புறாவுக்கு நல்கினான். இந்த அரும்பெருஞ் செயல்களால் இவர்களுக்கு உண்மைப்புகழுண்டாகி என்று மழியாததாய் நிலைத்திருக்கின்றது. சிலபேரரசர்கள், அற்புதமான சிற்ப வேலைகளமைந்த கோவில்களையும், அரண்மனைகளையும், கோபுரங்களையும் நிருமித்திருக்கின்றனர்; அன்ன சத்திரங்களையும், கல்விச்சாலைகளையும், மடங்களையும்அமைத்திருக்கின்றனர்; பலவகைத் தருமங்கள் எப்பொழுதும்நிலைபெற்று நடந்தேறி வருமாறு கிராமங்களையும், நிலங்களையும் தானம் செய்திருக்கின்றனர்; சிலர் வீரத்தின் மிக்காராய்ப் பெரிய வெற்றிகளை அடைந்திருக்கின்றனர்; சிலர் கைத்தொழில்களில் வல்லுநரா யிருந்திருக்கின்றனர்; சிலர் வைத்தியத் தொழில் வல்லாராய்ப் பல அற்புத மருந்துகளை முடித்துப் பற்பல தீரா வியாதிகளைத் தீர்த்து உலகத்தவரால் கொண்டாடப் பட்டிருக்கின்றனர். சிலர் இசையிலும் நாடகத்திலும் பேரறிவாளராய்ச் சிறந்து விளங்கியிருக்கின்றனர். இவற்றால் இவர்களுக்கு மெய்ப்புகழ் உண்டாகிஇவர்கள் பெயர் என்று மழியாமல் நிலைபெற்றிருக்கின்றது. இன்னும் எத்தனையோ பேர்கள் எத்தனையோ வகைகளில் உண்மைப்புகழ் தேடி நிலைநிறுத்தி யிருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு உண்மைப் புகழைத் தேடிக்கொண்டபடியால் இம்மை, மறுமை ஆகிய இரண்டிடங்களிலும் நன்மையே பெற்றிருக்கின்றனர்.

 

இக்காலத்திலோ மனிதரிற் சிறுபான்மையோரே – எங்கோ அருமையாகச் சிலரே - உண்மைப் புகழ் அடைதற்கேதுவான காரியங்களைச் செய்து வருகின்றனர். பெரும்பான்மையோர் பொய்ப்புகழ்க்குரிய காரியங்களையே பெரிதும் முயன்று செய்து வருகின்றனர். பண்டைக்காலத்திலிருந்த பெரும்புகழாளர், தங்கள் புகழ் உலகில் என்றென்றும் நிலைநிற்கும்படி மிக்க அற்புதமாகக் கட்டி வைத்த கோவில் முதலியவற்றில் ஏதோ சிறு சிறு மாறுதலான வேலைகளைச் செய்துவிட்டு, முன்னோரின் இயற்கைப்புகழ் மறைந்து தங்களுடைய செயற்கைப் போலிப் புகழ் நிலை நிற்க விரும்பிப் பத்திரிகைகளில் தாங்கள் செயற்கரிய காரியங்களைச் செய்து விட்டதாக விரிந்த வியாசங்கள் வெளிவரும்படி சிலர் செய்கின்றனர்.

 

சிலர், தங்கள் வீட்டில் சிரார்த்தம் நடக்குங் காலத்திலோ, திருவிழாக் காலங்களிலோ, வேறு விசேட நாட்களிலோ பத்துப் பிராமணர்களுக்குச் சாப்பாடு போட்டுவிட்டோ, பதினைந்து பரதேசிகளுக்குச் சோற்றுக் கவளம் கொடுத்துவிட்டோ, இருபது ஏழைகளுக்குக் கூழ் வார்த்து விட்டோ, ஆயிரக் கணக்கான ஜனங்களுக்கு அன்னதானம் செய்ததாகப் பத்திரிகைகளில் பற்பல வியாசங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர், வைத்தியத்தில் தங்களுக்குச் சிறிதும் தேர்ச்சியில்லா திருந்தும், தாங்கள் அநேகம் சித்தர் முறைகளைக் கண்டுபிடித்து விட்டதாகவும், தீராத நோய்களைத் தீர்த்து விட்டதாகவும், இரசவாதத்தில் கைதேர்ந்து இரும்பைப் பொன்னாக்கி விட்டதாகவும் புளுகான செய்திகளை யெழுதிப்பல பத்திரிகைகளின் வாயிலாக உலகத்தில் பரப்புகின்றனர்; அறுகம்புல் வேரையும் இழுத்தறுக்க முடியாத சிலர், மனிதர் பலரால் தூக்க முடியாததைத் தூக்கி விட்டதாகவும், பறிக்க முடியாததைப் பறித்து விட்டதாகவும், அறுக்க முடியாததை அறுத்து விட்டதாகவும், இன்னும் பல வல்லமையான காரியங்களைச் செய்து விட்டதாகவும் எங்கும் விளம்பரம் செய்கின்றனர்; ஒரு உருவத்தையாவது கிரமப்படி வரையத் தெரியாத சிலர், உலகத்தில் எவருமே செய்ய முடியாத சித்திர வேலைப்பாடுகளைத் தாங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துகின்றனர். இன்னும், மனதை ஐந்து நிமிஷமேனும் ஒரே நிலையில் நிறுத்த முடியாத சிலர், தாங்கள் மிகுந்த யோகப்பழக்கம் செய்திருப்பதாகவும், ஆறுமாதகாலம் வரையிலுங் கூடச் சாப்பாடு முதலியன இன்றி யோகத்தில் அமர்ந்திருக்கத் தங்களால் முடியுமென்றும், ஆகாய கமனஞ் செய்ய இயலுமென்றும், மனிதர்க்குத் திரிகால வர்த்தமானங்களைத் தெரிவிக்கக்கூடுமென்றும், ஜலத்தில் நடக்கக்கூடுமென்றும், நெருப்பிலிருக்கக்கூடுமென்றும், தம்மை அடுத்தவர்க்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கக்கூடுமென்றும் கட்டுப்பாடான கட்டுரைகளைப் பத்திரிகைகளில் வெளியிடுகின்றனர். சிலர், மோசம், வஞ்சனை, திருட்டு முதலிய அயோக்கியத்தனமான காரியங்களை மிகுதியும் செய்பவர்களாயிருந்தும் உலகத்தார் தம்மைப் பெரியவரென மதிக்கும்படி தலையை மொட்டையாக்கிக் காவி வஸ்திரந்தரித்து, சாதுவென்றும், சாமியென்றும், முனிவரென்றும், தவசியென்றும், யதியென்றும், தம்பிரானென்றும் பல போலிப் பட்டங்களைத் தாமே சூட்டிக் கொண்டு தாங்கள் பெரிய மகிமைகளைச் செய்து வருவதாக எங்கும் வாய்ப்பறை யறைந்தும், பத்திரிகைகளில் வியாசங்கள் எழுதி வெளிப்படுத்தியும் வருகின்றனர். சில வியாபாரிகள், தங்களிடம் சேர்ந்திருக்கும் காரியஸ்தர்கள் அரும்பாடுபட்டு மதிநுட்பத்தோடு தொழில் நடத்தி அதிக ஊதியம் வரும்படி செய்ய, அது தங்களுடைய சாமர்த்தியத்தினாலேயே கிடைக்கிறதென்று எங்கும் பிரஸ்தாபித்துப் பொய்ப்பெருமை யடைகிறார்கள். ஒரு தொழில்வல்லான் கட்டிடமொன்றைத் தன்னுடைய சாமர்த்தியத்தால் அற்புதமாகக் கட்டி முடிக்க அத்தொழிலில் தேர்ச்சியேயில்லாத சிலர், பெரிய வேலைக்காரர்கள் போல் அவனுடன் கலந்து திரிந்து கொண்டே தாங்களே அவ்வற்புதக் கட்டிடத்தைக் கட்டி முடித்ததாகப் பலரிடத்தும் கூறிப் பொய்ப் பெருமையடைகிறார்கள்; சிலர், தாங்கள் சுதேசப்பற்று சிறிதுமில்லாமலிருந்தும், பரோபகாரம் அணுவளவுமில்லாதிருந்தும், பலர் தங்களை மதித்துக் கொண்டாட வேண்டுமென்றும், பலரிடம் எளிதில் பணம் கவர்ந்து சுயநலமும், சுய சௌக்கியமு மடையவேண்டுமென்றுங் கருதித் தேசீய உடைகளை யணிந்தும், மேடைகளில் உண்மைத் தேசபக்தர்களைப் போல் ஆவேசங்காட்டிப் பேசியும், வலிதிற் சிறைச்சாலை புகுந்து வந்தும், மெய்யாகவே உடல், பொரு ள், ஆவி மூன்றையும் தேசநன்மைக்குத் தத்தம் செய்தவர்களைப் போன்று பெரு நடிப்புச்செய்து பத்திரிகைகளிலும் துண்டுப் பிரசுரங்களிலும் தங்கள் போலிச் செயல்களை யெழுதி வெளியிட்டுத் தலை நிமிர்ந்து தற்பெருமை கொண்டு திரிகின்றனர்; சிலர், தெய்வபக்தி சிறிதுமில்லாதவராயிருந்தும் ஜனங்களுக்கு முன்னிலையில் மகாபக்திமான்களைப் போல் வெளிவேடந்தரித்துப் பஜனை பாடிக் கூத்தாடுகின்றனர்; சிலர், தலை சுழலக் கட்குடித்துக் கண் சிவந்து கூத்தாடுவோராயிருந்தும் மகா தருமசீலர்களைப் போல மேடைமேலேறி மதுவிலக்கைப் பற்றி ஆத்திரத்தோடு பேசி அட்டகாசஞ் செய்து பொது ஜனங்களுக்குத் தாம் மகா உத்தமர்களெனக் காட்டிக் கொள்கிறார்கள். இன்னும் கல்வி சம்பந்தமாகச் சிலர் செய்து கொள்ளும் வீண் பெருமைகள் மிக்க விநோதம் பொருந்தியவைகளா யிருக்கின்றன; எழுத்தின் பேதங்களைக் கூட உணராத பலர் மேடைகளில் ஏறிமிகுந்த கல்வியாளரைப் போன்று வாயில் வந்த எதையெதையோ உளறி விரைந்து பேசிப் பாமரரைக் கரம்புடைக்கச் செய்தும், தம் மைக் கட்டுரைக் களஞ்சியமென்றும், சொற்பொழிவுச் சோனை மாரி யென்றும், சங்கத்தொனிச் சரபமென்றும் அவர்கள் புகழ்ந்து தமக்கு அப்பட்டங்களைக் கொடுக்கச் செய்தும் தமமைப் பெரும் புலவர்களெனப் பத்திரிகைகள் வாயிலாக வெளியிட்டுக் கொள்கின்றனர். எண்ணத்தொலையாத வழுக்கள் நிறைந்த புத்தகங்களை யெழுகி விநோதப் பெயர்களுடன் வெளியிட்டு அவற்றிற்குத் தங்களைப் போன்றவர்களிடத்தும், தமிழ்மொழியைச் சிறிது முணராமல் பெரிய உத்தியோக பதவியிலிருக்கும் சிலரிடத்தும் மதிப்புரைகள் வாங்கி அச்சிட்டு எங்கும் பரப்பிப் போலிப் பெருமை யடைகின்றார்கள்; பெரியோர் செய்த நூல்களுக்கும் உரை யெழுதப் புகுந்து மனம் போனபடி எதை யெதையோ எழுதிப் புத்தகரூபங்களை மாத்திரம் அழகுடன் வெளியிட்டுப் படிப்பில்லாத பாமரக்கூட்டத்தாரிடத்தும், கற்றறி மோழைகளிடத்தும் தங்களைப் பெரிய உரையாசிரியர்களெனக் கூறி வீண் புகழ் பெறப் பெரிதும் முயல்கின்றனர். ஒரு இலக்கணத்திலும் பொருந்தாமல் செய்யுட்களென்று பெயரிட்டு எதை யெதையோ எழுதிப் பாட்டின் இயற்கை தெரியாத கூட்டத்தாரிடத்தில் காட்டி இறுமாப்புடன் திரிகின்றனர். வேறு சிலர், முறைப்படி செய்யுள் எழுதத் தெரிந்த நற்புலவர்களிடத்தில் கெஞ்சிச் சில செய்யுட்களை யெழுதித்தரச் சொல்லி வாங்கி, அவற்றைத் தாங்களே இயற்றினவர்களென்று பலரிடத்துங் கூறியும், அச்சிட்டு வெளிப்படுத்தியும், பாவலர்களெனத் தாமே பட்டஞ் சூட்டிக்கொண்டு ஆங்காங்கே படாடோபஞ் செய்து களித்துத் திரிகின்றனர்; சிலர், முறைப்படி கல்விகற்ற பெரும் புலவர்களிடத்தில் பணம் கொடுத்தோ, கொடுக்காமலோ நூல்களை யெழுதித் தரும்படி கேட்டு அவர்களால் எழுதிக் கொடுக்கப்படும் நூல்களைத் தாங்களே யெழுதியவைகளென வெளியிட்டு, உண்மையறியா மனிதர்களிடத்தில் பெரிய நூலாசிரியர்களென நடிக்கிறார்கள்; சிலர், தமிழைச் சிறிது முணராமல் இங்கிலாந்து முதலிய இடங்களிலிருக்கும் இராஜகுடும்பத்தார் மீதும், பெரிய பதவியிலிருப்பவர் மீதும் புகழ்க்கவிகள் எழுதித்தரும்படி உண்மைக் கவிவாணர்களிடம் இரந்து கேட்டு அவற்றைவாங்கி, அவை தம்மாலேயே இயற்றப்பட்டனவென்று குறிப்பிட்டு நல்ல விதத்தில் அச்சிட்டு இங்கிலாந்திலுள்ள அந்த மேதாவிகளுக்கனுப்புகிறார்கள்; அவர்கள் உண்மையுணராமல், கவிநயமுங்காணாமல் அந்தப் போலிப் புலவர்களுக்குப் பட்டங்களளித்து உபசாரக் கடிதங்களெழுதுகிறார்கள்; அவற்றைப் பலரிடத்தும் காட்டி அந்தப் போலிகள் பெருமை யடைகிறார்கள். இன்னும் நாடகக்காரர்களும், சங்கீதக்காரர்களும் வால் நோட்டீசுகளில் பொய்ப் பெருமை கூறிப் பறையறைகின்றனர். இன்னும் பலவகைகளிலும் பொய்ப்புகழ் தேட முயல்வார் எண்ணிலர்; அவர்களை யெல்லாம் எடுத்தெழுதுவதென்றால் இவ்வியாசம் மிக விரிவெய்தும்,

 

இவையெல்லாம் அறிஞர் வெறுக்கத்தக்க இழி செயல்களா யிருப்பினும் மேற்கூறிய பகுப்பினர் இவற்றிற்குச் சிறிதும் நாணுவதில்லை. இவற்றை விட்டுப் பயனுடைய காரியங்களைச் செய்யும் படி பிறர் கூறினும் இவர்கள் அதைக் கேட்பதில்லை. இவர்க ளுடைய இந்தப் போலிச் செயல்களைப் பத்திரிகைக்காரர்கள் கண்டிக்க வேண்டியவர்களா யிருந்தும் அவர்களிற் பெரும்பான்மை யோர் ஆதரிக்கின்றனர். சில அறிஞர் அப்போலிச் செயல்களைக் கண்டெழுதப் புகுந்தால், அப்போலிமாக்களும், அவர்களைச் சார்ந்தார் சிலரும் அந்த அறிஞரையே இழிவாகப் பேசியும், எழுதியும் அவர்களின் வாயை அடக்கி ஆர்ப்பரிக்கின்றனர். சில நூதன விவேகிகள், ''நம்மவர் போலித்தனங்கள் செய்தாலும் அவர்களை நிந்திக்கலாகாது; அவர்கள் பொய்யாகவேனும் புகழடைவது நம் நாட்டிற்குத்தானே பெருமை" என்று வெகு நுட்பமான அபிப்பிராயம் சொல்கிறார்கள்.
 

யார் என்ன கூறினும் மனிதர் பொய்ப்புகழ் தேட நாடுவது மிகவும் இழிவான காரியம்; எவ்வளவு சாமார்த்தியமாக மேற் கூறிய போலிச் செயல்களைச் செய்து வந்தாலும் அவற்றால் எப்பொழுதும் நிலைக்கக்கூடிய மெய்ப்புகழ் உண்டாகவே மாட்டாது; அச்செயல்களால் ஆரம்பத்தில் மருண்ட ஜனங்களால் சிறிது புகழுண்டாவது போற் காட்டும்; பின் அவர்களுடைய போலிச் செயல்களின் உண்மை வெளிப்பட வெளிப்பட அச்செயற்கைப் புகழ் தானே மறைந்து அவர்களுக்கு இழிவே அதிகரித்து நாட்பட நாட்பட அவர்களுடைய பெயரே இல்லாமற் போய்விடும்; அவர்கள் உயிருடனிருக்கும் போதும் அவர்களைப் பலர் பார்த்துப் பரிகசிப்பர். அவர்கள் மக்களாகக் கருதப்படார்; மாக்களாகவே கருதப்படுவார். இவற்றையெல்லாம் அனுபவத்திற் காணலாம். இத்தகையினர் மலிந்து வருவது நம் நாட்டிற்கே பெரிய இழிவாகும்; நம் நாடு சிறக்க வேண்டுமானால் இத்தகைய மதியின் மாக்களின் போலிச் செயல்கள் ஒழிய வேண்டும்; பத்திரிகைக்காரர்களும், நூலாசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் இச்செய்கைகளையுடையாரையும், இவர்களின் நடிப்புச் செயல்களையும் பாரபக்ஷமின்றிக் கண்டிக்க வேண்டும்; பண்டைக்காலத்தைப் போல உண்மைக் கல்வியும், உண்மைத் தொழில்களும் விருத்தியடையுமாறு செய்ய வேண்டும்; உண்மைத் தொழில் வல்லாரையும், கலை வல்லாரையுமே கொண்டாட வேண்டும்; உண்மைப் புகழ் பெறச் செய்தல் வேண்டும். இவ்வாறு உண்மைக் கீர்த்தியை நிலைநாட்டி வந்தால் நம் நாடு பண்டைச் சிறப்படைந்து என்றென்றும் நிலைபெற்றுவிளங்கும்.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment