Monday, September 7, 2020

 

வள்ளுவர் பேசுகிறார்

(வித்துவான்-எம். சாம்பசிவம்.)

 

அவையோர்களே! வாழ்க! நான், இன்று அறிவுடைமை' என்னும் பொருள் பற்றிப் பேசலா மென்றிருக்கிறேன். ஏனென்றால், உலகத்தில், 'அறிவு' என்பது இப்பொழுது, 'கிடைக்காத பொருள்' என்று நினைக்கக்கூடிய ஒரு நெருக்கடியான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலே இன்று இதைப் பற்றிக் கூறுகிறேன். நிற்க. அவையடக்கம் என்கிற ஒரு 'குல்லாய்ப் போடும் வேலையை' என்னிடம் எதிர் பார்க்காதீர்கள்.

 

'அறிவு' என்றால் நமக்கு 'அகால முடிவு' ஏற்படாமல் கர்க்கக் கூடிய ஒரு சிறந்த பொருள்; அது மட்டு மல்ல; அதை நமக்கு 'அரண்' என்று கூடச் சொல்லவேண்டும்! அரண் என்றால் எப்படிப்பட்ட அரண்? படைகளோடு கிளம்பி வரும் பகைவனாலும் தகர்க்க முடியாத அரண்; செங்கல் முதலியவற்றால் வரை வளைத்துக் கட்டுகிறோமே, அந்த அரணா? சே! இது நம் உள்ளத்தில் பகைவன் கண்களுக்கும் தெரியாமல் இருக்கக் கூடிய உள்ளரணாகும்!


"அறிவு, அற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்,
உள் அழிக்கலாகா அரண்!"


அப்படிப்பட்ட அறிவு, இன்னும் என்னென்ன, நமக்கு உதவி செய்யும் வகைகள்?
பார்க்க வேண்டு மல்லவா? 'மனம் வேறு; அறிவு வேறு;' என்று உங்களுக்குத் தெரியும். 'மனம், தீய வழிகளில் நம்மை அழைத்துச் சென்று கவிழ்த்து விடும்' என்றும், உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. அறிவின் நற் செயல் தானே நமக்குப் புரியமாட்டேனென்கிறது!

 

மனம், நம் ஐம் பொறிகளின் வழியாகத் தீய புலன்களை நுகரவிழைந்து, அறிவை அடித்து, ஒடுக்கிப் போட்டுவிட்டுக் கிளம்பும்; அப்பொழுது அறிவு, மனத்தொடு போர் புரிந்து மனத்தின் கையிலிருந்து நம்மை விடுவித்துக் காப்பாற்றுவதோடு; தன் எதிரியாகிய மனதிற்கும் புத்தி கூறி, தீய வழிகளிலே செல்ல வொட்டாமல் தடுக்கிறது. அதோடு நின்றால், நாம், அறிவைப் பற்றி ஆச்சரியப் படுவதற்கில்லை. மேலும், 'அறிவு', என்ன செய்கிறது பாருங்கள். நம்மையும், நம் மனதையும் சேர்த்து, நல்ல வழிகளிலே திருப்பி, பெருமையை சம்பாதித்துக் கொள்கிறது!


“சென்ற விடத்தால் செலவிடாது; தீதுஒரீஇ
தன்றின்பால், உய்ப்பது அறிவு.''

 

ஆமாம்! அறிவு என்றால் 'இன்னது' என்று நான், இது வரை கூற வில்லையே! சொல்கிறேன்: 'வெள்ளைக்காரர்களுக்குக் கருப்பு மனிதர்கள் - இந்தியர்கள் -, என்றென்றும் அடிமை வேலை செய்யவே கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று ஒரு புத்திசாலி கூறுகிறார்! 'அது, தப்பா, சரியா?' என்று ஏதோ ஒன்று உங்களுக்குள் இருந்து கொண்டு வேலை செய்கிறதல்லவா, சரியான முடிவிற்கு வருகிறதல்லவா, அது தான், அறிவு. இப்படியே - எதை யெடுத்தாலும் சொந்தமாக உங்களுக்குள் ஆராய்கிற தல்லவா, ஒன்று. அது தான், அறிவு.

 

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது, அறிவு.''

 

இன்னொரு விஷயம்: - கொள்கை வேறுபாடு, இயற்கை; ஒருவர் கொள்கை மற்றொருவருக்குப் பிடிக்கவில்லை யென்றால், அதில் வியப்பொன்று மில்லை; அதற்குக் காரணம் வேறு: ஒரே பொருளில் உண்மை, பல இருக்கலாம்; உதாரணமாக தேங்காயை எடுத்துக் கொள்வோம்: அதில் நீர் இருப்பதும் உண்மை; கெட்டியான உணவுப் பொருள் இருப்பதும் உண்மை; இளநீரைமட்டும் அனுபவித்தவன், 'கெட்டியான உணவுப் பொருளே தேங்காயில் இல்லை' என்பதும், தேங்காய் நெற்றை உடைத்துப் பார்த்தவன், தேங்காயில் நீரே யில்லை' என்பதும், ஒவ்வொரு கொள்கை. இந்தக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, காட்டுத்தனமாகச் சாதிப்பது-ஆத்திரப்படுவது, பயனற்றது. ஒவ்வொருவனும், தன் கொள்கையை பொறுமையாகவும், தெளிவாகவும், எளிய முறையிலேயும் விளக்கிவிட்டுப் பின், அதே முறையில் பிறர் கொள்கை 'இன்னது' என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்; அப்படிச் செய்வதே, அறிவு.


''எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான், பிறர்வாய்
நுண்பொருள் காண்பது, அறிவு.''


ஆகவே, கொள்கை காரணமாகப் பிரிந்து விடுவது சுலபம்; ஆனால் ஒழுங்கல்ல! அதே போல் கொள்கை ஒத்துவிட்டால், கட்டிக்கொண்டு புரள்வதும் சகசம்; ஆனால், அதுவும் அருவருப்பானதே. ஆகவே, தன் கொள்கை சிறந்ததாக இருக்கவேண்டும். அதைச் சிறந்தோர் சிறிய அளவினரே யாயினும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்; அதுமட்டும் போதாது சிறந்த கொள்கைகளே பயின்று வர சிறந்தவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்; அவர்களோடு கொள்கை விஷயத்தில் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கவேண்டும், நாம் வேறு; கொள்கை வேறல்லவர், அதற்காகத் தான் சொல்கிறேன். என்றாலும், உண்மைக் கொள்கை பொய்த்து விடாது.


"உலகம் தழீஇயது, ஒட்பம்; மலர்தலும்,
கூம்பலம் இல்லது. அறிவு.


சில சமயங்களில் பெரிய நதிகள், பிரமாண்டமான மரங்களையும், பல பெரும் பொருள்களையும் அடித்துக்கொண்டு செல்வதை நாம் பார்க்கிறோம்; அப்பொழுது, பிரவாகத்தின் வலிமை, அதிகம்; அதன்கண் பட்ட எப்பொருளும், வலிமையற்றதாகி விடுகிறது. அதேபோல், அறிவும் சில சந்தர்ப்பங்களில் அறியாமை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படலாம்! ஆனால், அறிவே முடிவில் வெல்லும்; பதுங்குவது பாய்ச்சலுக்கறிகுறியல்லவா? ஊரே ஓடும் போது நீயுந்தான் ஓடவேண்டும்! முட்டாள்களிடத்தில் முட்டாள் போல் நடித்து தான் காரியத்தைச் சாதிக்க வேண்டும்!

வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்!
ஒளியார்முன் ஒள்ளிய ராகலாம்!


ஆகவே, உலகம் முட்டாள் தனமாகப் போனாலும், அதன் போக்கிலே நீயும் போ; அதுதான், அறிவு!

''எவ்வது உறைவது உலகம்: ; உலகத்தோடு
அவ்வது உறைவது, அறிவு.”


தீர்க்க தரிசனமே, அறிவு. வருவதை-அறிவு, உணரும். அறிவு எங்கெங்கு இல்லையோ, அங்கங்கெல்லாம் எதிர் கால நிகழ்ச்சிகள், இருக்கா; முன்னேற்ற மிருக்காது.


''அறிவுடையார், ஆவது அறிவார்! அறிவிலார்,
அஃது அறிகல் லாதவர்.”


கழுதைப் புலி, காட்டிலே இருந்தாலும், அதன் பார்வையில் தப்பித் தவறி காணப்பட்டுவிட்ட அறிவாளி, அதைக் கண்டு அஞ்சாமல் இருக்கலாமா? அஞ்சினால் தானே பிழைத்துக்
கொள்ள ஏதாவது 'ஏது' ஏற்றப்படலாம்? தீர்மானமாக அங்கேயே அஞ்சாமல் நின்றால், 'அறிவாளி' என்று, புலி, விட்டுவிடுமா? முட்டாள்களின் கூட்டத்திற்குள்ளே அகப்பட்டு விட்ட அறிவாளி, அஞ்சித்தான் ஆகவேண்டும்; அது தான், அறிவு! அறிவு, எனக்குத்தான் இருக்கிறது' என்று அறிவாளி அங்கே அஞ்சாமல் மார்தட்டுவானானால், அறிவாளியின் எலும்பு, உருப்படியாக ஒன்று கிடைக்குமா, ஒன்று!


“அஞ்சுவது அஞ்சாமை, பேதைமை! அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்."


முன் எச்சரிக்கையாக இருக்கச் செய்யும் 'அறிவு', ஒருவனுக்கிருந்தால், அவனுக்குத் துன்பமேது?


''எதிரதாக் காக்கும் அறிவினர்க்கு இல்லை,
அதிர வருவதோர் நோய்.''


அறிவே, ஒருவனுக்குச் செல்வம்.! எல்லா நலமும், அறிவுடையவனுக்கு வாய்க்கும். 'அறிவு' இல்லாத ஒருவன், குபேரனுக்குப் பிறந்தாலும், ஏழையாகி விடுவான். அறிஞன், பணமூட்டை யில்லாமலேயே உலகத்தைச் சுற்றி வந்து, உண்மைகளை நிலை நாட்டுவான். அறிவில்லாத பணக்காரன் தன் வேலையார் ளிடத்தில் இருந்து கூட ஞானத்தை ‘கடன்’ வாங்கவேண்டி யிருக்கும்!

                                “அறிவுடையார், எல்லாம் உடையார்! அறிவிலார்,

              என் உடையரேனும், இலர்.”

 

அவையோர்களே! சுருக்கிச் சொல்லியே எனக்குப் பழக்கமாய் விட்டபடியால், இத்துடன் என் சொற்களை சுருக்கிக் கொள்கிறேன். அவசியம் ஏற்பட்டால் மீண்டும் உங்கள் அவைக்கு வந்து, இரண்டொன்றைச் சுருக்கியே சொல்ல விருப்புடையேன்; வணக்கம். ‘முடிவு அடக்கமும்’. எனக்குத் தெரியாது.

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment