Sunday, September 6, 2020

 வள்ளுவர் பாயிரம்

 

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோலைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மைவெறும் புகழ்ச்சியில்லை.                             (பாரதியார்)


மலர் தலை யுலகின்கண் மல்கும் பல்வேறு பாஷைகளில் தமிழ்பாஷை ஒன்றாகும். தமிழ்மொழியில் பல்வேறு ஒல்காப்பெரும் புகழ்படைத்த பாவலர்கள் பரவியிருந்தார்கள். அவர்கள் அனைவரினும் சிறந்தவர்கள் கம்பரும், திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் எனப் பாரதியார் பகர்கின்றார். இம்மூவரிலும் யாவரும் போற்றும் மேவருஞ்சிறப்புடையர் திருவள்ளுவரே யாவர். ஏனெனில் அவர் திருக்குறள் என்னும் பொதுமறையை உலகத்தாருக்கு வந்துதவியுள்ளார். இக்கட்டுரை அன்னார் தம் அரும்பனுவலின் பாயிரத்தை விளக்க எழுந்ததாகும். அதனைச்சிறிது ஆராய்வாம்.

 

'பாயிரமில்லது பனுவலன்றே'


என்றார் பவணந்தி முனிவர். அதாவது முகவுரை (Preface) இல்லாதநூல் ஓர் நூலாகக் கொள்ளப்பட மாட்டாது. மாடக்குச் சித்திரமும், மாநகர்க்குக் கோபுரமும், மாதர்க்கு ஆபரணமும் எவ்வாறு இன்றியமையாதவைகளோ அதேபோல் ஓர் நூலிற்குப் பாயிரம் இன்றியமையாதது. இப்பாயிரத்தின் பெயர் எழுவகைப்படும். அவையாவன: முகவுரை, பதிகம், அணிந்துரை, என் முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பன.

 

மேற்கூறிய எழுவகையில் வள்ளுவனார் பாயிரம் முகவுரையைச் சேர்ந்ததாகும். முகவுரையின் பொருள் நூற்குமுன் சொல்லப்படுவது என்பதாம். முகவுரை யெனினும், நுன்முக மெனினும் ஒன்றே. நான்முகனார் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களில் தமது பாயிரத்தை அமைத்துள்ளார். அதனை ஒவ்வொன்றாக ஆராய்வாம்.


கடவுள் வாழ்த்து


என்பது பாயிரத்தின் முதலாவது அதிகாரமாகும். அதாவது தான் வழிபடும் கடவுளை யாயினும், ஏற்புடைக் கடவுளையாபினும் வாழ்த்துதலாம். வள்ளுவர் பாயிரத்தின் முதலதிகாரம் ஏற்புடைக் கடவுள் வாழ்த் தாகும். ஏற்புடைக் கடவுள் வாழ்த்தெனின் மூவர்க்கும் பொதுப்படச் சொல்லி வாழ்த்துதல். திருவள்ளுவர் "எம்மதமும் சம்மதமே'' கொள்கையராகலின் இவ்வாறு கடவுள் வாழ்த்துக் கூறினார்.


 அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே யுலகு –

 

என்பது கடவுள் வாழ்த்தின் முதற்குறள். இதன் பொருள்: எவ்வாறு அகரம் எழுத்துக்களுக் கெல்லாம் தலைமை யானதோ அவ்வாறு உலகத்திற்குத் தலைவன் முதன்மையான பகவனாகும் என்பதாம். இக்குறளில் அகரம் எழுத்துக்களுக் கெல்லாம் தலைமையானது என்கின்றார். அகரம் தமிழெழுத்திற்கு மாத்திர மல்லாமல் வடவெழுத்துக்களுக்கும் முதன்மையான தால் எழுத்தெல்லா மென்றார். இவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற கொள்கையினர் ஆதலினால் ஆதிபகவன் என்று மாத்திரம் குறிப்பிடுகின்றார்.

ஆதியென்பதற்கு,

 

''ஆதியே முதனே ரோட லருகன் மாலீசன் வேதன்"


என்றும், பகவனென்பதற்கு,


      “பகவனே யீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்'' என்றும் சூடாமணி நிகண்டில் பொருள் காணப்படுகிறது. ஆதியென்பதின் பொருள் முதல், நேரோடல், அருகன், திருமால், சிவன், பிரமன் என்பதாம். பகவனென்பதின் பொருள் சிவன், திருமால், பிரமன், அருகன், புத்தன், என்பதாம். ஆகவே ஈண்டு ஆதிபகவ னென்பதற்கு முதன்மையான சிவனென்றும், முதன்மையான திருமால் என்றும், முதன்மையான பிரமன் என்றும், முதன்மையான புத்தன் என்றும் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஆதலால் இவரைச் சைவர்கள், வைணவர்கள், ஆருகதர்கள், பௌத்தர்கள் முதலியோர் தங்கள் சமயத்தவரென்று பாராட்டுகின்றார்கள். ஏன்? இவரியற்றிய நூலான திருக்குறள் மதவேறுபாடின்றி யாவர்க்கும் பொதுப்பட நிற்கின்றது. இதனைக் கொடுமலையாளத்துக் குடியிருப்பாளாகிய சுந்தரப்பெரியார்,


 வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
 உள்ளுவ ரோமநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.


 என்று வாயார மனதார வாழ்த்திக் கூறுவதினின்றும், புலவர் புராணமுடையார்


 நால்வர் சொல் சைவர் வேதம் நளிர்குரு கூரன் சொல்லைப்
 போல்வலார் சிலர்தாஞ் சொல்லும் பொருவில் பாகவதர் வேதம்
 வால்வளை யுலவும் வீதி மயிலை வள்ளுவன் சொல் யார்க்கும்
 மேல்வழி யுணர்த்திக் கீழ்மை விலக்கு நல் வேதமாமே.


என்று சமயவேறுபாடின்றிக் கூறுவதாலும் இனிது புலனாம். கடவுள் வாழ்த்தில், ஆதிபகவன், வாலறிவன், மலர்மின் சை யேகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையுஞ் சேரா இறைவன், பொறிவாயிலைந்த வித்தான், தனக்குவமை யில்லாதான், அற ஆழி அந்தணன் ஆகிய எண்குணங்களையும் எட்டுக்குறள்களிலடக்கி ஒன்பதாவது குறளில் அத்தகைய குணங்களையு முடைய முழு முதற் கடவுளை வணங்க வேண்டு மென்றும் கூறி கடைசிக்குறளில் அவ்வாறு வாழ்த்தாதவர்கள் பிறவிக் கடலைக் கடக்கமுடியாதெனவும் கூறி கடவுள் வாழ்த்தென்னும் அதிகாரத்தை முடித்தனர்.
சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலிய பத்தழகும் பாவலர் பெருமான்பனுவலில் பதிந்து கிடக்கின்றன. ஈண்டு வள்ளுவர் கடவுள் வாழ்த்தின் நுட்பப் பொருளடங்கிய திருநாவுக்கரசர் தேவாரப் பதிகமொன்று ஞாபகத்திற்கு வருகின்றது. அது பின் வருமாறு:


திருவாரூர்த் தேவாரம்


 முன்னமவனுடைய நாமங்கேட்டாள்

மூர்த்தியவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
 பின்னையவனுடைய வாரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பிச்சியானாள்
 அன்னையையு மத்தனையுமன்றே நீத்தா

ளகன்றாள கலிடத்தா ராசாரத்தைத்
 தன்னை மறர்தா டன்னாமங் கேட்டா

டலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே.


வான் சிறப்பு


என்பது இரண்டாவது அதிகாரமாகும். வான் சிறப்பு என்பது மழையின் பெருமை என்று பொருள்படும். எவ்வாறு சந்திரனும், சூரியனும் நமக்கு இன்றியமையாதனவைகளோ அவ்வாறு மழையும் நமக்கு இன்றியமையாதது. ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் செழிப்பிற்கு மழையே முக்கியகாரணமாகும். மழையினின்று தான் மன்னுயிர்கள் நிலை பெற்று வருகின்றன. ஆதலால் அதனைச் சாவாமருந் தென்றே கூறலாம். மழையின்றேல் மன்பதைகளைப் பசி யென்னும் பிணி வருத்தும்; தானம் தவம் முதலியன நாட்டில் கிடையா தேவர்களுக்குச் சிறப்புடன் பூசை நடவாது. உழவர் ஏரினால் நிலத்தை உழமாட்டார்கள். ஆதலால் நல்லாரைக் கெடுப்பதுவும், தீயோர்க்குத் துணையாவதும் ஆகிய இவையனைத்திற்குங்கூட மழையே முக்கிய காரணமாகும். இத்துணை இன்றியமையாத மழையின் மாண்பைப் புலவர் திலகராய வள்ளுவர் பெருமான் கடவுள் வாழ்த்தின் அடுத்தபடியாக அமைத்துக் கூறுவது பாராட்டற் பாலதே.

 

நீத்தார் பெருமை


என்பது முகவுரையின் மூன்றாவது அதிகாரமாகும். நீத்தார் பெருமையெனின் துறந்தார் பெருமையென்று பொருள்படும். துறந்தா றெனின் எதைத் துறந்தவர்கள்? மண், பொன், பெண் ஆகிய மூன்றையும் துறந்தவர்களல்லர். ஆனால் நல்லொழுக்கத்தில் நின்று தீயொழுக்கங்களைத் துறர்தவர்கள். இவ்வுண்மை இவ்வதிகாரத்தின் முதற் குறளிலிருந்து நன்குபுலனாகிறது. அக்குறள் வருமாறு:

 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
 வேண்டும் பனுவல் துணிபு –


இதன் பொருள் நல்லொழுக்கத்தில் நின்று தீயொழுக்கங்களைத் துறந்தாரது பெருமையை
நூல்களின் முடிவானது எல்லாப் பெருமைகளிலும் மேலானதாகக் கொள்ளும் என்பதாம். அடியார்க் கெளியவன் ஆண்டவன் என்பது யாவருமறிந்ததோர் உண்மை. அதனைத் தொண்டர் நாதனைத் தூதிடைவிடுத்ததிலிருந்தும், வாதவூரர்க்கு வாசித்தலைவராக வாசிகள் வாங்கி வர்ததிலிருந்தும், பிட்டுக்கு மண் சுமந்ததி லிருந்தும் அனைய பிறவற்றி லிருந்தும் அங்கையிற்கனி யெனச் சங்கையறத் தெரியலாம். ஆகவே நம் தேவரும் அடியார் பெருமையைப் பற்றி மூன்றாவதாகக் கூறியுள்ளார். சுந்தரமூர்த்திசுவாமிகளும் “அடியார்க் கடியென்'' என்ற கடைசியடியையுடைய திருத்தொண்டத் தொகையைப் பாடியுள்ளார். என்? கடவுளை ஏன்? கடவுளை வணங்கினும் அவரது அடியார்களை வணங்கினும் ஒன்றே.

 

நீத்தார் பெருமையெனின் முற்றத் துறந்த முனிவரது பெருமை யென்று பொருள் படும் எனச் சிலர் கூறுவார். அதற்கு மேற்கோளாக,


 ஐந்தவித்தா னாற்றலகல் விசும்பு ளார்கோமா
 னிந்திரனே சாலுங் கரி –


என்ற குறளை எடுத்துக் காட்டுவர். இக்குறளுக்கு அவர்கள் ஐந்தாசைகளையும் ஒழித்தவனது வல்லமைக்கு விண்ணுலகத்துத் தலைவனாகிய இந்திரனே சாட்சியாம் என்று பொருள் கொள்வர். அதாவது, கௌதம முனி வல்லமைக்கு தேவேந்திரனே சாட்சியாம் என்பதாம். இக்குறளுக்கு ஐம்பொறிகள் வாயிலாக வரும் தீமைகளை அகற்றினவனது வல்லமைக்கு விண்மன்னவனாகிய இந்திரனே ஒப்ப அமைவான் என்று பொருள் சொள்ளல் வேண்டுமென்பது சிறியேன் கருத்தாகும். அதாவது ஐம்பாறிகளை யடக்கி இல்லறதவம் புரியும் திருத்தொண்டர்களைக் கண்டு தேவேந்திரன் தன் பதவியை இழக்க நேரிடுமே என்று பயப்பவோன் என்பதாம். உதாரணமாக திருவள்ளுவரையே நாமெடுத்துக் கொண்டால் அவர் மண்டலத்தில் வாழ்ந்திருந்து விண்டலத்திலுள்ளோர் தெய்வ மென்றேத்தினார்கள். ஏன்? அவர் இல்லற தவத்தைக் கைக் கொண்டார். ஆகவே நீத்தார் பெருமை யென்பது அடியார் பெருமை என்று பொருள் படும் என்பது தமியேனுடைய தாழ்ந்த கருத்தாகும்.

 

அறன் வலியுறுத்தல்

 

என்பது நுன்முகத்தின் இறுதியதிகாரமாகும். மூன்றாவது அதிகாரத்தின் கண் அடியார் பெருமையைக் கணித்த செந்நாப்போதார் இவ்வதிகாரத்தின் கண் அவர்கள் செய்யும் அறத்தின் திறத்தை அமைத்துக் கூறினார். இக்காசினியின் கண்ணுள்ள அனைவருடனும் இறுதியாகச் செல்வது அறமேயன்றிப் பிறிதொன்றுமில்லை. இவ்வறமானது இம்மை, மறுமை, வீடு என்கின்ற மூன்றையும் தருதலால் அது மிகவும் மேன்மை வாய்ந்தது. நிலைபெற்ற உயிர்களுக்குத் தருமத்தின் மேலானது வேறொன்றுமில்லை. அவ்வறத்தினும் மேற்பட்ட செல்வமுமில்லை. அத் தருமத்தை மறத்தலைப் பார்க்கினும் கேடில்லை. ஆதலால் மனம், வாக்கு, காயம் இம் மூன்றாலும் அறஞ்செயல் வேண்டும். ஒருவன் அறத்தைச் செய்தால் அவ்வற மவன் பிறப்பை யகற்றும். ஆதலால் இவ்வறத்தை நாளைச் செய்வோம் என்று கடத்துதல் கூடாது


 அன்றறிவா மென்னாது அறஞ்செய்க; மற்றது
 பொன்றுங்காற் பொன்றாத் துணை


என்ற குறளிலிருந்து இறக்கும் போது தருமஞ் செய்வோம் என்று கூறாமல் தினம் அறஞ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அது சாகும்போதுதவியாகும் என்பது நன்கு புலனாகிறது. ஆதலால் இளமையிலேயே தருமத்தைச் செய்வோமென விரும்பி உறுதியாக் கொண்டு மிகுதியாய்ச் செய்ய வேண்டும். ஒருவன் முதுமைப் பருவத்தில் பிணியால் படுத்தவன் நோய் தீர்ந் தெழுதல் அருமை. ஆதலால் தருமத்தை இளமையிலேயே செய்தல் வேண்டும்.


 கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்மின்
 முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
 நற்காயுதிர்தலு முண்டு.


என்றபடி. இவ்வாறான அறத்தை வலியுறுத்தி நான்காவதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.

 

முடிவாக நோக்குங்கால் வள்ளுவர் தமது பாயிரத்தில் முதலாவது கடவுளின் தன்மையையும் இரண்டாவது அவரது அருளின் தன்மையையும் மூன்றாவது தொண்டர் பெருமையையும் நான்காவது அறன் வலியுறுத்தலையும் அமைத்து நூலைத் தொடங்குவது திருக்குறளின் பெருமைக்கோர் சான்றாகும். இத்துடன் என் கட்டுரையை முடிக்கின்றேன். சுபம்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment