Monday, September 7, 2020

 வேண்டுவது வீர வாழ்க்கை

 

வீரர்கள் என்பவர் யார்? என்பது சிறு கேள்வி. இதற்கு விடை கூறுவது எளிது. யாரும் உடனே கூறி விடுவார்கள். '' உடல் வலிமை மிகுந்து அஞ்சா நெஞ்சமுடன், படைகள் தரித்துப் போர் செய்கின்றவர்கள் வீரர்கள்" என்பது சாதாரண விடை. இதுவே யாவருக்குந் தெரியக்கூடியது. தற்காலத்தில் விளங்கும் வீரம் இதுதான். இத்தகைய வீரச் செயலிலேயே உலகம் விரைந்து செல்கின்றது. அந்நிய நாடுகளுடன் போர் புரிவதற்கு யுத்தக்கப்பல்கள் கட்டுவதும், புதுப்புது வகையான ஆகாய விமானங்கள் கண்டுபி டித்து அதன் மீது ஏறிச்சென்று பகைவர் நாட்டின் மீது குண்டு போடுவதும், புதுப்புது பீரங்கிக் குண்டுகள் கண்டு பிடிப்பதும் வீரம் எனக் கருதப்படுகின்றன. இன்னும் நமது நாட்டில் கோழிச்சண்டை விடுவதும், ஆட்டுச்சண்டை விடுவதும், மாடுபிடிப்பதும், தேங்காய்ச் சண்டை விடுவதும் வீரமாகக் கருதப்படுகின்றன. தடி கொண்டு போர் புரிவதும், வாள்கொண்டு போர்புரிவதும், பலங்கொண்டு ஒருவரோடொருவர் சண்டை செய்வதும் வீரமென்றே எல்லோராலும் கொள்ளப் படுகின்றன. ஆனால் இவை யெல்லாம் வீரம் அன்றென்று நாம் கூறவரவில்லை. இவையும் வீரத்தின் ஒருபகுதிகளே.

 

உடல் வலிமையாற் செய்யும் வீரச் செயல்களை விட, மனோ வலிமையாற் செய்யும் வீரச் செயல்களே சிறந்தனவாகும் என்பது எமது கொள்கை. இதுபுதிய கொள்கை யன்று. நமது தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்த கொள்கையிதுவே. உடல் வலிமையாற் செய்யும் வீரச் செயல் நிலைத்திருப்பதன்று. மனோ வலிமையாற் செய்யும் வீரச்செயல் என்றும் நிலைத்து நிற்கும்.

 

உடல் வலிமையால் வீரச்செயல் செய்கின்றவர்களுக்கு, மனோ தைரியம் இருந்தே யாக வேண்டும். மனோதைரியம் இன்றேல் உடல் வலிமையாற் பயன் இல்லை. உடல் வலிமையற்ற ஒருவன் தனது மனோ வலிமையால், உடல் வலிமையுள்ள ஒருவனை வெற்றி கொள்ளுவது திண்ணம். முன்னாளில் இருடிகளுக்கு உலகம் கட்டுப்பட்டு நடந்ததாகப் பழங்கதைகள் கூறுகின்றன.

 

மனோவலிமை என்பது என்ன? கொண்ட கொள்கையை விடாதிருப்பதுதான். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா " ஆதலால் கொண்ட கொள்கையை விடாதிருத்தல் மூர்க்கத்தன மென்று சிலர் கொள்ளலாம். அதுவுஞ் சரிதான். " தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்பது ஒருபழமொழி. அதுபோல் தான் கொண்ட கொள்கை தவறாயிருப்பினும், அதை விடாதிருப்பர் சிலர். அவரே மூர்க்கர் எனப்படுவார். அவர்களுக்கே முதலைத் தன்மையைப் போன்ற மூர்க்கத் தன்மை பொருந்தும்.
 

நாம் கூறும் கொண்டது விடாமை யென்பது வேறு. கொள்கை ஒவ்வொருவருக்கும் வேண்டும். அதுதான், ஒருவன் தன் வாழ்நாளில் உலகிற்குஉபாகாரமாக இன்னது செய்து முடிப்பேன் எனத் துணிதல். அது உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். மக்களுக்கும் நலந்தருவதாகஇருத்தல் வேண்டும். மக்களுக்கு விடுதலை அளிக்கக் கூடியதா யிருத்தல் வேண்டும். பகுத்தறிவுடையவர்களால் பாராட்டக்கூடியதாயிருத்தல் வேண்டும். தனக்கும் நன் மதிப்பைத் தரக்கூடியதா யிருத்தல் வேண்டும். அத்தகைய கொள்கையை மேர்கொண்டு வாழ்வது மக்கள் கடமை. இக்கொள்கை யுடையவர்கள் தங்கள் கொள்கையை விட்டுக் கொடுப்பார்களானால் வீரர்கள் அல்லர்.

 

கோழைகள் என்பவர்கள் யார்? கொள்கையன்றி யிருப்பவர்கள். சமயத்திற்குத் தக்க வேடம் புனைபவர்கள். தமது கொள்கை நிறைவேறா விட்டாலும் உயிர் வாழக்கருதுபவர்கள். மேற்கொண்ட கொள்கையை உயிர் விட்டேனும் நிறை வேற்றுவதே வீரச்செய்கை,

 

இச்சமயத்தில் நமக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருகின்றது. அதாவது: -


      தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்

வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர்

செம்மையில் திறம்பல் செல்லாத் தோற்றத்தார் தெரியுங்காலை

மும்மையும் உணரவல்லார் ஒருமையே மொழியும் நீரார்.


என்னும் அருமையான பாடலேயாகும். இது கல்வியிற் சிறந்த கம்பரால் கூறப்பட்டது. இப்பாடல் அமைச்சர்களின் வீரத்தன்மையைப் பற்றிக் கூறுகின்றது. பொருளைச் சிறிது சிந்தியுங்கள்!

 

"தலைவனாகிய அரசன் கோபித்த காலத்திலும், அவன் தன்னைக் கொல்லமுன் வந்த காலத்திலும், தன்னுடைய உயிர் நிலைக்க வேண்டு மென்று நினைக்காதவராவர். அவனுடைய கொடுமையைத் தாங்கிக் கொள்வர். நீதியை ஒருசிறிதும் தவற விடாமல் உறுதியுடன் நின்று உரைக்கும் வீரர்கள். நல்ல செயல்களிலிருந்து ஒரு சிறிதும் தவறாத தெளிந்த அறிவுடையவர்கள். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலச் செயல்களையும் ஊகித்துணர வல்லவர்கள். உண்மைக் கொள்கையையே விடாமற் கூறுந் தன்மை யுடையவர்கள்'' என்பது மேற்கூறிய பாட்டின் பொருள். இத்தகையாரன்றோ வீரர். இத்தகைய வீரந்தான் நாம் வேண்டுவது. நற்கொள்கை நம்மிடத்தில் இறத்தல் கூடாது. நாம் அக் கொள்கையிலேயே இருக்க வேண்டும். கொள்கையிலேயே இறக்க வேண்டும். அதுதான் ஆண்மை.

 

மேடைப் பேச்சு பேசும் வீரர்கள் பலர். அவர்கள் தங்கள் பேச்சினால் வீரர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். " டம்பாசாரியின் பொடிப் பட்டையைத் திறந்து பார்த்தால் வெறும் பட்டை' என்பதொரு பழமொழி. இதை மேடைப் பேச்சு வீரர்கள் பால் காணலாம். நாம் இத்தகைய வீரத்தை ஒருசிறிதும் விரும்பவில்லை. பேச்சு வீரம் நமக்கு வேண்டாம். கொள்கை வீரம் வேண்டும். செய்கை வீரம் வேண்டும்.

 

தெளிந்த அறிவினால் தோன்றியதும், தூய்மையானதா யிருப்பதும், மக்கள் மாண்பை உணர்த்த வல்லதும் ஆகிய உயர்ந்த கொள்கைகளை மேற்கொண்டு அதன் பொருட்டு வாழ்க்கை நடத்த வேண்டும். உண்டு உடுத்து உயிர் வாழ்ந்து இறப்பது மட்டும் நமது கடமையன்று. நம்மிடம் அறிவிருக்கின்றது; ஆற்றல் இருக்கின்றது; செய்யுந் திரமை யிருக்கின்றது; ஆனால் வேண்டுவது உறுதியே. அதைத் தான் நாம் வீரம் என்று விளம்புகின்றோம். அதை எளிதிற் பெறலாம். ஆகையால் யாவரும் உண்மையாகிய உறுதியென்னும் வீரவாழ்க்கையை மேற்கொள்ள முயலுவோம்.

 

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஏப்ரல் ௴

 

No comments:

Post a Comment