Tuesday, September 8, 2020

 

ஜீவன் முக்தி

(என். நாகராஜன்)

அவள் நாட்டியமாடினபோது அவள் கால் சிலம்புகள் கலீர் கலீர் என்று இனிமையாக சப்தித்தன. ஒரு மயில் தான் தன் பல வர்ண தோகையை விரித்து ஆடுகிறதோ என்று பிரமித்தான் முகலாய சக்ரவர்த்தி ஜிஹாங்கீர். சித்திரப்பதுமைபோல் இமை கொட்டாமல் அவள் அழகையே பருகிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான் அவன். அவள் தேகத்தில் என்ன மினு மினுப்பு! என்ன பளபளப்பான கன்னங்கள். அந்த நுதற்கீற்றிலே என்ன லாவண்யம்.

 

அவள் பெயர் ஜீவா; அரண்மனை நாட்டியக்காரி. அவளை ஒரு தெய்வம்போல் மனதில் எண்ணி வந்தான் ஜிஹாங்கீர். அவள் சிவந்த முறுவல் மன்னன் மனதைக் கொள்ளை கொண்டது.

 

ஆனால், முகலாய சக்கரவர்த்தி தன்னை அணுக வொட்டர்மலே தடுத்து வந்தாள் ஜீவா, ஜிஹாங்கீருக்கு அந்த இளரோஜாவை கசக்கி முகர விருப்பமில்லை. ஒரு தடவை அவனையும் மீறி அந்த ரோஜாவைக் கசக்க முன் வந்து விட்டான் மதிமயங்கி. அப்பொழுது ஜீவாவின் இடையிலிருந்த குறுவாள் அவள் மார்பகத்தை முத்தமிட்டுக் கொள்ள ஆயத்தமாயிருந்தது. அது முதல் தூரத்திலிருந்தே அவள் அழகை அனுபவித்தான் முகலாய மன்னன். கிட்ட கிட்ட நெருங்கி அழகைப் பலி கொடுக்க மன்னன் மனம் வரவில்லை.

 

யமுனா நதி தீரத்தில் ஒரு அழகிய பர்ணசாலை. செங்கதிரின் சாயங்கால கிரணங்களில் யமுனை பொன் நிறமாய் பிரகாசித்தது. பட்சிகள் “கிரீச் கிரீச்' என்ற பலவித சத்தங்களை கிளப்பிக் கொண் டிருந்தன. சிலு சிலு வென்று வீசிய தென்றல் கோடை வெப்பத்தைத் தணித்தது.

 

பர்ணசாலையின் உட்புறத்தில் தான் எழுதின சித்திரத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான் பிரபாகரன். சட்டென்று எதையோ நினைத்துக் கொண்டவன் போல் வர்ணக் கோலை சிவப்பு வர்ணத்தில் தோய்த்தான். அடுத்த கணம் அது அவன் எதிரி லிருந்த பால கிருஷ்ணனின் சிவந்த அதரங்களை மெதுவாக வருடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் மனம் பர்ணசாலையின் வாயிற் படியில் நின்று கொண்டிருந்த மோஹினியைக் கூடத் திரும்பிப் பார்க்கச் செய்யவில்லை. அது ஒரேயடியாய் அந்த சித்திரத்தில் லயித்துப் போயிருந்தது. வாயிற் படியில் நின்று கொண்டிருந்த மோஹினி யாருமில்லை; ஜீவாதான்.

 

பிரபாகரன் அரண்மனை சைத்ரீகன். அவன் மனதி லெழுந்தவையெல்லாம் உயிருள்ள சித்திரங்கள் போல் மாறி யாவரையும் பிரமிக்கச் செய்தன. முகலாய சக்கரவர்த்தியின் அரண்மனையின் உள்ளும் புறமும் இவன் படங்கள் சுவர்களை அலங்கரித்தன. சிவந்த மேனி; பால் வதனம். இவன் பரந்த மார்பு ஒருதரம் ஜிஹாங்கீரைக்கூட மெச்சச் செய்திருக்கிறது.

 

ஜீவாவின் மனதில் வாசம் செய்து கொண்டிருந்தான் பிரபாகரன். அவன் மார்பைத் தழுவ அவள் கைகள் வருந்திக் கிடந்தன் அன்பு முழுதையும் மாலையாகத் தொடுத்து வைத்திருந்தாள் ஜீவா. பிரபாகரனுக்கு சூட்டத்தான்.

 

பாவம். அவள் காதலை யறியாது அவளை விலக்கியே வந்தான் பிரபாகரன். அவன் ஒரு பைத்யம்; சித்திரங்களிலேயே லயித்துக் கிடக்கும் அவன் மனம் வெளி உலக இன்பங்களை நாடவேயில்லை. அவன் அவைகளைத்தான் காதலித்தான். இவனிடம் பேதை ஜீவா தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள். அவன் மனதில் அவளுக்கு இடம் எங்கே?

 

அன்று எப்படியும் அவனைத் தன் வசப்படுத்தி ஓர் முடிவுக்கு வர வேண்டுமென்ற தீவிர எண்ணத்தோடு தான் ஜீவா அங்கு நின்று கொண்டிருந்தாள். பிரபாகரன் கொஞ்சமும் திரும்பிப் பார்ப்பதாக தோற்றவில்லை. சட்டென்று அவளுக்கு என்னவோ தோன்றிற்று. தன் சிவந்த பாதத்தால் கீழே வைத்திருந்த சிவப்பு வர்ணத்தை தட்டி உருட்டிவிட்டாள். அது ஒரு பக்கம் வழிந்து ஓடிற்று. பிரபாகரன் திடுக்கிட்டுத் திரும்பினான்; அவன் சுய உணர்வு வந்தது.

 

"யார்? ஜீவாவா?...... இப்படித்தானா விளையாடுவது? என் வர்ணமெல்லாம் போச்சே!'' என்று சொல்லி அவற்றை வழிக்க ஆரம்பித்தான்.


அதை அப்புறம் வழிக்கலாம். இதோ இங்கே வா
ஒரு வார்த்தை.'' என்றாள் ஜீவா.

 

அரை மனதுடன் அதைவிட்டு எழுந்து சென்றான் பிரபாகரன். இருவரும் யமுனை மணற்கரையில் உட்கார்ந்து கொண்டனர்.

 

''ஏன் பைத்தியம் மாதிரி சித்திரமே கதி என்றிருக்கிறீர்கள்'

 

அந்த மௌனத்தை கலைத்தாள் ஜீவா. உனக்கென்ன அதைப்பற்றி?'' என்றான் பிரபாகரன். பிறகு சிறிது நேரம் இருவரிடையும் மௌனம் நிலவியது.

 

"என்னவோ விஷயமென்றாயே, சீக்கிரம் சொல். நான் போக வேண்டும்." என்று அவசரப்படுத்தினான் பிரபாகரன். அவன் மனமெல்லாம் சித்திரத்தின் மேலேயே சென்றிருந்தது.

 

“ஒன்றுமில்லை." லஜ்ஜையுடன் ஜீவா பதிலளித்தாள் ஒரு பெருமூச்சுடன். அவளுக்கு என்னவோ வெளிப்படையாக கூற தைர்யம் ஏற்படவில்லை.

 

“சரி, நான் போகிறேன் என்று எழுந்தான் பிரபாகரன். இனி தாமதிப்பதில் பயனில்லை என்பதை அவள் கண்டு கொண்டான். அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் அவனைப் போகவொட்டாமலே.

"பிரபா, என் பிரேமையை நீ அறியவில்லையா? உன் அன்பு, காதல் .... அதைத் தான் வேண்டுகிறேன். என் எண்ணத்தை குலைத்துவிடாதே." அவுன் பாதத்தில் முகம் வைத்து அழுதாள் ஒரு காதல் விம்மிலிடை.

 

“இதற்காகத்தானா என் வேலையைக் கெடுத்தாய். சீச்சீ விடு...', என்று தன் கால்களை விடுவித்துக் கொண்டு பர்ணசாலையை நோக்கி ஓடினான் பிரபாகரன். மறுபடியும் சித்திரம் எழுத உட்கார்ந்து விட்டான்.

 

ஜீவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவற்ற துக்கம், மனத்தாங்கல் அரைக் கணத்தில் கோபமாக மாறிவிட்டது. ஒரே ஓட்டமாக ஓடினாள் பர்ணசாலைக்குள். அவன் வர்ணக்குச்சியை பிடுங்கி ஒடித்து சித்திரத்தையும் பிய்த்துக் கசக்கி எறிந்து விட்டாள்.

 

பிரபாகரன் திடுக்கிட்டான். அழகான பாலகிருஷ்ணனின் உருவம் சின்னாபின்ன மானதைப் பார்த்ததும் அவனையும் மீறிகோபம் உண்டாயிற்று. தரதரவென்று ஜீவாவின் கூந்தலைப் பற்றி யிழுத்து, அடி சண்டாளி. என் பாலகிருஷ்ணனைக் கொலை செய்து விட்டாயே” என்று சொல்லிப் பளீரென்று கன்னத்தில் அடித்து வெளியே தள்ளி விட்டான்.


இனி என் முன் வராதே. ஒழிந்து போ” என்று பர்ணசாலைக் கதவை மூடினான்.

 

அன்று பௌர்ணமி. வானத்தில் இளம் சந்திரிகை. யமுனைக் கரையிலிருந்த ஜிஹாங்கீரின் உல்லாச மாளிகை அந்த நிலவில் பால் போல் பிரகாசித்தது. உல்லாச மாளிகையின் மாடியில் பட்டு மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருந்தாள் ஜீவா. அவள் அருகில் ஹுக்கா புகையருந்திக் கொண்டே, அவள் எழிலில் மயங்கி யிருந்தான் சக்கரவர்த்தி. அந்த பாரசீகக் கிளி தானாகவே தன் கூட்டில் வந்த மகிழ்ச்சி அவனுக்கு.

 

“அதோ?" என்றாள் ஜீவா விரசத் தொனியில். ஜி ஹாங்கீரின் கண்கள் அங்கே சென்றன. சைத்ரீகன் பிரபாகரன் யமுனைக் கரையில் அதன் அழகில் ஈடுபட்டிருந்தான்.

 

“என்ன விரும்புகிறாய்?" என்றான் ஜிஹாங்கீர். அவன் கேள்விக்கு அவள் ஒரு சமிக்கை செய்தாள். பாம்பு விஷத்தைக் கக்கிவிட்டது. ஜிஹாங்கீர் சிறிது நேரத்தில் எழுந்து போய் திரும்பினான். அவள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டாள். ஆம். பிரபாகரன் தன் மலர் விழிகளை இழந்து கதறுவது இவளுக்கு எப்படிக் கேட்கப் போகிறது?

 

எட்டு வருஷங்கள் தோன்றி மறைந்தன. யோசியாமல் என்ன காரியம் செய்து விட்டேன் என்று கதறினாள் ஜீவா படுக்கையில் புரண்டு கொண்டே. அடி பாவீ! என்ன பாவத்தைக் கட்டிக் கொண்டாய்' என்று அவள் மனம் வாள் போல் அறுத்தது. உயிர்
போவதற்கு முன் பிரபாகரனிடம் பாவ மன்னிப்பைப் பெற நெஞ்சு துடித்தது. இதே ஏக்கத்தில் துரும்பு போல் ஆகிவிட்டாள். இப்போது குரூபி என்றால் ஜீவாவையே சொல்லலாம். அவள் செய்த பாவமும், அவன் மீதுள்ள பிரேமையும் அன்றைய தினம் முதலே பிரபாகரனை நாற்புறமும் தேடச் செய்தாகி விட்டது. பல பக்கங்களிலும் தேடி வருஷங்கள் சென்றது தான் மிச்சம். பிரபாகரனை எங்குமே காணவில்லை,

கோதாவரி நதிக்கரையோரமாக மூடு பல்லக்கு ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லக்கினுள் ஜீவாதான் உட்கார்ந்திருந்தாள்- இல்லை- ஒரு எலும்புக்கூட்டினுள் உயிர் மாத்திர உட்கார்ந்திருந்தது. முன்னும் பின்னும் பல ஆட்கள் காவல்
சென்றனர். பிரபாகரனைத் தேடிப் பல பக்கங்களிலும் யாத்திரை தொடங்கி விட்டாள் ஜீவா.

 

வெய்யில் அதிகமாயிருந்ததால் பல்லக்கை அவர்கள் ஒரு மர நிழலில் இறக்கிவிட்டு சற்று இளைப்பாறினார்கள். ஜீவாவுக்கு நதிக் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. பல்லக்கை விட்டு இறங்கி சற்று தூரம் தனியாகவே நடந்தாள்.
இரண்டு பர்லாங்கு தூரம்கூட சென்றிருக்கமாட்டாள் பெருமூச்சு வாங்கிற்று. சக்தியற்று மயக்கம் தட்டிற்று. உணர்ச்சியின்றி கீழே விழுந்து விட்டாள்.

 

கண் விழித்தபொழுது ஒரு பர்ணசாலையில் படுத்திருந்தாள் ஜீவா. ஒரு இளைஞன் விசிறிக் கொண்டிருந்தான். சுற்றிலும் பார்த்தாள். தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே அவர் அவருக்கு இரண்டு கண்களும் இல்லை.

 

அதோ அந்த முகம்! எங்கோ பார்த்தது போலிருக்கிறதே! பிரபாவா? - ஆம். கனவு காண்கிறேனா? இல்லை. ஒரேயடியாய் பல எண்ணங்கள் எழுந்தன. தேகத்தில் சொல்ல முடியாத ஒரு சக்தி. சடாரென்று எழுந்து அவன் பாதத்தில் விழுந்து விட்டாள்.

 

"நான் தான் ஜீவா... பாவி...கண்ணிழக்கச் செய்தவள்... பிரபா... மன்னிப்பாயா?'' நா குழறிற்று.

 

பிரபாகரன் திடுக்கிட்டான். “யார்? ஜீவாவா?"- அவளை இருகைகளாலும் தூக்கினான். அவன் தூக்குவதற்கு முன்பே அவள் ஜீவன் அவள் உடலைவிட்டு அகன்று விட்டது. அது. அந்த ஜீவன் அவன் பாதத்தில் முக்தியடைந்து விட்டது.

 

பாவ மன்னிப்பிற்காக தன் ஜீவனையே அளித்துவிட்டாள் ஜீவா. அந்த ஜீவனற்ற உடலைத் தழுவிக்கொண்டான் பிரபாகரன். அவன் கண்களினின்றும் தாரை தாரையாக வழிந்தோடின் நீர் அவள் பாவத்தை மன்னிப்பது போலிருந்தது.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment