Showing posts with label பண்டைப் புலவர் மாட்சி. Show all posts
Showing posts with label பண்டைப் புலவர் மாட்சி. Show all posts

Friday, September 4, 2020

 பண்டைப் புலவர் மாட்சி

 

பண்டைநாளில் தண்டமிழ்ப் புலவர்கள் மிக்க வறுமையுடையோராயிருந்தன ரென்பது புறநானூறு போன்ற பழம் பனுவல்களைச் சிறிது ஆய்வோரும் தெற்றென உணர்வர். சான்றாக, 'மைத்தற் றொழிலின்மையின் அடுப்பின் கண் காளான் பூத்துக் கிடந்தது'' என்று தொடங்கும் கருத்துடைய


 "ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
 ஆம்பி பூப்ப "..........................
.....................

எனவரும் ஒரு புலவரின் சிந்தையிற் கொள்ளும் செந்தமிழ்ப்பா வொன்றுமே போதியதாகும். புலவர்கள் செல்வத்தில் தான் ஏழையாயிருந்தனரே யன்றிக் கல்வியிற் சிறிதும் தாழ்ந்தவர்களல்ல ரென்பதை மேற்கூறிய பாவே மெய்ப்பிக்கும்.

 

நாவீறு படைத்த நல்லிசைப் புலவர்களின் பொங்கொளியை எங்கும் பரப்பியது இவ்வறுமை யென்னும் மாதகையோனே யெனல் சாலும். புலவர்களை இன்மைப் பிணி இறுக்கியிராதாயின் எந்த மன்னர்களையும், எந்த வள்ளல்களையும் பாடியிரார்கள். அதனால் நாம் படிக்குந்தோறும் படிக்குந்தோறும் இன்பம் பயக்கும் அவர்கள் தம் சுவைநல மலிந்த செந்தமிழ்ப் பாக்களை இழந்து விட்டிருப்போம். அவர்கள் பெயர்களும் இதுநாள் மறைந்து போயிருக்கு மன்றோ?

 

நாவன்மை மிக்க நம்புலவர்கள் வறுமை யென்னும் கொடியோனால் வருந்திய காலத்தும் தங்கள் ஒழுக்கங்களிற் சிறிதும் வழுவினார்களில்லை. இம்மையிலும் மறுமையிலும் நலமே தரும் நேரிய பாதையில் நின்று நாட்களைக் கழித்திருக்கின்றனர். பசியால் வருந்தியும் மனச் சான்றுக்கு மாறான வழியிற் செல்லாத புலவர்களின் மனோவுறுதியினையும், பெருமையினையுங் கூறுதல் எளிதன்று.

 

பலகலை யாய்ந்த புலவர்கள், தாம் மன்னர்களைச் சார்ந்த காலத்தும் தம்மியல்பான பெருமித குணம், செருக்கின்மை, உண்மையைக் கூறுமிடத்து எவரிடத்தும் அச்சமின்மை, யாரிடமும் அருள் வழியும் நோக்கு, தம்மை மதியாதாரைத் தாமும் மதியா திருத்தல், விரும்பிக் கொடாத பரிசிலை வேண்டாமை முதலிய அரும் பெருங் குணங்கள் அமையப் பெற்றவர்களாகவே விளங்கினர். சான்றாகச் சில புலவர் திலகங்களின் பெருமைகளைஈண்டு காட்டாகக் காட்டி வரைய விழைகின்றனன்.

 

அருந்தமிழ் வல்ல பெருந்தமிழ்ச் சாத்தனா ரென்பார் இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் விளங்கினர். விழுமிய புலவர். சாத்தன் என்னும் இயற்பெயருடைய இவர் இளமையிலேயே பல இலக்கண இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, நோக்க மமைந்த பாக்களை விரைவில் யாக்கவல்லராய்த் தழிழகம் போற்றச் சாத்தனாரென்னும் உயர்வு பெற்றுத் துலங்கினார். என்றாலும்,

 

''பல்லால்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்

தல்ல லுழப்ப தறிதிரேல் - தொல் சிறப்பின்

நாவின் கிழத்தி உறைதலாற் சேராளே

பூவின் கிழத்தி புலந்து "

 

என்றபடி புலவருடன் வறுமையாந் தோழன் விரும்பி விளையாட நெருங்கினான். அச்கொடியோன் செயலால் தம் மனைவி மக்கள் பசிப்பிணியால் வருந்துவதைக் காணச் சகியாதவராய், கவிவாணரைக் கனம் பண்ணும் அரசர், வள்ளல் முதலாயினாரின் உண்மைக் குணங்களை உள்ளபடி இன்சுவைப்பாக்களால் எடுத்துரைத்து அதனால் வரும் பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டு, விழை பயன் கருதாது மேதினியர்க் குதவும் மழை போலுதவும் மாமலர்க்கையினை யுடைய குமண னென்னும் அரச வள்ளலை நாடிச் சென்றார்.
 

அஞ்ஞான்று தம்பியின் குணக் கேட்டினால் மனவலைப் புண்ட குமணன் காடுறைந் தனனாக, ஆண்டு அரசனைக் கண்டு புலவர் நின்றார். அவரைக் கண்ணுற்ற அரசவள்ளல் புலவருக்குப் பரிசில் வழங்கும் பெற்றியிலில்லாத அப்போதைய தன் நிலைமைக்கு மிகவும் உள நொந்தான். அக்கணமே தன்தம்பி தன் தலையைக் கொணர்வார்க்குச் செம்பொன் கோடி கொடுப்பதாகப் பறையறிவித்திருந்தமை நினைவிற்குவர, உடனே புலவர் கரத்தில் வாளையளித்து,


 "அந்தநாள் வந்திலிர் அருந் தமிழ்ப் புலவீர்
 இந்தநாள் வந்துநீர் நொந்தனி ரடைந்தீர்
 தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
 விலைதனைப் பெற்றும் வறுமை நோய் களைமின் "


என்றார். ஆ! இவ்வரசர் பெருமானின் வள்ளன்மை இருந்தவா றென்னே! இப்பெற்றி வாய்ந்த பெரும் வள்ளல்கள் இஞ்ஞான்று இல்லாக் குறையாலன்றோ நந்தாய் மொழியாம் தமிழ்மொழி அத்துணைச் சிறப்புறாதும், பெரும்புலவர்களிருந்தும் குடத்தின் கண் விளக்கென ஒளி குன்றியுமிருக்க நேர்ந்திருக்கின்றது. நிற்க,

 

'தலையைக் கொய்து கொள்'ளென்று தான் சிறிதும் எதிர்பாராத விதமாய் வாள் தந்த வள்ளலைப் பார்த்தார் புலவர். தன் மனைவி மக்கள் பசிநோயால் வாடுவரே யென்னும் எண்ணத்தை அறவே மறந்தார். குமணனை எங்ஙனமேனும் சிங்காதனத்தில் ஏறச்செய்து விடுவதென உளங் கொண்டார். குமணனை நோக்கி, 'நான் வரும் வரையிலும் என் தலையாகிய உம் தலையைக் காப்பாற்று வீராக' என்று அறிவித்துவிட்டு, குமணனின் தம்பியாகிய இளங் குமணனிடஞ் சென்றார். சென்று அவன் மனமிளகி நல்வழியில் திருந்தும் வகையில் தம்மனதில் சுரந்தெழுந்த பின்வரும் விழுமிய பாடலைப் பாடினார்:

"மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே

*     *     *     *     *''

கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனெ னாகச் சொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினும் நனியின் னாதென
வாள் தந் தனனே தலையெனக் கீய,

*  *     *     *     *”

இதைப்பாடியதுடனில்லாது இன்னும் பல அரிய நீதிகளையும், உடன் பிறப்பின் மாண்பினையும் விளங்க எடுத்துரைத்து, இலங் குமணனைத் தன் பிழைகளைத் தானே யுணரும்படிச் செய்து, அவன் தன் அண்ணனிடம் சென்று தன் குற்றத்தைப் பொறுத்து அரசபாரத்தை வகிக்குமாறு தாழ்ந்து வேண்டிக் கொள்ளும்படி அவன் மனதை அத்துணைப் பக்குவமாக மாற்றிவிட்டன ரென்றால் புலவரின் ஆற்றல் இவ்வளவினதென்று கூறல் வேண்டுமோ? பின்னும் மன்னர்கள் இவர் வார்த்தைக்கு எத்துணை மதிப்பளித்திருக்கிறார்க ளென்பதும் அறியத் தக்கது. குமணனின் தலையைக் கொண்டு போய்க் கோடி பொன் பெறக் கூடுமாயினும் அச் செயலில் ஈடுபடாத அவரது மேலான மனப் போக்கினையும், இருவருக்கும் ஒற்றுமை யுண்டாக்கவேண்டுமென்று கொண்ட உத்தம சிந்தையினையும் ஊகித் துணரற் பாற்று.

 

இன்னும் அரசபாரத்தை வெறுத்த குமணனை நோக்கி, "தலைக் கொடையாளியே! உம்முடைய தலை எம் தென்பதை மறந்தீரோ? எமது தலையில் முடி சூடுவதை மறுக்க உமக்கு யாது உரிமையுனது?'' என சமயோசிதமாய் அன்பு கனியக் கூறிய உரையில் எத்துணைச் சுவை நயம் பயக்குகின்றது? நிற்க.

 

நம்புலவர் கோடை மலைக் குரியவனான கடிய நெடுவேட்டுவ னென்னும் வள்ளலிடஞ் சென்று பரிசில் வேண்ட, அவன் எக்காரணத்தாலோ, பரிசில் கொடாது காலந்தாழ்த்தியதைக் கண்ட புலவர், வெகுண்டு, கடிய நெடுவேட்டுவனை நோக்கி,


''முற்றிய திருவின் மூவ ராயினும்
 பெட்பின் றீதல் யாம் வேண்டலமே
.......................................................................''
 நோன் சிலை வேட்டுவ! நோயிலை யாகுக!
.........................


என பெருமிதத்துடன் கூறினார். இதைச் செவி மடுத்த வேட்டுவன் புலவர் தன்னை 'நோயிலை யாகுக' வென்று குறிப்பு மொழியால் சபித்துச் செல்லுகிறா ரென்றஞ்சி 'தொல்லாணை நல்லாசிரியர் திறத்தில் என் செய்தோம்' என உளநைந்து புலவரை மன்னிக்கும்படி வேண்டி அவரையழைத்து வந்து பரிசில் தந்து அனுப்பினானாயின், மன்னர்களிடத்தில் புலவர் எத்துணைப் பெருமைப்பட வாழ்ந்திருக்க வேண்டும்? மற்றும் அவர் ஆகவோ, கெடவோ சொல்லிய சொல்லியாங்கே நிறைவேறுகின்றதெனில், புலவர் தெய்வத்தன்மை பொருந்தியவ ரென்று கூறுவதை மறுப்பார்யாருளர்? இதற்கு இவர் வாய்ப்பட்ட மூவனென்னும் சிற்றரசன் சேரமான் கணைக்காலிரும் பொறையால் அழிவுண்ட தொன்றே போதிய சான்றாகும்.

தோட்டிமலைக் குரியவனான கண்டீரக் கோப் பெருநற்கிள்ளியின் தம்பி இளங் கண்டீரக்கோ என்பானை நம்புலவர் கண்டு, அவனை அன்பின் பெருக்கினால் தழுவி மகிழ்ந்திருக்க, அவ்வமயம் ஆண்டிருந்த நன்னனென்னும் வேளிர்குலத் தலைவனது வழித் தோன்றலாகிய இளவிச்சிக்கோ தன்னைத் தழுவாமைக்குக் காரணங் கேட்க,


 *
'புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்
 கொன்பதிற் றொன்பது களிற்றோ டவள் நிறை
 பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
 பெண் கொலை புரிந்த நன்னன்''

 

[* பரணர் பாடியது.]

 

மரபில் நீ தோன்றியுள்ளமையின் எம்மவரான புலவர்கள் உம்மைப் புகழாதொழிந்தனர். நாம் தழுவாமைக்கும் அதுவே காரணமென விடை யிறுத்தார். இதனால் அரசனேயாயினும் அவரிடத்துப் பழிபயக்குஞ் செயல்காணப்படின் அன்னாரைப் பாடுதலும் மதித்தலுஞ் செய்யாது வெறுத்துரைக்கும் பெருமித குணமுடையாரென்பது பெறப்படும். நிற்க,

 

மடமறு புலமை முடமோசியா ரென்னும் புலவர் பெருந்தகையின் விழுமிய குணங்களைச் சற்று விசாரிப்போம். இவர் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுப்பில் திகழ்ந்தவரென்று தெளியப்படுகிறது. இவர் பிறவியில் அங்கமுடவராயினும், தமிழ்ப்புலமையிலும், குண வொழுக்கங்களிலும் முடம்பட்டவரன்று. பாண்டி நாட்டிலுள்ள மோசிகுடி யென்னும் பதியிற்றோன்றிய இவரை உறையூர்ச் சோழனாகிய முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி போற்றி யுபசரித்து, புலவரைத் தன்னூரில் சின்னாளேனும் வதிந்து செல்லுமாறு வேண்டினனெனில், புலவரின் பெருமை கூறாமலே விளங்கும்.

 

புலவர் கருவூரை யடைந்து சேரமான் அந்துவரஞ்சேரலிரும்பொறையென்னும் அரசனைக் கண்டு அவனால் வரவேற்கப்பட்டுப் பெருமையுடனிருக்குங்கால், சோழன் கோப் பெருநற்கிள்ளி தனது உறையூர்ப் புறத்துக்களிறூர்ந்துவர, அது மதப்பட்டு, சோழனுக்குத் துணையாய் வந்தவாள் மறவர் முதலியோர் பின்னேவர, யானை விரைவாய் வந்து கருவூரையடைய இவர்களைக் கண்ணுற்ற சேரன் யாரோ தம்மீது படை கொண்டு வருகின்றனரென்றெண்ணி, கண்கள் சிவக்கப் புலவரை நோக்கி "களிறூர்ந்து வரும் இவன் யாவனெனக் கூறுவீரா? " என்று வினவ, புலவர் தம்நுண்ணறிவினால் வருவோன் தன் பழைய நேயனாகிய சோழனென்பதையும், அவன் பகை கொண்டு அங்ஙனம் வரவில்லை யென்பதையு முணர்ந்து அதைச் சீரிய செந்தமிழ்ப்பாட்டால் (புறம் 13) சேரனுக்கு விளங்கக் கூறி சேரன் பகைவனாகிய சோழன் சுகமே அரண்மனை சேர்வானென, அவன் முன்னிலையிலேயே கழறிய வுரையில் புலவரின் போருள், நன்றியறிதல், உண்மை நெறியில் அரசர்க்கு மஞ்சாமை முதலாய குணங்கள் துள்ளியெழுகின்றன. மற்றும் சோழன் பகைமை கொண்டு வரவில்லை யென்பதை நொடிப்பொழுதி லுணர்ந்த இவர் கூரியமதி அளத்தற்கரிதன்றோ? அதுவேயன்றி உலகியலறிவும், அரசியலறிவும், சாலப்படைத்தவ ரென்பதும் விளங்கும்.

 

கடையெழு வள்ளல்களி லொருவனாய ஆய் என்பானை நம்புலவர் நண்ணி அவனால் பெருமையுற்றுத் திகழ்ந்த காலத்தில் ஆயின் பெருங்குணங்களில் ஈடுபட்டு, முன்னமேயே இவனை யடையாது போயினோமேயென வருந்தி,

 

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே

ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே

பாழூர்க் கிணற்றின் தூர்கவென் செவியே

............................................................................

 

என்று தன் உள்ளத்தையும், நாவையும், செவியையும் வெறுத்துக் கூறுகின்றமை கொண்டு, இவர் ஏனையோரைப் பாடியது கேவலம் நிலையில்லாச் செல்வத்தை விரும்பியல்லவென்பதும், பரிசில் பெற, இல்லாததைப் புனைந்து பாடத் துணியாத தூய்மையுடைய வாய்மையாள ரென்பதும், உத்தமர் கூட்டுறவில் அவாமிக்குடையாரென்பதும் பெறப்படும். ஆய் கால மாறுபாட்டால் வறுமையை யடைய அக்காலத்தும் புலவர் அவனை விட்டு நீங்காது அவன் மாட்டு உளங்கனிந்த பாட்டுகளைப் பாடிக் கொண்டிருந்து, ஆய் இறக்க, அவண் விட்டகன்று தம்மூரையடைந்து, ஆயையும், அவனுடைய பேரன்பையும் நினைந்து நினைந்து உளம்வாடி உடலை விட்டுப் பொன்னுலகடைந்தாரெனின், புலவரின் உத்தம நட்பையும், சீரிய சிந்தையையும் ஊகித்துணர்வதே சிறப்புடைத்து. அப்பால்,

 

பாவாணர் புகழ் கோவூர் கிழாரென்னும் புலவர் பெருமானின் பெருமைகளைச் சிறிது ஆராய்வோம். இவர் சிறப்புற வாழ்ந்தது இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில். இவர் காலத்தரசனாகிய சோழன் நலங்கிள்ளி யென்பான் புலவரை விரும்பி யழைக்க, அவன் பால் சென்று, அன்பினையள்ளிப் பருகி, அவனதவைக்களத்திலிருந்து அவனது வீரம், நியாயம், ஈகை முதலியன விளங்கத் தேனினுமினிய சுவை வழியும் பைந்தமிழ்ப்பாக்களைப்பாடி, சோழன் மனதுக்குங் களிப்பூட்டிப் பெருமை கொண்டவர்.

 

ஒரு சமயம் சோழர் குடிப்பிறந்த நெடுங்கள்ளி யென்பானுக்கும் இந்நலங்கிள்ளிக்கும் அரசுரிமை பற்றிப் பல வழக்குகள் நடந்து அவை முற்றிப் பகைமூண்டு போர் நடக்க, அப்போரில் வன்மையற்ற நெடுங்கிள்ளிசோணாட்டு ஆவூர்க்கோட்டையை அரணாகக் கொள்ள, நலங்கிள்ளியோ அக்கோட்டையை வளைத்துக் கொண்டான். கோட்டை முற்றுகை பலநாள் நீடிக்க, உள்ளிருந்த மக்கள் உணவில்லாமையின் வருந்தினர். அப்போது நம்புலவர் விரைந்து சென்று அடைத்துக் கொண்டிருக்கும் நெடுங்கள்ளியைக் கண்டு, முதலில் அவனைப் பலபடப் புகழ்ந்து, பின்னர்


 “ ...............................
 துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்!
 அரவை யாயின் நினதெனத் திறத்தல்
 மறவை யாயிற் போரொடு திறத்தல்
 அறவையும் மறவையும் அல்லை யாகத்
 திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
 நீண்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
 நாணுத்தக வுடை திது காணுங் காலே''


என்ற பொருள் பொதிந்த பாடலைக்கூற, அரசன் அடை மதிலைத் திறந்து விட்டான். ஈண்டுப் புலவர் மொழி எத்துணை சிறந்திருக்க அரசன் அப்பொழுசே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்பது அறியத்தக்கது. இன்னும் அரசனுக்குக் கூறுமுகத்தான் தன் மனப் போக்கினையும் ஒருவாறு காட்டி யிருப்பது சிந்திப்பார்க்குப் புலனாகும்.

 

வூரை விட்டோடிய நெடுங்கிள்ளி உறையூர் சென்றிருக்க இனந்தத்த னென்னும் புலவ ரொருவர் முதலில் நலங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற்றுக்கொண்டு, அப்பால் உறையூரையடைந்து நெடுங்கிள்ளியின் பால் சென்று அவனைப் பாடிப் பரிசில் வேண்டினான். புலவர் நலங்கிள்ளியிடமிருந்து வந்திருப்பதால், தன் இரகசியங்களை உணரவந்த ஒற்றனென்பதாக நெடுங்கிள்ளி நினைந்து புலவரைக் கொல்லக் கருதினான். இச்செய்தியை யுணர்ந்த நம்புலவர் கோவூர்க்கிழார் அரசனிடஞ் சென்று ''அரசனே! வள்ளல்களை நாடிச்சென்று, அவர்கள் குணங்களைப்பாடி அவர்களீயும் பரிசிலாற்களித்து, அவற்றால் தாமுமுண்டு தம் சுற்றத்தாரையும் உண்பித்து, பொருளிற் பற்றின்றி கல்வியாளரோடு சொற்போர்நிகழ்த்தி வென்று அப்பெருமிதத்தோடு வாழ்வதன்றி, பிறர்க்கு இன்னல் விளைவிப்பதைப் புலவர்களறியார்'' என நயம்பட வுரைத்து, அரசனது மனத் துள்ள கொடிய எண்ணத்தை அகற்றி இளந்தத்தனை உய்வித்தார்.

 

இவ்வாகலாகப் புலவரது வாழ்க்கை நலத்தைக் கூறியிருத்தல் குறிக் கொள்ளத்தக்கது. இதைக் கொண்டும் புலவரின் தன்மைகளை ஒருவாறாக அளந்தறியலாமன்றோ? நெடுங்கிள்ளி புலவர் மொழிக்கு இரண்டா முறையும் மதிப்பளித்தமையை நோக்குக. நிற்க,

 

நலங்கிள்ளி தன் சேனைகளுடனே உரை யூருக்குச் சென்று நெடுங்கிள்ளியுடனே போர் செய்யத் தொடங்க, அதனை அறிந்த அருள் வடிவினராய புலவர் அமர்க்களஞ் சென்று, அவ்விரு சோழர்களையும் நோக்கி,


 "இரும்பனை வெண்டோடு மிலைந்தோ னல்லன்
 கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன்
 நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே, நின்னோடு
 பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
 ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
 இருவீர் வேறல் இயற்கையுமன்றே, அதனாற்
 குடிப்பொரு என்று நுஞ் செய்தி, கொடித்தேர்
 நும்மோ ரன்ன வேந்தர்க்கு
 மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே"


 என்ற பாட்டினை அவ்வரசர்கள் மனதில் பாய்ந்து சென்று தைக்குமாறு அழகாகக் கூறி உண்மையை யுணரச்செய்து, அவர்கள் பகையை யொழித்து இருவருள்ளத்திலும் அன்புதிக்கப் பேசி ஒற்றுமைப் படுத்திய புலவர் பெருமையைப் பேசுதல் எளிதன்று. உய்த்துணர்ந்து கொள்க.

 

கடையெழு வள்ளல்களிலொருவனாய மலையமான் திருமுடிக்காரியின் மீதுள்ள பகைமையினால் அவன் திருக்குழந்தைகளைக் கொண்டு வந்து, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனென்பான் கொல்லக் கருத அதை யறிந்த இரக்கமே வடிவினராய நம்புலவர் ஓடோடியுஞ் சென்று சோழனைப் பார்த்து, " அரசே ! நீ ஒரு புறாவுக்காகத் தன் தசையை யறிந்தீந்த சிபி யென்னும் புகழரசன் மரபிலுதித்தவனா யிருந்தும், இச்சிறார்களைக் கொலை புரிய நினைந்தமை சரியோ? " என்னுங் கருத்துப்பட மொழிந்து, அவனது அடாத செயலை நயமாகக் கண்டித்துக் கொலை செய்யாது தடுத்து விட்டார். கன்னெஞ்சம் படைத்தோரும் புலவர் செம்மொழியில் சீர்பட்டு விடுகிறார்களெனில், அவர் தம் அருள் மொழிகளின் திறத்தை என்னென்பேம்?

 

பிறர்க்கு நேரும் இன்னல்களைத் தமதாகக் கொண்டு அவற்றைக் களைவதே தங்கடமையாய்க் கைக்கொண்டிருந்த இவர் பெற்றியினை நாம் இன்னும் பேசவேண்டுமோ?

 

இனி, அருங்கலை வல்ல பெருஞ் சித்திரனாரென்பாரின் ஒப்பிலாத உயர் பெருமைகளைப் பார்ப்போம். இவருங் கடைச் சங்கத்தவரே. (இரண்டாம் நூற்றாண்டு) கண்களால் கண்ட இயற்கை வனப்பினையும், மனதில் சுரந்தெழும் அருங் கருத்துக்களையும் அப்படியப்படியே கேட்போருள்ளத்தில் பதியுமாறு ஓவியக்காரன் சித்திரம் வரைந்து விளக்குவது போன்றுதம் பாட்டினாலேயே ஒவ்வொரு பொருளையுந் தெளியவைக்கும் ஆற்றல் இவரிடத்துக் காணப்பட்டமையினாலேயே இவர் பெருஞ் சித்திரனாரென்னுங் காரணப் பெயரால் அழைக்கப்பட்டாரெனில், இவரது அளக்கலாகாக் கல்வியின் அளவும் கவிபாடுதலிலுள்ள தேர்ச்சியும் இவ்வளவின் வென்று எடுத்துரைத்தல் அவசியமின்று.

 

இவர் பரிசில் பெறக் கருதி அக்காலத்திருந்த அதியமான் நெடுமானஞ்சி யென்பானை நண்ணிப் பரிசில் வேண்டி நிற்க, அவ்வரசன் யாது காரணத்தாலோ புலவரை வரவேற்காது தம் ஏவலாளர்களைக் கொண்டு புலவருக்குப் பரிசில் வழங்கச் செய்ய, அதுகண்டு பொறாத புலவர், ''அரசன் என்னைப் பாராமலே யளிக்கும் இப்பரிசிலைப் பெற நானொரு யாசகனல்லன். என் கல்வியை யறிந்து தினையளவு நல்கினும் அதையே கொள்வேன்' என்னுங் கருத்துக் கொண்ட,


 “................................
 காணா தீந்த விப்பொருட் கியானோர்
 வாணிகப் பரிசில னல்லேன்; பேணித்
 தினையனைத் தாயினு மினிதவர்
 துணையள வறிந்து நல்கினர் விடினே''

 

என்ற பாடலைத் தமது பெருமிதந் தோன்ற கூறி விட்டு அவன் விட்டகன்றார். ஈண்டுப் புலவர் தகைமை எப்பெற்றியுடையதெனச் சிந்தித்தற் குரியது. களிபுலவர் போற்றும் ஒளிதங்கிய வெளிமா னென்பானை நம்புலவர் கிட்டிய காலத்து, அவன் இறக்குந் தறுவாயிலிருந்தானாக, அப்பொழுதும் அம்மன்னன் புலவருக்குப் பெரும் பரிசிலளிக்குமாறு தம்பிக்குக் கட்டளையிட்டு மாண்டனனெனின், அக்கால வண்மையாளர்களின் தன்மையைத்தான் எடுத்தியம்பற் பாற்றோ?

 

அவ்வெளிமான் தம்பியோ புலவர்கள் பெருமையினை யோராத சிற்றறிவினனாகலின், நம் புலவரிடம் ஏதோ சிறிது பொருளீய, புலவர் தம்மனைவி மக்கள் பசியால் பொடிப் பொடியாய்ச் சாகிறார்களென்பதையும் பாராது, இளவெளிமா னளிக்க வந்த அற்பப் பொருளை மறுத்து "வெளிமான்! புலி தன் பசிக்காக அடித்த யானை தப்பிவிடுமாயின், தன் இரைக்குப்போதாத எலியைக் கொன்று வீழ்த்தாது" என்று கூறிய புலவரின் பெருங் குணத்தையும், பெரும் போக்கையும் எங்ஙனம் புகழ்வது?

 

பின்னர், முதிரமலைத் தலைவனாகிய குமணன்பாற் சென்று அவன் வன்வன்மையைப் பல தீஞ்சுவைப் பாக்களாற் புகழ்ந்து, அவனிடம் களிறும் பொன்னும் பட்டாடைகளும் பெற்றுத் தம்மூருக்குத் திரும்புங்கால், தம்மை மதியாத இளவெளிமான் ஊர்முகமாகச் சென்று அவனது காவல்மரத்தில் தமது களிற்றைக் கட்டிவிட்டு, அரசனிடஞ் சென்று,

 

காவல் மரமென்பது பழங்கால மன்னர்கள் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர் வகை மரத்தைத் தமதூர்ப்புறத்துச் சோலையில் வைத்து அதைக் கண்போல் காப்பார்கள். அம்மரத்தைப் பகை வேந்தர்கள் அழித்து விடுவார்களாயின், மரத்துக் குரிய மன்னர் பெருந்தோல்வி எய்தியதாகக் கருதப்படுவர். இத்தகைய இளவெளிமானின் காவல் மரத்தில் தம் யானையைக் கட்டிய சித்திரனாரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்றுரைப்பது?


'இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவல ருண்மையுங் காணினி இரவலர்க்
கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் றோன்றல் செல்வல் யானே "


என்ற பாடலால் தம் பெருமையினை அரசனகத்திற் பதியுமாறியம்பிய புலவர்மனோதிடத்தையும், அறியா மன்னனுக்கு அறிவுறுத்த வெண்ணிய அவர் தம்போக்கினையும் உன்னியுணர்க.

 

பழங்காலப் புலவர்கள் கேவலம் வயிறு வளர்த்தற் பொருட்டே அரசர்களை யணுகி வெறும் பாட்டுக்களைப் பாடிய கோழைகளாயிராமல், வீரம், கல்வி, அருள் நிரம்பிய உள்ளத்தினராய்த் திகழ்ந்தனரென்பதற்கு நஞ் சித்திரனாரை ஒரு காட்டாகக் காட்டலாம்.

இன்னுமிவர், கார்தோற்றுப் போகக் கொடுக்குங் கரத்தோனாகியகுமண வள்ளல் ஈந்த பொற்பரிசிலைத் தாமும் தம் மனைவி மக்களுமே யனுபவிக்க கனையாது, தம் மனைவியை யணுகி,


 "நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
 மன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
 கடும்பின் கரும்பசி தீர யாழநின்
 நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
 இன்னோர்க் கென்னா தென்னோடுஞ் சூழாது
 வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
 எல்லோர்க்குக் கொடுமதி மனைகிழ வோயே
 பழந் தூங்கு முதிரத்துக் கிழவன்
 திருந்து வேற் குமணன நல்கிய வளனே''


என்ற பாடலால் தன் உள்ளக் கிடக்கையை வெள்ளை யாய்க் காட்டிய புலவர் தம் உத்தம சிந்தைதானென்னே! இது சாலவும் வியந்து போற்றும் பெற்றியுடைத்தன்றோ?

 

குமண வள்ளலைப் புகழ்த்தும், தம் வறுமை நிலைமையினைத் தெளிவு படுத்தியும் பாடுங்காலை "மோசி பாடிய ஆயம்'' (புறம் - 158) என்று சுட்டியிருத்தலால், இவர் ஏனைய புலவர்களை மதித்துப் போற்றும் மாண்புடையாரெவுைம், பிறர் கல்விப் பெருக்கினைக் கண்டு பொறாமை கொள்ளும் புல்லறிவாளரின் அற்பகுண மணுகப்பெறாதவ ரெனவுங் கொள்ளக்கிடக்கிறது.
 

பெருஞ் சித்திரனாரின் பெருமைகளை எழுகிவிளக்குதல் சாத்தியமன்று. மனத்தின் உணர்ச்சியானே உணர்வதே சிறப்புடைத்து, அவரைவீரந்ததும்பிய உன்னத்தினர், அன்பு நிறைந்த மனத்தினர், அருள் வழியும்முகத்தினரென்று கூறி முடித்தலே தகும்.

 

அப்பால், ஆசில் புகழ் பிசிராந்தையா ரென்னும் புலவர் பெருமானின் பெருமைகளைக் காண்போம். கல்வியங் குணமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இவர் இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிற் திகழ்ந்தவராவர். கல்விக் கடலைக் கரை கண்டவர். நட்புக்கோர் நாயகமாய் விளங்கி அதன்முகத்தானே மன்னா இவ்வுலகில் மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறீஇத்தாமாய்ந்தவர்.

 

இவர் உறையூரை யாண்ட கோப்பெருஞ் சோழனிடம் விள்ளா நட்புக்கொண்டு அவனன்பை அள்ளியள்ளிப் பருகியவர். சோழனும் புலவரும்மனமொத்த நட்பினர். ஒருகால் சோழன் அரசபோகத்தை வெறுத்துத் தனியே ஓரிடத்திலிருந்த போது வெளியூரிலிருந்த புலவர் வராமையால், பலர் அன்புடைய புலவர் அரசன் ஏழைமையுற்ற சமயம் வராதிருப்பது நன்றா? என்று ஒருவாறு இகழ்ந்துரைக்க இதைச் செவியுற்ற மன்னன் மனம் பொறாது 'புலவர் அத்தகையோரல்லர். என் செய்தி உணர்வராயின் உடன் வருவார்' என்று சமாதானங் கூறினான். ஆ! இங்ஙனங் கூறிய அரசனுக்குப் புலவரிடம் எத்துணை மதிப்பிருக்க வேண்டும்? எவ்வளவு ஆழமா கஅவர் மனதை அறிந்திருக்க வேண்டும்?

அரசன் கூறியாங்கு புலவரும் சில தினத்தில் வந்து சேர இருவருங் கூடி மகழ்ந்தனர். பின்னர் அரசன் தர்ப்பாசனத்தின் கண் வீற்றிருந்து உண்ணாவிரதம் அனுஷ்டித்து இந்திரியங்களை யடக்கி உயிரைவிட, புலவரும் அங்ஙனமே தம்முயிரையும் நீத்துத் தம் நட்பின் திறத்தை உலகினர்க்கு மலையின் விளக்கென விளக்கினார். இதனினும் புலவரின் பெருமைக்குணத்திற்கு எடுத்துக்காட்டு எதுக்கு?

 

மேற்கூறிய கோப்பெருஞ் சோழனிடம் அன்பு பூண்டிருந்த செந்நாப்புலவராம் பொத்தியா ரென்பாரும் அரசனிறந்தமைக்காற்றாது தாமும் மடிந்தார். இவர் அரசனிடங் கொண்டிருந்த அன்பு தானென்சே! அருங்குண அருஞ்செயல் தானென்னே!

 

இன்னும் புலவர்களின் பெருமைகளை ஆராயப்புகின் வரைதுறையின்றி வளர்ந்து செல்லும். துணுகி நோக்கு வாருக்குப் புலவர்களிடத்துள்ள இன்னும் எத்தனையோ அரும் பெருங் குணங்களும், செயல்களுந்தோன்றும். அக்காலப் புலவர்களை எத்துணைச் சிறப்பித்துக் கூறினும் பொருந்தும். அத்தனைக்கும் இலக்கானவர்களாய் அவர்கள் இலங்கினர். அதற்கு அரசர்களுடையவம் வள்ளல் களுடையவுமான ஆதரவகள் பெரிதுமிருந்து, அதனால் தண்டமிழ்க் கல்வியின் இன்சுவையைப் பருகிக் களித்துத் தீஞ்சுவைப்பாக்கள் பலயாத்துத் தங்கள் பொய்யு லை நீத்துப் புகழுடம்பைத் தாங்கி இன்றும் நாம் போற்றும் நிலை பெற்று நிற்பாராயினர் அவர்களைப் போலவே நாமும் பெரும் புலவராய் ஆகாவிடினும் அவர்களால் நமக்குப் பெருந்தனமாய்ச் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுவை கெழுமிய செந்தமிழ்ப்பாக்களை யேனும் ஆராய்ந்து பொருள் நுட்பங்களை யுணர்ந்து மகிழவொண்ணாதா?

 

சும்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - நவம்பர், டிசம்பர் ௴