Sunday, September 6, 2020

 

வள்ளுவ நாம விளக்கம்

 

தமிழறி நேயர்காள்!

 

சென்ற ஆடித் திங்களில் நம்மானந்தனில் வெளிப்போந்த திருவள்ளுவ மதவாராய்ச்சி எனும் வியாசத்தின் இறுதியில் நமது பொய்யில் புலவ ருக்குத் திருவள்ளுவர் எனப் பெயர் அமைந்ததற்குக் காரணம், எல்லோ ரும் திரு (செல்வம் அதாவது கல்விச்செல்வம்) அள்ளுதலாலேயே திரு வள்ளுவர் எனப் பெயரமைந்தது போலு மெனக் கூறியுள்ளேன். அக் கூற்று நம் உருவகமேயன்றி வேறன்று. ஆதலால் வள்ளுவர் எனும் நாமத்தை விளக்க அவாவுற்று இவ்வியாசம் எழுதத் துணிந்தனன். நம் நண்பன் ஆனந்தன் இடந்தருவானாக. சீரியீர்! நம் தம் தேன்மொழியன்ன தென்மொழியதனுள் வள்ளுவர் எனும் பதத்திற்கு பதார்த்தம் என்னவென்று நோக்கில் சிற்சில சான்றுகள் காணப்படுகின்றன. முதற்கண் வள்ளுவன் என்பதின் தாதுப் பொருள் கற்றுணர்ந்தவன் எனவும் அப்பொருள் நமது தமிழ் பாஷையில் மரியாதைச் சின்னமாகவும் வழங்கி வந்தது எனவும் தெரிகின்றது. இரண்டாவதாத பிங்கல நிகண்டில் வள்ளுவன் என்பான் அரண் மனைக் கிரியா விஷேட மேற்பார்வை உத்தியோகஸ்தன் என்னும் பொருள்பட,

 

"வள்ளுவன் சாக்கை யெனும் பெயர்

மன்னர்க்குள்படும் கருமத் தலைவர்க் கொன்றும்"          என்று கூறியுள்ளது.

 

மூன்றாவதாக கம்பராமாயணத்தில்,'

 

'என்புழி வள்ளுவரியானை மீமிசை

நன்பறையறைந்தனர் நகர்மாந்தரும்

மின்பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால்
      இன்ப மென்றனக்கரு மளக்க ரெய்தினார்''
          என்று கூறப்படுதலால்

 

வள்ளுவன் அரண்மனையைச் சேர்ந்த காரியங்களை ஜனங்கட்கு அறிவுறுத்தும் சேவகனாவான் என்று புலப்படுகின்றது. நான்காவதாக சூடாமணி நிகண்டில்,

 

''வரு நிமித்திகன் பேர் சாக்கை வள்ளுவன் என்றுமாகும்''

 

என நிமித்திகனின் பரியாயப் பதமாக வள்ளுவன் எனும் பெயர் வழங்கி வந்தது எனக் கூறப்பட்டுள்ளது. மேற்காட்டிய மேற்கோள்களால் வள்ளுவன் என்னும் பதம், கன்மத்தலைவன், ஜோசியன் எனப் பொருள் படுகின்ற தாயினும் உலக வழக்கில், வள்ளுவன் என்னும் சொல் பறையர்களுக்குக் குருவாய் ஜோசியமே ஜீவனமாகவிருக்கும் வள்ளுவ ஜாதியிற் பிறந்தவனையே குறிக்கின்றது, என்பதாகக் கூறுவார் பலரும். இவ்விடயங்களைக் கவனித்து நோக்கின் வள்ளுவர் பறையரல்லர் என்பது ஒரு தலை.

இஃதோர்பால் நிற்க, ஸ்ரீமான் சேஷகிரி சாஸ்திரியார் அவர்கள் '' தமிழ்க் கவிசரிதம்'' எனும் நூலில், சைனர்கள், அவர்தம் சமயகுரவர் களுள் ஒருவராய ஏலாச்சாரியார் என்பவர் இந்நூலை இயற்றினார் என்று கூறுவதாகக் கூறியுள்ளார்கள். ஓர்கால் சைனர்களுக்குள் கற்றுணர்ந்த வனை, வள்ளுவனென்றழைத்தல் மரபாயிருக்கலாமென்றும் அவர்கள் ஏலாச்சாரியார் என்னும் பெயரினால் தாமுணர்ந்த திருக்குறள் நூலா சிரியர்க்கு, வள்ளுவர் என்னு மிந்நாமத்தை வழங்கியிருக்கலாமென்றும் கூறி திடவுரை கொள்ளாது போகின்றார். இவ்விதம் கூறுவது எத்துணை தூரம் உண்மையோ அறியேம்! இக்கூற்றை நம் நண்பரின் ஆராய்ச்சிக்கே யானும் விட்டுவிடுகின்றேன்.

 
மற்றும், பூர்வத்தில், ஓர் பிரளயம் வந்தது. அது வருமென்று பிரமன் முன்னரே யறிந்து அதில் இறவாது பிழைக்கும் பொருட்டு வேற்றுருவடைந்து ஓர் சுரைக்குடுக்கையைத் தனக்கிடமாகக் கொண்டு அதிற்புகுந்து பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்தனர். அதுகண்ட சிவ பெருமானானவர் ஒன்று மறியார் போன்று சுரைக்கூட்டினிடை சென்று இதற்குள்ளிருப்பவன் யாவனென விழித்தலும், பிரமன் வருங்காலமறிந்து செய்ததற்கேற்ப வள்ளுவர் என்றார். இத்தகைய பிரமனது அமிசம் இவரானது பற்றி இவருக்கும் வள்ளுவர் எனப் பெயரமைந்தது என வழங் கும் கர்ண பரம்பரைக்காதை. திருவள்ளுவர் பிரமனது அமிசமே என் பதற்குறிய பிரமாணங்கள், திருவள்ளுவ மாலையின்கண் பலவிடத்தும் காணப்படுகின்றன. என்றாலும் சில பிரமாணங்களைக் காட்டி வள்ளுவர் பிரமனது அமிசமே என்னும் கூற்றை நிலைநிறுத்த வெண்ணுகின்றேன்.

உக்கிரப் பெருவழதியார்,

 

''நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளாய் நான்ழகத்தோன்

தான் மறைந்து வள்ளுவனாய் தந்துரைத்த - நூன் முறை" என்றும்

 

காரிக்கண்ணனார்,

 
 மெய்யாய வேதப் பொருள் விளங்கப் - பொய்யாது
 தந்தா னுலகிற்கு தான் வள்ளுவனாகி
 அந்தா மரைமே லயன்.


என்றும் கூறுதலால் யான் பிரேரேபித்த கூற்று உறுதிப்படுகின்றது என்பது சொல்லாமலே யமையும்.

 

இஃதெல்லாம் ஓர் பால் நிற்புழி, வில்சன் துரை (Wilson) யெழுதிய ஓர் கதையில் வள்ளுவர் திரிபுராந்தக கவீசுவார் என்னும் பெய ருடையவரென்றும், சிவபெருமானே கடைச்சங்கப் புலவர்களது கர்வத்தை யடக்குவான் ஓர் தமிழ்ப் பாவலராகத் தோன்றி, மேற்கூறிய திரு நாமத்தோடு திருவவதாரம் செய்தனர் என்றும் கூறுகின்றனர். இதில் இவரைச் சிவனது அமிசமெனவே கூறி அக்கூற்றை வலியுறுத்துகின்ற னர். தாங்கள் தாங்கள் உய்த்துணர்ந்து இவ்வள்ளுவர் என்னும் பரியாயப் பதம் நம் புலவர் பெருமகனுக்கு வந்த விபரத்தை யறிந்துகொள்ளுங்கள்.

 தொ. மு. பாஸ்கரன்,

 ''சித்திர ஆலயம்" திருநெல்வேலி.

ஆனந்த போதினி – 1923 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment