Showing posts with label தற்காலப் பெண்கல்வி. Show all posts
Showing posts with label தற்காலப் பெண்கல்வி. Show all posts

Wednesday, September 2, 2020

 

தற்காலப் பெண்கல்வி

 

 மகிதலத்தில் மானிடதேகம் பெற்ற ஒவ்வொருவருக்கும் 'கல்வி' முக்கிய மென்பது யாவரும் அறிந்த உண்மை. 'கல்வியில்லாதவன் கண்ணில் லாதவ'' னென்றும் " விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் கற்றாரோடே னையவர்'' என்றுங் கல்லாதவர்களை இழித்துக் கூறியுள்ளார்கள். கல்வி அவசியமென்று கற்கப்புகின் அதில் பல இடையூறுகளும் கஷ்டங்களு மிருக்கின்றன.

 

இனி, பெண்கல்வியை நோக்குங்காலத்து பெண்களுக்குக் கல்வி அவசியமென முறையிடுகின்றனர் பலர். பெண்கள் கற்றல் கூடாதெனவும் சிலர் மொழிகின்றனர். பெண்கள் கற்கவேண்டியது அவசியம் என்பதே அறிவுடையா ரபிப்பிராயம். ஆனால் தற்காலப் பெண்கல்வியின் நிலையை நோக்குமிடத்து மடவார் கல்வி கற்றல் கெடுதலே என்று தான் தோன்றும். இதைச் சிறிது விளக்குவாம்.

 

நமது தமிழ்நாட்டில் வதியும் யாவரும் தங்கள் பெண்கள் கல்வி கற்றல் வேண்டுமென்னும் பேரவாக்கடலில் அழுந்திக் கிடக்கின்றனர். இவ்வெண்ணங்கொள்வது நம் தேசத்தின் நலத்திற்கே என்பதை மறுக்க யாரும் முன்வரார். அவ்வாறு பெண்களைப் படிக்கச் செய்ய வேண்டுமென்றவாக் கொள்ளும் பெற்றோர்கள் அப்பெண்களுக்குத் தாங்களே கல்வி போதிப்பதில்லை. பெண்பிள்ளை பாடசாலைகளுக்கே அனுப்புகின்றார்கள். இத்தென்னிந்தியாவிலுள்ள பெண்பாடசாலைகளில் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு பாடசாலைகள் கிரிஸ்தவப் பெண்பாடசாலைகளாகவே இருக்கின்றன. அவைகள் கிரிஸ்தவ மதப் பிரசாரக சங்கத்தாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டவை. இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்க வேண்டும்” என்ற எண்ணத்தையுடைய நமது கிரிஸ்தவ சகோதரர்கள் தங்களில் படித்த ஆடவர்களையும், பெண்களையுமே தங்கள் பாடசாலைகளில் உபாத்தியாயர்களாயும், உபாத்தியாயினிகளாயும் அமர்த்துகின்றார்கள். இப்பள்ளிக் கூடங்களை ஸ்தாபிப்பதின் காரணத்தை நமதிந்தியப் பெற்றோர்களறியாது அவர்கள் பாடசாலைகளுக்குத் தங்கள் பெண்களை அனுப்புகின்றார்கள். நமக்குப் பல்லாயிரமைல் தூரத்திலிருக்கும் அமரிக்க நாட்டுப் பாதிரிமார்களுக்கு இதே எண்ணமிருப்பின் இந்தியாவிலேயே வதியும் நமது கிறிஸ்தவ நண்பர்களுக்கு இவ்வெண்ணமில்லை யென்பதை மறுக்க முடியுமோ?

 

புரோகிதர்களைப் போல, பெண் குழந்தை பிறந்த மூன்றாவதாண்டில்
''வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது'' போன்று, அக்குழந்தையின் அன்னையிடஞ் சென்று, இன்பமாக வார்த்தையாடி, ஏழையாயிருந்தால் சம்பளமில்லாமல் கல்வி போதிப்பதாகவும் வாக்களித்துப் பிறகு ஓர் சம்பளக்காரியை வைத்து, பெண்பிள்ளைகளை வீடுதோறுஞ் சென்று, பாடசாலைக்கு அழைத்து வரும்படியாயும், அக்குழந்தைகள் நடக்கத் தயங்கினால் அவைகளைத் தூக்கிக்கொண்டும் இடையிலெடுத்துக்கொண்டும், பாடசாலையில், தங்கள் தாயையோ அல்லது தந்தையையோ நினைந்து அழுதால், ரொட்டி, மிட்டாய் முதலான தின்பண்டங்களைக் கொடுத்தும், பின்பு சாப்பாட்டு நேரத்தில் அவர்கள் இல்லத்தில் கொண்டுபோய்விட்டும், அன்னமுண்ட பிறகு திரும்ப அழைத்துக்கொண்டும் வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இவ்வளவு கர்ம சிரத்தை என்பதை ஆராய்ந்து இவர்கள் எண்ணத்தைக் கூறுதும்.
 

குழந்தைகளுக்கு ஐந்து அல்லது ஆறு வயதானவுடன் நாம் பள்ளியில் கொண்டு போய் விடுகின்றோம். சிறு குழந்தைகளுக்கு நெருப்பைத் தொட்டால் சுடும், பாம்பை அருகினால் தீண்டும் என்ற தன்னறிவு தனக்கே வருமுன்னர் மதத்தைப் பற்றி அவர்களுக்கு எவ்வாறு தெரியும்? நம் கிரிஸ்தவ நண்பர்கள் இக் குழந்தைகளுக்கு இளம் பிராயத்திலிருந்தே 'ஏசு” வைப் பற்றிய பலவிதமான விஷயங்களைப் போதித்து சிறு வயதில் நமது இந்து மதத்தின் கொள்கையையும், பற்றையும், சிறப்பையும் அறியாமுன்னர், பைபிலையே போதிக்கின்றனர். குழந்தைகள் அகமேகின உடன் ''அம்மா விளக்குவை வாசிக்க வேண்டும்'' என்று சொல்லுகின்றனர். தாய் இந்த மட்டில் குழந்தைக்குப் படிக்கவேண்டு மென்ற புத்திவந்ததே என்றகமகிழ்ந்து, பரவசமடைந்தவளாய், இனி கிறிஸ்தவப் பாடசாலைக்கே குழந்தைகளை அனுப்பவேண்டுமென்ற எண்ணத்தைத் திண்ணமாக உடையவளாகின்றாள்.'' மத்தேயு'', " மாற்கு'','' யோவான்'' என்ற பல கிரிஸ்தவப் புஸ்தகங்களை இக்கிரிஸ்தவ உபாத்தியாயினிகள் இதற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் சங்கத்தினின்று இலவசமாகப் பெற்று குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார்கள். புஸ்தகத்தின் அழகையும், அதில் தீட்டப்பெற்றிருக்கும் படங்களின் நேர்த்தியையும் கண்ணுறும் குழந்தைகள் அப்புத்தகங்களை ஆவலோடு வாங்கிக் கொண்டு வந்து படித்து வியாக்யானம் செய்கின்றனர். மோசத்தையறியாத தாயும் இதைக் கேட்கின்றாள்.

 

காலம் செல்லச் செல்ல குழந்தைகள் ஆனந்தக்களிப்புடன் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லுகின்றார்கள். பின்பு, பெரிய " பைபிள்'' (Bible) புஸ்தகமே பரிசாகக் கொடுக்கப்படுகின்றது. இது வேத புஸ்தகமென்றும் இதை மிகவும் ஜாக்கிரதையோடு காப்பாற்றவேண்டு மென்றுஞ் சொல்லி அக் குழந்தைகளிடம் கொடுக்கின்றார்கள். பின்பு ஆங்கிலத்தில் தேர்ச்சியடைய, ஆங்கில வேத புஸ்தகமும் கொடுக்கப்படுகின்றது. முறையே, ''சிற்றரிங்கர் குறிப்பிடம்'', ''நல்லமேய்ப்பன்'' என்ற பல புஸ்தகங்களை சரமாரியாய்ப் பொழிகின்றனர். குழந்தைகளும் ஆனந்தசாகரத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ளுகின்றனர். இப்புஸ்தகங்களைப் பெற்ற பொழுதே, இவர்களுக்கு சாவித்திரி, சீதை முதலிய இந்துமதப் பதிவிரதைகளின் சரிதைகள் எவ்வாறு தெரியும். தெருக்களில் கூட, கிறிஸ்தவர்களைப் பற்றிய கதைகளையும், இயேசுநாதர் ஜனித்ததையும் இயம்புகின்றனர். இக்கதைகளை மிகவும் உருக்கத்துடன் மொழிகின்றனர். பெரியவர்கள் என்ன செய்வதென்று தோன்றாமல் மௌனம் சாதிக்கின்றனர். இப்படியாயின், என் பெண் குழந்தைகளுக்கு கிரிஸ்தவ பாடசாலைகளிலும், மதத்திலும் பற்றுண்டாகாது? அவர்கள் ஏன் அப் பள்ளிகளுக்குச் செல்லாமலிருப்பர்?

 

பின்னும், இப்பாடசாலைகளில் எங்கு பார்த்தாலும் "ஏசுநாதரைத் தொழுங்கள், பரலோகத்தை யடையுங்கள்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். பல கிரிஸ்தவத் தொண்டர்களின் படங்களையும் தொங்கவிட்டிருக்கின்றனர். எந்த கிரிஸ்தவப் பெண்பாடசாலையிலாவது சரஸ்வதி தேவியின் படம் தொங்க விடப்பட்டிருக்கின்றதா? இல்லவே இல்லை. தினந்தோறும் காலை, மாலை இருவேளையிலும், இப்பள்ளிக்கூடங்களில் ஜபம் நடப்பதுண்டு. எல்லாப் பெண்களும், தலைகுனிந்து கண்மூடியவண்ணமா யிருப்பார்களந்தச் சமயம். ஜபம் முடிந்தவுடன் யாவரும் "ஆமென்'' என்று ஏகோபித்து சொல்லவேண்டும். இது என்னுடைய சொந்த அனுபவம்.

 

ஆண்டிற்கொருமுறை குழந்தைகளை ஊர்வலம் விட்டு சிலுவையுடன் வருகின்றனர். பல கிரிஸ்தவ கதாகாலக்ஷேபங்களும் நடைபெறுகின்றன. அஞ்ஞான்று இந்தப் பெண்பிள்ளைகள் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். மற்றும் இக்குழந்தைகளுக்கு "கர்த்தர் பின்'' என்று சிலுவையிட்ட ஊசியைக் கொடுத் தணியச் செய்கின்றனர். இதைப் பெற்ற அப் பெண்குழந்தைகளடையும் சந்தோஷத்தை இயம்பவும் முடியுமோ? பல கிறிஸ்தவப் பாடல்களும் இவர்களுக்கு போதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ நாடகங்களை நடத்தி, அதில் இப்பெண்களுக்கு கிறிஸ்தவ வேஷம் போட்டு ஞானஸ்நானம் முதலியவைகளை நடத்திக் காட்டுகின்றார்கள். நாடகமாடுவதற்கா நாம் பெண்களைப் பெற்றோம்? என்னே விபரீதம். இந்தியர்களைக் கிரிஸ்தவர்களாக்க இதனினும் வேறு வழிவேண்டுமோ? இவ்விஷயத்தில் நாம் நம் கிரிஸ்தவ சகோதரர்களைப் புகழவேண்டியது தான்! அடுத்தவருஷந்தில் பெண்களுக்கு நாகரீகம் வலுக்க ஆரம்பிக்கின்றது. நெற்றியில் திலகம் வைப்பதும், மஞ்சள் பூசிக்கொள்வதும், தலையை நேராக வாரிக் கொள்வதும் அநாகரீகமென எண்ணி பாழும் நெற்றியையும், பசுமையற்ற முகத்தையும் உடையவர்களாய், குரங்கிற்கு வேஷம் போட்டாற்போல் கோணவடுவை எடுத்து தலையை பின்னிக் கொள்ளுகின்றார்கள். ஏன் எனில் ''கர்த்தர் நமக்குக் கொடுத்த நல்ல நெற்றியைப் பொட்டிட்டு ஏன் அகோரப் படுத்த வேண்டும்'' என்ற பாடத்தைப் படித்தவர்களல்லவா?'' நீரில்லா நெற்றிபாழ்' என்பதை இவர்கள் எவ்வாறுணருவார்கள். இவ்வாறு செய்து விட்டு " ஓடுமீனோட ஒருமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு'' என்றவாறு சமயம் பார்த்து இவர்களைத் தங்கள் மதத்திற் கிழுத்துக் கொள்ளுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் ஓர் கிரிஸ்தவ சகோதரி ஓர் இந்தியப் பெண்ணை மோசஞ் செய்து கிரிஸ்தவமதத்தில் அப்பெண்ணின் பெற்றோரறியாவண்ணம் கொண்டு சென்று திருச்சியில் கிரிஸ்தவமதத்தில் சேர்க்கப் பிரயத்தனப்பட்டதையும், ஜானகியம்மையின் கதையையும் தங்களுக்கு நான் வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். "ஆனந்தனும்" அதைக் குறிப்பிட்டான். இந்தக் கெதிதான் மற்றப் பெண்களுக்கும் நேரிடும் என்பதற் கையமுண்டோ?

 

சகோதர சகோதரிகளே! இதையெல்லாம் நீங்கள் நன்றாகக் கவனிக்கவேண்டும். பத்தாவது வயதில் கிரிஸ்தவத்திற் சேரப்புகும் பெண்களைத் தடுப்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போலாகும். குழந்தைப் பருவத்திலேயே அவர்களை கிரிஸ்தவப் பள்ளிக்கூடங்களுக்குப் போகாது தடுத்தல் வேண்டும்.

 

இனி, ஆடவர்கள் கதியைக் கவனிக்கின் அவர்களுக்குப் பெண்களைவிட ஸ்திரமான புத்தி அதிகமாக உண்டாகையால் அவர்களை மயக்கப் பிரயத்தனப்படுவதில் சிலர் தான் அவர்கள் வலையில் சிக்குகின்றார்கள். மற்றும், பொருளைக் காட்டியோ, பெண்களைக் காட்டியோ, பெரிய உத்தியோகங்களைக் கொடுத்தோ அவர்கள் சித்தத்தை மயக்கிவிடுகின்றனர்.'' உண்மையாய் கிரிஸ்தவமதத்தை நம்பிச் சேர்ந்தவர் இலர்'' என்று விலக்ஷணானந்த சுவாமியவர்கள் கூறியது சத்தியமொழியாகும். கிரிஸ்தவமதத்தைச் சார்ந்தபின் துக்கக்கடலிலாழ்கின்றனர். இவர்கள் வருத்தப்படாதவர்களாயின் என் மறுபடியும் தன் சுயமதத்திற்கே வரப் பிரயத்தனப்படவேண்டும்? சுவாமிகளிடம் உத்திரவு கேட்கவேண்டும்? இதினின்றும் கிரிஸ்தவமதத்தில் மோசத்தினால் சேர்ந்தார்களென்ற உண்மை மலையுச்சித் தீபம் போன்று விளங்கவில்லையா? மனைவியை விட்டு பர்த்தாவும், பர்த்தாவை விட்டு மனைவியும், தாயைவிட்டுப் பிள்ளையும், புதல்வனைவிட்டுத் தாயும் சுற்றத்தார்கள் கூட்டமிட்டு கூக்குரலிட்டு அழும்படி விட்டு ஒருவன் கிரிஸ்தவனாவது எவ்வளவு துக்ககரமான சம்பவம்.

 

தன் மூக்கையிழந்த மூக்கரையன் பலரும் மூக்கை யிழக்க வேண்டித் தனக்குப் பரமசிவன் தரிசனம் கிடைப்பதாகப் பாசாங்கு செய்ய எல்லோரும் பரமசிவனை தரிசிப்பதற்காக தங்கள் நாசியைக் கொய்து கொண்டு மோசம் போன மாதிரி இந்து மதத்தை யிழந்த இந்தியக் கிரிஸ்தவர்கள் மற்ற பலரையும் கிரிஸ்தவமதத்திற்குக் கூப்பிடுகின்றனர். அந்தோ என்னமோசம். கிரிஸ்தவ சமயத்தில் அநேகமாய்ப் பாமரர்களே சேருகின்றார்கள்.

 

பிறரை மோசஞ்செய்து மதத்திற்கு ஆளைச் சேர்க்குமாறு இயேசு கிரிஸ்து மொழிந்தாரில்லை. நாம் கிரிஸ்தவ மதத்தையாவது, ஏசுகிருஸ்துவையாவது, இகழவில்லை என்பதைச் சகோதரர்கள் அறிவார்களாக. ஆனால், இவ்வாறு அநியாயம் செய்யும் நமது கிரிஸ்தவ சகோதரர்களைப் பற்றியே நம்மவர்க்கு எச்சரிக்கை செய்கிறேம்.

 

ஆகையால், முக்கியமாய் நாம் முதலாவதாக நம் பெண்களையும், இரண்டாவதாக ஆடவர்களையும் கிரிஸ்தவப் பள்ளிகளுக்குச் செல்லாதவாறு தடுத்தல் வேண்டும். பெண்களுக்கு கல்வி இல்லத்திலேயே போதிக்கப் படவேண்டும். மற்றும் இந்து பாடசாலையில் படிக்க வைத்து, இந்து மதத்தின் கொள்கைகளையும், உண்மையையும், தொன்மையையும், பாஷைகளின் சிறப்பையும் உணர்த்த வேண்டும். சாவித்திரி, சீதை, தமயந்தி, சந்திரமதி முதலியவர்களின் பதிவிரதாதி தன்மையையும், ஸ்ரீராமர், சத்தியவான்,
நளன், அரிச்சந்திரன் முதலானவர்களின், தந்தை வாக்கிய பரிபாலனம், உண்மை, சத்தியம் முதலான நிலைமைகளையும் போதிக்க வேண்டும். மற்றும், செல்வந்தர்களும், அறிவிற் சிறந்தவர்களும் இந்திய பாடசாலைகளை ஸ்தாபனஞ் செய்வதில் முயற்சி எடுத்துக் கொண்டு நமது மதம் வீணாகக் கெடுவதைத் தடுத்தல் வேண்டும். இந்தியா முழுவதையும் கிரிஸ்தவமதமாக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள பாதிரிகளின் எண்ணத்தைக்களைய வேண்டும். இதைக் குறித்து கிராமங்கள் தோரும் தொண்டர்களை அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். பாமர ஜனங்களை ஏமாற்றும் வழியைத் தடுத்தலுக்கு இதே முறை. நமதிந்தியப் பெண்களுக்கு இதுவரை உதித்துள்ள கிரிஸ்தவமதப்பற்றைப் போக்க வேண்டும். இவ்விஷயத்தில் மடாதிபதிகளும் அதிகக் கவலை எடுத்துக் கொள்ளக் கடமைபூண்டவராவர். இறைவனும் அருள்பாலிப்பானாக.


 V. S. வரதராஜ அய்யங்கார்,

''சரஸ்வதி நிலையம்'' உறையூர், திருச்சி.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - டிசம்பர் ௴