Sunday, September 6, 2020

முத்தும் முத்தமிழும்

 

      பழம்பதியாகிய பாண்டி நாட்டில், செம்மொழிகளில் ஒன்றாய செழுந்தமிழும், நவமணிகளில் ஒன்றாய நல் முத்தும், விளைந்து எங்கும் இன்னொளி வீசிய பெருமைப் புலவர் பாடும் புகழமைந்ததாகும். வட மொழிக்கும் தென்மொழிக்கும் வரம்பாயமைந்த வேங்கட மலையின் தென்பால் விளங்கிய திருநாடு முழுமையும், தமிழ் நாடென்று அழைக்கப்பெறினும், பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழின் மணம், பாண்டி நன்னாட்டிலேயே கமழ்வதாயிற்று. இதனாலேயே தமிழகத்தில் அடங்கிய சில ஊர்களின் சிறப்பை உரைக்கப் போந்த ஒளவையார்,


''நல் அம்பர் நல்ல குடியுடைத்து, சித்தன் வாழ்வு
 இல்லம் தொறும் மூன்று எரியுடைத்து - நல்லரவப்
 பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டிய நின்
 நாட்டுடைத்து நல்ல தமிழ்''


என்று பாண்டி நாட்டைப் புகழ்ந்து போந்தார். செவிக்கின்பம் பயக்கும் செழுந்தமிழ் மொழிகள், பூழியன் நாட்டில் வழங்கக் கண்ட இந்நல்லிசைப்புலமை மெல்லியலார், அத்தமிழின் நீர்மையை'' நல்ல தமிழ்' என்று நல முறப் புகழ்ந்த முறை அறிந்து இன்புறத் தக்கதாகும்.


''செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்
 தேன்வந்து பாயுது காதினிலே''


என்று செவிச்சுவை யுடைய ஓர் செல்வர் கூறியவாறு, செந்தமிழ் மொழியின் செம்மை சான்ற இன்பம் திருந்திய செவிகளில் தேன் போல் இனிப்பதாகும். செஞ்சொல் நயமறியும், செவிச் சுவை யுடையார்க்கே நல்ல தமிழின் நயமும் இனிமையும் தோன்றுவதாகும். இவ்வாறு தமிழின் இனிமைதலையாய இன்பம் பயத்தலாலேயே, தமிழ் மொழியாற் புகழப்படும் பெருமைதலையாய பெருமையாகக் கருதப்பட்டது. மதுரம் ஒழுகும் தமிழ்மொழி பயிலும் மதுரைமா நகரில் தவழ்ந்து வீசிய தென்றலின் இனிமையைப்,


''புலவர் நாவிற் பொருந்திய தென்றல்.''


என்று சிலப்பதிகாரம் புகழ்ந்துரைக்கின்றது. முத்தமிழ் வளர்த்த சங்கப்புலவரால், புகழப் பெற்ற பெருமையே அப்பூங்காற்றின் இணையற்ற பெருமை யென்று எடுத்துரைக்கும் இளங்கோ வடிகளது தமிழன்பை என்னென்று புகழ்வோம்? இன்னும் பூவார் சோலைகளின் வழியாய்ப் புகுந்துலாவிய, வளமார்ந்த வையை ஆற்றை,

 
 "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
 வையை என்ற பொய்யாக் குலக்கொடி''


என்று சிலப்பதிகாரக் கவிஞர் எழுதியமைத்த செம்மை எண்ணுந் தொறும் இன்பம் பயப்பதாகும். ஆகவே பைந்தமிழ் பயிலும் பாண்டி நாட்டின் ஆறும், காற்றும், தமிழொடு கலந்து, தமிழ் மணம் பெற்றுத் தலையாய இன்பம் விளைக்கக் காணலாம். ஆகவே மூவாத் தமிழின் முக்கவராய் முளைத் தெழுந்த முத்தமிழும் பழுதறப்பயிலும் நாடாய்ப் பாண்டி நாடு விளங்கிற்று.

 

முத்தமிழின் ஒளி நிறைந்த பாண்டி நாட்டிலேயே முத்தின் ஒளியும் முளைத் தெழுவதாயிற்று. முத்துப் பல விடங்களிற் பிறக்கும் என்று புலவர் புனைந்துரைப்பினும், பாண்டிய நாட்டின் முத்தே பழுதற்ற முத்தாகக் கருதப்பட்டது. இப்பெருமையை வியந்துரைக்கப் போந்த ஒளவையார்,


''வேழம் உடைத்து மலைநாடு, மேதக்கச்
சோழவளநாடு சோறுடைத்து - பூழியர் கோன்
தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து''


என்று புகழும் திறம் போற்றத்தக்கதாகும். சேர மன்னனது மலை நாடு வேழச் செல்வமுடைய தென்றும், சோழ மன்னனது நீர் நாடு நிலவளமுடைய தென்றும், தொண்டைமானது நன்னாடு சான்றோர் மலிந்த இடமென்றும், முந்நாட்டையும் முறையே புகழ்ந்த மூதறிவாட்டியாய ஒளவை, பாண்டியன் நாட்டை முத்து விளையும் நாடாக வியந்துரைத்த நயம் விழுமியதாகும். முத்து விளையும் முது நாட்டிற் பிறந்து வளர்ந்து, அருந் தமிழ்ப் புலமையொடு, ஆறுமுகன் அருளும் அமைந்து விளங்கிய குமர குருபர அடிகள், முத்துச் சுரக்கும் இடங்களை முறைப்படுத்திக் கூறும் அழகு, அறியத்தக்கதாகும்.


 "கோடும் குவடும் பொரு தரங்கக்
      குமரித் துறையிற், படு முத்தும்,
 கொற்கைத் துறையில் துறைவாணர்
      குளிக்கும் சலாபக் குவான் முத்தும்
 ஆடும் பெருந்தண் துறைப் பொருளை
      ஆற்றில் படுதெண் நிலா முத்தும்
 அந்தண் பொதியத் தடஞ்சாரல்
      அருவி சொரியும் குளிர் முத்தும்"


சாலச் சிறந்தனவாக. அடிகள் விரித்துரைக்கின்றார். குமரித் துறையிலும், கொள்கைத் துறையிலும், பொருளை ஆற்றினும் பொதியத் தருவியினும் அழகிய முத்து அகப்படும் என்று அடிகள் அருளிய வாக்கு, கிரீக்கரது பழையநூல்களால், வலியுறுத்தப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே முதிய நாகரிகம், உற்று விளங்கிய, யவனர் என்னும் கிரீக்கர்கள், தமிழ் நாட் டின் தனிவன் மறிந்து, தமிழ்மக்களோடு, வாணிகம் செய்த வரலாறு பழந்தமிழ் நூல்களாலும் பிறவாற்றானும் நன்கறியப் பட்டதாகும். கடல் வழியாய்க் கலங்களிற் போந்து, துறைமுகங்களில் அமர்ந்து தமிழ் மக்களோடு கலந்து பண்டமாற்றுச் செய்த யவனரை,

 

“கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்கு நீர் வரைப்பும்"

 

என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. இத்தகைய யவனர் கொற்கைத்துறையிலும் அமர்ந்து, அங்கு விளைந்த ஆணி முத்துக்களை வாங்கிச் சென்ற, வரலாறு அவரது பழைய நூல்களிற் குறிக்கப்படுகின்றது. அக்காலத்தில், கொற்கைநகரே, பாண்டியநாடின் தலை நகராய்க் கலந்தரு திருவிற் களித்திருந்தது. கொற்கையாளி என்னும் பெயரும் இதனாலேயே பாண்டிய மன்னனைக் குறிப்பதாயிற்று. பொதிய மலையிற் பிறக்கும் பொருளை யாறுகடலோடு கலக்கும் துறையில் செழித்து விளங்கிய கொற்கைத் துறையினின்றும் கருங்கடல் விலகிய காலத்து, காயல் என்னும் கடற்கரையூர் முத்துக் கொழிக்கும் துறையாய் அமைந்தது. காயலும் கடலாற் காயப்பட்ட பொழுது தூற்றுக்குடி துறைமுகமாய் விளங்கத் தலைப்பட்டது. இத்துறை முகத்தில் இன்றும் முத்து விளையக் காண்கின்றோம். ஆகவே முற்காலத்தில், கொற்கைத் துறையில் விளைந்த பெருமுத்தைக் கிரீக்கர்கள் விரும்பியது வியப்பாமோ?

 

பழந் தமிழ்ப்பதியில் விளைந்த பருமுத்து, கண்ணினைக் கவரும் வெண்ணிறம் வாய்ந்து விளங்கியமையால், அம் முத்தாலாய கோவையை முடியுடைமன்னர் அணிந்து மகிழ்வாராயினர். இன்னும் அழகிய மாதர்க்கு முத்தாரம் அழகுக் கழகு செய்யுமென்று கவிஞர் போற்றிப் புகழ்வாராயினர். திருமகளாய சீதையின் செம்மேனியில் இலங்கிய வெண் முத்தாரத்தின் பெரு மையை,


''கோணிலா வான்மீன்கள் இயைவன கோத்த என்கோ
வாணிலா வயங்கு செவ்வி, வளர்பிறை வகிர்ந்த தென்கோ
நாணிலா நகையினின்ற நளிர்நிலாத் தவழ்ந்த தென்கோ
பூணிலா மேனி சேர்ந்த முத்தையான் புகல்வ தென்னோ''


என்று கம்பர் வியந்துரைக்கும் முறை சால இனியதாகும். இன்னும் வெண்னம சான்ற அழகிய பொருள்களை யெல்லாம், கவிஞர் முத்துக்குவமை கூறிமகிழ்ந்தார்கள். முல்லை அரும்பையும் வென்ற வெள்ளிய முறுவலமைந்த மங்கையை " முத்தன்ன வெண் நகையாய் " என்று மணிவாசகப் பெருமான் வியந்துரைக்கும் முறை அறிந்து போற்றத் தக்கதாகும். இவ்வாறே சீதையின் முறுவலைச் சிறப்பிக்கப் போந்த செஞ்சொற் கவிஞராய கம்பரும்,

"முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்
      வெல்லும் வெண் நகையாய்"


என்று இராமன் வாயிலாக வியந்துரைக்கின்றார். ஆகவே முத்தமிழ் நாட்டில் விளைந்த முத்து, முத்தமிழிலும் புகுந்து தமிழன்னையின் மேனியில் இலங்குவதாயிற்று. கண்ணுக்கினிய நல்முத்தும், கருத்துக்கினிய நற்றமிழும் பாண்டிய நாட்டில் பண்புறத் திகழ்ந்தமையாலேயே இந்நாட்டை 'வையகத் துறக்கம்' என்று கவிகள் வாயார வாழ்த்துகின்றார்? புலவர் நாடு என்று புகழப்படும் வானவர் நாடு, முத்தமிழ் அமுதம் சுரக்கும் தமிழ்ப்புலவர் நாட்டுக்கு இணையாகாதென்று செந்தமிழ்ச் சுவை தேர்ந்த கம்பர் கூறுகின்றார்.


 "அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
 ஒத்திருக்கும் என்றால் அவ்வுரை ஒக்குமோ,
 எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
 முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ"


என்று கம்பரது அருங் கவியாகும். தெவிட்டாத் தேன் சொரியும் தமிழ்மொழி, தேவர் நாட்டு அமுதினும் இனியதென்றும், தென்கடல் முத்தின் திகழ் ஒளிச்செல்வம் தேவரது அளவிறந்த செல்வத்தினும் அருமை வாய்ந்ததென்றும், அழகிய மொழிகளால் இந்நாட்டின் பெருமையை எடுத்துரைத்த கம்பரது ஆர்வம் பொன் போற் போற்றத் தக்கதாகும். அமிழ்தினு மினியதமிழ் மொழியின் கண்ணும், பல்வளம் சுரக்கும் பைந்தமிழ் நாட்டின் கண்ணும், கல்வியிற் பெரிய கம்பர் தலையாய அன்பு செலுத்தினார் என்பதற்குவேறு சான்றும் வேண்டுமோ?

 

ஆனந்த போதினி – 1929 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment