Monday, September 7, 2020

 

வியாசமெழுதுதல்

 

 கசடறக் கற்ற புலவர்க்கு இன்றியமையாத கடனாவது, தாங்கற்ற பொருளைத் ' தம் மாணாக்கர்க்கும் ஏனையோர்க்கும் முறைபிறழாது அறிவுறுத்தலாம். அவ்வாறு அறிவுறுத்தலுக்கு இரண்டு வழிகள் உள. அவையாவன: - உரைத்தல், எழுதுதல் என்பனவாம்; உரைத்தலாவது, தாங்கற்ற நூற் பொருளை ஐயமின்றி மாணாக்கர் முதலியோர்க்கு உரைத்தலாம். அவ்வாறு உரைப்பதால் பிறரால் உரைக்கப்படாத நுண்ணிய கருத்துக்களுந் தம்மனத்து எழுதல் கூடும். எழுதுதலாவது, தாங்கற்ற நூற்பொருளை ஏட்டில் தீட்டுதலாம். அங்ஙனம் தீட்டுதலால் தமது கல்வியறிவு விரிவடைவ தன்றித் தஞ்சொற்கள் எக் காலத்தும் பொன்னே போற் போற்றப்படும். வாய்மொழி அவ்வக்காலத்து மட்டும் நின்று பின்னர் சிறுகச்சிறுக அழியுந் தன்மைத்து. ஏட்டில் தீட்டிய கருத்துக்கள் அவ்வாறு அழியா. எஞ்ஞான்றும் யாவரானும் நன்கு போற்றப்படும். புலவர்கள் தமது கருத்தை வியாசங்களாலும், பெருநூல்களாலும் விளக்கிக் காட்டுவர். பெருநூல்கள் பல பொருள்களைத் தம்மகத்தே கொண்டு விளங்கும். வியாசங்கள் ஒரே விஷயத்தைப் பற்றிய அருங்கருத்துக்களைத் தம்மகத்தே கொண்டு நிலவும்.

 

பெருநூல்கள் எழுதத் தொடங்குவதன் முன்னர் சிறுவியாசங்கள் எழுதிப் பழகுதல் சாலப்பயன் தருவதாகும். அல்லாக்கால், ஒரேவகைப்பட்ட கருத்துக்களைக் கோத்து முறைப்பட நூல் இயற்றல் இயலாதாய் முடியும். வியாசமெழுதுவதற்கும் மிகுந்த பழக்கம் வேண்டும். வியாசமெழுதப் பயிலுவோர் இடையறாது பல சான்றோருடைய கட்டுரைகளை வாசித்துவால் வேண்டும். சிறிது நாள் அவ்வாறு பயிலின், வியாசத்தின் வடிவு இன்னதெனப் புலப்படும். பின்னர், பிறவியாசங்களைப் பயிலாவிடினும் இனிய கட்டுரைகள் எழுதுதற் கேற்ற வன்மை உண்டாம். ஆயினும், பெரும்புலவருடைய கட்டுரைகளை இடையறாது போதுள்ள போதெல்லாம் வாசித்துப்பழகள் மிகவும் நன்றே. இடையறாது வியாசங்கள் எழுதிக்கொண்டிருப்பதும் வியாசமெழுதுவதில் தேர்ச்சியடைதற் குரியவழியாம். முதன் முதல் எழுதப்படும் வியாசம் சொற்சுவை பொருட்சுவை இன்றியும் வியாசவடிவம் தோன்றாது தொடர் பின்றியுந் தோன்றல் கூடும். எனினும், அதனால் மனச்சோர்வடையாது மேன்மேலும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வாறு நாடோறும் பழகிடின் சின்னான் முயற்சியினாலே பத்திரிகைகளிற் பிரசுரிக்கத் தகுந்த ஓர் வியாசம் எழுதும் வன்மை பெறல் கூடும். முன்னர் எழுதிய வியாசங்களையும் காப்பாற்றிக் கோடல் வேண்டும். இன்றேல், பின்னர் எழுதிய வியாசங்களையும் முன்னைய வியாசங்களையும் ஒப்பிட்டுப்பார்த்து வேற்றுமை காண்டல் இயலாது போம். முதல் முதல் வியாசங்கள் எழுதும் போழ்து கற்றாரை உடன் வைத்து எழுதுதல் சாலச்சிறந்தது. அதற்கியலாதாயின், எழுதப்பட்ட வியாசங்களைக் கற்றாரிடத்துக் காட்டல் வேண்டும். அவரால் திருத்தப்பட்ட முறைகளைத் தழுவி வியாசங்கள் எழுதிப்பயிலல் வேண்டும்.

 

வியாசங்களை விரைவில் எழுதி முடிக்கலாகாது. விரையுந்தோறும் அரும் பொருள்கள் உள்ளத்தே மறையும். வியாசம் உட்டுளை யுடையது போற் றோன்றும். சொற்செறிவு சிறிதும் தென்படாது. ஆதலால், "உரைக்கப் படும் பொருள் உள்ளத்தமைத்து'' என்றதற் கிணங்க, வியாசம் எழுதத் தொடங்கு முன்னர் இன்னின்ன விஷயங்களை எழுதுதல் வேண்டுமென முன்னரே மனத்தில் முறைப்படப் பதியவைத்துக் கொண்டு பின்னர் அவற்றை விரையாது எழுதுதல் வேண்டும். அங்ஙனம் எழுதும் போழ்தும் முற் பட எழுதும் கருத்துக்களும் சொற்களும் ஞாபகமாக விருத்தல் வேண்டும். இன்றேல், "கூறியது கூறல்' என்னும் குற்றத்திற் கிடனுண்டாம். "குன்றக் கூறல்'' முதலாக வெடுத்துக் கூறப்பட்ட பத்துவகைக் குற்றங்களையும் நூலிற் போல வியாசங்களிலும் நீக்கியே எழுதுதல் வேண்டும். அவ்விலக்கண நெறியறிந்து எழுதாக்கால் வியாசவடிவு தோன்றாதாகிக் கெடும்.

 

சிலர் வியாசமெழுதுதலின் கண் மிகவும் இடர்ப்படுகின்றனர். ஆழ்ந்த கருத்துக்கள் அவர்கட்குத் தோன்றுவதில்லை. சில கருத்துக்கள் தோன்றினும், அவற்றை அமைத்து எழுதுதற்குரிய சொற்களுந் தொடர்களுந் தோன்றுவதில்லை. அதனால், அவர்க்குச் சிறுவியாச மெழுதுதலின் கண்ணும் நீண்ட காலம் பிடிக்கிறது. சிலர், தாம் எழுதிய வியாசத்தைப் பலகாலும் புதுப்பிக்கின்றனர். இங்ஙனம் புதுப்பித்தல் நன்றெனினும் அவ்வாறு பழகுதல் நன்றன்று. ஓர் வியாசம் எழுதுவதன் முன்னர் தாம் எழுதக்கருதிய விஷயத்தைப் பற்றி நன்றாய் ஆராய்வதனால் ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும். பின்னர், அக்கருத்துக்களை முறைப்பட வைத்து வியாசமெழுதுதல் வேண்டும். பொய்யில் புலவருடைய கட்டுரைக் கருத்துக்களை மனதில் அழியாது வைத்துக் காப்பாற்றுவதனாலும் நுண்ணிய கருத்துக்களமைந்த வியாசங்கள் எழுதுதல் கூடும். சொற்சுவை பல் இலக்கிய நூல்களை வாசித்தலினால் உளதாம்.

 

இலக்கிய நூல்களையும், கட்டுரைகளையும் பயிலும் போழ்து அவற்றிற் காணப்படும் நுண்ணிய கருத்துக்களையும் இனிய சொற்களையும் பின்னர் எடுத்து ஆளுதல் வேண்டும் என்னுங் கருத்தோடு மனதில் நன்றாய்ப் பதியவைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பதியவைத்த கருத்துக்களும் சொற்களும் தொடர்களும் பின்னர் வியாசமெழுதும் போழ்து தாமே மனதிற்றோன்றும்.

 

இங்ஙனமன்றிச் சொற்களை எழுதி உருவேற்றலும் பிறர் கருத்தை அவ்வப் போது தேடி எடுத்துக் கொள்ளுதலும் நல்ல முறையல்ல. முன்னரே உளத்தமைத்த கருத்துக்களை வைத்து எழுதும் போழ்து அவற்றோடொத்த பிறகருத்துக்களும் தோன்றல் கூடும். அக்கருத்துக்களை ஒவ்வுமிடத்து அமைத்துக் கொள்ளுதல் நன்று. பின்னர்த் தோன்றுங் கருத்துக்கள் முன்னர் வைக்கத் தகுந்தனவாயின் அவற்றை அவ்விடத்துச் சேர்த்துக் கோடல் வேண்டும். இன்றியமையாத தல்லவாயின் நீக்கலும் பிழையன்று. கருத்துக்களை முறைப் படவைத்தலே முதன்மையாகக் கருதுதல் வேண்டும்.

 

வியாச மெழுதுதற்குரிய நடை கருத்துக்கொத்ததா யிருத்தல் வேண்டும். நுண்ணிய கருத்துக்களை எளிய நடையில் அமைப்பதனால் அக்கருத்துக்கள் வாசகர்கட்கு நன்குவிளங்கும். எளிய கருத்துக்களை இலக்கணச் சுவைபட அமைத்தலினால் வியாசம் சிறிது அழகுபெறும். ஆயினும், ஒரே வியாசத்தில் பலவகைப்பட்ட நடைகளை அமைத்தல் அதன் மேன்மையைக் குறைப்பதாகும். சில வியாசங்கள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் ஒருங்கே பயன்படாதனவா யிருக்கின்றன. அவற்றில் மாணாக்கர்களுக்குப் புலப்படாதனவும் ஆசிரியர்க்கு மிக வெளிவாய்த் தோன்றுவனவுமாய கருத்துக்களும் சொற்களும் அமைந்து கிடக்கின்றன. ஒரு வியாசம் எழுத முற்புகும் பொழுதே இஃது இன்னவாறு பிறர்க்கு உதவல் வேண்டும் என்பதை உட்கொண்டு அதற்கிசைந்த சொற்களையும் கருத்துக்களையும் அமைத்து எழுது தல் வேண்டும்.

 

வியாசநடை வாசகர்கட்கு உளச்சோர்வைப் பயப்பதா யிருத்தல் கூடாது. வாக்கியங்களைப் பழங்கதைகளைப் போல் மிகவும் நீட்டி எழுதுதல் கூடாது. ஒருவருள்ளத்தில் நிலைபெறத்தக்க தன்மையில் வாக்கியங்கள் இயற்றப்படல் வேண்டும். நெடிய வாக்கியங்களை அருகிப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். மிக்க குறுகிய வாக்கியங்களும் இடையிடையில் சேர்க்கப்படின் வாசகர்கட்கு மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணும். ஆங்காங்குச் சில கருத்துக்களைப் புலப்படுத்த வேண்டிய வினாக்களை எழுப்புதலும் மனச் சோர்வை முற்றிலும் நீக்கும். சிற்சில விடங்களில் அவற்றிற்கு விடையளிக்காமல் வாசகர்களே உணர்ந்து கொள்ளுமாறு வைத்தலும் வியாசத்தின்கண் வாசகர்க்கு விருப்பை உண்டு பண்ணுவதாகும். இவ்வாறு சுவைபட எழுதும் பொழுது பிறபாஷைச் சொற்கள் புகாமற் காத்துக்கொள்ளல் வேண்டும். வடமொழிச் சொற்கள் தொன்றுதொட்டே தமிழிற் கலக்கத் தொடங்கியமையின் அவற்றுள் மேலோரால் எடுத்தாளப்பட்ட சொற்களைத் தமிழிலக்கண முறைப்படி அமைத்து எழுதுதல் குற்றமாகாது. அஃதேபோல முன்னோரால் எடுத்தாளப்பட்ட 'அந்தோ'' பாண்டில்' முதலிய திசைச்சொற்களும் நீக்கற் குரியன வல்ல. ஆனால், 'தயார்', ' ஜன்னல்' முதலிய சொற்களை நீக்கத் தகுமிடத்தில், நீக்கல் நன்று. தயார் முதலிய சொற்கள் நமது தொன்னூல்களின் கண் காணப்படுவது இல்லை. தமிழ்ச்சொற்களினுள்ளும் 'அஞ்சு', 'போறேன்' முதலிய சிதைந்த சொற்கள் நீக்கத் தக்கனவே. இச்சொற்கள் செய்யுட்களிற் சிறுபான்மை வரும் 'அஞ்செழுத்து'' என் கெட்டுப் போறானிவன்' எனச் சான்று காண்க. இவற்றை வியாசங்களிற் புகுத்துவது மேன்மையான முறையன்று.

 

வியாசங்களில் இன்றியமையாத சிறுகதைாள் வரைதல் வாசகர்களுக்கு மேன் மேலும் இன்பத்தை விளைக்கும். ஆயினும் வேண்டாத இடங்களில் அவை வரையப் படின் வியாசத்தை முற்றிலும் இழிவுபடுத்தும். ஆனால், பழமொழிகளும், ஆன்றோர் வழங்கிய தொடர்களும் உவமைகளும் மேற்கோட் செய்யுட்களும் அன்ன பிறவும் கட்டுரையிற் பொலிந்து தோன்றல் அதை மேன்மைப்படுத்துவதோடு கட்டுரையாளரது பயிற்சி அறிவையும் விளக்குவதாம். பழமொழிகளாவன 'கையிலிருப்பது ஜபமாலை கக்கத்திலிருப்பது கன்னக்கோல்'' திக்கற்றவர்க்குத் தெய்வமேதுணை' என்பன போல்வன. ஆன்றோர் வழங்கிய தொடர்களாவன 'சில் வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினர்', 'நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும்' என்பன போல்வன. உவமைகளாவன 'பொன்னேபோல்', ' தன்றுழட்டிய குரீஇப் போல' என்பன போல்வன. மேற்கோட் செய்யுட்கள் பொறுமையைப் பற்றிக கூறுமிடத்து 'அகழ் வாரைத் தாங்கு நிலம்போல்' எனவும், அறிவைப்பற்றிக் கூறுமிடத்து 'அறி வுடையர் ரெல்லா முடையார்' எனவும் கூறப்படுவன போல்வன. அவை ஆன்றோர் செய்த செய்யுட்களாம். பிறவும் ஆயந்துணர்ந்து கொள்க.

 

வியாச மெழுதுவோர் சொற்களைப் பிரிக்க வேண்டுமிடத்துப் பிரித்துத் தெளிவுபட எழுதுதல் வேண்டும். 'ஈசன் திரிபுர மெரித்தான்' என்பதற்கு பாசன் திரிபுர மெரித்கான்' என எழுதுதல் கூடாது. அங்ஙனமெழுதின் ாச னதுதிரிபுரமெனப் பொருள்பட்டு ஐயத்திற் கிடனாம். செய்யுளிலாயின் இவ்வரையறை யின்று. 'நிலமிசை நீடுவாழ்வார்' எனப் பிரித்து எழுதுதலும் தகும். இவ்வாறு வருவதனை வகையுளி என்பர்.

 

மேற் கூறப்பட்ட முறைகளை நன்கு உளங்கொண்டு எழுதப்படும் வியாசமே மேலோரால் கொள்ளத் தகுந்ததாம். சிலர், இலக்கண இலக்கியப் பயிற்சியின்றித் தமக்குத் தெரிந்த இரண்டொரு சொற்களை இலக்கண வழுக்களுக்கு வழுவின்றி அமைத்துக் கட்டுரை எழுதுகின்றனர். பற்பல கட்டுரைகளைப் பயில்வதனால் சிற்சில இலக்கணக் குறிப்புகள் தென்படுமெனினும் அவற்றைக் கொண்டு வியாசமெழுதத் தொடங்குதல் சிறு திமிலைக் கொண்டு கடலைக் கடக்க முற்படுவது போலாம். இயல்பாய் வரத்தக்க சில இலக்கண வழுக்களை மட்டும் ஈண்டுக் குறிக்கின்றோம். அப்பொருட்கள் முற்றும் ஒழியாது என்பதில் பொருட்கள் என்பது பன்மையாயிருக்க 'ஒழியாது' என ஒருமை வந்து வழுவாயிற்று. ஒழியா வெனப் பன்மையாற் கூறலே பொருத்தமாம். அவர்கள் தானாகவே பேசிக் கொண்டார்கள் என்பதில் தாமாகவே என்பதே பொருத்தமாம். சொற்களை பிரித்து என்பதில் புணர்ச்சி வழுக்காண்க.

 

சொற்களைப் பிரித்து என வெழுதுதலே பொருத்தமாம். இராமனும் சீதையும் வந்தான் என்பதில் பால் வழுக் காண்க. வந்தார்கள் என்பதே முறையாம். முன்னும் பின்னும் பொருந்தாது மாறுபாடாயிருக்கிறது என்பதில் பொருந்தாது என்பது நீக்கற்குரியது. நான் வருவேனாயினும் போதுபோனமையால் அவனைக் காணவில்லை. இதனை, நான் வருவேனாயினும் போது போனமையால் வரவில்லை; அன்றியும், அவனைக் காணவில்லை என எழுதிக் காண்க. இத்கைய முரண்பட்ட சொற்றொடர்கள் சில வியாசங்களிற் காணப்படுகின்றன.

 

அவற்றை முற்றிலும் நீக்கி வழுவின்றி எழுதுவதே பொருத்தமாம். சிலர் கருத்திற்குத் தகுந்த தொடர்களை அமைக்க இயலாமற் பொருள் விளங்காத தொடர்களை அமைத்துவிட்டுத் தங்கருத்தை நிறுவியதாக நினைக்கின்றார்கள். அஃது பயிற்சிக் குறைவினால் உண்டாவதாகும். ஆராய்ந்து அமைதியாய் எழுது வோர்க்கு அத்தகைய வழுக்கள் உண்டாகா. சிலர் பத்தி பிரித்தெழுதுவதே இல்லை, இதனால் கருத்துக்கள் வாசகர்களுக்கு நன்கு விளங்குவதில்லை. ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு வகைப்பட்ட கருத்துக்களே இருத்தல் வேண்டும். பயனின்றிப் பத்திகளை விரித்தலாகாது. வியாசங்களை முடிக்கும்போதும் தொடக்கத்திற் கேற்ப முடித்தல் வேண்டும். முடித்த பின்னரும் வியாசம் முடிவுறாதது போலத் தோன்றுதல் கூடாது. தொடக்கமும் முடிவும் அத்துணைப் பொருத்தமாக விருத்தல் வேண்டும். இன்னும் இதிற் கூறாதவைகளை ஆராய்ந்தும் வல்லார்வாய்க் கேட்டு முணர்ந்து கொள்க. ஈண்டு விரிக்கிற் பெருகு மென்க.


 ராமசுப்பிரமணிய நாவலர்,

பத்திரிகாசிரியர், விசால ஹிருதயம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ -

செப்டம்பர், நவம்பர் ௴

 

No comments:

Post a Comment