Sunday, September 6, 2020

 

வள்ளுவரும் சிவப்பிரகாசரும்

(K. V. சிவசுப்பிரமணியன். B.A.,)

பொய்யில் புலவரின் பொருளுரையைப் பொன்னேபோல் போற்றித் தத்தம் நூலுள் ஆண்டுள்ன புலவர் பலர். அத் தகைய புலவர்களுள் முற்காலப் புலவரை விடுத்து பிற்காலப் புலவர்களுள் ஒருவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச வள்ளலார் திருக்குறளி னின்றும் எடுத்தாண்டுள்ள பொன் மொழிகளை ஒரு சிறிது ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாம். சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் பெயர்பெற்றுத் திகழ்ந்தோர் பலர். அவர்களுள் நமது ஆராய்ச்சிக்கெடுத்துக் கொள்ளப்பட்டவர் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளாவர். இவர் தான் முதன் முதல் சிவப்பிரகாசர் என்னும் பெயருடன் தமிழ் பாட்டில் திகழ்ந்தவர். இப் புலவர் பெருமான் தொண்டை நாட்டின் கண்ணே சிறந்து திகழும் கச்சியம் பதியென வழங்கும் காஞ்சிபுரத்திலே இற்றைக்குச் சுமார் இருநூற்றெண்பது ஆண்டுகட்குமுன் வீரசைவ சமயம் வீறுற்றோங்க அவதாரம் செய்தருளினார். அவர் தந்தையாருக்கு அம்மையப்பர் அருளால் அரும்புதல்வர் மூவரும் புதல்வி ஒருத்தரும் பிறந்தனர். யாவருள்ளும் சிவப்பிரகாசரே மூத்தவர். அவர் காஞ்சியம்பதியை நீத்து சிலகாலம் அருணகிரியில் வதிந்து அளப்பருந் தமிழ் இலக்கியங்களை அறுதியிட்டறிந்து அவற்றிலுள்ள நுணுக்கங்களை மனதிலே பதியவைத்துக்கொண்டு அவற்றின் சுவைகளை எண்ணிச் சுவைத்தார். இலக்கிய அறிவு மேன்மேலும் மிகப்பெற்ற இறையொளியார் இலக்கணமும் யாப்பியலும் அறிந்து செய்யுளியற்றும் பேராற்றல் படைத்தார். பின்னர் பலதலங்களையும் தரிசித்துவிட்டு செந்திலம்பதியை யடைந் தார். அங்கே அலையெறி
வாயிலில் கன்மனதையுங் கரைக்கும் ஆற்றல் அமைந்த அருங் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் அருட்கடலாகிய ஆறுமுக அமுதை ஆர்வம் மிக்க கண்களால் கண்டு அளப்பரும் இன்ப ஆழியில் திளைத்தார். இங்ஙனம் சைவ நெறி தழைத்தோங்கிய பலதலங்களையும் தரிசித்த பின்னர் துறைமங்கலம் என்னும் பதியையடைந்து அதனைத் தம்வாணாளின் இருக்கையாக் கொண்டனர். (இவ்வூர் திரிசிராப்பள்ளி ஜில்லா பெரம்பலூர் தாலுக்காவிலுள்ளது) இப்பெரியார் பொம்மபுரம் (புதுவைக்கு 8 மைல் தூரத்திலுள்ளது) சிவஞான பாலைய சுவாமிகளை ஞான குரவராகக் கொண்டு தீக்கை பெற்று சித்தாந்தப் பெருங்கடலை கரை கண்டுணர்ந்தார். இவரும் இவர் தம் உடன் தோன்றலா ரிருவரும் சேர்ந்து முப்பத்திரண்டு நூல்கள் இயற்றியுள்ளனர்
என்பது ஒரு தனிப் பாடலால் விளங்குகிறது. அவைகளுள் சில வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, வெங்கைக் கலம்பகம், இஷ்டலிங்க அபிஷேக மாலை, சதமணி மாலை, நன்னெறி முதலியன. மேற் கூறப்பட்ட நூல்களிலுள்ள செய்யுள்கள் கற்பனை நயம் சிறந்தன. சிவப்பிரகாச அடிகளின் சிற்பப் பாடமைந்த கவிகளை சிறிது நேரம் சிந்திப்பார்க்கு சிந்தையிலெழும் இன்பவூற்றின் மாண்புதா னென்னே! அதுபற்றியன்றோ அவர் புலவர் குழாத்திடையே ''கற்பனைக் கவிஞன்" "கற்பனைக் களஞ்சியம்'' என்னும் சிறப்புப் பெயர்கள் பெற்றுள்ளார். சவப்பிரகாசரது செய்யுள்களில் குறட் கருத்து மலிந்து கிடக்கும் ஒரு சிலவற்றை கீழே தர விரும்புகிறேன்.

சிதாகாசப் பெருவெளியாம் சிதம்பரத்தை யடைந்த சிவப்பிரகாசர் சிற்றம்பலத்தே நடன சிகாமணியை நினைந்துருகி ஆங்குள்ள சமய குரவர் நால்வரின் அருட்பெருக்கினை யுன்னி யுன்னி உள்ளங்குழைந்து நால்வர் நான் மணிமாலை எனும் நூலை அருளிச் செய்தார். அருள் நலஞ் சிறந்த அப் பாடல்கள் பொருள் நனி சிறந்தனவே. அந் நூல் 28ம் செய்யுள் வருமாறு: -

"பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்

பேரருள் பெற்றும் பெறாரி னழுங்கி

நெஞ்ச நெக்குருகி நிற்பை நீயே

பேயேன் பெறாது பெற்றார் போலக்

களி கூர்ந்துள்ளக் கவலை தீர்ந்தேனே

அன்னமாடு மகன்றுறைப் பொய்கை

வாதவூரனன்ப வாத லாலே

தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்

 

''நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலமில்' ரெனும்

செஞ் சொற்பொருளின் றேற்றறிந்தேனே”

 

இப் பாடலில் “நன்றறிவாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்தவல மிலர்"

என்ற குறளை எடுத்தமைத் திருத்தல் காண்க. அதே நூலில் 33ம் செய்யுள் வருமாறு: -

"அறத் தாறிது வென வேண்டா சிவிகை

பொறுத் தானோடூர்ந் தானிடை" யை – மறுத்தார்சம்

பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்

றுந்துஞ் சிலிகையினை யூர்ந்து.”

 

மேற் பாடலில் "அறன் வலியறுத்தல்'' என்னும் அதிகாரத்து ஏழாவது குறள் திரிபின்றி முற்றிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெங்கையம் பதியில் வீற்றிருந்த கங்கைவார் சடையானை "பழமலைநாதர்
பிச்சாடன நவமணி மாலை" என்ற நூலால் அடிகள் துதித்தார்.

"நங்குற்றம் தீர்க்கும் பழமலைநாதர்க்கு நற்பலி கொண்

டங்குற்று மென்றுகில் போக்கினள் வெற்றரை யாகியந்தோ

விங்குற்றனையென வெம் பெருமா னிவ்விரு நிலத்திற்

றங்குறறம பார்க்கு மவருளரோ வெனத் தாழ்ந்தனளே,”


என்பது அந் நூலின் முதற் செய்யுள் அதில் ''புறங் கூறாமை அதிகாரத்து இறுதிச் செய்யுளாகிய

“ஏதிலார் குற்றம் போற் றங்குற்றங் காண்கிற்பிற்

துண்டோ மன்னு முயிர்க்கு"

என்ற குறட்கருத்து பயின்றிருத்தல் காண்க.

"இனி சிவப்பிரகாசரின் சீரிய சித்தாந்த நூலாகிய பிரபுலிங்க லீலையில்
வள்ளுவர் வாய் மொழி எங்ஙனம் ஆளப்பட்டுள தெனக் கவனிப்போம். முக்கண் வள்ளலாரொடு சூளுற்ற உமாதேவி அங்கண்மா ஞாலத்தில் அல்லமனைக் காண்பான் மாயையை விடுவித்தனள். மாயை வந்துதித்த நாட்டின் காண்பினை விளக்கப்புகுந்த அடிகள்

“பொறைக் கயிற்றிற் புகழைபின் சொல்லெனும்

விறற்கயிற்றின் விருந்தைக் குரவர் சொன்

மறைக்கயிற்றின் மனத்தைத் திருவைநல்

லறக் கயிற்றி னசைப்பவ ரெங்குமே.”

என்றார்

இப் பாடலும் ''ஒறுத்தார்க்கு ஒரு நாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்" அறத்தினூஉங் காக்கமுமில்லை யததனை மறத்தலி னூஉங்கில்லை கேடு'' என்ற குறட்பாக்களும் ஒப்பு நோக்கற் குரியன். பின்னர்,

“இரப்பார் வரினேரடி ஞால மெளிய தன்றிக்

கரப்பார் கரக்கும் பொருளன்றென வீகை கற்றே

யுரைப் பாருரைக்கு முரையாவும் புகழில் வைத்தோன்

தரைப் பாலுவமை யிலையாகத் தருக்கிவாழ் வோன்.''

 

என்று மாயை பிறந்த வனவசை (Banavasi) மா நகரத்தின் வன்ளன்மையை வருணித்தார். அப் பாடல்,

"உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்

றீவார்மேல் நிற்கும் புகழ்"

 

என்ற பொய்யா மொழியின் பொழிப்பே யாகும். மாயை வளர்தற் சிறப்பைக் கட்டுரைக்கப் புகுந்த ஆசிரியர்,

“குழலும்யாழு மினியவெனக் கூறாவண்ணமென் கனிவாய்

மழலைமொழிந்து முடற்கின்ப மருவவோடி மேல்விழுந்தும்

விழையு மமிழ்தின் மிகவினிமை விளைய நுகருஞ் சுவையடிசில்

செழிய சிறுகை யாலளைர் துஞ் செய்தாள் மோக மீன்றோரை.''

என்றார். அவ்வொரு பாடலில்,

''குழலினிது யாழினி தென்பர் தம் மக்கண

மழலைச் சொற் கேளாதவர்''

 

“மக்கண் மெய் தீண்ட லடற்கினப் மற்றவர்

சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.”

 

''அமிழ்தினு மாற்ற வினிதே தம் மக்கள்

சிறுகை யள) விய கூழ்”

என்ற மூன்று குறள்களின் சொற்கள் அமைந்திருக்கின்றன. நிமல னடியார்
வேண்டும் வினைவெலாம் நிரப்பா நின்ற பெருந் தகையாம் அல்லமப் பிரபு
தேவர் மண்ணுலகில தோன்றி மாயையை வென்ற வரலாறு பின்னர்க்
கூறப்படுகின்றது. அப்பா அப் பகுதியில் 56-ம் பாடல்,

“காலையரும் பிப் பகலெல்லாம் போதாயிருந்த காமமலர்

மாலை மலாந்து பொறாம லொரு காயை நாம மணிவல்லி

மூலையிருந்து புறம் போந்து விரிவெண்ணிலா மென்முற்றத்திற்

பீலிமஞ்ஞை யென வீழ்ந்து மதநோய் மிகவாய் பிதற்றுமால்.''

 

என்பதாம். அது “பொழுது கண்டிரங்கல்" என்ற அதிகாரத்து ஏழாவது குறளின் சொற்களே யாகும். விமலைகதி 36-ம் செய்யுளாகிய

“ஆன்றமயல் செய்சையோகத் தன்றித்தவ யோகத்தினா

லீன் றபொழுதிற் றன் மகனை யிருந்து சான்றோ னெனக் கேட்டுத்

தோன்று முவகைக் கடற்படிந்தாள் சுஞ்ஞானித்தாய் பசும் பொன்மலை

போன்று வளர்ந்து மருங்குன் மிடி போக்க வறியா விள முலையாய்.''

என்றதில்,

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனை

சான்றோ னெனக்கேட்ட தாய்''

என்ற குறட் கருத்து பொலிவுற் றிலங்குகின்றது. அதனடியர் பால் அன்பு பூண் டொழுகிய அக்கமா தேவியின் சரிதத்தில்

"பூங்கொடி யனைய மாதாம்பிகை ..........

தாங்குறவ வடன் வயிற்றிடையதனாற் றக்கவர் தகவிலரென்ப

தாங்கவர் பயந்த புதல்வனாற் றெளிய வறியி னென் நறைதவர் பெரியோர்''

என்ற பாடல்

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்

ச்சத்தார் காணப்படும்"

என்ற குறளின் கருத்தேயாகும். அவ் வம்மையாரது துறவு கதியில்,

“உறையில் வாளோடு மாவழங்குறு வனத்தோடி

மறவனோர் பொருடருகென விரகலைமானும்

இறைவன் வாழ்குடி தன்னி லொன்றொரு பொருளிரத்த

லறவனாகிய பிதை யறிந்திலை யந்தோ' என்ற பாடலின் கருத்து

''வேலொடு நின்றானில் வென்றது போலும்

கோலொடு நின்ற னிரவு.'

என்ற குறளைத் தழுவியதே யாகும். சித்தராமையர் கதியில்

“ஓங் கிரு வினைகளு மொப்பக் கண்டவர்

தாங்க ளென்றனை யெருே தமரிற் பேணுவ

ராங்கவை யிரண்டையு மடைந்து போயுழ

னீங்க ளென்றனை யுணர் நெறியிலி ரென்றான்.'' என்ற செய்யுளில்

"யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்''

 

என்னும் திருவள்ளுவர் கூறிய வேதாந்தப் பொருள் அமைந்திருத்தல் காண்க. அதே கதியில்"

“அகழ்கின்றார் தமைத் தாங்குறு மகனில மென்ன

விகழ்கின்றார் தமைப் பொறுக்கு மித்தன்மை யெய்தலி

னிகழ்கின்றா ருண் மாதவ முடையோகி நீயென்று

            கழ்கின்றானென விகழ்ந்தனன் பின்னரும் புகல்வான்”

 

என்ற செய்யுளை "அகழ்வாரைத் தாங்கும் நிலம்'' என்ற குறளோடு ஒப்பிடுக, மற்றும்

"தன்னைக் கொல்லினுந் தான் பிறிதொன்றினைக் கோறல்

பன்னிற் பாவமென் றறைகுவர் கற்றுணர் பழையோர்" என்ற

42-ம் பாடல்,

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை."

 

என்ற குறளடியைத் தழுவியது. இங்ஙனம் சிவப்பிரகாச அடிகள் வள்ளுவர் வாய்மொழியை தம் நூலுள் ஆங்காங்கே எடுத் தாண்டிருக்கிறார்.

ஆனந்த போதினி – 1937 ௵ - ஏப்ரல் ௴

 



 

No comments:

Post a Comment