Monday, September 7, 2020

 

விக்கிரகாராதனை

 

கடல்சூழ்ந்த இக்காசினியின்கண், மனிதப்பிறவி எடுப்பதும், நல்வாழ்விற்கு உறுதுணையாக நிற்கும் கல்வி பயில்வதும், உண்மை நெறி உணர்ந்து அதன்வழி ஒழுகி உயர்வடைய முயல்வதும் அருளுருவாய ஆண்டவனை அறிந்து மகிழ்வதன் பொருட்டேயாம். "கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக் கண்டிடும் பொருட்டன்றோ காணே!" – எனவும், 'கற்றதனாலாய பயனென்கொல்? வாலறிவன் - நற்றாள் தொழா அரெனின்'' - எனவும் வரூஉம் ஆன்றோர் மொழிகளை ஊன்றி நோக்குக. இதன் பொருட்டே, விலங்கினத்தினின்றும் வேறுபடுத்தி, நல்லன இவை, தீயன இவை என்று பிரித்துணர்த்தும் ஆறாவதறிவாய பகுத்தறிவு, மனிதர்க்குமட்டில் சிறப்பாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகலின், அத்தகைய ஆறாவதறிவின் துணைகொண்டு, உண்மைநிலை விசாரித்துணர்ந்து அதன்வழிநின்று ஒழுகி மெய்யின்ப மெய்துவது மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவருடையவும் சிறந்த கடமையாகும்.

 

மற்றும், இத்தகைய உண்மைநிலை உணர்த்தும் கல்வியே மெய்க்கல்வியாம். அவ்வாறன்றி, பூதபௌதிக ஆராய்ச்சியிலாழ்ந்து எல்லாம் இயற்கையின் படைப்பு என்றும், இறைவன் என்றொருவன் தனியாக இல்லையென்றும், இறைவனுக்கு நாமரூபகுணங்களின் மையால், அவற்றை அவனுக்குக் கற்பித்து வழிபட்டு வருதல் பைத்தியக்காரத்தனமென்றும் பலவாறு பேசும்நாத்திகக் கொள்கையை விளைவிக்கும் நவீன நாகரிகக் கல்வீ, உண்மைக் கல்வியாகாது.'' நிற்கின்றதெல்லாம் நெடுமாலென் றோராதார் - - கற்கின்றதெல்லாம் கடை'' - என்பது ஆழ்வார் அருள்மொழி. ஆதலால், மனிதப் பிறவியாற் பெறற்பாலதாய சீரிய பேறும், கல்வியினா லடையத்தக்க சிறந்த பயனும் கடவுளை வழிபடுவதேயாம் என்பது செவ்வி திற் பெறப்படும்.

 

"அகண்டம் சச்சிதானந்தம் அவாங் மானச கோசரம்" - என்றபடி, ''அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமா'யும், ''பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணாநந்த'' மாயுமுள்ள பகவானை, எங்ஙனம் உணர்ந்து, எவ்வாறு பாவித்து, எவ்வகையில் வழிபடுவது என்ற வினா எழுதல் இயல்பே. சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினராய நமது குறுகிய அறிவைக்கொண்டு, ஊரும் பேரும் உருவமும் குணமும் தோற்றமும் முடிவுமில்லாததொரு தனிப்பெருஞ் சோதியை, முதன் முதலாக தியானஞ் செய்யத் தொடங்கும்போதே, அவ்வாறே பாவித்து சிந்தையிலிருத்தி வழிபடுவது எவ்வகையிலும், சாத்தியமாகாததொன்றே என்பது தெளிவு. எல்லையில்லா தஅவ்வருட்பெரும் ஒளிப்பிழம்பை, கேவலம் சாதாரண மனத்தால் நிர்க்குணோபாசனையாக தியானிப்பது முதன் முதலிலேயே சாத்யமானதன்று; அத்துணை எளியதொரு பொருளன்று ஆண்டவன். ஆகலான், ''அண்டபகிரண்டமுமடங்கவொரு நிறைவாகி ஆனந்தமான" பரம்பொருளை, அவ்வாறே நிர்க்குண பிரமமாகப் பாவித்து, தியானித்தல் எளிதில் கை கூடுவதன்று என்பதை விரித்துரைக்க வேண்டுவதில்லை. அவ்வாறு வாசாஞானம் பேசித்திரியும் சாதாரண அறிவாளர்களுடைய கூற்று, அவர் தம் பேதைமையைச் செவ்விதில் வெளிப்படுத்திவிடும். எனினும், அத்தகைய நிர்க்குண பிரம தியானமும் ஒருகாலத்தில் கைகூடுவதுண்டு. அஃது, மிக மிக அரிதாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிகளில், மூன்றாவதாய யோகநிலையில், அத்தகைய நிர்க்குண பிரமதியானம், சிறிது சிறிதாக – படிப்படியாக வளர்ச்சி பெற்று எல்லா இடையூறுகளையும் கடந்து நிற்கும் மெய்ஞ்ஞானமாய கடைசி நிலையில். எவ்விதமான செயர்கை முயற்சியுமின்றித் தானே கைகூடும். அத்தகைய உண்மை யோகப் பயிற்சியாளர்கட்கன்றி, ஏனைய சாதாரண மனிதர்கட்கு நிர்க்குண பிரமதியானம் வாய் வேதாந்தமாகவே முடியு மென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

ஆதலால், உண்மையில் 'ஆண்டவனை அடையவேண்டும்' எனும் உறுதி
 கொண்டு இடையறாத முயற்சி செய்பவர்கள், தத்தமது அறிவு வளர்ச்சிக்கு
 ஏற்றவாறு, எங்கும் பரந்து நிற்கும் இறைவனுக்குத் தத்தமது மனோபீஷ்டங்கட்கு இயைந்தவாறு பலதிறப்பட்ட இலக்கணங்களைக் கற்பித்து, திருவுருவங்களை எற்படுத்தி, அவற்றை அவ்வவர் மனமொழி மெய்களால் தளராதமெய்யன்போடு வழிபட்டு வருவது சாலச் சிறந்ததாம். அத்தகைய பக்தர்களது பாவனைகட் கிணங்க, லீலா வினோதனாய சர்வேச்வரன் பலவகைப்பட்ட வடிவங்களாக அவரவர்கட்குக காட்சி அளித்தருள்வான்.

 


“யோயோயாம்யாம் தனும்பக்த:, ச்ரயார்ச்சிது மிச்சதி!

தஸ்யத ஸ்யா சலாம்ச்ரததாம், தாமேவ விததாம்யஹம்”!!

 

“ஸதயா ச்ரத்தயா யுக்த:, தஸ்யாராதன மீஹதே!

லபதேச தத: காமான், மயைவ விஹிதான் ஹிதான்!! (அ - 7; சு - 21, 22)

 

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எவ்வெவ்வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகின்றானோ, அவனவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை, நான் மேற்கொள்ளுகின்றேன்; அவன், அந்த நம்பிக்கையுடன் கலந்து, அவ்வடிவத்தை ஆராதிக்க வேண்டுகின்றான். அதினின்றும், தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும், அவற்றை வகுத்துக் கொடுப்பான் யானே" - என்று, கண்ணபிரான் உலகு போற்றும் உயர் பெரு நூலாம் பகவத்கீதையில் அருளிச்செய்தமை காண்க. ஆகவே, விக்கிரகாரா தனை தொன்மையிற் சிறந்த இவ்விந்திய நாட்டில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட தன்று என்பதும், மக்களது அறிவு வளரத்தொடங்கிய நாள் தொட்டு இருந்து வருவதென்பதும் தெள்ளிதிற் புலனாகக் கிடக்கின்றன.

 

மற்றும், நமது முன்னோர்கள் சிற்றரிலினர்களாய நாம் உணர்ந்து உய்தற் பொருட்டு, உபநிடத மறை பொருள்களை விக்கிரகங்களில் அமைத்து உதவியுள்ளனர். அவ்வர்த்தங்களை கிரகித்துக் கொண்டு, பக்தியிற் சிறந்து, நம்மனோர் மனம், தூய்மையாகுமாறு அவற்றைப் பூசித்து முன்னேற்றமடைய வேண்டு மென்பதே, நமது முன்னோர்கள் கருத்தாம். கடல் சூழ்ந்த இப்பூவுலகைப் படைத்துக் காத்து அழித்து முத்தொழில் நடாத்தும் முழுமுதற் பொருளாய முதல்வனது குணாதிசயங்களை, நமது மூதாதைகள் வகுத்துக் கொடுத்துச் சென்றிருக்கும் விக்கிரகங்களினின்றும், நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, விஷ்ணுவின் விக்கிரகம், எங்கும் பரந்து, கருணை மழை பொழியும் இயல்பைக் குறிக்க, மேலே தவழும் மேகத்தின் நிறத்தைப் போன்ற நீலநிறமும், உயிர்களைப் படைக்கும், தன்மைக்கு அறிகுறியாக ஒருகையில் சங்கும், உலகை நடத்தும் அதிகாரத்தின் குறியாக மற்றொரு திருக்கையில் கதையும், அழிக்கும் சக்திக்கு அறிகுறியாக வேறொருகரத்தில் சக்கரமும், அருள் பொழிந்து மெய்யின்பம் உருவித்தலைக் குறிக்கப் பிறிதொரு திருக்கரத்தில் தாமரைமலரும் கொண்டு விளங்குவதும், சபாபதியின் தில்லைத் திருநடனத்தின் தத்துவங்களும், ஆழ்ந்து கூர்ந்து ஆராய்ந்து உணரற்பாலன. நிற்க.

 

மண், தீ, நீர், காற்று, விசும்பு எனும் ஐவகைய பூதங்களாயிருப்பவனும், ஆண்டவனே என்பதை உணர்த்துவதற்காகவன்றோ, முறையே காஞ்சீபுரம், திருவருணை, திருவானைக்கா, திருக்காளத்தி, திருச்சிற்றம்பலம் முதலிய ஐந்து தலங்களிலும், அவ்வப்பூத அம்சமாக அவ்வத்தலத்து இறையவனை அமைத்துச் சென்றனர் நம் பெரியோர்! மற்றும், மக்கள் உடல், தோல், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, மூளை, கருநீர் எனும் ஏழு தாதுக்களாலானதையும், அவ்வேழுங் கடந்தபின் அருள் நாட்டம் பெறுவதையுங் குறிக்கவன்றோ, சில ஆலயங்கள் ஏழுசுற்று மதில்கள் உடை யனவாக அமைக்கப்பட்டிருக்கின்றன! சிவாலயங்களிலே, உள் முற்றத்தில் துவசத்தம்பமும், அதனையடுத்து பலிபீடமும், அதனருகில் நந்தியும், அதனைக் கடந்து உட்சென்றவிடத்துப் பிறிதொரு நந்தியும், அதனையுந் தாண்டிச் செல்லுமிடத்து மற்றொரு நந்தியும், அதன் முன் சிவலிங்கமும் ஆக ஆறு நிலைகளிருப்பதைக் கவனிக்கலாம். அவைதாம், (மூலாதாரம், சுவாதிட்டாநம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்னை - என வருஉம் (தத்துவப் பெயர்களையுடைய) முன்னிடம், குறியிடம், கொப்பூழ், மார்பு, கழுத்து, புருவ மத்தி) எனவரும் உடல் அமைப்புக்களைக் குறிக்க அமைக்கப்பட்டனவாம்.

 

இவற்றால், ஆறு ஆதாரங்கள், செவ்விதில் உணரக் கிடக்கின்றன. உடலின் நடுவேயுள்ள முதுகின் முள்ளந் தண்டெலும்பைக் குறிக்கத் துவசத்தம்பமும், அவ்வெலும்பின் மேல் நுனியிடத்துத் தலை முன்னோக்கி யிருப்பதைக் குறிக்க, பல சட்டங்களோடு முன்னோக்கிப் படாந்துள்ள அத்தம்பத்தின் உயரிய உச்சியும், மூளையிடத்தே எழும் நாத ஒலியைக் குறிக்க, அவ்வுச்சியிலுள்ள தகடுகளின் கீழ் காற்றிலசைந்து ஒலிக்கும் மணிகளும் அமைக்கப்பட்டிருத்தல் ஆராயத்தக்கது. இவ்வகையில், 'உடம்பினுள்ளே கோயில் கொண்ட உத்தமனை 'தீர்க்குணோபாசனை முறைப்படி வழிபட வியலாதவர்கட்காக, அவ்வுடலமைப்பையே, புற ஆலய வடிவாக அமைத்து உதவிய நமது முன்னோர்களின் பேரறிவையும், பெருங் கருணையையும் என்னென்று போற்றுவது!

 

போலி வேதாந்திகள் சிலர், ஆண்டவன் அகத்தினுள் அமர்ந்திருப்பதை அறியாது, வெளியில் அவனைத் தரிசிக்க ஆலயங்களை நாடி ஓடியலைவது பேதைமை யாகும் என்று எள்ளி நகையாடுவர். அம்மட்டோ! திருக்கோயில்களிலுள்ள தெய்வத் திருவுருவங்கள் கல்லாலும் செம்பாலும் ஆக்கப்பட்டவை யென்றும், அவற்சை வழிபடுதல் பைத்தியக்காரச் செயலென்றும், அவற்றில் ஆண்டவன் இல்லை யென்றும் வேதாந்தம் பேசி, பாமர ஜனங்களின் பக்தியையும் கெடுக்க முயல்வர். அவர் தங் கூற்றுக்கு ஆதாரமாகப் பட்டினத் தடிகள் பாடலான,


 “சொல்லிலும், சொல்லின் முடிவிலும், வேதச் சுருதியிலும்
 அல்லிலும், மாசற்ற வாகாயந் தன்னிலும், ஆயந்து விட்டோர்
 இல்லிலும், அன்பரிடத்திலு மீசனிருக்குமிடம்
 கல்லிலும் செம்பிலுமோ விருப்பான் எங்கள் கண்ணுதலே.''


எனும் செய்யுளையும், அதைப்போன்ற, மற்றுஞ் சிற்சில பாக்களையும் பகர்வர். இச்செய்யுளும், இத்தகைய பிறவும், எங்கும் நிறைந்துள்ள இறைவனை கல்லாகவும், செம்பாகவும் மட்டும் கருதுவோர்க்கும், அவரவர் சமயக் கடவுளரின் விக்கிரகங்களிலன்றிப் பிறவிக் கிரகங்களில் இறைவன் உறைவதில்லை எனப்பூசலிடுவோர்க்கும் அறிவுச்சுடர் கொளுத்த எழுந்தனவேயன்றி, வேறன்று. அடிகள், திருவுள்ளக் கருத்து யாதெனில், "கல்லாகவும், செம்பாகவும்- அவற்றைக் கொள்வோர்க்குக் கடவுளில்லை; கடவுளாகவே, அவற்றைக் கொள்வோர்க்கு, அவை கல், செம்பாகாவாம்” - என்பதே. மற்றும், கடவுளெண்ணம் உடையார்க்கு, அவை கல்லாகவாதல், செம்பாகவாதல் காட்சியளியா. அவ்வுருவங்களையே, லட்சியப் பொருள்களாகக் கொண்டு வழிபடாது, மந்திர மகிமையினாலும், பெரியோர் பலர் புரிந்த பூசனைகளாலும் அவற்றில் சாந்நித்யமாயமைந்துள்ள மூர்த்தியை வழிபடுவதே ஞானத்திற் கேதுவாம். மற்றும், மேற்காட்டிய திருமொழியை அருளிய பட்டினத்தடிகளே, திருவிடைமருதூர், திருக்கச்சி, தில்லை முதலிய சிவதலங்கள் தோறும் சென்று, ஆலய வழிபாட்டைப் போற்றிப் பலபடப் பாடியிருத்தலும் கவனிக்கற்பாலது. இவ்விடத்தில், கீழ்வரும் திருமூலர் பெருமொழி உய்த்து உணரற்பாலது: -


 "மரத்தை மறைத்தது மாமத யானை,
 மரத்தின் மறைந்தது மாமத யானை;
 பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்,
 பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே."

 

உலகெங்கணும் சென்று, வேதாந்த கர்ச்சனை செய்து, பல நாட்டு அறிஞர்களையும், திருத்திப் பணிகொண்ட விவேகானந்தசுவாமிகள், விக்கிரகாராதனையைப் பற்றி வியந்து கூறும் திருமொழிகள் வருமாறு: - "விக்கிரகாராகனை தப்பு என்று உரைப்பது சாதாரணமாய்ப் போய்விட்டது; ஒவ்வொருவரும், அதை இப்பொழுது கேள்வி கேட்காமலே விழுங்கி விடுகிறார்கள். நான், ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்; அந்தக் குற்றத்துக்கு அபராதமாக விக்கிரகங்களின் மூலமாகவே எல்லாவற்றையும் அனுபவத்திலறிந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருடைய பாதங்களினடியில் உட்கார்ந்து எனது பாடத்தை நான் கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. அத்தகைய மஹாத்மாக்கள் விக்கிரகாராதனையினால் உற்பத்தி செய்யப்படுவார்களானால், உங்களுக்கு என்ன வேண்டும்? - சீர் திருத்தக்காரனுடைய கோட்பாடா? அல்லது, எத்தனை விக்கிரகங்கள் வேண்டுமோ, அத்தனையுமா? எனக்கு ஒரு மறுமொழி வேண்டும். விக்கிரகாராதனையின் மூலமாக, ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உற்பத்தி செய்ய முடியுமானால் - ஓராயிரம் விக்கிரகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள் உங்களை அநுக்ரஹிப்பாராக; உங்களால் முடிந்த எந்தவிதத்திலும் அத்தகைய சிறந்த லட்சணங்களை உற்பத்தி செய்யுங்கள். ''

மேலும், விக்கிரகாராதனையின் விசேஷபலன் என்னவெனின், எத்தகைய சாதார அன்புடையவர்களிடத்திலும், நாளடைவில் படிப்படியாக பக்தியை வளர்த்து, இறைவன்பால் கபடமற்ற உண்மையன்பை மனமொழி மெய்களால் செலுத்த அன்னாரைத் தூண்டுதலேயாம். விக்கிரகாராதனை செய்வோர், சர்வ சாதாரணமான பாமரராயிருப்பினும் – இலௌகிக வாழ்வில் பெரும் பற்றுடையோராக விருப்பினும் - வெளிப்பகட்டுக்கு, டம்பமாக நடந்து கொள்வோராக விருப்பினும் - பிற எத்தகைய கீழ்த்தரமானவர்களாயிருப்பினும், விக்கிரகத்தின் காந்த சக்தியினால் - பரிசுத்தத் தன்மையினால் - தெய்வ சாந்நித்யத்தினால் - அன்னோரது கயமைக் குணங்கள் நாளடைவில் படிப்படியாக, அன்னோரையும் அறியாது கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரனே போல சிறிது சிறிதாகத் தேய்ந்து தேய்ந்து, இறுதியாக முற்றும் மாய்ந்பதாழிந்து, ஆண்டவனது திரு அருளைப் பெறுகின்றார்கள். விக்கிரகத்தின் முன்னே, அதைப்பற்றிய ஏகாக்ரசித்தத் தோடு கூடிய தியானத்திலேயே, ஊன்றிப் பழகப்பழக உற்சாகமும், மன ஒருமைப்பாடும், கடைசியில் உள்ளத்திலேயே ஆண்டவன் உறைவதை உணர்ந்து உய்யம் பேறும் தாமே விளைகின்றன. அவ்விக்கிரகத்தின் முன், மெய்யடியார்கள் அருளிய அன்பு ததும்பும் அருட் பாடல்களைப் பாடியாடி, அழுது தொழுது அகங்கசிந்து அன்பு வயப்பட்டு நிற்பதால் விளையும் இன்பத்தை, எழுதவுங் கூடுமோ! விரிக்கிற் பெருகும்.

 

இறுதியாக, செந்தமிழ் நாட்டுச் செல்வர்களே! வாசாஞானம் பேசித்திரியும் வேதாந்திகளே!! ஆண்டவன்பால் அன்பு பூண்ட இல்லறத்தினரே!!! ஆலயங்கள் மலிந்து விளங்கும், அருமைத் தமிழ்நாட்டில் தோன்றும் தவம்படைத்தோரே! இனியேனும், விக்கிரகங்களை எள்ளி நகையாடாது, அவற்றின் பெருமைகளை உணர்ந்து, உங்கள் முன்னோர்கள் 'ஆன்ம ஞானம் பெறுவதற்குச் சிறந்த சாதன'மாகக் காட்டிக் கொடுத்துச் சென்றுள்ள விக்கிரகங்களை வழிபட்டும், வடமொழி வேதங்களினும் மிக்க பெருமையுடைய தமிழ்மறைகளாற் போற்றப்பட்ட ஆண்டவன் திருக்கோயில் கட்குச் சென்று இறைவனைப் போற்றியும், இம்மையிலும் மறுமையிலும் நன்மையடைவீர்களாக! திருமகள், உங்கட்கு அருள் தருவாளாக!


 ஆ. வ. பதுமநாப பிள்ளை,

"திருமகள் நிலையம்”; ஆரியூர்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment