Monday, September 7, 2020

 

வீரமா முனிவர்

(ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ. பி. எல்.)

 

தமிழ் அகராதியின் தந்தையாய் விளங்கும் வீரமாமுனிவர் 'தேம்பாவணி' யென்னும் நறுந்தமிழ் மாலை புனைந்து தமிழ் மொழிக்குஅழகு செய்தார். சூதேய நாட்டிற் பிறந்து செம்மையுற்ற சூசையப்பர் என்னும் வளன் பெருமையை விரித்துரைக்கும் அவ்வளமார்ந்த காவியத்தில், தெய்வத் திருக்குறளின் தெள்ளிய மணமும், சிந்தாமணியின் செவ்விய சற்பனை நலமும், கலைமலிந்த கம்பர் கவி நயமும், ஆங்காங்கு அமைந்து அழகுசெய்யக் காணலாம். தமிழ் நூன் முறைக்கிணங்க, தேம்பாவணியில், தெய்வவணக்கம் கூறப்போந்த முனிவர்,


''சீரிய உலகமூன்றும் செய்தளித் தழிப்பவல்லாய்
நேரிய எதிர் ஒப்பின்றி நீத்தவோர் கடவுள் தூய
வேரிய கமலபாதம் வினையறப் பணிந்து போற்றி
ஆரிய வளன்றன் காதை அறமுதல் விளங்கச் சொல்வாம்.''


என்றருளிய அருங் கவியில், கம்பர் கவிமணம் கமழக் காணலாம். முழுமுதற்பொருளாய இறைவனைப் பெயராற் குறியாது, முத்தொழில் புரியும் முறைமையாற் புகழும் முனிவர் மொழிகள் அறிந்து மகிழ்தற்குரியனவாம். மும்மை சால் உலகமெல்லாம், படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் கடவளை "சீரிய உலகம் மூன்றும் செய்து, அளித்து, அழிப்பவல்லாய்" என்றுசெம்மை சான்ற மொழிகளாற் சிறப்பித்தார். தனக் குவமையில்லாத் தனிப்பெருந் தலைவனை, "நேரிய எதிர்ப்பில்லான்" என்று நெஞ்சாரப் புகழ்ந்தார். இருள்சேர் இருவினையும் கடந்து, அப்பாலுக் கப்பாலாயமைந்த ஐயனை“நீத்தவோர் கடவுள்'' என்று நிகழ்த்தினார். உள்ளுவார் உள்ளத்தில் ஆனந்தத் தேன் சொரியும் வள்ளலின் திருவடியை 'வேரிய கமலபாதம்'வியந்துரைத்தார். இவ்வாறு வீரமாமுனிவர் தேம்பாவணியி லமைத்த தெய்வ வணக்கம்,


“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்ககலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.''

என்னும் கம்பர் கவியை நினைவூட்டுவதாகும். இன்னும் சூசை யென்னும்வளன் கதையை வளமார்ந்த பாலாழி யென்றும், அக்கதையை ஆர்வத்தனாய்ப் பருகலுற்ற தம்மை ஆசையுற்ற பூசை யென்றும், நுணங்கிய கேள்வியராயமுனிவர், வணங்கிய வாயின ராய்க் கூறும் மொழிகள், கம்பர் அவை யடக்கக்கவியினைத் தழுவி யெழுந்தனவே என்பதில் ஐயமில்லை. எண்ணரிய நலம்வாய்ந்த இராம காதை எழுதப்போந்த கம்பர்,


"ஓசைபெற்றுயர் பாற்கடலுற்றொரு
பூசைமுற்றவும் நக்குபு புக்கென
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசில் கொற்றத்திராமன் கதையரோ.''


என்றருளிய அவையடக்கக் கவியினையும்,

 

“சூசையுற்றன வரங்கள் தூய்கடல் கடக்கல் இல்லா
ஓசையுற்றொழு கமிர்தம் உடைகடலென்ன நண்ணி
பூசையுற்றதனை நக்கப்புக்கென உளத்தைத் தூண்டும்
ஆசையுற்றூமனேனும் அருங்கதை அறையலுற்றேன்.''


என்னும் தேம்பாவணிக் கவியினையும், ஒப்பிட்டு நோக்குவார்க்கு இவ்வுண்மை இனிது விளங்கும். "ஆசையுற்று ஊமனேனும் அருங்கதை அறையலுற்றேன்" என்று முனிவர் கூறும் மொழிகளும், " அன்பெனும் நறவம் மாந்திமூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்'' என்னும் கம்பர் வாக்கை ஆதரித்து நிற்கக் காணலாம்.

 

இனி, தேம்பாவணி யாசிரியர், நாட்டு வளம் கூறும் கவிகளிலும், நகரநலம் கூறும் கவிகளிலும், சிந்தாமணியின் சிறந்த வாடை   வீசுகின்றது. தேமாவும், தீம்பலவும், தெங்கும் வாழையும் எங்கும் நிறைந்திருந்த ஏமாங்கதநாட்டைப் புகழப்போந்த சிந்தாமணி யாசிரியர்,


"காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் எற்றி
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி யோடு வாழைப்பழங்கள் சிந்தும்
ஏமாங்கதமென்னும் இசையாற்றிசை போயதுண்டே.'


என்று செழுந் தமிழ் மொழிகளால் எழுதியமைத்தார். இக்கவியின் சுவையறிந்த முனிவர், சூதேய நாட்டு வளங்கூறப் போந்தபோது,


"பாய்ந்த தேங்கதின் பழங்கள் வீழ்தலால்
வாய்ந்த வாழைமா, வருக்கை ஆசினி
சாய்ந்த தீங்கனி சரிந்த தேம்புனல்
தோய்ந்த வாயெலாம் இனிமை தோய்ந்தன.''


என்று திருத்தி யமைத்துத் திளைப்பாராயினர். பாய்ந்த தெங்கின் பழங்கள் வீழ்ந்ததால், வாய்ந்த வாழைக் கனியும் மாங்கனியும், வருக்கைக் கனியும் ஆசினிக் கனியும் சிதைந்து சொரிந்த செந்தேன், சூதேய நாட்டுச் சோலை முழுமையும் பாய்ந்து நிரம்பிற்றென்று தேம்பாவணி கூறும் மொழிகளில், சிந்தாமணியின் செழுஞ்சுவை விளங்கக் காணலாம். இன்னும் வளமார்ந்த வயல் களில் உழவர் நட்ட பசும் பயிர், கருவுற்றுக் காய்த்துக் கனிந்து தலை கவிழ்ந்து தாழ்ந்து நின்ற தன்மையை எழுதப்போந்த திருத்தக்க தேவர்,


''சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே."


என்று கனிந்த மொழிகளால் அருளிப்போந்தார். சிறியர் மிக மதிக்கும் செல்வத்தால் வரும் செருக்கினை அறுத்து, பெருமித மின்மையே பெருமை யென்னும் ஆன்ற உண்மையை அறிவுறுத்தக் கருதிய தேம்பாவணி யாசிரியர்,


"பூரியர் திருப்போல், தலைபசிய கூழ்நிறுவி
நீரினார் தலைநேர, நேர் வளைவொடு பழுத்த
ஆரமானும் நெல்லறுத்து, அரிகொண்டு போயங்கண்
போரிதா மெனக்களித்தனர் போர்பல புனைவோர்."


என்று பைங்கூழ் பயந்த பான்மையைப் புகழ்ந்துரைத்தார். நீர்வளம்நிறைந்த வயல்களில் பொருள் படைத்த பூரியர் போல் நேராக நிமிர்ந்து நின்றபசும் பயிர், கருவற்று முதிர்ந்தபொழுது, புலமை சான்றவர் தலைபோல் தாழ்ந்து, முத்தனைய நெல்லைச் சொரிந்ததென்பது முனிவர் கவியின் கருத்தாகும். இங்ஙனம் சிந்தாமணி யாதிய சிறந்த தமிழ் நூல்களின் சுவையை வடித்தெடுத்து, தேம்பாவணியிலமைத்த முனிவர் கவித்திறம் கற்போர் கருத்தைக் கவர்கின்றது.

 

அரியதோர் அகராதி தொகுத்தும், அருங்காவியம் இயற்றியும் தண்டமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவர், நன்னூல் முதலிய பன்னூல்களையும் ஐயந்திரிபற ஓதி யுணர்ந்து, 'தொன்னூல் விளக்கம்' என்னும் பெயரால் ஓர் சிறந்த இலக்கணம் செய்தருளினார். இந்நூல் எழுத்து முதல் அணியீறாகவுள்ள ஐந்திலக்கணங்களையும் அழகுறத் தொகுத்துரைக்கின்றது. நன்னூல் போலவே தொன்னூல் விளக்கமும் நூற்பாவால் அமைந்துள்ளது. இன் னும் உலக வழக்கில் அமைந்த தமிழின் தன்மையை ஆராய்ந்து கொடுக்தமிழ்' என்னும் பெயரால், முனிவர் மேலை நாட்டு லத்தீன் மொழியில் ஓர் இலக்கண நூல் வரைந்துதவினார். தமிழ் மொழியிற் பிழையறப் பேசவும் எழுதவும் கருதி முயலும் பிறநாட்டறிஞர்க்கு இந்நூல் பேருதவி யளிப்பதாகும். பழம் பெருமை வாய்ந்த தமிழகத்தார் பண்பினை, இத்தாலிய நாட்டினர் இனி துணருமாறு, தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட்பாலையும், முனிவர் லத்தீனில் மொழிபெயர்த்தமைத்தார்.

 

இன்னும் இவர் இயற்றிய காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா, கித்தேரியம்மானை, அன்னை அழுங்கல் அந்தாதி முதலிய செய்யுள் நூல்களையும் வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், வாமன் கதை, குருபரமார்த்தன் கதை முதலிய வசன நூல்களையும் பின்னர் ஆராய்வோம்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - ஜனவரி ௴

 

 

 

 

 

 

No comments:

Post a Comment