Monday, September 7, 2020

விக்கிரகாராதனை

சுரபி எழுதியது



நான் இந்த வியாசத்தை எழுதத் தொடங்கியே யிருக்கமாட்டேன். இதிலடங்கிய விஷயமோ மிகவும் மேலானது. அதிலும் மதசம்பந்தமானது. மேலும் அனேக மேதாவிகளைப் பரதவிக்கச் செய்தது. இப்படிப்பட்ட விஷபத்தில் தலையிடுவானேன்? விஷயம் மிகவும் கடினமாகவிருந்தபோதிலும், மத ஆசிரியர்களை யெல்லாம் கைக்கெட்டாமல் துன்புறுத்தியதாக விருந்தபோதிலும் அதைப்பற்றி பேசுவதற்கு மட்டும் எல்லோருக்கும் இடங்கொடுக்கிறது. அதிகம் படிக்காதவர்களும், தேர்ச்சியடைந்தவர்களும், விஷயத்தைப் பூராவாக அறியாதவர்களும் இதைப்பற்றி நினைத்தபடி பேசவாரம்பிக்கிறார்கள். அவர்கள் கூற்று கவனிக்கத்தக்கதல்லவாயினும் தகுந்த சமாதானம் கூறாவிடின் உண்மை வெளிப்படாதென்று தோன்றுகிபடியால் கடவுள் அனுக்கிரகத்தை முன்னிட்டு, பெரியாரின் அனுமதியை எதிர்பார்த்து, நல்லோரின் வழியைப் பின்பற்றி இவ்விஷயத்தைப்பற்றி என்
கருத்தை வெளியிட விரும்புகிறேன்.

 

தலையங்கம் ஒரே விஷயத்தைக் குறிப்பிட்டாலும் அதையொட்டிய அனேக விஷயங்களைப்பற்றியும் கூற சந்தாப்பம் வாய்க்கும் என்பதால் வியாசம் சற்று பெரிதாகவும் ஒரே கட்டுரையில் அடங்காததாகவும் இருக்கும். நான் கூறப்போகும் விஷயங்கள் அனேகர் கொள்கைகளுக்கு மாறுதலாக விருப்பினும் அவைகளைப் பொருட்படுத்தாது பொறுமையுடன இவைகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.


(1)

 

அளவிறந்த ஆன்மாக்கள் அடங்கிய இப்பூவுலகில் எல்லோருக்கும் ஏற்றதாக விருக்கும் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். சாதாரணமாக 'பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்ற பழமொழிப்படி திரவியம் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் பணம் பத்தும் செய்யும்' என்று ஒரு வசனம் வழங்குகிறது. 'பணமில்லார்க்கு இவ்வுலகமில்லை, அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை' என்ற தமிழ்மொழியும் அதையே கூறுகிறது. ஆனால் பணம் வேண்டாதவர்கள் உலகத்தில் இல்லையா? முற்றும் துறந்த முனிவர்களும் செல்வத்தில் பற்றை நீக்கவில்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு சமயம் இல்லாவிடில் இன்னொரு சமயம் பணத்தை வெறுக்கிறோம். பொதுவாக, பணத்தில் படுத்து புரளுகிறவர்களும் ' இன்னும் பணம் வராதா', 'அதிக லாபம் வரவில்லையே' 'இதைச் செய்திருந்தால் இரண்டத்தனை வரும்படி ஏற்பட்டிருக்கும்' என்ற விதமாக ஏங்குகின்றனர். ஆனால்  அதே மனிதர், வெய்யில் அதிகம் காயும் நாளொன்றில் ஏதோ விஷயமாகப் பல விடங்களில் சுற்றி வீட்டிற்கு வெகு தூரத்திலிருக்கும் சமயத்தில் தாகத்தைத் தணிக்க குளிர்ந்த ஜலத்திற்கும், வயிற்றுப் பசியைப் போக்கும் உணவிற்கும் அலைவார்களேயன்றி ' காசுவேண்டும்' என்ற ஆசையை மறந்தேபோயிருப்பர். தெருவில் அலையும் எத்தனையோ பிச்சைக்காரர்கள் காசு கொடுக்கப்போனால் வேண்டாமென்று மறுத்து, 'உங்கள் குழந்தை கட்டிக் கிழித்த கந்தை' கொடுங்கள் என்று யாசிக்கவில்லையா? மிகவும் அந்தஸ்து மிக்கவர்களாயினும் ஒவ்வொரு சமயம் அதிக பணம் செலவு செய்யத் தயாராக விருந்தபோதிலும் வேலை செய்ய ஆள் அகப்படாமல் வருந்துகின்றனர். ஆகவே 'எண்சாண் உடம்பிற்குப் பணமே பிரதானம்' என்னும் கற்பனை மொழி முற்றும் உண்மையல்ல. முக்கியமாகக் குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள், அதிக செல்வந்தர்கள் முதலியவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. சில தினங்களுக்கு முன் ஒரு சிறு குழந்தை நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நெருப்பில் எறிந்துவிட்டதாகப் பத்திரிகைகளில் படித்தோம். நமது கண்ணுக்குப் பணமாகத் தோன்றுவதும் அதிக மதிப்பு வாய்ந்ததுமான ஒரு வஸ்து குழந்தைக்கு விளையாட்டுக் கருவியாகத் தோன்றுகிறது. பள்ளிப் பிள்ளைகள் தங்கள் தகப்பன்மார் பாடுபட்டு ஈட்டும் பொருளை மதியாமல் 'ஸைகில் வேண்டும்,' 'புதிய உடை வேண்டும்', 'விளையாட்டுக் கருவி (பந்தாடுவதற்கு பாட்....) வேண்டும்' என்றவாறு தங்கள் குடும்ப அந்தஸ்திற்கு தகுந்ததல்லாத பல பொருள்கள் மேல் ஆசைவைத்து, ' பணம் போனால் என்ன பிரமாதம்? நாளையே சம்பாதித்துக்கொள்ளலாம்' என்ற வியாக்கியானம் படிக்கின்றனர். அனேக மக்கள் ஒருவேளை கஞ்சியும் குடிக்க வகையற்று எங்கேயாகிலும் ஒரு அணா அகப்பட்டால் அன்று நரிமுகத்தில் விழித்தாற்போல் எண்ணங்கொண்டு களிக்கிறார்கள். ஆனால் தனவந்தர்களோ சற்றும் விசனமடையாமல் ஓரிரவு நாடகத்திற்கோ, அல்லது வேறுவிதமான பொரு ழுதுபோக்குக்கோ, ஆளுக்கு ஐந்து ரூபாய் செலவு செய்துகொண்டு குடும்பத்திலிருக்கும் மொத்தபேரும் பார்த்துவிட்டு வருகிறார்கள்.

 

இவ்வுலகத்தின் விஷயங்கள் அனேகமாக இப்படித்தான் இருக்கின்றன. எல்லோருக்கும் பிரியமுள்ளதாகவும், சந்தோஷத்தையோ வருத்தத்தையோ கொடுக்கக்கூடியதாகவும், ஏககாலத்தில் தைரியத்தையோ அதைரியத்தையோ விளைவிப்பதுமானது ஒன்றுமேயில்லை. நாய் வீட்டில் ஏறுவதைக் கண்டால் ஒருவர், 'இது ஏதடா, சனியன்மாதிரி வருகிறது. சிவ, சிவா! ஓட்டடா சீக்கிரம்' என்கிறார். மற்றொருவர் தான் அருமையாய் வளர்த்துவந்த நாய் திடீரென்று இறந்துவிட்டதென்று அன்னம், பானம் முதலியன நீக்கி வருத்தம் மேற்கொள்ளுகிறார். குதிரைப் பந்தயத்திற்கு சென்ற இருவரில் ஒருவர், 'அப்பா, என்ன அதிர்ஷ்டம் பத்து ரூபாய் கட்டினேன், ஐந்நூறு ரூபாய் வந்தது' என்று நகை முகத்துடன் திரும்புகிறார். மற்றொருவர், 'ஐயோ, பணம் அகப்படாமல் திண்டாடி கஷ்டப்பட்டு சேர்த்த ஐந்து ரூபாயை அந்தப் பாவிபேச்சைக் கேட்டு இதில் கட்டினேன். அதுவும் போய்விட்டதே' என்று வருந்திக்கொண்டு வீடு செல்கிறார். உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று இறந்துவிடுகிறார். அவர் வீட்டிலுள்ளோரும் அவரை நம்பியிருந்த வரும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கின்றனர். ஆனால் அவருக்கு அடுத்தபடி யாயிருந்த உத்தியோகஸ்தர் ஒப்புக்கு துக்கம் விசாரித்தாலும் உண்மையில் ஆனந்தமடைகிறார். ஏனெனில் இறந்துவிட்டவர் பதவிக்கு இவ்ரை நியமிப்பார்கள். 'ஒருவருடைய உணவு இன்னொருவருக்கு விஷம்' என்றபடி ஒருவருக்கு இஷ்டமானது இன்னொருவருக்கு வேம்பாக விருக்கிறது. ஒருவர் மலைமேலிருந்து விழுந்துவிட்டால் அவர் தேகம் வலிச்கிறது, அல்லது பிராணன் போகிறது. ஆனால் உயிர் இருக்கும் வரையில் வைத்தியரும், இறந்து விட்டால் கிரியைகள் செய்பவரும், ஆஸ்திக்கு வார்ஸுகாரர்களும் சந்தோஷப்படுகிறார்கள். சமுத்திரக்கரையில் செம்படவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்த்தவுடன் அனேகர் அவர்களைச் சுற்றி நின்று விலை கேட்டு வாங்க உத்தேசிக்கின்றனர். மற்றும் சிலர் அதன் மணத்தைப் பொறுக்கமாட்டாதவராய் விலகிப் போகின்றனர்.

 

நன்மை அல்லது தீமை என்பதும், நியாயம் அல்லது அநியாயம் என்பதும் எல்லோருக்கும் பொதுவாக விருப்பதில்லை. திருடுவது நியாயமா, அனியாயமா? சாத்மீகர்களும் சட்ட ஆசிரியர்களும் மிகவும் அனியாயம் என்றே கூறுவர். ஆனால் வயிற்றுக் கொடுமையினால் வருந்தும் ஏழைத் திருடன் தன் உயிர் பட்டினியால் நீங்குவதைக் காட்டிலும் திருட்டுக் குற்றத்திற்காகத் தன்தேகம் சிறைக்குச் செல்வதே மேல் என்று கருதுகிறான். சுருட்டு முதலிய வஸ்துக்கள் உபயோகிப்பது நன்மையா, தீமையா? அவ்வஸ்த்துக்கள் அருகிலும் செல்லாத மனிதர் ஒருவர் ''அது அதிக கெடுதல் செய்யும் என்பது யாவரும் அறிந்ததே" என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்போல் எடுத்துக் கூறுகிறார். ஆனால் பீடி கடைக்காரரைக் கேளுங்கள். " ஈ. டி-பீடி' உயர்ந்தது'', ''எல்லோரும் சைகல் பீடியையே உபயோகியுங்கள்'' என்ற விளம்பரங்களை பிரசுரிக்கிறார். காபி குடி - அதிக கெடுதல் என்று ஒருவர் கூறுகிறார். மற்றொரு வைத்தியர் ஒரு பொடியைக் கொடுத்து, “காபி பருகு முன் இதைப் போட்டுக்கொள்ளுங்கள்'' என்கிறார். ஒற்றைப் பார்ப்பான் எதிரில் வருவது - எனக்குத் தெரிந்த ஒருவர் இம்மாதிரி அபசகுனம் சேர்ந்தால் உடனே ஓடோடியும் வீட்டிற்குச் சென்று ஐந்து நிமிஷங்கள் சென்றதுந் தான் திரும்புவர். இவர் அபிப்பிராயத்தில் அவ்விஷயம் தீமையாகப்படுகிறது. ஆனால் நாகரிக முதிர்ச்சியடைந்த ஒருவர் அதைச் சற்றும் பொருட்படுத்துவதில்லை. கறிகாய்களைப் பாதி வேகவைத்துத் தின்பது-வைடமின் நம்பகம் மிகுந்த ஒருவருக்கு நன்மையாகப் படுகிறது. நம்மைப்போன்ற (என்னைப்போன்ற) கர்நாடக மனிதனுக்கு அவ்விதம் உண்பது வயிற்றுக்குக்கெடுதல் என்று தோன்றுகிறது. பால்ய விவாகம்- சனாதன தர்மக்காரருக்கு மிகவும் சிலாக்கியமாகத் தோன்றுகிறது. ஆனால் "ஸோஷல் ரிபார்ம்'' காரருக்கு அது மிகவும் கெடுதலாகப்படுகிறது. இவ்வளவு கூறியதற்குமேல் இன்னும் ஒரு உதாரணம் மிகையாகாதெனக் கருதுகிறேன். ஸ்வயராஜ்யம் அடைய முயல்வது நியாயம் என்று ஒரு கக்ஷிக்காரருக்குத் தோன்றுகிறது. ஆனால் மற்றொரு கக்ஷியாருக்கு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை எதிர்க்க முயல்வது மதியீனம் என்று படுகிறது.

 

இதுபற்றியே ஆங்கிலக்கவி மில்டனும், “நன்மை என்றும் தீமை என்றும் இரண்டு விஷயங்கள் இல்லை. எல்லாம் நம்முடைய யோசனை ஏற்படுத்திக்கொள்வதே" என்றார். ஆதலால் ஒவ்வொருவருடைய யோசனையின்படியும் அவருடைய அபிப்பிராயத்தின்படியுமே எல்லா விஷயங்களும் தோன்றுமேயன்றி ராமனுக்குத் தோன்றுவதே கிருஷ்ணனுக்கும் தோன்ற வேண்டும் என்றால் அது சாத்தியமா? உதாரணமாக, ராமனும் கிருஷ்ணனும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் ஒரே பரீஷைக்குப் போகிறார்கள். ராமன் நன்றாகப் படித்திருக்கிறான். கிருஷ்ணன் இயற்கை சோம்பேறித்தனத்தினாலும் சௌகரியக் குறைவினாலும், நன்றாகப் படிக்கவில்லை. கேள்விக் கடிதங்களைப் பார்த்தவுடன் ராமன் 'பரீக்ஷை சுலபம்' என்று அபிப்பிராயப்படுகிறான். கிருஷ்ணன் அதைப்போன்ற கடினபரீக்ஷை அதுவரையில் பார்த்ததில்லை' என்கிறான். ஏன் அப்படி மாறுபாடு என்று கேட்டல் உசிதமாகுமா?

 

சாதாரணமாக மனிதர்கள் வெவ்வேறு விதமாக அபிப்பிராயப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது சீதோஷ்ணஸ் திதி. இது ஒருதேச முழுமைக்கும் அனேகமாகப் பொரதுஷாக விருப்பதால் இந்தியாவைப் போன்ற கண்டத்தைப்பற்றி நாம் கூறவில்லை) அத்தேசத்திலுள்ளோருக்கெல்லாம் ஒரே அபிப்பிராயம் சில விஷயங்களில் ஏற்படுகிறது. குளிர்மிகுந்த இங்கிலாந்து முதலிய தேசத்தவாகள் எப்போதும், எந்நாட்டிலிருந்தபோதும் சட்டைகள் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர். நமது நாட்டைப்போல் உஷ்ணப்பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக ஆடைகளிருக்கின்றனவோ அவ்வளவும் நலம் என் கிறோம். சிலா இதைப் பழக்கம் என்பர். ஆனால் நான் கூறுகிறபடி ஒவ்வொரு பழக்கமும், வழக்கமும் அபிப்பிராயத்திலிருந்து ஏற்படுகிறது. காலையில் உண்ணுமுன் ஏன் ஒருவன் ஸ்நானம் செய்கிறான். அவள் மனதிற்கு அனேக நாட்கள் போஜனத்திற்கு முன் ஸ்நானம் ஆகவேண்டுமென்று தோன்றி அதுவே பழக்கமாக மாறுகிறது. கெட்ட வழிகளிலெல்லாம் செல்லாத ஒருவர் திடீரென்று என் பொடி போடும் வழக்கத்தைக் கைப்பற்றுகிறார்? முதல்முறை இன்னொருவர் அவ்விதம் செய்யச்சொல்லி கையில் பொடியைக் கொடுத்திருப்பார். அவருடைய மொழி இவர் மனதிற்குப் பிடித்தமாகத் தோன்றியிருக்கும். ஒரு முறை போட்டவுடன் தனக்கு அதன் ருசி தோன்றுகிறது. வழக்கமாகக் கொண்டுவிடுகிறார். ஆகவே ஒவ்வொரு பழக்கத்திற் கடியிலும் அபிப்பிராயம் நின்றுகொண்டிருக்கிறது. சீனாக்காரர்கள் கரப்பான் பூச்சியைப் பிடித்துத் தின்கிறார்கள். அதற்கும் சீதோஷ்ண ஸ்திதியே காரணமாக விருக்கலாம்.

 

இரண்டாவதாக, சகவாசம், ஒருவர் எத்தகைய ஜனங்கள் மத்தியில் வசிக்கிறாரோ அவர்களுடைய எண்ணங்கள் இவருக்கும் பதிந்து போகின்றன. பீஸ் விட்டதும் நேரே வீடுவந்து சேர்ந்து வேறு எங்கும் செல்லாத மனிதரும் சேர்க்கையினால் மாலை வேளையில் கடற்கரை, படக்காட்சி முதலிய விடங்களுக்குப் போய் காலங்கழிக்க இச்சிக்கிறார். பாட்டு என்றால் காதை மூடிக்கொண்டு அப்புறம் செல்லும் மனிதரும் பாடகர்களின் மத்தியில் வசித்தலால் அதன் மேன்மையை அறிந்துகொண்டு அதனிடம் அபிமானம் வைப்பார்.

 

மூன்றாவதாக, பம்பரையாகத் தச்சவேலை செய்யும் ஒருவனைப் பார்த்து, “என் இதே வேலை செய்கிறாய்" என்றால் அவன் தன் பிதா, பாட்டன் முதலியோர் செய்த தொழில் அதுவே யாதலால் அதை விட்டுவிட மனமில்லை என்கிறான். சில தினங்களுக்கு முன் குடுகுடுப்பையாண்டி ஒருவனைப் பார்த்து, "ஏனப்பா இம்மாதிரி அலைய வேண்டும். நாள் முழுவதும் கத்தியும் உனக்குப் போதுமான உணவு அகப்படாமல் தவிக்கிறாயே. உனக்கோ கடவுள் நல்ல தேகத்தைக் கொடுத்திருக்கிறார். கஷ்டப்பட்டு வேலை செய்யக் கூடாதா" என்றதற்கு, "இது (பிச்சை எடுப்பது?) எங்கள் முன்னோர்கள் செய்த தொழில். இதை எப்படி விடலாம்"? என்றான்.

 

இன்னும் அனேக காரணங்கள் இருப்பினும் அவைகளைத் தொடா மனமில்லை. முக்கியமாக, ஜனங்கள் அனேக முகாந்தரங்களினால் வேறுபல அபிப்பிராயங்கள் கொண்டிருக்கின்றனர். சாதாரணமான விஷயங்களிலே, எல்லோருக்கும் நன்றாகப் புலப்படும் விஷயங்களிலே, 'ஒன்று தப்பு, மற்றொன்று சரி' என்று ரூபிக்கக்கூடிய விஷயங்களிலேயே அவர்கள் எண்ணங்கள் பலவ: ராக விருப்பது நியாயம் என்று இவ்வளவு நேரம் வாதாடியதிலிருந்து ஏற்படுவதால், ஒருவரும் முன்பின் அறியாத, அறியக்கூடாத, அறியப்போகாத தெய்வீக விஷயத்தில் அநேகவித எண்ணங்கள் தோன்றுவது ஆச்சரியமாகுமோ? ஒருவரும் சரியாகக் கண்டறியாத விஷயத்தைத் தவறு என்றும் அநியாயம் என்றும் கண்டித்தல் பொருந்துமோ?

 

(2) அபிப்பிராய பேதங்கள்

 

இவ்வியாசம் மத விஷயத்தில் தலையிடவேண்டும் என்னும் நோக்கத்தொடங்கிய தல்ல. எல்லோரும தெளிவான விஷயங்களையும் மறந்து விடுவதால் அவர்களுக்கு அவைகளை ஞாபக மூட்டவே ஆரம்பித்தோம். உலகத்தில் எல்லோருக்கும் ஏற்றதான பொருள் கண்டு பிடிப்பது அரிது. ஒருவருக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதே இன் வனாருவருக்கு வருத்தத்தை யளிக்கிறது. நன்மை, தீமை; நியாயம் அநியாயம் எசுலாம் நாமே வைத்துக் கொள்வது. தமது யே சனை எவ்விதம் செல்கின்றதோ அவ்விதமே அபிப்பிராயம் மாறுகின்றது. எல்லோரும ஒரே அபிப்பிராயததை வகிப்பதில்லை. அதற்குச் சீதோஷ்ணஸ்திதி, சகவாசம், பாரம்பர்யம் முதலிய காரணங்களுண்டு. எல்லோர் கணகளுக்கும் தெளிவாகப்படும் விஷயங்களிலேயே இவ்வித மாறுபாடுகள் தோன்றினால், ஒருவர் கண்ணுக்கும் தெரியாத தெய்விக விஷயத்தில் அபிப்பிராய பேதங்கள் இருப்பது ஆச்சரியமாகுமோ? அதில் ஒன்று தவறு மற்றொன்றுதான் நியாயம் என்று கூறுதல் பொருக்மோ?]


(2) 'மனிதர் இயல்பு'

 

தெய்வீக விஷயம் என்று கூறும் போதே நமது மனதில் ஒருவித அச்சம் தோன்றுகிறது. எல்லாருக்குமே அது தெளிவாகுமோ? தங்கள் ஆயுள் முழுவதையுமே அதற்காகச் செலவிட்ட மகான்களுக்கும் அதன் உண்மைகள் விள நகவில்லை யென்றால் பாமரஜனங்களாகிய உமக்கும் எனக்கும் அறிய இயலுமோ? அன்றியும் தெய்விக விஷயங்கள் ஸைய ஸைப் போல அல்ல. காற்றுக்கு இடை (கனம்) உண்டு, காண்டில் (candle) எரியும் பொழுது அதன் அளவு குறைவதாகத் தெரிந்தாலும் உண்மையல ஒன் றும நஷ்டமாகவில்லை, வைரம் எவ்வளவு பளபளப்புடன் இருந்து எவ்வளவு மதிப்பு பெற்றிருந்தாலும் அதற்கும் நிலக்கரிக்கும் விததியாச எல்லை- இவைபோன்ற விஷயங்கள்
கண்ணுக்குப் புலப்படாமலிருந்த போதிலும் அவை ஒவ்வொன்றையும் தக்க இயந்திரங்களையும் ஆயுதங்களையும் கொண்டு நிரூபித்துக் காட்டலாம். 'தண்ணீர்' என்று சொல்லப்படும் வஸ்து, எல்லோருசதய இன்றியமையாத வஸ்து, எல்லோரும காணும் வஸ்து, உண்மையில் ஆக்ஸிஜன் ஹைடரேஜன் என்னும் இரண்டு வாயுக்களினால் ஆயது என்பதை அவலோரும பரீக்ஷித்து அறியலாம். ஆனால் ஆனால் கடவுள் சம்பந்தமான விஷயங்களை அவ்வீதம தெரிந்துகொள்ள முடியுமா?

இவ்விருபதாம் நூற்றாண்டில் வசிக்கும் நமக்கு அநேக விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு அரிய விஷயங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நமக்கு அடங்கமாட்டா வென்றெண்ணி யிருந்த வஸ்துக்களை எல்லாம் அடக்கி நமது சௌகர்யத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. காற்றென்ன, நெருப்பென்ன, சமுத்திரமென்ன! ஒரு காலத்தில், எல்லாம் மனிதருக்கு எவ்வளவு பயத்தை விளைவித்துக் கொண்டிருந்தன! ஆனால் இப்பொழுது அவ்விதமெல்லாம் இல்லாமல் இங்கிலாந்து செல்வது, அல்லது, அமெரிக்கா செல்வது, ஆகாய விமானத்தில் தபால்களை அனுப்புவது முதலான காரியங்கள் வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இப்பொழுதும், மின்சாரம் மனிதர்களுக்கு அபாயம் விளைவிக்கிற தென்பதை அறிந்தும், மின்சாரத்தை சமையல் முதல் பிரயாணம் வரை எல்லா வகைகளிலும் உபயோகிக்கிறோம்.

 

பூமியின் கனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது, கண்ணுக்குக் கடுகளவாகத் தோன்றும் நக்ஷத்திரங்களினளவு அறியப்பட்டிருக்கிறது, கண்ணுக் கெட்டாத மனிதனின் மூளை, ஹிருதயம் முதலிய வேலை செய்யும் திறம் காட்டப்பட்டிருக்கிறது, சமுத்திரத்தின் ஆழமும் மலைகளின் உயரமும் தெளிவாக்கப் பட்டிருக்கின்றன .....எனினும் மனிதன் எங்கிருந்து உண்டாகிறான், இறந்த பின் எங்கு செல்கிறான், அவன் பாவஞ் செய்தால் என்ன நேரிடுகிறது, புண்ணியத்தின் பலன் என்ன என்றறியப்படவில்லை. இதுதான் உண்மையான தெய்விக விஷயம். இதை பூமி சிருஷ்டியானது முதல் இன்று வரையில் கண்டு பிடித்துச் சொல்பவர் ஒருவரும் அகப்படவில்லை, இனியும் அகப்படுவர் என்று எண்ண இடமில்லை.

 

சில வருடங்களுக்கு முன் ஒரு பிராமணப் பெண் நோய்வாய்ப்பட்டிருர்தாள். ஜுரம் அதிக வேகமாக அடித்தது. டாக்டர்கள் அவள் பிழைப்ப தரிதென்று கூறி விட்டனர். அப்பெண்ணின் தாயார் ஒருபுறம் புலம்பிக் கொணடிருந்தனள். இன்னும் 15-நிமிஷம் கழிந்ததும் அவள் உயி நீங்கும் என்றறிந்த யாவர்கண்களிலும் நீர் தளும்பின. 3-நாட்களாக வாய்திறவாத பெண் அச்சமயம், “அம்மா, அதோ கருப்பாய் ராக்ஷசனைப் போல் ஒருவன் என்னைக் குத்துகிறானே என்னை 'வா' வென்று கூப்பிட்டழைக்கிறானே' என்று கூச்சலிட்டாள். ஆனால் அவள் இறக்கவில்லை. அப்பொழுது புதிதாக வந்த வைத்தியர் செய்த சிகிச்சையினாலோ, அல்லது அவன் ஆயுள் முடிவடையாததனாலோ, அல்லது அவள் பெற்றோருடைய நல் அதிர்ஷ்டத்தினாலோ அன்று முதல் குணமடைந்து கொண்டே வந்து சீக்கிரம் பூரண சுகமடைந்தாள். ஹிந்துக்களுள் இறக்குந் தருவாயில் இருப்போர் கண்களுக்கு எமதர்மன் தெரிவான் என்று ஒரு நம்பிக்கையுண்டு. மேற்கூறிய உண்மையான சம்பவத்தில் அப்பெண் கூறிய விஷயங்களை என் காதினால் கேட்டேன். அம்மாதிரி சமயத்தில் அவள் விளையாட்டுக்காகவோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ பொய் கூறுகிறாள் என்பதற்கில்லை. மனிதன் ஸ்மரணையற்றிருக்கும் போது, இனி மரணத்தைத் தவிர வேறு சம்பவம் இல்லை என்றிருக்கும் போது கூறுவது உண்மையாகத்தான் இருக்கும் என்பது சட்டப் பிரமாணம். ஆதலால் 'எமன்' என்று ஒருவன் இருக்கிறான் என்று நாம் யூகித்துக் கொள்வதா!

 

ஸ்ரீமான். சாது சுந்தர்சிங் என்னும் பெரியாரைப் பற்றி அனேகர் கேள்விப்பட்டிருப்பர். அவருடைய இளவயதில் பகவானிடத்தில் சற்றும் பற்றில்லாராய் பைபில் (Bible) என்னும் மதப் புத்தகத்தைக் கண்ட இடத்தில் கிழித்து விடுவாராம். ஒருநாள் மனவமைதி கொஞ்சமேனும் இல்லாததால் செய்வதின்னதென்ப தறியாமல் இருப்புப்பாதை நிலைக்குச் சென்று புகைவண்டி வரும் வழியில் படுத்துக் கொண்டு விட்டாராம். இன்னும் ஐந்து நிமிஷத்தில் வேகமான மெயில் அவ்வழி செல்லப் போகின்றது. அப்பொழுது அச் சிறுபிள்ளை சின்னாபின்னமாக வேண்டியதே. அந்நிலையில் அவர் கண்களுக்குப் பளிச்சென்று ஒரு வெளிச்சம் தோன்றிற்று. மறுகணம் இயேசுநாதர் பிரசன்னமாகி, "அன்பனே! என் இவ்விதம் கவலைப்படுகின்றாய். நீ இன்று முதல் என்தொண்டில் ஈடுபட்டு ஜனங்கள் மத்தியில் உழைத்துவா” என்று கூறி மறைந்தாராம். இவ்விஷயம் பொய்யென்று எண்ண இடமில்லை. உண்மையாகத்தான் நான் பாவிக்கிறேன். ஆனால் இதிலிருந்து வெளிப்படும் நீதி என்ன? ஹிந்து மதம் பொய் என்றும், கிறிஸ்து மதமேண்மை என்பதா?

 

இன்னும் அநேக உதாரணங்கள் கூறுவது பொருத்தமாக விருப்பினும் வாசிப்போர் அலுப்பை உத்தேசித்து இம்மட்டுடன் நிறுத்துகிறேன். மேற்கூறிய இரண்டு விஷயங்களுள் முன்னதும் பின்னதும் முரண்படுகின்றன. ஒன்று உண்மையாயின் இன்னொன்று பொய்யாகவேண்டும். ஆனால் நான் கூறியதிலிருந்து மேற்படி விஷயங்கள் இரண்டும் உண்மை; உண்மையன்றி வேறல்ல. தெய்விக விஷயமானதால் இரண்டும் உண்மையாக விருப்பது ஆச்சரியமன்று. ஹிர்து புராணத்தில் ஆஞ்சநேயரைப் பற்றி ஒருகதை வழங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் பீமனை யனுப்பி ஆஞ்சநேயரை யழைத்து வரச் சொன்னார். (பீமன் கர்வத்தை யடக்குவதற்காகவே இவ்விதம் செய்ததாகக் கதை கூறுகின்றது.) அவர் கிருஷ்ணன் கூப்பிடுவதாகச் சொன்னதை மதியாமல் 'வரமாட்டேன்' என்று கூறிவிட்டார். மறுமுறை சென்று இராமர் அழைப்பதாகக் கூப்பிடவும் ஆஞ்சநேயர் ஸ்ரீராமர் தொண்டனானதால் ஆனந்தத்துடன் கிளம்பி பீமனையும் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டு புறப்பட்டார். அவரை வீட்டு வாயிலிலிருத்தி பீமன் ஓடோடியும் உள் சென்று கிருஷ்ணர் காலில் விழுந்து, ''ஐயா அந்தப் பலவானிடம் என்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம். நான் உமது ஏவலின்படி. இராமர் ஏவலின்படி, இராமர் கூப்பிடுவதாக அழைத்து வந்து விட்டேன். இப்பொழுது என் பொய் வெளிப்பட்டால் என் கதி என்னாகும்'' என்று புலம்பினான். கிருஷ்ணர் அவனைத் தேற்றி, “நீ கவலைப்படாதே. அவனை யழைத்துவா" என்றார். பீமன் சற்றும் திருப்தியடையாமல் நடுநடுங்கிக் கொண்டே அவரை அழைத்து வந்தான். ஆனால் ஆச்சரியப்படத் தக்கவிதமாக ஆஞ்சநேயர் கிருஷ்ணனைக் கண்டதும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "ராம, ராம" என்று கூறிக்கொண்டே அவரை வலம் வந்தார். ஏன்? அவருடைய கண்களுக்கு அங்கு வீற்றிருந்தவர் ஸ்ரீராமனைப் போல் தோன்றினாரன்றி கிருஷ்ணனாகத் தோன்ற வில்லை.

 

தற்கால நாகரிகத்தில் முதிர்ச்சி யடைந்தோரும் அடைய விரும்புவோரும் மேற்படி விஷயம் கட்டுக் கதையே யன்றி வேறல்ல என்பர். அப்படியே இருக்கட்டும். ஆனால் அதன் நீதி எல்லோருக்கும் தெளிவானது. 'கடவுள்' என்று ஒருவர் இருப்பரேல் அவரை முழு பக்தியுடனும் எப்பெயரிட்டு அழைத்த போதிலும் அவர் பிரசன்னமாவர் என்பதே அதன் கருத்து. இயேசுவில்" நம்புபவர்களிடம் அப்பெயருடனே விளங்குவர். இராமர், கிருஷ்ணர் ...சிவன், விஷ்ணு என்று நம்புபவர்கள் மத்தியில் அப்பெயருடனே விளங்குகிறார்.

 

'மனோஞ்சிதம்' என்னும் புஷ்பத்தைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே! அது நினைத்த மணததைக் காட்டும் என்பது எல்லோரும் அறிாதது. அற்ப புஷ்பம் ஒன்றிற்கு இம் மேன்மையான குணம் இருக்குமாயின் சர்வவல்லமை பெற்றவரும், எல்லாவற்றையும் படைத்தவரும், மனிதனுக்கு யூகிக்கும் குணத்தை யளித்தவருமான கடவுளுக்கு நினைத்த வடிவத்தில் அகக்கண்ணுககோ, முகக் கண்ணுக்கோ தோன்றுவது இயலாதா? நல்ல காலமாகச் கடவுளைக் கண்டவர் ஒருவரும் இலர். அப்படி ஒருவர் கண்டிருந்தாலும் அவர் கூற்றை ஒருவரும் நம்பார். ஒரு வீட்டில் பிசாசு இருக்கிறது என்று ஒருவர் பதறி யடித்துக்கொண் டோடுகிறார். ஆனால் அதைப்பாராதவருக்கு அதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. முன்னவரைப் பார்த்து மற்றவர் கேலி செய்கிறா. அப்படி 'பிசாசை'ப் பார்த்தேன் என்பவருள்ளும் ஒருவர் 'வெள்ளையாக விருந்தது' என்கிறார். இன்னொருவர் 'கருப்பாக விருந்தது' என்கிறார். மூன்றாவதொருவர் 15 அடி உயரம்' என்கிறார். வேறொருவர் 'உயரம் 2 அடிதான். ஆனால் பருமன் 5 அடி' என்கிறார். இதைப்போலவே தான் கடவுள் விஷயமும. 'கடவுள்' என்று நாம் எவ்விதம் நினைத்துக் கொள்கிறோமோ அவ்விதம் தான் நமது மனதுக்குத் தோன்றும்.

 

புதிதாக ஒரு பெண்ணுக்கு விவாகம் ஆகப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அவள் தன் கணவனைப் பார்த்ததில்லை. அவனைப்பற்றி விசாரிப்பதற்கும் வெட்கம். ஆகையால் அவள் மனதிற்குள்ளாகவே ஒரு படம் எழுதிக் கொள்கிறாள். 'பீ.ஏ. படித்தவன் என்கிறார்கள். உயரமாகத்தான் இருப்பான். தலையையும் தற்கால நாகரிகப்படி கிராப் செய்து கொண்டிருப்பான். மாநிறமாகவேனும் இல்லாவிட்டால் நமது தகப்பனார் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார் ........" என்ற விதமாக அவள் யோசனை செய்கிறாள். பிறகு கணவனை நேரில் பார்க்கும் வரை அவனைப் பற்றி பிரஸ்தாபம் வரும்பொழுதெல்லாம் தான் முதலில் எழுதிய சித்திரத்தின் படியேதான் அவன் உருவம்
தோன்றும். அப்பெண்ணுக்குத் தமையன் அல்லது வேறு மனிதர் யாராவது இருப்பரேல் அவர்களும் மாப்பிள்ளையைப் பாராத வரையில் தங்கள் தங்கள் மன துக்கியைந்தவாறு ஒவ்வொரு சித்திரம் எழுதி அதையே அகக்கண் முன் வைத்துக் கொண்டிருப்பர். இப்படியேதான் நாம் நேரில் காணாத, ஆனாலும் யோசிக்க வேண்டிய ஒவ்வொரு பொருளைப்பற்றியும்.

 

ஒரு நாவல் படிக்கும்பொழுதும் இப்படித்தான். கதாநாயகன் உருவமும் கதாநாயகி உருவமும் இன்னும் மற்றுமுள்ளோர் உருவங்களும் ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு விதமாகத் தோன்றும். ஆயினும் எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பதால் பாதகமில்லை. ஆதலால் கண்காணாத கடவுளைப்பற்றி நாம் சிந்திக்கும் போதெல்லாம் நம் மனதில் ஒருருவம் தோன்ற வேண்டியது அவசியம். நாம் வேண்டுமென்றாலும் வேண்டாம் என்றாலும் அவ்வுருவம் எழாமலிராது. கடவுளைத் துதிக்க வேண்டும் போது நாம் குட்டிச் சுவரிடம் போவோமா? ஒருகாலும் மாட்டோம். நடுத்தெருவில் ஜன நடமாட்டம் ஏகமாகவிருக்கும் சமயத்தில் நாம் கடவுளைத் தொழமுடியாது. தனிமையான இடத்தில், அல்லது எல்லோரும் அதே தொழில் செய்து கொண்டிருக்கும் இடத்தில் கடவுளைத் தொழ முடியுமேயன்றி வேறிடத்தில் சாத்தியமில்லை. எதற்காக முடிவதில்லை? மற்ற இடங்களில் கடவுளின் உருவம் நம் முன் எழுவதில்லை. நாம் கண்ணை மூடிக்கொண்டாலும், 'ஏய், ஏய்' என்னும் சப்தமும், ''உதையடா அ*னை" என்ற ஒலியும், ''விடாதே அவனைப் பிடி, பிடி" என்ற அரவமும் நம் நிஷ்டையைக் கலைத்து விடும்.

 

நாவல் படிக்கும் போது நம் மனதில் உருவம் எழுகிறது என்றோம். அவ்விதம் எழுவது பிசகு என்று எவரேனும் கூறுவரோ? அல்லது, அவர் கூறினாலும் நமது இயற்கை குணம்போய்விடுமோ? சிற்சில சமயங்களில் புத்தகங்களில் சித்திரங்கள் போட்டிருக்கின்றன. "ஆனந்தபோதினி"யிலும் அனேக கதைகளையும் நீதிகளையும் விளக்கப் படங்கள் வருவதை வாசகர் அறிவர். ஒருகால் படிப்போர்க்கு சரியான படங்கள் மனத்தின் முன்பு தோன்றாமற்போனால் இப்படங்கள் இருக்கட்டும் என்ற எண்ணந்தான் அதற்குப்பின் இருக்கவேண்டும். அல்லது, ஆசிரியர் மனதிற்குத் தோன்றியவை அவை,
மற்றையோர் வேண்டியபடி உருவங்களை அமைத்துக்கொள்ளட்டும் என்பதும் இருக்கலாம்.

 

கிறிஸ்து மதப் பிரசாரம் நடத்தும் அனேக இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அனேக இடங்களில் படங்களை யெல்லாம் விரித்துக்காட்டி, 'இயேசு வனாந்திரத்தில் பிரசாரம் செய்தார்'', 'யோவான் அங்கு கூடியிருந்தவருக்கு ஞான ஸ்நானம் செய்வித்தான்', ' இறந்த பையனை இயேசு பிழைப் பித்தார்" என்பதையெல்லாம் பற்றிப் பேசுகின்றனர். இதன் தாத்பரியம் என்ன? ஜனங்கள் மனதில் ஒரு உருவம் எழவேண்டும் என்ற நோக்கமே.

 

நமது நெருங்கிய உறவினரும் நமது அன்பிற்குரியவருமான ஒருவர் அன்னிய நாடு செல்லும் சமயத்தில் அவரைப் புகைப்படம் பிடித்து நாம் ஒரு காப்பி (Copy) வைத்துக் கொண்டு நமக்கு வேண்டியவர்களுக் கெல்லாம் ஒவ்வொன்று கொடுக்கிறோம். நமது பந்து அருகில் இல்லாதசமயம் அவர் படத்தையாவது பார்த்து அவரைக் கண்டது போல் பாவிப்போம். வெகுதூரத்துக் கப்பால் இருக்கும் நமது மன்னா, அல்லது நமது பிரதிநிதி முதலியோர் ஞாபகார்த்தமாக அவர் படங்களை நமது சுவரில் மாட்டிக் கொள்கிறோம். ஒருகால் பார்க்கக்கூடும் என்றிருக்கும். மனிதர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவே நாம் இவ்வளவு ஜாக்கிரதையுடன் அவருடைய
படங்களை வைத்துக் கொள்கிறோம் என்றால் இனிமேல் காண மாட்டோம்' என்பவர்களைப் பற்றி இன்னும் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக விருக்கவேண்டாம்?

 

மேற்படியார் படங்களை நாம் வாங்கி வைத்துக்கொள்ளாவிடில் அவர்களை மறந்து விடுவோமா? கிஞ்சிற்றேனும் இல்லை. எப்படி இருந்தபோதிலும் அவர்கள் மனதை விட் டகலமாட்டார்கள். எனினும் அவர்கள் உருவம் (படம் ரூபமாக) நமது மத்தியில் இருத்தல் நமக்கு ஒருவித ஆறுதலை அதுபோலவே கடவுள் நம் விஷடங்களிலெல்லாம் நமக்கு ஞாபகத்திலிருந்தாலும் அவருடைய உருவம் படம் ரூபமாக நமது மத்தியிலிருத்தல் மிகையாகாது. நம்பிக்கை யுள்ளவர்களுக்கு அது ஒருவிதமான புது ஆறுதலை யளிக்கின்றது.
  

சென்ற அக்டோபர் மாதம் இரண்டாந்தேதி – மஹாத்மாகாந்தியின் பிறந்ததினம். - அப்பெரியாரின் படம் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுச் சென்னையில் சில தெருக்களில் பாண்டுவரத் தியத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதற்குக் காரணம் என்னவென்றால் ஜனங்கள் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை அவருடைய படத்துக்குச் செய்து ஒருவித திருப்தியடைந்தனர். இப்பவும் மேல்நாடுகளிலும் ஜனங்களுக்குப் பிரியத்தைச் செய்பவர்களுக்கும் ஜனங்கள் நன்மையைக் கோருகிறவர்களுக்கும், மேன்மை மிக்கவருக்கும் உருவச்சிலை செய்யும் வழக்கம் உண்டு. அதிகப பணச்செலவு செய்து கல்லால் அம்மனிதரைப்போன்ற ஒரு உருவம் செய்வதில் பொதுஜனங்களுக்கென்ன சந்தோஷம்? நமது நாட்டிலும், சென்னையிலும் டாக்டர். மில்லர்,
மிஸ்டர். கோகலே, மிஸ்டர். கிருஷ்ணஸ்வாமி ஐயர் ... முதலியவர்கள் உருவச் சிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் 10- வருஷங்களுக்கு முன் முதலில் கூறப்பட்டவர் இறந்து விட்டவுடன் கிரிஸ்டியன் காலேஜ் மாணவர்களெல்லோரும் உபாத்தியாயர்களால் நடத்தப்பட்டு அச்சிலையி னருகில் சென்று இலையால் செய்த மாலைகளை அச்சிலையின் கழுத்தில் போட்டனர். இவர்கள் அப்பெரியார் இறந்த தினத்தை இவ்விதம் கொண்டாடினார்கள். அவருக்குச் செய்யவேண்டுய மரியாதைகளை அவர் சிலைக்கு செய்தனர். சிலைகையால் செய்யப்பட்டது, கல்லால் செய்யப்பட்டது, இப்புறம் அப்புறம் அசையாதது....... அதுவும் ஒருகாலத்தில் உயர்வுபெற்று சுமார் ஆயிரம் ஜனங்களின் மரியாதையைப் பெற்றது!

 

ஆகவே சிலையை நாம் கௌரவிப்பது அது செய்யப்பட்டிருக்கும் வஸ்துவுக்காகவல்ல, செய்யப்பட்ட விதத்திற்காகவல்ல, செய்த மனிதனுக்காகவல்ல. அது யாரைக் குறிக்கிறதோ அவருக்காக வென்க. இன்றைக்கிருந்து நாளைக்குமாயும் அற்ப மனிதர்களுக்கே இத்தகைய மரியாதைகள் செய்வது குற்றமல்லவென்றால் ஜகந்நாதனாகவிருந்து அண்டராசிகள் முழுவதையும் படைத்த எம்பெருமானை இவ்விதம் சிலாரூபமாகக் கும்பிடுவது குற்ற மாகுமோ? அவரைக் கண்டவருமில், அவரைக் காணப்போவாருமில். அப்பேர்ப்பட்டவரை -பூலோக ரக்ஷகரைக் கும்பிடுவதற்கு ஏன் தடை இருக்கவேண்டும்.


3. பூஜிப்பது எது?

 

ஒருவரை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு அனேக முறைகள் இருந்தபோதும் சாதாரண மனிதர்களுக்கு படங்களும், கீர்த்தி மிக்கவர்கள்ளுக்கு கல் சிலையும் வைத்து நினைவூடுவதே மனிதர் இயல்பு என்றோம். அதேபோல சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களில் எல்லாம் மேலான தான வானைத் தொழுவதற்கும் சிலைகள் ஏற்படுத்துவது குற்றமாகாது என்கிறோம். ஆனால் நாம் கோவிலுக்குச் சென்றால் எதைக் கும்பிடுகிறோம்? அங்கு வைத்திருக்கும் சிலையையா, சிலைமேல் போட்டிருக்கும் பூமாலை-ளையா, பூமாலைகளால் சிலையை அலங்கரித்த குருக்களையா? இது விஷயம் ஆராய்ந்தாலன்றி விக்கிரக ஆராதனையைப் பழிப்பவருக்குச் சமாதானம் கூறியதாகாது. வியாசத்தின் சாராம்சம் இவ்விஷயத்தை ஆராய்வதிலேயே யிருக்கிறது.

 

[வெளியான பாகத்தின் சுருக்கம்: - இவ்வியாசம் விக்கிரக ஆராதனை கெடுதல் என்று சொல்பவர்களைத் தடுத்துரைப்பதற்கும் உள்ளவர்கள் பக்தியை மேம்படுத்தவும் தொடங்கியது. ஆயின் ஒரு மதத்தை உயர்த்தவும் இன்னொன்றைத் தாழ்த்தவும் எமது விருப்பமில்லை. கண் கண்ட விஷயங்களிலேயே வெவ்வேறு அபிப்பிராயங்கள் ஜனங்கள் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம். அப்படி யிருக்கத் தெய்விகமான விஷயத்தில் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் பெற்றிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அநீதி. ஸையன்ஸ் சம்பந்தமான விஷயத்தை ரூபித்துக் காட்ட முடியும். தெய்விக விஷயங்கள் அவ்விதம் செய்யமுடியாது. கண்டறியவில்லை. நாம் தெய்வத்தை எந்த விதமாக நம்புகிறோமோ அந்தவிதமாக அவர் பிரசன்னமாவார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி நாம் நினைக்கும்போதும் நமது மனதில் ஒரு உருவம் எழுவது வழக்கம். அதேபோல தெய்வத்தின் அங்க அமைப்பும் அவரைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் நமது அகக்கண்ணின் முன் எழும். நமது மனத்தில் ஒருருவம் தங்கியிருக்க
வேண்டுமானால் படம் ரூபமாகவோ, சிலை ரூபமாகவோ நமது அந்தஸ்துக்கேற்றபடி உருவம் ஏற்படுத்திக்கொள்கிறோம். அஃது நமக்கு மாத்திரம் அல்ல. மனிதர் இயல்பு. அதேபோல் கடவுளுக்கும் (என்றும் காணாத கடவுளுக்கும்) படங்களும் சிலைகளும் ஏற்படுத்துவது குற்றமாகாது. நாம் விக்கிரகமுள்ள கோயிலுக்குள் சென்று எதைத் தொழுகிறோம்?]

 

நமது பகைவர்களில் அனேகர், விக்கிரகங்களைப் பழிப்பவர், ஹிந்து மதம் rணிப்பதில் விருப்புடையவர், கோயிலில் கல்லால் செய்யப்பட்ட ஒரு உருவத்தையே நாம் தொழுகிறோம் என்றும் அவ்விதம் செய்வது உண்மையான கடவுளை அவமதித்தது போலாகிறது என்றும், நாம் இப்பழக்கத்தை எவ்வளவு சீக்கிரத்தில் விடுகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் உய்யும் வழியைத் தேடிக்கொண்டவராவோம் என்றும் கூறுகின்றார்கள். வேறு மதபிரசாரத்தில் இதுவே முக்கிய தூஷணையாகவிருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை அறியாததாலேயே இவ்விதம் கூறுகின்றனர். நாம் தொழுவது விக்கிரகத்தையல்ல, விக்கிரகம் குறிக்கும் மெய்ப் பொருளையே.

 

விக்கிரகம் கடவுளல்ல. அது சாதாரணமான கல்லால், அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஓர் உருவம். மனிதனால் செய்யப்பட்டது. அவனுக்குத் தோன்றியபடி நிருமிக்கப்பட்டது. கோயிலில் ஸ்தாபனம் ஆகும் வரையில் ஆனால் நமது கைக்கீழ் அடங்கிய அனேக வஸ்துக்களைப் போல் நாம் இஷ்டப்பட்டால் அதை உயர்த்தலாம், இல்லையேல் தாழ்த்தலாம். கோயிலில் ஸ்தாபனம் ஆகும்வரையில்தான் நமக்கு இத்தகைய சுவதந்திரம். அதற்குப் பிறகு நமக்கும் அதற்கும் வெகு தூரம். முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் கோயிலில் ஸ்தாபனம் ஆகும் வரையில் சர்வ சாதாரணமாக விருந்த ஒரு வஸ்து அச்செய்கைக்குப் பிறகு புனிதமாகின்றது, கடவுளைக் குறிக்கின்றது. கும்பாபிஷேகம் ஆகும் வரையில் அதக்கு ஒரு குணம், ஆனபிறகு வேறொரு குணம்.

 

குழந்தைகள் விளையாடுவதற்குத் தகுதியான மரப் பொம்மைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் செய்யப்பட்டு மரப்பாச்சி' என்னும் பெயருடன் வழங்கும் அவைகளைக் குழந்தைகள் கையில் கொடுங்கள். மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகள் இந்தச் சாமான்களை உண்மையில் உயிருள்ள குழந்தைகளைப் போல் பாவித்து, தங்கள் பெற்றோர் தங்களுக்குச் செய்யும் சகல சிச்ருஷைகளையும் (எண்ணெய் போடுதல், குளிப்பாட்டல்) அந்த பொம்மைகளுக்குச் செய்கின்றன. அச்சிறுவர்களுக்கும் அவை உயிரற்ற சாமான்களென்று நன்றாகத் தெரியும். ஆயினும் விளையாடும்போது மாத்திரம் அவர்களே அவைகளுக்கு உயிரைக் கொடுத்துத் தங்கள் பொழுது போக்குக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

 

சோழி ஆட்டங்களில் தாயக்கட்டம்' என்று ஒரு ஆட்டமுண்டு. பெண்கள் மத்தியானப் பொழுதில் நான்கு பேர் சேர்ந்து ஆடுவது வழக்கம். ஒவ்வொருவரும் 6 காய்கள் வைத்துக்கொண்டு கோடுகள் கீறப்பட்ட இரண்டு கட்டைகளால் ஆடுவார்கள். முதலில் ஒருவர் வைத்த இடத்தில் பின்னால் ஒருவர் வைத்தால் முதல் காய் வெட்டப்படுவதாகக் கற்பனை. அக்காய் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து முழுக்கட்டமும் சுற்ற வேண்டும். இந்த ஆட்டத்தில் ஒருவருடைய காய்களில் 5 சுற்றிவந்து பழம் ஏறிவிட்டதென்றும் ஆறாவது காய்மட்டும் முக்கால்வாசி சுற்றி வந்திருக்கிறதென்றும் வைத்துக் கொள்வோம். அந்தச் சமயத்தில் அந்தக் கடைசிக்காயை யாராவது வெட்டி விட்டால் அல்லது வெட்ட யத்தனித்தால் காயின் சொந்தக்காரர் முகம் 'மூன்றாம் பேஸ்து' என்று சொல்லப்படுவதை விடக் கேடாக மாறுகிறது. ஏன்? அவர் காயாகவைத்துக்கொண்டிருப்பது அனேகமாக ஒரு சிறு சோழியோ, புளியங்கொட்டையோ, இராவணன் விழியோ, சீதா சொருக்கோ, மண்ணாங்கட்டியோ ...அல்லது இன்னும் இழிந்த வஸ்துவாகவோ தான் இருக்கும். எனினும் அந்தச் சமயத்தில் அவருக்குத் தன் உயிரே அந்த வஸ்துவின் பேரில் இருப்பதுபோல் தோன்றும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்னும் அதற்குப் பின்னும் அதனால் அவருக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. அந்தச் சமயத்தில் மாத்திரம் அந்த வஸ்து அவ்வளவு உயர்வடைகிறது.

 

சீட்டாட்டத்தில் என் மனிதர்களுக்கு அவ்வளவு கோபம் உண்டாகிறது? அவர்கள் உபயோகிப்பது சிறு அட்டை பத் துண்டுகள் தானே, அதற்காத் தோற்றுவிட்டவர், இரண்டு பிடி வரவேண்டிய இடத்தில் ஒரு பிடி கிடைத்த ஒருவர், சிம்மம்போல் கர்ச்சிப்பானேன்? ஆடத் தெரியாத எனக்கு அவர்கள் செய்வது பயித்தியக்காரத்தனமாகப்படுகிறது. ஆனால் அவர்களோ தங்கள் உயிர் அச்சீட்டுகளில் தான் இருப்பதுபோல் பாவிக்கின்றனர்.

 

விக்கிரகங்களைப் பழித்துவந்த அரசனொருவனுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு சன்னியாசி அரசன் படமொன்றைத் தமது ஆச்சிரமத்தில் மாட்டி அதற்கு மரியாதைகள் செய்ய உத்தேசிப்பதாயும் அரசன் நேரில் வந்து அதைக் கண்டு மகிழவேண்டுமென்றும் கூறி அரசனை வரவேற்றனர். அரசனும் அப்பெரியாருக்கு மரியாதை வைத்து அவர் வேண்டு கோளுக்கிணங்கித் தன் சிப்பந்திகளுடன் அவர் ஆச்சிரமத்திற்கு விஜயம் செய்தான். சன்னியாசி அரசன் வேலையாட்களில் ஒருவனை விளித்து அரசன் படத்தில் எச்சில் துப்பும்படி கூறினார். புத்தியுள்ளவன் எவன் தான் அவ்வாறு செய்யத் துணிவான்? அதிலும் அரசன் முன்னிலையில்! ஆகவே அவன் மறுத்துவிட்டான். உடனே ஞானி, “என் தயங்குகிறாய்? அது வெறும் படம் தானே? காகிதத்தில், மனிதன் கையால் எழுதிய சித்திரம்! அதற்கு சாதாரணமாகவே ஒரு மதிப்பும் இல்லாதிருக்க அரசன் முன்னிலையில் அது மிகவும் ஈனஸ்திதிதான் பெறும். நீ தாராளமாக எச்சில் துப்பலாம்'' என்றார். ஆனால் அவனும், அங்கிருந்த மற்ற எவரும் அவ்விதம் செய்ய முன்வரவில்லை. இதையே ஆதாரமாகக் கொண்ட முனிவர் அரசனை நோக்கி, "பார்த்தாயா, இப்படம் உன்னைக் குறிப்பதால் அதற்கு எவ்வளவு மேன்மை கொடுக்க வேண்டியிருக்கிறது? இதே இடத்தில் வேறு ஏழை எவனுடைய படமாகிலும் இருந்தால் (அது எவ்வளவு அழகான காகிதத்தில் இருந்தாலும், எவ்வளவு கைதேர்ந்த சித்திரம் எழுதுவோனால் வரையப்பட்டிருந்தாலும்) உன்னுடைய ஆட்கள் அதைக் கிழித்தெறியப் பின்வாங்க மாட்டார்கள். அதனால் மரியாதை படத்திற்கல்ல, படம் எழுதியவனுக்கல்ல, படம் யாரைக் குறிக்கிறதோ அவருக்கு என்று ஏற்படுகிறது. அதேபோல் மரியாதை விக்கிரகத்திற்கல்ல, விக்கிரகம் செய்த மனிதனுக்கல்ல, விக்கிரகம் யாரைக் குறிக்கிறதோ அவருக்கு. அற்ப மனிதன், நம்மைப் போன்றவன், இன்றைக்கிருந்து நாளை மாய்பவன்... ஆகிய அரசனுக்கு, அவன் மூலமாக அவன் படத்திற்கு, அவ்வளவு மரியாதை கொடுக்க நாம் தயாராக விருப்போமானால் சர்வசக்தி வாய்ந்தவர், பரமபிதா வென்று பெயர் படைத்தவர், உலகங்களை ஆக்கவும் அழிக்கவும் கூடியவர்... இப்பேர்ப்பட்ட கடவுளின் சிலைக்கு ஏன் மரியாதை வைக்கக்கூடாது" என்று எடுத்துக்காட்டினார். இம்மொழிகளே அரசன் திருந்துவதற்குப் போதுமாயிருந்தன. ஆனால் நமது ஜனங்களுக்கு இன்னும் அதிகம் கூறவேண்டும்.

 

"ஆதியிலே வார்த்தை யிருந்தது. அந்த வார்த்தை தேவனுடையதாயிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது' என்ற விதம் யோவான் எழுதிய சுவிசேஷம் ஆரம்பிக்கிறது. வார்த்தை தேவனாயிருந்தால் ஏன் இன்னும் அனேக வஸ்துக்கள் தேவனாயிருக்கக் கூடாது? (அந்தப் புஸ்தகத்தையாவது அதை எழுதியவரையாவது நான் அவமதிப்பதாக எண்ணக்கூடாது.) அவருடைய மொழிகள் எனக்கு அனுகூலமாக விருப்பதால் அவைகளை எடுத்துரைக்கிறேன். 'தேவன்' என்ற பெயரை நாம் யாருக்கு சூட்டுகிறோமோ அவரே தேவபாகிறார். 'விக்கினேஸ்வரர்' என்கிறோம், 'கண்ணபிரான்' என்கிறோம் பெயர்களால் நாம் அந்தக் கடவுளைத் தானே யழைக்கிறோம்? விக்கிரகத்தின் முன் நிற்கும்போது நாம் தெய்வ சந்நிதானத்தில் நிற்பதுபோல் எண்ணுகிறோ மன்றிக் கேவலம் ஒரு மனிதனால் செய்யப்பட்ட உருவம் ஒன்றை வணங்குவதாக எண்ணுவதில்லை. நான் அப்படி நினைப்பதில்லையே. கோயிலுக்குப் போவதே பெரியோர் நிர்ப்பந்தித்தினால், அங்குச் சென்ற போது அந்த விக்கிரகத்தின் மேல் போட்டிருக்கும் பூமாலைகளையும், நகைகளையும், பக்கத்தில் ஏற்றிவைத்திருக்கும் விளக்குகளின் ஜோதியையும் ..... தான் நான் பார்க்கிறேன்' என்று கூறும் மனிதர்களைப் பற்றி நான் தற்போது பேசவில்லை. அடுத்த கட்டுரை அவர்களுக்காக ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறது. அதுவரையில் தயவு செய்து பொறுத்துக்கொள்ளட்டும். கோயிலுக்குப் பய பக்தியுடன் செல்பவர்கள் பகவான் முன் செல்பவர்களேபோல் கைகட்டி வாய்புதைத்து, வணக்கத்துடன் நமஸ்கரித்து, இனிய ஸ்தோத்திரங்களைப் பாடி, தங்கள் உடலையே மறந்து, மனத்தை கடவுளிடம் செலுத்துவர். வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில், ஆஞ்சநேயர் சீதையிடம் விடைபெறுங் காலையில் அவளை வலம் வந்ததாகக் கூறுகிறார். அப்போது அக்கவி, "ஆஞ்சநேயர் மனம் இராமரிடம் போய்விடவும் சீதையை வலம் வந்தது ஹநுமாரின் தேகந்தான்'' என்று அழகாக வர்ணிக்கிறார். உண்மை பக்தி யதுவேயன்றி வெறுமனே '' நானும் கோயிலுக்குச் சென்றேன்” ... (எங்களகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்) ... என்று சொல்லுவது அழகல்ல.

 

பக்தியுடன் நாம் பூஜிப்பது கடவுளை. ஆனால் கடவுள் நேரில் இல்லாததால் நம்மை ஏமாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. மேல் நாட்டார் ஒருவர் இன்ஷியூரென்ஸைப் பற்றிக் கூறுமிடத்து "மனிதன் மூளை இவ்வளவு பிடிவாதமாயிருப்பதால் தன்நலத்துக்காகப் பணம் சேர்ப்பதற்கும் தன்னை ஏமாற்றிக்கொள்ளவேண்டி யிருக்கிறது," என்றார். ஒவ்வொருவரும் பணம் சேர்த்து அந்திய காலத்துக்கோ அல்லது தாம் இறந்த பிறகு தம் குடும்பத்துக்கோ பயன்படுமாறு செய்வது அவசியம். ஆனால் மனிதர்கள் அவ்விதம் செய்வதில்லை. இரண்டு மாதம் சேர்த்துவைப்பர். மூன்றாம் மாதம் எதையாவது நினைத்துக்கொண்டு மொத்தத்தையும் செலவழித்துவிடுவர். ஆதலால் அவர்கள் கைக்கெட்டாத தூரத்தில் அப்பணத்தை வைக்கும்படியாக நிதிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். அதேபோல கடவுள் உண்மையில் கண்ணுக்குத் தெரியாவிடினும் அவருக்காகச் செய்த ஒரு சிலையை 'அவர்' என்று கூறி அவருக்கு செய்யவேண்டிய மரியாதைகளை அதற்குச் செய்து கடவுளே உலகில் இருப்பதாக நம்மை ஏமாற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது. "கோயிலில் வந்து சத்தியம் செய்வாயா'' என்று கேட்கிறார்களே, கடவுள் அவ்விடத்தில் இல்லை என்று அவர்கள் நம்பியிருந்தால், விக்கிரகத்துக்கு மதிப்பில்லை என்று அவர்கள் சிந்தித்தால் ஏன் அவ்விதம் செய்யப்பட வேண்டும்? விக்கிரகம் அல்லாத ஒரு வஸ்து, ஆதி அந்தம் இல்லாத ஒரு பராபரவஸ்து அங்கிருப்பதாகவே எல்லோரும் நம்புகிறார்கள்.

 

"விக்கிரகங்களைப் பூஜிப்பதில் முக்கிய பிழை என்னவென்றால், நாம் அவமதிக்கப்படுகிறது, என்று ஒருவர் கூறினார். வெகு நாட்களுக்கு முன்பு ஒரு ஞானி இளம்பிராயத்தில் கோயிலுக்குள் சென்றபொழுது, விக்கிரகத்தின் முன்பு நைவைத்தியத்திற்காக வைக்கப்பட்டிருந்த சில வஸ்துக்களை எலி கடித்துவிட்டதாம். உடனே அவர், "என்ன ஆச்சரியம்! நாமெல்லாம் இவ்வளவு மதித்து, விழுந்து விழுந்து கும்பிடும் விக்கிரகம் இந்த எலியை ஒன்றும் செய்யாமல் இத்தகைய அவமானத்தைப் பொறுத்திருக்கிறதே, சீ, இந்த விக்கிரகத்தை வணங்குவதே பிழை" என்று தீர்மானித்து அன்று முதல் கோயிலுக்குச் செல்வதை அடியோடு நிறுத்திவிட்டாராம். இவ்வளவு படித்தவர் இந்த அற்ப விஷயத்தை இவ்வளவு பெரிதாகக் கொண்டுவிட்டது தான் வியக்கத்தக்கது. நாமெல்லோரும் விழுந்து, விழுந்து நமஸ்கரித்து மரியாதை செய்யும் அரசர்கள் போரில் தோல்வியடைந்து அயல்நாட்டாரால் அவமதிக்கப்படுவது கண்டு நாமும் அவர்களை அவமதிக்கிறோமா? அதே அரசர்கள் விடுதலையாகி மறுபடியும் சுயநாட்டிற்கு வந்தால் முன்போல் கௌரவத்துடன் வாழ்வதில்லையா? நமது பிதாவை அன்னியன் ஒருவன் அவமதித்து ஏளனம் செய்தால், இந்த அற்பனா எனக்குப் பிதா? இவனா நான் முன்னர் அறியவேண்டிய தெய்வம்? ...'' என்று அன்று முதல் நாம் அவரை அவமதிக்கலாமா? அவர் நமக்குப் பிதாவே யொழிய அன்னியருக்கு 'வேறு யாரோ' தானே. நமக்குத் தெய்வமானால் எலிக்கென்ன வந்தது? எப்படி நமக்குப் பிதாவானவர் மற்றவர்களுக்கு அன்னியராக விருப்பதில் ஒன்றும் அதிசயமில்லையோ அதேபோலே, நாம் தெய்வமாகக் கொண்டாடுவது நம்மைப் போல் நம்பாதவர்களுக்கு ஒன்றுமில்லை யென்பது அதிசயமில்லை.

 

மேலும் இவ்வளவு நேரம் நான் கூறிக்கொண்டு வந்ததிலிருந்து உண்மைத் தொண்டர்கள் விக்கிரகத்தைத் தெய்வமாகக் கொண்டாடுவதில்லை. கண்ணிற்குத் தென்படாத தெய்வத்தை அறிவதற்கு விக்கிரகத்தை ஒரு கருவியாகக் கொள்கிறாரன்றி வேறில்லை. நாம் தெய்வம் என்று மனத்தில் நினைத்துக்கொண்டாலன்றி அந்தச் சிலை தெய்வமாகப் போவதில்லை. ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான். நமது கண்ணுக்கு மதிப்புள்ள தாகத் தோன்றும் வஸ்து மற்றவர் கண்களுக்குத் தோன்றாதிருக்கலாம். ஸர். ஐஸக் நியூட்டன் வெகுநாள் பிரயாசைப்பட்டு எழுதிவைத்த ஒரு கட்டுரையை - அவர் மிகவும் மதித்த ஒரு கட்டுரையை, அவர் இல்லாத சமயம் அவருடைய நாய் மையைக் கொட்டிப் பாழ்படுத்திவிட்டது. இதனால் அக்கட்டுரை மதிப்பற்றது என்று நினைக்கலாமா? நியூட்டனுக்கு மதிப்புள்ள வஸ்து அவர் நாயிக்கு வெறும் காகிதமாகத் தோன்றிற்று. ஆயிரம் ரூபாய் நோட்டு வெறும் காகிதத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. தெரியாத ஒரு குழந்தை அதைக் கிழித்து எறிந்துவிட்டால் நோட்டுக்கு மதிப்பில்லை என்றா அர்த்தம்? நமது அறிவுக்கு எட்டிய விஷயம் குழந்தைக்கு எட்டவில்லை. அவ்வளவு தான். ஆகவே நாம் தெய்வமாகக் கொண்டாடுவதை எலியும் பூனையும் கொண்டாடுவதில்லை என்று குறையாகக் கொள்ளலாமோ? அறிவிலிகள் செய்கையைக் கண்டு அறிவாளிகள் மனதை மாற்றலாமோ?

 

நல்லது, விக்கிரகமே தெய்வம் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தெய்வத்திற்கு ஒரு தீங்கு செய்ததாகவே நினைப்போம். அந்தத் தீங்கிழைத்தவருக்கு உடனே அவஸ்தை ஏற்பட்டுவிடுகிறதா? அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்' என்ற வசனம் வழங்கவில்லையா? குற்றம் செய்தவர்கள் தலையில் உடனே இடிவிழுந்துவிடுகிறதா? பொய் சொல்லுவது, பெண்களின் கற்பழிப்பது, களவு செய்வது... இன்னும் எத்தனையோ குற்றங்கள் செய்தவர்கள் அகப்பட்டுக் கொள்வதில்லை. அவ்விதம் அகப்பட்டுக்கொண்டாலும் அரசாங்கத்தாரால் விதிக்கப்படும் சொற்ப தண்டனை அடைந்துவிட்டால் சரியாகி விடுமா? அனேக இடங்களில் தெய்வத்திற்குத் தீங்கிழைத்தவர்கள் (அதாவது, தெய்விக விஷயங்களில் பிழை செய்தவர்கள்) சந்தோஷமடைந்து மேன்மேலும் விருத்தியடைவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனக்குத் தெரிந்த ஒருவர் அவரையே நம்பியிருந்த ஒரு பெண் பிள்ளையை ஏமாற்றி ல் ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை அபகரித்துச் சொந்தத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டிக்கொண்டு இன்றுவரையில் சுகமாக வாழ்கிறார். இதனால் தெய்வம் இல்லை என்று கூறிவிடலாமா?

 

விக்கிரகத்திற்கு மதிப்பில்லை, சுய உணர்ச்சியில்லை என்று கூறுவதற்கு எலி ஏறிய அத்தாக்ஷியே வேண்டாம். சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் முகம்மது கஜினி என்பவர் 16 அடி உயரமுள்ள ஸோமநாத் விக்கிரகத்தை உடைத்துவிட்டாரே, அவருக்குத் தெய்வம் (உடைபட்ட விக்கிரகம்) ஒரு தண்டனையும் விதிக்கவில்லையே, அதையே ஆதாரமாகக் கொள்ளலாம். இதை விடச் சிறந்த அத்தாக்ஷி வேண்டியதில்லை. எனினும் ஆயிரம் வருஷங்களாக இந்திய மக்கள், ஹிந்து மதஸ்தர், இச்சம்பவத்தை மதிக்காது விக்கிரகங்களைப் பூஜித்து வருகின்றனர். கடவுள் கிருபையால் இன்னமும் பூஜித்து வருவர் என்று எண்ணுகிறேன்.

 

எல்லா விஷயங்களுக்கும் நமது மனமே காரணம். நம்மை இன்ப துன்பத் துறைகளில் செலுத்துவது மனம் தான். யாவது நம்பினால் அதுவே நமக்குப் பிரதானமாகிறது. நமது தேகம் அசௌக்கியமாயிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு உதித்துவிட்டால் எவ்வளவு பேர் வந்து நமக்கு ஒன்றும் வியாதியில்லை யென்று கூறினாலும் நாம் சாந்தமடையாமல் வைத்தியனிடம் சென்று காண்பிப்போம். சில வருஷங்களுக்கு முன் ஒருவர் அடிக்கடி என்னைச் சந்திப்பது வழக்கம். அவருக்கு ரெயில் ஸ்டேஷன்களில் இருக்கும். வாராவதிகளில் (over bridge) ஏறுவதற்குப் பயம். ஒருமுறை அவர் பராக்காக விருக்கும் பொழுது ஒரு வாராவதியின் மேல் பாதி தூரம் அழைத்துச் சென்றுவிட்டேன். திடீரென்று அவர் தம் நிலைமையை உணர்ந்து கொண்டார். நடுநடுங்கி முன்னாகிலும் பின்னாகிலும் ஒரு அடியும் எடுத்துவைக்க மறுத்து அங்கேயே உட்கார்ந்து கொண்டார். அவர் மனம் நிலையில் இல்லா தவரையில் எல்லாம் சரியாக நடந்தது, மனம் சுய நிலையையடைந்தவுடன் பீதியுண்டாயிற்று. ஆகவே நமது மனம் துரும்பையும் தூணாக்கும், தூணையும் துரும்பாக்கும் என்று விளங்கவில்லையா?

 

அந்த மனத்தில் ஒரு நம்பிக்கை தோன்றிவிட்டால் அதுவே பிரதானமாகிறது. விக்கிரகம் கடவுளைக் குறிக்கிறது என்று நாம் நம்பாவிடில் அந்த விக்கிரகத்தில் ஒன்றும் இல்லை. முன் கட்டுரையில் கூறியபடி, விக்கிரகத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டாவென்பதை ரூபிக்க முடியாது. விக்கிரகங்களைப் பூஜித்தவர் சுவர்க்கத்திற்குச் செல்கிறார்களா அல்லது நரகத்தில் அழுந்திக்கிடக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டுவந்து சொல்லுகிறவர்கள் ஒருவரும் இல்லை. ஆதலால் நம்முடைய மனத்திற்கு எது யுக்தமென்று தோன்றுகிறதோ அதையே செய்வதுதான் மேலானது. நமது மனம் ஒப்புக்கொள்ளாத விஷயங்களைச் செய்வதில் பிரயோஜனமில்லை. மனப்பூர்வமாக விக்கிரகமே தெய்வத்தின் அறிகுறி என்று நம்பி ஆராதனைகள் செய்துவந்தால் அப்பூஜை தெய்வத்திற்கு ஏற்கும்.

 

வயது வந்தவர்களும் சில விஷயங்களில் குழந்தைகளைப் போலிருக்க பயந்து, வேண்டியிருக்கிறது. இரண்டு மனைவிகள் இறந்துவிட்டால் மூன்றாம் மனைவியை விவாகம் செய்து கொள்ள விரும்புவோர் முதலில் ஒரு வாழை மரத்திற்குத் தாலி கட்டி அதை வெட்டிவிட்டு பிறகே விவாகச் சடங்குகள் ஆரம்பிக்கவேண்டும். ஒரு ஊரில் மழை பொழியாவிட்டால் தவளை யொன்றைக்கொன்று அதை வீடுவீடாக எடுத்துச் சென்று "ஐயா, தண்ணீரில்லாமல் இத்தவளை இறந்துவிட்டது, கொஞ்சம் நீர் கொடுங்கள்'' என்று கேட்பார்கள். பாம்புகளில் ஒருவிதம் கடித்துவிட்டால் கடிபட்ட மனிதன் இறந்து விட்டானா, அவனைக் கொளுத்துகிறார்களா என்று அறிய அந்தப் பாம்பு சுடுகாட்டுக்குச் செல்லுமாம். அந்த மனிதன் பிழைக்கவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள் அந்தக் காட்டுக்குச் சென்று வழக்கமாகப் பிணங்களை எரிக்கும் இடத்தில் ஒரு கட்டையைக் கொளுத்துவார்கள். அப்பொழுது அந்தப் பாம்பும் சாந்தமடையும், விஷமும் இறங்கிவிடும். இதுபோன்ற இன்னும் அனேகவிஷயங்கள் இன்றும் நடைபெறுகின்றன. ஒருவரை யொருவர் ஏமாற்றிக்கொள்வதும் வானத்தையும் கடவுளையும் மனமிரங்கச் செய்யும் விதங்களும் மனித இயற்கை. ஒரு வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் முக்கியமானவர்களல்ல வென்றாலும், அவர் இறந்ததில் அவ்வீட்டாருக்குச் சந்தோஷமே யென்றாலும், வாய்விட்டு அழாவிட்டால் யமன் கோபமடைந்து அவர்களுக்குப் பிரியமான வேறொருவரைக் கொண்டு போய் விடுவான் என்று ஒருநம்பிக்கையிருப்பதால் அவனை (யமனை) ஏமாற்றுவதற்காக வீண் ஒப்பாரிபாடுவதும் நம் நாட்டு மக்கள் அனேககருன்டைய இயற்கை. (நாகரிக மக்கள் மன்னிக்கவேண்டும். அவர்கள் நீங்கலாக மற்றவர்களைக் குறிக்கிறேன்.) விதம் எல்லாம் செய்வது வீண் கொழுப்புக்காகவா? சற்றேனுமில்லை. அவர்கள் அவ்விதமெல்லாம் செய்யாவிடில் விபத்து நேரிடும் என்று நம்புவதால் தான். பக்தியின் விசேஷத்தைக் குறிக்குமிடத்தில் இதைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறவேண்டிவரும் என்பதால் இத்துடன் இதைவிட்டு மேல் செல்லுவோம்.

 

கடவுள் விஷயத்தில் ‘ஏமாற்றுவது' என்பது குற்றமாகாது. தற்கால சட்டத்தின்படி ஒவ்வொரு குற்றத்திற்கும் உத்தேசம் தான் (Mens rea) முக்கிய அம்சம். ஒருவன் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவன்தான் கொலை செய்தான் என்பது ருசுவா பாகிவிட்டால் அவன் வேண்டுமென்று கொலை செய்திருந்தால் அவனுக்கு அதிக தண்டனை விதிக்க வேண்டும், காயம் படுத்த உத்தேசித்திருந்து அச்செய்கையில் படுகாயம் ஏற்பட்டு மரணம் சம்பவித்தால் குறைந்த தண்டனையும், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலை செய்தவனுக்கு தண்டனையே விதிப்பதில்லை. ஆகவே திருட்டுக் குற்றத்திற்கும், ஏமாற்றிய குற்றத்திற்கும், மற்றுமுள்ள எல்லாக் குற்றங்களுக்கும் உத்தேசம் தான் முக்கியம். ஏமாற்றிய குற்றத்தில் எதற்காக ஏமாற்றவேண்டும் என்பது முக்கியமான கேள்வி. நலத்திற்கா, இன்னொருவரை வஞ்சிப்பதற்கா, அல்லது வேறு என்ன காரணத்திற்கு என்பது ஏற்பட வேண்டும். தெய்விக விஷயத்தில் நாம் இத்தகைய குற்றத்தைச் செய்வதே இல்லை. திருடர்களும் துரோகிகளும் தாம் செய்வது குற்றமென்று நன்றாயறிகிறார்கள். ஆனால் நாம், செய்வது நியாயம் என்றும் கடவுளை பூஜிக்கிறோம் என்னும் நோக்கத்துடனும் விக்கிரகங்களை ஆராதிக்கிறோம்.

ஆதலால் விக்கிரகங்களை பூஜிப்பதில் நமக்கு உண்மைக் கடவுளை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமில்லை. உண்மைக் கட வுளை நேரில் காணமுடியாதாதலாலும், பெரும்பான்மையோர் கடவுளை நேரில் காணாதவரையில் அவரை வழிபடாராதலாலும், கடவுளுக்குப் பிரதியாக வேறொன்றைமித்து அதுவே கடவுள் என்று சொல்லவேண்டியிருக்கிறது. மக்களில் பெரும்பான்மையோர் மத விஷயங்களில் குழந்தைப் பருவத்தை விட்டகலவில்லை. அவ்வயதுவந்த குழந்தைகளுக்கு மத போதனை செய்யும் பொருட்டு இம்மாதிரி ஒரு யுக்தி செய்ய வேண்டியது அவசியம். வெகு தூரத்திலிருக்கும் மன்னரை ஜனங்கள் காண முடியாததால் ராஜப்பிரதிநிதி யொருவரை நியமித்தல் அவசியமாயிருக்கிறது. அதேபோல தெய்வத்தை யாவரும் காணமுடியாதாதலால் அவரைக் குறிக்க ஒரு சிலை வேண்டியிருக்கிறது. மத விஷயங்களில் 'அக்கரை' கொண்டோர்களுக்காக இவ்வழக்கம் ஏற்படுத்தப்படவில்லை. பாமர ஜனங்கள் - தங்கள் மனத்தைச் செவ்வைப்படுத்த வகையற்ற ஜனங்கள் தெய்வ பக்தி பெறுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது.

 

இவ்வழக்கம் நமக்கு மாத்திரமல்ல. வெகு காலத்துக்கு முன் யூதர்களை ஒன்று திரட்டி கடவுள், “இனி நானே உங்களை ஆண்டுவருவேன், வேறுமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார். சில தலைமுறைகள் இவ்விதம் நடந்துவந்தது. ஆனால் பொது ஜனங்களுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் ஸாமுவேல் என்னும் தீர்க்கதரிசியை முன்னிட்டுக்கொண்டு கடவுளுக்கு ஒரு மனுச் செய்தார்கள். "நாங்கள் கண்ணால் பார்க்கும்படியான ஓராசன் எங்களுக்கு வேண்டும். கண் மறைவாக விருக்கும் நீர் போதாது" என்றார்கள். ஆதலால் மக்கள் கண்கூடாகப் பார்க்கக்கூடிய விஷயங்களையே விரும்புகின்றனர். கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையோரான ரோமன் கத்தோலியர் தங்கள் கோயிலில் விக்கிரகங்களை வைத்திருக்கின்றனர். மற்றையோரும் மத சம்பந்தமான விஷயங்களைக் குறிக்கும் படங்களை மேன்மையாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். பிரசாரங்கள் நடக்கும் இடங்களிலும் இப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

 

பிரபல அமெரிக்க பாதிரி யொருவர் மஹாத்மா காந்தியைப் பற்றிக் கூறுமிடத்து, 'அவருக்கும் இயேசுவுக்கும் அதிக வித்தியாசமில்லை. மஹாத்மா கிறிஸ்தவரல்ல, மாதா கோயிலுக்குச் செல்வதில்லை என்ற குறைகளிரண்டும் இயேசுவினிடமும் இருந்தன,'' என்றார். இயேசு மாதா கோயிலுக்குச் சென்றதில்லை, கிறிஸ்தவர் என்ற பெயர் பெற்றதில்லை. மற்ற யூதர்களைப் போல் அவரும் ஒரு யூதரே. யூதர்கள் செய்த அநேக காரியங்களை அவரும் செய்திருப்பர். ஆனால் அவரைப் பின்பற்றும் ஜனங்கள் இதையெல்லாம் மறந்து விடுகின்றனர் போலும்! தாம் தற்போது நடிப்பது போல் தான் என்றென்றும் நடந்திருக்கும் என்று எண்ணுகின்றனர் போலும்! அனேக பிரசாரகர், ''அப்பனே! நீ இயேசுவை நம்பு. சுகமடைவாய். உன்பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்கிறார்கள். இயேசு யாரிடத்தில் நம்பிக்கை வைத்தார்? அந்தக் கடவுளிடத்தில் நாமும் நம்பிக்கை வைத்தால் நாம் உய்யமாட்டோமா? கிறிஸ்தவர்களாக மாறிவிட்டவர் குற்றங்கள் செய்வதில்லையா? 1914-ம் வருஷத்தில் ஆரம்பித்த மஹா யுத்தத்தில் சண்டையிட்டவர் பெரும்பான்மையோர் கிறிஸ்து மதஸ்தரே. கிறிஸ்து போதித்த முக்கிய நீதி பழிக்குப் பழி வாங்காமையும் அன்னியர்களை நம்மவர்களைப் போல் நேசிப்பதுமே. அவ்விரண்டும் செய்யாதவர் ஞானஸ்நானம் பெற்றதனாலும் மாதா கோயிலுக்குச் செல்வதனாலும் அம்மஹானைப் பின்பற்றியவராகமாட்டார்கள். தங்களால் இயன்ற வரையில் தீமைகளை விலக்கி நன்மை செய்பவரே உண்மை பக்தர்கள், உண்மைக் கிறிஸ்தவர்கள்.

 

மனிதனின் முக்கிய குறை என்னவென்றால் தங்களுக்கு இஷ்டமான விதமெல்லாம் கடவுள் நடக்க வேண்டும் என்று இஷ்டப்படுவது தான். ஒருவன் தனக்கு ஆயிரம் ரூபாய் லாபம் வரும் என்று எதிர்பார்க்கிறான். கடவுளைக் குறித்து ஸ்தோத்திரம் செய்கிறான். லாபம் வந்தால் கடவுள் நல்லவர், இல்லையேல் கடவுள் இல்லை, கடவுளுக்குக் கண்ணில்லை என்ற பழிகளை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். எலி விக்கிரகத்தின் மேல் ஏறுகிறது. மனிதன் அந்த எலி உடனே இறந்து விழவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். எலி இறப்பதில்லை. சரி, கடவுளுக்கு வல்லமையில்லை, விக்கிரகம் கடவுளைக்குறிப்பதில்லை என்ற முடிவுக்குவருகிறான். இது நியாயமாகுமா?

 

'கடவுள் எங்கும் இருக்கிறார்' என்று சொல்லாதவர்கள் இல்லை. அவர் துரும்பிலும் இருக்கிறார் தூணிலும் இருக்கிறார் என்று நாமும் நம்புகிறோம். ஆனால் யாராவது கடவுள் உணவில் இருந்தால் நாம் உண்டுவிட்ட பின் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறார் என்றாவது, அசுத்தமான இடங்களில் கடவுள் இருப்பார் என்றாவது எதிர்பார்க்கிறோமா? அவர் எங்கும் இருக்கிறாரென்றாலும் அவரைத் தொழுவதற்கான புனிதமான இடங்களிலே தான் அவர் இருப்பதாகப் பாவிக்கிறோம். மற்ற இடங்களிலே அவர் இல்லை போலப் பாவித்து மனம் போனபடி யெல்லாம் நடந்து கொள்கிறோம். இதை ஒருவரும் குற்றமாகக் கொள்வதில்லை. ஆனால் அந்த புனிதமான இடம் முழுவதிலும் கூட கடவுள் இருப்பதாக எண்ணுவதில்லை. ஏனெனில் அனேகர் கோயில்களில், மசூதிகளில், மாதா கோயில்களில் கடவுள் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். எத்தனை விவாகங்கள் சர்ச்சுகளில் ஏற்பாடாகவில்லை. ஆடவரும் பெண்டிரும் முதன் முதல் சந்திப்பது அனேகமாக அங்குதான். ஹிந்துக்களில் அனேகர் கோயில்களில் தான் தங்கள் வீட்டு விஷயங்களைப் பேசுவது. ஆகவே கடவுளுக்கு என்று விடப்பட்டது கோயிலிலும் ஒரு மூலையில் தான். அதாவது அந்த விக்கிரக சந்நிதியில் தான் பொது ஜனங்கள் தங்கள் கவலைகளை விட்டு கடவுளைத் தியானிக்கின்றனர்.

 

ஆனந்த போதினி – 1932 ௵

மே, ஜுன், ஜுலை ௴

 

 

 (

 

No comments:

Post a Comment