Showing posts with label தோழமை. Show all posts
Showing posts with label தோழமை. Show all posts

Thursday, September 3, 2020

 

தோழமை

(ஏகை சிவஞானம்.)

தோழமை என்பது நட்பு, கேண்மை, தொடர்பு எனப் பல பொருள்படும். அக்கட்பானது ஒருவரோடொருவர் நட்புக் கொள்ளுதற்குப் பழகுதலாகிய காரணங்களால் ஏற்படுகிறது; அன்றியும், அது ஒருவருக்கொருவர் பழகாமலே அவர்மாட்டு எழும் ஒத்த உ
சியாலும் ஏற்படுகிறது.

உலகில் ஒவ்வொருவரும் நண்பர் இன்றி வாழ்க்கை நடத்துதல் இயவாததாகும் என்பது மிமையாகாது. மேலும், மக்கள் தமது வாழ்க்கையில் தமக்காகத் தேடிச் செய்து கொள்ளும் பொருள்கள் யாவற்றினும், நட்பை விடச் சிறந்தது பிறிதொன்றில்லை என்னலாம்.

மேலோரிடத்துக் காணப்படும் நட்பொழுக்கம் அன்பினால் பிணைக்கப் பெற்றுத் தியாக உணர்ச்சியோடு புறத்தே மிளிர்கின்றன. சிறந்த நட்பொழுக்கத்தையுடைய அறிஞர்கள், அவர்களுள் ஒருவருக்கு இடுக்கண் சேர்ந்த காலையும், சேரும் என்று தோன்றிய விடத்தும் அவருக்காகத் தங்களுடைய உயிரையும் ஈந்து உதவ முன் வருகின்றனர். அத்தகைய சிறந்த குணங்களைக் கொண்டவனும்
இராமபிரானிடத்தே தொடர்பு கொண்டவனுமாகிய குகன் என்பாளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

தனது சிற்றன்னையின் ஆணைப்படி சீதையுடனும், தம்பி இலக்குமனுடனும் வனத்துக்குச் சென்ற இராமபிரானை, வேடர்கோனாகிய குகன் அவரது உயர்ந்த குணங்களை உணர்ந்தவனாய், அவர்பால் நட்புக் கொண்டனன்.

இஃதிங்கனமாக, பரதன் தன்னுடைய மாமன் இல்லத்தினின்று, புறப்பட்டு அயோத்தியை யடைந்து, நடந்தவற்றை யுணர்ந்து, ஆற்றாத்துயருற்றான். பின் அவன் நாடு நீங்கிய இராமபிரானை அழைத்து வந்து, அவரை அரசாளச் செய்ய வேண்டுமென்ற உறுதிகொண்டு, வனம் போந்தனன். அவ்வண்ணம், தன்னுடைய தாய்மாரோடும் சேனை பரிவாரங்களுடனும், கங்கையின் வடகரையே வந்து தோன்றிய பாதனைக் குகன் பார்த்தனன். குகன் இராமபிரானிடத்துக் கொண்டிருந்த அளவு கடந்த காதலானும், பரதன், அங்கு தோன்றிய குறிப்பை உணராமையானும், இராமபிரானோடு பொருதற்கே பரதன் படையுடன் வந்திருக்கிறான் என மாறுபட எண்ணினன். உடனே மிக்க கோபங்கொண்டு, பரதனை எதிர்க்க ஏற்பாடுகள் செய்யலானான்.

"இராமபிரான் என்னிடத்து தோழமை கொண்டுள்ளார். ஆகையால்,
அவரை எதிர்க்கவந்த இப் பரதனையும் இவனது சேனையையும் உயிரோடு
போக விடேன். இவன் தனது மூத்தோனாகிய இராமபிரானிடத்துப் பொருதற்குச் செல்ல வேண்டுமானால், என்னையும், என்னுடைய சேனைகளையும் வீழ்த்திய பின்னரன்றோ இக் கங்கையைக் கடக்கவேண்டும்! அங்ஙனம் செல்லக்கு யான் இவனை விடுவனோ!

"பாவமு(ம்) நின்ற பெரும்பழி யும்பசை பண்போடும்

ஏவமும் என்பவை மண்ணுலகு ஆள்பவர் எண்ணாரோ

ஆவது போகஎன் ஆருயிர்த் தோழமை தந்தான்மேல்

போவது சேனையும் இருபி ருக்கொடு போயன்றோ.''

 

“மூத்தோனாகிய இராமபிரான் அரசால்வதைத் தவிர்த்து தாயினால் கைப்பற்றப்பட்ட நாட்டை இப் பரதன், ஆள்வதோடு நில்லாமல் காட்டிலும் அவருக்குத் துன்பம் விளைவிக்கக் கருதிய இச் செய்கையானது, மிகவும் பாவமானது, இதனால் பெரிய பழி யேற்படும் என்பதையும் எண்ணிலன். உலகத்தை யாளுபவர் இவை யாவற்றையும் எண்ண மாட்டார்களோ!'' என்ற பரதனது தன்மையைக் குறித்து எண்ணலாயினான்.

மேலும்,

''அருந்தவம் என் துணை யான இவன்புவி யாள்வானோ

மருந்தெனின் அன்று உயிர் வண்புகழ் கொண்டு பின் மாயேனோ

பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடு போகாதே

இருந்தது என்று கழிக்குவென் என் கடன் இன்றோடே."

 

என்பதால், குகன் தன் இன்னு பிர்த்தோழர் இராமபிரானிடத்துக் கொண்ட உயர்ந்த நட்பின் பெருமை விளங்குகிறது. இராமபிரான் கானகத்துச் சென்ற போழ்து தானும் அவருடன் செல்லாமைபைர் குறித்துச் சந்தோசப்படுகிறான் குகன். அன்றியும் அவ்வாறு தனது நண்பருக்காகச் செய்யப்போகும் அவ்வளவு செய்கையும், தான் கிறைவேற்ற வேண்டிய கடமை என்று கருதுகிறான். அவற்றை நிறைவேற்று தற்குத் தக்க சந்தர்ப்பம்
வாய்ந்ததைக் குறித்துச் சந்தோஷிக்கிறான். "என்னுடைய உயிர் கிடைத்தற்கரிய அமிர்த மல்லவே! எனது நண்பருக்காக உதவாத இந்த உயிர் இருந்து என்ன? அவரைக் காக்கும் பொருட்டு போர் புரிந்து இறந்தாலும் அதனால் பெரும்புகழையே அடைவேன்" என்கிறான் குகன்.

என்னே! இவன் இராமபிரானிடத்துக் கொண்ட நட்பு!

சிறந்த நண்பர்கள் தம்முடைய தோழர்களுக்கு நேரிடும், இடுக்கண்களைக் களைவதில் எவ்விதத்திலும் பின் வாங்குதல் கடாச அவ்வாறு பின்வாங்குதல் இழுக்கு என்றும், அவ்விழுக்குக்கு ஆளானவனை உலகம் பழிக்கும் என்றும்; அவ்விதப் பழிச் சொற்களுக்குத்தான் ஆளாகுதல் கூடாது என்றும் அஞ்சுகிறான், மாசில் மனத்தினனாகிய புளிஞர்கோன்.

"அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே

வஞ்சனை யால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே

செஞ்சாம் என்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ

உய்ஞ்சு இவர் போய்விடின் நாய்குகன் என்று எனை ஓமாரோ.''

 

அங்கு வந்த பாதனை "வஞ்சனையால் அரசு எய்திய மன்னர்'' என்கிறான் குகன்; தான் இராமன் மேற்கொண்ட நட்பின் தாபத்தால். மூத்தவன் அரசாளும் முறையை உலக வழக்காகக் கைகேயி பெற்ற வரத்தின் பயனாகப் பரதன் அடைந்த நாட்டை 'வஞ்சனையால் எய்திய அரசு' என்று பழிபடக் கூறுகிறான்; அத்தகைய பழிச் சொல்லுக்குத் தானும் ஆளாகலாகாது என்ற எண்ணங்கொண்டு, பரதனை எதிர்க்காது விடின் தன்னை உலகம் 'நாய்க் குகன்' என்று ஏசுவார்களே! என அஞ்சுகிறான்.

"ஆழ நெடுந்திரை யாறு கடந்து இவர் போவாரோ

வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ

தோழ மையென் (று) அவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ

எழமை வேடன் இறந் திலன் என்று எளை பேசாரோ."

 

"நம்மிருவருக்கும் தோழமை இருக்கட்டும்'' என்று சொல்லிய ஒரு
சொல்லுக்காகவாவது நான் அவரைக் காக்கவேண்டாமா? இன்றேல் கேண்மையைக் கொன்ற இந்த எளிய தன்மையுடைய வேடன் இறக்காது இன்னும் உயிருடனிருக்கிறான்! என்று என்னைத் துற்நார்களோ?'' என ஆவேசம் வந்தவனைப் போல் ஏதேதோ பேசுகிறான் இராமபிரானது ஒப்பற்றதோழனாகிய குகன்.

உயர்ந்த குணங்களை யுடையாரின் நட்பை விளக்க இன்னொரு உதாரணத்தையும் கூறலாம்.

ஔவையாரைத் தமிழுலகு நன்கு அறியும். அவரது நூல்களின் நயங்களையும் அந் நூல்களில் காணும் நீதி முதலியவற்றையும் போற்றிப் புகழாதார் இல்லை யென்னலாம். நிற்க, ஒளவையார் பால் கட்பு பூண்டு ஒழுகிய அரசரும், வள்ளல்களும் அக்காலத்தில் அனேகர் இருந்தனர். அவர்களுள் அதிகமான் நெடுமானஞ்சி என்பானாகிய மன்னனும் ஒருவன். ஒரு கால் அவ்வரசன் ஔவையாருக்கு ஒரு சொல்லிக்கனியை ஈந்தனன்.

அதைக் குறித்து ஒளவையார்,

“வலம்படு வாய்வாள் எர்தி ஒன்னார்

களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை

ஆர்கலி றதலின் அதியர் கோமான்

போர் அடு திருவிற் பொலந்தார் அஞ்சி

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னு, பெரும! நீயே; தொன்னிலைப்

பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின் அகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கஈந் தனையே''

 

என்ற செய்யுளால் பாராட்டி யிருக்கிறார்.

 

"அதியர்கோமானே! பெரியமலைகளின் மேல் ஏறி மிகுதியாகக் கஷ்டப்பட்டுக் கொணர்ந்த இந்த நெல்லிக் கனியை, இது பெறுதற்கு எளிதல்ல என்று அறிர்தும், அதைக் கருதாமலும், அதனால் விளையும் பன்மையை எனக்குக் கூறாமலும், சாதல் நீங்க எனக்கு அளித்தனை ; இவ்வாறு செய்த நின் செய்கை முன்னாளில், நீலகண்டன் இறவாமைக்குக் காரணமாகிய அமிர்தத்தைத் தேவர்கட்கு ஈந்து, இறப்பதற்குக் காரணமாகிய நஞ்சைத்
தான் உண்டு யாதொரு தீங்குமின்றி நிலைபெற்று இருப்பதை யொக்கிறது. ஆசையால் அமுதமயமான நெல்லிக்கனியை எனக்கு ஈந்த நீயும் நிலைபெற்று வாழ்வாயாக'' என்று வாழ்த்தினார். என்னே! இவ் விருவர் மாட்டு எழுந்த நட்பு! நட்பின் பயனாய் இவ் விருவர் உள்ளங்களும் அன்பினால் பிணைக்கப்பட்டன. ஆசையால் தான், அதிகமான் தன்னையும் ஔவையாரையும் வெவ்வேறா றாகக் கருதிலன்.

பிறரிடத்து நட்புக் கொள்வதாயின் முதலிலேயே அவரைப் பற்றி நன்கு ஆராய்தல் அவசியமாகத் தோன்றுகிறது. ஏனெனில், நம்மால் நட்புக் கொள்ளப்பட்டவர் தீயவராயின், அவருக்கு சேரும் பகை தீமை முதலியவைகள் நம்மையும் சார்ந்து அவற்றால் பின்பு வருத்தமடைய நேரிடும்.

"ஆய்ந்தோய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான் சார் துயரர் தரும்''

 

ஆகவே, யாவரிடத்து நட்புக் கொள்வதா யிருப்பினும் முதலில் அவரின் பழக்க வழக்கங்களையும், குணாதிசயங்களையும் நன்கு ஆராய்ந்து, ஏற்றவர் என்று தெரிந்த பிறகு நட்புக் கொள்ளுதல் சாலச் சிறந்ததாகும். அவ்வாறு ஆராய்ர்து ஒருவருக்கொருவர் தோழமை கொள்ளுதல் அறிவுடையார் செய்கையாகும். அறிவுடையார் நட்பானது நாளுக்கு நாள் பிறைச் சந்திரன் போல் வளரும் தன்மையுடையது. அவ்வாறு ஆராயாமல் நட்புக் கொள்ளும் கீழ் மக்களது செய்கை, பூர்ணச்சந்திரன் நாளுக்கு நாள் குறையும் தன்மையை ஒத்ததாகும் என்பதை,

“நிறை நீர் நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர் பேதையர் நட்பு"

 

என்ற குறள் விளக்குகிறது.

சிலர் தாம் பிறரிடம் நட்புக் கொண்டிருப்பதைப் போல் நடித்துப் பிறகு அவரைப் பின்னால் தூற்றுவதை நாம் பார்க்கிறோம். அன்றியும் சிலர் தமக்கு ஆகவேண்டிய காரிய நிமித்தம் பிறரோடு அளவளாவிப் பழகிப் பின்னர் தமது காரியம் நிறைவேறிய பிறகு அவரைப் பிரிந்து, அவர்க்குத் தீங்கு நினைக்கவும் துணிகின்றனர். அத்தகையோரைக் கொடிய கூற்றுக்குச் சமமாகக் கூறலாம். இதை விளக்க பழமொழியில் வரும் ஒரு செய்யுளைக் கொண்டு உணரலாம்.

"கண்ணுண் மணியே போற் காதலால் நட்டாரும்

எண்ணூந் துணையிற் பிறராகி நிற்பரால்

எண்ணி யுயிர் கொள்வான் என்று திரியினும்

உண்ணும் துணை காக்கும் கூற்று.”

 

          மனித சமூகத்தில் ஒவ்வொருவரும் சிறந்த தோழர் ஒருவரைப் பெறுதல் அவசியமாகிறது. அத்தகைய நண்பர்கள், சமயத்தில் தங்களுக்கிடையில் ஏற்படும் துன்பங்களைக் களைவதற்குத் தக்க யோசளை கூறுவதில் சிறந்த மந்திரிகளை ஒப்பாகின்றனர். சிறந்த நண்பனானவன் ஈருடலும் ஒருயிருமாக எண்ணி, தமது நண்பர்களுக்கு நேரும் சுகதுக்கங்களை உடனிருர்து அனுபவிக்கிறான். ஒருவனுடைய ஆடையானது பலர் முன்னிலயில் அவனை யறியாமல் நெகிழ நேர்ந்த விடத்து அவனது கைகள், அவனுக்கு நேர விருக்கும் அவமானத்தைக் காக்கும் பொருட்டு அவனை யறியாமல் தாமாகவே அவ் வாடையைச் சேர்த்துப்' பிடிக்கின்றன. இதுபோல் உயிர்த் தோழர்களுக்குள் நேரும் இடைடஞ்சல்களை தம்மையறியாமலே தீர்த்து வைக்கின்றனர். மேலும், நண்பர்கள் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் எவ்வாறு உணர்த்துகிறார் என்று சற்றே கவனிக்கலாம்.

"குதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு."

 

என்பர்கள் தத்தமக்குள் சிரித்து கேளிக்கையாகச் காலம் போக்குதல் பொருட்டோடு நிற்காமல் அவர்களுக்குள் நேரும் கெடுதியை எடுத்துரைத்தல் வேண்டும். அவ்வாறு நாம் விலக்க எண்ணி எடுத்துரைக்கும் மொழியை அவர் ஏற்றுக் கொள்ளாவிடின், அத்துடன் நில்லாமல், அவ் விடுக்கணை அது நேரும் முன்பாகவே களைதல் வேண்டும் என்பதை மக்கட்கு அறிவுறுத்த இடித்துக் கூறுகின்றார். இதுவே நட்பின் தன்மை. எனவே, நட்பு என்பது மக்கட் சமூகத்துக்கு ஒரு சிறந்த அணிகலன் என்றும், உயர்ந்த குணங்களையுடைய நண்பன் ஒருவனைப் பெறுதல் பெரும் பாக்கியத்தைப் பெறுதலாகும் என்றும் அறிகிறோம். அன்றியும், அந் நட்பு தானும், ஆன்றோரிடத்துத் தலை சிறந்து போற்றற்கரிய முறையில் மிளிர்கின்ற தென்றும், மனம் ஒன்றுபட்ட நண்பர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அவர்களைத் தொடர்ந்து, அவர்களுக்கிடையே ஓர் ஒப்பற்ற இன்ப வாழ்வை அளித்து உதவுகின்றது என்றும் பெறப்படும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஜனவரி ௴