Monday, September 7, 2020

 

விவசாயம்

 

 விவசாய மில்லையேல் உலக நடவடிக்கைகளில் யாதொன்றும் இயங்கா தென்னுங் காரணத்தை நாம் கண்கூடாக அறிகிறமையால், அதைப்பற்றிப் பன்முறை எழுதினும் பழுதாகாதெனக்கருதியே இச்சிறு வியாசத்தை வரையத் துணிந்தேன்.

 

 'விவசாயமில்லையேல் உலகமில்லை.' விவசாய மென்பது வார்த்தையௗவினாலும் வெறுங் கல்வி கேள்விகளினாலும், தற்கால நாகரீக மக்களுக்கு மிக வெளிதான அற்பச் சொல்லாயிருப்பினும் "விவசாயமோ ரசவா தமோ" என்னுங் கருத்துத் தோன்றச் செய்கையளவாலும், அதனால் உண்டாகும் அபார நன்மையாலும், மிகவும் பெரிதென்றே தோன்றா நிற்கிறது. ஆதிகாலந்தொட்டு இன்றைக்கும் நம்மிந்திய நாட்டில் பெரும்பான்மையோர் விவசாயஜீவனமே மேற்கொண்டு, விவசாயிகளல்லாத ஏனையோரையும் ஆதரித்து வருகிறார்கள். ஆனால் சிலவாண்டுகளாகத் தற்காலச் சீர்கேடான கல்வியினாலும், அதனாலடைந்த தகாத நாகரீக பலன்களினாலும் விவ சாயத் தொழில் குன்றி வருகிறது.


 ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
 தொழுதுண்டு பின்செல் பவர்”

 

என்னும் நம் தெய்வப்புலமைத் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய அருள்வாக்கினை அறியாதவராய், விவசாயத் தொழிலில் ஊக்கம் குறைந்த விவசாயிகளுடைய மக்களும் அவர்களின் தொழிலைச் செய்யாமலும், அதைச் செய்தால் அகௌரவமென்றெண்ணியும் மற்றவர்களிடஞ் சென்றிரந்தும், சேவித்தும் ஜீவிப்பதே பெருமையும் சுகஜீவனமுமென்று கருதி நாட்டிற்கே கேட்டை விளைவிக்கும் நிலைமையை எதிர்பார்க்கிறார்கள்.

 

உய்த்துணர் வோமாயின் சில பெற்றோரே இதற்குக் காரணமெனத் தோன்றுகிறது. எங்ஙனமெனின் விவசாயத்தொழில் செய்தால் இக்காலத்தில் பெருமை இல்லையென்றும், உத்தியோகத்தோரணையிலிருப்பதே கௌரவமென்றும், தவறான அபிப்பிராயங் கொண்டு, அவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேவகத்தொழிலிலமர்த்தி விடுகிறார்கள். இத்தவறான அபிப்பிராயத்தை நீக்கி அவர்கள், தமது மக்களுக்கு, கற்ற கல்வியோடு விவசாய சம்பந்தமான கல்வியையும் புகட்டி, அவ்வித அறிவைக் கொண்டு சீர்திருத்தமான விவசாயத்தைச் செய்வித்தால் அன்னோர் மேன்மேலும் பயனையடைந்து, அடிமைத் தொழிலை நீக்கி, சேவகஞ் செய்து காலட்சேபஞ் செய்வதைத் தவிர்த்து, அனைவருக்கும் பேருபகாரராயிருப்பார்களென்பதை யறியவேண்டிய தவசியம்.

 

 தற்கால பண்டங்களின் விலைவாசிகள் ஏறியிருப்பதற்குள்ள பல முக்கியமான காரணங்களுள் ஒன்று பண்டைக்காலத்தில் ஜனத்தொகை குறை வாயிருந்ததோடு மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு விவசாயஞ்செய்து குறைவின்றிச் சுகமே உண்டு வாழ்ந்து, மற்றையோரையும் ஆதரித்து வந்தார்கள். இக்காலத்திலோ ஜனத்தொகையினேற்றத்திற்குத் தகுந்தவாறு, அதற்குரியவர்கள் விவசாயத்தை மேற்கொள்ளாமல் வேறு மார்க்கங்களில் புகுந்து பணத்தை மலிவாக்கிப் பண்டங்களைக் குறைவாக்கி, கஷ்ட ஜீவனத்தையும் அடிமைத்தனத்தையுமே திட்டமென்றெண்ணி இட்டத்துடன் மேற்கொண்டார்கள். "மழிச்செல்வம் கோழைபடாது' என்பதை இவர்கள் அறியார்கள் போலும். தற்கால உலக வேறுபாட்டிற்குத் தகுந்தவாறே, விவசாயத்தை அனுசரித்து வரும் காலமும் மாறுபட்டு வருகின்ற தென்பது விந்தையாகாது. இப்பொழுதும் கிராமங்களில் சென்று சுற்றிப் பார்த்தால் சில இடங்களில் விவசாயஞ் செய்து வந்த புலங்களும் கரம்பாயிருக்கக்காணலாம்.

 

இவையனைத்திற்குங் காரணம் இம்மை மறுமைப் பயன்களைத் தரக் கூடிய கல்வியோடு விவசாய சம்பந்தமான கல்வியுமில்லாதிருத்தலும், கற்றோரால் விவசாயிகளோ அல்லது விவசாயத்தொழிலோ ஆதரிக்கப்படாமையும், அவர்களின் புதல்வர்களுக்கு அவசியமான கல்வியைப் புகட்டாமையுமே. பெரும்பான்மையோர் தற்சமயம் கொண்டிருக்கும் முற்கூறிய தவறான அபிப்பிராயங்களை அறவேயொழித்து விவசாயத்தின் அத்தியா வசியத்தையும், விவசாயிகளின் பெருமையையும் உய்த்துணர்வார்களாயின் அவைகளின் உண்மை தெற்றென விளங்கும்.

 

மேற்படி தொழிலும், அதன் அத்தியாவசியமும், அதற்குடையவர்களின் பெருமையும் விரிக்கிற் பெருகும். இவ்வுலகின்கண் உயிர்வாழ்வன வெல்லாம், ஜீவித்திருப்பதற்கேதுவாயுள்ளவை, காற்று, சூரிய வெப்பம், தண்ணீர், உணவு முதலியவையெனினும், முன்னவை மூன்றும் சிவச் செயலாலாவதன்றிச் சீவச்செயலாலாவதில்லையாகையால், பின்னதாகிய உணவுக்கு வேண்டியவற்றை முற்சொன்ன மூன்றின் உதவியைக் கொண்டு நம்முடைய முயற்சியால் தேடிக் கொள்ள வேண்டியது அவசியம். கருணை கூர்ந்து கடவுளால் அளிக்கப்பட்ட அவ்வித உதவியைக் கொண்டு உணவைச் சம்பாதிப்பது விவசாயத் தொழிலினாலன்றி மற்ற எதனாலும் இயலாதாகையால் விவசாயத்தின் அத்தியாவசியத்தைப்பற்றி யதிகமாய்க் கூறவும் வேண்டுமோ? 'செங்கோலைக் காக்கும் கோல் ஏரடிக்கும் சிறு கோலே' என்றதினாலும் 'அழியாச் செல்வம் விளைவேயாகும்' என்றதினாலும் இதனவசியம் விளங்கும்.

 

"சுவரை வைத்தல்லோ சித்திரம் எழத வேண்டும்'' " பானையிலிருந்தாலல்லவோ அகப்பையில் வரும்''. இவை போல விவசாயமிருந்தாலல்லவோ விளைபொருளின் பெருக்கால், வியாபாரமும் கைத்தொழிலும் காப்பாற்றப்பட்டு அதனால் உலகமும் செழிக்கும். மற்றும், இந்நாட்டின் பூர்வீக விவசாயப் பெருக்கினாலல்லோ வெல்லத்தை எறும்பு சூழ்வது போல் வியாபாரத்தோரணையால் இந்நாட்டில் தற்கால அரசாட்சி திடமான நிலைபெற்று'குன்றின் மேல் தீபம் போல்'விளங்கா நிற்கின்றது.

 

நிற்க அவ்வித விவசாயத்தைச் செய்பவர்களின் பெருமையை எடுத் துரைக்கின் இவ்வேடு இடந்தராதாகையால் அதைப்பற்றிச் சுருக்கமாய்க் கூறி எடுத்துக் கொண்ட விடயத்தைப் பூர்த்தி செய்கிறேன். இவ்வுலகின் கண் எவ்வகைத் தொழிலினும் விவசாயமே சிறந்து விளங்குவதென்று நம் மூதாதைகளானும், தெய்வப் புலவர், ஒளவை, நாலடியார் முதலானவர்க ளானும் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறதென்றால் அத்தொழிலைச் செய்ய வர்களின் மேன்மையும், கீர்த்திப் பிரதாபமும் எவ்வளவு சிறந்ததாக விருக்க வேண்டும்!

 "ஆற்றங் கரையின் மரமு மரசறிய
 வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - யேற்ற
 முழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
 பழுதுண்டு வேறோர் பணிக்கு''


 ''தொழுதூண் சுவையினு முழுதூணினிது''
 சீரைத்தேடின் ஏரைத்தேடு'


என்னுமிந்த வாக்குகளினால் இத்தொழிலின் சிறப்பு'' உள்ளங்கை நெல்லிக்கனி'' யென விளங்கா நிற்கிறது. இனி இத்தொழிலினைச் செய்யும் வேளாளரின் சிறப்பும், பெருமையும் என்னெனக் கருதுவோம்.

 

 "வேதநூன் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
 ஓதுவா ரெல்லாம் உழுவார்தந் தலைக் கடைக்கே
 கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே
 ஆதலால் இவர் பெருமை யார் உரைக்க வல்லாரே''
           (கம்பர் ஏரெழுபது)


 இமயமலை அரையன்மகள் தழுவக் கச்சி
 ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
 சமயமவை ஆறினுக்குந் தலைவிக் கீசர்
 தந்தபடி எட்டுழக்கு ஈராழி நெல்லும்
 உமை திருச்சூ டகக்கையால் கொடுக்க வாங்கி
 உழவு தொழி லால்பெருக்கி உலக மெல்லாந்
 தமது கொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளாண்
 தலைவர் பெரும் புகழுலகில் தழைத்த தன்றே.
           (சேக்கிழார் புராணம்.)


என்னுமிச் செய்யுட்களினால் இவர்கள் பெருமையும், இவ்வேளாளர்கள் உழுதலாகிய தங்கள் தொழிலைச் செய்யாரெனின், உலகமாளும் அரசரும் தம்தொழிலைச் செய்ய வியலாது என்பதும் அறியக் கிடக்கின்றன. இக்கருத்துத் தோன்றவே 'குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கு' மென்றும்' குடியுயாக் கோன் உயரும்' என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆதலால் இத்தொழிலையும் அவரையும் அவமதிக்காது ஆதரித்து இக்காலத்தில் உதவி புரிய வேண்டுவது நம் கடமையாகுமன்றோ.

 

நியாயஸ்தலமே தேவாலயமாகவும், நியாயவாதியே தெய்வமாகவும், வக்கீல்களே பூசாரிகளாகவும் எண்ணி, தஸ்தாவேஜுகளைத் தாம்பூல நைவேத்தியங்களாகப் பாவித்து (கற்பனா) சாட்சிகளாகிய கற்பூர ஆராதனையினால் கிடைக்கும் நியாயமே தெய்வப் பிரசாத மென்று நினைத்து, வீண் விவகாரங்களில் புகுந்து பலவாண்டுகளானாலும் கோர்ட்டுங்கையுமாயலைந்து காலத்தை வீணாக்காமல் விவசாயிகள் தங்கள் தொழிலைச் செய்து, பின்னால் அதைத் தங்கள் புதல்வர்கள் கைக்கொண்டு விருத்தி செய்தால் தான் நம் நாடு சீர்பெறும் என்பதை யுணர்ந்து ஒழுகவேண்டும்.

 

A. S. நித்தியகல்யாணரெட்டி,

 (விவசாய டிபார்ட்மெண்டு), செங்கல்பட்டு.

 

குறிப்பு: - இக்காலத்தில் பெற்றோர் தம் மக்களுக்குக் கல்வி கற்பிப்பது சேவகாவிர்த்தி செய்யவேயென்று கருதி, பிள்ளைகள் பரீட்சையில் தேரியதே கல்வி முடிந்ததாக வெண்ணி அவர்கள் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டால் தங்கள் கடன் கழிந்ததாகக் கருதுகிறார்கள். தம்மக்கள் கற்ற கல்வி இகத்திற்கேனும் பரத்திற்கேனும் பயன்படுமாவென்பதைச் சற்றும் கவனிப்பதேயில்லை பிள்ளை பரீட்சையில் தேரியதோடு காற்சட்டை, பூட்ஸ், கழுத்துப்பட்டை, தொப்பி முதலியவை அடங்கிய மேல்நாட்டு வேடமணிந்து கொண்டால் அப்போதே பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் வந்துவிட்டதாக மகிழ்ந்து அவனுக்கு இவர்கள் பணிவிடை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். பிள்ளைகளும் கல்விகற்கும் போதே நாம் படிப்பது உத்தியோகம் செய்யவே, அதுவே கௌரவத் தொழில், மற்ற விவசாயம் வர்த்தகம் முதலியன இழிதொழில் என்று எண்ணுகிறார்கள். இவர்கள் கற்கும் கல்வி இவர்களுக்குச் சுயாதீன் உணர்ச்சியில்லாமலும், சுயாதீனத் தொழிலின் கௌரவமும் நன்மையும் தெரியவொட்டாமலும் செய்து விடுவதோடு அடிமைத்தொழிலிலேயே ஆவலையுண்டாக்கிவிடுகிறது. இவர்கள் கல்வியும் அந்த ஒரு தொழில் செய்யமட்டுமே உபயோகப்படும்.

 

இக்கல்வியையே பெரும்பாலோர் பணவிரையம் செய்து கற்றுப் பட்டம்பெற்று ஏழைகளானபின் வேலையகப்படாமல் அவதிப்படுகிறார்கள். இது யார் குற்றம்? பெற்றோர் குற்றமேயன்றோ. இதைப்பற்றி "உண்மையுரைப்போன்'' என்பவர்' பொது நலம்' என்னும் பத்திரிகையில் வரைந்துள்ளார்.

 

1. பெற்றோர் தம் மக்களுக்குச் சேவகாவிர்த்தியாகிய அடிமைத் தொழிலிலுள்ள இச்சையை யொழிக்க வேண்டும்.

 

2. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய சுயாதீனத் தொழில்களிலுள்ள நன்மையையும் கௌரவத்தையும் தம் மக்கள் உணரும்படி செய்து அவற்றில் ஏதேனும் ஒன்று இரண்டிற்கு வேண்டிய கல்வியை யவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். உலகில் விவசாயிகளும் வர்த்தகருமே செல்வமுடையோர் என்பது பிரத்தியட்சமாய்த் தெரிகிறதன்றோ. நமக்கு வேண்டியவற்றிற்கு அன்னிய நாடுகளை யெதிர்பார்க்காவண்ணம் நம் நாட்டில் கல்விகற்றோர் மேற்கண்ட தொழில்களைச் செய்யத் தொடங்கினால் தான், நம் நாடு செல்வமும் பலமும் மதிப்புமுடைய நாடாகும். இதைச் செய்வதை விட்டு வாயால் மட்டும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டிருந்தாலும் ஒருபயனுமடைய மாட்டோம். விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறோம்.


 பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment