Tuesday, September 8, 2020

 

ஶ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர்

 

தேச நலம் பெருகுவதற்கு இன்றியமையாத கைங்கரியங்கள் எத்தனையோ பல. ஒரு நாடு தாழ்ந்த நிலைமையில் இருக்கிறதென்றால் அதற்கடிப்படையான காரணங்கள் பல துறைகளைப் பொறுத்திருக்கும். அக்குறைகளைப் போக்க தேசபக்தர்கள் தத்தமக்குச் சுலபமானதாயும், மனப்பான்மைக்குத் தக்கதாயும், உற்சாகத்திற்கு ஒத்ததாயுமுள்ள துறைகளிலிறங்கிவேலை செய்கிறார்கள். இங்ஙனம் தாய்த் தொண்டாற்ற முற்படும் அன்பர்களின் சேவைக்கு அவசியமாக வேண்டிய உத்திகள் அநேகம். அவற்றைப்பாரதி வேண்டும்' என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.


''மனதிலுறுதி வேண்டும். வாக்கினிலே யினிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும். தனமும் இன்பமும் வேண்டும். தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும். காரியத்திலுறுதி வேண்டும். பெண் விடுதலை வேண்டும். பெரிய கடவுள் காக்க வேண்டும். மண் பயனுற வேண்டும். வானக மிங்கு தென்பட வேண்டும். உண்மை நின்றிட வேண்டும்.''

 

இவை யனைத்தும் சரிவரப் பொருந்திய தேசபக்தர்கள் நிறைந்த நாடு இடர்களுக்கு ஆளாவதே துர்லபம். அவ்வாறாயினும் நொடிப் பொழுதில் அத்துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

 

நாட்டில் இணையற்ற இன்பம் ஏற்படத் தேசபக்தர்கள் பலரும் ஒவ்வொரு துறையில் வேலை செய்கிறார்கள். எனினும் அவர்களுடைய அபிப்பிராயங்களையம், நாட்டின் உண்மையான குறைபாடுகளையும், அரசாங்கம் அக்குறைகளைப் போக்குதற்குக் கைக்கொள்ள வேண்டிய காரியத்தையும் உண்மையை ஒளிக்காமல், சத்தியத்தை உணர்த்துவதில் சற்றும் பின்வாங்காமல், காலதாமத மன்றியில் அவ்வப்பொழுது வெளியிட்டுத் திகழும் பத்திரிகைகள் இல்லாவிடில் எவ்வளவு தீவிரமான தேச சேவையும் செழிக்க முடியாது. இராஜாங்கத்தாரும் பொதுஜன அபிப்பிராய மென்ன வென்பதை அறிந்து நடக்கவும், பத்திரிகைகளின் இருப்பு அத்யாவஸ்யமான தாகின்றது. நமது நாட்டு மக்கள் முதல் முதலாக விழிப்படைந்த காலத்தை நிர்ணயிக்க வேண்டுமானால் காங்கிரஸ் இயக்கம் தேசத்தில் எப்பொழுது ஆரம்பித்ததென்பதைத்தான் நாம் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் மகாசபையின் இயக்கம் பிரபலமாக இராஜாங்கத்தாரின் அங்கீகாரத்தோடும், பிற தேசத்தாரின் நன்மதிப்போடும் 1885 - ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பெற்றது. இதன் முதல்ஆண்டு விழா 1885 - ம் ஆண்டு டிசம்பர் பம்பாயில் ஸ்ரீ உமேச சந்திர பனர்ஜி அவர்களின் அக்கிராசனத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் இயக்கம் கண்யத்துடன் வலுவடைந்து வரவே, அதன் உன்னத நோக்கங்களை மகா ஜனங்களிடையே விளக்கமாக எடுத்தோதப் பத்திரிகைகளின் அவசியம் உணரப்பட்டது. ஆகவே, இயல்பாக இவ்வுணர்ச்சித் தமிழ் நாட்டிலும் ஏற்பட்டது. தேசத்தின் சுவாஸக் கருவியான இப்பணியை முன்வந்து முதல் முதல் ஆரம்பித்தவர் ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர் அவர்களே யாவார். நதியின் சங்கமஸ்தானத்திலிருந்து அதன் கரையோரமாய்ப் போகும் போது, அது உற்பத்தியான மகத்தான மலை தென்படுவது போல், பத்திரிகை உலகமான நதியின் கரை வழியே செல்வோமானால் 'ஐயர் மலை' யானது அரிதில் நமது கண் முன் படும்,

 

இப்பெரியார் 1855 - ம் ஜனவரி மாதத்தில் 'கங்கையிற் புனிதமாய காவிரி' யாறு துங்கமாய்ப் பாயும் 'பஞ்சநத க்ஷேத்திரம்' என்னும் திருவையாற்றில் திருவவதரித்தவர். இவருடைய தந்தையான ஸ்ரீமான். கணபதி தீக்ஷிதர், திருவையாறு முன்சீப் கோர்ட்டில் வக்கீல் தொழில் நடத்தி வந்தார். இவருக்கு ஏழுபுத்திரர்களிருந்தார்கள். அவர்களுள் ஐயரவர்கள் நான்காவது புதல்வர். இவர் இளமையில் முறைப்படி வித்யாரம்பம் செய்விக்கப் பெற்று, திருவையாற்றிலுள்ள பள்ளிக்கூடத்தில் வாசித்து வந்தார். அங்குப் படிப்பு முடிந்ததும் தஞ்சையிலுள்ள செயிண்ட்பீடர்ஸ் காலேஜில் சேர்ந்து கல்வி பயின்று 1871 - ம் ஆண்டில் மிதநிலைப் பரீஷை (Matriculation) யில் தேறினார். பின்னர், 1873 - ம் வருடத்தில் எப். ஏ, பரீக்ஷையில் தேறினார். அப்பொழுது தஞ்சையில் அதற்கு மேல்படிப்பு இல்லை. ஐயரவர்கள் எந்தத் துறை உத்தியோகத்திற்கு வாசிப்பது என்று யோசித்துக் கடைசியில்,

 

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.


என்னும் பொதுமறைக்கிணங்க, அவ்வளவு உயர்ந்த - வித்தையை அபிவிருத்தி செய்யும் உபாத்திமைத் தொழிலையே சிறந்ததாகக் கருதிச் சென்னையிலிருந்த நார்மல்' ஸ்கூலில் சேர்ந்து 1874 - ல் பயின்றார். அதன் மேல், 1875 – ல் சென்னை புரியிலுள்ள 'சர்ச் ஆப் ஸ்காட்லண்டு மிஷன் ஸ்கூலில் 'நாற்பது ரூபாய் சம்பளத்தில் ஓர் ஆசிரியர் வேலையை ஒப்புக் கொண்டார். அக்காலத்தில் சென்னையில் பச்சையப்பன் கலாசாலை மிகவும் பிரபலமாக நடந்து வந்தது. அக்கலாசாலையில் ஐயரவர்களுக்கு ஓர் ஆசிரியர் பதவி கிடைத்தது. பிற்காலத்தில் 'ஹிந்து' பத்திரிகையின் முன்னேற்றத்தில் ஐயரவர்களுடன் ஒத்துழைத்தவரான காலஞ் சென்ற ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் அவர்கள் அப்பொழுது பி. ஏ. வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். இக்காலத்தில் இவ்விருவருக்கும் அந்யோன்ய ஸ்நேகம் ஏற்பட்டது. கலாசாலையிற் சேராமலே தனியே வாசித்து ஐயரவர்கள் 1877 - ல் பி. ஏ. பரீக்ஷையிலும் தேறினார். ஐயரவர்களின் உற்சாகத்தோடு கூடிய உழைப்பைக் கண்டு திருவல்லிக்கேணி ஆங்கிலோ - வர்னாகுலர் ஸ்கூல் அதிபர் அவரை அதன் தலைமை யாசிரியராக ஏற்றுக் கொண்டார்.

 

இது முதல் அவருக்கு விசேஷமான நற்காலம் ஏற்பட்டது. அவருடைய உண்மையான பெருமைகளும் தேசத்தொண்டும் வியாபகமடைய வாரம்பித்தன. இக்காலத்தில் பொதுமக்களின் குறைகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் தேசியப் பத்திரிகை இல்லாத குறையை யாவரும் உணர்ந்தார்கள். ஐயரவர்கள் இக்குறையைப் போக்க அஞ்சாது முன்வந்தார். ஒரு தேசியப் பத்திரிகையை ஆரம்பித்துப் பொறுப்பாக நடத்துவதிலுள்ள கஷ்டங்களை அவர் நன்கு அறிந்தவரானாலும் உற்சாகத்துடன் துணிந்து 'ஹிந்து' என்ற பெயர் சூட்டி, காலஞ் சென்ற ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியாரைத் துணையாகக்கொண்டு ஓர் வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். விரைவில் 'ஹிந்து' வாரம் மும்முறையாக்கப்பட்டு, கொஞ்சகாலத்திற்குள் தினசரியாயிற்று. ஹிந்துப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஐயரவர்கள் இருபதாண்டுகள் வகித்துப் பின்பு சில சௌகரியக் குறைவுகள் ஏற்பட 1898 - ல் விலகிக் கொண்டார். அவர் காலத்தில் 'ஹிந்து' பத்திரிகை மகோந்ந்த நிலையை யெய்திற்று. 'இந்தியா முழுதும் அதற்கு நிகரானபத்திரிகை யில்லை' என்று புகழப் பெற்றது. இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் பொது ஜனங்களின் சாத்தியமான குறைகளையும் அவர்களின் தேவைகளையும் தக்கபடி உணர்த்துவதில் அது கண்ணுங் கருத்துமாயிருந்ததே காரணமாகும். மே. த. கவர்னர் ஜெனரல் லார்ட் ரிப்பன் துரை மகனார் 'இந்தியாவின் உண்மையான குறைகள் என்னவென்று அறியவேண்டுமானால் உடனே ஹிந்து பத்திரிகையைப் பாருங்கள்' என்று கூறுவது வழக்கம். பின்னர், ஹிந்து பத்திரிகையினின்றும் விலகிக் கொண்டு ஐயரவர்கள் 1898 – ல் 'ஐக்கிய இந்தியா' (United India) என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். ஆனால் கொஞ்ச காலத்திற்குள் அதையும் விட்டு அவர் விலக நேர்ந்தது.

 

'ஹிந்து வை அவர் மிக்க தேசோபகாரமான வகையில் நடத்திக் கொண்டு வரும்பொழுதே, சகல ஜனங்களும் தத்தம் குறைகளை எடுத்துக் கூறவும், ஆங்கிலந் தெரியாதவர்களும் தேச கைங்கரியத்தில் பாத்தியமுள்ளதத்தம் பங்கை அடையவும் ஓர் தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்க வேண்டுமென்ற அவா அவருக்கிருந்தது. அதற்கான சாதனங்களையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். இவ்வெண்ணம் 1882 - ல் பூர்த்தியாயிற்று. முதலில் அவர் 'சுதேசமித்திரனை வாரப்பத்திரிகையாக அந்த வருஷத்தில் ஆரம்பித்தார். கொஞ்ச காலத்தில் அது தினசரியாக்கப்பட்டுத் தமிழ்நாடு முழுதும் வியாபித்து முன்னின்று அருமையாக உழைக்க வாரம்பித்தது. தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் ராஜீய நிலை இன்னதென்றறியாமலும் நித்திரையின் வசமாயிருந்த மக்களனைவரையும் 'சுதேசமித்திரன்' தட்டியெழுப்பி, அன்றன்று உலக சமாச்சாரங்களையும் தன்னிடத்தே கொண்டு நிகரற்ற தேசசேவை செய்து வந்தது. இன்றும் தகைமையோடு தாயின் தண்பணி யாற்றி வருகின்றது. முதல் முதலாகத் தமிழுலகத்திற்குப் பத்திரிகை உணர்ச்சியை அளித்தவரும். ஆரம்பித்து நடத்தியவரும், அத்துறையில் நிகாற்று விளங்கியவரும் ஐயரவர்களே யாவர்.

 

அகில இந்திய காங்கிரஸ் மகாசபை ஆரம்பித்த காலம் முதல் ஐயரவர்கள் அதன் தாஸராக விளங்கினார்; முதல் காங்கிரஸில் முதல் முதலாக முதல் தீர்மானத்தைக் கொண்டு போய் நிறை வேற்றினார். ஒவ்வொரு காங்கிரஸ் மகாசபையின் வருடோத்ஸவங்களுக்கும், விசேஷக் கூட்டங்களுக்கும் அவர் தவறாது செல்வார். காங்கிரஸ் சரித்திரத்தின் பூர்வாங்க பாகத்தை எடுத்துப் பார்த்தால் அம் மகா சபையில் நிறை வேறியள்ள முக்கியமான தீர்மானங்களெல்லாம் ஐயரவர்களாலே பிரேரிபிக்கப்பட்டு ஏகமனதாய், நிறைவேறி வந்திருப்பதைக் காணலாம். ஐயரவர்கள் துரிதமாகப் பேசக்கூடியபெரிய சொற்பொழிவாளரல்லா விட்டாலும், திடமாகவும் வன்மையோடும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் பிரசங்கிக்கக் கூடியவரென்பதை மேதாவிகளனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 1902 - ம் வருஷத்தில் காக்கினாடாவில் நடைபெற்ற சென்னை மாகாண மகாநாட்டிலிருந்து அவர் பிரபலதேச பக்தராகக் கொண்டாடப் பெற்றார். அம் மகா நாட்டில் அவரியற்றிய அக்கிராசனப் பிரசங்கத்தைத் தேசத்தில் நானா பக்கங்களிலுள்ள தலைவர்களெல்லோரும் படித்துப் பார்த்து விட்டு ராஜீய நிலையை நிர்ணயித்து, தேசத்தின் எதிர்கால விஷயங்களைக் கணித்து அவர் கூறியிருந்தவற்றைக் கண்டு ஆச்சரியமடைந்து போற்றுதல் கடிதங்கள் விடுத்தார்கள். 1907 - ம் ஆண்டில் நடைபெற்ற சித்தூர் ஜில்லா மகாநாட்டில் அவர் தலைமை வகித்தார். ஸ்ரீமான் ஐயரவர்களுடைய திறமையை உள்ளவாறு அறிய விரும்பும் ஒருவர் அவருடைய சித்தூர் மகாநாட்டு அக்கிராசனப் பிரசங்கத்தை மட்டும் ஒருமுறை படித்தால் போதும், சித்தூர் ஜில்லா வாசிகள் அவர் தலைமை மகாநாடு நடத்தியதையும், அம்மகாநாட்டில் அவரியற்றிய அக்கிராசனப் பிரசங்கத்தை அதிமேதாவிகளெல்லோரும் புகழ்ந்து பாராட்டியதையும் கண்டு, தஞ்சை ஜில்லா வாசிகள் 1908 - ல் தாமும் அவரது தலைமையில் ஓர் ஜில்லா மகாநாடு கூட்டினார்கள்.

 

1898 - ல் இந்திய செலவு திட்டத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்ய இங்கிலாந்தில் ராயல் கமிஷன்' நியமிக்கப்பட்ட பொழுது, சென்னை மாகாணப் பிரதிநிதியாக ஸ்ரீமான் ஐயரவர்கள் சாக்ஷியம் கொடுக்க அழைக்கப் பெற்றார். அவர் கொடுத்த சாக்ஷியத்தி லிருந்து தான் " இந்தியரின் உண்மையான வாழ்க்கை இன்னது; அவர்களின் தேவைகள் இவை'' என்பதை ஐரோப்பியர்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. தேச முழுவதும் சுற்றுப் பிரயாணங்கள் செய்து மக்களின் உண்மையான தாழ்ந்த நிலையையும் அரசாங்கத்தார் பொதுப்படக் காட்டி வரும் அனுதாபத்தையும், அனுஷ்டித்து வரும் உபாயங்களையும், அவற்றிலுள்ள தத்துவங்களையும் அவர் நாளடைவில் நன்கு அறிந்து, பின்னர் பழைய சீர்திருத்தக் கொள்கையினரின் கும்பலிலிருந்து விலகினார். நாடு அடைந்துள்ள பரிதாப நிலையைக் கண்டு, தேசமெங்கும் உயர்ந்த கைத்தொழில்கள் நசுக்கப்பட்டு மக்கள் திண்டாடுவதைக் கண்ணால் பார்த்து அவர் மனம் பதறினார். 'வெளி நாட்டுப் பொருள்களை பகிஷ்கரித்தல், சுதேசப் பொருள்களை ஆதரித்தல்' என்ற கொள்கையோடு தோன்றிய சுதேசி' இயக்கத்தில் அவர் தளராமல் முன்னணியில் நின்றுழைத்தார். சுதேச இயக்கத்திற்குத் தமிழ்நாடு ஏதாவது தனது பங்கைச் செலுத்தியிருக்குமானால் அதற்குக் காரணர் ஸ்ரீமான் ஐயரவர்களே யாவர். தமதுதேக நலமின்மையையும் பொருட் படுத்தாமல் தமிழ் நாடெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்து சுதேசத் தத்துவத்தைப் பிரசாரம் செய்தவரும் அவரே யாவார்.

 

தேசத்தில் ஜனாசாரம் பரவ வேண்டியது அவசியம் என்பதை ஆவலுடன் ஏற்று அதன் பொருட்டாகத் தமிழ் நாட்டில் உழைக்க உடனே முன் வந்தவரும் அவரே. மனதிலொன்றும், செய்கையி லொன்றும், வாக்கிலொன்றுமாக மாயா வினோதம் புரியும் ஜனாசார சீர்திருத்த தந்திரங்கள் அவருடைய ஜீவ்யத்தின் எந்தப் பாகத்திலும் எதன் பொருட்டும் இருந்ததில்லை. அவர் தமது விதந்துவான பெண்ணுக்கு, இடையூறுகளெல்லாவற்றையும் எதிர்த்து நின்று புனர் விவாகம் செய்த தன்மையே இதனை விளக்கச் சாலும். அந்தச் சாத்யமான தன்னலமற்ற உழைப்பால் தான் தமிழ்நாடு முழுதும் அவருடைய பேனா முனையில் ஆடும் பெரும் புகழை அவர் ஈட்டினார். 'சத்ய முண்டானால் மனமே! எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் ஜயமுண்டு. உனது மனத்தேரை நீ நடத்து' என்று அவர் ஆதிமுதல் அசைக்க முடியாத ஓர் ஸ்தம்பமாக நின்று, தமது சிரசிலுள்ள ஞானமாகிய விளக்கால் தமிழ்நாடு முழுவதும் ஒளி தந்தார். இன்னும் சென்னை நகரபரிபாலன சபையின் வாயிலாக அவரால் ஏற்பட்டுள்ள நன்மைகள் எத்தனையோ பல.

 

பாம் விஷயத்திற்குப் பின் தோன்றிய அடக்கு முறையில் உண்மை தேச பக்தரான ஸ்ரீமான் ஐயரவர்கள் அரசாங்கத்தாரின் அமூலுக்கு ஆளாயினர். ரா விரோதமான குற்றத்திற்காக அவர் 1909 - ல் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில் அரசாங்கத்தார் தமது குற்றப் பத்திரிகையை வாப்பீஸ் பெற்றுக் கொண்டார்கள்.

 

பத்திரிகை உலகத்திற்கு முதல் முதலாகக் கண் திறந்து வைத்தவர் ஸ்ரீமான் ஐயரவர்களே. இன்று நாம் பத்திரிகைகளைக் கையிலெடுத்து வாசிக்கவும், அதன் மூலமாய் நன்மைகள் பலவற்றை அடையவும் உள்ள நிலையைக் கருதும் போது ஐயரவர்களை நினைக்காமலிருக்க முடியாது. பத்திரிகை உலகம் அவருக்கு ஓர் தனிப்பெரும் ஆலயம் கட்டவும் கடமைப் பட்டிருக்கின்ற தென்று கூறுவதும் மிகையாகாது.

 

எஸ். வி. வி.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 



 

No comments:

Post a Comment