Monday, September 7, 2020

 

வினை வலி

(எம். முத்துகிருஷ்ணன்.)

இது சரியான கார் காலங் கூட இல்லை. இருந்தும். என்ன செழிப்பு! என்ன வனப்பு!............களிமயில்கள் நர்த்தனம் புரிகின்றன; பனி நிரம்பிய முகில் கூட்டங்கள் பரவிக் கிடக்கின்றன; உலர்ந்த மென்சினைகன் திண்மையுடன் தளிர் விடுகின்றன.

அடடா! தெரிந்தது, தெரிந்தது. நிறை தெய்வீகம் கவிந்த நிடதாதிபதி-நளமகாராஜன் கானினூடே சென்று கொண்டிருக்கிறான். ஆமாம்! அது தான் அவ்வளவு செழிப்பும் வனப்பும்!

அதோ! அதோ!......... பிறப்பிலும், இயற்கையிலும் கொடும் பகையுடைய அந்த மானும், புலியும் எவ்வளவு நேசமாய் உறவாடுகின்றன! தக தக வென கொதிக்கும் பால் கற்கள் தேன் துளிக்கும் மலர்களாக குழைந்து குழைந்து மென்மை யடைந்து விட்டன. ஒரு வேளை, ஐயனின் பாத சரங்களைக் குளிரவைக்க வேண்டு மென எண்ணின போலும்!

இலை வடிவமைந்த வேற்படைத் தலைவன்! மகுடமிழந்த ‘மகுடபதி' அவனின் எதிர்புறமுள்ள மலர் மணம் வீசும் தடாகத்தின் மருங்கே, பளபளக்கும் அன்னப் பறவை யுருவில் 'கலிபுருஷன்' நடமாடிக் கொண்டிருக்கிறான்.

வெண் முத்துகளால் தொடுக்கப்பெற்று பொன்னொளி வீசும் அந்தப் 'புள்' சட்டெனப் படுகிறது அரசமா தேவியின் விழிகளில். குற்றம் நீக்கி உயிர் கொடுக்கும் சைத்ரீகன் கூட அரசியின்- தமயந்தியின்-சுய எழிலைத் தீட்ட திணறி விடுவான். அபார அழகி. நீலோற்பலத்தை ஒக்கும் அவளின் கயல் விழிகள் வைத்த இடத்தை மாற்றத் தயங்கின. அப் பார்வையின் தீக்ஷன்யத்திலே, ஏதோ ஒரு 'விருப்பு’ படிந்து, மின்னிட்டது.

"வாவியின் மருங்குன் மணிகள் கோத்தெனத்

தூவியம் பொற்சிறை மென்புட் டோன்றலும்

ஓவிய ரெழுதரு முருவப் பைங்கொடி

காவியங் கண்ணிணை களிப்ப நோக்கினாள்"

 

முல்லைச் சிரிப்பு இதழ் பாப்பில் தங்கித்தங்கி ஓட, கேசத்தின் பாச நோக்கைக் காதலனின் மேல் தெளித்து அவன் உள்ளக் குமிழை ஊடுருவிப் பார்த்தாள் அவள். சுழலும் அந்த மீன் விழிகளில் அப்படியே சொக்கிப் போய் விட்டான் நளன். "பிற பெண்டிற்கு மார்பைக் கொடாத பரிசுத்தமான என் அண்ணலே!" என்றபடி ஆரம்பித்தாள் தமயந்தி,

...................................................தூமணிப்
பொற்றடர் தோளினாய் பொன்னம் புள்ளினைப்

பற்றி தருகெனப் பணிந்து கூறினாள்."

'காதலியின் விருப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்,' இந்த வேதவாக்கியந்தான் கண்முன் நின்று, அவன் இதயத்தையும் ஊக்கியது. பென் பேச்சைக் கேட்டு, மான் பின்னே ஓடி அவதியுற்ற அந்தாமனின் உதாரணன்கூட அப்போது மறைந்து விட்டது.

அன்னத்தைப் பிடிக்க வலை கிலை ஒன்று மில்லையே! – ஏதாகிலுமோர் முண்டைக் கொண்டாவது சமாளித்துப் பிடிக்கலாம்! அமானுஷ்யமான அவ் வனத்தில் முண்டும், துண்டும் இவருக்கு விற்க, எந்த ஆவண வீதியும் தயாா யிருக்கிறதா என்ன? இவன் அணிந்திருப்பதோ ஓர் ஆடை; அவள் உடுத்தி இருப்பதோ ஓர் சேலை; அன்னத்தை எவ் வகையிலும் பிடித்து விட வேண்டும்; வழி?

பார்த்தான் நளன். ஒன்றுமே தோன்றவில்லை. காந்தி வீசம் அந்தச் செவ்வதனம் வருந்தி கருகியது. ஆனால், சட்டென ஒளி வீசுகிறதே! உவகையின் மலர்ச்சியை அவ்வலிய புஜங்கள் எவ்வளவு லாவகமாய் காட்டுகின்றன! இதோ, தமயந்தி பேசுகிறாள்! அதிலே, ஏதேனுமோர் 'யுக்தி' இருக்கு மென்று நம்புகிறான் அவன்.

''ஓர்துகி லிருவரு முடுத்து மற்றையோர்

காரகிற் றீம்புசை கமழு நீவிகொண்

டேர்குடி யிருந்தென விலைகொள் பூணினாய்

வார்சிறைப் புள்ளினை வளைத்து மென் றனன்"

விலை மதிக்க வொண்ணா ஆபரணங்களணிந்து, அழகுக்கே இருப்பிடமாய்த் திகழும் நளன் சம்பியது சரியே! வாசனை வீசும் அந்தச் சேலையை இருவரும் பகிர்ந்து கொண்டு, நீள் சிறை அன்னத்தைப் பற்றுதற்கு ஆயத்தமாய் விட்டனர்.

கருத்து விசாலமான கண்களை யுடைய தமயந்தி விரும்பும்படி, தன் கைத் துணி கொண்டு அன்னத்தைப் போர்த்தினான். அவ்வளவு தான். “தன் போன்ற தேவர்களை ஒதுக்கி விட்டு, ஒரு நரனை இச் சித்தாளே! பார்க்கிறேன் ஒரு கை' என்ற இந்த வஞ்சக எண்ணங்கொண்டு போந்தகலி, அன்ன உருவில், அகப்பட்ட துகிலையம் பறித்துக்கொண்டு விண்ணிலே பறந்து மறைந்தான்.

"கருந்தடங் கண்ணிதன் னுள்ளங் காமுறத்

திருந்துவேற் நடக்கையான் றுகிலிந் சேர்த்தலும்

பொருந்திய துகிலொடும் வஞ்சம் பூண்டெதி

ரிருந்தபுள் வந்தாரத் தெழுந்து போயதே"

 

பசும்தோல் போர்த்த அப் பொன்னிற அன்னத்தின் சூதை அறிந்ததும் தமயந்தியின் பிரகாசமான கண்கள் கலம்சி நீரைச் சொரிந்தன. நளனின் மனமும் விம்மி பொருமியது. ஆனால், இம் மாதிரி ஏமாற்றங்களினால் மட்டும் அவர்களின் தெய்வீகக் காதல் கயிற்றின் முறுக்குகள் சிறிதேனும் தளர்ச்சி யுறவில்லை.

காதல் பந்தத்தில் கட்டுண்ட காரிகை கவலும் போது, காத்துத் தேற்றுவது - காதலனின் கடனன்றோ? நளனும், மெதுவாய் கூந்தலை கோதியபடி தன் காதலியின் மெலிவை அகற்றினான். அதற்காக அவன் உச்சரித்த ஆறுதல் மொழி ஒன்றே ஒன்று தான்.

"வினைவலி - இது" ஆமாம்! வேறென்ன முடியும் அவனால்!

ஆனந்த போதினி – 1942 ௵- ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment