Tuesday, September 8, 2020

 

ஹிந்துக்கள் (மிக முக்கியமாய் சைவசமயிகள்) கவனிக்க வேண்டியவை

 

1. உலகத்திலே பற்பல சமயங்களுண்டு. அவ்வெல்லாமதங்களிலும், ஒரேகடவுள் நானாவிதமான ரூபங்களோடும் பெயரோடும். அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாரென்பது அறிஞர்களெல்லாரும் ஒத்துக்கொண்ட விஷயம். இவ்வாறிருக்கையில், ''உன் சமயத்திலே, கூறப்பட்ட கடவுள் பொய். எங்கள் மதத்தில் தான் மெய்யான கடவுளிருக்கிறார். அவரால் தான் மோட்சமடைய எலும்'' என்று கூறுபவர் எவ்வளவு பெரிய தவறுடையவராயிருக்க வேணும். ஒரு சமயத்தவர், மறு சமயத்திலிருக்கும் பேதையரையே மாற்றி அச்சமயத்திலு முண்மை யிருக்கிறதென்பதை யறிந்தும், வீண் பொய்க்கூற்றுக்களைக்கூறி, ஏய்த்துத் தம்மதத்திற்குத் திருப்புவது, எவ்வளவு அசூசியான செயலாயும் முழுமுதற் கடவுளுக்கே யொப்பாததாகவுமிருக்கும். பிறமதத்தவர்கள் எளிதில் தங்கள் வலைக்குள் அகப்படக்கூடிய இரை எவ்விடத்திற் கிடைக்குமென்று தேடுகின்றார்களென்றாலோ, தங்கள் சமயத்தின், உண்மையறியாத பாமர இந்துக்கள் மீதே, இவர்கள் தங்கள் மாய வலையை வீசி யவர்களை மயக்கிவிடுகின்றார்கள். இதற்குக் காரணம் யாது? என்று விசாரிக்கப்புகில், நம் நாட்டிலிருக்கும் படிப்பு வாசனைக்குறைவும், தாய்ப்பாஷைத் தேர்ச்சிக்குறைவும், சொந்த சமயத்தின் ஆராய்ச்சியின்மையும், அதனறியாமையும், ஏழ்மைத் தனமும், இன்னோரன்ன பல காரணங்களே யாகும்.

 

2. இவ்வித கேவலமான செயல்கள், இந்தியா இலங்கைப் பகுதிகளில், ஏராளமாய் நடைபெறுகின்றன. பெரும்பாலான சனங்கள், தக்க கல்வி கற்கக்கூடிய நிலைமையிலில்லை. அன்னோர் பெரும் வறுமையினால் வருந்துகின்றனர். அவர்களுக்குச் சீவனத்திற்கு வழிகாட்டுவதாகச் சொல்லி, தங்கள் மதத்திற்கு அழைக்க, பிறமதத்தவர்கள் கூச்சப்படுகிறார்களில்லை. இவ்விடங்களிலிருக்கும் வித்வான்களான சைவசமயிகள் தங்களுக்குக் கடவுளாற் கொடுக்கப்பட்ட கல்வித்திறமையை, அவர் ஊழியத்திற்காகப் பிரயோசனப்படும்படி செய்யக்கருதுவதில்லை. இவர்களிடம் சமயாபிமானமில்லாமையின் பொருட்டு, எவ்வளவு துக்கப்பட வேண்டியிருக்கின்றது. மற்ற மதங்களில் தமது மதத்தின் மகிமையையும், சாரத்தையும் விளங்கப்பண்ணிப் பிரசாரம் செய்யச் சம்பளம் பெறும் போதகர்களுளர். அவர்கள் கடவுள் ஊழியத்திற்காகத் தங்கள் சீவனத்தை யர்ப்பணஞ் செய்கின்றார்கள் இவர்களின் தொழில்கள் முற்றாக இவ்விஷயங்களிலே செல்கின்றன.

 

3. சைவசமயிகளிலும் மதாபிமானத்தால் ஏவப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக உழைப்போரில்லை யென்று சொல்ல ஏலாது. ஆனால் அவ்வகையானோரை மற்ற மதத்தவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, மிகக்கொஞ்சம் பேரேயுளரென அறியலாம். சைவசமயிகளில், இப்போதிருப்பதிலும் பார்க்க இன்னும் அனேகம்பேர், தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்க்கையையும், தங்கள் கல்வியையும், நமது மதத்தின் மேம்பாட்டிற்காகவும், அதைப் பழைய உன்னத நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், அர்ப்பணஞ் செய்து, தங்கள் வாழ்நாளை யதற்கே செலவழிப்பார்களானால், நமது சமயம், மேன்மேலும் பெருகித் தழைத்தோங்கும் என்பதில் ஐயமின்றாம்.

 

4. இவ்வாழ்க்கையிலிருப்போனுக்கு சமயத்தொண்டு புரிய விருப்பமிருந்தாலும் அவகாச மதிகமேற்படாது. அவனுடைய மனமானது பெண்டு, பிள்ளைகளுக்காக வேண்டிய பொருள் தேடுதலில் அதிகமாக ஏவப்பட்டு ஈசனுடைய காரியங்களின் தொழிலில் மிக்க குறைவு பெறும். ஆயினும் அவனும் தன் வாழ்நாளின் ஓர் பாகத்தை இத்தகைய ஈசுவரத் தொண்டில் செலவிட வேண்டியது அவன் கடமையேயாகும். அதோடு வேறு வழிகளிலும் இதற்கு உதவி புரிய வேண்டும்.

 

5. "கற்றதனாலாய பயனென்கொல், வாலறிவனற்றாள் தொழாஅ ரெனின்'' என்பதற்கிணங்க, தன் சொந்தமதத்தைப்பற்றி நன்றாக வாசித்து, ஆராய்ச்சி செய்து, அதனுண்மையைத் தெரிந்து, அதனாலடையும் பெரும் பேற்றைப் பெற்று மகிழ்வதல்லவோ, இம்மானிடச் சென்ம மெடுத்ததின் பயன்! இஃதல்லாமல், கற்கத் தகுதியற்றவர்களாயும், பாமரர்களாயுமிருக்கும், சகோதர சகோதரிகளுக்குத் தானுணர்ந்த உண்மையை, விளக்கிக் காட்டி, அறிவூட்டி, அவர்களையும் மேம்பாடான பதவிக் குக்கொண்டு வருவதல்லவோ, ஒரு சீவனின்னொரு சீவனுக்குச் செய்யமான வேண்டிய பெரும் உதவி! இப்பேர்ப்பட்டவர்கள், இதர சமயங்களை ஆராய்ச்சி செய்து, அம்மதங்களிலிருப்போர் பாமர சனங்களுக்குப் போதிக்கும் பொய்க் கூற்றுகளினர்த்தத்தை யறியப்பண்ணி, நமது சமயத்தின் உண்மையைப் பிரசுரிக்கப் பண்ணுவார்களானால், மறு மதத்தவர்கள், தாங்களாகவே யடங்கி, தங்கள் ஏமாற்றுதல் பலிக்காதென்றறிந்து, இவ் விழிவான செயலிலிருந்தும் நழுவுவார்கள்.

 

6. மேலே யெடுத்துக்காட்டிய விதமாய் நம் தமிழ்மக்கள், எம்பெருமானின் தொண்டு செய்தலையே பெரிதாகக்கருதி, பாமர சனங்களுக்கு மதபோதனை செய்து அனாதியாகிய நமது சமயம் தழைத்தோங்க, இறைவன் திருவருள் புரிவாராக.

 

வ. முத்துச்சாமி.

 

குறிப்பு: - ஜீவகாருண்யம், ஈசுரபக்தி, தருமம், ஞானம் இவற்றால் பிரசித்திபெற்றது நமது புண்ணிய பூமியாகிய பாரதநாடு ஒன்றே. முற் காலத்திலிருந்ததைவிட அவை யிப்போது குறைந்திருந்தாலும் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கின்றன. என்றும் இருந்து கொண்டுதானிருக்கும்.

 

ஆனால் இக்காலத்தில் தருமத்தைச் செய்பவர்கள் பாத்திரமறிந்து செய்ய வேண்டுமென்பதையும், காலத்திற்கு அவசியமான வழியில் செய்ய வேண்டு மென்பதையும் சற்றும் கவனிக்கிறார்களில்லை. ஈசுவரனுக்கு வேண்டியது ஒன்றுமேயில்லை. மற்றபடி அவரை யொரு சொரூபமாகப் பாவித்து நாம் அவருக்குச் செய்யும் சோடசோபசாரப் பூசையும், உத்ஸவாதிகளும், அவரிடம் பூரண அன்பாகிய அநந்நியபக்தி வைக்க முடியாததால், ஒருவிதமாய் நமது பக்தியை வெளியிடும் செய்கைகளேயன்றி வேறில்லை. நம் முன்னோர்களாகிய சமயாசாரிகள்,


 "ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
 ஆல வாயி லுறையுமெம் மாதியே''

என்ற நோக்கங்கொண்டே நாடெங்கும் சென்று நமது வேதாகமங்களைப் போதித்து நித்தியத்வமுடைய நமது அனாதிமதத்தைப் பரவச்செய்தார்கள்.

 

புறச்சமயத்தவர்கள் பலவித வஞ்சத் தந்திரங்களால் நம்மவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுத்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் நம்மவர்க்கு நமது மதத்தின் பூரணத்தன்மையையும் அழியா உண்மையையும் எடுத்துக் காட்டி, அவர்கள் புறச்சமயத்தவருடைய மாயத்தில் சிக்காதபடி காப்பாற்ற வேண்டியது நமது மதம் குன்றாதிருக்கக் கருதுவோர் செய்ய வேண்டிய அவசியமான வேலை. அதைக் கவனிப்போர் ஒருவருமில்லை. இக் காலத்திற்கு அதுவே சிறந்த ஈசுவர கைங்கரியம் என்பது கவனிக்கப்பட வில்லை.

 

இக்காரியத்தைச் செய்யவேண்டியவர்கள் முதலாவதாக, மடாதிபதிகள், மதத்தலைவர்கள், சந்நியாசிகள் இவர்களே. இவர்களோ இதைப் பற்றி கனவிலும் நினைப்பதில்லை. இவர்கள் இலௌகீக காரியங்களிலேயே தங்கள் கவனம் முழுமையும் பெரும்பாலும் செலுத்துகிறார்கள். கவர்னர் முதலிய பெரிய அதிகாரிகளுக்கு விருந்து முதலிய உபசாரங்களைச் செய்வதில் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்கிறார்கள்: "நாம் இப்படிச் செய்வதால் தான் தருமஸ்தாபன மசோதா முளைத்து நம்மதத்தை விழுங் கப்பார்க்கிறது'' என்ற பயங்கரமான உண்மையைக் கூட இவர்கள் கருதாதிருப்பது மிக்க விசனிக்கத்தக்கதே.

 

சந்நியாசிகளில் கல்வியறிவுடையோரும் கூட இதைக்கவனிப்பதில்லை. அவர்கள் புதிதாய் மடங்கள் தாபிக்கவும், பல விடங்களுக்குச் சென்று மடத்திற்குப் பொருள் சேகரிக்கவும், புகழ்பெறவும் ஆவலுள்ளவர்களாக விருக்கிறார்கள்.

 

இல்லற வாசிகளாயுள்ளவர்களில் கல்வி கற்றோரோ - அவர்களில் பெரும்பாலோர் மதசம்பந்தமான விஷயங்களை நினைப்பதேயில்லை. ஏனெனில் அவர்கள் இலக்கண இலக்கியத்தாலாய பாஷைக்கல்வியில் பிரசித்தி பெறுவதையும், அதனால் பொருள் சம்பாதிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பதால் மறுமைப்பயனை யடையும் முயற்சி எடுத்துக்கொள் வதேயில்லை. ஆன்மார்த்தக் கல்வியேனும் ஈசுரபக்தியேனும் அவர்களிடம் காண்பதரிதே யெனலாம்.

 

நமது மதத்தைவிட்டு அன்னியமதம் புகுந்தோர், புகுவோர் இவர்
 களில் மிகப் பெரும்பாலர் கீழ்ச்சாதியென்றும் தீண்டப்படாதவர்களென்றும் நாம் ஒதுக்கிவைத்திருக்கும் தாழ்ந்த வகுப்பினரே. நாம் அவர்களையவ்வாறு நடத்துவதே அன்னிய மதத்தினர் அவர்களை இழுத்துக் கொள்வதற்குப் பெரிய உதவியாயிருக்கிறது. அன்னிய மதப்பிரசாரகர் நம்மவர்களாகிய கறுப்பு மனிதரை உள்ளத்தில் மிக்க தாழ்ந்தவர்களாகவும், அநாகரீகர்களாகவும், ஒருபோதும் சமமாய் நடத்தற்குரியவர்களல்ல வென்றுமே கருதுகிறார்கள். ஆனால் தந்திரமாய் வெளிக்குச் சமமாய் நடத்துவதாகக்கூறி அபிநயிக்கிறார்கள். நாம் நம்மவர்களுக்குக் கல்வியும் மதபோதனையுமளித்து சுத்தமாயிருக்கக் கற்பித்து அவர்களைச் சகோதர பாவமாய் நடத்தினால் பிறகு ஒருவர் கூட அன்னியமதம் புகார்களென்பது திண்ணம்.

 

மடாதிபதிகள் மடங்களில் சந்நியாசிகளைப் பயிற்சி செய்து அவர்களைக் கொண்டு நம் தேசக்ஷேமத்திற்கும், மதத்தின் க்ஷேமத்திற்கும் அவசியமான இப்பெரும் புண்ணியச்செயலைச் செய்விக்கலாகாதா! சம்பளம் கொடுத்தால் இல்லறவாசிகளும் இத்தொழிலுக்கு வருவார்கள். மடாதிபதிகள் கொஞ்சம் சிரத்தை யெடுத்துக்கொண்டால், சிவதருமத்திற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் வருமானத்தை யதிகமாய் இதற்குச் செலவு செய்ய விரும்பாவிடினும், சுலபமாகவே ஒரு புதுநிதியே சேகரிக்கக் கூடுமன்றோ. அவர்கள் அத்தகைய வேலையைச் செய்விக்கத் தொடங்குகிறார்களென்று தெரிந்தால் தரும் சிந்தனை நிறைந்த நாட்டுக்கோட்டை செட்டிமார்களும், தென்னாட்டிலுள்ள பக்திமான்களான ஜமீன்தார்களும், மற்ற விடங்களிலுள்ள செல்வவந்தர்களும் பொருள் உதவி செய்வார்கள் ளென்பதில் சற்றும் ஐயமின்றாம்.

 

எல்லாம் வல்லகருணா நிதியாகிய பொன்னம்பலக் கூத்தனே அவர்கள் மனம் இவ்வழியில் திரும்பச் செய்து அருள்புரிய வேண்டுமாய் அனைவரும் பிரார்த்திப்போமாக.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment