Monday, September 7, 2020

 

 

வேதாந்த சூடாமணி வசனம்

(தமிழ்ப் பண்டிதர் பூ. ஶ்ரீநிவாசன்)

 

முன்னுரை.

 

உலகம் தோன்றிய நாள் தொட்டு அதாவது எப்பொழுது மனிதர் தோன்றினரோ அது முதலே, பெரியோர் இவ்வுலகின் தன்மையை ஆராய்ந்து, இதற்குக் காரணமொன்றிருத்தல் அவசியமாமென்றும் ,தனக்கொரு காரணத்தைப் பெறாது தானே எல்லாவற்றிற்குங் காரணமான அதினின்றுண்டான காரியமே இவ்வுலக மென்றும், காரியப் பொருள் எத்தனை கால மிருப்பினும் ஒரு காலத் தழியக் கூடியதே யென்றும், அங்ஙனம் தோன்றி நின்றழி தன் மாலையதாகிய இவ் வுலகத்திற் பிறந்த உயிர்களனைத்தும் தனித்து இன்பத்தையோ அன்றித் துன்பத்தையோ துய்த்தலின்றி இன்ப துன்பங்களைக் கலந்தே நுகர்தலால் இங்ஙனம் நுகர்தற்குரிய காரணத்தை ஆராயுமிடத்து அவை புரியும் நல்வினை தீவினைகளாகிய கர்மமேகாரணமா மென்றும், அங்கனம் துய்க்குமின்பமும் துக்கக் கலப்புடையதாகவே யிருத்தலின் பிறவியே துக்க வேது என்றும், அப்பிறவியின்மையே பேரின்பமயமாம் என்றும், அங்ஙனம் பிறவியறுதற்கு பிறப்பிறப்பற்ற உலககாரண வஸ்துவை எய்தலே ஏற்ற உபாயமாமென்றும், அதனை எய்த வேண்டுமாயின் அதன் தன்மையையும் அதனை யடைய விரும்பும் நமது தன்மையையும் ஆராய்ந் துணர வேண்டுவது அத்தியாவசியமாம் எனவும், எண்ணியாராய் வுழி அது நாமாகவும் நாம் அதுவாகவும் இருப்பதே யன்றி, அதற் கன்னியமாக நாமும் நமக்கன்னியமாக அதுவும் இருத்தலில்லையாயினும் அதன்வடிவமாக விருக்கும் நாம் நமது உண்மைச் சொரூபத்தை அறியாமையால் துன்பக் கடலுளாழ்ந்து கிடக்கின்றோ மன்றி உண்மையை யறியுமிடத்து நமக்குத் துன்பமென்பது எட்டுணையு மின்றென்றும், துன்பமில்லாதிருந்தும் துன்பமிருப்பதாகக் காட்டியும் நமது உண்மைச் சொரூபத்தை அறிய வொட்டாது மறைத்தும் நாமல்லாதவற்றை நாமென மயங்குமாறு செய்தும் வருவதாகிய ஒன்று இருக்கிற தென்றும், அதுவே மாயை, அஞ்ஞானம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுதற்குரியதா மென்றும் நன்கு கண்டு அவ்வஞ்ஞானம் நீங்க மெய்ஞ்ஞானம் அடைதல் வேண்டு மென்றும், அந்த ஞானம் தன் சொரூபத்தை அறிதலேயாம் என்றும், தன்னை அறிந்த பின் தன்னின் வேறாகாத தலைவனை யறிதல் கூடுமென்றும், ஆகவே, தன் சொரூபத்தை அறிந்து பிறவற்றின் சம்பந்தத்தினின்று நீங்கி அச் சொரூபத்திலே தானே நிலைத்து நிற்போமாயின் காரணவஸ்துவாகிய கடவுளை எய்தியவர்களாவோ மென்றும், அதுவே வீடு அல்லது மோக்ஷம் எனப்படுவதா மென்றும் நிச்சவித்து, அதற்குரிய நெறிகளையும் அனுபவவாலாக வாராய்ந்து கண்டு, அந்நிலையிலே தானே நின்று கடவுளருள் பெற்று ஜீவ தசையிலே தானே முத்தியின்பத்தை யடைந்து இன்பவடிவினராய் ஜீவன் முத்தராய் விளங்கி, தாம்கண்ட உண்மைகளைப் பிறரும் உணர்ந்துய்யுமாறு உலோகோபகாரமாகப்பல நூல்களின் வாயிலாக அறிவுறுத்திச் சென்றனர். அவைகளை வேதம் முதலிய நூல்களாம். கடவுளருள் பெற்றவர்களாகிய பெரியோரால் தரப்பட்டவையாகலின் அவை கடவுளால் அருளப்பட்டவை யெனவும், அங்ஙனம் காலவரையறை கண்டறிய இயலாமையின் அவை அநாதி என்றும் ஆன்றோரால் அறியப்படுகின்றன.

 

அத்தகைய அனாதி அபிப்பிராய மென்னும் வேதங்களில் ஞானமே முத்திக்கு வழி எனச் சித்தாந்தப்படுத்திக் கூறும் இறுதிப்பாகம் வேதாந்தம் எனப்படும் (வேத = அந்தம்). எனவே, வேதாந்தம் என்பதற்கு, " வேத முடிவில் பிரதிபாதிக்கப்படுவதாகிய ஞான பாகம்; அதாவது வேதத்தினுடைய முடிவான அபிப்பிராயம்'' என்பது பொருளாகின்றது. அதவே உபநிடதங்களெனப்படும். வேதத்தின் முற்பகுதிகள் ஞானத்திற்கு முன் முன்சாதனங்களாகவுள்ள கர்ம உபாசனைகளை இயம்புவனவாம்.

 

அவ்வேதாந்த மாகிய உபநிடதங்களை முதனூலாகக் கொண்டு, அவற்றின் கருத்துக்களை விளக்கமாகவும் சுருக்கமாகவும் மந்தருக்கும் பயன் றருமாறு கூறப் பல நூல்கள் பல பெயர்களால் பல பெரியோர்களா லியற்றப்பட்டன். அவற்றுள் 'வேதாந்த சூடாமணி' யென்னும் பெயரிய இந்நூலும் ஒன்றாம். இவ்வேதாந்த சூடாமணி, நிஜகுண யோகி என்னும் பெரியார் கன்னட பாஷையிலியற்றியுள்ள விவேக சிந்தாமணியிலுள்ள வேதாந்த பரிச்சேதத்தையும், அதற்கு ஸ்ரீ வியாச பகவான் செய்த பிரஹக சூத்திரத்திற்கு ஸ்ரீ சங்கரபூஜ்ப பகவத் பாதாசாரிய சுவாமிகள் செய்த வியாக்கியானத்தின் கருத்தைத் தழுவி ஸ்ரீ விவாணாசாரியார் என்னும் பெரியாரி யற்றிய உரையையும் பெரும்பாலும் தழுவி எழுதப்பட்டதாம்.

 

வேதாந்த சூடாமணியின் ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளாகர். இவரது காலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய முந் நூறாண்டு கட்கு முன்னென்ப. பிரபுலிங்க லீலை, (இது ஆனந்தபோதினி வாரவெளியீட்டில் எளிய வசன நடையில் சில வாரங்களாக எம்மால் எழுதப்பட்டு வருகின்றது. வேண்டுவோர் ஆண்டுக் காண்க.) நன்னெறி, சித்தாந்த சிகாமணி, நால்வர் நான்மணி மாலை, வேதாந்த பரிபாஷை, வெங்கைக் கோவை, வெங்கையுலா முதலிய பல நூல்களை இயற்றியருளிய கவிச்சக்கரவர்த்தியாராவர். இவரால் இயற்றப்பட்ட பிரபுலிங்க லீலை கற்பனைக் களஞ்சியமாயிருத்தலின் புலவர்களால் பொன்னே போற் போற்றப்படுதல் பிரசித்தமாம்.

 

இந்த ஞான வேந்தராலியற்றப்பட்ட இந்நூல் வேதாந்த தாத்பரியங்களைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் அறிவித்தலின் வேதாந்தத்திற் பழகுவோரனைவரானும் ஆரம்பத்திற் சற்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமாம். இத்தகைய நூல் யாவர்க்கும் பயன்படுமாறு 'ஆனந்தபோதனி' யில் எளிய வசன நடையில் எழுதல் வேண்டு மெனப் பல அன்பர்கள் விரும்பினமையின் அவ்வாறே எழுதத் துணிந்தனன். இதற்கு முன் வெளியிட்டு வந் தவேதாந்த சாரசங்கிரக வசனத்தையும் ஏனைய வியாசங்களையும் ஆதரித்து வந்த நண்பர்கள் இதனையும் ஆதரிப்பார்களென்ற நம்பிக்கையுடன் உபாசனாமூர்த்தியின் திருவருட்டுணையையும் பெரியோர்களின் அனுக்கிரகத்தையும் ஆதரவாகக் கொண்டு எழுதத் தொடங்குகின்றேன். பிராந்தி பிரமாதிகளால் பிழைகள் கேரின் அன்பர்கள் மன்னிப்பார்களாக.

 

இதனை எழுதுமாறு என்னுள்ளத்தினின்று தூண்டிய எங்கும் நிறைந்து எம்பெருமான், இஃது இனிது முடியுமாறு அருள் புரிவாராக.


ஓம். தத்
த்.

 

நூல்.

காப்பு.


 தருணமா துமைமுகத் தாமரைக் கெழு
 மருணனா மெனவுதித் தடியார் பாற்புரி
 கருணைமா மதமெனக் காட்டுமாமுகன்
 சரணவா ரிசமலர் தலையிற் கொள்ளுவாம்.

 

நூல்வரலாறு ஆக்கியோன் பெயர் முதலியவற்றைக் கூறுவனவாகவுள்ள ஆறு செய்யுட்கள் ஈண்டு விடப்பட்டன.) (நூலின் ஆரம்பத்தில், அந்நூல் இனிது முடிதற் பொருட்டு மங்களாசரணம் (கடவுள் வணக்கம்) செய்யப்பட வேண்டிய தவசியமாதலின் அம்மங்களா சரணத்தின் வகையினைக் கூறுகிறார். மங்கலம் = விக்கின நாசத்திற் கநுகூலமான வியாபாரம் என்பது விசாரசாகரக் குறிப்புரை.)

 

நூலாரம்பத்திற் கூறப்படும் மங்களாசரணையானது வாழ்த்து, வணக்கம் பொருளியல் புரைத்தல் என மூன்று வகைப்படும். (இவற்றை முறையே ஆசீர், நமஸ்கிரியை, வஸ்து நிர்த்தேசமென்பர் வட நூலோர்) 'நமச்சிவாயவாழ்க பல்லாண்டு பல்லாண்டு' என்றாற் போலக் கடவுளை வாழ்த்துவதாகக் கூறுவது ஒருவகை. இது வாழ்த்து என்னும் மங்களாசரணமாம். கமல்வணங்குவாம் என்றாற் போலக் கடவுளை வணங்குவதாகக் கூறுதல் வணக்கமென்னும் மற்றொரு வகை மங்களாசரணமாம். பொருளின் (கடவுளின்) இயல்பை மட்டும் கூறுதல் வஸ்து நீர்த்தேச ரூப மங்களாசரணமாம்.

 

ஓர் நூலுக்கு உரை கூறுங்கால் அனுசரிக்கவேண்டிய விதிகள் அதாவது வியாக்கியான லக்ஷணங்கள் வருமாறு: -

 

உரையி னிலக்கணம்: - பதங்களைப் பிரித்தல், பதப்பொருள் கூறல், வாக்கிய யோசனை அதாவது வாக்கியத்தின் முடி பொருளை ஆராய்ச்சி வாயிலாகக் கூறல், அப்பொருளிற் காணப்படும் வினாவைக் கூறுதல், அதற்கு விடை கூறுதல் என ஐந்து வகையாம். இனி,

 

அவ்வுரையின் கண் சேர்த்துச் சொல்லப்படும் விசேஷணம், விசேஷியம், கர்த்தா, கர்மம், கிரியை என்னும் இவ்வைந்தும் அந்வய லக்ஷணமாம், (அந்வயம் என்பது தமிழிலக்கணத்தில் பொருள் கோள் எனப்படும். பொருள் கோளாவது சொற்கள் பொருக்களைக் கொள்ளும் விதமாம்.)


 உதாரணமாக: -


''தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கடந்தல்
 வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
 அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
 வங்கத்துச் சென்றார் வரின்.''


என்னும் ஓர் செய்யுளை எடுத்துக் கொள்வாம் இதற்குப் பொருள் கூறவேண்டின், பொருளுக்கு இசைவாகப் பின்வருமாறு இச்செய்யுளிலுள்ள பதங்களைப் பிரித்துக் கூறப்பட வேண்டும்.
 

அது வருமாறு: -


'வங்கத்துச் சென்றார்வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தல் மாமேனி (மேல்) தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழி வெண் முட்டையுடைத் தன்ன பசலை, தணிவாம்' என்பதாம். இதுவே பொருள்கோள் அல்லது அந்வயமாம்.

 
விசேஷணம் விசேஷியம் கர்த்தா கர்மம் கிரியை என்னு மிவ்வைந்தும் தமிழிலக்கணத்தில் முறையே அடைமொழி, அடைகொளி, எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப்படும்.

 

உதாரணமாக: - 'இராமன் பச்சை மரத்தை வெட்டினான்' என்னுமிடத்து, இராமன் கர்த்தா (எழுவாய்), பச்சை விசேஷணம் (அடைமொழி) அதாவது மரத்தின் தன்மையைக் காட்ட (விசேஷத்தைக் காட்ட) அடுத்துவரும் மொழி, இதில் பச்சை என்னும் பதம் மரத்தின் தன்மையை விசேஷிக்க வந்தது காண்க. விசேஷணத்தால் விசேஷிக்கப்படுவது விசேஷியமாம். அதாவது அடை மொழியால் அடுக்கப்படும் மொழி அடைகொளியாம். இங்கு, மரம் விசேஷியமாம்; பச்சை மரம் கர்மம் (செயப்படுபொருள்); வெட்டினான் கிரியை (பயனிலை); என வறிக.)

 

கவனிப்பு: - விஷயங்களை மனதில் நன்கு பதியவைத்துக் கொள்ளுதற் கனுகூலமாயிருக்கும் பொருட்டுச் செய்யுள் வாக்கியங்கள் ஈண்டுக் காட்டப்படுகின்றன. செய்யுள் முழுவதையும் எழுதுவதை விட விஷயத்திற் கேற்ற வாக்கியங்களை மாத்திரம் காட்டுதும். அவை சிறு வாக்கியங்களாக விருத்தலின் மனனம் செய்தற்கும் எளிதாம். அன்றியும், செய்யுளைப் படிப்போர்க்குப் பொருள் காண்பதும் எளிதாகும்.

 

முன் சஞ்சிகையிற் கூறப்பட்ட விஷயங்களுக்குரிய வாக்கியங்களையும் இங் கு எழுதுவாம்.

 

(1) மங்களாசரணை யென்பதற்கு

"வாய்த்த நூன்முகத்துரைக்கும் மங்களாசாணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசமென மூன்று.''

 

(2) உரையினிலக்கணம் ஐந்து வகை என்பதற்கு,

 

“ஆர்த்தபதம் பதப்பொருளே வாக்கிய யோசனையே யறி வினாவிடையிவையைந் துரையி னிலக்கணமாம்.”

 

(3) அந்வய இலக்கணம் ஐந்து என்பதற்கு,

 

“கோத்துரை செய் விசேட விசேடியங் கருத்தா கருமங்கொள் கிரியை யிவையைத் தந்நுவய விலக்கணமாம். "

 

இனி, நூலுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதாகிய அநுபந்த சதுஷ்டயம் உரைக்கப்படுகின்றது.

 

அநுபந்தமாவது: - தன்னை (அநுபந்தத்தை) வாசித்த பின்னர் முமூட்சுக்களை இந்நூலை வாசிக்க வேண்டுமென்று பிரவிர்த்தி யுண்டாக்குவது அதாவது ஏலோடு சம்பந்தப்படுத்துவது.


அநுபந்த சதுஷ்டயம்: -

 

"சாற்று மநுபந்த சதுஷ்டய நூற்கு விடயஞ் சம்பந்தம் பயன திகாரிகளென நான்கறியே. "


அந்த அநுபந்தம் விஷயம், சம்பந்தம், பயன் (பிரயோஜனம்), அதிகாரி என நான்கு வகைப்படும்.

அவற்றுள்,

     

      (1) விஷயம்.

"விடயமது சிவ்சீவர் தம தேகத்துவமாம்."

 

நூலிற் கூறப்படும் விஷயம் இன்னதெனக் கூறல் விஷயமாம். ஆகையால், இந்நூலிற் கூறப்படும் விஷயம் சிவசீவர்களின் ஐக்கியமாம். அதாவது ஜீவப் பிரஹ்ம ஐக்கியமாம்.


(2) சம்பந்தம்: -

 

“விமலனொடு நூற்கு அறையப்பட லறையுந்தன்மை யடைதலுறுசம்பந்தம்.''

(சம்பந்தம்: - பிரதிபாத்தியப் பிரதிபாவக பாவசம்பந்தம், பிராப்பியபிராபக பாவசம்பந்தம், கர்த்துரு கர்த்தவ்விய பாவசம் பந்தம், ஜனக ஜன்னிய பாவசம்பர்தம், சாத்திய சாதன பாவசம்பர்தம் என் பனவும் பிறவுமாம்.

 

ஓர் நூலுக்கும் அதிற் கூறப்படும் விஷயத்திற்கும் உள்ள சம்பந்தம் பிரதிபாத்தியப் பிரதிபாதக பாவசம்பந்தமாம். நூலை வாசித்தற்குரிய அதிகாரிக்கும் அவனால் அடையப்படும் பலனுக்கும் உள்ள சம்பந்தம் பிராப்பியபிராபக பாவசம் பந்தமாம். அதிகாரிக்கும் அவனால் செய்யத் தகுந்த காரியத்திற்கும் அதாவது நூல் விசாரத்திற்கும் உள்ள சம்பந்தம் கர்த்துரு கர்த்தவ்ய பாவசம்பந்தமாம். நூலுக்கும் அதனாலுண்டாகும் ஞானத்திற்குமுள்ள சம்பந்தம் ஜநக ஜந்திப பாவசம்பந்தமாம். ஞானத்திற்கும்லடையப்படும் மோக்ஷத்திற்குமுள்ள சம்பந்தம் சாத்திய சாதனபாவ சம்பந்தமாம்.) ஆகவே, இந்நூலிற் கூறப்படும் விஷயம் பிரஹ்மமாகலின், பிரஹ்மத்திற்கும் இந்நூலிற்குமுள்ள சம்பந்தம் பிரதிபாத்தியப் பிரதிபாதக பாவ சம்பந்தமாம். விஷயத்தைச் சொல்லுவது - பிரதி பாதகம்; நூல். நூலிற் சொல்லப்படுவது - பிரதிபாத்தியம்; பிரஹ்மம்.

 

(இதனை ஆசிரியர் அறையப்படல் அறையுந்தன்மை' எனத் தமிழ்மொழியாற் குறித்த நயம் போற்றத் தக்கதாம். அறையப்படல் - பிரதிபாத்தியம்; அறையுந்தன்மை - பிரதிபாதகம்.)


(3) பிரயோஜனம்: -

“பயன், துயரெல்லாம் நீத்து ஆனந்தபதம் பெறுதல்.''

 

இந்நூலை வாசிப்பதனாலுண்டாம் பயனாவது: - -அனர்த்த நிவர்த்தி ஆனம் எந்தப பிராப்தியாம். (அனர்த்த நிவர்த்தி ஆனந்தப்பிராப்தி மோக்ஷத்தின்சொரூபமாம். எனவே, முத்தி பெறுதலே இக்கிரந்தத்தின் பிரயோஜனமாம்.)


(4) அதிகாரி: -

 

“சாதனம் நான்கினையு முடையவனே யதிகாரி. "

 

நான்கு சாதனங்களை (சாதன சதுஷ்டயத்தை) யுடையவனெவனோ அவனே இந்நூலை வாசித்தற்குரிய அதிகாரி யாவான். ஏனையோர் அதிகாரிகவாகார்.


இனி, நான்கு சாதனங்கள் எவை யென்பதைக் கூறி விளக்குகின்றார்.


நான்கு சாதனங்கள் இவை என்பது.

 

"உரைத்த சாதன சதுட்டயம் நித்த அநித்தப்படு பொருளின் விவேகம், இகபரபோக விராகம், பழிப்பரிய சமை முமூட்சுத்துவம். "


(1) நித்தியாநித்திய வஸ்து விவேகம்

(2) இகபரபோக விராகம்

(3) சமை முதலிய ஆறு குணங்களை யுடைதல்

(4) முமூட்சுத்துவம் என்பனவாம். இவற்றுள்

 

(1) “நித்தியமான்மாவே பொய் விடயமெல்லாம் எனத் தேர்நிலை தருநித்தியா நித்தவத்து விவேகம்."

 

ஆன்மா வொன்றே நித்தியமாயுள்ளது; ஏனைய விஷயங்கள் (பிரபஞ்சம் முதலியன) எல்லாம் பொய் அதாவது அநித்தியம் எனப் பகுத்துணர்தலே இத்தியா நித்திய வஸ்து விவேகமாம்.

 

(2) "பின் மெத்திவரும் இகமொட முத்திரத்தில் வருபோக விராகம்இம்மை மறுமை யுளவிடய நுகர்வனைத்தும் பொய்த்தழியு மிடும்பை மயமென விடுதலாகும்"

 

முற்கூறிய நித்தியா நித்திய வஸ்து விவேகத்திற்குப் பின்னுண்டாகும் இகா முத்திரார்த்த பலபோக விராகமாவது: இம்மையிலும் (இவ்வுலகத்தும்) மறுமையிலும் (சுவர்க்காதி யுலகங்களிலும்) அனுபவிக்கத் தக்கனவாயுள்ள விஷய போகங்களெல்லாம் பொய்யா யழியத்தக்கனவும் துக்கமயமானவையுமாமென வறிந்து அவற்றினிடத்து இச்சை கொள்ளா திருத்தலாம்.


(3) "புகழ் சமையே முதலாய சட் குணங்கள் வைத்த சமை."

 

சமாதிசட்க சம்பத்தியாவது: - சமை முதலிய ஆறு குணங்களினடைவு.


(4) “முத்தி விருப்பதுவே வயங்கு முமூட்சுத்துவம்''

 

முமூட்சுத்துவமாவது: - முத்தியை யடைய வேண்டுமென்னும் விருப்பமாம்.


முன் சுருக்கமாகக் கூறிய சமை முதலியவற்றை இங்கு விளக்குகின்றார்.


''சமைதமையே திதீக்கை யுபாதி சிரத்தை சமாதி சமை முதலா மறுகுணங்கள்”.

 

“சமை, தமை, திதீட்சை, உபரதி, சிரத்தை, சமாதி என்பவை சமை முதலிய குணங்களாம். இவற்றுள்

 

(1) “உட்கரண மடக்கல் சமை.” மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணத்தை யடக்குதல் சமை யெனப்படும்.

 

(2) ''தமை தான் புறக்கரண மடக்குதல்'' புறக்கரணங்களாகிய மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்திந்திரியங்களையு மடக்குதல் தமையெனப்படும்.

 

(3) "காமாதி தணித் திடுகை திதிக்கை'' காமம் முதலியவற்றைத்தணித்தல் திதிட்சை யெனப்படும்.

(4) “கருமங்களனைத்தினையும் சுமையெனவே விடுத லுபரதி.'' எல்லாக் கருமங்களையும் இவையும் பெரும் சுமையாக வுள்ளனவாம் என்றறிந்து அவற்றை விடுதல் உபரதி எனப்படும்.


(5) சுருதி குருவைத் துணிவினால் நம்புவதே சிரத்தை. "சுருதி வாக் கியங்களையும் குருவாக்கியங்களையும் இவை ஒருகாலும் பொய்யாக மாட்டா. சத்திய மொழிகளே யாம் என்று துணிந்து நம்புவதே சிரத்தை எனப்படும்.

 

(6) "குருமொழி நெஞ் சமை வுறவே திட்பமுறல் சமாதி. 'குருநாதர் உபதேசித்த வாக்கியத்தை மனத்தில் திடமாகக் கொள்ளல் சமாதி (சமஸ் தானம்) எனப்படும்.

 

இனி, சாதன சதுஷ்டய முடையவனாகிய அந்த அதிகாரியானவன் ஆசாரியனை யடுத்துச் சேவை செய்யவேண்டும். ஆதலின் குருசேவையின் தன்மையினைக் கூறுகிறார்.

 

“ஆத்தமுட னங்கமே தானஞ் சற்பாவமாம்.''

 

குரு சேவையானது ஆப்தம் அங்கம் ஸ்தாநம் சத்பாவம் என நான்கு வகையாம். அவற்றுள்;

 

(1)    குருபரனுக் கனுகூல விருத்தி யாத்தம்"

குருநாதனுக்குப் பிரிய முண்டாகும்படி நடத்தல் ஆப்தம்.

 

(2) “உயர் குருபரன் குற்றேவலே யங்கம்.'

குருபரனது குற்றேவல்களைச் செய்தல் - அங்கம்.

 

(3) "அருட் குறவற்குரிய மனை நில முதலாமவற்றைக் காத்தலது தானமாம்.'

குருபரனுக்கு குரிய வீடு, நிலம் முதலியவற்றைப் பாதுகாத்தல் - ஸ்தானம்.

 

(4)'' சற்குருவே மெய்யாக்கண்ட சிவமென நம்புமதுவே சற்பாவம்''

 

சற்குருவைச் சாக்ஷத் பரமசிவமாகவே பாவித்தல் - சற்பாவம். வேதமானது கர்மகாண்டம் பக்திகாண்டம் ஞானகாண்டம் என மூன்று பிரிவினதா யிருத்தலின் அவற்றை யனுஷ்டிக்கும் அதிகாரிகளும் கர்மகாண்டி பத்திகாண்டி ஞானகாண்டி என மூவகைப்படுவர். அவர்களுள்,

 

(1) கர்மகாண்டி: - "உடம்பினையும் வரு குடும்பந்தனையும் யான் எனதென்றுளன் கருமகாண்டி. " தானல்லாத உடலைத் தான் என்றெண்ணுதலாகிய அகங்காரத்தையும், தன்னுடையதன்றாய், ஆனால் உடலைப் பற்றினதாயுள்ள குடும்பத்தை எனது என்று அபிமானித்தலாகிய மமகாரத்தையும் உடையவன் கர்மகாண்டி.


(2) பத்திகாண்டி: - ''எல்லாக்கிரியையு மீசற்கே திடம் பெற நின்றாக்குமவனே பத்திகாண்டி "தான் செய்யும் கிரியைக ளனைத்தையும் அவற்றின் பயனையடைதல் வேண்டுமென்னும் விருப்பமின்றி (நிஷ்காமியமாய்) ஈசுவரார்ப்பணமாகச் செய்வோன் பக்திகாண்டி.

 

(3) ஞானகாண்டி: - " செயுங் கருமமனைத்தினுக்குங் கரிதானென்றிருப்போன் மடந்தவிரும் நன்ஞானகாண்டி யெனலாகும்'' எந்தக் காரியமும் என்னால் செய்யப்படுவ தின்று. அவை சரீரம் மனம் முதலியவற்றின் தொழில்களாம். நான் அவையனைத்திற்கும் சாக்ஷிமாத்திரமே யாவேன் என்றுள்ளபடி யறிந்து அந்நிலையிலே தானே திடமாக விருப்பவன் ஞானகாண்டி.

 

இவர்களேயன்றி கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன்என்று அழைக்கப்படும் அதிகாரிகளு முளர். இவர்கள் முறையே ஒருவர்க்கொருவர் உயர்ந்தோ ராவர். இவர்களுள்

 

(1) கருமி: - "மூடமொடு தன்சாதி கருமமேபற்றி முத்தனா மவனூறுபிறப்பினிலொண் கருமி " மூடத்தனத்தால் தன் சாதிக்குரிய கருமங்களைத்தவருது செய்வதே சிறப்பா மெனக்கருதி அவ்வாறு செய்து வருபவன்கருமி. இவன் ஏறுபிறவியில் முத்தனாவான்.
 

(2) முமூட்சு: - " நீடுலக மின்மையென நினைந்து புறக்கரும நிட்டனாய் முப்பிறப்பின் முத்தனாமவனே நாடரியமுமுட்சு.'' இப்பெரிய உலகம்அசத்துப் பொருளாம் என நினைத்து பாகிய கருமநிஷ்டை யுடையவனாயிருப்பவன் முமுட்சு. இவன் மூன்று பிறவிகளில் சீவன் முத்தனாவன்.
 

(3) அப்பியாசி: - "உலகங் கனவெனக் கண்டுள்ள நற்கருமஞ் சேர்ந்துபிறப் பிரண்டுள னப்பியாசி.'' இவ்வுலகம் சொப்பன வுலகம் போன்றதாமென்றுணர்ந்து தியானாப்பியாசஞ் செய்யு முள்ள முடையவனாயிருப்போன். இவன் இரண்டு பிறப்பில் சீவன் முத்தனாவன்.
 

(4) அனுபவி: - " வீடுலக விவகாரம் நினையாமல் விவேக மேவியோர்பிறப்பினான் முத்தனனுபவியே " தன்னால் விடப்பட்ட உலக விவகாரத்தைமீட்டும் நினையாமல் ஆத்ம அநாத்ம விவேக மடைந்திருப்போன். இவன்ஒரு பிறவியில் முத்தனாவன்.
 

(5) ஆரூடன்: -'உலக நிலை தோன்றாமற் றன்றிகழ் ஞானத்தாதுண்மை முத்தனாமவனே யாரூடன். " உலக நிலையைச் சிறிதும் அறியாமல்தன் ஆத்மாவில் நிலைத் திருப்பவன். இவன் இப்பிறவியேலேயே சீவன் முக்தனாவன்.

 

முன்னர் கூறிய கரும காண்டி முதலிய அதிகாரிகளே யன்றி, விவேகத்தினாலும் விராகத்தினாலும் தெய்வகதியினாலும் முத்தி எய்தற்கேற்ற அதிகாரிகளுமுளர். அவர்களுள்,

 

(1) ''உலகமுதல் யாதெனத்தேர் வொடு குருவை யடைந்து உயர்தரு ஞானிகளாகி முத்தி யுற்றிடுவோர்.'' காணப்படுகின்ற பஞ்சபூத பௌதிகமாயுள்ள இவ்வுலகம் எப்படி யுண்டாயிற்று? இதற்கு முதற்காரண வஸ்துஎது?'என்பன போன்ற விஷயங்களை விசாரணை செய்வது மன்றி, குருவையடுத்து, பிரஹ்மோபதேசம் பெற்று முத்தி பெறுவோரே விவேகத்தால் முத்தியடையு மதிகாரிகளாவர்.

 

(2) ''உடம்பாதி பொய்யெனக் கண்டருட் குருவை யடைந்து உயர்தரு ஞானிகளாகி முத்தியுற்றிடுவோர்.'' தேகாதிப் பிரபஞ்ச மனைத்தும்பொய்யென் றறிந்து அவற்றின் மீதுள்ள பற்றினை யொழித்து, விராகியாய்ச்சதாசாரியனை யடுத்து ஞானோபதேசம் செய்யப்பெற்று, அதனால் ஞானியராய் விளங்கி முத்தி பெறுவோரே விரக்தியினால் முத்தியடையு மதிகாரிகளாவர்.

 

(3)'' உலகிலொரு குரவன்றன் மகற் குபதேசஞ் செய்துறக்கேட்டு உயர்தருஞானிகளாகி முத்தியுற்றிடுவோர்.'' மோட்சாபேட்சையோடு ஆசாரியனை யடுத்து ஞானோபதேசம் பெறவேண்டு மென்னும் விருப்பமில்லாதவராயிருந்தும், ஒரு குருவானவர் தம் சீடனுக்கு இவ்வாறு உபதேசஞ் செய்தார்எனப் பிறர் சொல்லிக்கொண் டிருக்கையில், அதனைத் தெய்வகதியாய்க்கேட்டு, அவ்வாறு கேட்ட மாத்திரத்தினாலே பூர்வ புண்ணிய பரிபாக விசேஷத்தால் ஞானம் உதிக்கப்பெற்று பிரஹ்ம ஞானியராய் முத்தி பெறுவோரே தெய்வகதியால் முத்தியடையு மதிகாரிகளாவர்.

 

(இவ்வாற்றால் கருமகாண்டி பக்தி காண்டி ஞான காண்டி முதலியஅதிகாரிகளின் பேதம் கூறப்பட்டது. இனி, பலதிறப்பட்ட அதிகாரிகளின் பக்குவம் நோக்கி உபதேசஞ் செய்யத்தக்க ஆசாரியர்களும் பலவகைப் படுவராகலின் அவர்களின் பேதம் கூறப்படுகின்றது.)

 

குரு பேதம்

 

"சாதகர்களாஞ் சீடர் பேதத்தாற் குரவர் தாமும்போ தககுருவே முதலாக விருநாற் பேதமடைகுவர்.''

 

மோட்ச மடைதல் வேண்டுமென்னு மிச்சை யுடையவர்களாய் அதற்கேற்ற சாதனங்களைச் செய்கின்ற சீடர்கள் பல திறத்தினரா யிருத்தலின், அதிகார பேதம் நோக்கி அவர்களுக்கு உபதேசம் செய்யத்தக்க ஆசாரியர்களும் போதக்குரு, வேதசகுரு, நிஷித்தகுரு. காமிய குரு, சூசக்குரு, வாசககுரு, காரக்குரு, விகிதகுரு என எட்டுவகைப் படுவர். அவர்களும்,

 

(1) ''போதகன் முன்னூலிற் பெரும் பொருள் கூறிடுபவன்.'' எல்லாநூல்களுக்கும் முதல் நூலாகிய வேதம், அதற் கங்கமாகவள்ள சாஸ்திரம்முதலிய நூல்களின் பொருளைப் போதிப்பவன் போதக குருவாம்.

 

(2)    "தத்துவம் நிகழ்த்துபவனே வேதகன்.'" தத்துவங்களின் வகைகளை விளங்க வுரைப்பவன் வேதக குருவாம்.

 

(3) “நல் வசியாதி யாலிம்மை யின்பம் வெந்துயரங்கு தவுமவ னிசிதகுரு.'' வசியம் முதலியவற்றைக் கற்பித்து அவற்றின் பயனாக இம்மையிலின்பத்தையும் மறுமையில் கொடுந் துன்பதரையும் அடைவிப்பவன் நிஷித்தகுருவாம்.

 

(4) "அறத்சைப் போதகஞ் செய் திருமையினு மின்பமருள் பவனேபுகழ்தருசாமிய குருவென் றறைகுவர் மூதறிஞர்.'' தரும் மார்க்கங்களைப்போதித்து இம்மை மறுமை யிரண்டிலும் இன்பத்தை யடைவிப்போன்காமிய குருவாம்.

 

(5) "சூசகனாம் விவேகத்தாற் சமை முதலிலாங் குணங்கள் தொகுப்பவன்.'" விவேகத்தை (நித்தியா நித்தியவஸ்து விவேகத்தைப் போதித்துஅதன் வாயிலாக சமாதிஷட்க சம்பத்தியை எய்தச் செய்பவன் சூசககுருவாம்.

 

(6) பொய் விடயமென ஆன்ம விருப் பருன்லோன் வாசகனாம். "ஆராய்ச்சி வாயிலாக விஷயங்க ளனைத்தும் பொய் யெனவும் ஆன்மாவொன்றே சாத்தியப் பொருளெனவுங் காட்டி, விஷயங்களினிடத்து வெறுப்பும் ஆன்மாவினிடத்து விருப்பும் உண்டாக்குபவன் வாசக குருவாம்.

 

(7) ''சிவ சீவ ரயிக்கிய ஞானத்தை வழங்குமவன் காரகன்.'' ஜீவப்பிரஹ்மைக்கிய ஞானத்தை யுபதேசிப்பவன் காரக குருவாம். (காரக்குரு =காரணகுரு) 

 

(8) ''ஐயர் தவிர்த்து நிலைத்த ஆசகலு முத்தியருள்பவன் விகிதகுருவாம்." சந்தேகங்களை நீக்கி நித்திய நிருமல மோட்சத்தை யருள்பவன் விகிதகுருவாம்.


சீடன் விதிவத் உபசன்னத்துவம்

 

ஞான சற்குருவை அடைந்து தத்துவோபகேசம் பெறுதற்குரிய அதிகாரிகளிவராவர் என முன்னர்க் கூறிய அதிகாரிகளி லொருவன், தாகம் நோய் காமம் முதலிய தன்னைப்பற்றி வருந்துன்பமாகிய அத்தியாத்ம தாபம், பகைவர் கள்வர் விலங்கு முதலிய பிற உயிர்களைப்பற்றி வருந்துன்பமாகிய அதிபூததாபம், சீதம் உஷ்ணம் மழை இடி முதலியவற்றா லுண்டாந் துன்பமாகிய அதிசெய்வதாபம் என்னும் மூன்று வகைப்பட்ட தாபங்களாகிய அக்கினியினால் வெந்து வியாகூல மடைந்தவனாகி 'நான் யார்? இக்கொடிய பிறவி எனக்கு எப்படி வந்தது? இது எப்படி யாரால் நசிக்கும்?' என்பனவற்றை விசாரித்து, 'ஞானாசாரியனாலேயே இச்சம்சார துக்கம் நாசமாம்' என்பதை யுணர்ந்து, அவரைத்தேடி யடைய விரும்பி, 'பெரியோர்கள் சன்னிதானத்திற்கு வெறுங்கையோடு போகலாகா' தென்பது விதியாகலின் புஷ்பம் முதலியவற்றை யெடுத்துச் சென்று, அழிவடைத லில்லாத வித்தை, அறிவு, அடக்கம், விராகம் முதலிய குணங்களைப் பெற்றுள்ள ஞான சற்குருவைத் தேடிக் கண்டு, அவரது பாத மலர்களில் தான் கொண்டு சென்ற மலர்களையிட்டு, சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து நமஸ்காரஞ் செய்து எழுந்து எதிரிலே கைகளைக் கூப்பி நின்று, தோத்திரஞ் செய்து 'கிருபைக் கடலாகிய குருநாதா ! அடியேனைப் பந்தித்து வருத்துகின்ற சம்சாரமாகிய தளையை நான் எதனாற் போக்குவேன்? அவ்வுபாயத்தைக் கிருபை செய்து காப்பாற்றி யருள வேண்டும்' எனப் பிரார்த்தித்தல் வேண்டும். இவ்வாறு குருவைச் சரண மடைதலே விதிவத் உபசன்னத்துவம் எனப்படும். விதிவத் உபசன்னத்துவம் = விதிப்படி சரண மடையுந் தன்மை.)


 
குரு உபதேசம் செய்தல்

 

இவ்வாறு தம்மைச் சரணமாக அடைந்தவனைக் குருவாகவர் – இவன் ஞானோபதேசத்தைப் பெறுதற் கேற்ற அதிகாரியா யிருக்கின்றானா?' என்பதைப் பல வழிகளாலும் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். அவ்வாராய்ச்சியால் பக்குவியே யென்றறிந்தால், பிறகு, அவனைக் கிருபா நோக்கத்தோடு பார்த்து மைந்த! பயப்படாதே. சமுசார பந்தத்தைத் தொலைக்கு முபாயத்தை உனக்குக் கூறுவோம். அதனை நீ பாதுகாக்கக் கடவை' எனக்கூறி, அதற்கடையாளமாகத் தம் கரத்தை (அபயாஸ்தத்தை) அவன் சிரத்தின் மீது வைத்து, அதுகாறும்' பொருளைப் பொருளாகக் கருதாது, பொருளால் கவற்றைப் பொருளாக' மதித்திருந்த அவனது அனாதம புத்தியைச் சுருதி யுக்திகளா லொழித்து, நாதான்மிய (அபேத) வாக்கியமாகிய தத்துவமசி மகாவாக்கியத்தை யுபதேசித்து அதன் மூலமாக நீ இன்ன தன்மையினதென்று மனத்தால் நினைத்தற்கு மரியதாகிய ஒப்பற்ற பரப்பிரஹ்ம சொரூபமாகவே யிருக்கிறாய்' என்று அவனது எதார்த்த நிலையை உணர்த்துதல் வேண்டும். இதுவே குருவானவர் செய்யும் உபதேசமாம்.


உபதேச முறை

 

இத்தன்மையினதாகிய உபதேசத்தின் கிரமமானது (1) உத்தேசம். (2) இலக்கணம் (3) சோதனை (பரீட்சை) என்னு மூன்றினையும் உடையதாயிருக்கும். அவற்றுள்,

 

(1) உத்தேசம்: - ''அறிய வுணர்த்துறு பொருளை நாமமாத்திரத்தாலறைந் திடுத லுத்ததேசம்.'' தான் அறிவிக்க விரும்பும் பொருளின் பெயரைமாத்திரம் கூறுதல் உத்தேசமாம். இங்கு பிரஹ்மப் பொருளின் பெயரைமாத்திரம் கூறுதல் உத்தேசமாம்.

 

(2) இலக்கணம்: - "களகம்பளமாங் குறியுடைய தானெனல் போல் அப்பொருளிற் சிறந்த குறியுரைத்த லிலக்கணம். " பசுவாகிய பொருளினிலக்கணத்தை யறிவிக்க விரும்பு மொருவன்' அலைதாடி (களகம்பளம்) யாகிய குறியினை யுடையது பசு எனக் கூறுதல் போல, முன்னர் பெயரளவிற் கூறிய பொருளின் சிறந்த குறியைக் கூறுதல் இலக்கணமாம். இங்கு' அது (பிரஹ்மப் பொருள்) சச்சிதானந்த வடிவா யுள்ளது' என்று அதன் சிறந்தகுறியுரைத்தல் இலக்கணம்.

 

(ஒன்றிற் சிறப்பா யிருப்பதாகிய குறி இலக்கணமெனப்படும். இஃது (இலக்கணம்) அவ்வியாப்தி, அதிவியாப்தி, அசம்பவம் என்னும் முக்குற்றங்களுமின்றி யிருக்கும். இங்ஙன மிருப்பதே சத்லக்ஷணம் எனப்படும். மேற்கூறிய குற்றங்களுள் யாதேனுமோர் குற்றத்துடன் கூடிய விலக்கணம் அசத்லக்ஷண மெனப்படும்.

 

(1) இலக்கியத்தின் (பொருளின்) ஏகதேசத்தில் இலக்கண மிருத்தல் அவ்வியாப்தி எனப்படும்.

இதற் குதாரணம்: - கபிலநிற முடையது பசு' என்றாற் போல்வதாம். கபிலநிற முடைமை பசுவடிவ இலக்கியத்தின் ஏகதேசத்தி லிருப்பதன்றி முற்று மிராமையின் 'கபிலநிற முடையது பசு' என்னு மிலக்கணம் அவ்வியாப்திக் குற்ற முடையதாம்.

 

(2) இலக்கியத்திலே மாத்திரமன்றி இலக்கிய மல்லாத்தி னிடத்தும்இலக்கண மிருத்தல் அதி வியாப்தி எனப்படும்.

 

இதற் குதாரணம்: - 'கொம்புடையது பசு' என்றாற் போல்வதாம். கொம்புடைமை இலக்கியமாகிய ஆ (பசு) முற்று மிருப்பதன்றி இலக்கியமல்லாத எருமை ஆடு முதலியவற்றின் கண்ணு மிருத்தலின் 'கொம்புடையது பசு' என்னு மிலக்கணம் அதிவியாப்திக் குற்ற முடையதாம்.

 

(3) இலக்கியத்தி லிராது இலக்கிய மல்லாததன் கண் இலக்கணமிருத்தல் அசம்பவம் எனப்படும்.

 

இதற் குதாரணம்: - 'ஒற்றைக் குளம்புடையது பசு' என்றாற் போல்வதாம். ஒற்றைக் குளம்புடைமை இலக்கியமாகிய ஆவிலிராது இலக்கியமல்லாத குதிரையின்க ணிருத்தலின் 'ஒற்றைக் குளம்புடையது பசு' என்னுமிலக்கணம் அசம்பவக் குற்ற முடையதாம். எனத் தர்க்க பரிபாஷை கூறுவது ஈண்டறியத் தக்கதாம்.

 

(4) சோதனை (பரீட்சை): - "அவ்விலக்கியமாம் பொருளிற் செறிவறுமவ் விலக்கண முண்டோ விலையோ வென்னத் தெரிந்திடுதல் பரிட்சை. "இலக்கியமாகவுள்ள பொருளினிடத்து அதாவது முதலில் பெயரளவிற் கூறிய பொருளினிடத்து பின்னர்க் கூறிய இலக்கணம் உண்டோ இல்லையோ? என்று ஆராய்தல் பரீட்சையாம். இலக்கியமாகிய பிரஹ்மத்தில் சச்சிதானந்தமாகிய இலக்கணம் இருக்கின்றதா இல்லையா? என்று ஆராய்தல் இங்குப் பரீட்சையாம்.

 

(இனி, பொருள்களினிருப்பை யறிந்து கொள்ளுதற் குரிய பிரமாணங்களைக் கூறுகின்றார்.)

 

 "ஓர்பொரு ளறிந்து பெறற்குப், பொறியுறல் செய்காட்சியா மளவை
 முதலாகப் பொருந்து பிரமாணங்க ளெட்டுளவா மன்றே.''


ஒரு பொருளினிருப்பை யறிந்து கொள்வதற்கு விஷயங்களிற் செல்லும் கண் முதலிய இந்திரியங்களா லறியப்படுகின்ற காட்சிப் பிரமாணம் (பிரத்தியக்ஷப் பிரமாணம்), அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம், அருத்தாபத்திப் பிரமாணம், உவமானப் பிரமாணம், அனுபலத்திப் பிரமாணம், சம்பவப் பிரமாணம், ஐதிகப் பிரமாணம் என எட்டுவகைப் பிரமாணங்களுள்.

 

(“பிரமைக்குக் காரணம் பிரமாணம். இதில் பிரமாணம் இலக்கியம்; பிரமாகரணத் தன்மை இலக்கணம்.)

பிரமை - உண்மை யனுபவ ஞானம்; அஃதுண்டாதற்குச் சிறந்தகாரணமா யிருப்பது பிரமாணமாம். எனவே, பிரமாண ஜன்னிய ஞானம் பிரமை யெனப்பட்டது. பிரமா என்பது பிரமை எனத் திரிந்து நின்றது. பிரமையை யுண்டு பண்ணுந் தன்மை பிரமாணத்திற் கிருத்தலின், அதுவே (பிரமாகரணத் தன்மையே) பிரமாணத்திற் கிலக்கணமாம் " - எனத் தர்க்கபரிபாஷை கூறுவ தறிக.)


 அவ்வெண்வகைப் பிரமாணங்களுள்,


      (1) காட்சிப் பிரமாணம் (பிரத்தியக்ஷப் பிரமாணம்).


''கடமுதலா மவற்றினது காண்கை யது தானே காட்சி.''

 

கடமுதலாகிய பொருள்களின் பிரத்தியக்ஷ ஞானத்திற்குச் சிறந்த காரணமாகவுள்ளவை நேத்திரம் (கண்) முதலிய இந்திரியங்களாம்.

 

ஆகவே நேத்திரம் முதலிய இந்திரியங்களே பிரத்தியக்ஷப் பிரமாணமாம்.

 

குடம் முதலாகிய பொருள்களை ஒருவன் கண்ணால் பார்த்து இது இன்ன பொருள் என்று அறிகிறான். அப்பொழுது கண்ணிந்திரியம் பிரமாணம்; கடம் பிரமேயம்; அதன் ஞானம் பிரமை. ஆகவே, பிரத்தியக்ஷப் பிரமையின் காரணம் பிரத்தியக்ஷப் பிரமாணமாமென வறிக. பிறவற்றிற்கும் இவ்வாறே காண்க.


(2) அனுமானப் பிரமாணம்.

"புகையாலங்கி ஞானமனுமானம்.''

 

புகையைக் கண்டவிடத்து நெருப்புண்டென்றறிதல் அனுமானப் பிரமாணமாம்.

 

ஒருவன் வெகு தூரத்தில் புகையெழக் காண்கிறான். அந்த ஞானத்தால் அவ்விடத்தில் நெருப்பிருக்கின்ற தென்னும் ஞானம் அவனுக் குண்டாகின்றது. ஆகவே அந்தப்புகை ஞானம் அனுமானப் பிரமாணமாம். இந்த அனுமானப் பிரமாணம் பிரதிஞ்ஞை, ஏது, திருஷ்டாந்தம் என்னும் மூன்று அங்கங்களையுடையதா யிருக்கும். அவற்றுள்,


(1) பிரதிஞ்ஞை: -

''இம்மலை வெவ் வழலுடைத் தென்பது."


 இம்மலை நெருப்புடையது என்பது பிரதிஞ்ஞையாம்.

 

(2) ஏது: -

"புகை யுண்மையினா லென லேது "
      புகையை யுடைத்தா யிருத்தலால் என்பது எதுவாம்.

 

 

(3) திருட்டாந்தம்: = "மடைப்பளிபோ லென்பது திட்டாந்தம்.''

சமைய லறை போல என்பது திருஷ்டாந்தமாம்.

 

(3) ஆகமப் பிரமாணம்.

"உடைமை யுணராத்தனுரை யால் நதிதீராதி யுறுகனியாதிக ளுண்மைஞானமா கமமாம்.''

 

நதிதீரம் முதலிய விடங்களில் கனி முதலிய பொருள்களிருப்பதையறிந்து வந்து கூறுகிற உண்மை பேசுவோனாகிய ஒருவனுடைய வார்த்தையால், நதி தீர முதலய விடங்களில் கனி முதலிய பொருள்களுள்ளன வென்று ஒருவன் உணர்கிறான். அவ்வாறுணர்தற்குக் காரணம் ஆப்தன் (உண்மையுரைப்போன்) வாக்கியம் ஆகலின், அது (வாக்கியம்) ஆகமப் (சப்தப்) பிரமாணமாம்.

 

(4) அருத்தாபத்திப் பிரமாணம்: - பொருளின் கற்பனையாம். அது, காட்சி யருத்தாபத்தி கேள்வி யருத்தாபத்தி என இருவகைப்பட்டு நிற்கும். இவை முறையே திருஷ்டாருத்தாபத்தி, சுருதாருத்தாபத்தி எனவும்படும். அவற்றுள்,


(1) காட்சி யருத்தாபத்தி.

“பகற்பொழு துண்ணானொருவன் இளையாமை கண்டு பரித்திரவூண் கற்பித்தல் காணருத்தாபத்தி.''

 

பகற்காலத்தில் உணவுட் கொள்ளாத ஒருவனுடைய உடல் உணவின்மையால் இளைத்துப்போக வேண்டியிருக்க அங்ஙன மிளையாமல் பருத்திருப்பதைப் பார்த்து, 'இவன் பாற்பொழுதில் உண்ணாமலிருப்பினும் இரவிலுண்பானாக வேண்டும். இன்றேல் உடல் இளையாமலிருக்க முடியாது' என இரவுண்டலைக் கற்பித்தல் காட்சி யருத்தாபத்தியாம்.


(2) கேள்வியருத்தாபத்தி.

"அகத்தினிலை யுறுதேவ தத்தனெனிலிருப்ப னவன் வேறோ ரிடத்திலெனத் தெரிந்திடுதல்.''

 

ஒருவன் தேவதத்தனென்பானது வீட்டிற்குச் சென்று 'தேவதத்தன் இருக்கின்றானோ?' வெனக் கேட்டான். ஆண்டிருந்தா னொருவன் 'தேவதத்தன் வீட்டிலில்லை' யென்றான். அந்த வார்த்தையால் 'தேவதத்தன் வேறோரிடத்திலிருப்பான். அவன் ஜீவனோபாயத்தொழில் ஆண்டு நிகழ்தல்வேண்டும்' என்று ஆராய்ந்து கற்பிக்கிறான். அவ்வாறு கற்பித்தல் கேள்வியருத்தாபத்தியாம்.

 

(5) உவமானப் பிரமாணம்.

 

''தகுபசுவோ டொக்குமரை யெனுமொழி கேட்டிருந்தோன், புகப்படரும் வனத்தில தன் விடயஞானத்தால் பொருந்துதலே யுவமானப் பிரமாணமாகும்."

 

ஆமா (காட்டுப்பசு) வைக் கண்டறியாதானொருவன் பிறனைப் பார்த்து ஆமா எப்படி யிருக்கும் எனக் கேட்டபோது, அவன் ஆமா ஆ (பசு) வைப் போலிருக்கும் எனக் கூறினான். பிறகு அவன் ஒருநாள் காட்டிற் சென்ற போது ஓர் ஆமாவைக் கண்டு அது ஆவோடு ஒப்புமைப்பட்டிருத்தலால் ஆவிற்கும் ஆமாவிற்கும் உள்ள ஒப்புமை ஞானத்தால் விஷய ஞானத்தையடைகிறான். அவ்வாறு ஒப்புமை ஞானத்தால் விஷய ஞானத்தை யடைவது உவமானப் பிரமாணமாம்.

 

(6) அனுபலத்திப் பிரமாணம்.

 

"இந்நிலனிற் கடமில்லை யென்பதனாற் றோன்று மின்மை யுணர்வபாவமாம்.''

ஒருவன் ஓரிடத்திற் சென்று குடமிருக்கிறதா வென்று பார்க்கிறான். அங்குக் குடமின்மையால் இங்குக் குடமில்லை என்னும் ஞானமுண்டாகின்றது. அந்த ஞானத்திற்குக் காரணம் குடத்தின் அபாவமாம் (இன்மையாம்.) அந்த அபாவம் அனுபலத்திப் பிரமாணமாம். (அநுபவத்தி - விளங்காமை.)


(7) சம்பவப் பிரமாணம்.

 

"ஆயிரமாகிய வெண், தன்னிலொரு நூறெனு மெண் ணுண்டெனுஞானந்தான் சம்பவமாம்.''

 

ஆயிரமென்னு மெண்ணில் நூறு என்னு மெண் உண்டு என்னும் ஞானம் சம்பவப் பிரமாணமாம்.
 

(8) ஐதிகப் பிரமாணம்.

 

"இம் மரத்திலியக்கனுள னென்னுஞ், சொல் நிகழ்வில் வருமியக்க
 விடய வுணர்வதனைச் சொற்றிடுவ ரறிஞரைதிக மென்ன."

 

ஓர் ஊரில் வசிக்கும் ஜனங்கள் ஓர் மரத்தைக் குறிப்பிட்டு இம்மரத்தில் இயக்கன் இருக்கிறான் எனக் கூறாநின்றனர். அதனைச் செவியுற்ற வொருவனுக்கு அவ்வார்த்தையால் இம் மரத்தில் இயக்கனிருக்கிறான் என்னும் விஷயத்தின் ஞான முண்டாகின்றது. ஆகவே அந்த வார்த்தை ஐதிகப்பிரமாணமாம்.

 

மேற்கூறப்பட்ட எண்வகைப் பிரமாணங்களுள் யார் யார் எவ்வெப்பிரமாணத்தை யங்கீகரிப்பர் எனக் கூறுகின்றார். (எல்லோரும் எல்லாப் பிரமாணங்களையும் அங்கீகரிப்பதின்று. சிலர் எல்லாவற்றையும் அங்கீகரிப்பர். சிலர் சிலவற்றை மாத்திரமே அங்கீகரிப்பர்.)

 

உலகாயதர் காட்சிப் பிரமாண மொன்றையே அங்கீகரிப்பர். (கடவுள் ஆன்மா முதலியவை இல்லை யென்றும், தேகமே ஆன்மா, போகமே மோட்சம் எனவும் கூறுவோர் உலகாயதர் எனப்படுவர்.) சைனர் புத்தர் வைசேடிகர் என்னு மிவர்கள் காட்சிப் பிரமாணத்தோடு அனுமானப் பிரமாணத்தையு மங்கீகரிப்பர். சாங்கியர் அவ்விரண்டுடன் சப்தப் பிரமாணத்தையுமங்கீகரிப்பர். நையாயிகர் மேற்கூறிய மூன்று பிரமாணங்களுடன் உவமானப் பிரமாண மொன்றையு மங்கீகரிப்பர். பிரபாகரர்க்கு அந்நான்கினோடு அருத்தாபத்திப் பிரமாணமும் அங்கீகாரமாம். பாட்டருக்கும் வேதாந்திகளுக்கும் மேற் கூறப்பட்ட ஐந்தோடு அனுபலத்திப் பிரமாணமும் உடன்பாடாம். பௌராணிகர் எண்வகைப் பிரமாணங்களையு மங்கீகரிப்பர்.


 திருக்கு திருசியம்.

 

வேதாந்த நூல்களெல்லாம் திருக்கு திருசியங்களைப் பற்றியே கூறுவனவாம் (திருக்கு = அறிவு. திருசியம் அறியப்படு பொருன்.) அவற்றுள்.


 திருக்கு

 

திருக்கானது சுவகதம் சஜாதீயம் விஜாதீயம் என்னும் மூவகைப் பேதங்களு மற்றதாம். அம் மூவகைப் பேதங்களுக்கும் உதாரணம் கூறுமிடத்து,

 

(1) சுவகத பேதம்: - ஒரு மரத்திற்கும் அதன் அவயவமாகிய கிளைபூகாய் இலை முதலியவற்றிற்கு முள்ள பேதம் சுவகத்பேதமாம்.

 

(2) சஜாதீய பேதம்: - ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கு முள்ளபேதம் சஜாதீய பேதமாம்.

 

(3) விஜாதீய பேதம்: - ஒரு மரத்திற்கும் அதனின் வேறு ஜாதியாகிய கல் முதலியவற்றிற்கு முன்ள பேதம் விஜாதீய பேதமாம்.

 

திருக்கு அதாவது சச்சிதானந்த வடிவ சிவம் இம் மூவகைப் பேதங்களு மற்றது. பிரஹ்மம் (திருக்கு) ரெவயமாயிருத்தலின் சுவகத பேதமும் அதின் வேறாக ஓர் சத்துப் பொருளிலாமையின் சஜாதீய பேதமும் இல்லை யென்பதொக்கும். ஆனால் இவ்வுலகத்திற்குக் காரணமாயுள்ள மாயை யொன்றிருக்கின்றதே. பிரஹ்மத்தினும் வேறாகிய மாயை யிருப்பது விஜாதீய பேதமாமன்றோ? அங்ஙனமாக, திருக்கு விஜாதீய பேத மற்றதெனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? எனின்:

 

உண்மையே. மாயை தனியான ஓர் பொருளா யிருக்குமாயின் அங்ஙனம் கூறலாம். அங்ஙன மின்றே. ஓர் சித்திரக்காரனிடத்திலுள்ள சித்திர மெழுதும் சக்தியானது, அச் சித்திரக்காரனை விட வேறாக வுள்ளதோ? இல்லை யன்றோ! அவ்வாறே, உலகத்திற்குக் காரணமாக வுள்ள மாயையும் சத்ரூபப் பிரஹ்மத்தினும் வேறாக விளங்காமையின் சச்சிதானந்த சிவத்திற்கு விஜாதி பேதமுமில்லையாம். இக்கருத்தைக் கொண்டே சுருதியும் 'ஏகமேவாத் துவிதீயம்' எனக் கூறுகின்றது. இவ் வாக்கியத்தில், '' ஏகம் "என்னும் பதத்திற்குப் பொருள் "ஜீவப் பிரஹ்மைக்கியமாம்.” ''ஏவ” என்பதற்குப் பொருள்'' நிச்சயமாம்.'' “அத்துவிதம்" என்னும் மொழிக்கு "துவைத விளக்கம்.'' ஆகவே, மாயா கற்பனைகளைக் கடந்து நிரவயவமாய் எக்காலத்தும் திரித லில்லாததாயுள்ள பிரஹ்மத்திற்குச் சுவகத பேதம் சஜாதீய பேதம் விஜாதீய பேதம் என்னும் மூவகைப் பேதமு மில்லையாம் என்பது தெளிவாம்.

 

அத்தியாரோப மபவாதமென விரண்டா யரைகுவர் யரைகுவர் கற்பிதம்''
 கற்பிதம் இரண்டுவகை யெனக்கூறுவர் பெரியோர். அவை அத்தியாரோபம்
 அபவாதம் என்பன வாம். அவற்றுள்,


"அத்தியாரோபமாவது: -


      "உள்ள சுத்தி! யூடிலாதவிர சதம் விளைதல் போலச் சொல் பிரமசத்தினிலா வுலகது கற்பித்தல்''

 

ஓரிடத்தில் கிளிஞ்ச லிருக்கிறது. அது பார்ப்பவர்களுக்குக் கிளிஞ்சலாகத் தோன்றாமல் வெள்ளி போலத் தோன்றுகின்றது. ஆனால் அங்குள்ளது கிளிஞ்சல் மாத்திரமே. வெள்ளி அதனிடத்துக் கற்பிதமாகத் தோன்றியது. அது போல உள்ள தாயே சத்ரூபப் பிரஹ்மத்தில் இல்லாததாகிய வுலகம் கற்பிதமாகத் தோன்றுவது அத்தியாரோபமாம்.

 

இப்படியே கயிறு பாம்பாகத் தோன்றுதலும் கட்டை கள்ளனாகத் தோன்றுதலும் கானலானது கானலானது நீராகத்தோன்று தலும் அத்தியாபோபமாம். எனவே உள்ள ஓர் வஸ்துவில் இல்லாத வேறொரு வஸ்து தோன்றுதல் அத்தியாரோபமாம். ஆகோபம், அத்தியாசம், கர்பனை என்னும் வேறு பெயர்களாலு மழைக்கப்படும்.


ஆரோப மத்தியாசம் கற்பனை யாவ வெல்லாம்

ஒரோர் வஸ்துவினை வேறே டோரோர் வஸ்துவென வோர்தல்
நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகத் தறியிற்றோன்றல்
நீரூடுகானல் தோன்றல் நிரந்தரம் வெளியிற் றோன்றல்.
இப்படிப்போல நாமரூபங்க ளிரண்டு மின்றி
யொப்பமா யிரண்டற் றொன்றா யுணர்வொளி நிறைவா நிற்கு
மப்பிரமத்திற் றோன்றுமைம் பூத விகார மெல்லாம்
செப்பிய கற்பிதத்தால் செனித்தவென் றறிந்து கொள்ளே.

 

எனக்கைவல்ய நவநீதங் கூறுவதுங் காண்க.


(2) அபலாத மாவது: -

 

“இதுதான் வெள்ளி யதன்றிப்பியெனல் போலோர்ந்திறை மெய் பொய் யுலகமெனத் தெளித லபவாதம்.''

 

ஆராய்ந்து பார்க்குங்கால் இது வெள்ளியல்ல, கிளிஞ்சலே. என்னுமுண்மை அறியப்படுகின்றது. அது போல, பிரஹ்மமே மெய்யாக உள்ளவஸ்து. அதனிடத்து இவ்வுலகம் பொய் (கற்பனை) யாகவுள்ளது எனவுணர்தல் அவாதமாம்.

அப்படியே, ஆராய்ச்சியின் வாயிலாகப் பாம்பன்று கயிறென்றும், கள்வ னான்று கட்டை யென்றும், சரன்று கானலென்றும் அறிதல் அபவாதமாம். தாவது கற்பனையைத் தள்ளி உண்மையை யறிதலாம்.

 

அரவன்று கயிறென்றார் போ லாளன்று தறியென்றாற் போல்

குரவன்ற னுபதேசத்தாற் கூறு நூல் வெளிச்சங் கொண்டு

புரமன்று புலனமன்று பூதங்களன்று ஞானத்

திர மென்றும் பிரம மென்றுந் தெளிவதேயவாதங்கள்.

 

எனக் கைவல்யங் கூறுகின்றது.

 

பிரஹ்மத்தை அறியுமிலக்கணம்

 

"மெய்த்த பொருளறியு, மிலக்கண மூன்று மவைதாம் விளங்க தத்து வாவிருக்தி தடத்த மொடு சொரூபம்."

 

பிரஹ்மத்தை யறியும் லட்சணங்கள் மூன்றாம். அவை அதத்வியாருத்தி லட்சணம், தடஸ்த லட்சணம், சொரூப லட்சணம் என்பனவாம். அவற்றுள்,


(1) அதத்வியா விருத்தி லட்சணமாவது: -


ஆக முதலன் நேதியது செய்து நின்ற ஆருயிரை யறிவித்த லதத்வா விருத்தி "

 

(ஒரு பொருளை யறிவிக்க விரும்பினவன் அஃதல்லாத மற்றைப்பொருள்களையெல்லாம் இதுவல்ல இது வல்ல வெனக்கழித்து முடிவில் எஞ்சிநின்ற அப் பொருளை யறிவிததல் அசத்விபா விருத்தி லட்சணமாம். அதத்அது வல்வாதது; வியா விருத்த வேறு பிரித் தறிவித்தல்.) அதுபோல,

 

சரீரம் முதலிய அநாகம வஸ்துக்களை இது ஆத்மாவல்ல இது ஆத்மாவல்ல என சேதி செய்து அப்படி நேதி செடயமுடியாமல் நின்ற ஆத்மாவைத் தெரிவித்தல் அகத்வியா விருத்தி லட்சணமாம்.


(2) தடஸ்தலட்சணமாவது: -

 

''சாகை நுனி மதியுள்ள தென்றுணர்த்தலிற் பூகாதிசகமாய காரணம்
 கொண்டறிவுணர்த்தல் தடத்தம்"

 

மூன்றாம் பிறைச்சந்திரனைக் காட்ட விரும்புவோன் ஓர்மரக்கிளையின் நுனியைக்காட்டி, அதோ அர்த மரக்கிளையின் நுனியிலிருக்கிறான் சந்திரன் எனக்காட்டுதல் போல, காரியமாகிய பஞ்சங்களினாலாகிய உலகத்திற்குக் காரணமாயிருத்தலைக் கொண்டு ஆத்மாவைத் தெரிவித்தல் தடஸ்தலட்சணமாம்.

(மரத்தைக் காட்டிச் சந்திரனைக் காட்டுதலை சாகா சாதிர நியாய மென்பர், "தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார் போல்" என்பது கைவல்யம்.

 

எது ஒருகாலத் திருப்பதாய் வியாவர்த்தகமாய் (மற்றவற்றினின்றும் வேறு பிரித் தறிவிப்பதாய்) இருக்கின்றதோ அது தடத்த லட்சண மெனப்படும். இதர்குதாரணம்: - காகமுடையது தேவதத்தன் வீடு என் ரற் போல்வதாம். காகமு - மையாகிய இலக்கணம தேவகத் தன் வீடாகிய இலக்கியத்தின் கண் ஓர்காலத் திருப்பதாய் தேவதச தன் வீட்டை யக்கிய தத்தன் வீடுமுதலியவற்றினின்றும் வேறு பிரித் தறிவிப்பதாயிருத்தல் காண்க என்பதுதர்க்க பரிபாஷை.)


(3) சொரூப லட்சணமாவது: -

 

"மாகனலி விளங்கு கதிர்ச் சொரூபனெனல் போலான் மாவினிச்சொரூபமிது வென உணர்த்தல் சொரூபம்."

 

சூரியன், விளங்குகின்ற கிரணங்களை வடிவமாக வுடையவன் என்பதுபோல், ஆக்மாவின் நிஜ சொரூபமிது வென் றுணர்த்துதல் சொரூப லட்சணமாம்.

 

(எது (ஒன்றிற் சிறப்பா யிருப்பதாகிய குறி) எப்போது மிருப்பதாய்வியாவர்த்தசமாய் இருக்கின்றதோ அது சொரூபலட்சண மெனப்படும். இதற்கு தாரணம்: - களகம்பளம் (அலைதாடி) உடையது ஆ என்றாற் போல்வதாம். களகம்பள முடைமையாகிய இலக்கணம் ஆவாகிய இலக்கியத்தின்கண் எப்போதுமிருப்பதாய் ஆவினை ஆடு முதலியவற்றினின்றும் வேறுபிரித்தறிவிப்பதா யிருத்தல் காண்க என்பது தர்க்க பரிபாஷை)

 

ஆத்மாவின் சொரூப லட்சணம்

 

சூரியன் வெப்பகிரண வடிவினன் எனக் கூறுதல் போல ஒரு பொருளின் நிஜ சொரூபத்தை யுணர்த்துதல் சொரூப லட்சணமாம் எனக் கூறியபடி, ஆத்மாவின் சொரூப லட்சணம் இன்ன தெனக் கூறுகிறார்.


''சொரூப நிசஞ் சச்சிதானந்த நித்தியம் பூரணமாம்.”

 

ஆத்மா சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் நித்தியமாகவும் பூரணமாக வுமிருப்பதாம். இதுவே ஆத்மாவின் நிச சொரூபமாம். அவற்றுள்

 

(1) சத்து: - "மதித்தல் மதியாமை நனவாதிகளில் தனக்கோர் வாதைவிலா துண்டெனல் சத்து."

 

(முக்காலத்தும் பொய்யென்று நிச்சயிக்கப்படாதது சத்தாம் என்பதுசத்தினிலக்கணமாம்.)  அதன்படி, ஆக்மாவானது

 

ஒன்ரையறி யுங்காலத்தும் அறியாத காலத்தும் சாக்கிரம் முதலிய அவஸ்தைகளிலும் பாதிக்கப்படாமலிருத்தலால் சாத்தாம்.

 

(2) சித்து: - "அவத்தை யனைத் தினுமே யுதித்த விடயங்களை நின்மறிந்திடுதல் சித்தாம்."

 

(முக்காலத்தும் எல்லா விஷயங்களையும் அறிவது சித்தாம் என்பதுசித்தின் இலக்கணமாம்.)

 

ஆத்மா சாக்கிரம் முதலிய அவள் தைகளெல்லாவற்றிலும் தோன்றும்விஷயங்களனைத்தையும் அறிதலால் சித்தாம்.


(3) ஆனந்தம்: - உவப்பினுக்கு விடய மாந்தன்மை யானந்தம்.''

(முக்காலத்தும் பரமப் ப்ரீதிக்கு விஷயமாயிருப்பது ஆனந்தமாம் என்ஆனந்தத்தினிலக்கணமாம்.)

 

ஆத்மா பரமப் பிரீதிக்கு விஷயமாயிருத்தலின் ஆனந்தமாம். கைவல்ய நவநீதம் சச்சிதானந்தங்களின் இக்கணத்தை:

 

அகலாத சத்தாவ தேது சித்தாவதே தானந்தமே தென்றிடின்

மிகுகால மூன்றுங் கெடாதிருப்பது சத்து வேறுபா டறிதல் சித்தா

மகிழ்காம நுகர்போது சுகமாகு மனுபூதி வாழ்வென்பதானந்தமே.

 

எனக்கூறி ஆத்மா எப்படி சச்சிதானந்த வடிவ மென்பதைப் பின்வருமாறு விளக்குகின்றது.


 சென்மாந் தரஞ்செய்த வினைகளுடன் தருமெனில்
      செல்கால மிவனுண் டலோ
 கன்மானு பவாரக சொர்க்கமெனில் வருகின்ற
      காலத்து மிவனுண் டலோ
 உன் மாத யாதனா வடல்கடவு ளுடல் மனுட
      வுடல் மாறி மாறியழியும்
 தன்மாய வுடல் கெடினு மிவனிருப் பதுகொண்டு
      சத்தென்ப தொக்கு மகனே.
 இருளாக மூகிஞ் சுழுத்தியி லிராத்திரியி
      லிரவிசுட ரற்ற பொழுதும்
 மருளாம லிருளையும் பொருளையும் தெரிகின் ற
      வகை கொண்டு சித்தாகுமே
 பெருவாழ்வு மிக்க தானே தன்னிடத்தினிற்
      பேராத பிரியமதனா
 இருகாத பிரியஞ் சுகத்தில் வருமா தலா
      லானந்தமானமந்தனே.

பூர்வ சென்மங்களிற் புரிந்த நல்வினை தீவினைகளின் காரணமாக இவ்வுடல் எந்ததென்றால் ஆல் மாவாகிய இவன் முன் சென்ற காலங்களிலிருந்திருக்க வேண்டுமல்லவா. இப்போது செய்து வரும் நல்வினை தீவினைகளின் காரணமாக நரகத்தையோ சொர்க்கத்தையோ அனுபவிக்க வேண்டுமென்றால் இனிவருங்காலத்திலு மிவ்வான்மா இருக்க வேண்டு மல்லவா. இவ்வாறு பல பிறவிகள் தோறும் வருகின்ற சரீரங்களழியினும் இகனழியாதிருத்தலின் சத்தென்பது பொருந்தும். இனி, எங்கும் இருக் மயமாக விருக்கும் சுழுத்தியிலும், இருண்ட இரவிலும், சூரியனும் விளக்கும் இல்லாத காலத்தும், மயங்காமல் அந்த இருளையும் வைத்த பொருளையும் தெரிந்து கொள்ளுந் தன்மையால் ஆன்மா சித்தென்பது பொருந்தும். தானே தன்னிடத்தில் நீங்காத பிரிய வடிவாயிருப்பதனால் ஆன்மா ஆனந்த சொரூப பியாம்.

 

(4) நித்தியம்: - "திதித்த சதோ திதநித்தம் "(முக்காலத்து மழிவின்றி யிருப்பது நித்தம் என்பது நித்தியத்தி னிலக்கணம்.) ஆத்மா முக்காலத்து மழிவற்றதா யிருத்தலின் நித்தியமாம்.

 

(5) பூரணம்: - ''அனைத்தினுஞ்சாதக மாந் திறத்தினா லனைத்திலுஞ்சம்பந்தம் நிறைவு.''

(நீக்கமற யாண்டும் நிறைந்திருப்பது பூரணமாமென்பது பூரணத்தினிலக்கணம்)

 

ஆன்மா கற்பித மாகவுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அதிஷ்டானமாய் கடத்தில் மண்போல எவ்லாவற்றினும் சம்பந்தமுடையதாயிருத்தலின். பூரணமாம்.


ஆனந்தம் விளங்கும் முறை

 

ஆன்மா சச்சிதானந்த வடிவமாயிருக்குமானால் அந்த சச்சிதானந்தங்களுள் சத்தும் சித்தும் போல ஆனந்தம் எங்கும் விளங்குவதிகலையே சில விடங்களில் காணப்படுகின்றது. சிலவிடங்களில் காணப்படுவதில்லை. ஆதலின் ஆன்மா ஆனந்த வடிவினனென்பது எவ்வாறு பொருந்தும் என்று ஐயம் தோன்றுமாயின் அவ்வையத்தை நீக்க ஆனந்தம் எவ்வெவ்விடத்தில் எவ்வெவ்வாறு விளங்குகின்றது என்பதைக் கூறுகின்றார்.

 

வெப்பமும் ஒளியமாயிருப்பது நெருப்பின் வடிவமாம். ஆயினும் அவை எல்லா விடங்களிலும் விளங்குவதில்லை. விளக்கில் ஒளிமாத்திரம் விளங்கு கின்றது; வெப்பம் விளங்குவதில்லை. நீரில் வெப்பம் மாத்திரம் விளங்கு கின்றது; ஒளி விளங்குவதில்லை, விறகில் வெப்பம் ஒளி இரண்டும் விளங்கு கின்றன. அதுபோல, சத்து சித்து ஆனந்தம் இம்மூன்றும் ஆகமாலின் வடி மாக விருப்பினும் அவை எல்லாவற்றினும் விளங்குவதில்லை. கல் முதலிய பற்றில் கல் இருக்கின்றது என்று சொல்லத்தக்கதாக ஆத்மாவின் சத்து ஒன்றே விளங்குகின்றது; மற்றவை விளங்குவதில்லை. தமோகுணத்தினால் அஞ்ஞான மயமாகவுள்ள புத்தியின் மூடவிருத்தியிலும் இராசத குணத்திய கோர விருத்தியிலும் நான் இருக்கிறேன் எனத்தக்கதாக சத்தும், நான் அறிகிறேன் என்னத்தக்கதாக சித்தும் விளங்கும். ஆனந்தும் விளங்குவதில்லை. சத்துவ குணத்தாலுண்டான சாந்த விருத்தியில் சத்து சித்து ஆனந்தம் மூன்றும் விளங்கும். ஆகையால் ஆன்மா ஆனந்த வடிவினதாம்.

 

சத்தாதி யைத்தின் பேதம் சாற்றல்

 

அன்றியும் முற் கூறிய சத்து முதலாகிய ஐந்திற்கும் உபாதிகளுண்டு, அவ்வுபாதியால் அவை ஒன்றற்கொன்று பேத முடையனவாம். அவற்றின் பேதங்களைக் கூறின்,

 

(1) சத்து மூன்று வகைப்படும். அலை வியாவகாரிக் சத்து, பிராதிபாசிக சத்து, பாரமார்த்திகசத்து என்பனவாம். அவற்றுள்,

 

(1) வியாவகாரிக சத்து: - “சுழுத்தியிற்றோன்றாது நனவுற்று முத்தியுறுமளவு முறுங்கடாதி முதலது வாம். "

 

சுழுத்தியின் கண்தோன்றாமல் சாக்கிராவள்தையில் காணப்பட்டுவிதேகமுத்தி யடையுமளவும் இருக்கின்ற கடம் முதலியவற்றின் இருப்பு வியாவகாரிக சத்தாம், (சத்து = இருப்பு) (ஆத்மா ஞானத்தால் பொய்யென நிச்சயித்தற்குரியது வியாவகாரிக சத்தாம்.)

(2) பிராதிபாசிக்சத்து: -கனவினிற் றோன்றி யழிவ துடையதுவாம். "சொப்பனாவஸ்தைகற் றோன்றி யழியும் பொருள்கள் பிராதி பாசிக சத்தாம். (ஆத்மா ஞானமில்லாமலே பொய்யென்று நிச்சயித்தற்குரியது பிராதியாசகசத்தாம்.)


(3) பாரமார்த்திகசத்து: - ''பொன்றாத பிரமசத்தே விறுதியதாம்.”

 

எக்காலத்தும் அழிதலில்லாத பிரஹ்மமே பாரமார்த்திகசத்தாம். (எக்காலத்தும் பொய்யென்று நிச்சயிக்கப்படாதது பாரமார்த்திக சத்தாம்.)

 

“பரமாத்வா வென்னும் பாம்பு'' என்றார் ஓர் அடியார். அதெப்படி? பாம்பின் வாயில் விஷமுண்டு. அந்த விஷத்தை அது உட்கொள்ளுவதால் இறந்து போகிறதா?  ஆனால் அவ்விஷத்தை பிறருண்டால் இறந்து போகின்றனர். அது போல் கடவுளிடம் அடங்கியிருக்கும் உலகத்திலுண்டாகும் நன்மை தீமைகளிரண்டும் அவரைச் சாருகிறதில்லை. இரு வினைகளும் மனிதர்களைப் பீடிக்கின்றன, அவற்றை ஒழித்தால் வீடு பெறலாம்.


(தமிழ்ப் பண்டிதர் பூ. ஸ்ரீநிவாசன்.)

 

ஆனந்த போதினி – 1929, 1930 ௵ -

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ௴

 

 

No comments:

Post a Comment