Monday, September 7, 2020

 

விளக்கெண்ணெயின் பெருமை

(மா. அ. தேவராஜன்.)

“விளக்கெண்ணெய் மாதிரி இருக்கிறதே!" என்பது ஒரு பழமொழி. இம்மொழி தொண்டை நன்னாட்டில் தான் இன்றும் வழக்கில் உள்ளது. வேண்டுமானால், ஒரு புது மொழியாகவும் வைத்துக் கொள்ளலாம். அதைப்பற்றிய வழக்கை அறிஞர்கட்கே விட்டு விடுவோம்.

“விளக்கெண்ணெய்” வழவழப்பில் பேர் போனது; ஆனால் குணத்திலோ பெயர் வாங்கியது; சேப்பங்கிழங்கும் வண்டைக்காயுமே ஒருவாறு விளக்கெண்ணெய்க்கு ஈடாய் வழவழப் புடையன. இவ்வெண்ணெய்யில்--ஆம் வெண்ணெய்க்கும் சமம் தான்-என்னென்ன
சத்துக்கள் எவ்வெவ்வளவு இருக்கின்றன? என்று ஆராய எனக்குத் திறமில்லை. அண்மையில் உள்ள உங்கள் மருத்துவரைக் கேட்டு முதலில் தெரிந்து கொண்டால், “விளக்கெண்ணெயின் பெருமை" என்ற தலைப்பில் நான் எழுதப் புகுவதை ஏளனம்
செய்ய மாட்டீர்கள்.

பிறரைப்போல் நானும் என் பிள்ளைப் பருவத்தில் விளக்கெண்ணெயை விஷ எண்ணெயாய் எண்ணியதும் உண்டு. ஆனால் அதன் பெருமை துய்த்துப் பார்த்தால் தானே தெரிகிறது! யாரேனும் ஒருவர் நடுநிலைமையுடன் ஒரு வழக்கினைத் தீர்த்து வைத்தால், உடனே, அவரை “விளக்கெண்ணெய் வாதி" என்று கூறி உலகம் எள்ளி நகையாடுகிறது. ஆனால் உலகம் உண்மையைத்தான் உரைக்கின்றது!

நான் மருத்துவன் அல்ல; மருந்தின் கூறும் அறியேன், ஆனால், வீட்டிலே விளக்கெண்ணெயின் பெருமை, மணம், குணம்; நிறம் ஆதிய பண்புகளை நாடொறும் அறிந்து வருகின்றேன். நான் அண்மையில் கூடப் பெரிய வயிற்று வலியால் வருந்தினேன்.
அதனைப் போக்க மருத்துவனை நாடவில்லை. எனக்கு என் சிறிய வயதில் என்னருமை தாயார் அறிவித்த கைகண்ட மருந்து அத்துன்பவலி நீங்க அதே விளக்கெண்ணெய்தான்! "மலச்சிக்கல் துன்பம்” துய்த்தறிந்தவருக்கு ‘விளக்கெண்ணெய் எப்படிப் பயன் படுகிறது?' என்பது நன்கு தெரியும். பச்சிளங் குழவிகளைப் பண்படுத்த இந்த விளக்கு எண்ணெய் எப்படி உதவுகிறது என்பதை நம்மைவிட நன்கு தாய்மார்கள் அறிவார்கள்! நேர்வாள மாத்திரை-அது தான் எமலோக யாத்திரைக் குதவும் ''நீர்வளம்" யைவிட, விளக்கெண்ணெயில் எலுமிச்சம்பழச் சாறும் சீனியும் கலந்துண்டால் ஆயாசமின்றி எளிதாகப் பேதியாகுமாம். பித்தம் நீங்குமாம். இன்னும் எத்தனையோ நனமைகளைக் கூறி
விளக்கெண்ணெய்க்குள்ள பெருமையை விளக்கலாம். ஆம். எனக்கொரு சந்தேகம். நேரில் உள்ளதைப் பார்க்கத் தவறுங்கால் நம்மை நம் தோழர்கள் “கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்” என்று நையாண்டி செய்கின்றனர். ஒருகால், குருட்டினை நீக்கவும் இவ் வெண்ணெய் உதவுமோ என்னவோ?

விளக்கு எண்ணெய்! ஆம்! விளக்குகளுக்கே உரிய எண்ணெஒரு காலத்தில் பயன்பட்ட எண்ணெய் தான்! அந்தக் குளிர்ந்த - ஒளி மிகுந்த - பசிய வெளிச்சத்தில் கற்றுயர்ந்த நம் மூதாதையரும் பிறரும் ஆண்டு பல ஆகியும் நரை திரையிலராய் ஒளியுடன் கூர்ந்து நோக்கும் ஆற்றலும் பெற்று இருந்தனர்! ஆனால் இன்று?

அறிஞர். திரு. வி. க. அவர்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாக் குறித்தெழுத வந்த விடத்து விளக்கெண்ணெயின் பெருமையைச் விளக்கமாகவே விளம்ப நேர்ந்தமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இனி இதனை இயம்பிய ஏதினையும் எடுத்துரைக்கிறேன்!

என் நினைவு சரியானதாய் இருந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமைதான்! வட் வார்க்காட்டில் வேலூர் சைவ சித்தாந்த சமாஜத்தின் 14-வது (சரியாக நினைவில்லை) ஆண்டு விழாவில் அருள் திரு. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் தலைமையில் அறிஞர் திரு.வி.க. அவர்கள் "சந்தேகம்'' என்ற தலைப்பில் ஆற்றிய ஓரரிய சொற்பொழிவு கேட்டு விட்டு, (ஆம்; ஏனைய நண்பர்கள் அவ் விரிவுரையின் முடிவினை அங்கேயே விட்டு விட்டனர்) எம் ஊர், நோக்கி வருகிறோம். பல புலவர்கள் நிரம்பிய ஒரு சிறு கூட்டத்தில் பிற அறிஞர்களைப்பற்றிய வேதாந்த 'அக்கப்போர்' கிளம்பின. அங்குத் தான் நான் முதலில் "திரு. விளக்கெண்ணெய் கலியாணசுந்தர முதலியார்" என்ற தொடரைக் கேட்டதாக என் நினைவு. அதன் பின் என் இயற்றமிழ் ஆசிரியர் உட்படப் பலரிடமும் திரு. வி. க. வுக்கு
"விளக்கெண்ணெய்ப் பட்டம்" கட்டப் பெற்றிருப்பதைக் கேட்டுளேன். அது முதல் திரு.வி.க. வின் வெளியீடுகளாகிய “நவசக்தி'', ''பெண்ணின் பெருமை'', ''காந்தியடிகளும் மனித வாழ்க்கையும்'', "முருகன்'', "உள் ஒளி'', "தமிழ்த் தென்றல்'', “இளமை விருந்து'' முதலிய
பல அரிய நூல்களைக் கற்றபின் "அவருக்கு அப் பெயர் முற்றும் தகும்'' என்ற முடிவுக்கே நானும் வந்தேன். ஆனால் பிறர் வந்த முடிவுக்கும் என் முடிவுக்கும் நேர்மாறான முரண்பாடுண்டு. "வித்துவக் காய்ச்சலால்” ஏனைய, “வெளி உலகம் அறியாக் கிணற்றுத்தவளைக் கவிராயர்கள்” அவர்க் கேற்பட்டுள்ள பெருமைக்கு இழி வுண்டாக்கவே
அப்படிக் கூறி வந்தனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றே ஒன்றுதான்; அஃதாவது: “திருவி.க. வின் எழுத்தோவியங்கள் யாவும் வழவழப் புடையன. இப்படியும் அப்படியும் மழுப்பப் பெற்றுள்ளன; அவர் ஒரு வழவழாப் பேர் வழி ........" என்பது. ஆனால் உண்மை வேறு. பெருந் தன்மையுடன் நடுநின்று நவில் வளவே அப்படித் தோன்றுகின்றன. ஆனால் நான் கூறுங் காரணங்களோ பல.

"விளக்கெண்ணெய் வாதி" நடுநிலைமை யுடையவன் என்றுலகம இயம்புகிற தல்லவா? ஆம்; திரு.வி.க. வும் நடுநிலைமை உள்ளவர் தாம். ''காய்தல், உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆயும் அறிவு" சான்ற ஆன்ற குடிப் பிறந்தோர்க்கிருக்க வேண்டிய "நடுவு நிலைமை"யின் சிறப்பினைத் திருக்குறளில் கண்டு கொள்க. முன் விளக்கெண்ணெய், வழ வழப்பாயினும் பயனில் பெயர் வாங்கியது என்றே னல்லவா? அதுபோலவே, திரு. வி. க. வின் செயல்கள் யாவும் வெளித்தோற்றத்தில் வழவழப்பாய்த் தோன்றுகின்றன. ஆனால் பயனிலோ, பிற தலைவர்கள் செய்ய முடியாத அரிய பெரிய காரியங்களை நிறைவேற்றி யுள்ளனர். விளக்கெண்ணெய், தன் பெருமையைப் பறையடிப்பதில்லை. அதுபோல்
திரு வி. கவும். திருக்குறளிலே பெருமையின் அதிகாரத்தைப் புரட்டுங்கள். என்ன கூறுகிறது? "அடங்குமாம் என்றும் பெருமை......பெருமை பெருமித மின்மை! ....”
விளக்கெண்ணெய் தன்பணியில் சிறிதும் பிசகுவதில்லை. திரு வி. கவும் ''என் கடன் பணி
செய்து கிடப்பதே!" என்ற கொள்கையுடன் அடங்கியுளார்.

விளக்கெண்ணெய் நோயாளியின் வயிற்றுவலியைப் போக்குகிறது; கல்லீரலையும் இளக்கிக் கட்டுப்பட்ட மலத்தை வெளியேற்றி (உடற்சம நிலை) ஒழுங்கினை யளித்து இன்ப வாழ்வு ஈகின்றது. பச்சிளங்குழவிகட் கேற்படும் மந்தம், கபம், முதலியவற்றைப் போக்கி உடலைக் கட்டெழிலாய் வளர்த்துப் பயனுறுத்துகிறது!

திரு.வி.க. வும் தொழிலாளிகளின் வயிற்றுவலி [பசி]யைப் போக்கிச் சமநிலைப் படுத்துகிறார்; கல்ஒத்த நெஞ்சினரான வஞ்சகரையும் தன் இனிய அன்பு கலந்த தொண்டினால் இரக்க முடையராக்கி, கரவாடும் வன்நெஞ்சர்கள் கட்டுண்ட ஆணவ முதலிய மலங்களை அவர்கள் உள்ளத்தின் நின்றும் வெளியேற்றி இயற்கை ஒழுங்கினை இனி தறிவித்து இறையின்பத்தின் இன்ப வாழ்வு ஈகின்றார்; இளைஞர்கட்கு இயல்பாகவோ, செயல்பாகவோ, ஏற்படும், சோம்பல், தீக்குணக் கொள்கை, உடல் மெலிவு, அறியாமை முதலியவற்றைப் போக்கி, நன்னிலை யுற நல்வழி காட்டி நன்னெறி பற்றுமாறு நலம் புரிகின்றார்! அம்மட்டோ!

நாங்கள் கட்டில்லாக் காளைபோல் திரியுங்கால், ''சடு குடு" என்றொரு விளையாட்டு ஆடுவோம். அதில் எவனாவதொருவன் எவர் பிடிக்கும் அகப்படாமல் தப்பிச் சென்றும், மண் பூசிய கையுடன் பிடிப்பவனிட மட்டும் அகப்பட்டும் நிற்பானாயின் அவனை "விளக்கெண்ணெய்!” என்று அழைப்போம். அப்படியே, திரு.வி.க. வும் உலக விளையாட்டில் எவர்க்கும் அடங்காமல் விலகி வீறுடன் செல்லும் ஏறுவாய், அன்பினல் பிடிப்பவர் அகக்கண்ணியில் பிடிபடுகின்றார். எனவே, திரு.வி.க. “விளக்கெண்ணெய்" தாமே?

விளக்கெண்ணெய், குருட்டைப் போக்கலாம் என்று ஐயுற்றுக் கூறினேன் அல்லவா? அந்த ஐயத்தைத் திரு.வி.க. வாழ்வாறு நீக்குகிறது. நம் தமிழகத்தில் கண்களாகிய எண்ணும் எழுத்தும் திறக்கப்பெருத குருடர்களுக்கும், கற்றுணர்ந்தும் வெளிநாடும், மெய் அறிவும் (உடலறிவும் கூட) பெருத கண்ணுள்ள மாலைக்கண்ணர்களுக்கும், தம் மிதழாசிரியத் தொண்டாலும் - நூல் வெயீட்டாலும் கண்ணைத் திறந்து கண்ணோயினையும் போக்கி யுள்ளார்! எனின் திரு.வி.க. வை விளக்கெண்ணெய் என்று ஒரு சிலர் உரைப்பது எவ்வளவு உண்மையா யுள்ளது, பாருங்கள்!

விளக்குக்கு எண்ணெய் அல்லவா விளக்கெண்ணெய்? இதோ, தொழிலாளர்
ஏற்றிய 'தொழிலாள ரியக்கம்'' என்ற விளக்கும், "தமிழகப் பேரொளி” விளக்கும், “பெண்ணினவுரிமை” விளக்கும், “இளைஞர்கள் சிறு சுடர்' விளக்கமும், “இந்திய விடுதலை'' என்ற அகண்ட கார்த்திகை விளக்கமும் நம் அறுபதாண்டுக் கிழ இளைஞரின் தொண்டாம் எண்ணெயினையே மாந்தி ஒளி வீசுகின்றன, பாருங்கள்! ஒளிபெற விளக்கு ஒரு கருவி, எண்ணெய் தான் மூலம்; அதேபோல், மேற்படி இயக்கங்கள் எல்லாம் நாம் நலமுற உதவும் துணைக் கருவிகள். திரு.வி.க. தாம் மூலம்! இப்போது “விளக்கெண்ணெயின் பெருமை” விளக்கம் ஆக என்நினைவும் அதற்கு மூலமாகிற தல்லவா? எனவே அன்பர்களே, விளக்கெண்ணெய் மூலத்தைப் போற்றுங்கள். உங்கள் விளக்கங்களைத் தெருக்கள் தொறும் இல்லங்கள் தொறும் ஏற்றுங்கள்!

இனி அறுபதாவ தியாண்டு விழாவைப் பற்றிச் சில கூறுவோம். பலவேறு நாடுகளிலும் பிறப்புவிழாக் கொண்டாடும் வழக்கம் உண்டு. ஆனால் முறையில் வேறுபாடுண்டு. மேனாடுகளில் சிறப்பாக முதலாண்டு விழா, வெள்ளி விழா (25ம் ஆண்டு
விழா), பொன்விழா (50ம் ஆண்டு விழா), வைரவிழா (60ம் ஆண்டு விழா)க்கள் சிறப்புறும் நூற்றாண்டு விழா எங்கும் சிறப்புறுகிறது. நம் நாட்டிலோ, முதல் ஆண்டுடன் வைரமணி விழாவாகிய “சஷ்டியப்த பூர்த்தி" யே மிகச் சிறப்புறுகிறது. நூற்றாண்டு விழா சிறு பான்மையதே. அறுபதாம் ஆண்டுக்குள்ள சிறப்பையும் அவ்வாண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் திருமணம் இயற்றித் திருமாங்கலியம் புதிதாய் முதலுடன் கோத்தணிவதும் பிறவும் நோக்கினால் ஓர் உண்மை புலப்படுகிறது.

என்ன? "மனிதர்க்கு வயது நூறல்லது இல்லை'' என்றார் கபிலர்; இதனை ஓர் ஆழ்வாரும் வலியுறுத்தியுளார். ஆனால் நடைமுறையில் நூற்றாயிரத் தொருவரே அவ்விதம் நூறாண்டும் வாழ்கின்றனர். அவர்கள், தமிழ் அறிஞர். மறைமலை யடிகளைப் பின்பற்றியவர் போலும்! போக. நம் முன்னோர்கள் நாளில் ஒரு மனிதனின் சராசரி வயது அறுபது என்றுதான் இவ்வழக்கம் சுட்டுகிறது. “இரண்டாம் பிறப்பின் தொடக்கம்'' என்றும் கூறலாம். ஆனால் இந்நாளிலோ, நம் தமிழனின் சராசரி வயது 23 அல்லது 25 தான்! மேல் நாட்டாரின் சராசரி வயது 45க்கு மேல் போகிறது! இதனால் நாம் நம் ஒழுக்கங்களை மிகவும் கையாளாமல் நமக்கு ஒவ்வாத, மேனுட்டார் ஒழுக்கங்களைக் கையாடி இளமையில் இறப்பை எதிர்நோக்குகிறோம் என்பது. பெறப் படுகிறது.

      இறுதியாக ஒன்று. புலவரைப் போற்றாத நாடு எந்தக் காலத்திலும் முன்னேறியது கிடையாது. புலவர்கள் அமரத்துவம் பெற்றவர்கள்; ஊழி இறுதிவரை உற்றுணரும் தன்மையர்; வாழ்வின் செம்மைக்கு வழி காட்டிகள். இப்புலவரைப் போற்றியே நம் முன்னோர்கள் மிகச் சிறந்த ஆட்சி நிறுவினர். இன்றும், மேல்நாட்டில் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த குடிசைகளுக்கு அளித்து வரும் பெருமதிப்பும், உலக மாக்கவி (Laurate) என்ற பட்டம் சூட்டி மதிப்பதும், நோபிள் (Nobel) பரிசில் வழங்கி ஊக்குவதும், சமஸ்தானத்தில் இட்ந்தந்து ஆதரிப்பதும், புலவர்கட்கு மேல் நாட்டினர் செய்யும் சிறப்பை வலியுறுத்தும். எனவே, நல்வாழ்வு வேண்டும் நாம் புலவர்களைப் போற்றுவோம். அன்றியும் தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாகலினாலும், தலைவரைப் போற்றுதல் தகுதியாதலினாலும் வேறுபாடு கருதாது யாவரும் கூடிப் புலவர் திரு. வி. க. வைப் போற்றுவோம். வாருங்கள்!

மேனாட்டார் மோகத்தில் விழுந்தலையும் நண்பர்கட்கு ஒரு வார்த்தை. நம் நாட்டு வழக்கத்தைக் கையாளும் அறிஞர் திரு.வி.க. போன்ற தேச பக்தர்களும் தமிழன்பர்களும் பெரிதும் நீண்ட நாட்கள் வாழ்வ துணர்ந்தேனும் நாட்டுப்பற்றும் மொழிப் பற்றும் கொண்டு நல்ல ஆயுளைப் பெறுக!

      திரு.வி.க. உலக அரங்கில் ஒவ்வொன்றாய் அறுபது படிகள் ஏறி அரிய நாடகம் ஆடி ஓய்ந்துள்ளனர்! ஒவ்வொரு படியிலும் அவர் ஆடிய நாடகங்களை எழுதின் ஏடு கொள்ளாது. திரு.வி.க. வின் நூல்கள் அனைத்திலும் இராமலிங்க அடிகளின்-தாயும் ஆனவரின் திருவுள்ளங்கள் ததும்பி வழிகின்றன. நாட்டு, மொழிப்பற்று விழுமிய தாகப் போற்றப்படுகின்றன. எனவே அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் நிறைய திருச்சியும் தஞ்சையும் ஒன்றி 1932-ல் கூட்டிய மாணாக்கர் மாநாட்டுச் சொற்பொழிவாகிய “சீர் திருத்தத்தை” ஒவ்வொரு தமிழனும் ஒரு முறையேனும் கற்றுணர்ந்து, உய்தி பெறுவானாக.

ஆனந்த போதினி – 1943 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment