Tuesday, September 8, 2020

 ஸ்ரீ நெலமாவு மடாதிப ஸ்ரீ நரஸிம்ஹ பாரதிஸ்வாமிகள் திவ்ய சரித்திரம்

 

ஸ்ரீ நெலமாவு மடாதிப ஸ்ரீ நரஸிம்ஹ பாரதிஸ்வாமிகள் மஹாதானபுரத்தில், விபவ வருஷம் மார்க்கசிர சுத்தஸப்தமி திதியில் ஸித்தி அடைந்த விஷயம் எல்லாரும் அறிந்ததே. இந்த சமயம் அந்த மஹானின் திவ்ய சரித்திரத்தின் ஸாராம்ஸத்தின் சுருக்கத்தை இவ்விடம் எடுத்துரைப்பது யுக்தமே.

 

ஸ்ரீ நெலமாவு மடமென்பது பம்பாய் ராஜதானி உத்தர கர்நாடக வித்தாபுர தாலூகா ஸுரநதிதீரத்தில் ப்ரஹ்லாதாச்ரமத்தில் ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் சிஷ்யர்களுள் ஒருவரான ஸ்ரீ க்ருஷ்ண தீர்த்த ஸ்வாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீங்கேரி மடத்தின் உபமடங்களுள் ஒன்று. ஸ்ரீ லக்ஷிமீநரஸிம்ஹ ஸ்வாமியே இம்மடத்தின் பிரதான தெய்வம்.
 

நமது ஸ்வாமிகள் பூர்வாச்ரமத்தில் ஷை தாலூகா ஸாரங்க தொட்டுமனை என்னும் கிராமத்தில் மஹாசாஸ்திர பண்டிதரும் ஜ்யோதிஷ நிபுணருமான ப்ரும்மஸ்ரீ ஸுப்பாபட்டர் அவர்களுக்கு கர வருஷத்தில் கடைசிக் குழந்தையாக அவதரித்து விஸ்வநாதன் என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். இவர் பிறந்ததும் பிதா குழந்தை ஜனித்த லக்னம் தாம் ஒரு வருஷத்தில் காலமாய் விட வேண்டு மென்றும் குழந்தை அவசியம் ஸந்நியாசியாக வேண்டுமென்றும் கூறினார். அதேமாதிரி அவர் காலகதியானார். குழந்தையும் அதிபாலியத்திலேயே ஈஸ்வரபக்தியுடன் வளர்ந்து ஸதாபூஜைகள் செய்யுமிடங்களிலேயே இருந்து வந்தது. விகாரி வருஷம் உபநயனம் செய்விக்கப்பட்டு வேதாத்யயனங்களைச் செய்து கொண்டு வந்தார். இப்படியாக இருக்கும் சமயம் சோபகிருது ஸம்வத்ஸரத்தில் ஷை மடத்தின் முந்தின மடாதிபதிகளான. ஸ்ரீநாராயணபாரதி ஸ்வாமிகள் ஸஞ்சாரத்திலிருந்த சமயத்தில் இந்த விஸ்வநாதனையே தான் சிஷ்யனாக்க உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்து அந்தப்பிரகாரம் நடந்து கொள்ளும்படி ஆஞ்ஞாபித்து ஸித்தி அடைந்து விட்டார்கள். அதே பிரகாரம் சிஷ்யர்களும் அவரை தக்ஷணமே அழைத்து வந்து பெரியவர்களிடம் ஆச்ரமாதிகள் எடுத்துவைத்து ஸ்ரீநரஸிம்ஹ பாரதிஸ்வாமிகள் என்ற பட்டப் பெயருடன் தங்களுக்கு மடாதிபதிகளாக நியமனம் செய்து கொண்டு தக்க சாஸ்திரஞர்களை வரவழைத்து ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு வேண்டிய ஸௌகர்யாதிகள் செய்து வைத்தார்கள். ஸ்ரீமடத்திற்கென்றே ஏற்பட்டது போல் தெய்வீகத்தன்மை பொருந்திய நமது ஸ்வாமிகளுக்கு சாஸ்திராப்யாஸங்கள் ஸர்வமும் அதிசீக்கிரத்திலேயே ஏற்பட்டு பிரமாதீச வருஷம் மந்திரமூர்த்தி ஸ்ரீ சிதானந்த கனேந்த்ரரால் ஸ்ரீவித்யா மந்த்ரோபதேசமும், கமலானந்தர் என்னும் யோக நாமத்துடன் பூர்ண தீக்ஷையுமாகி, தம் சிஷ்யமண்டலிக்குள் ஸஞ்சாரமும், உபந்யாஸமும், உபதேசங்களும் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்படி இருக்கும் சமயம் சுமார் 8 வருஷங்களுக்கு முன் ரௌத்ரி ஸம்வத்ஸரத்தில் வேதாந்த சுத்தாத்வைத க்ரஹணத்தின் பொருட்டுஸ்ரீ ஸ்வாமிகள் மாத்திரம் இரண்டு சிஷ்யர்களுடன் ஸ்ரீங்கேரிக்கு வந்து ஸ்ரீஜகத்குரு ஸ்ரீங்கேரி மஹா ஸந்நிதானங்களிடத்தில் ஷை. அப்பியாஸாதிகள் சுமார் மூன்று வருஷகாலம் செய்து சொண்டிருந்தார்கள். அதேசமயத்தில் பூர்வாச்ரமத்தில் திருநெல்வேலி வக்கீல் ராமசந்திர அய்யர் எனப் பெயர் பூண்டவரும், ஸ்ரீங்கேரி ஸ்ரீமுக்தஸ்வாமிகள் காலம் முதல் தீவ்ர வைராக்கியத்துடன் அடிக்கடி ஸ்ரீங்கேரிக்கு வந்து வேதாந்த விசாரம் செய்து கொண்டிருந்தவரும், இப்போது தேவர்மலையில் ஸ்ரீராமானந்த ஸரஸ்வதிஸ்வாமிகளாய் விளங்கிக் கொண்டிருப்பவருமான மஹான் அவ்விடமிருந்தார்கள். அந்த ஸமயம் நமது ஸ்வாமிகளே ஸ்ரீராமானந்தருக்கு துரீய ஆச்ரமம் கொடுத்தார்கள்.

 

ஸ்ரீஸ்வாமிகள் ஸ்ரீங்கேரியில் சுமார் மூன்று வருஷகாலம் வேதாந்த அப்யாஸம் செய்த பின் தக்ஷிணஸேது தீர்த்த யாத்திரையையும் மடஜீர்ணோத்தாரணத்தையும் உத்தேசித்து ஸ்ரீங்கேரி ஸ்ரீ மஹாஸந்நிதானங்களின் அனுக்ரஹத்துடனும் ஸ்ரீமஹா ஸந்நிதானங்களின் ஸ்ரீமுகத்துடனும் ஸ்ரீ ஸ்வாமிகள் சில சிஷ்யர்களுடன் சுமார் ஐந்து வருஷகாலமாக தக்ஷிண தேசத்தில் நஞ்சன்கூடல், ஈரோடு, கோயமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, அனந்தசயனம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், செட்டிநாடு, ஸ்ரீரங்கம், குளித்தலை முதலிய அநேக இடங்களுக்கு விஜயம் செய்து பக்தகோடிகளால் ஆங்காங்கே வெகு விமரிசையாகவும் விநயத்துடனும் பக்தி சிரத்தையுடனும் ஸமர்ப்பிக்கப்பட்ட ஸத்கிருத்யாதி ஸேவைகளையடைந்து எல்லோருக்கும் பூஜாதிகளாலும் உபந்யாஸங்களாலும் உபதேசங்களாலும் ஆஸ்திக புத்தியை அதிகரிக்கச் செய்து, ஸந்த்யா, பக்தி, தர்மம், விக்ரஹ ஆராதனை இத்யாதி விஷயங்களைக் குறித்து உபந்யாஸங்கள் செய்து " ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பதால் தான் ஸத்கதி " என்கிற ஹிதோபதேசத்தை நன்கு ஊன்றச் செய்துகொண்டு கடைசியாக மஹாதானபுரத்தில் விஜயம் செய்தார்கள். அவ்விடம்வந்த 11 - ம் நாள் புதன்கிழமை மார்க்கசிர சுத்த ஸப்தமி திதி காலையில் திடீரென்று ஸ்ரீ ஸ்வாமிகள் ஸித்தி அடைந்துவிட்டார்கள். இவ்வளவு சிரத்தையுடன் இருந்த தக்ஷிண தேசத்து ஆஸ்திக மகாஜனங்களுக்கு என்றும் வைதிக பக்தி சிரத்தை குறையாமலிருப்பதற்கு ஞான தீபமாக இருக்கும் நிமித்தமே கருணாமூர்த்தியான ஸ்ரீஸ்வாமிகள் மஹாதானபுரம் என்னும் காவேரிதீர க்ஷேத்திரத்தில் ஸித்தியடைந்து ஸச்சிதானந்த நித்ய முக்தராய் விளங்குகின்றார் போலும்! மஹாதானபுரம் ஜனங்களின் பாக்கியமே பாக்யம்!

 

ஸ்ரீ ஸ்வாமிகளின் ஸஞ்சாரத்தால் நஞ்சன்கூடல், கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி, தேவகோட்டை, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் சாதுர்மாஸ்ய விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டன. ஆங்காங்கே ஸ்ரீ ஸ்வாமிகளின் தர்சன மாத்ரேண ஆனந்தமடைந்தவர்களும், உபந்யாஸங்களாலும், உபதேசங்களாலும் க்ருதார்த்தர்களானவர்களும், கஷ்ட நிவாரணமடைந்தவர்களும் கணக்கில்லை. அனந்த சயனம் ஸமஸ்தானத்தில் வெகு விமரிசையாகவும் சிரத்தையாகவும் ஸ்ரீமடத்திற்கு மரியாதைகள் செய்யப்பட்டன. செட்டி நாட்டில் கொத்தமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீமான் பெத்தாச்சி செட்டியார் அவர்கள் வெகு சிரத்தையுடனும், ஊக்கத்துடனும் இரண்டுமாதகாலம் ஸதா ஸத்கிருத்தியாதி ஸேவைகள் செய்து கொண்டிருந்த விஷயமும் ஸ்ரீஸ்வாமிகள் அவர் பக்திக்கு மெச்சி அவருக்கு " பக்தகேசரி'' என்னும் பட்டம் அளித்ததும் இவ்விடம் கூறுவது முறையேயாகும்.

 

ஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீங்கேரி மஹாஸந்நிதானங்கள். ஸ்ரீ ஆதி ஆசார்யாள், ஸ்ரீ மடத்தின் மூலதெய்வமாகிய ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹஸ்வாமி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீ சாரதாம்பாள் பேரிலும் இன்னும் ஆங்காங்கே ஸஞ்சாரத்தில் இருந்த முக்கிய ஸ்தலங்களின் மூர்த்திகள் பேரிலும் ஸ்துதிகள் செய்துமேலும் ஸ்ரீ ஸத்குரூத்கர்ஷமஞ்சரிகா ஸ்துதி காமதேனு ஸ்துதி இத்யாதிஸ்துதிகளும் செய்து அந்த ஸ்தோத்திரங்கள் இரண்டு பாகமாக புஸ்தகரூபமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ் முத்ராலயத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கின்றன.

 

பூர்ணானந்த ஸ்வரூபியாகையால் தர்சன மாத்ரேண ஆனந்தத்தை உதிக்கச் செய்து கொண்டிருந்த ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் நாமரூபாதி பந்தங்கள் வேண்டாமென்றே மஹாதானபுரத்தில் வித்தியடைந்து, ஸர்வ வ்யாபியாய், அகண்ட ஸச்சிதானந்தராய் நம்மெல்லோருக்கும் அக்ஞான இருளைப் போக்கி ஞானோதயத்தை உண்டு பண்ணுவதற்காக ஞான தீபமாய் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஸத்குருவின் கருணா விசேஷத்தால் நாமெல்லாரும் ஈஸ்வரானுக்ரஹத்தை அடைந்து கிருதார்த்தர்களாவோமாக.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment